நல்லொழுக்கத்தை நீங்கள் தொடர்ந்து கடைப்பிடித்து வருகிறீர்களா?
‘ஒழுக்கமுள்ளவைகளெவைகளோ, நற்கீர்த்தியுள்ளவைகளெவைகளோ அவைகளையே சிந்தித்துக்கொண்டிருங்கள்.’—பிலிப்பியர் 4:8.
1. தீய ஒழுக்கம் என்பது என்ன, அது ஏன் யெகோவாவின் வணக்கத்தை கறைபடுத்தவில்லை?
தீயஒழுக்கம் என்பது ஒழுக்கக்கேடாக அல்லது கறைபட்ட நடத்தையாக இருக்கிறது. நாம் வாழ்ந்துவரும் உலகில் அது எங்கும் பரவலாக காணப்படுகிறது. (எபேசியர் 2:1-3) இருப்பினும், யெகோவா தேவன் தம்முடைய தூய்மையான வணக்கம் கறைபடுவதை அனுமதிக்கமாட்டார். கிறிஸ்தவ பிரசுரங்கள், கூட்டங்கள், அசெம்பிளிகள், மற்றும் மாநாடுகள் நேர்மையில்லாத நடத்தைக்கு எதிராக தக்க சமயத்தில் நமக்கு எச்சரிப்புகளைக் கொடுத்து வருகின்றன. கடவுளுடைய பார்வையில் “நன்மையைப் பற்றிக்கொண்டிருக்க” சரியான வேதப்பூர்வமான உதவியை நாம் பெற்றுக்கொள்கிறோம். (ரோமர் 12:9) ஆகவே ஒரு அமைப்பாக, யெகோவாவின் சாட்சிகள் சுத்தமுள்ளவர்களாக, ஒழுக்கமுள்ளவர்களாக இருக்க பிரயாசப்படுகிறார்கள். ஆனால் தனிப்பட்டவர்களாக நம்மைப் பற்றி என்ன? ஆம், நல்லொழுக்கத்தை நீங்கள் தொடர்ந்து கடைப்பிடித்து வருகிறீர்களா?
2. நல்லொழுக்கம் என்பது என்ன, நல்லொழுக்கமுள்ளவர்களாய் நிலைத்திருப்பதற்கு ஏன் முயற்சி தேவைப்படுகிறது?
2 நல்லொழுக்கம் சீரிய ஒழுக்கமாகவும் நற்குணமாகவும் சரியான செயலாகவும் சிந்தனையாகவும் உள்ளது. அது செயல்புரியாத தன்மையாக இல்லாமல் செயல்புரியும் உடன்பாடான ஒன்றாக உள்ளது. நல்லொழுக்கம் என்பது பாவத்தைத் தவிர்ப்பதைக் காட்டிலும் அதிகத்தை உட்படுத்துகிறது; அது நன்மையானதை தொடர்ந்து கடைப்பிடித்து வருவதை அர்த்தப்படுத்துகிறது. (1 தீமோத்தேயு 6:11) அப்போஸ்தலன் பேதுரு உடன் கிறிஸ்தவர்களைப் பின்வருமாறு அறிவுறுத்தினார்: ‘உங்கள் விசுவாசத்தோடு நல்லொழுக்கத்தை கூட்டிவழங்குங்கள்.’ எவ்விதமாக? ‘இதை [கடவுளுடைய அருமையான வாக்குறுதிகளை] மனதில் வைத்து, ஊக்கமாக முயற்சிசெய்வதன்’ மூலம். (2 பேதுரு 1:5, NW) நம்முடைய பாவமுள்ள இயல்பின் காரணமாக, நல்லொழுக்கமுள்ளவர்களாய் நிலைத்திருப்பதற்கு உண்மையான முயற்சி தேவைப்படுகிறது. இருப்பினும், கடவுள் பயமுள்ள ஆட்கள் கடந்த காலங்களில் மிகுதியான இடையூறுகளின் மத்தியிலும்கூட இவ்விதமாகச் செய்திருக்கிறார்கள்.
அவர் நல்லொழுக்கத்தைத் தொடர்ந்து கடைப்பிடித்துவந்தார்
3. ஆகாஸ் ராஜா என்ன பொல்லாத செயல்களுக்காக குற்றமுள்ளவராக இருந்தார்?
