பேராபத்துக்களின் சமயத்தில் காப்பாற்றப்படுதல்
டீரென்று கொரியாவில் சியோலிலுள்ள ஐந்து அடுக்கு பல்பொருள் அங்காடி திடீரென்று இடிந்து விழுந்தபோது, உள்ளே நூற்றுக்கணக்கான ஆட்கள் சிக்கிக்கொண்டனர்! எத்தனை உயிர்களைக் காப்பாற்ற முடியுமோ அத்தனை உயிர்களைக் காப்பாற்ற மீட்புப் பணியாளர்கள் இரவும் பகலும் வேலைசெய்தனர். நாட்கள் கடந்துசென்றது; கட்டடத்தின் இடிந்த கற்குவியலுக்குள் உயிரோடு புதைந்துவிட்டிருக்கக்கூடிய எவரையும் கண்டுபிடிப்பதற்கான சாத்தியம் குறைய ஆரம்பித்தது.
நம்பிக்கை அனைத்தும் கைவிடப்பட்டபின்பு, ஆச்சரியமான ஏதோவொன்று நடைபெற்றது. இடிந்த கற்குவியலின் உள்ளிருந்து சோகமான மெல்லிய அழுகைக் குரல் ஒன்று கேட்டது. 16 நாட்கள் உயிரோடு புதைந்துகிடந்த ஒரு 19 வயது பெண்ணை விடுவிப்பதற்காக மீட்பு பணியாளர்கள் நெஞ்சு பரபரக்க வெறுங் கையால் தோண்டினார்கள். கீழே விழுந்திருந்த ஒரு எலிவேட்டர், அவளுக்கு பாதுகாப்பு அறைபோல் சேவித்து, டன் கணக்கில் விழுந்துகொண்டிருந்த கான்கிரீட்டிலிருந்து அவளைக் காப்பாற்றியது. உடலில் நீரின்றி மோசமான வெட்டுக்காயத்தோடு இருந்தாலும், அவள் உயிருடனிருந்தாள்!
இப்பொழுதெல்லாம், ஒரு நில நடுக்கம், கடுமையான ஒரு புயல் காற்று, ஒரு எரிமலை வெடிப்பு, ஒரு விபத்து, அல்லது ஒரு பஞ்சம் என எதுவாக இருந்தாலும் சரி, ஒவ்வொரு மாதமும் இப்படிப்பட்ட ஏதாவது ஒரு அழிவைப் பற்றிய அறிக்கைகள் வந்தவண்ணமாகவே இருக்கின்றன. மீட்புப்பணியையும் உயிர் தப்பினோரையும் பற்றிய பிரமிக்க வைக்கும் சங்கதிகள், செய்திகளில் அக்கறையுள்ள கோடிக்கணக்கானோரின் ஆவலைத்தூண்டுவதாயும் கவர்ந்திழுப்பதாயும் உள்ளன. இருப்பினும், வரவிருக்கும் பேராபத்தைப்பற்றிய ஒரு எச்சரிக்கை—மனித வரலாற்றிலேயே வேறு எதையும்விட மிகப் பெரிய ஒன்று—மொத்தத்தில் அசட்டைசெய்யப்பட்டுவருகிறது. (மத்தேயு 24:21) வரவிருக்கும் இந்தச் சம்பவத்தை பைபிள் பின்வரும் இந்த வார்த்தைகளில் விவரிக்கிறது: “இதோ, ஜாதிஜாதிக்குத் தீமை பரம்பும், பூமியின் எல்லைகளிலிருந்து மகா புசல் எழும்பும். அக்காலத்திலே பூமியின் ஒருமுனை துவக்கி பூமியின் மறுமுனைமட்டும் கர்த்தரால் கொலையுண்டவர்கள் கிடப்பார்கள்; அவர்கள் புலம்பப்படாமலும் சேர்க்கப்படாமலும் அடக்கம்பண்ணப்படாமலும் பூமியின்மேல் எருவாவார்கள்.”—எரேமியா 25:32, 33.
திடுக்கிடச் செய்யும் வார்த்தைகள்! ஆனால் இயற்கையின் ஆபத்துக்களையும் விபத்துக்களையும் போலில்லாமல், இந்தப் பேராபத்து ஒரு கண்மூடித்தனமான படுகொலையாக இருக்காது. உண்மையில், தப்பிப்பிழைப்பது—நீங்கள் தப்பிப்பிழைப்பது—சாத்தியமாகும்!
ஓர் அவசர காலம்
இந்த உண்மையை முழுமையாக கிரகித்துக்கொள்வதற்கு, உலகம் முழுவதிலும் இந்தப் பேராபத்து ஏன் வரவிருக்கிறது என்பதை ஒருவர் முதலாவதாக புரிந்துகொள்ள வேண்டும். உண்மையில், இதுவே மனிதவர்க்கத்தின் பிரச்சினைகளுக்கு ஒரே உண்மையான பரிகாரமாக உள்ளது. வெகு சில ஆட்களே இன்று பாதுகாப்பாகவும் பத்திரமாகவும் உணருகிறார்கள். அறிவியலின் மிகச் சிறந்த முயற்சிகளின் மத்தியிலும், தொற்று நோய்கள் தொடர்ந்து பூமியின் மக்கள் தொகையை அழித்துவருகிறது. மத, இன மற்றும் அரசியல் வேற்றுமைகளால் நடைபெறும் போர்களில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழக்கின்றனர். அப்பாவி ஆண்கள், பெண்கள் மற்றும் பிள்ளைகளின் சோகத்தையும் துயரத்தையும் பஞ்சம் அதிகரிக்கிறது. ஒழுக்க சீர்குலைவு சமுதாயத்தின் அஸ்திவாரத்தையே அரித்துவிடுகிறது; பிள்ளைகளும்கூட சீரழிந்துவிட்டிருக்கிறார்கள்.
