உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • w97 12/15 பக். 4-7
  • நவீன நாளையகிறிஸ்மஸின் ஆரம்பம்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • நவீன நாளையகிறிஸ்மஸின் ஆரம்பம்
  • காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1997
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • தவறான அஸ்திவாரம்
  • தூய்மைக்கேடு உள்ளே நுழைகிறது
  • ஒரு சர்வதேச விடுமுறை நாள்
  • கிறிஸ்மஸ் புதுப்பிக்கப்படுகிறது
  • “சத்தியத்திலும் சமாதானத்திலும் பிரியங்கொள்ளுங்கள்”
  • கிறிஸ்மஸ் நீங்கள் அதைக் கொண்டாட வேண்டுமா?
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1987
  • கிறிஸ்மஸ் ஜப்பானில் ஏன் இவ்வளவு பிரசித்திப்பெற்றுள்ளது?
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1992
  • கிறிஸ்மஸுக்கும்—ஆசியாவுக்கும் என்ன தொடர்பு?
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1999
  • கிறிஸ்மஸ் பாரம்பரியங்கள் அவற்றின் ஆரம்பம் என்ன?
    விழித்தெழு!—1990
மேலும் பார்க்க
காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1997
w97 12/15 பக். 4-7

நவீன நாளையகிறிஸ்மஸின் ஆரம்பம்

உலகெங்கிலுமுள்ள கோடிக்கணக்கான ஆட்களுக்கு, கிறிஸ்மஸின் சமயம் வருடத்திலேயே மிகவும் சந்தோஷத்திற்குரிய சமயமாக உள்ளது. இது விருந்துண்பதற்கும், நீண்ட காலமாக இருந்துவரும் பாரம்பரிய பழக்கங்களைக் கடைப்பிடிப்பதற்கும், குடும்பங்கள் ஒன்றாக சேர்ந்திருப்பதற்கும் சமயமாக இருக்கிறது. நண்பர்களும் உறவினர்களும் கார்டுகளையும் பரிசுப்பொருட்களையும் ஒருவருக்கொருவர் பரிமாறிக் கொள்வதற்கான சமயமாகக்கூட கிறிஸ்மஸ் விடுமுறை இருக்கிறது.

என்றாலும் வெறும் 150 ஆண்டுகளுக்கு முன்னால், கிறிஸ்மஸ் மிகவும் வித்தியாசமான ஒரு விடுமுறையாக இருந்தது. கிறிஸ்மஸ் காரணமாக யுத்தம் என்ற தன்னுடைய ஆங்கில புத்தகத்தில், வரலாற்றுப் பேராசிரியர் ஸ்டீபன் நிசன்பாம் இவ்வாறு எழுதுகிறார்: “கட்டுப்பாடில்லாத களியாட்டத்துக்காக, ஒரு வகை டிசம்பர் மாத விழாக்கால கொண்டாட்டத்துக்காக, பொதுவாக மக்களின் நடத்தையைக் கட்டுப்படுத்திய வரம்புகள் தற்காலிகமாக தளர்த்தப்பட்டு மக்கள் குடித்து வெறித்திருக்கும் ஒரு சமயமாக . . . கிறிஸ்மஸ் இருந்தது.”

கிறிஸ்மஸை பயபக்தியோடு நோக்கும் ஆட்களுக்கு, இந்த வருணனை வருத்தமடையச் செய்யலாம். கடவுளுடைய மகனின் பிறப்பை நினைவுகூருவதாக உரிமைபாராட்டும் ஒரு விடுமுறை நாளின் புனிதத்தை ஏன் எவராவது கெடுக்கப்பார்ப்பார்? இதற்கான பதில் உங்களை ஆச்சரியமடையச் செய்யலாம்.

