வயதான பெற்றோரை மதிப்பதால் வரும் பலன்கள்
கடவுளை வழிபடும் உண்மையான பக்தர்கள், தங்கள் பெற்றோரை நேசிப்பதால் அவர்களை மதிக்கிறார்கள், கௌரவிக்கிறார்கள், பராமரிக்கிறார்கள். இவ்வாறு செய்வது அவர்களது வழிபாட்டின் ஒரு அம்சமாகவே உள்ளது. பைபிள் குறிப்பிடுகிறது: ‘பிள்ளைகளாவது, பேரன் பேர்த்திகளாவது இருந்தால், இவர்கள் முதலாவது தங்கள் சொந்தக் குடும்பத்தைத் தேவபக்தியாய் விசாரித்து, பெற்றார் செய்த நன்மைகளுக்குப் பதில் நன்மைகளைச் செய்யக் கற்றுக்கொள்ளக்கடவர்கள்; அது நன்மையும் தேவனுக்கு முன்பாகப் பிரியமுமாயிருக்கிறது.’ (1 தீமோத்தேயு 5:4) நாம் இளையவராக இருந்தாலும் சரி பெரியவர்களாக இருந்தாலும் சரி, நம் பெற்றோருக்கும், தாத்தா பாட்டிக்கும் “பதில் நன்மைகளைச்” செய்வது பொருத்தமாக இருக்கிறது. இவ்விதம், அவர்கள் நமக்குப் பல வருடங்களாகக் காட்டிய அன்புக்கும், செய்த கடின உழைப்புக்கும், வழங்கிய பராமரிப்புக்கும் நன்றியுணர்வை நாம் காட்டுகிறோம். இதுமட்டுமா, அவர்கள் அளித்த நம் வாழ்க்கைக்காக நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோமே!
பெற்றோருக்கும், தாத்தா பாட்டிக்கும் பதில் நன்மை செய்வது, “தேவனுக்கு முன்பாகப் பிரியமுமாயிருக்கிறது” என்பதை கவனியுங்கள். இது நம்முடைய ‘தேவபக்தியுடன்’ தொடர்புடையது. ஆகவே, இந்த ஆலோசனையைப் பின்பற்றி, நாம் செய்யும் செயல் கடவுளுக்கு பிரியமாக உள்ளது என்று அறியும்போது நமக்கு ஆசீர்வாதங்கள் கிடைக்கின்றன. இது நமக்கு மகிழ்ச்சியைத் தருகிறது.
மற்றவர்களுக்குக் கொடுப்பதில் ஆனந்தம் உண்டாகிறது, அதிலும் குறிப்பாக, நமக்குத் தாராளமாகக் கொடுத்தவர்களுக்குக் கொடுப்பதென்றால் மகிழ்ச்சி கரைபுரண்டு ஓடும். (அப்போஸ்தலர்கள் 20:35) அப்படியென்றால், “உன் தகப்பனும் உன் தாயும் சந்தோஷப்படுவார்கள்; உன்னைப் பெற்றவள் மகிழுவாள்” என்ற பைபிள் நியமத்திற்கு இசைவாக செயல்படும்போது என்னே அருமையான பிரதிபலனைக் கொண்டுவருகிறது!—நீதிமொழிகள் 23:25.
நம் பெற்றோருக்கும், தாத்தா பாட்டிக்கும் எவ்வாறு பதில் நன்மை செய்வது? மூன்று வழிகளில் செய்யலாம்: பொருளாதார ரீதியில், உணர்ச்சி ரீதியில், ஆவிக்குரிய ரீதியில். ஒவ்வொன்றும் பிரதிபலனை கொண்டுவருகிறது.
பொருளாதார ரீதியில் கொடுப்பது
தங்களுடைய நெருங்கிய குடும்ப அங்கத்தினர்களைப் பொருளாதார ரீதியில் பராமரிப்பது மிகவும் அவசியம் என்பதை கடவுளை சேவிப்பவர்கள் அறிந்துள்ளனர். பவுல் இவ்வாறு அறிவுறுத்தினார்: “ஒருவன் தன் சொந்த ஜனங்களையும், விசேஷமாகத் தன் வீட்டாரையும் பராமரியாமற்போனால், அவன் விசுவாசத்தை மறுதலித்தவன், அவிசுவாசியிலும் கெட்டவன்.”—1 தீமோத்தேயு 5:8, திருத்திய மொழிபெயர்ப்பு.
