நீங்கள் கடவுளுடைய நண்பரா? உங்கள் ஜெபங்கள் எதை வெளிப்படுத்துகின்றன
இரண்டு பேர் பேசிக்கொள்வது எப்போதாவது தற்செயலாக உங்கள் காதில் விழுந்திருக்கிறதா? அவர்களுடைய உறவு எத்தன்மையுள்ளது—நெருக்கமானவர்களா அந்நியர்களா, வெறுமனே அறிமுகமானவர்களா நெருங்கிய நம்பகமான நண்பர்களா—என்பதைத் தீர்மானிக்க உங்களுக்கு அதிக நேரமெடுத்திருக்காது என்பதில் சந்தேகமில்லை. அதே விதமாகவே, நம்முடைய ஜெபங்கள் கடவுளோடு நமக்கிருக்கும் உறவை வெளிப்படுத்தக்கூடும்.
கடவுள் “நம்மில் ஒருவருக்கும் தூரமானவரல்லவே” என்பதாக பைபிள் நமக்கு உறுதியளிக்கிறது. (அப்போஸ்தலர் 17:27) ஆம், அவரைத் தெரிந்துகொள்ளும்படியாக அவர் நம்மை அழைக்கிறார். நாம் அவருடைய நண்பர்களாகவும்கூட இருக்க முடியும். (சங்கீதம் 34:8; யாக்கோபு 2:23) அவரோடு உண்மையான நெருக்கத்தை நாம் அனுபவித்து மகிழமுடியும்! (சங்கீதம் 25:14) கடவுளோடு உறவை வைத்திருப்பதுதானே அபூரணமான மனிதர்களாகிய நாம் பெற்றிருக்கக்கூடிய மிக அதிக மதிப்புமிக்க காரியமாகும் என்பது தெளிவாக இருக்கிறது. மேலும் யெகோவா நம்முடைய நட்பை மிக உயர்வாக மதிக்கிறார். இது தெளிவாக தெரிகிறது; ஏனென்றால் அவரோடுள்ள நம்முடைய நட்பானது, நமக்காக தம்முடைய ஜீவனைக் கொடுத்த அவருடைய ஒரே பேறான குமாரனின் பேரிலுள்ள நம்முடைய விசுவாசத்தின் அடிப்படையில் இருக்கிறது.—கொலோசெயர் 1:19, 20.
ஆகவே நம்முடைய ஜெபங்கள், யெகோவாவுக்கு நம்முடைய ஆழமான அன்பையும் போற்றுதலையும் வெளிப்படுத்துவதாக இருக்கவேண்டும். உங்களுடைய ஜெபங்கள் மரியாதைக்குரியதாக இருந்தபோதிலும், அதில் ஏதோ இருதயப்பூர்வமான உணர்ச்சி குறைவுபடுவதை நீங்கள் எப்போதாவது உணர்ந்திருக்கிறீர்களா? இது அசாதாரணமானதில்லை. காரியங்களைச் செவ்வைப்படுத்துவதற்கான இரகசியம்? யெகோவா தேவனோடு உங்களுடைய நட்பை வளர்த்துக்கொள்வதாகும்.
ஜெபம் செய்வதற்கு நேரத்தை ஒதுக்கிவைத்தல்
முதலாவதாக, ஒரு நட்பை வளர்த்து அதை பலப்படுத்துவதற்கு நேரமெடுக்கிறது. தினந்தோறும் நீங்கள் அநேக ஆட்களை வாழ்த்தவும் அல்லது அவர்களோடு பேசவும்கூட செய்யலாம்—அயலகத்தார், உடன்வேலை செய்பவர்கள், பேருந்து ஓட்டுநர்கள், கடை எழுத்தர்கள். இருந்தபோதிலும், இப்படிப்பட்டவர்களுக்கு நீங்கள் உண்மையில் நண்பர்கள் என்பதை இது அர்த்தப்படுத்துவதே கிடையாது. மேலோட்டமான ஒரு பேச்சிலிருந்து மாறி உங்களுடைய உள்ளான உணர்ச்சிகளையும் எண்ணங்களையும் வெளிப்படுத்தும் அளவுக்கு நீங்கள் எவரோ ஒருவரோடு விரிவாக பேசும்போது நட்பு வளருகிறது.