தவறான அஸ்திவாரம்

நான்காவது நூற்றாண்டில் அதன் தொடக்கம் முதற்கொண்டே, கிறிஸ்மஸ் சர்ச்சைக்குள்ளாகியிருக்கிறது. உதாரணமாக, இயேசுவின் பிறந்த நாளைப் பற்றிய கேள்வி இருந்தது. கிறிஸ்து பிறந்த நாளை அல்லது மாதத்தை பைபிள் திட்டவட்டமாக குறிப்பிடாத காரணத்தால், பல்வேறு தேதிகள் குறிப்பிடப்பட்டன. மூன்றாவது நூற்றாண்டில், எகிப்திய இறையியலரின் ஒரு தொகுதி, அது மே 20 என்று கூறியது; மற்றவர்கள் மார்ச் 28, ஏப்ரல் 2, அல்லது ஏப்ரல் 19 போன்ற அதற்கு முன்னால் வரும் தேதிகளைத் தேர்ந்தெடுத்தனர். 18-ஆம் நூற்றாண்டுக்குள், இயேசுவின் பிறப்பு, வருடத்தின் ஒவ்வொரு மாதத்தோடும் இணைத்துப் பேசப்பட்டது! அப்படியென்றால், கடைசியில் டிசம்பர் 25 எவ்விதமாக தெரிந்தெடுக்கப்பட்டது?

கத்தோலிக்க சர்ச்சே இயேசுவின் பிறந்த நாளை டிசம்பர் 25 என நிர்ணயித்ததாக பெரும்பாலான கல்விமான்கள் ஒப்புக்கொள்கின்றனர். ஏன்? “இந்தத் தேதி ‘வெல்லப்படாத சூரியனின் பிறந்த நாளைக்’ குறிப்பிடும் புறமத ரோமர்களின் பண்டிகை வருகின்ற அதே தேதியாக இருக்கவேண்டும் என்று பூர்வ கிறிஸ்தவர்கள் விரும்பியது அதிக சாத்தியமான காரணமாக இருக்கலாம்” என்பதாக த நியூ என்ஸைக்ளோப்பீடியா பிரிட்டானிக்கா சொல்லுகிறது. ஆனால் இரண்டரை நூற்றாண்டுகளுக்கும் மேலாக புறமதத்தினரால் மிகவும் கேவலமாக துன்புறுத்தப்பட்டுவந்த கிறிஸ்தவர்கள் ஏன் திடீரென்று தங்களைத் துன்புறுத்தியவர்களிடம் சரணடைய வேண்டும்?

தூய்மைக்கேடு உள்ளே நுழைகிறது

முதல் நூற்றாண்டில், அப்போஸ்தலன் பவுல் “பொல்லாதவர்களும் எத்தர்களுமானவர்கள்” கிறிஸ்தவ சபைக்குள் நுழைந்து அநேகரை தவறாக வழிநடத்திச் செல்வார்கள் என்பதாக தீமோத்தேயுவை எச்சரித்தார். (2 தீமோத்தேயு 3:13) இந்தப் பெரும் விசுவாசதுரோகம் அப்போஸ்தலரின் மரணத்திற்கு பின்பு நிகழ்ந்தது. (அப்போஸ்தலர் 20:29, 30) நான்காவது நூற்றாண்டில் கான்ஸ்டன்டீன் என்பவருடைய பெயரளவிலான மதமாற்றத்துக்குப் பின்பு, திரளான எண்ணிக்கையில் புறமதத்தினர் அப்போது செல்வாக்குப் பெற்றிருந்த கிறிஸ்தவத்திடமாக திரண்டுவந்தனர். அதன் விளைவென்ன? பூர்வ கிறிஸ்தவமும் புறமதமும் என்ற ஆங்கில புத்தகம் இவ்வாறு சொல்கிறது: “ஒப்பிடுகையில் ஒரு சிறிய தொகுதியாக இருந்த உண்மையான ஆர்வமுள்ள விசுவாசிகள், கிறிஸ்தவர்களென உரிமைபாராட்டிக்கொண்ட திரளான கூட்டத்தினரில் இருந்த இடம் தெரியாமல் போனார்கள்.”

பவுலின் வார்த்தைகள் எத்தனை உண்மையாக நிரூபித்தன! உண்மையான கிறிஸ்தவத்தைப் புறமதத்தின் கெட்ட செல்வாக்கு விழுங்கிவிட்டதைப் போல இருந்தது. விடுமுறை நாள் கொண்டாட்டங்களில் காணப்பட்டதைப்போல இந்தக் கலப்பு அத்தனை வெளிப்படையாக வேறெதிலும் காணப்படவில்லை.