டுன்ஜியும் ஜாய்யும் மேற்கு ஆப்பிரிக்காவில் வாழ்ந்துவருகிறார்கள். பொருளாதார கஷ்டம் அவர்களை வாட்டியெடுத்தபோதிலும், ஜாய்யின் பெற்றோர்களை தங்களோடு வந்து இருந்துவிடும்படி அழைத்தார்கள். அப்பாவுக்குத்தான் உடல்நலம் சரியில்லாமல் இருந்தது, கடைசியில் அவர் இறந்துபோனார். டுன்ஜி நினைவுகூருகிறார்: “என் மாமனார் இறந்தபோது, என்னுடைய மாமியார் என் மனைவியைக் கட்டித்தழுவி, இவ்வாறு கூறினார்: ‘உன்னால் முடிந்த அனைத்தையும் செய்தாய். அப்பா இறந்து போனதற்காக எந்தவிதத்திலும் உன்னுடைய மனம் குற்ற உணர்வால் துன்பப்பட தேவையில்லை.’ மாமனாரின் இழப்பை எங்களால் தாங்கிக்கொள்ள முடியவில்லையென்றாலும், நாங்கள் அவருக்காக சிறந்த மருந்தையே வாங்கினோம், எங்களுக்கு அவர்மீது பிரியம் இருக்கிறது, அவர் எங்களுக்கு தேவை என்பதை அவர் உணரும்படி செய்ய நாங்கள் எப்போதும் முயன்றோம்; கடவுள் தந்த பொறுப்பை நிறைவேற்ற எங்களால் இயன்ற அனைத்தையும் செய்தோம். இந்த மனநிறைவு எங்களுக்கு கிடைத்திருக்கிறது.”
உண்மைதான், மற்றவர்களுக்கு பொருளாதார ரீதியில் உதவும் நிலையில் எல்லாரும் இருப்பதில்லை. நைஜீரியாவில் வசிக்கும் ஒரு ஆள் இவ்வாறு கூறினார்: “ஒரு மனிதனுக்கு, தன் வயிற்றுப்பாட்டுக்கே வழி இல்லாதபோது, மற்றொருவனுக்கு எவ்வாறு ஜீவனம் அளிக்க முடியும்?” இன்னும் வரவிருக்கும் வருடங்களில், பல தேசங்களில் நிலைமை மேலும் மோசமாக இருக்கும். ஐக்கிய நாடுகளின் முன்கணிப்பின்படி, வெகு விரைவில் சப்-சகாரா ஆப்பிரிக்காவில் உள்ள மக்கள் தொகையில் பாதிபேர், கொடிய வறுமையில் வாடுவார்கள்.
வறுமை சூழலில் நீங்கள் சிக்கித் தவித்துக்கொண்டிருந்தால், ஏழை விதவையின் உண்மை சம்பவத்திலிருந்து நீங்கள் ஆறுதல் அடையலாம். இயேசு பூமியில் இருக்கையில், ஒரு விதவை ஆலய காணிக்கைப்பெட்டியில் சொற்ப நன்கொடை போட்டதை அவர் கவனித்தார். அவள் வெறும் “இரண்டுகாசைப்” போட்டாள். இருப்பினும் இயேசு, அவளது நிலைமையை அறிந்தவராய் இவ்வாறு கூறினார்: “இந்த ஏழை விதவை மற்றெல்லாரைப்பார்க்கிலும் அதிகமாகப் போட்டாள் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். அவர்களெல்லாரும் தங்கள் பரிபூரணத்திலிருந்தெடுத்துத் தேவனுக்கென்று காணிக்கை போட்டார்கள்; இவளோ தன் வறுமையிலிருந்து தன் ஜீவனத்துக்கு உண்டாயிருந்ததெல்லாம் போட்டுவிட்டாள் என்றார்.”—லூக்கா 21:1-4.
