வாசகரிடமிருந்து வரும் கேள்விகள்
மத்தேயு 24:34-ல் “சந்ததி” என்ற வார்த்தையின் அண்மைக்கால புரிந்துகொள்ளுதல், இந்தக் காரிய ஒழுங்குமுறையின் முடிவு நீண்ட காலத்திற்கு தள்ளிப்போடப்படும் என்ற கருத்துக்கு இடமளிப்பதாக சொல்லப்படக்கூடுமா?
நிச்சயமாக அது அப்படியில்லை. அதற்கு மாறாக, இந்த விஷயத்தைப் பற்றிய திருத்தப்பட்ட அண்மைக்கால புரிந்துகொள்ளுதல் முடிவைக் குறித்து இன்னும் அதிக எதிர்ப்பார்ப்புடன் இருக்கும்படியாக நமக்கு உதவிசெய்ய வேண்டும். ஏன் அப்படிச் சொல்லலாம்?
ஆம், நவம்பர் 1, 1995 காவற்கோபுரம் விளக்கிய விதமாகவே, “இந்தச் சந்ததி” என்ற சொற்றொடரை இயேசு அப்பொழுதிருந்த பொல்லாத மக்களுக்கு பொருத்தினார். (மத்தேயு 11:7, 16-19; 12:39, 45; 17:14-17; அப்போஸ்தலர் 2:5, 6, 14, 40) திட்டவட்டமான ஒரு தேதியில் துவங்கும் குறிக்கப்பட்ட ஒரு காலப்பகுதி என்ற முறையில் ஒரு வருணிப்பாக அது இல்லை.
உண்மையில், அதே காவற்கோபுர இதழ், “வாசகரிடமிருந்து வரும் கேள்விகள்” என்ற பகுதியில் இரண்டு முக்கிய குறிப்புகளின்மீது கவனத்தை ஒருமுகப்படுத்தியது: “ஒரு சந்ததியாரை, குறிப்பிட்ட எண்ணிக்கையான வருடங்கள் அடங்கிய ஒரு காலப்பகுதியாக நோக்க முடியாது” மற்றும், “ஒரு சந்ததியில் உள்ள ஜனங்கள், ஒப்பிடுகையில் குறுகிய காலப்பகுதி மட்டுமே வாழ்கின்றனர்.”
நாம் “சந்ததி” என்பதை இந்த முறையில்தான் அடிக்கடி பயன்படுத்துகிறோம். உதாரணமாக நாம் இவ்வாறு சொல்லலாம்: ‘நெப்போலியனின் சந்ததியைச் சேர்ந்த படைவீரர்கள் ஆகாய விமானங்களைப் பற்றியோ அணு குண்டுகளைப் பற்றியோ தெரியாதிருந்தார்கள்.’ வெறுமனே நெப்போலியன் பிறந்த அதே ஆண்டில் பிறந்த படைவீரர்களை மட்டுமே நாம் குறிப்பிட்டுக்கொண்டிருப்போமா? நெப்போலியன் மரிப்பதற்கு முன்பு மரித்த பிரெஞ்சு படைவீரர்களை நாம் அர்த்தப்படுத்துவோமா? நிச்சயமாகவே இல்லை. அல்லது “சந்ததி” என்று இந்த விதமாக பயன்படுத்துவதன் மூலம் ஒரு குறிப்பிட்ட ஆண்டுகளுக்கே என மட்டுப்படுத்தி வைக்க நாம் முயற்சிசெய்ய மாட்டோம். நாம் நெப்போலியன் காலத்திலிருந்து நூற்றுக்கணக்கான ஆண்டுகள் கழித்து எதிர்காலத்தில் அல்ல, ஆனால் ஒப்பிடுகையில் குறுகிய காலப்பகுதியையே குறிப்பிட்டுக்கொண்டிருப்போம்.
ஒலிவ மலையின்மீது இயேசு கொடுத்த அவருடைய தீர்க்கதரிசனத்தில் அவர் சொன்ன காரியத்தைப் பற்றிய புரிந்துகொள்ளுதலும் அதேவிதமாகவே இருக்கிறது. அந்த தீர்க்கதரிசனத்தின் பல்வேறு அம்சங்களின் நிறைவேற்றம் இந்த ஒழுங்கு முறையின் முடிவு வெகு அருகில் இருக்கிறது என்பதை நிரூபிக்கிறது. (மத்தேயு 24:32, 33) வெளிப்படுத்துதல் 12:9, 10-ன் பிரகாரம், 1914-ல் கடவுளுடைய பரலோக ராஜ்யம் ஸ்தாபிக்கப்பட்டபோது, சாத்தான் கீழே பூமிக்கு அருகில் தள்ளப்பட்டிருப்பதை நினைவில் கொள்ளுங்கள். சாத்தான் இப்பொழுது மிகுந்த கோபம் கொண்டிருக்கிறான் என்பதையும் வெளிப்படுத்துதல் சொல்லுகிறது. ஏன்? ஏனென்றால் ‘தனக்கு கொஞ்ச காலம் மாத்திரம் உண்டென்பதை’ அவன் அறிந்திருக்கிறான்.—வெளிப்படுத்துதல் 12:12.
ஆகவே, நவம்பர் 1, காவற்கோபுரம் “தொடர்ந்து விழித்திருங்கள்!” என்ற உபதலைப்பைக் கொண்டிருந்தது பொருத்தமாகவே இருந்தது. பின்வந்த பாரா சரியாகவே இவ்வாறு சொன்னது: “நுட்பமாய்ச் சம்பவங்களின் சரியான நேரத்தை நாம் அறிவதற்கு அவசியமில்லை. அதைப்பார்க்கிலும், விழித்திருப்பதிலும், உறுதியான விசுவாசத்தை வளர்ப்பதிலும், யெகோவாவின் சேவையில் சுறுசுறுப்பாய் ஈடுபட்டிருப்பதிலுமே நம்முடைய கவனம் ஒருமிக்க ஊன்றவைக்கப்பட்டிருக்க வேண்டும்—ஒரு தேதியை கணக்கிடுவதில் அல்ல.” அதன் பின்பு அது இயேசுவின் வார்த்தைகளை மேற்கோள் காண்பித்தது: ‘தொடர்ந்து நோக்கிக்கொண்டிருங்கள், தொடர்ந்து விழித்திருங்கள், ஏனெனில் குறிக்கப்பட்ட காலம் எப்பொழுதென்று நீங்கள் அறியாதிருக்கிறீர்கள். உங்களுக்கு நான் சொல்வதை எல்லாருக்கும் சொல்கிறேன், தொடர்ந்து விழித்திருங்கள்.’—மாற்கு 13:33, 37, NW.