உண்மையில், கிறிஸ்தவர்கள் அனுசரிக்கும்படியாக கட்டளையிடப்பட்டிருக்கும் ஒரே கொண்டாட்டம் கர்த்தருடைய இராப்போஜனமாகும். (1 கொரிந்தியர் 11:23-26) ரோமர்களுடைய விழாக்களில் விக்கிரகாராதனைக்குரிய பழக்கங்கள் சம்பந்தப்பட்டிருந்ததால் பூர்வ கிறிஸ்தவர்கள் அவற்றில் கலந்துகொள்ளவில்லை. இதன் காரணமாகவே மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்த புறமதத்தினர் கிறிஸ்தவர்களை இவ்விதமாகச் சொல்லி நிந்தித்தார்கள்: “நீங்கள் பொருட்காட்சிகளுக்குப் போவது கிடையாது; பொது கண்காட்சிகளில் உங்களுக்கு அக்கறை இல்லை; சமுதாய விருந்துகளை நீங்கள் புறக்கணிக்கிறீர்கள், பரிசுத்த போட்டிகள் உங்களுக்கு அருவருப்பாய் இருக்கின்றன.” மறுபட்சத்தில் புறமதத்தினரோ இவ்வாறு பெருமைபாராட்டிக் கொண்டனர்: “நாங்களோ கடவுட்களை மகிழ்ச்சியோடும், விருந்துகளோடும், ஆடல் பாடலோடும் வழிபடுகிறோம்.”

நான்காவது நூற்றாண்டின் மத்திப பகுதிக்குள், புறமதத்தினரின் முறுமுறுப்பு தணிந்துபோனது. எவ்விதமாக? அதிகமதிகமான போலிக் கிறிஸ்தவர்கள் தொழுவத்துக்குள் நுழைந்தபோது, விசுவாசதுரோக கருத்துக்கள் பெருகின. இது ரோம உலகத்தோடு இணங்கிப்போவதற்கு வழிநடத்தியது. இதன்பேரில் குறிப்பு சொல்வதாய், நம்முடைய கிறிஸ்தவத்தில் புறமதம் என்ற ஆங்கில புத்தகம் இவ்வாறு சொல்கிறது: “பாரம்பரியத்தின் காரணமாக மக்கள் மிகவும் பிரியத்தோடு கொண்டாடிவந்த புறமத விழாக்களை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்து அவற்றை கிறிஸ்தவமாக்க வேண்டும் என்பதே தெளிவாக இருந்த கிறிஸ்தவ கொள்கையாகும்.” ஆம், விசுவாசதுரோக பெருக்கத்தினால் மோசமான விளைவுகள் ஏற்பட்டன. கிறிஸ்தவர்கள் என்று சொல்லிக்கொண்டவர்கள் இப்பொழுது புறமத கொண்டாட்டங்களை ஏற்றுக்கொள்ள மனமுள்ளவர்களாய் இருந்தபோது சமுதாயமே இதை ஓரளவு ஏற்றுக்கொண்டுவிட்டது. சீக்கிரத்தில் கிறிஸ்தவர்கள் புறமதத்தினரைப்போலவே அநேக வருடாந்தர விழாக்களைக் கொண்டாடத் துவங்கினர். அதில் கிறிஸ்மஸ் மிக முக்கியமாக இருந்ததைக் குறித்து ஆச்சரியப்படுவதற்கில்லை.