3 நல்லொழுக்கத்தைத் தொடர்ந்து கடைப்பிடித்து வந்தவர்களைப் பற்றிய அநேக பதிவுகளை பைபிள் வேதாகமம் கொண்டிருக்கிறது. உதாரணமாக, நல்லொழுக்கமுள்ள எசேக்கியாவைப் பற்றி சிந்தித்துப்பாருங்கள். அவருடைய தகப்பனான யூதாவின் ஆகாஸ் ராஜா, மோளேகுவை வணங்கிவந்தார். “ஆகாஸ் ராஜாவாகிறபோது இருபது வயதாயிருந்து, எருசலேமிலே பதினாறு வருஷம் அரசாண்டான்; அவன் தன் தகப்பனாகிய தாவீதைப்போல் தன் தேவனாகிய கர்த்தரின் பார்வைக்குச் செம்மையானதைச் செய்யாமல், இஸ்ரவேல் ராஜாக்களின் வழியிலே நடந்து, கர்த்தர் இஸ்ரவேல் புத்திரருக்கு முன்பாகத் துரத்தின ஜாதிகளுடைய அருவருப்புகளின்படியே தன் குமாரனை முதலாய்த் தீக்கடக்கப்பண்ணினான். மேடைகளிலும் மலைகளின்மேலும் பச்சையான சகல மரத்தின்கீழும் பலியிட்டுத் தூபங்காட்டிவந்தான்.” (2 இராஜாக்கள் 16:2-4) ‘தீக்கடக்கப்பண்ணுவது’ மனிதரை பலி செலுத்துவதை அல்ல ஆனால் ஏதோவொரு வகையான சுத்திகரிக்கும் சடங்கையே அர்த்தப்படுத்தியது என்பதாக சிலர் சொல்கின்றனர். என்றபோதிலும், ஜான் டே எழுதிய மோளேகு—பழைய ஏற்பாட்டில் மனித பலியின் ஒரு கடவுள் என்ற ஆங்கில புத்தகம் இவ்வாறு குறிப்பிடுகிறது: “கானானியரின் உலகில் . . . மனித பலிகள் செலுத்தப்பட்டுவந்தன என்பதற்கு பண்டைய கிரேக்க, ரோம மற்றும் கார்த்தேஜ் நூல்களின் அத்தாட்சியும் புதைபொருள் ஆய்வு அத்தாட்சியும் உள்ளன; ஆகவே பழைய ஏற்பாடு குறிப்பிடுகின்ற [மனித பலிகளை] சந்தேகிப்பதற்கு எந்தக் காரணமுமில்லை.” மேலுமாக, ஆகாஸ் “தன் குமாரரை அக்கினியிலே தகித்துப்போ”ட்டான் என்பதாக 2 நாளாகமம் 28:3 குறிப்பாகச் சொல்லுகிறது. (ஒப்பிடுக: உபாகமம் 12:31; சங்கீதம் 106:37, 38) என்னே பொல்லாப்பான செயல்கள்!
4. தீய ஒழுக்கம் நிறைந்த ஒரு சூழலில் எசேக்கியா எவ்விதமாக நடந்துகொண்டார்?
4 தீய ஒழுக்கம் நிறைந்த இந்தச் சூழலில் எசேக்கியா எவ்விதமாக நடந்துகொண்டார்? 119-ஆம் சங்கீதம் அக்கறைக்குரியதாக உள்ளது; ஏனென்றால் எசேக்கியா ஒரு பிரபுவாக இருந்த போது இதை இயற்றியதாக சிலர் நம்புகின்றனர். (சங்கீதம் 119:46, 99, 100) ஆகவே பின்வரும் இந்த வார்த்தைகள் அவருடைய சூழ்நிலைமையைக் குறிப்பிடுவதாக இருக்கலாம்: “பிரபுக்களும் உட்கார்ந்து எனக்கு விரோதமாய்ப் பேசிகொள்ளுகிறார்கள்; உமது அடியேனோ, உமது பிரமாணங்களைத் தியானிக்கிறேன். சஞ்சலத்தால் என் ஆத்துமா கரைந்துபோகிறது [“தூங்காமல் இருக்கிறது,” NW].” (சங்கீதம் 119:23, 28) பொய் மதத்தைக் கடைப்பிடித்தவர்கள் அவரைச் சூழ்ந்திருந்த காரணத்தால், எசேக்கியா அரசவை உறுப்பினர்களால் பரிகாசம் செய்யப்பட்டிருக்கலாம்; அதன் காரணமாக தூக்கம் வருவது கடினமாக இருந்தது. இருந்தபோதிலும், அவர் நல்லொழுக்கத்தையே நாடினார்; காலப்போக்கில் ராஜாவாக ஆனார்; ‘யெகோவாவின் பார்வைக்குச் செம்மையானதைத் தொடர்ந்து செய்தார். . . . அவர் இஸ்ரவேலின் தேவனாகிய யெகோவாவின்மேல் நம்பிக்கைவைத்தார்.’—2 இராஜாக்கள் 18:1-5, NW.
நல்லொழுக்கமுள்ளவர்களாக அவர்கள் நிலைத்திருந்தனர்
5. தானியேலும் அவருடைய மூன்று தோழர்களும் என்ன சோதனைகளை எதிர்ப்பட்டார்கள்?
5 தானியேலும் அனனியா, மீஷாவேல், அசரியா என்ற பெயருள்ள அவருடைய மூன்று எபிரெய தோழர்களும்கூட நல்லொழுக்கத்தில் சிறந்த முன்மாதிரிகளாக இருந்தனர். அவர்கள் தங்கள் தாயகத்திலிருந்து வலுக்கட்டாயமாக அழைத்துச்செல்லப்பட்டு பாபிலோனுக்கு நாடுகடத்தப்பட்டனர். நான்கு வாலிபர்களுக்கும் பாபிலோனிய பெயர்கள் சூட்டப்பட்டன—பெல்தெஷாத்சார், சாத்ராக், மேஷாக், ஆபேத்நெகோ. கடவுளுடைய நியாயப்பிரமாணத்தினால் தடைசெய்யப்பட்டிருந்த உணவு வகைகள் உட்பட ‘ராஜாவின் போஜனம்’ அவர்களுக்கு அளிக்கப்படும் என்று சொல்லப்பட்டது. மேலுமாக, “கல்தேயரின் எழுத்தையும் பாஷையையும் கற்றுக்கொள்ள” மூன்று ஆண்டு கால பயிற்றுவிப்பைப் பெற்றுக்கொள்ளும்படியாக அவர்கள் வற்புறுத்தப்பட்டார்கள். இது வெறுமனே இன்னொரு மொழியைக் கற்றுக்கொள்வதைவிட அதிகத்தை உட்படுத்தியது; ஏனென்றால் “கல்தேயர்” என்ற பதம் இங்கு கல்வியில் தேர்ச்சிப்பெற்ற வகுப்பாரை குறிக்கலாம். இவ்விதமாக இந்த எபிரெய வாலிபர்கள் தவறான பாபிலோனிய போதகங்களுக்கு வெளிப்படுத்தப்பட்டார்கள்.—தானியேல் 1:1-7.
