இரகசியத்தை மறைத்துவைத்தல் இதெல்லாம் எதற்காக?
“இரகசியத்தை காத்துக்கொள்வதைப் போல பாரமானது வேறு எதுவும் இல்லை.” அவ்வாறு இல்லையென்றாலும் பிரெஞ்சு பழமொழி ஒன்று என்னவோ அப்படித்தான் உறுதியாகச் சொல்கிறது. இரகசியம் ஒன்று நமக்குத் தெரிந்திருக்கும்போது நாம் மகிழ்ச்சியாக உணருவதும் ஆனால் அதைக் குறித்து பேசமுடியாமல் இருக்கும்போது சில சமயங்களில் நாம் விரக்தியாக உணருவதும் ஏன் என்பதற்கு இது விளக்கமாய் இருக்கமுடியுமா? ஆம், நூற்றாண்டுகளினூடாக அநேக ஆட்கள் இரகசியங்களை காப்பதை வரவேற்பவர்களாக இருந்து, பொதுவான ஒரு இலட்சியத்தை நாடுகிறவர்களாய் இரகசிய காப்பு உறுதிமொழிகளால் கட்டுப்படுத்தப்பட்டு இயங்கும் குழுக்களைச் சேர்ந்துகொண்டிருக்கின்றனர்.
இப்படிப்பட்ட மிகப் பண்டைய இரகசிய ஸ்தாபனங்களில்தான் எகிப்து, கிரீஸ் மற்றும் ரோமில் தோன்றிய இரகசிய வழிபாட்டு பிரிவுகள் இருந்தன. பின்னால் இந்தத் தொகுதிகளில் சில, மத பின்னணியிலிருந்து வழிவிலகிச்சென்று அரசியல், பொருளாதார அல்லது சமுதாய உள்நோக்கங்களை சாதிக்க ஆரம்பித்தன. உதாரணமாக, வரலாற்றின் இடைநிலை காலத்தில் ஐரோப்பாவில் கழகங்கள் அமைக்கப்பட்டபோது, அவற்றின் உறுப்பினர்கள் முக்கியமாக பொருளாதார தற்காப்புக்காக இரகசியங்களைக் காத்துக்கொண்டனர்.
நவீன காலங்களில், அநேகமாக இப்படிப்பட்ட இரகசிய தொகுதிகள் மிகவும் கெளரவமான காரணங்களுக்காக, என்ஸைக்ளோப்பீடியா பிரிட்டானிக்காவின் பிரகாரம், “சமூக மற்றும் அறச்செயல்களுக்காகவும் தரும மற்றும் கல்வி திட்டங்களை நிறைவேற்றுவதற்காகவும்” ஏற்படுத்தப்பட்டுள்ளன. சில சகோதரத்துவ அமைப்புகளும், இளைஞர் சங்கங்களும், சேவா சங்கங்களும் மற்ற தொகுதிகளும்கூட இரகசியமாக, குறைந்தபட்சம் ஓரளவு இரகசியமாக இயங்குகிறவையாக உள்ளன. பொதுவாக, இந்தத் தொகுதிகள் தீய நோக்கமெதுவும் இல்லாதவையாக உள்ளன; அவற்றின் உறுப்பினர்கள் வெறுமனே இரகசியமாக இயங்குவதை கிளர்ச்சியூட்டுவதாக காண்கின்றனர். இரகசிய காப்பு உறுதிமொழி எடுத்துக்கொள்வது, பலமான உணர்ச்சிப்பூர்வமான கவர்ச்சியுடையதாக இருந்து தோழமையுணர்ச்சியையும் ஒற்றுமையையும் பலப்படுத்துகிறது. உறுப்பினர்கள் ஒன்றுபட்ட உணர்ச்சியையும் நோக்கமுள்ள உணர்வையும் பெற்றுக்கொள்கின்றனர். இத்தகைய இரகசிய சங்கங்கள் பொதுவாக உறுப்பினரல்லாதவர்களுக்கு எவ்வகையிலும் ஆபத்தாக இருப்பதில்லை. வெளியே இருப்பவர்கள், இரகசியங்களை அறியாமல் இருப்பதால் எதையும் இழப்பதில்லை.
இரகசியம் ஆபத்தைக் குறிக்கும்போது
எல்லா இரகசிய தொகுதிகளுமே ஒரே அளவு இரகசியமானவை அல்ல. என்ஸைக்ளோப்பீடியா பிரிட்டானிக்கா குறிப்பிடுகிறபடி, “இரகசியங்களுக்குள் இரகசியங்களை” வைத்திருப்பவை குறிப்பாக ஆபத்தாக உள்ளன. உயர் பதவியிலிருப்பவர்கள், “விசேஷமான பெயர்கள், பிரமாணங்கள், அல்லது அருள்வெளிப்பாட்டு செய்திகளைக் கருவியாகக்கொண்டு தங்களைத் தனிப்படுத்தி வைத்துக்கொண்டு, இவ்விதமாக தாழ்ந்த பதவியிலுள்ளவர்களை மேல் நிலையை அடைவதற்கு தேவையான முயற்சியை மேற்கொள்வதற்கு ஊக்கப்படுத்துகின்றனர்” என்பதாக அது விளக்குகிறது. இப்படிப்பட்ட தொகுதிகளில் இயல்பாயுள்ள ஆபத்து வெளிப்படையாகத் தெரிகிறது. கீழ் நிலையிலுள்ளவர்கள் அமைப்பின் உண்மையான நோக்கங்களை முற்றிலும் அறியாதவர்களாய், அருள் வெளிப்பாட்டு செய்தியைப் பெற்றுக்கொள்ளும் நிலைக்கு இன்னும் முன்னேறிச் சென்றிராதவர்களாய் இருக்கலாம். ஒரு தொகுதியின் குறிக்கோள்களையும் அதனை அடைய கடைப்பிடிக்கப்படும் முறைகளையும் ஓரளவு மாத்திரமே அறிந்துகொண்டு அதில் ஈடுபாடு கொள்பவராகிவிடுவது எளிதே. ஆம், அதன் குறிக்கோள்களை அந்தத் தொகுதி உங்களிடம் முழுமையாக விளக்காமல் இருக்கலாம். ஆனால் இப்படிப்பட்ட ஒரு தொகுதிக்குள் நுழைந்துவிடுபவர், அதிலிருந்து தன்னை விடுவித்துக்கொள்வதை ஒருவேளை கடினமாக காணக்கூடும்; உருவக நடையில் சொல்லப்போனால், இரகசியம் எனும் சங்கிலியால் கட்டுண்டவர் போல இருக்கிறார்.