அதேவிதமாகவே, யெகோவாவிடமாக நெருங்கிவருவதற்கு ஜெபம் உதவிசெய்கிறது. ஆனால் போதுமான நேரம் அதற்காக ஒதுக்கப்பட வேண்டும்; சாப்பாட்டு நேரங்களில் சுருக்கமாக நன்றி தெரிவிப்பதைக் காட்டிலும் அதிகம் தேவைப்படுகிறது. யெகோவாவிடம் அதிகம் பேச பேச, உங்களுடைய சொந்த உணர்ச்சிகளையும், உள்நோக்கங்களையும் செயல்களையும் அதிகம் வேறுபடுத்திக் காணமுடிகிறவர்களாக இருப்பீர்கள். கடவுளுடைய ஆவி அவருடைய வார்த்தையிலுள்ள நியமங்களை உங்களுடைய மனதுக்குக் கொண்டு வருகையில், கடினமான பிரச்சினைகளுக்கு தீர்வுகள் விளங்க ஆரம்பிக்கின்றன. (சங்கீதம் 143:10; யோவான் 14:26) மேலுமாக, நீங்கள் ஜெபிக்கையில், யெகோவா உங்களுக்கு அதிக மெய்யானவராக ஆகிறார்; அவருடைய அன்புள்ள அக்கறையையும் உங்களிடமாக அவருடைய கவனத்தையும் குறித்து அதிகமாக தெரிந்துகொள்வீர்கள்.
உங்களுடைய ஜெபங்களுக்கு ஒரு பதிலை நீங்கள் பெறுகையில் விசேஷமாக இது உண்மையாக உள்ளது. ஏன், யெகோவா “நாம் வேண்டிக்கொள்ளுகிறதற்கும் நினைக்கிறதற்கும் மிகவும் அதிகமாய் நமக்குள்ளே கிரியைசெய்கிற வல்லமையின்படியே, நமக்குச் செய்ய வல்லவரா”யிருக்கிறார்! (எபேசியர் 3:20) கடவுள் உங்களுக்காக அற்புதங்களைச் செய்கிறார் என்பதை இது அர்த்தப்படுத்துவது கிடையாது. என்றபோதிலும், அவருடைய எழுதப்பட்ட வார்த்தை, உண்மையுள்ள அடிமை வகுப்பின் பிரசுரங்கள், அல்லது அன்புள்ள சகோதர சகோதரிகளின் மூலமாக தேவையான ஆலோசனையையோ வழிநடத்துதலையோ அவர் உங்களுக்குக் கொடுக்கக்கூடும். அல்லது ஒரு சோதனையைச் சகித்திருக்கவோ எதிர்க்கவோ தேவையான பலத்தை உங்களுக்கு அவர் கொடுக்கலாம். (மத்தேயு 24:45; 2 தீமோத்தேயு 4:17) இப்படிப்பட்ட அனுபவங்கள் நம்முடைய பரலோக நண்பருக்கான போற்றுதலால் நம்முடைய இருதயங்களை நிரப்புகின்றன!
ஆகவே ஒருவர் ஜெபத்துக்கு நேரத்தை கண்டடைய வேண்டும். உண்மைதான், அழுத்தம் நிறைந்த இந்த நாட்களில் நேரம் மிகவும் குறைவாகத்தான் உள்ளது. ஆனால் யாரோ ஒருவரிடம் உண்மையில் உங்களுக்கு அக்கறையிருந்தால், அவரோடு செலவழிக்க நீங்கள் பொதுவாக நேரத்தை ஒதுக்குவீர்கள். சங்கீதக்காரன் தன் உணர்ச்சிகளை வெளிப்படுத்திய விதத்தைச் சிந்தித்துப்பாருங்கள்: “மானானது நீரோடைகளை வாஞ்சித்துக் கதறுவதுபோல, தேவனே, என் ஆத்துமா உம்மை வாஞ்சித்துக் கதறுகிறது. என் ஆத்துமா தேவன்மேல், ஜீவனுள்ள தேவன்மேலேயே தாகமாயிருக்கிறது; நான் எப்பொழுது தேவனுடைய சந்நிதியில் வந்து நிற்பேன்?” (சங்கீதம் 42:1, 2) கடவுளோடு பேசுவதற்கு இதே போன்ற ஒரு வாஞ்சை உங்களுக்கு இருக்கிறதா? அப்படியென்றால் அதைச் செய்வதற்கு நேரத்தை கண்டடையுங்கள்!—எபேசியர் 5:16-ஐ ஒப்பிடுக.