6. தானியேல் நல்லொழுக்கத்தைத் தொடர்ந்து கடைப்பிடித்துவந்தார் என்பதாக நாம் ஏன் சொல்லலாம்?
6 தானியேலும் அவருடைய மூன்று தோழர்களும் இணங்கிப் போவதற்கு மிகுதியான அழுத்தங்களை எதிர்ப்பட்டபோதிலும் தீய ஒழுக்கத்துக்குப் பதிலாக நல்லொழுக்கத்தையே தெரிந்துகொண்டார்கள். தானியேல் 1:21 சொல்கிறது: “கோரேஸ் ராஜ்யபாரம்பண்ணும் முதலாம் வருஷமட்டும் தானியேல் அங்கே இருந்தான்.” ஆம், தானியேல் 80 ஆண்டுகளுக்கும் மேலாக—பலமுள்ள பல அரசர்களின் எழுச்சி மற்றும் வீழ்ச்சியினூடாக—யெகோவாவின் ஒரு ஒழுக்கமுள்ள ஊழியனாக ‘தொடர்ந்து இருந்தார்.’ ஒழுக்கமில்லாத அரசாங்க அதிகாரிகளின் தந்திரங்கள் மற்றும் சதிவேலைகளின் மத்தியிலும் பாபிலோனிய மதம் முழுவதிலும் ஊடுருவியிருந்த தீய பாலியல் ஒழுக்கங்கள் மத்தியிலும் அவர் கடவுளுக்கு உண்மையுள்ளவராக நிலைத்திருந்தார். தானியேல் தொடர்ந்து நல்லொழுக்கத்தைக் கடைப்பிடித்து வந்தார்.
7. தானியேலும் அவருடைய மூன்று தோழர்களும் பின்தொடர்ந்த போக்கிலிருந்து என்ன கற்றுக்கொள்ளப்படலாம்?
7 கடவுள் பயமுள்ள தானியேலிடமிருந்தும் அவருடைய தோழர்களிடமிருந்தும் நாம் அதிகத்தைக் கற்றுக்கொள்ளலாம். அவர்கள் நல்லொழுக்கத்தைத் தொடர்ந்து கடைப்பிடித்துவந்து பாபிலோனிய கலாச்சாரத்திற்குள் ஒன்றிப்போய்விட மறுத்தார்கள். பாபிலோனிய பெயர்கள் கொடுக்கப்பட்டிருந்த போதிலும், யெகோவாவின் ஊழியர்களாக தங்கள் அடையாளத்தை அவர்கள் ஒருபோதும் இழந்துவிடவில்லை. ஏன், சுமார் 70 ஆண்டுகளுக்குப் பிறகு, பாபிலோனிய அரசன் தானியேலை அவருடைய எபிரெய பெயரால் குறிப்பிட்டார்! (தானியேல் 5:13) தன்னுடைய வாழ்நாள் முழுவதிலுமாக, தானியேல் சிறிய காரியங்களிலும்கூட ஒத்திணங்கிப்போக மறுத்துவிட்டார். ஓர் இளைஞனாக இருக்கையிலேயே, அவர் “ராஜாவின் போஜனத்தினாலும் அவர் பானம்பண்ணும் திராட்சரசத்தினாலும் தன்னைத் தீட்டுப்படுத்தலாகாதென்று, தன் இருதயத்தில் தீர்மானம் பண்ணி”யிருந்தார். (தானியேல் 1:8) தானியேலும் அவருடைய மூன்று தோழர்களும் ஒத்திணங்கிப்போகாதிருக்க எடுத்த இந்த நிலைநிற்கையே, அவர்கள் பிற்காலங்களில் வாழ்வா சாவா என்பதைத் தீர்மானித்த சோதனையான காலங்களை எதிர்ப்பட்டபோது அவர்களைப் பலப்படுத்தியிருக்க வேண்டும் என்பதில் எந்தச் சந்தேகமுமில்லை.—தானியேல் 3, 6 அதிகாரங்கள்.
நல்லொழுக்கத்தை இன்று தொடர்ந்து கடைப்பிடித்துவருதல்
8. கிறிஸ்தவ இளைஞர் எவ்விதமாக சாத்தானுடைய உலகோடு ஒன்றிப்போய்விடுவதை எதிர்க்கமுடியும்?
