சரியான வகை தூதுவர்களை அடையாளம் கண்டுகொள்ளுதல்
“நான் என் ஊழியக்காரரின் வார்த்தையை நிலைப்படுத்தி, என் ஸ்தானாபதிகளின் [“தூதுவர்களின்,” NW] ஆலோசனையை நிறைவேற்[றுகிறவர்].”—ஏசாயா 44:26.
1. சரியான வகை தூதுவர்களை யெகோவா எவ்வாறு அடையாளம் காட்டுகிறார், பொய் தூதுவர்களை எப்படி அம்பலப்படுத்துகிறார்?
யெகோவா தேவன் தம்முடைய உண்மையான தூதுவர்களை அடையாளங்காட்டுவதில் மகத்தானவர். அவர்கள் மூலம் கொடுக்கும் செய்திகளை நிறைவேற்றுவதன் மூலம் அவர்களை அடையாளம் காட்டுகிறார். பொய் தூதுவர்களை அம்பலப்படுத்துவதிலும் யெகோவா மிகப் பெரியவர். எப்படி அவர்களை அம்பலப்படுத்துகிறார்? அவர்களுடைய அடையாளங்களையும் முன்னறிவிப்புகளையும் வெத்துவேட்டாக்குகிறார். இதன்மூலமாக, அவர்கள் தங்களை சுயமாக நியமித்துக்கொண்ட குறிசொல்லுபவர்கள், அவர்களுடைய செய்திகள் உண்மையில் தங்களுடைய சொந்த பொய்யான நியாய வசனிப்பிலிருந்து வருகின்றன—ஆம், அவர்களுடைய முட்டாள்தனமான, மாம்ச சிந்தையிலிருந்து வருகின்றன—என்பதை காட்டுகிறார்!
2. இஸ்ரவேலரின் நாட்களில் தூதுவர்களுக்கிடையே என்ன மாறுபட்ட கருத்து இருந்தது?
2 ஏசாயா, எசேக்கியேல் ஆகிய இருவரும் யெகோவா தேவனுடைய தூதுவர்கள் என உறுதியாகக் கூறினார்கள். அவர்கள் யெகோவா தேவனுடைய தூதுவர்களாய் இருந்தார்களா? நாம் பார்க்கலாம். ஏசாயா சுமார் பொ.ச.மு. 778 முதல் ஏறக்குறைய பொ.ச.மு. 732-க்குப் பின்பு வரையாக எருசலேமில் தீர்க்கதரிசனம் உரைத்தார். பொ.ச.மு. 617-ல் எசேக்கியேல் பாபிலோனுக்கு நாடுகடத்தப்பட்டார். அங்கிருந்த தன்னுடைய யூத சகோதரர்களுக்கு அவர் தீர்க்கதரிசனம் உரைத்தார். எருசலேம் அழிக்கப்படும் என்பதை இரண்டு தீர்க்கதரிசிகளும் தைரியமாய் அறிவித்தார்கள். இது சம்பவிக்கும்படி கடவுள் அனுமதிக்கமாட்டார் என்று மற்ற தீர்க்கதரிசிகள் சொன்னார்கள். சரியான வகை தூதுவர்களாய் நிரூபித்தவர்கள் யார்?
பொய் தீர்க்கதரிசிகளை யெகோவா அம்பலப்படுத்துகிறார்
3, 4. (அ) பாபிலோனிலிருந்த இஸ்ரவேலருக்கு கொடுக்கப்பட்ட எதிரிடையான இரண்டு செய்திகள் என்ன, ஒரு பொய் தூதுவனை யெகோவா எவ்வாறு அம்பலப்படுத்தினார்? (ஆ) பொய் தீர்க்கதரிசிகளுக்கு என்ன நேரிடும் என்று யெகோவா சொன்னார்?