அதேபோல், நாம் நம்முடைய பெற்றோர்களை அல்லது தாத்தா பாட்டியை பொருளாதார ரீதியில் பராமரிப்பதில் நம்மால் இயன்றமட்டும் செய்தால், அது கொஞ்சமாக இருந்தாலும் பரவாயில்லை, அதை யெகோவா கவனித்து, போற்றுகிறார். நம் சக்திக்கு மிஞ்சி செய்யவேண்டும் என்று அவர் எதிர்பார்ப்பதில்லை. அதேபோல் நம் பெற்றோர்களும் அல்லது தாத்தா பாட்டிகளும் நம்மிடத்தில் அதிகம் எதிர்பார்ப்பதில்லை.
உணர்ச்சி ரீதியில் கொடுப்பது
நம் பெற்றோர்களையும் தாத்தா பாட்டிமார்களையும் பராமரிப்பதில் வெறும் பொருளாதார ரீதியில் கொடுப்பதைக்காட்டிலும் அதிகம் உட்பட்டிருக்கிறது. நம் எல்லாருக்கும் உணர்ச்சிப்பூர்வமான தேவை இருக்கிறது. நம்மை நேசிக்கவேண்டும், தேவை என்று உணரவேண்டும், விரும்பவேண்டும், குடும்பத்தின் ஒரு அங்கத்தினராக மதிக்கவேண்டும் என்று வயதானவர்கள் உட்பட நாம் அனைவரும் ஆசைப்படுகிறோம்.
கென்யாவில் வசிக்கும் மேரி என்பவர், தன்னுடைய மாமியாரை மூன்று வருடங்களாக பராமரித்து வருகிறார். மேரி சொல்கிறார்: “நாங்கள் அவருக்கு வேண்டிய பொருள் தேவைகளை அளித்ததோடு, எப்போதும் அவரிடத்தில் பேசுவோம். அத்தையால் வீட்டில் அதிகமாய் ஒன்றும் செய்யமுடியாது, ஆனாலும் அவரிடத்தில் நாங்கள் பேசுவோம், நெருங்கிய நண்பர்களாக ஆகிவிட்டோம். சில சமயங்களில் கடவுளைப் பற்றியும், வேறுசில சமயங்களில் சொந்த ஊரிலுள்ள தெரிந்தவர்களைப் பற்றியும் பேசுவோம். அவருக்கு 90 வயசுக்கு மேல் இருந்தாலும், அபாரமான ஞாபகசக்தி இருக்கிறது. அவர் சிறுமியாக இருந்தபோது, 1914-க்கு முன்பிருந்த நாட்களைப்பற்றி நன்றாக ஞாபகப்படுத்தி பேசுகிறார்.”
மேரி தொடர்ந்து கூறுகிறார்: “வயதான ஒருவரை வைத்து பராமரிப்பது என்பது அவ்வளவு சுலபம் அல்ல; ஆனால், அவரை எங்களோடுகூட வைத்திருப்பது விலைமதிக்கமுடியாத பிரதிபலன்களைக் கொண்டுவருகிறது. எங்கள் குடும்பத்தில் அமைதியும், ஒற்றுமையும் நிலவுகிறது. நான் அவருக்கு கொடுப்பதைப் பார்த்த குடும்ப அங்கத்தினருக்குள் கொடுக்கும் குணம் கண்விழித்துக்கொண்டுள்ளது. என் கணவர் என்னில் அதிக மதிப்பு வைத்துள்ளார். என்னிடத்தில் யாராவது கடுமையாக பேசுவது அத்தையின் காதில் விழுந்துவிட்டால் போதும், அவர் உடனே எனக்காக பரிந்துபேசுவார். என்னைப் புண்படுத்தும் சொல்லை அவருக்கு முன்னால் எவருமே சொல்லிவிட முடியாது!”
ஆவிக்குரிய ரீதியில் கொடுப்பது
பொருளாதார ரீதியிலும் உணர்ச்சி ரீதியிலும் கொடுக்கும் ஒருவருக்கு எவ்வாறு பிரதிபலன்கள் கிடைக்கின்றனவோ அவ்வாறே ஆவிக்குரிய விஷயங்களிலும் கிடைக்கின்றன. ரோமில் இருந்த கிறிஸ்தவ சபைக்கு அப்போஸ்தலனாகிய பவுல் இவ்வாறு எழுதினார்: ‘நீங்கள் ஸ்திரப்படுவதற்காக ஆவிக்குரிய சில வரங்களை உங்களுக்குக் கொடுக்கும்படிக்கும், உங்களிலும் என்னிலுமுள்ள விசுவாசத்தினால் உங்களோடேகூட நானும் ஆறுதலடையும்படிக்கும், உங்களைக் காண வாஞ்சையாயிருக்கிறேன்.’—ரோமர் 1:10, 11.