8 தானியேலையும் அவருடைய மூன்று தோழர்களையும் போலவே, இன்று கடவுளுடைய மக்கள் சாத்தானுடைய பொல்லாத உலகோடு ஒன்றிப்போய்விடுவதை எதிர்க்கிறார்கள். (1 யோவான் 5:19) நீங்கள் ஒரு கிறிஸ்தவ வாலிபராக இருந்தால், உடையிலும் சிகை அலங்காரத்திலும் இசையிலும் மிதமிஞ்சியதாக இருக்கும் தங்களுடைய ரசனையைப் பின்பற்றுமாறு சகாக்கள் உங்களை அதிகம் வற்புறுத்தலாம். ஆனால் பிரபலமாகும் ஒவ்வொரு நாகரிக பாணியையும் பின்பற்றுவதற்குப் பதிலாக, உறுதியாக நின்று, “இந்தப் பிரபஞ்சத்திற்கு ஒத்த வேஷந்தரியாமல்” இருங்கள். (ரோமர் 12:2) ‘அவபக்தியையும் லெளகிக இச்சைகளையும் வெறுத்து, தெளிந்த புத்தியும் நீதியும் தேவபக்தியும் உள்ளவர்களாய் . . . ஜீவனம் பண்ணுங்கள்.’ (தீத்து 2:11, 12) உங்களுடைய சகாக்களுடைய அங்கீகாரம் அல்ல, ஆனால் யெகோவாவுடைய அங்கீகாரமே முக்கியமான காரியமாகும்.—நீதிமொழிகள் 12:2.
9. வியாபார உலகிலுள்ள கிறிஸ்தவர்கள் என்ன அழுத்தங்களை எதிர்ப்படலாம், அவர்கள் எவ்விதமாக நடந்துகொள்ள வேண்டும்?
9 வயதுவந்த கிறிஸ்தவர்களும்கூட அழுத்தங்களை எதிர்ப்படுகின்றனர், அவர்களும் ஒழுக்கமுள்ளவர்களாய் இருக்கவேண்டும். வியாபாரிகளாக இருக்கும் கிறிஸ்தவர்கள் கேள்விக்குரிய வியாபார பழக்கங்களில் ஈடுபடவோ அல்லது அரசாங்க விதிமுறைகளை அல்லது வரிச்சட்டங்களை அசட்டைசெய்யவோ தூண்டப்படலாம். வியாபாரத்தில் போட்டியிடுவோர் அல்லது உடன் வேலைசெய்பவர்கள் எப்படி நடந்துகொண்டாலும் சரி, நாம் ‘எல்லாவற்றிலும் யோக்கியமாய் நடக்க விரும்புகிறோம்.’ (எபிரெயர் 13:18) வேலைக்கு அமர்த்தியவர்கள், வேலைசெய்பவர்கள், வாடிக்கையாளர்கள் மற்றும் உலக அரசாங்கங்களோடு நேர்மையாகவும் நியாயமாகவும் நாம் நடந்துகொள்ளும்படியாக வேதாகமம் நம்மைத் தேவைப்படுத்துகிறது. (உபாகமம் 25:13-16; மத்தேயு 5:37; ரோமர் 13:1; 1 தீமோத்தேயு 5:18; தீத்து 2:9, 10) நம்முடைய வியாபார விவகாரங்களில் ஒழுங்குள்ளவர்களாக இருக்கவும்கூட நாம் பிரயாசப்படுவோமாக. திருத்தமான பதிவுகளை வைத்து, ஒப்பந்தங்களை எழுத்து வடிவில் வைத்திருப்பதன் மூலம் பிணக்கங்களை நாம் அநேகமாக தவிர்க்கமுடியும்.
எச்சரிக்கையாயிருங்கள்!
10. இசையை தெரிவுசெய்யும் விஷயத்தில் ‘எச்சரிக்கையாய் இருப்பது’ ஏன் அவசியமாயிருக்கிறது?
10 கடவுளுடைய பார்வையில் நல்லொழுக்கமுள்ளவர்களாய் நிலைத்திருப்பதில் உட்படும் மற்றொரு அம்சத்தை சங்கீதம் 119:9 உயர்த்திக் காண்பிக்கிறது. சங்கீதக்காரன் பின்வருமாறு பாடினார்: “வாலிபன் தன் வழியை எதினால் சுத்தம்பண்ணுவான்? உமது வசனத்தின்படி தன்னைக் காத்துக்கொள்ளுகிறதினால்தானே.” சாத்தானுடைய அதிக சக்திவாய்ந்த கருவிகளில் ஒன்று, உணர்ச்சிகளைத் தூண்ட வல்ல இசையாகும். சில கிறிஸ்தவர்கள் இசையின் விஷயத்தில் ‘எச்சரிக்கையாயிருக்க’ தவறிவிட்டிருக்கின்றனர்; அதனுடைய மிதமிஞ்சிய வகையான ராப் மற்றும் ஹெவி மெட்டல் இசையினிடமாக அவர்கள் கவர்ந்திழுக்கப்பட்டிருக்கின்றனர். இப்படிப்பட்ட இசை தங்களுக்கு கெடுதல் செய்யாது என்றோ வார்த்தைகளுக்கு அவர்கள் கவனம் செலுத்துவது கிடையாது என்றோ சிலர் விவாதிக்கலாம். மற்றவர்கள் தாங்கள் வெறுமனே பலமான மெட்டுடைய தாளத்தை அல்லது சப்தமாக ஒலிக்கும் கிட்டாரின் ஒலியை மகிழ்ந்து அனுபவிப்பதாகச் சொல்கிறார்கள். ஆனால் கிறிஸ்தவர்களுக்கு ஏதோவொன்று மகிழ்ந்து அனுபவிக்கத்தக்கதாக இருக்கிறதா என்பது பிரச்சினையல்ல. அவர்கள் கவனிக்கவேண்டியது அது ‘கர்த்தருக்குப் பிரியமானதா’ என்பதே. (எபேசியர் 5:10) மொத்தத்தில் ஹெவி மெட்டலும் ராப் இசையும் தெய்வ நிந்தனை, விபசாரம், பேய் வணக்கம் போன்ற தீய ஒழுக்கங்களையே ஊக்குவிக்கின்றன—கடவுளுடைய மக்கள் மத்தியில் இந்தக் காரியங்களுக்கு எந்த இடமுமில்லை.a (எபேசியர் 5:3) நான் தெரிவு செய்யும் இசையின் மூலமாக, நான் நாடுவது நல்லொழுக்கத்தையா தீய ஒழுக்கத்தையா? என்ற கேள்வியை இளைஞராயிருந்தாலும், வயதானவர்களாய் இருந்தாலும், நாம் ஒவ்வொருவரும் சிந்தித்துப் பார்க்கவேண்டும்.