ஒரு சர்வதேச விடுமுறை நாள்

அதிக செல்வாக்கு செலுத்திய கிறிஸ்தவம் ஐரோப்பா முழுவதிலும் பரவியபோது, அதிகமதிகமான ஆட்கள் கிறிஸ்மஸ் பண்டிகையைக் கொண்டாட ஆரம்பித்தனர். இயேசுவின் பிறந்த நாளைக் கெளரவிப்பதற்காக ஒரு சந்தோஷமான விழாவை தொடர்ந்து கொண்டாடுவது பொருத்தமானதே என்ற நோக்குநிலையை கத்தோலிக்க சர்ச் பின்னர் ஏற்றது. ஆதலால், பொ.ச. 567-ல், டூர்ஸ் மாநகர் கவுன்சில் “கிறிஸ்மஸ்-ல் தொடங்கி குழந்தை இயேசுவுக்குப் பரிசுப் பொருட்களைக் கொண்டுவந்த வான சாஸ்திரிகளின் வரவு வரையாக 12 நாட்களைப் பரிசுத்தமானதாகவும் விழாக்காலமாகவும் அறிவித்தது.”—பள்ளிக்கும் வீட்டுக்கும் கத்தோலிக்க கலைக்களஞ்சியம் (ஆங்கிலம்).

சீக்கிரத்தில் கிறிஸ்மஸ் வட ஐரோப்பாவில் கொண்டாடப்பட்டுவந்த மதசார்பற்ற அறுவடை பண்டிகைகளின் பல அம்சங்களைத் தன்னுள் ஏற்றுக்கொண்டது. களியாட்டத்தில் ஈடுபட்டவர்கள் அளவுக்கு அதிகமாக உண்பதிலும் குடிப்பதிலும் திளைத்திருக்கையில் கடவுள் பற்றைக் காட்டிலும் களியாட்டமே அதில் அதிகம் காணப்பட்டது. கட்டுப்பாடற்ற நடத்தையை ஆட்சேபிப்பதற்கு பதிலாக சர்ச் அதை ஆதரித்தது. (ஒப்பிடுக: ரோமர் 13:13; 1 பேதுரு 4:3.) பொ.ச. 601-ல் முதலாம் போப் கிரிகோரி இங்கிலாந்திலிருந்த தன்னுடைய மிஷனரியான மெலட்டஸுக்கு, “இப்படிப்பட்ட பழமைவாய்ந்த புறமத விழாக்கள் கொண்டாடப்படுவதை நிறுத்தவேண்டாம் என்றும் அவை கொண்டாடப்படுவதற்கான பொய்மத காரணத்தை மட்டும் கிறிஸ்தவமாக மாற்றி அதை சர்ச்சின் சடங்காக தக்கவாறு மாற்றி அமைத்துக்கொள்ள வேண்டும் என்றும்” எழுதினார். எகிப்திய அரசாங்கத்திற்கான பழமைச் சின்னங்களின் முன்னாள் காவல் துறைத் தலைவரான ஆர்த்தர் வைகால் இவ்விதமாக அறிக்கைச் செய்கிறார்.

வரலாற்றின் இடை காலத்தில் சீர்திருத்தங்களில் ஆர்வமாயிருந்தவர்கள் வரம்பை மீறும் காரியங்களுக்கு எதிராக தைரியமாக குரலெழுப்ப வேண்டியதின் அவசியத்தை உணர்ந்தார்கள். “கிறிஸ்மஸ் களிப்பின் துர்ப்பிரயோகத்துக்கு” எதிராக அவர்கள் மிகப் பல ஆணைகளை எழுதி அனுப்பினர். அமெரிக்காவில் கிறிஸ்மஸ்—ஒரு வரலாறு என்ற ஆங்கில புத்தகத்தில் டாக்டர் பெனி ரிஸ்டாட் இவ்வாறு சொல்கிறார்: “கிறிஸ்தவ மேற்பார்வை என்ற போர்வையில் செய்யப்படும் வரையில், கட்டுப்பாடுகளைத் தளர்த்தி வரம்புகளை மீறி ஆசைகளைத் திருப்தி செய்துகொள்வதற்குரிய ஒரு காலம் அபூரணமான மனிதவர்க்கத்துக்கு தேவை என்பதை சில மத குருக்கள் வலியுறுத்தினர்.” இது குழப்பத்தை இன்னும் அதிகரிக்கவே செய்தது. ஆனால் அது அதிகமான வித்தியாசத்தை உண்டுபண்ணவில்லை, ஏனென்றால் புறமத பழக்கங்கள் கிறிஸ்மஸோடு அந்தளவு ஒன்றறக் கலந்துவிட்டதால் பெரும்பாலானவர்கள் அவற்றை விட்டுவிட மனமில்லாதவர்களாக இருந்தனர். எழுத்தாளர் டிரிஸ்ட்டிரம் காஃபென் இவ்விதமாக அதைச் சொல்கிறார்: “ஒழுக்கநெறிகளைக் கட்டுப்படுத்த விரும்பியவர்களின் விவாதங்களைக் கவனத்தில் எடுத்துக்கொள்ளாமல் மொத்தத்தில் மக்கள் தாங்கள் எப்பொழுதும் செய்துவந்தவற்றையே செய்துகொண்டிருந்தார்கள்.”