3 எசேக்கியேல் பாபிலோனில் இருந்தபோது, எருசலேம் ஆலயத்தில் என்ன நடந்துகொண்டிருந்தது என்பதைப் பற்றிய ஒரு தரிசனம் கொடுக்கப்பட்டது. அதன் கிழக்குமுக நுழைவாயிலில் 25 மனிதர்கள் இருந்தார்கள். அவர்கள் மத்தியில் யசனியா, பெலத்தியா என்ற இரண்டு பிரபுக்கள் இருந்தார்கள். அவர்களை யெகோவா எப்படி கருதினார்? எசேக்கியேல் 11:2, 3 (NW) பதிலளிக்கிறது: “மனுஷகுமாரனே, இவர்கள் இந்த நகரத்திற்கு எதிராக தீமையானவற்றை சதிபண்ணி, துராலோசனையை சொல்லுகிற மனுஷர்; ‘வீடுகட்டவேண்டிய காலம் சமீபமல்லவா?’ என்று சொல்லுகிறார்கள்.” அகந்தைகொண்ட சமாதான தூதுவர்களாகிய இவர்கள், ‘எருசலேமுக்கு எந்த ஆபத்தும் இல்லை. ஏன், வெகுசீக்கிரத்தில் நிறைய வீடுகளை நாம் இங்கே கட்டப்போகிறோமே!’ என்று சொல்லிக்கொண்டிருந்தார்கள். எனவே, இந்தப் பொய் தீர்க்கதரிசிகளுக்கு எதிராக பதில் தீர்க்கதரிசனம் உரைக்கும்படி எசேக்கியேலிடம் கடவுள் சொன்னார். அவர்களில் ஒருவனுக்கு என்ன சம்பவித்தது என்பதை 11-ம் அதிகாரத்திலுள்ள 13-ம் வசனம் நமக்குச் சொல்லுகிறது: “நான் இப்படித் தீர்க்கதரிசனஞ் சொல்லுகையில், பெனாயாவின் குமாரனாகிய பெலத்தியா செத்தான்.” பெலத்தியா மிகவும் பிரபலமானவனாகவும் செல்வாக்குள்ள பிரபுவாகவும் முதன்மையான விக்கிரக ஆராதனைக்காரனாகவும் இருந்ததன் காரணமாக இது ஒருவேளை நடந்திருக்கலாம். அவனுக்கு ஏற்பட்ட திடீர் மரணம் அவன் பொய் தீர்க்கதரிசி என்பதை நிரூபித்தது!
4 பெலத்தியாவுக்கு யெகோவா வழங்கிய தண்டனைத் தீர்ப்பு, கடவுளுடைய பெயரில் பொய் சொல்லுவதிலிருந்து மற்ற பொய் தீர்க்கதரிசிகளைத் தடைசெய்யவில்லை. கடவுளுடைய சித்தத்திற்கு எதிராக காரியங்களை முன்னறிவிக்கும் தங்களுடைய முட்டாள்தனமான போக்கை இந்த வஞ்சகர்கள் விடாமல் பின்பற்றி வந்தார்கள். எனவே யெகோவா தேவன் எசேக்கியேலிடம் இவ்வாறு சொன்னார்: “தாங்கள் ஒன்றும் தரிசியாதிருந்தும், தங்களுடைய ஆவியின் ஏவுதலைப் பின்பற்றுகிற மதிகெட்ட தீர்க்கதரிசிகளுக்கு ஐயோ!” எருசலேமுக்கு “சமாதானம் இல்லாதிருந்தும் சமாதானம் உண்டென்று” எதிர்த்து தரிசனங்காண்கிறதற்கு பெலத்தியாவைப் போல அவர்கள் “இல்லாமற்போவார்கள்.”—எசேக்கியேல் 13:3, 15, 16.
5, 6. எல்லா பொய் தூதுவர்களின் மத்தியிலும், ஏசாயா எப்படி உண்மையான தீர்க்கதரிசியாக நிரூபிக்கப்பட்டார்?
5 ஏசாயாவின் விஷயத்தில், எருசலேமைப் பற்றிய அவருடைய தெய்வீக செய்திகள் அனைத்தும் நிறைவேறின. பொ.ச.மு. 607 கோடையில், பாபிலோனியர்கள் அந்தப் பட்டணத்தை அழித்து, யூத மீதியானோரை பாபிலோனுக்கு சிறைக்கைதிகளாக கொண்டுசென்றார்கள். (2 நாளாகமம் 36:15-21; எசேக்கியேல் 22:28; தானியேல் 9:2) இந்தப் பெருந்துயரங்கள், வீண் அலப்பல்களால் கடவுளுடைய மக்களை வசைபாடுவதிலிருந்து பொய் தீர்க்கதரிசிகளை நிறுத்திவிட்டனவா? இல்லை, அந்தப் பொய் தூதுவர்கள் தொடர்ந்து அதைச் செய்துவந்தார்கள்!
6 போதாக்குறைக்கு, டம்பமடிக்கும் பாபிலோனிய குறிசொல்லுபவர்கள், அஞ்சனக்காரர்கள், ஜோதிடர்கள் ஆகியோர் மத்தியில் நாடுகடத்தப்பட்ட இஸ்ரவேலர்கள் வாழ்ந்துவந்தார்கள். என்றபோதிலும், யெகோவா, காரியங்கள் நேருக்கு மாறாக சம்பவிக்கும்படி செய்வதன்மூலம் பொய் தூதுவர்களாகிய இவர்கள் அனைவரையும் தோல்விகண்ட முட்டாள்களாக்கினார். ஏசாயாவைப் போலவே, எசேக்கியேலும் தம்முடைய உண்மையான தூதுவர் என்பதை காலப்போக்கில் காண்பித்தார். யெகோவா வாக்களித்திருந்தபடியே, அவர்கள் மூலம் தாம் பேசிய எல்லா வார்த்தைகளையும் நிறைவேற்றினார்: “நான் கட்டுக்கதைக்காரரின் குறிகளை அபத்தமாக்கி, குறிசொல்லுகிறவர்களை நிர்மூடராக்கி, ஞானிகளை வெட்கப்படுத்தி, அவர்கள் அறிவைப் பைத்தியமாகப் பண்ணுகிறவர். நான் என் ஊழியக்காரரின் வார்த்தையை நிலைப்படுத்தி, என் ஸ்தானாபதிகளின் [“தூதுவர்களின்,” NW] ஆலோசனையை நிறைவேற்றி: குடியேறுவாய் என்று எருசலேமுக்கும், கட்டப்படுவீர்கள் என்று யூதாவின் பட்டணங்களுக்கும் சொல்லி, அவைகளின் பாழான ஸ்தலங்களை எடுப்பிப்பவர்.”—ஏசாயா 44:25, 26.