11. டெலிவிஷன் நிகழ்ச்சிகள், வீடியோக்கள் மற்றும் திரைப்படங்கள் சம்பந்தமாக ஒரு கிறிஸ்தவன் எவ்வாறு எச்சரிக்கையாய் இருக்க முடியும்?
11 அநேக டெலிவிஷன் நிகழ்ச்சிகளும், வீடியோக்களும் திரைப்படங்களும் தீய ஒழுக்கத்தை ஊக்குவிக்கின்றன. பிரபல மனநல நிபுணர் ஒருவரின் கருத்துப்படி, இன்று தயாரிக்கப்படும் பெரும்பாலான திரைப்படங்களில் ‘இன்பத்தில் பிரியம், பாலியல், வன்முறை, பேராசை மற்றும் சுயநலம்’ ஆகியவையே மேலோங்கியிருக்கின்றன. ஆகவே, எச்சரிக்கையாய் இருப்பது என்பது நாம் பார்க்க தெரிந்துகொள்வதில் கவனமாய் இருப்பதை உட்படுத்துகிறது. சங்கீதக்காரன் இவ்விதமாக ஜெபித்தார்: “பயனற்றதின்மீது பார்வையைச் செலுத்தாதபடி என் கண்களைத் திருப்பிவிடும்.” (சங்கீதம் 119:37, தமிழ் கத்தோலிக்க பைபிள்.) ஜோசஃப் என்ற பெயருள்ள ஒரு கிறிஸ்தவ இளைஞன் இந்த நியமத்தின்படி செய்தான். குறிப்பிட்ட ஒரு திரைப்படம் விளக்கமாக பாலியலையும் வன்முறையையும் வர்ணிக்க ஆரம்பித்தபோது, அவன் அரங்கத்தைவிட்டு வெளியேறினான். இதைச் செய்வதற்கு அவன் சங்கடப்பட்டானா? “இல்லை, இல்லவே இல்லை” என்று ஜோசஃப் சொல்கிறான். “யெகோவாவைப் பற்றியும் அவரைப் பிரியப்படுத்துவதைப் பற்றியுமே நான் முதலில் யோசித்தேன்.”
படிப்பு மற்றும் தியானத்தின் பங்கு
12. நல்லொழுக்கத்தைத் தொடர்ந்து கடைப்பிடித்து வருவதற்கு தனிப்பட்ட படிப்பும் தியானமும் ஏன் அவசியமாக உள்ளது?
12 கெட்ட காரியங்களைத் தவிர்ப்பது மட்டுமே போதுமானதல்ல. நல்லொழுக்கத்தைத் தொடர்ந்து கடைப்பிடித்துவருவது, கடவுளுடைய வார்த்தையில் பதிவுசெய்யப்பட்டிருக்கும் நல்ல காரியங்களைப் படிப்பதையும் தியானம் செய்வதையும்கூட உட்படுத்துகிறது; அப்போதுதான் அதிலுள்ள நீதியான நியமங்களை வாழ்க்கையில் பொருத்தி பயன்படுத்தமுடியும். “உமது வேதத்தில் நான் எவ்வளவு பிரியமாயிருக்கிறேன்!” என்பதாக சங்கீதக்காரன் சொன்னார். “நாள்முழுதும் அது என் தியானம்.” (சங்கீதம் 119:97) பைபிளையும் கிறிஸ்தவ பிரசுரங்களையும் தனிப்பட்டவிதமாக படிப்பது உங்களுடைய வாராந்தர அட்டவணையில் ஒரு பாகமாக இருக்கிறதா? உண்மைதான், கடவுளுடைய வார்த்தையை ஊக்கமாக படிப்பதற்கும் அதன்மீது ஜெபசிந்தையோடு தியானம் செய்வதற்கும் நேரத்தைக் கண்டுபிடிப்பது சவாலாக இருக்கக்கூடும். ஆனால் மற்ற நடவடிக்கைகளிலிருந்து நேரத்தை வாங்குவது அநேகமாக கூடிய காரியமாக இருக்கிறது. (எபேசியர் 5:15, 16) ஒருவேளை அதிகாலை மணிநேரங்கள் ஜெபத்துக்கும், படிப்புக்கும் தியானத்துக்கும் சாதகமான நேரமாக உங்களுக்கு இருக்கக்கூடும்.—சங்கீதம் 119:147-ஐ ஒப்பிடுக.
