நேர்மை—தற்செயலாகவா தெரிவு செய்வதாலா?
“நேர்மையாக இருக்க வேண்டும் என்ற மனச்சாய்வு இல்லாவிட்டாலும் சில சமயங்களில் நான் தற்செயலாக நேர்மையாய் இருந்துவிடுகிறேன்.” இப்படியாக வில்லியம் ஷேக்ஸ்பியர் எழுதின த வின்டர்ஸ் டேல் என்பதில் ஆட்டோலிக்கஸ் என்ற அயோக்கியன் சொல்கிறான். மனிதருக்கிருக்கும் அடிப்படையான ஒரு பலவீனத்தை, ‘மகா கேடுள்ளதாக இருக்கும் ஒரு இருதயத்தின்’ காரணமாக தவறு செய்வதற்கு நமக்கிருக்கும் மனச்சாய்வை இது காட்டுகிறது. (எரேமியா 17:9; சங்கீதம் 51:5; ரோமர் 5:12) ஆனால் இந்த விஷயத்தில் தெரிவு செய்வதற்கு எதுவுமில்லை என்பதை இது அர்த்தப்படுத்துகிறதா? நல்லொழுக்கமுள்ள நடத்தை வெறுமனே தற்செயலாக வரும் ஒரு காரியமா? இல்லவே இல்லை!
இஸ்ரவேல் புத்திரர் வாக்குப்பண்ணப்பட்ட தேசத்திற்குள் பிரவேசிப்பதற்கு முன்பாக, அவர்கள் மோவாப் சமவெளியில் தங்கிய போது, மோசே அவர்களோடே பேசினார். அவர் அவர்களுக்கு முன்பாக இரண்டு தெளிவான தெரிவுகளை வைத்தார். அவர்கள் கடவுளுடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்திருந்து அவருடைய ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொள்ளலாம் அல்லது அவற்றைத் தள்ளிவிட்டு பாவத்தின் கசப்பான கனியை அறுவடைசெய்யலாம். (உபாகமம் 30:15-20) தெரிவு அவர்களுடையதாக இருந்தது.
தெரிவு செய்யும் சுயாதீனமுள்ளவர்களாக, நமக்கும்கூட ஒரு தெரிவு இருக்கிறது. கடவுள் உட்பட எவருமே நம்மை நல்லதைச் செய்ய அல்லது கெட்டதைச் செய்ய வற்புறுத்துவது கிடையாது. இருப்பினும், ‘நம்முடைய இருதயங்களுக்குத் தீமையைச் செய்யும் மனச்சாய்வு இருப்பதால், நல்லதை நாம் எவ்வாறு செய்ய முடியும்?’ என்பதாக சிலர் சரியாகவே கேட்கலாம். சரி, ஒரு பல் மருத்துவர் அரிப்பு அல்லது சிதைவு மிகவும் மோசமானதாகிவிடுவதற்கு முன்பாக அதை கண்டுப்பிடிப்பதற்காக பற்களை கவனமாக பரிசோதிக்கிறார். அதேவிதமாகவே, பலவீனங்களையும் ஒழுக்க சிதைவுகளையும் கண்டுப்பிடிப்பதற்காக நாம் நம்முடைய அடையாள அர்த்தமுள்ள இருதயத்தை சோதித்துப்பார்ப்பது அவசியமாகும். ஏன்? ஏனென்றால், “இருதயத்திலிருந்து பொல்லாத சிந்தனைகளும், கொலைபாதகங்களும், விபசாரங்களும், வேசித்தனங்களும், களவுகளும், பொய்ச்சாட்சிகளும், தூஷணங்களும் புறப்பட்டுவரும்” என்பதாக இயேசு சொன்னார்.—மத்தேயு 15:18-20.
ஒரு பல்லைப் பாதுகாப்பதற்காக, பல் மருத்துவர், கண்டுப்பிடிக்கப்படும் எந்தச் சிதைவையும் முழுமையாக அகற்றிவிட வேண்டும். அதேப்போலவே, ‘பொல்லாத சிந்தனைகளையும்,’ தவறான ஆசைகளையும் இருதயத்திலிருந்து நீக்கிச் சுத்திகரிக்க உறுதியான நடவடிக்கை அவசியமாக உள்ளது. கடவுளுடைய வார்த்தையாகிய பைபிளை வாசித்து சிந்திப்பதன் மூலம், நம்முடைய படைப்பாளரின் வழிகளை நாம் அறிந்துகொள்வது மாத்திரமல்லாமல், சரியானதைச் செய்தற்கும்கூட நாம் கற்றுக்கொள்கிறோம்.—ஏசாயா 48:17.
இஸ்ரவேலின் அரசன் தாவீது சரியானதைச் செய்வதற்கான போராட்டத்தில் கூடுதலாக அவசியமாய் இருக்கும் ஒரு உதவியை பயன்படுத்திக்கொண்டார். அவர் இவ்வாறு ஜெபித்தார்: “தேவனே, சுத்த இருதயத்தை என்னிலே சிருஷ்டியும், நிலைவரமான ஆவியை என் உள்ளத்திலே புதுப்பியும்.” (சங்கீதம் 51:10) ஆம், ஜெபசிந்தையோடு யெகோவா தேவனில் சார்ந்திருப்பதன் மூலம், நாமும்கூட தீமை செய்வதற்கு நமக்கிருக்கும் மனச்சாய்வை மேற்கொண்டு சரியானதைச் செய்வதற்கு “நிலைவரமான ஆவியை” வளர்த்துக்கொள்ள முடியும். இவ்விதமாக, நேர்மையாய் இருப்பதை தற்செயலாக நிகழ்வதற்கு நாம் விட்டுவிட மாட்டோம். அது தெரிவு செய்யும் ஒரு காரியமாக இருக்கும்.
[பக்கம் 21-ன் படம்]
தாவீது செய்தது போல, நன்மையானதைச் செய்வதற்கு யெகோவாவிடம் ஜெபிப்பது நமக்கு உதவிசெய்யலாம்