அவ்வாறே, கடவுளை சேவிக்கும் வயதானவர்களுக்கு ஆவிக்குரிய ரீதியில் கொடுக்கும்போது கிடைக்கும் உற்சாகம் பெரும்பாலும் பரஸ்பரமாக இருக்கும். நைஜீரியாவில் வசிக்கும் ஓசான்டூ இவ்வாறு விவரிக்கிறார்: “தாத்தா பாட்டியிடம் எனக்கு மிகவும் பிடித்த விஷயம் என்னவென்றால், கடந்தகாலத்தைப் பற்றி ஓரளவுக்கு தெரிந்துகொள்ளும் வாய்ப்பை அவர்கள் எனக்குத் தருகிறார்கள். என்னுடைய தாத்தா ’50-களிலும் ’60-களிலும் முழுநேர ஊழியராக ஊழியம் செய்த இடத்தைப்பற்றி பூரிப்போடு விவரமாக சொல்லுவார். இன்றைய சபை அமைப்பு முறையை அவர் சாட்சியாக ஆனபோது இருந்ததோடு ஒப்பிடுகிறார். இந்த அனுபவங்கள் ஒரு பயனியராக சேவிக்க எனக்கு உதவுகின்றன.”
வயதானவர்களுக்கு ஆவிக்குரிய ரீதியில் கொடுப்பதில் சபையில் உள்ள மற்றவர்களும் உதவலாம். முன்பு குறிப்பிட்ட டுன்ஜி என்பவர் தன்னுடைய சபையில் என்ன நடந்தது என்று விளக்கினார்: “ஓர் இளம் பயனியர் சகோதரருக்கு பொதுப் பேச்சு கொடுக்கும்படி நியமிப்பு கிடைத்தபோது, அவர் மாமாவோடுகூட சேர்ந்து தன் பேச்சை தயாரிப்பதற்காக தன்னுடைய பேச்சுத்தாளை அவரிடம் கொண்டுவந்தார். காவற்கோபுர நடத்துநர் மாமாவிடம் வந்து: “நீங்கள் அனுபவம்வாய்ந்தவர். நான் முன்னேற்றம் செய்ய உதவும்வகையில் நீங்கள் எதாவது ஆலோசனை சொல்லுங்களேன்’ என்று கேட்டார். அந்த மூப்பருக்கு மாமாவால் சில நடைமுறையான ஆலோசனையை வழங்க முடிந்தது. சகோதரர்கள் சபை ஜெபங்களில் மாமாவின் பெயரை பல தடவை குறிப்பிட்டார்கள். இவை அனைத்தும் அவர் விரும்பத்தக்கவர் என்று அவருக்கு உணர்த்தின.
நல்நடத்தை கடவுளிடமாக மக்களை ஈர்க்கிறது
நாம் நம் பெற்றோர்களுக்கும் தாத்தா பாட்டிகளுக்கும் மரியாதையையும் அன்பையும் காட்டும்போது சிலநேரங்களில் மக்கள் கடவுளிடமாக ஈர்க்கப்படுகிறார்கள். அப்போஸ்தலனாகிய பேதுரு எழுதினார்: “புறஜாதிகள் உங்களை அக்கிரமக்காரரென்று விரோதமாய்ப் பேசும் விஷயத்தில், அவர்கள் உங்கள் நற்கிரியைகளைக்கண்டு அவற்றினிமித்தம் சந்திப்பின் நாளிலே தேவனை மகிமைப்படுத்தும்படி நீங்கள் அவர்களுக்குள்ளே நல்நடக்கையுள்ளவர்களாய் நடந்துகொள்ளுங்கள்.”—1 பேதுரு 2:12.