13, 14. (அ) தியானம் செய்வது ஏன் மதிப்புள்ளதாக இருக்கிறது? (ஆ) எந்த வேதவசனங்களைத் தியானம்செய்வது பாலியல் ஒழுக்கக்கேட்டை வெறுப்பதற்கு நமக்கு உதவிசெய்யக்கூடும்?
13 தியானிப்பது மிகவும் மதிப்புள்ளதாக இருக்கிறது, ஏனென்றால் நாம் கற்றுக்கொள்ளும் காரியங்களைத் தக்கவைத்துக்கொள்ள அது நமக்கு உதவிசெய்கிறது. அதிமுக்கியமாக, கடவுளுடைய நோக்குநிலையை ஊக்குவிக்க அது உதவக்கூடும். இதை விளக்குவதற்கு: வேசித்தனத்தைக் கடவுள் தடைசெய்கிறார் என்பதை அறிந்திருப்பது ஒரு காரியமாகும், ஆனால் ‘தீமையை வெறுத்து, நன்மையைப் பற்றிக்கொண்டிருப்பது’ முற்றிலும் வேறொரு காரியமாகும். (ரோமர் 12:9) கொலோசெயர் 3:5 போன்ற முக்கியமான பைபிள் வசனங்களின்மீது தியானம் செய்வதன் மூலம் பாலியல் ஒழுக்கக்கேட்டைக் குறித்து நாம் உண்மையில் யெகோவா உணரும் விதமாகவே உணரக்கூடும்; அது நம்மை இவ்வாறு துரிதப்படுத்துகிறது: “ஆகவே உங்களில் உலகிற்கடுத்தவற்றைச் சாகச் செய்யுங்கள். விபசாரம், அசுத்தம், காமம், தீய இச்சைகள், சிலை வழிபாட்டுக்கு ஒப்பான பொருளாசை ஆகியவற்றை ஒழித்துவிடுங்கள்.” உங்களை நீங்களே பின்வருமாறு கேட்டுக்கொள்ளுங்கள்: ‘எவ்வகையான காமத்தின் ஆவலை நான் சாகடிக்கவேண்டும்? அசுத்தமான இச்சையை தூண்டக்கூடிய எதை நான் தவிர்க்கவேண்டும்? எதிர்பாலாரோடு நான் பழகும் விதத்தில் செய்யவேண்டிய மாற்றங்கள் இருக்கின்றனவா?’—1 தீமோத்தேயு 5:1, 2-ஐ ஒப்பிடுக.
14 வேசித்தனத்துக்கு விலகியிருந்து “இந்த விஷயத்தில் ஒருவனும் மீறாமலும் தன் சகோதரனை வஞ்சியாமலும்” இருக்கும்படிக்கு தன்னடக்கத்தை கடைப்பிடிக்க வேண்டும் என்பதாக பவுல் கிறிஸ்தவர்களைத் துரிதப்படுத்துகிறார். (1 தெசலோனிக்கேயர் 4:3-7) உங்களை நீங்களே இவ்வாறு கேட்டுக்கொள்ளுங்கள்: ‘வேசித்தனம்செய்வது ஏன் தீங்கிழைப்பதாக இருக்கிறது? இந்த விஷயத்தில் நான் பாவம் செய்யும்போது எனக்கு அல்லது வேறு ஒருவருக்கு நான் என்ன கெடுதலை செய்கிறேன்? ஆவிக்குரியப்பிரகாரமாயும் உணர்ச்சிப்பூர்வமாயும் சரீரப்பிரகாரமாயும் நான் எவ்வாறு பாதிக்கப்படுவேன்? கடவுளுடைய சட்டத்தை மீறி, பின் மனந்திரும்பாதிருக்கும் சபை அங்கத்தினர்களைப் பற்றி என்ன? அவர்களுக்கு முடிவாக என்ன ஏற்பட்டிருக்கிறது?’ இப்படிப்பட்ட நடத்தையைப் பற்றி வேதாகமம் என்ன சொல்கிறது என்பதற்கு செவிசாய்ப்பது கடவுளுடைய பார்வையில் தீமையாய் இருப்பவற்றிடமாக நம்முடைய வெறுப்பை ஆழப்படுத்தக்கூடும். (யாத்திராகமம் 20:14; 1 கொரிந்தியர் 5:11-13; 6:9, 10; கலாத்தியர் 5:19-21; வெளிப்படுத்துதல் 21:8) வேசித்தனம் செய்கிறவன் ‘மனுஷரை அல்ல, தேவனையே அசட்டைபண்ணுகிறான்’ என்பதாக பவுல் சொல்லுகிறார். (1 தெசலோனிக்கேயர் 4:8) எந்த உண்மைக் கிறிஸ்தவன் தன்னுடைய பரலோக தந்தையை அசட்டைபண்ணுவான்?
நல்லொழுக்கமும் கூட்டுறவும்
15. நல்லொழுக்கத்தை நாம் தொடர்ந்து கடைப்பிடித்துவருவதில் கூட்டுறவு என்ன பங்கை வகிக்கிறது?