உதாரணமாக, ஜெபிப்பதற்கு உங்களுக்கென்று கொஞ்சம் நேரத்தைப் பெறுவதற்காக நீங்கள் காலையில் சீக்கிரமாக எழும்பிவிடுவதை முயற்சிசெய்து பார்க்கலாம். (சங்கீதம் 119:147) சிலசமயங்களில் நீங்கள் தூக்கமில்லாத இரவுகளைக் கொண்டிருக்கிறீர்களா? அப்படியென்றால், சங்கீதக்காரனைப் போலவே, உங்களுடைய கவலைகளைக் கடவுளுக்குத் தெரிவிக்க இப்படிப்பட்ட கலக்கமான காலங்களை ஒரு வாய்ப்பாக கருதலாம். (சங்கீதம் 63:6) அல்லது வெறுமனே நாள் முழுவதிலும் பல தடவை சுருக்கமான ஜெபங்களை நீங்கள் செய்துகொண்டிருக்கலாம். சங்கீதக்காரன் கடவுளிடம் சொன்னார்: “நாடோறும் உம்மை நோக்கிக்கூப்பிடுகிறேன்.”—சங்கீதம் 86:3.
நம்முடைய ஜெபங்களின் தரத்தை முன்னேற்றுவித்தல்
சில சமயங்களில் நீண்ட ஜெபங்கள் செய்வதை நீங்கள் பிரயோஜனமுள்ளதாக காணலாம். சுருக்கமான ஒரு ஜெபத்தில், மேலோட்டமான விஷயங்களைப் பற்றி மாத்திரமே நீங்கள் பேசக்கூடும். ஆனால் நீங்கள் நீளமானதும் ஆழமானதுமான ஒரு ஜெபத்தை செய்கையில், நீங்கள் தடையில்லாமல் உங்கள் எண்ணங்களையும் உள்ளான உணர்வுகளையும் வெளிப்படுத்துவீர்கள். இயேசு குறைந்தபட்சம் ஒரு சமயத்திலாவது ஜெபத்திற்கு முழு இரவையும் செலவிட்டார். (லூக்கா 6:12) நீங்கள் அவசரப்படுவதை தவிர்த்தால், உங்களுடைய சொந்த ஜெபங்களும்கூட அதிக நெருக்கமானதாகவும் அர்த்தமுள்ளதாகவும் ஆவதை நீங்கள் காண்பீர்கள் என்பதில் சந்தேகமில்லை.
உங்களுக்கு சொல்வதற்கு அதிகம் இல்லாதபோது, சம்பந்தமில்லாமல் மனம் போன போக்கில் எதையாவது பேசிக்கொண்டிருப்பதை இது அர்த்தப்படுத்துவதில்லை; அல்லது அர்த்தமில்லாமல் சொன்னதையே திரும்பத்திரும்ப சொல்வதையும் இது அர்த்தப்படுத்துவதில்லை. இயேசு இவ்வாறு எச்சரித்தார்: “நீங்கள் ஜெபம்பண்ணும்போது, அஞ்ஞானிகளைப்போல வீண்வார்த்தைகளை அலப்பாதேயுங்கள்; அவர்கள், அதிக வசனிப்பினால் தங்கள் ஜெபம் கேட்கப்படுமென்று நினைக்கிறார்கள். அவர்களைப்போல நீங்கள் செய்யாதிருங்கள்; உங்கள் பிதாவை நோக்கி நீங்கள் வேண்டிக்கொள்ளுகிறதற்கு முன்னமே உங்களுக்கு இன்னது தேவை என்று அவர் அறிந்திருக்கிறார்.”—மத்தேயு 6:7, 8.