மேற்கு ஆப்பிரிக்காவில் இருக்கும் கிறிஸ்தவ மூப்பர் ஆன்ரூ என்பவர், வியாதியாக இருந்த தன்னுடைய அப்பாவை பராமரிப்பதற்காக, வாரத்திற்கு இருமுறை, 95 கிலோமீட்டர் பயணம்செய்தார். அவருடைய அப்பா ஓர் அவிசுவாசி. அவர் இவ்வாறு விவரிக்கிறார்: “நான் ஒரு யெகோவாவின் சாட்சியாக ஆனபோது, என் அப்பா என்னை பயங்கரமாக எதிர்த்தார். ஆனால், நோயுற்றிருக்கையில் அவரை நான் எவ்விதம் பராமரிக்கிறேன் என்பதைக் கவனித்த அவர், என்னுடைய தம்பிகளையும் தங்கைகளையும் இவ்வாறு தொடர்ந்து ஊக்கப்படுத்தினார்: ‘நீங்கள் உங்களுடைய அண்ணா பின்பற்றும் மதத்தில் சேர்ந்துகொள்ள வேண்டும்!’ அது அவர்களை செயல்படும்படி தூண்டியது, இப்போது, என்னுடைய அப்பாவின் பிள்ளைகள் ஒன்பது பேரும் யெகோவாவின் சாட்சிகளாக இருக்கிறார்கள்.”
வயதான பெற்றோர்களை கெளரவிப்பதும், பாரமரிப்பதும் உண்மையிலேயே ஒரு சவாலாக இருக்கும், அதிலும் குறிப்பாக பொருளாதார நெருக்கடி இருக்கும் காலங்களில். ஆனால், கிறிஸ்தவர்கள் இதைச் செய்ய கடின முயற்சி செய்யும்போது, அவர்கள் அநேக நற்பலன்களை அடைகிறார்கள். எல்லாவற்றிற்கும் மேலாக கொடுப்பதினால் உண்டாகும் மகிழ்ச்சியை அனுபவிப்பார்கள். கூடவே, ‘எல்லாருக்கும் . . . பிதாவாக’ இருக்கும் யெகோவா தேவனை பிரியப்படுத்துகிறார்கள் என்று அறிவதனால் உண்டாகும் மனதிருப்தியையும் அனுபவித்து மகிழ்வார்கள்.—எபேசியர் 4:6.
[பக்கம் 6-ன் பெட்டி]
பராமரிப்பை பெறுவோருக்கும், அளிப்போருக்கும் கடவுளுடைய ஆலோசனை
உற்சாகம் அளிப்பவராய் இருங்கள்: “நம் அயலானை கட்டியெழுப்பவல்ல நன்மை எதுவோ அதைச் செய்வதில் நாம் ஒவ்வொருவரும் அவனைப் பிரியப்படுத்துவோமாக.”—ரோமர் 15:2, NW.
நிலைத்திருங்கள்: “நன்மைசெய்கிறதில் சோர்ந்துபோகாமல் இருப்போமாக; நாம் தளர்ந்துபோகாதிருந்தால் ஏற்றகாலத்தில் அறுப்போம்.”—கலாத்தியர் 6:9.
தாழ்மையோடு இருங்கள்: “ஒன்றையும் வாதினாலாவது [சர்ச்சையினாலாவது, NW] வீண் பெருமையினாலாவது செய்யாமல், மனத்தாழ்மையினாலே ஒருவரையொருவர் தங்களிலும் மேன்மையானவர்களாக எண்ணக்கடவீர்கள்.”—பிலிப்பியர் 2:3.
நன்மைசெய்வோராய் இருங்கள்: “ஒவ்வொருவனும் தன் சுயபிரயோஜனத்தைத் தேடாமல், பிறனுடைய பிரயோஜனத்தைத் தேடக்கடவன்.”—1 கொரிந்தியர் 10:24.
நியாயமாக இருங்கள்: “உங்களுடைய நியாயத்தன்மை எல்லா மனிதருக்கும் தெரியக்கடவது.”—பிலிப்பியர் 4:5, NW.
மன உருக்கமாய் இருங்கள்: “ஒருவருக்கொருவர் தயவாயும் மன உருக்கமாயும் இருந்து, . . . ஒருவருக்கொருவர் மன்னியுங்கள்.”—எபேசியர் 4:32.
[பக்கம் 7-ன் படம்]
வயதானவர்களின் அனுபவத்திலிருந்து இளம் மூப்பர்கள் பயனடையலாம்