ஐரோப்பியர்கள் அமெரிக்காவில் குடியேறியதற்குள், கிறிஸ்மஸ் மிகவும் பிரபலமான ஒரு விடுமுறை நாளாகிவிட்டது. இருந்தபோதிலும், குடியேற்ற நாடுகளில் கிறிஸ்மஸ் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. சமய சீர்திருத்தவாதிகள் இந்தக் கொண்டாட்டம் புறமதத்திற்குரியது என்று கருதி மாசசூஸட்ஸில் 1659-க்கும் 1681-க்கும் இடைப்பட்ட ஆண்டுகளில் அதைத் தடைசெய்துவிட்டனர்.

தடை நீக்கப்பட்டப்பின்பு, குறிப்பாக புதிய இங்கிலாந்தின் தெற்கே குடியேற்றப் பகுதிகள் முழுவதிலுமாக கிறிஸ்மஸ் கொண்டாடுவது அதிகமானது. எனினும், இந்த விடுமுறை நாளின் வரலாற்றை முன்னிட்டுப்பார்க்கையில் கடவுளுடைய குமாரனை கனம் பண்ணுவதைக் காட்டிலும் நன்றாக பொழுதைப் போக்குவதிலேயே சிலர் அக்கறையுள்ளவர்களாய் இருந்தது குறித்து ஆச்சரியப்படுவதற்கில்லை. முக்கியமாக அதிக தொல்லையாக இருந்த கிறிஸ்மஸ் பழக்கம், வெறிக்கும்வரை குடிப்பதாகும். இளவயதிலுள்ள ரவுடி கும்பலை சேர்ந்தவர்கள் பணக்கார அயலாரின் வீடுகளுக்குள் புகுந்து இலவச உணவையும் பானத்தையும் வற்புறுத்திக்கேட்பர், கொடுக்க மறுப்பவர்களை அவர்கள் மிரட்டுவர். வீட்டுக்காரர் மறுக்கும் பட்சத்தில், பொதுவாக அவரைச் சபித்துவிட்டு அவருடைய வீட்டை கொள்ளையடித்துவிடுவர்.

1820-களில் நிலைமைகள் அந்தளவு மோசமாயிருந்ததால் “கிறிஸ்மஸ் சமயத்தில் அராஜகமானது கடுமையான சமுதாய அச்சுறுத்தலாக” ஆனது என்பதாக பேராசிரியர் நிசன்பாம் சொல்லுகிறார். நியூ யார்க் மற்றும் ஃபிலடெல்ஃபியா போன்ற நகரங்களில், செல்வந்தர்களாக இருந்த நிலச் சொந்தக்காரர்கள் தங்கள் சொத்துக்களைப் பாதுகாப்பதற்காக ஆட்களைக் கூலிக்கு அமர்த்த ஆரம்பித்தனர். 1827/28 கிறிஸ்மஸ் சமயத்தில் வன்முறையான கலகம் ஏற்பட்டபோது நியூ யார்க் நகரம் தொழில்முறை காவல்துறை படை ஒன்றைக்கூட அமைத்ததாகச் சொல்லப்படுகிறது!