15 நல்லொழுக்கமுள்ளவர்களாய் நிலைத்திருப்பதற்கு மற்றொரு உதவி நல்ல கூட்டுறவாகும். சங்கீதக்காரன் இவ்விதமாக பாடினார்: “உமக்குப் [யெகோவா] பயந்து, உமது கட்டளைகளைக் கைக்கொள்ளுகிற அனைவருக்கும் நான் தோழன்.” (சங்கீதம் 119:63) நமக்கு கிறிஸ்தவ கூட்டங்களில் கிடைக்கும் ஆரோக்கியமான கூட்டுறவு அவசியமாக இருக்கிறது. (எபிரெயர் 10:24, 25) நம்மையே நாம் தனிமைப்படுத்திக்கொண்டால், சுயநலம் கருதுகிற சிந்தையுள்ளவர்களாகிவிடக்கூடும்; தீய ஒழுக்கமும் நம்மை எளிதில் மேற்கொண்டுவிடும். (நீதிமொழிகள் 18:1) என்றபோதிலும் அன்பான கிறிஸ்தவர்களின் தோழமை நல்லொழுக்கமுள்ளவர்களாய் நிலைத்திருப்பதற்கான நம்முடைய தீர்மானத்தைப் பலப்படுத்துவதாக இருக்கும். நிச்சயமாகவே, நாம் கெட்ட கூட்டுறவுகளுக்கு எதிராகவும்கூட எச்சரிக்கையாயிருக்க வேண்டும். நாம் நம்முடைய அயலாரோடும் உடன்வேலையாட்களோடும் சக மாணவர்களோடும் உள்ளன்போடு பழகலாம். ஆனால் நாம் உண்மையில் ஞானமுள்ளவர்களாக நடந்துகொண்டிருந்தால், கிறிஸ்தவ நல்லொழுக்கத்தைத் தொடர்ந்து கடைப்பிடித்துக் கொண்டிராதவர்களோடு நெருக்கமாக பழகுவதை நாம் தவிர்த்துவிடுவோம்.—கொலோசெயர் 4:5-ஐ ஒப்பிடுக.
16. 1 கொரிந்தியர் 15:33-ஐ பொருத்தி பயன்படுத்துவது எவ்வாறு இன்று நல்லொழுக்கத்தைத் தொடர்ந்து கடைப்பிடித்துவர நமக்கு உதவிசெய்யக்கூடும்?
16 பவுல் எழுதினார்: “கெட்ட கூட்டுறவுகள் பயனுள்ள பழக்கங்களைக் கெடுக்கும்.” இந்த ஒரு கூற்றைச் சொல்வதன் மூலம், உயிர்த்தெழுதலைப் பற்றிய வேதப்பூர்வமான போதனையை நிராகரித்த, கிறிஸ்தவர்களென சொல்லிக்கொண்டவர்களோடு கூட்டுறவுகொள்வதன் மூலம் விசுவாசிகள் தங்களுடைய விசுவாசத்தை இழந்துபோகக்கூடும் என்பதாக அவர்களை அவர் எச்சரித்துக்கொண்டிருந்தார். பவுலின் எச்சரிக்கைக்குப் பின்னாலிருக்கும் நியமம் சபைக்கு உள்ளே, வெளியே என இரு இடங்களிலும் நாம் கொண்டிருக்கக்கூடிய கூட்டுறவுகளுக்குப் பொருந்துவதாக இருக்கிறது. (1 கொரிந்தியர் 15:12, 33, NW) எதிர்பார்க்கப்படுகிறபடியே, நாம் கொண்டிருக்கக்கூடிய முற்றிலும் தனிப்பட்ட ஒரு நோக்குநிலைக்கு நம்முடைய ஆவிக்குரிய சகோதர சகோதரிகள் ஒத்துவராத காரணத்தால் நாம் அவர்களை ஒதுக்கிவிட விரும்பமாட்டோம். (மத்தேயு 7:4, 5; ரோமர் 14:1-12) இருந்தாலும், சபையிலுள்ள சிலர் கேள்விக்குரிய நடத்தையில் ஈடுபட்டாலோ கசப்பான அல்லது குறைகூறும் ஆவியை வெளிப்படுத்தினாலோ எச்சரிக்கையாய் இருப்பது அவசியமாகும். (2 தீமோத்தேயு 2:20-22) ‘உற்சாக பரிமாற்றத்தை’ நாம் மகிழ்ந்து அனுபவிக்க முடிகிறவர்களோடு நெருக்கமாய் இருப்பது ஞானமான காரியமாகும். (ரோமர் 1:11, 12, NW) இது நல்லொழுக்கமான நடத்தையை தொடர்ந்து கடைப்பிடிக்கவும் ‘ஜீவமார்க்கத்தில்’ நிலைத்திருக்கவும் நமக்கு உதவிசெய்யும்.—சங்கீதம் 16:11.
நல்லொழுக்கத்தைத் தொடர்ந்து கடைப்பிடித்துக்கொண்டிருங்கள்
17. எண்ணாகமம் 25-ஆம் அதிகாரத்தின்படி, இஸ்ரவேலருக்கு என்ன அழிவு ஏற்பட்டது, இது நமக்கு என்ன பாடத்தை அளிக்கிறது?