பாபிலோனையும் எருசலேமையும் பற்றிய திடுக்கிடும் செய்திகள்
7, 8. பாபிலோனுக்காக ஏசாயா வைத்திருந்த ஏவப்பட்ட செய்தி என்ன, அவருடைய வார்த்தைகள் எதை அர்த்தப்படுத்துகின்றன?
7 யூதாவும் எருசலேமும் 70 ஆண்டுகளுக்கு மனித சஞ்சாரமில்லாமல் பாழாக்கப்படவிருந்தன. என்றபோதிலும், அந்தப் பட்டணம் திரும்பக் கட்டப்பட்டு, தாம் முன்னறிவித்திருந்த துல்லியமான நேரத்தில் தேசம் குடியேற்றப்படும் என்று ஏசாயா மற்றும் எசேக்கியேல் மூலம் யெகோவா அறிவித்தார்! இது வியக்கவைக்கும் முன்னறிவிப்பாய் இருந்தது. ஏன்? ஏனென்றால் பாபிலோன் தன்னுடைய சிறைக்கைதிகளை ஒருபோதும் விடுவிக்காதிருப்பதற்கு பெயர்போனதாயிருந்தது. (ஏசாயா 14:4, 15-17) எனவே, இந்தச் சிறைக்கைதிகளை யாரால் விடுவிக்க முடியும்? பிரமாண்டமான மதிற்சுவர்களால் ஆனதும் அரண் போன்று நதியால் சூழப்பட்டதுமான வலிமைமிக்க பாபிலோனை யாரால் கவிழ்க்க முடியும்? சர்வ வல்லமையுள்ள யெகோவாவால் முடியும்! கவிழ்ப்பேன் என்பதாகவும் அவர் சொன்னார்: “நான் ஆழத்தை நோக்கி [அதாவது, தண்ணீரால் சூழப்பட்ட நகரத்தை நோக்கி]: வற்றிப்போ என்றும், உன் நதிகளை வெட்டாந்தரையாக்குவேன் என்றும் சொல்லுகிறவர். கோரேசைக் குறித்து: அவன் என் மேய்ப்பன்; அவன் எருசலேமை நோக்கி: நீ கட்டப்படு என்றும்; தேவாலயத்தை நோக்கி: நீ அஸ்திபாரப்படு என்றும் சொல்லி, எனக்குப் பிரியமானதையெல்லாம் நிறைவேற்றுவான் என்று சொல்லுகிறவர் நான்.”—ஏசாயா 44:25, 27, 28.
8 அதைக் கற்பனை செய்துபாருங்கள்! உண்மையிலேயே மனிதர்களுக்கு வெல்லமுடியாத ஒரு தடையாக இருந்த ஐப்பிராத்து நதி, யெகோவாவுக்கோ செந்தணல்மீது விழும் ஒரு சொட்டு நீரைப்போல இருந்தது. ஃபூ என்றாலே அந்தத் தடை ஆவியாக போய்விடும்! பாபிலோன் வீழ்ச்சியடையும்! பெர்சியனாகிய கோரேசுவின் பிறப்புக்கு சுமார் 150 வருடங்களுக்கு முன்பாகவே, பாபிலோனை இந்த ராஜா கைப்பற்றுவதையும், எருசலேமையும் அதன் ஆலயத்தையும் திரும்பக் கட்டுவதற்கு யூத சிறைக்கைதிகளைத் திரும்பிச்செல்லும்படி அதிகாரமளிப்பதன்மூலம் அவர்களை விடுவிப்பதையும் குறித்து ஏசாயா முன்னறிவிக்கும்படி யெகோவா செய்தார்.
9. பாபிலோனை தண்டிப்பதற்கு யாரை தம்முடைய பிரதிநிதியாக யெகோவா பெயரிட்டு சொன்னார்?