எதைப் பற்றி நீங்கள் பேச விரும்புகிறீர்கள் என்பதை முன்கூட்டியே எண்ணிப்பார்ப்பீர்களானால் ஜெபம் அதிக அர்த்தமுள்ளதாக இருக்கிறது. சாத்தியமான விஷயங்களுக்கு முடிவே இல்லை—சிலவற்றை சொல்லவேண்டுமானால், ஊழியத்தில் நம்முடைய சந்தோஷங்கள், நம்முடைய பலவீனங்களும் தவறுகளும், நம்முடைய ஏமாற்றங்கள், நம்முடைய பொருளாதார கவலைகள், வேலைசெய்யுமிடத்தில் அல்லது பள்ளியில் அழுத்தங்கள், நம்முடைய குடும்பங்களின் நலன், நம்முடைய உள்ளூர் சபையின் ஆவிக்குரிய நிலைமை ஆகியவை.
நீங்கள் ஜெபம் செய்யும்போது சில சமயங்களில் உங்கள் மனது அலைபாய ஆரம்பித்துவிடுகிறதா? அப்படியென்றால் மனதை ஒருமுகப்படுத்த கூடுதலாக முயற்சி செய்யுங்கள். எப்படியிருந்தாலும், யெகோவா ‘நம்முடைய விண்ணப்பத்திற்குச் செவிகொடுக்க’ மனமுள்ளவராக இருக்கிறார். (சங்கீதம் 17:1) நம்முடைய சொந்த ஜெபங்களுக்கு கவனத்தைச் செலுத்துவற்கு ஊக்கமாக முயற்சிசெய்ய நாம் மனமுள்ளவர்களாக இருக்கவேண்டாமா? ஆம், ‘உங்கள் மனதை ஆவிக்குரியவைகளைச் சிந்திக்க’ வைத்து அதை அலைபாய அனுமதிக்காதீர்கள்.—ரோமர் 8:5.
யெகோவாவை நாம் எவ்விதமாக குறிப்பிடுகிறோம் என்பதும்கூட முக்கியமானதாகும். தம்மை ஒரு நண்பராக நாம் கருதவேண்டும் என்று அவர் விரும்பினாலும்கூட, சர்வலோகத்தின் பேரரசரிடம் நாம் பேசுகிறோம் என்பதை ஒருபோதும் மறந்துவிடக்கூடாது. வெளிப்படுத்துதல் 4 மற்றும் 5 அதிகாரங்களில் வருணிக்கப்பட்டுள்ள பிரமிப்பூட்டும் அந்தக் காட்சியை வாசித்து அதைத் தியானித்துப் பாருங்கள். அங்கே யோவான் நாம் ஜெபத்தில் அணுகும் அந்த நபரின் மகத்துவத்தைத் தரிசனத்தில் பார்த்தார். ‘சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிறவரிடம்’ அணுகவும் பேசவும் முடிவதில் என்னே ஒரு சிலாக்கியத்தை நாம் பெற்றிருக்கிறோம்! நம்முடைய பேச்சு மரியாதைக் குறைவாக அல்லது கண்ணியமற்றதாக ஆவதை நாம் ஒருபோதும் விரும்பமாட்டோம். அதற்குப் பதிலாக, ‘நம்முடைய வாயின் வார்த்தைகளும், நம்முடைய இருதயத்தின் தியானமும் யெகோவாவுக்கு பிரீதியாயிருப்பதற்கு’ ஒன்றுதிரட்டப்பட்ட முயற்சி செய்யவேண்டும்.—சங்கீதம் 19:14.
ஆனால் பேச்சுத் திறமையினால் நாம் யெகோவாவை கவர முடியாது என்பதை உணர்ந்துகொள்ள வேண்டும். நம்முடைய எண்ணங்கள் எத்தனை எளிமையாக வெளிப்படுத்தப்பட்டாலும் நம்முடைய மரியாதையான, இருதயப்பூர்வமான எண்ணங்களில் அவர் பிரியப்படுகிறார்.—சங்கீதம் 62:8.