17 இஸ்ரவேலர் வாக்குப்பண்ணப்பட்ட தேசத்தைச் சுதந்தரித்துக்கொள்வதற்கு சற்று முன்பு, அவர்களில் ஆயிரக்கணக்கானோர் தீய ஒழுக்கத்தைக் கடைப்பிடிக்க தெரிந்துகொண்டு அழிவை அடைந்தனர். (எண்ணாகமம், அதிகாரம் 25) இன்று, யெகோவாவின் மக்கள் நீதியுள்ள புதிய உலகின் வாயிலில் நின்றுகொண்டிருக்கிறார்கள். அதற்குள் பிரவேசிப்பது, இந்த உலகின் தீய ஒழுக்கங்களை தொடர்ந்து நிராகரித்துக்கொண்டிருப்பவர்களின் ஆசீர்வாதமான சிலாக்கியமாக இருக்கும். அபூரண மனிதர்களாக, நமக்குத் தவறான மனச்சாய்வுகள் இருக்கக்கூடும்; ஆனால் கடவுள் அவருடைய பரிசுத்த ஆவியின் நீதியான வழிநடத்துதல்களைப் பின்பற்றுவதற்கு நமக்கு உதவிசெய்யக்கூடும். (கலாத்தியர் 5:16; 1 தெசலோனிக்கேயர் 4:3, 4) ஆகவே இஸ்ரவேலருக்கு யோசுவா கொடுத்த அறிவுரைக்கு நாம் செவிகொடுப்போமாக: “நீங்கள் யெகோவாவுக்குப் பயந்து, அவரை உத்தமமும் உண்மையுமாய்ச் சேவியுங்கள்.” (யோசுவா 24:14, NW) யெகோவாவை பிரியப்படுத்தாமல் போய்விடுவோமோ என்ற பக்தியோடுகூடிய பயம் நல்லொழுக்கமுள்ள பாதையில் தொடர்ந்துசெல்ல நமக்கு உதவிசெய்யும்.
18. தீய ஒழுக்கத்தைக் குறித்தும் நல்லொழுக்கத்தைக் குறித்தும் எல்லா கிறிஸ்தவர்களின் தீர்மானமும் என்னவாக இருக்கவேண்டும்?
18 கடவுளைப் பிரியப்படுத்துவதே உங்களுடைய இருதயத்தின் ஆசையாக இருக்குமானால், பவுலின் அறிவுரைக்கு செவிசாய்க்க தீர்மானமுள்ளவர்களாய் இருங்கள்: “உண்மையுள்ளவைகளெவைகளோ, ஒழுக்கமுள்ளவைகளெவைகளோ, நீதியுள்ளவைகளெவைகளோ, கற்புள்ளவைகளெவைகளோ, அன்புள்ளவைகளெவைகளோ, நற்கீர்த்தியுள்ளவைகளெவைகளோ, புண்ணியம் எதுவோ, புகழ் எதுவோ அவைகளையே சிந்தித்துக்கொண்டிருங்கள்.” இதைச் செய்வீர்களானால், பலன் என்னவாக இருக்கும்? பவுல் சொன்னார்: “அவைகளையே செய்யுங்கள்; அப்பொழுது சமாதானத்தின் தேவன் உங்களோடிருப்பார்.” (பிலிப்பியர் 4:8, 9) ஆம், யெகோவாவின் உதவியினால், தீய ஒழுக்கத்தை நிராகரித்துவிட்டு நல்லொழுக்கத்தைத் தொடர்ந்து கடைப்பிடித்துவரலாம்.
[அடிக்குறிப்பு]
a 1993 ஏப்ரல் 15, காவற்கோபுரம் பக்கங்கள் 19-24 மற்றும் விழித்தெழு! 1993, பிப்ரவரி 8, பிப்ரவரி 22 மற்றும் மார்ச் 22 மற்றும் 1996 நவம்பர் 22, “இளைஞர் கேட்கின்றனர் . . . ” தொடர் கட்டுரைகளைப் பார்க்கவும்.
மறுபார்வைக்கு கேள்விகள்
◻ நல்லொழுக்கத்தைத் தொடர்ந்து கடைப்பிடிப்பதற்கு என்ன தேவைப்படுகிறது?
◻ என்ன சூழ்நிலைமைகளின்கீழ் எசேக்கியா, தானியேல் மற்றும் மூன்று எபிரெயர்கள் நல்லொழுக்கமுள்ளவர்களாய் நிலைத்திருந்தனர்?
◻ சாத்தானின் தந்திரங்களை எதிர்ப்பதில் நாம் எவ்வாறு தானியேலைப் போல இருக்கலாம்?
◻ பொழுதுபோக்கின் சம்பந்தமாக கிறிஸ்தவர்கள் ஏன் எச்சரிக்கையாய் இருக்க வேண்டும்?
◻ நல்லொழுக்கத்தைத் தொடர்ந்து கடைப்பிடித்து வருவதில் படிப்பும் தியானமும் கூட்டுறவும் என்ன பங்கை வகிக்கின்றன?
[பக்கம் 15-ன் படம்]
இளம் எசேக்கியா மோளேகுவின் வணக்கத்தாரால் சூழப்பட்டிருந்தபோதிலும் நல்லொழுக்கத்தைத் தொடர்ந்து கடைப்பிடித்துவந்தார்
[பக்கம் 17-ன் படம்]
பொழுதுபோக்கு விஷயத்தில் கிறிஸ்தவர்கள் எச்சரிக்கையாய் இருக்கவேண்டும்