9 நாம் இத்தீர்க்கதரிசனத்தை ஏசாயா 45:1-4-ல் காண்கிறோம்: “கர்த்தராகிய நான் அபிஷேகம் பண்ணின கோரேசுக்கு முன்பாக ஜாதிகளைக் கீழ்ப்படுத்தி, . . . அவனுக்கு முன்பாக வாசல்கள் பூட்டப்படாதிருக்க, கதவுகளைத் திறந்துவைக்கும்படிக்கும், அவனைப் பார்த்து, அவன் வலதுகையைப் பிடித்துக்கொண்டு, அவனுக்குச் சொல்லுகிறதாவது: நான் உனக்கு முன்னே போய், கோணலானவைகளைச் செவ்வையாக்குவேன். உன்னைப் பெயர்சொல்லி அழைக்கிற இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் நானே என்று நீ அறியும்படிக்கு, வெண்கலக் கதவுகளை உடைத்து, இருப்புத் தாழ்ப்பாள்களை முறித்து, அந்தகாரத்தில் இருக்கிற பொக்கிஷங்களையும், ஒளிப்பிடத்தில் இருக்கிற புதையல்களையும் உனக்குக் கொடுப்பேன்.”
10. எந்த முறையில் கோரேசு “அபிஷேகம் செய்யப்பட்டார்,” அவனுடைய பிறப்பிற்கு நூறு வருடங்களுக்கு முன்பாகவே யெகோவா அவனிடம் எப்படி பேச முடிந்தது?
10 கோரேசு ஏற்கெனவே வாழ்ந்துகொண்டிருப்பது போல யெகோவா அவனிடம் பேசுவதை கவனியுங்கள். யெகோவா, ‘இல்லாதவைகளை இருக்கிறவைகளைப்போல் அழைக்கிறார்’ என்ற பவுலுடைய கூற்றுடன் இது இசைந்திருக்கிறது. (ரோமர் 4:17) அதோடு, ‘நான் அபிஷேகம் பண்ணினவர்’ என்பதாக கோரேசுவை கடவுள் அடையாளப்படுத்துகிறார். அவர் ஏன் அவ்வாறு சொன்னார்? கோரேசுவின் தலைமீது யெகோவாவின் பிரதான ஆசாரியன்கூட ஒருபோதும் பரிசுத்த அபிஷேக எண்ணெய்யை ஊற்றியதில்லையே. உண்மைதான், ஆனால் இது ஒரு தீர்க்கதரிசன அபிஷேகம் பண்ணுதலாகும். இது, ஒரு விசேஷ ஸ்தானத்தில் நியமனம் செய்வதை குறிக்கிறது. எனவே, கோரேசுவை முன்னதாகவே தாம் நியமிப்பதை ஒரு அபிஷேகம் பண்ணுதலாக கடவுள் சொல்ல முடியும்.—ஒப்பிடுக: 1 இராஜாக்கள் 19:15-17; 2 இராஜாக்கள் 8:13.
கடவுள் தம்முடைய தூதுவர்களின் வார்த்தைகளை நிறைவேற்றுகிறார்
11. பாபிலோனில் குடியிருந்தவர்கள் ஏன் பாதுகாப்பாக உணர்ந்தார்கள்?
11 பாபிலோனுக்கு எதிராக கோரேசு படையெடுத்துச் சென்ற சமயத்தில், அதிலுள்ள குடிமக்கள் அதிக பத்திரமாகவும் பாதுகாப்பாகவும் இருப்பதாக உணர்ந்தார்கள். அவர்களுடைய நகரம், ஐப்பிராத்து நதியால் அமைக்கப்பட்ட ஆழமும் அகலமுமுள்ள பாதுகாப்பான ஓர் அகழியால் சூழப்பட்டிருந்தது. நகரத்தின் வழியாக ஓடிய நதியின் கிழக்குக் கரை நெடுக ஏறி இறங்குவதற்கென மேடை இருந்தது. அதை நகரத்திலிருந்து பிரிப்பதற்கு, “அசைக்க முடியாத மலையைப் போன்ற ஒரு பெரும் சுவர்” என்று தான் அழைத்த ஒன்றை நேபுகாத்நேச்சார் கட்டினார். “அதன் உச்சியை மலை உயரத்திற்கு [அவர்] உயர்த்தினார்.”a இந்தச் சுவரில் பிரமாண்டமான செம்புக் கதவுகளைக் கொண்ட வாயில்கள் இருந்தன. அவற்றில் நுழைவதற்கு, ஒருவர் நதியின் விளிம்பிலிருந்து அந்தச் சரிவின்மீது ஏறிவர வேண்டும். பாபிலோனின் சிறைக்கைதிகள் என்றாவது விடுவிக்கப்படும் நம்பிக்கை இல்லாமலிருந்ததில் எந்தவித ஆச்சரியமுமில்லை!
12, 13. கோரேசுவிடம் பாபிலோன் வீழ்ச்சியுற்றபோது யெகோவாவுடைய தூதுவராகிய ஏசாயாவின் மூலம் உரைக்கப்பட்ட அவருடைய வார்த்தைகள் எப்படி நிறைவேறின?