கிறிஸ்மஸ் புதுப்பிக்கப்படுகிறது

19-ம் நூற்றாண்டு மனிதவர்க்கத்துக்கு புதிய மாற்றங்களைக் கொண்டுவந்தது. சாலைகள் மற்றும் இரயில்பாதைகளின் விஸ்தரிக்கப்பட்ட அமைப்பு ஏற்படுத்தப்பட்டபோது மக்களும் பண்டங்களும் செய்திகளும் அதிவேகமாக பயணிக்க ஆரம்பித்தன. தொழிற்புரட்சி கோடிக்கணக்கில் வேலைவாய்ப்புகளை உருவாக்கினது, தொழிற்சாலைகள் விற்பனைப் பொருட்களை வேகமாக உற்பத்தி செய்தன. தொழில் மயமாக்குதல், புதிய மற்றும் சிக்கலான சமுதாயப் பிரச்சினைகளையும்கூட எழச் செய்ததால் கிறிஸ்மஸ் கொண்டாடப்பட்ட விதத்தையும்கூட பாதித்தது.

குடும்ப பந்தங்களைப் பலப்படுத்திக்கொள்வதற்காக விடுமுறை நாட்களை மக்கள் வெகு காலமாக பயன்படுத்தி வந்திருக்கின்றனர், கிறிஸ்மஸையும் அவ்வாறே பயன்படுத்தி வந்திருக்கின்றனர். பழைய கிறிஸ்மஸ் பாரம்பரியங்கள் சிலவற்றை தெரிந்தெடுத்து திருத்தியமைப்பதன்மூலம், அதை ஊக்குவித்தவர்கள் கட்டுப்பாடுகள் இல்லாத, களியாட்ட விழாவாக இருந்த கிறிஸ்மஸை குடும்பத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு விடுமுறை நாளாக திறம்பட மாற்றியமைத்தார்கள்.

உண்மையில், 19-ம் நூற்றாண்டின் பிற்பகுதிக்குள், கிறிஸ்மஸ் நவீன அமெரிக்க வாழ்க்கையின் அவலங்களுக்கு ஒரு வகை மாற்று மருந்தாக கருதப்படலானது. “விடுமுறை நாட்கள் எல்லாவற்றிலும், மதத்தையும் மத உணர்வுகளையும் வீட்டுக்குள் கொண்டுசெல்வதற்கும் மனித சமுதாயத்தின் வரம்பு கடந்த செயல்களையும் தோல்விகளையும் சரியாக்குவதற்கும் கிறிஸ்மஸ் சரியான ஒரு கருவியாக இருந்தது” என்பதாக டாக்டர் ரிஸ்டாட் சொல்லுகிறார். அவர் மேலுமாகச் சொல்வதாவது: “பரிசு பொருட்களைக் கொடுப்பதும், தானதர்மங்களைச் செய்வதும், நட்புணர்வோடு வாழ்த்துதல்களைப் பரிமாறிக் கொள்வதும், வரவேற்பறையில் அல்லது பின்பு ஞாயிறு பள்ளியில் அமைக்கப்பட்ட இலையுதிரா மரத்தின் ஜோடனையும் மகிழ்ச்சியும் ஒவ்வொரு தனிக் குடும்பத்தின் அங்கத்தினர்களையும் ஒருவருக்கொருவரோடும், சர்ச்சினோடும், சமுதாயத்தோடும் ஒன்றாக இணைத்தது.”

அதேவிதமாகவே, அநேகர் இன்று ஒருவருக்கொருவர் அன்பை உறுதிசெய்துகொள்ளவும் குடும்ப ஒற்றுமையைக் காத்துக்கொள்ள உதவிசெய்யவும் ஒரு வழிமுறையாக கிறிஸ்மஸ் கொண்டாடுகிறார்கள். நிச்சயமாகவே ஆவிக்குரிய அம்சங்களை கவனியாமல் விடுவதற்கில்லை. கோடிக்கணக்கான ஆட்கள் இயேசுவின் பிறப்பைக் கௌரவிப்பதற்காக கிறிஸ்மஸ் கொண்டாடுகிறார்கள். அவர்கள் விசேஷ சர்ச் ஆராதனைகளில் ஆஜராயிருக்கலாம், வீட்டில் கிறிஸ்மஸ் குடில்களை அமைக்கலாம், அல்லது இயேசுவிடமே ஸ்தோத்திர ஜெபங்களை ஏறெடுக்கலாம். ஆனால் காரியத்தை கடவுள் எவ்விதமாக கருதுகிறார்? இந்தக் காரியங்கள் கடவுளுடைய அங்கீகாரத்தைப் பெறுகின்றனவா? பைபிள் என்ன சொல்லுகிறது என்பதை சற்று சிந்தித்துப் பாருங்கள்.