தேவையான காலங்களில் ஆறுதலும் புரிந்துகொள்ளுதலும்
நமக்கு உதவியும் ஆறுதலும் தேவையாக இருக்கும் சமயத்தில் நாம் அடிக்கடி ஆதரவுக்காகவும் அனுதாபத்துக்காகவும் நெருக்கமான ஒரு நண்பரிடம் செல்கிறோம். ஆம், யெகோவாவைவிட அத்தனை சுலபமாக வேறு எந்த நண்பரையும் அணுகிவிட முடியாது. அவர் “ஆபத்துக்காலத்தில் அநுகூலமான துணையுமானவர்.” (சங்கீதம் 46:1) ‘சகலவிதமான ஆறுதலின் தேவனாக’ வேறு எவரையும்விட நாம் அனுபவித்துக்கொண்டிருப்பதை அவர் புரிந்துகொள்கிறவராக இருக்கிறார். (2 கொரிந்தியர் 1:3, 4; சங்கீதம் 5:1; 31:7) மனமுறிந்த நிலையில் இருப்பவர்களுக்கு அவர் உண்மையான ஒற்றுணர்வையும் இரக்கத்தையும் காட்டுகிறார். (ஏசாயா 63:9; லூக்கா 1:77, 78) புரிந்துகொள்ளுகிற ஒரு நண்பராக யெகோவாவை காண்கையில், ஊக்கமாகவும் தீவிரமாகவும் அவரிடம் நாம் தாராளமாக பேசுகிறோம். நம்முடைய மிக ஆழமான பயங்களையும் கவலைகளையும் அவருக்குத் தெரியப்படுத்த நாம் தூண்டப்படுகிறோம். இவ்விதமாக, யெகோவாவின் ‘சொந்த ஆறுதல் எப்படி நம் ஆத்துமாவைத் தேற்றுகிறது’ என்பதை நாம் கண்கூடாக காண்போம்.—சங்கீதம் 94:18, 19.
சில சமயங்களில் நம்முடைய தவறுகளின் காரணமாக கடவுளை அணுக நாம் தகுதியற்றவர்களாக உணரலாம். ஆனால் உங்களுடைய நெருங்கிய நண்பர் ஒருவர் உங்களுக்கு எதிராக தவறுசெய்துவிட்டு உங்களிடம் மன்னிப்புக்காக கெஞ்சினால் அப்போது என்ன செய்வீர்கள்? அவரைத் தேற்றி அவருக்கு மீண்டும் நம்பிக்கையளிக்கும்படி நீங்கள் செயல்பட மாட்டீர்களா? அப்படியென்றால் யெகோவாவிடம் அதிலும் குறைவாக நாம் ஏன் எதிர்பார்க்க வேண்டும்? மனித அபூரணத்தின் காரணமாக பாவம் செய்துவிடும் தம்முடைய நண்பர்களை அவர் தாராளமாக மன்னித்துவிடுகிறார். (சங்கீதம் 86:5; 103:3, 8-11) இதை அறிந்தவர்களாக, நம்முடைய தவறுகளைத் தடையில்லாமல் அவரிடம் அறிக்கை செய்வதிலிருந்து நாம் பின்வாங்குவதில்லை; நாம் அவருடைய அன்பையும் இரக்கத்தையும் குறித்து நம்பிக்கையாக இருக்கலாம். (சங்கீதம் 51:17) நம்முடைய குற்றங்களின் காரணமாக நாம் மனச்சோர்வுற்றிருந்தால், 1 யோவான் 3:19, 20-ல் உள்ள வார்த்தைகளிலிருந்து ஆறுதலைப் பெறலாம்: “இதினாலே நாம் நம்மைச் சத்தியத்திற்குரியவர்களென்று அறிந்து, நம்முடைய இருதயத்தை அவருக்குமுன்பாக நிச்சயப்படுத்திக்கொள்ளலாம். நம்முடைய இருதயமே நம்மைக் குற்றவாளிகளாகத் தீர்க்குமானால், தேவன் நம்முடைய இருதயத்திலும் பெரியவராயிருந்து சகலத்தையும் அறிந்திருக்கிறார்.”