12 ஆனால், யெகோவாவில் விசுவாசம் வைத்திருந்த யூத சிறைக்கைதிகள் அவர்களைப் போல இல்லை! இவர்களுக்குப் பிரகாசமான ஒரு நம்பிக்கை இருந்தது. அவர்களை விடுவிப்பதாக தம்முடைய தீர்க்கதரிசிகள் மூலம் கடவுள் வாக்களித்திருந்தார். கடவுள் தம்முடைய வாக்குறுதியை எப்படி நிறைவேற்றினார்? பாபிலோனுக்கு வடக்கே பல கிலோமீட்டர் தொலைவான ஓர் இடத்தில் ஐப்பிராத்து நதியை திருப்பிவிடும்படி கோரேசு தம்முடைய படைகளிடம் கட்டளையிட்டார். இவ்விதமாய், நகரத்தின் பிரதான அரண் கிட்டத்தட்ட ஒரு வறண்ட நதிப்படுகையைப் போல ஆனது. திருப்புகட்டமான அந்த இரவில், பாபிலோனில் இருந்த குடிமயக்க களியாட்டக்காரர்கள் ஐப்பிராத்தின் தண்ணீரை ஒட்டியவாறு இருந்த இரண்டாகத் திறக்கும் கதவுகளை கவனமின்றி திறந்தே விட்டிருந்தனர். சொல்லர்த்தமாகவே செம்புக் கதவுகளை யெகோவா துண்டு துண்டாக உடைக்கவில்லை; அவற்றை மூடியிருந்த இரும்புக் கம்பிகளைத் துண்டிக்கவுமில்லை, ஆனால் அவை திறந்திருக்கும்படியும் சட்டத்தால் மூடப்படாதிருக்கும்படியும் காரியங்களை வழிநடத்திய அவருடைய மகத்தான விதம் அதே விளைவை ஏற்படுத்தியது. பாபிலோனின் சுவர்கள் பயனற்றவையாய் இருந்தன. கோரேசுவின் படைகள் உள்ளே நுழைவதற்காக ஏணிவைத்து ஏற வேண்டியதாய் இல்லை. யெகோவா கோரேசுவுக்கு முன்சென்று, ‘தேசத்தின் மதில்களை’ நீக்கியிருந்தார், ஆம், எல்லா தடைகளையும் நீக்கியிருந்தார். ஏசாயா, கடவுளுடைய உண்மை தூதுவராக நிரூபிக்கப்பட்டார்.
13 முழு நகரமும் கோரேசுவின் கட்டுப்பாட்டுக்குள் வந்தபோது, மறைவில் இருந்த இருண்ட அறைகளில் ஒளித்து வைக்கப்பட்டிருந்தவை உட்பட, அனைத்து பொக்கிஷங்களும் அவருடைய கைவசம் வந்தன. கோரேசுவுக்காக யெகோவா தேவன் ஏன் இதைச் செய்தார்? ‘அவரே பெயர் சொல்லி அழைக்கிறவராகிய’ யெகோவாவே உண்மையான தீர்க்கதரிசனத்தின் கடவுள், சர்வலோகத்தின் உன்னத பேரரசராகிய கர்த்தர் என்பதை அவன் அறிந்துகொள்வதற்காகவே இதைச் செய்தார். இஸ்ரவேலராகிய தம்முடைய மக்களை விடுவிப்பதற்காக ஆட்சிக்கு வரும்படி கடவுள் ஏற்பாடு செய்திருந்தார் என்பதை அவன் அறிந்துகொள்வான்.
14, 15. பாபிலோனின்மீது கோரேசு வெற்றிகொண்டதை யெகோவாவுக்கே உரித்தாக்கினான் என்பதை நாம் எப்படி தெரிந்துகொள்கிறோம்?
14 கோரேசுவிடம் யெகோவா சொன்ன வார்த்தைகளைச் செவிகொடுத்துக் கேளுங்கள்: “நான் என் தாசனாகிய யாக்கோபினிமித்தமும், நான் தெரிந்துகொண்ட இஸ்ரவேலினிமித்தமும், நான் உன்னைப் பெயர்சொல்லி அழைத்து, நீ என்னை அறியாதிருந்தும், உனக்கு நாமம் தரித்தேன். நானே கர்த்தர், வேறொருவர் இல்லை, என்னைத்தவிரத் தேவன் இல்லை. என்னைத் தவிர ஒருவரும் இல்லையென்று சூரியன் உதிக்கிற திசையிலும், அது அஸ்தமிக்கிற திசையிலும் அறியப்படும்படிக்கு நீ என்னை அறியாதிருந்தும், நான் உனக்கு இடைக்கட்டு கட்டினேன்; நானே கர்த்தர், வேறொருவர் இல்லை. ஒளியைப் படைத்து, இருளையும் உண்டாக்கினேன், சமாதானத்தைப் படைத்துத் [அதாவது, நாடுகடத்தப்பட்ட தம்முடைய மக்களுக்கு சமாதானத்தைப் படைத்து] [பாபிலோனுக்குத்] தீங்கையும் உண்டாக்குகிறவர் நானே; கர்த்தராகிய நானே இவைகளையெல்லாம் செய்கிறவர்.”—ஏசாயா 45:4-7.