“சத்தியத்திலும் சமாதானத்திலும் பிரியங்கொள்ளுங்கள்”

இயேசு பூமியில் இருக்கையில், தம்மைப் பின்பற்றுகிறவர்களிடம் இவ்வாறு சொன்னார்: “தேவன் ஆவியாயிருக்கிறார், அவரைத் தொழுதுகொள்ளுகிறவர்கள் ஆவியோடும் உண்மையோடும் அவரைத் தொழுதுகொள்ளவேண்டும்.” (யோவான் 4:24) இயேசு அந்த வார்த்தைகளின்படியே வாழ்ந்தார். அவர் எப்போதும் சத்தியத்தையே பேசினார். ‘சத்தியபரனாகிய யெகோவாவை’ பரிபூரணமாக பின்பற்றினார்.—சங்கீதம் 31:5, திருத்திய மொழிபெயர்ப்பு; யோவான் 14:9.

யெகோவா, தாம் எல்லா வகையான வஞ்சகத்தையும் வெறுப்பதை பைபிளின் வாயிலாக தெளிவாக கூறியுள்ளார். (சங்கீதம் 5:6, தி.மொ.) இதைக் கருத்தில் கொள்கையில், கிறிஸ்மஸோடு சம்பந்தப்பட்ட அநேக அம்சங்களில் பொய்மையின் அறிகுறிகள் இருப்பது இதற்கு முரணாக தோன்றவில்லையா? உதாரணமாக, சான்டா கிளாஸ் பற்றிய கட்டுக்கதையைப் பற்றி எண்ணிப்பாருங்கள். அநேக தேசங்களில் பரவலாக நம்பப்படுகிறபடி, சான்டா ஏன் வாசல் வழியாக உள்ளே வருவதற்கு பதிலாக புகைப்போக்கியின் வழியாக வர விரும்புகிறார் என்பதை ஒரு சிறு பிள்ளைக்கு எப்போதாவது விளக்க நீங்கள் முயன்றதுண்டா? மேலுமாக சான்டா எவ்வாறு கோடிக்கணக்கான வீடுகளை ஒரே மாலைப்பொழுதில் சந்தித்துவிடுகிறார்? பறக்கும் பனிசறுக்கு வண்டியைப் பற்றி என்ன? சான்டா உண்மையான ஒரு நபர் என்று நம்பும்படியாக தான் ஏமாற்றப்பட்டிருப்பதை ஒரு பிள்ளை அறிகையில் அது அவனுடைய பெற்றோரில் வைத்திருக்கும் நம்பிக்கையை கெடுத்துவிடாதா?

த கேத்தலிக் என்ஸைக்ளோப்பீடியா தெளிவாக இவ்வாறு சொல்கிறது: “புறமத பழக்கவழக்கங்கள் . . . கிறிஸ்மஸ் பக்கமாக கவர்ந்திழுக்கப்பட்டன.” அப்படியென்றால் கத்தோலிக்க சர்ச்சும் கிறிஸ்தவமண்டலத்தைச் சேர்ந்த மற்ற சர்ச்சுகளும் கிறிஸ்தவ ஆரம்பத்தைக் கொண்டில்லாத ஒரு விடுமுறை நாளை தொடர்ந்து கொண்டாடிவருவதற்கு காரணம் என்ன? புறமத போதனைகளை ஆதரிப்பதை அது குறிப்பிட்டுக் காட்டவில்லையா?