இருந்தபோதிலும் கடவுளுடைய அன்புள்ள அக்கறையை அனுபவித்து மகிழ நாம் மனமுறிந்தவர்களாக இருக்க வேண்டும் என்பது அவசியமில்லை. நம்முடைய ஆவிக்குரிய மற்றும் உணர்ச்சி சம்பந்தமான நலனைப் பாதிக்கக்கூடிய எதுவாயிருந்தாலும் அதில் யெகோவா அக்கறையுள்ளவராக இருக்கிறார். ஆம், ஜெபத்தில் குறிப்பிடுவதற்கு நம்முடைய உணர்ச்சிகளும் எண்ணங்களும் கவலைகளும் மிகவும் அற்பமானவை என்பதாக ஒருபோதும் நாம் நினைக்கவேண்டிய அவசியம் இல்லை. (பிலிப்பியர் 4:6) நீங்கள் ஒரு நெருங்கிய நண்பரோடு இருக்கையில், உங்கள் வாழ்க்கையில் நிகழ்ந்த மிகப் பெரிய சம்பவங்களை மாத்திரமே அவரோடு கலந்து பேசுவீர்களா? ஒப்பிடுகையில் சிறிய கவலைகளாக இருப்பவற்றைக்கூட நீங்கள் பகிர்ந்துகொள்ள மாட்டீர்களா? அதே விதமாகவே, யெகோவா ‘உங்களை விசாரிக்கிறவராக’ இருப்பதை அறிந்தவர்களாய், உங்களுடைய வாழ்க்கையின் எந்த அம்சத்தைப்பற்றியும் நீங்கள் தாராளமாக பேசலாம்.—1 பேதுரு 5:7.
நிச்சயமாகவே, நீங்கள் பேசுவதெல்லாம் உங்களைப் பற்றியே இருக்குமானால் ஒரு நட்பு நீண்ட காலம் நிலைத்திருக்காது. அதேவிதமாகவே, நம்முடைய ஜெபங்கள் சுயநலமுள்ளதாக இருக்கக்கூடாது. யெகோவாவிலும் அவருடைய அக்கறைகளிலும் நமக்கிருக்கும் அன்பையும் சிரத்தையையும்கூட நாம் வெளிப்படுத்த வேண்டும். (மத்தேயு 6:9, 10) ஜெபம் என்பது கடவுளிடமிருந்து உதவியைப் பெறுவதற்கு மட்டுமல்லாமல், நன்றியையும் துதியையும் செலுத்துவதற்கும்கூட ஒரு வாய்ப்பாக இருக்கிறது. (சங்கீதம் 34:1; 95:2) ஒழுங்கான தனிப்பட்ட படிப்பின் மூலமாக “அறிவைப் பெற்றுவருவது,” இந்த விஷயத்தில் நமக்கு உதவிசெய்யும்; யெகோவாவையும் அவருடைய வழிகளையும் மேம்பட்ட விதமாக அறிந்துகொள்ள அது நமக்கு உதவிசெய்கிறது. (யோவான் 17:3, NW) சங்கீதம் புத்தகத்தைப் படித்து மற்ற உண்மையுள்ள ஊழியர்கள் எவ்விதமாக யெகோவாவிடம் பேசினார்கள் என்பதைக் கவனிப்பது குறிப்பாக பிரயோஜனமாயிருப்பதை நீங்கள் காண்பீர்கள்.
யெகோவாவின் நட்பு உண்மையிலேயே மதிப்புமிக்க ஒரு பரிசாக இருக்கிறது. நம்முடைய ஜெபங்களை அதிக நெருக்கமானதாக, இருதயப்பூர்வமானதாக, தனிப்பட்டதாக ஆக்குவதன் மூலமாக அதை நாம் போற்றுகிறோம் என்பதைக் காட்டுவோமாக. அப்போது நாம் சங்கீதக்காரன் வெளிப்படுத்திய மகிழ்ச்சியை அனுபவிப்போம்; அவர் இவ்வாறு அறிவித்தார்: “நீர் தெரிந்துகொண்டு சேர்த்துக்கொள்ளுகிறவன் பாக்கியவான் [“சந்தோஷமுள்ளவன்,” NW].”—சங்கீதம் 65:4.
[பக்கம் 28-ன் படம்]
நாள் முழுவதிலும் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் நாம் கடவுளிடம் ஜெபிக்கலாம்