குறிப்பிடத்தக்க விதத்தில் நுட்பமாக, 1,900 ஆண்டுகளுக்கும் முன்பாக எழுதப்பட்ட ஒரு பைபிள் தீர்க்கதரிசனம் நம்முடைய நிலைமையை விளக்குகிறது. அது இவ்வாறு சொல்லுகிறது: “கடைசி நாட்களில் காலங்கள் ஆபத்து நிறைந்ததாய் இருக்கும் என்பதை நீங்கள் உணரவேண்டும்.”—2 தீமோத்தேயு 3:1, ஜே.பி. பிலிப்ஸின் தி நியூ டெஸ்டமென்ட் இன் மார்டன் இங்லிஷ்; மத்தேயு 24:3-22-ஐ ஒப்பிடுக.
அன்புள்ள ஒரு கடவுள் நம்முடைய பரிதாபமான நிலைமையைக் குறித்து அலட்சியமாய் இருந்துவிடுவார் என்பது உங்களுக்கு நியாயமாகத் தோன்றுகிறதா? பைபிள் இவ்வாறு சொல்கிறது: “பூமியையும் வெறுமையாயிருக்கச் சிருஷ்டியாமல் அதைக் குடியிருப்புக்காகச் செய்து படைத்து, அதை உருவேற்படுத்தின[வர்] தேவனாகிய கர்த்தர்.” (ஏசாயா 45:18) ஆம், அழகிய இந்தக் கோளம் பாழ்படுத்தப்பட்டு அதனுடைய எல்லா குடிகளும் அழிக்கப்படுவதை அனுமதிப்பதற்குப் பதிலாக, கடவுள் தலையிடுவார். கேள்வி என்னவென்றால், அதை அவர் எவ்விதமாகச் செய்வார்?
ஜீவனைத் தெரிந்துகொள்ளுங்கள்!
பைபிள் இதற்கு சங்கீதம் 92:7-ல் பதிலளிக்கிறது: “துன்மார்க்கர் புல்லைப்போலே தழைத்து, அக்கிரமக்காரர் யாவரும் செழிக்கும்போது, அது அவர்கள் என்றென்றைக்கும் அழிந்துபோவதற்கே ஏதுவாகும்.” அக்கிரமத்தை அழித்துவிடுவதே பூமியின் பிரச்சினைகளுக்கு கடவுளுடைய பரிகாரமாக இருக்கிறது. எல்லா மக்களுமே அழிக்கப்படவேண்டும் என்பதை இது அர்த்தப்படுத்தாது என்பது மகிழ்ச்சி தருவதாய் உள்ளது. சங்கீதம் 37:34 நமக்கு இவ்வாறு உறுதியளிக்கிறது: “நீ கர்த்தருக்குக் காத்திருந்து, அவருடைய வழியைக் கைக்கொள்; அப்பொழுது நீ பூமியைச் சுதந்தரித்துக்கொள்வதற்கு அவர் உன்னை உயர்த்துவார்; துன்மார்க்கர் அறுப்புண்டுபோவதை நீ காண்பாய்.”
மனிதவர்க்கத்துக்கு நேரிடப்போகிற மிகப் பெரிய பேராபத்திலிருந்து காப்பாற்றப்படுவதற்கு வாய்ப்பிருக்கிறது என்பதை இந்த வார்த்தைகள் சுட்டிக்காண்பிக்கின்றன. தெரிவுசெய்யும் வாய்ப்பை கடவுள் நமக்கு தந்திருக்கிறார். இஸ்ரவேலர் வாக்குப்பண்ணப்பட்ட தேசத்திற்குள் பிரவேசிப்பதற்கு தயாராக இருந்த சமயத்தில் பின்வரும் வார்த்தைகளைக் கொண்டு மோசே அவர்களை உற்சாகப்படுத்தினார். அவர் சொன்ன வார்த்தைகள் இன்றும் நமக்கு அதே அளவில் பொருந்துவதாய் உள்ளன: ‘நான் ஜீவனையும் மரணத்தையும் ஆசீர்வாதத்தையும் சாபத்தையும் உனக்குமுன் வைத்தேன். . . . நீயும் உன் சந்ததியும் பிழைக்கும்படிக்கு, நீ ஜீவனைத் தெரிந்துகொள்ளவேண்டும்.’ (உபாகமம் 30:19) ஆனால் ஒருவர் எவ்விதமாக ‘ஜீவனைத் தெரிந்துகொண்டு’ காப்பாற்றப்படுகிறார்? உண்மையான இரட்சிப்பு உண்மையில் எதை அர்த்தப்படுத்துகிறது?
[பக்கம் 2-ன் படத்திற்கான நன்றி]
COVER: Explosion: Copyright © Gene Blevins/Los Angeles Daily News
[பக்கம் 3-ன் படத்திற்கான நன்றி]
Yunhap News Agency/Sipa Press