என்றபோதிலும், ஒரு தொகுதி சட்டவிரோதமான அல்லது குற்றயியல்புள்ள இலக்குகளை வைத்திருந்து, அதன் காரணமாக அப்படிப்பட்ட ஒன்று இருப்பதையே மறைக்க முற்படும்போது, இரகசியம் இன்னுமதிக ஆபத்தைக் குறிக்கிறது. அல்லது அது இருப்பதும் அதன் பொதுவான குறிக்கோள்களும் அறியப்பட்டிருந்தாலும், அது அதன் உறுப்பினர்களையும் குறுகிய கால திட்டங்களையும் இரகசியமாகவே வைத்துக்கொள்ள முயலக்கூடும். பலமான தூண்டுதலளிக்கப்பட்டு அவ்வப்போது தங்கள் தீவிரவாத தாக்குதல்களால் உலகை அதிரவைக்கும் பயங்கரவாத தொகுதிகளின் விஷயத்தில் இது உண்மையாய் உள்ளது.
ஆம், இரகசியமான நடவடிக்கை தனிநபர்களுக்கும் முழுசமுதாயத்திற்கும் ஆபத்தானதாக இருக்கக்கூடும். உலக அமைதியையும் பாதுகாப்பையும் அடைவதற்கு செய்யப்படும் முயற்சிகளைத் தொடர்ந்து குலைத்துக்கொண்டும், உலகம் முழுவதிலுமுள்ள அநேக பயங்கரவாத தொகுதிகளோடுகூட பலாத்காரமாக அப்பாவி பலியாட்களுக்குத் தீங்கிழைத்துக் கொண்டும் இருக்கும் இரகசியமாக இயங்கும் பருவ வயதினர் கும்பல்களையும் இரகசியமாக இயங்கும் மாஃபியா, கு க்ளஸ் களான் (Ku Klux Klan) a போன்ற வெள்ளையர் ஆதிக்க குழுக்களையும் பற்றி எண்ணிப்பாருங்கள்.
அவை இப்பொழுது எதில் ஈடுபட்டிருக்கின்றன?
1950-களின்போது, பனிப்போரின் விளைவாக, பல்வேறு மேற்கத்திய ஐரோப்பிய நாடுகளில் இரகசிய தொகுதிகள் ஏற்படுத்தப்பட்டன; சோவியத் இனி எப்போதாவது மேற்கு ஐரோப்பாவை கைப்பற்ற முயன்றால் எதிர்ப்பு இயக்கங்களுக்கு ஒரு தலைமையிடமாக சேவிக்கும்பொருட்டு இவை அமைக்கப்பட்டன. ஜெர்மன் நாட்டு செய்தி பத்திரிகை ஃபோக்கஸ்-படி, இந்தக் காலப்பகுதியின்போது, “79 இரகசிய ஆயுத கிடங்குகள்” அமைக்கப்பட்டிருந்தன. இப்படிப்பட்ட தொகுதிகள் இருப்பதே சில ஐரோப்பிய தேசங்களுக்குத் தெரிந்திருக்கவில்லை. 1990-களின் ஆரம்பத்தில் செய்தி பத்திரிகை ஒன்று பின்வருமாறு யதார்த்தமாக குறிப்பிட்டிருந்தது: “இன்று இவற்றில் எத்தனை அமைப்புகள் இயங்கிக்கொண்டிருக்கின்றன என்பதும் சமீப காலங்களில் அவை எதில் ஈடுபட்டிருக்கலாம் என்பதும் இன்னும் மர்மமாகவே உள்ளது.”
ஆம், எத்தனை இரகசிய தொகுதிகள், நம்மில் எவரும் கற்பனை செய்துபார்ப்பதற்கும் மேலான ஆபத்தை இந்தக் கணத்தில்தானே ஏற்படுத்திக்கொண்டிருக்கக்கூடும் என்பது உண்மையில் யாருக்குத் தெரியும்?
[அடிக்குறிப்புகள்]
a இந்த ஐ.மா. தொகுதி எரிகிற ஒரு சிலுவையை அதன் அடையாள சின்னமாக பயன்படுத்துவதன் மூலம், முற்காலத்திலிருந்த இரகசிய சங்கங்களின் சில மத அம்சங்களைத் தக்கவைத்துக் கொண்டது. கடந்த காலத்தில் அதன் உறுப்பினர்கள் வெள்ளை நிற தொப்பியையும் அங்கியையும் அணிந்துகொண்டு இரவு நேரங்களில் கறுப்பர்கள், கத்தோலிக்கர்கள், யூதர்கள், அயல்நாட்டவர் தொழில் சங்கங்களுக்கு எதிராக தங்கள் ஆத்திரத்தை வெளிப்படுத்தி திடீர் தாக்குதல்களைச் செய்தனர்.