15 பாபிலோனை கோரேசு வென்றதற்கான புகழ் யெகோவாவுக்கே உரியது, ஏனென்றால் அந்தப் பொல்லாத நகரத்திற்கு எதிரான அவருடைய விருப்பத்தை நிறைவேற்றி, சிறைபிடிக்கப்பட்ட அவருடைய மக்களை விடுவிப்பதற்கு கோரேசை பலப்படுத்தினவர் அவரே. இதைச் செய்வதில், தம்முடைய வானங்கள் நீதியான செல்வாக்குகளை அல்லது சக்திகளைப் பொழியும்படி கடவுள் அவற்றை அழைத்தார். நாடுகடத்தப்பட்டிருந்த தம்முடைய மக்களுக்காக பூமி திறக்கும்படியும் நீதியான சம்பவங்களையும் இரட்சிப்பையும் பிறப்பிக்கும்படியும் அழைத்தார். அடையாளப்பூர்வமான அவருடைய வானங்களும் பூமியும் இந்தக் கட்டளைக்குப் பிரதிபலித்தன. (ஏசாயா 45:8) அவருடைய இறப்புக்கு நூற்றுக்கும் மேலான ஆண்டுகளுக்குப் பிற்பாடு, யெகோவாவின் உண்மையான தூதுவராக ஏசாயா காண்பிக்கப்பட்டார்!
சீயோனுக்கு தூதுவரின் நற்செய்தி!
16. பாபிலோன் தோல்வியடைந்தபோது பாழாக்கப்பட்ட எருசலேம் நகரத்தில் என்ன நற்செய்தி அறிவிக்கப்பட முடியும்?
16 ஆனால் இன்னும் அதிகம் உள்ளது. ஏசாயா 52:7 எருசலேமுக்கு நற்செய்தியைப் பற்றி சொல்லுகிறது: “சமாதானத்தைக் கூறி, நற்காரியங்களைச் சுவிசேஷமாய் அறிவித்து, இரட்சிப்பைப் பிரசித்தப்படுத்தி: உன் தேவன் ராஜரிகம் பண்ணுகிறாரென்று [“ராஜாவாகியிருக்கிறாரென்று,” NW] சீயோனுக்குச் சொல்லுகிற சுவிசேஷகனுடைய பாதங்கள் மலைகளின்மேல் எவ்வளவு அழகாயிருக்கின்றன.” மலைகளிலிருந்து எருசலேமை நோக்கி வரும் ஒரு தூதுவரை காண்பது எவ்வளவு சிலிர்ப்பூட்டுவதாய் இருந்ததென்பதை கற்பனை செய்துபாருங்கள்! அவர் கட்டாயமாக செய்தி வைத்திருக்க வேண்டும். அது என்ன? அது சீயோனுக்கான கிளர்ச்சியூட்டும் செய்தி. சமாதானத்தைப் பற்றிய செய்தி, ஆம், கடவுளுடைய நற்பிரியத்தைப் பற்றிய செய்தி. எருசலேமும் அதன் ஆலயமும் மீண்டும் கட்டப்படும்! அந்தத் தூதுவர் வெற்றிசிறப்பான ஆர்வத்துடன் அறிவிக்கிறார்: ‘உன் தேவன் ராஜாவாகியிருக்கிறார்!’
17, 18. பாபிலோனை கோரேசு தோல்வியடையச் செய்தது எப்படி யெகோவாவுடைய சொந்த பெயரை பாதித்தது?
17 தாவீதின் வம்சாவளியில் வந்த ராஜாக்கள் அமர்ந்திருந்த யெகோவாவின் மாதிரிப்படிவ சிங்காசனத்தைக் கவிழ்ப்பதற்கு பாபிலோனியர்களை யெகோவா அனுமதித்தபோது, அவர் இனிமேலும் ராஜாவாக இல்லையென தோன்றியிருக்கக்கூடும். அதற்குப் பதிலாக, பாபிலோனின் பிரதான கடவுளாகிய மர்துக் ராஜாவாக இருப்பதாய் தோன்றியிருக்கக்கூடும். என்றபோதிலும், சீயோனின் கடவுள் பாபிலோனைக் கவிழ்த்தபோது, அவர் தம்முடைய சர்வலோக அரசதிகாரத்தை—தாமே மிகப் பெரிய ராஜா என்பதை—மெய்ப்பித்துக் காண்பித்தார். அதோடு, இந்த உண்மையை உறுதிப்படுத்துவதற்கு, ‘மகா ராஜாவினுடைய நகரமாகிய’ எருசலேம், அதன் ஆலயத்துடன்கூட மீண்டும் நிலைநாட்டப்பட இருந்தது. (மத்தேயு 5:35) இத்தகைய நற்செய்தியைக் கொண்டுவந்த தூதுவரைக் குறித்ததில், அவருடைய பாதங்கள் தூசியாகவும் அழுக்காகவும் புண்பட்டதாகவும் இருந்தபோதிலும், சீயோனை நேசிப்போருடைய கண்களிலும் அதன் கடவுளுடைய கண்களிலும், ஆ, அவை எவ்வளவு அழகாக காட்சியளித்தன!