பூமியில் இருந்தபோது, இயேசு தம்மை வணங்கும்படியாக மனிதர்களை உற்சாகப்படுத்தவில்லை. இயேசுதாமே இவ்வாறு சொன்னார்: “உன் தேவனாகிய கர்த்தரைப் [“யெகோவாவைப்,” NW] பணிந்துகொண்டு, அவர் ஒருவருக்கே ஆராதனை செய்வாயாக.” (மத்தேயு 4:10) அதேவிதமாகவே, இயேசு பரலோகத்தில் மகிமைப்படுத்தப்பட்ட பின்பும்கூட இந்த விஷயத்தில் மாற்றமேதுமில்லை என்பதைக் காண்பிக்கும் வகையில் ஒரு தேவதூதன் அப்போஸ்தலன் யோவானிடம் “தேவனைத் தொழுதுகொள்” என்று சொன்னான். (வெளிப்படுத்துதல் 19:10) கிறிஸ்மஸ் சமயத்தில் தம்முடைய தகப்பனுக்கு செலுத்தப்படாமல் தமக்கு செலுத்தப்படும் வணக்கத்துக்குரிய எல்லா பக்தியையும் இயேசு அங்கீகரிப்பாரா என்ற கேள்விக்கு இது வழிநடத்துகிறது.

நவீன நாளைய கிறிஸ்மஸைப் பற்றிய உண்மைகள் அதற்கு மிகவும் சாதகமானவையாய் இல்லை என்பது தெளிவாக உள்ளது. அது பெரும்பாலும் இழிவான கடந்த காலத்தைச் சுட்டிக்காட்டும் அதிகமான அத்தாட்சிகளை உடைய கற்பனையில் உருவான ஒரு விடுமுறை நாளே. ஆகவே, மனச்சாட்சியின்படி, லட்சக்கணக்கான கிறிஸ்தவர்கள் கிறிஸ்மஸை கொண்டாடுவதில்லை என தீர்மானித்திருக்கிறார்கள். உதாரணமாக, ரையன் என்ற பெயருள்ள ஒரு இளைஞன் கிறிஸ்மஸ் பற்றி இவ்வாறு சொல்கிறான்: “வருடத்தில் ஓரிரு நாட்கள் குடும்பமாக ஒன்று சேர்ந்து அனைவரும் சந்தோஷமாக இருப்பதில் மக்கள் அந்தளவு கிளர்ச்சியடைகிறார்கள். ஆனால் அதில் அப்படி என்ன விசேஷம் இருக்கிறது? என்னுடைய பெற்றோர் வருடம் முழுவதிலும் எனக்குப் பரிசுப்பொருட்களைத் தருகிறார்கள்!” 12-வயதுடைய மற்றொரு இளைஞன் இவ்வாறு சொல்கிறான்: “நான் எதையோ இழந்துவிட்டதாக உணருவதில்லை. பரிசுப்பொருட்களை வாங்கியே ஆக வேண்டுமென மக்கள் உணரும் அந்த ஒரு விசேஷமான நாளில் மட்டுமல்ல, வருடம் முழுவதிலும் நான் பரிசுப்பொருட்களைப் பெற்றுக்கொள்கிறேன்.”

சகரியா தீர்க்கதரிசி உடன் இஸ்ரவேலரை “சத்தியத்திலும் சமாதானத்திலும் பிரியங்கொள்ளுங்கள்” என்று உற்சாகப்படுத்தினார். (சகரியா 8:19) சகரியாவையும் மற்ற பண்டைய காலத்து மனிதர்களையும் போல நாம் ‘சத்தியத்தில் பிரியங்கொண்டால்’ “ஜீவனுள்ள மெய்யான தேவனுக்கு” அவமரியாதையை ஏற்படுத்தும் எந்தப் பொய் மத கொண்டாட்டத்தையும் தவிர்க்க வேண்டுமல்லவா?—1 தெசலோனிக்கேயர் 1:9.

[பக்கம் 7-ன் படம்]

“நான் எதையோ இழந்துவிட்டதாக உணருவதில்லை. வருடம் முழுவதிலும் நான் பரிசுப்பொருட்களைப் பெற்றுக்கொள்கிறேன்”

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்