18 ஒரு தீர்க்கதரிசன கருத்தில், பாபிலோனின் வீழ்ச்சியானது கடவுளுடைய ராஜ்யம் ஸ்தாபிக்கப்பட்டது என்பதையும், நற்செய்தியைக் கொண்டுவருபவர் பாபிலோனுடைய வீழ்ச்சியின் அறிவிப்பாளர் என்பதையும் அர்த்தப்படுத்தியது. மேலும், ஏசாயாவினால் முன்னுரைக்கப்பட்ட இந்தப் பூர்வகால தூதுவர், மகத்தான நற்செய்தியின் தூதுவராக முன்குறித்துக் காட்டப்பட்டார்; அது ஏன் மகத்தானது என்றால் விசுவாசமுள்ள அனைத்து மக்களுக்கும் வியக்கத்தக்க உட்பொருள்களைக் கொண்ட அதன் மிகவும் சிறப்புவாய்ந்த விஷயத்தின் நிமித்தமாகவும் அதன் ராஜ்ய பொருளின் நிமித்தமாகவுமே.
19. இஸ்ரவேல் தேசத்தைப் பற்றிய என்ன செய்தியை எசேக்கியேல் மூலம் யெகோவா கொடுத்தார்?
19 எசேக்கியேலுக்கும்கூட திரும்ப நிலைநாட்டப்படும் பிரகாசமான தீர்க்கதரிசனங்கள் கொடுக்கப்பட்டன. அவர் இவ்வாறு தீர்க்கதரிசனம் உரைத்தார்: “கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: நான் . . . உங்களை . . . பட்டணங்களில் குடியேற்றுவிப்பேன்; அவாந்தரமான ஸ்தலங்களும் கட்டப்படும். பாழாய்க்கிடந்த இத்தேசம், ஏதேன் தோட்டத்தைப்போலாயிற்றென்று . . . சொல்லுவார்கள்.”—எசேக்கியேல் 36:33, 35.
20. சந்தோஷத்திற்குரிய என்ன புத்திமதியை தீர்க்கதரிசனப்பூர்வமாய் எருசலேமுக்கு ஏசாயா கொடுத்தார்?
20 பாபிலோனிய சிறையிருப்பில், கடவுளுடைய மக்கள் சீயோனுக்காக புலம்பிக்கொண்டிருந்தார்கள். (சங்கீதம் 137:1) இப்பொழுது, அவர்கள் களிகூரலாம். ஏசாயா இவ்வாறு பலமாக உந்துவித்தார்: “எருசலேமின் பாழான ஸ்தலங்களே, முழங்கி ஏகமாய்க் கெம்பீரித்துப் பாடுங்கள்; கர்த்தர் தம்முடைய ஜனங்களுக்கு ஆறுதல்செய்து எருசலேமை மீட்டுக்கொண்டார். எல்லா ஜாதிகளின் கண்களுக்கு முன்பாகவும் கர்த்தர் தம்முடைய பரிசுத்த புயத்தை வெளிப்படுத்துவார்; பூமியின் எல்லைகளில் உள்ளவர்களெல்லாரும் நமது தேவனுடைய இரட்சிப்பைக் காண்பார்கள்.”—ஏசாயா 52:9, 10.
21. பாபிலோனின் தோல்வியை அடுத்து ஏசாயா 52:9, 10-ல் உள்ள வார்த்தைகள் எப்படி நிறைவேற்றமடைந்தன?
21 ஆம், யெகோவாவின் தெரிந்துகொள்ளப்பட்ட மக்கள் சந்தோஷப்படுவதற்கு சிறந்த காரணம் இருந்தது. ஒருகாலத்தில் பாழாய்க் கிடந்த அந்த இடங்களில் அவர்கள் இப்பொழுது திரும்பவும் குடியேறி, அவற்றை ஏதேன் தோட்டத்தைப்போல் ஆக்க இருந்தார்கள். அவர்களுக்காக யெகோவா ‘தம்முடைய பரிசுத்த புயத்தை வெளிப்படுத்தியிருந்தார்.’ அவர்களுடைய பிரியமான தாயகத்திற்கு அவர்களை மீண்டும் கொண்டுவரும்படி செயல்படுவதற்கு, அடையாளப்பூர்வமாய் சொல்லப்போனால், அவர் தம்முடைய சட்டைக் கையை சுருட்டிவிட்டுக்கொண்டார். இது சரித்திரத்தில் நடந்த ஏதோ சிறிய, அறியப்படாத சம்பவம் அல்ல. ஒரு தேசத்திற்கு வியக்கத்தக்க இரட்சிப்பைக் கொண்டுவருவதற்காக கடவுளுடைய ‘புயம்’ மனித விவகாரங்களில் வல்லமை செலுத்தியதை அப்பொழுது வாழ்ந்துகொண்டிருந்த அனைத்து மக்களும் கண்டார்கள். ஏசாயாவும் எசேக்கியேலும் யெகோவாவின் உண்மையான தூதுவர்கள் என்பதற்கு தெள்ளத் தெளிவான நிரூபணம் அவர்களுக்கு அளிக்கப்பட்டது. சீயோனின் கடவுளே பூமியனைத்திலும் உயிருள்ள, உண்மையான கடவுள் என்பதை எவரும் சந்தேகிக்க முடியாது. ஏசாயா 35:2-ல் நாம் வாசிக்கிறோம்: “அவர்கள் கர்த்தருடைய மகிமையையும், நமது தேவனுடைய மகத்துவத்தையும் காண்பார்கள்.” யெகோவாவினுடைய தேவத்துவத்தின் இந்த அத்தாட்சியை ஏற்றுக்கொண்டவர்கள் அவரை வணங்குவதற்கு அவரிடம் திரும்பினார்கள்.
22. (அ) எதற்காக இன்று நாம் நன்றியுள்ளவர்களாய் இருக்க வேண்டும்? (ஆ) யெகோவா பொய் தூதுவர்களை அம்பலப்படுத்தியதற்கு நாம் ஏன் விசேஷமாக நன்றியுள்ளவர்களாய் இருக்க வேண்டும்?
22 யெகோவா தம்முடைய உண்மையான தூதுவர்களை அடையாளம் காண்பிப்பதற்கு நாம் எவ்வளவு நன்றியுள்ளவர்களாய் இருக்க வேண்டும்! அவர் உண்மையிலேயே ‘தம் ஊழியக்காரரின் வார்த்தையை நிலைப்படுத்தி, தம் ஸ்தானாபதிகளின் [“தூதுவர்களின்,” NW] ஆலோசனையை நிறைவேற்[றுகிறவர்].” (ஏசாயா 44:26) ஏசாயா மற்றும் எசேக்கியேலுக்கு அவர் கொடுத்த திரும்ப நிலைநாட்டப்படுவதற்கான தீர்க்கதரிசனங்கள், தம்முடைய ஊழியர்களிடம் அவர் காண்பித்த பெரிதான அன்பையும் தகுதியற்ற தயவையும் இரக்கத்தையும் சிறப்பாக எடுத்துக் காண்பிக்கின்றன. நிச்சயமாகவே, இதற்காக யெகோவா நம்முடைய எல்லா துதியையும் பெறுவதற்கு பாத்திரமானவர்! பொய் தூதுவர்களை அம்பலப்படுத்துவதற்காக நாம் இன்றைக்கு விசேஷமாக நன்றியுள்ளவர்களாய் இருக்க வேண்டும். ஏனென்றால் அவர்களில் அநேகர் உலக அரங்கில் இப்பொழுது காட்சியளிக்கிறார்கள். அவர்களுடைய பகட்டாரவாரமான செய்திகள் யெகோவாவின் அறிவிக்கப்பட்ட நோக்கங்களை அசட்டை செய்கின்றன. அந்தப் பொய் தூதுவர்களை அடையாளம் கண்டுகொள்ள அடுத்த கட்டுரை நமக்கு உதவிசெய்யும்.
[அடிக்குறிப்புகள்]
a நினைவுச்சின்னங்களும் பழைய ஏற்பாடும், இரா மாரிஸ் பிரைஸ், 1925.
உங்களால் விளக்க முடியுமா?
◻ யெகோவா எவ்வாறு தம்முடைய உண்மையான தூதுவர்களை அடையாளம் காட்டுகிறார்?
◻ ஏசாயா மூலம், பாபிலோனை தோற்கடிப்பதற்கு யெகோவா யாரை தம்முடைய பிரதிநிதியாக பெயரிட்டு சொன்னார்?
◻ பாபிலோனின் தோல்வியை வர்ணிக்கிற ஏசாயாவின் தீர்க்கதரிசனங்கள் எப்படி நிறைவேற்றமடைந்தன?
◻ பாபிலோனின் வீழ்ச்சி யெகோவாவின் பெயரின்மீது என்ன ஒரு நல்ல விளைவை ஏற்படுத்தியது?
[பக்கம் 9-ன் படம்]
எசேக்கியேலின் நாளிலிருந்த தேசங்களுக்கு பாபிலோன் வெல்லப்பட முடியாததாய் தோன்றியது