உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • w98 1/15 பக். 13-18
  • கடவுளோடு தொடர்ந்து நடங்கள்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • கடவுளோடு தொடர்ந்து நடங்கள்
  • காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1998
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • நிலையான வாழ்க்கைப்போக்கு
  • தன்னம்பிக்கை என்னும் கண்ணியைத் தவிருங்கள்
  • மனுஷனுக்குப் பயப்படும் பயம் உங்களைக் கட்டுப்படுத்த அனுமதிக்காதீர்கள்
  • புத்திமதியை குறைவாக மதிப்பிடுவதை தவிருங்கள்
  • வாழ்க்கையின் கவலைகளை வெற்றிகரமாய் சமாளித்தல்
  • தரிசித்து நடவாமல், விசுவாசித்து நடவுங்கள்!
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2005
  • மெய்க் கடவுளுக்குப் பயப்படுவதால் வரும் நன்மைகள்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1995
  • நீங்கள் கடவுளோடு நடக்கமுடியும்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1986
  • தொடர்ந்து யெகோவாவின் வழியில் நடவுங்கள்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1999
மேலும் பார்க்க
காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1998
w98 1/15 பக். 13-18

கடவுளோடு தொடர்ந்து நடங்கள்

“ஆவிக்கேற்றபடி நடந்துகொள்ளுங்கள், அப்பொழுது மாம்ச இச்சையை நிறைவேற்றாதிருப்பீர்கள்.”—கலாத்தியர் 5:16.

1. (அ) ஏனோக்கு என்ன நிலைமைகள் மத்தியில் எவ்வளவு காலம் கடவுளோடு நடந்தார்? (ஆ) நோவா எவ்வளவு காலம் கடவுளோடு நடந்தார், அவருக்கு என்ன பெரும் பொறுப்புகள் இருந்தன?

ஏனோக்கு ‘மெய்க் கடவுளோடே தொடர்ந்து நடந்தார்’ என்று பைபிள் நமக்கு சொல்கிறது. அவரைச் சுற்றியிருந்த ஆட்களின் அதிர்ச்சியூட்டும் பேச்சு, தேவபக்தியற்ற நடத்தை ஆகியவற்றின் மத்தியிலும் அவர் 365 வருடங்கள் தன் வாழ்க்கையின் முடிவுவரை கடவுளோடு நடப்பதில் விடாது நிலைத்திருந்தார். (ஆதியாகமம் 5:23, 24, NW; யூதா 14, 15) நோவாவும்கூட ‘மெய்க் கடவுளோடு நடந்தார்.’ தன் குடும்பத்தை பராமரித்துக்கொண்டும், கலகக்கார தேவதூதர்களும் அவர்களுடைய கொடூரமான சந்ததியாரும் செல்வாக்கு செலுத்திய உலகத்தை சமாளித்துக்கொண்டும், பண்டைய காலங்களில் கடலில்சென்ற எந்தவொரு கப்பலைக் காட்டிலும் பெரிதாயிருந்த ஒரு பிரமாண்டமான பேழையைக் கட்டுவதில் உட்பட்டிருந்த எல்லா விவரங்களையும் கவனித்துக்கொண்டும் அவர் அவ்வாறு நடந்தார். ஜலப்பிரளயத்திற்குப் பின்பு, யெகோவாவுக்கு விரோதமாக பாபேலில் கலகத்தனம் மறுபடியும் தலைதூக்கியபோதும்கூட அவர் கடவுளோடு தொடர்ந்து நடந்தார். உண்மையில், நோவா 950 வருடங்கள் தன் மரணம்வரை கடவுளோடு தொடர்ந்து நடந்தார்.—ஆதியாகமம் 6:9, NW; 9:29.

2. ‘கடவுளோடு நடப்பது’ என்பதன் அர்த்தம் என்ன?

2 இந்த விசுவாசமுள்ள மனிதர்கள் கடவுளோடு ‘நடந்தனர்’ என்று சொல்லும்போது, பைபிள் அந்தப் பதத்தை உருவக அர்த்தத்தில் பயன்படுத்துகிறது. கடவுள்மீது பலமான விசுவாசம் இருந்ததற்கான அத்தாட்சியை அளிக்கும்விதத்தில் ஏனோக்கும் நோவாவும் தங்களை நடத்திக்கொண்டனர் என்பதை அது அர்த்தப்படுத்துகிறது. யெகோவா தங்களுக்கு கட்டளையிட்டதை அவர்கள் செய்தனர், மனிதவர்க்கத்தோடு அவர் வைத்திருந்த செயல்தொடர்புகளிலிருந்து அவரைப் பற்றி அவர்கள் அறிந்தவற்றுக்கு இசைவாக தங்கள் வாழ்க்கையை ஒழுங்குபடுத்தி நடத்திவந்தனர். (ஒப்பிடுக: 2 நாளாகமம் 7:17.) கடவுள் சொன்னவற்றையும் செய்தவற்றையும் மனதில் ஏற்றுக்கொண்டதாக வெளிப்படுத்திக் காண்பித்தது மட்டுமல்லாமல், அவர் தேவைப்படுத்திய காரியங்கள் அனைத்தையும் அவர்கள் செய்தனர்—அதில் வெறுமனே சில காரியங்களை மட்டுமல்ல, ஆனால், அபூரண மனிதராக தங்களால் செய்யமுடிந்த எல்லாவற்றையும் செய்தனர். இவ்வாறு நோவா, உதாரணமாக, தேவன் தனக்குக் கட்டளையிட்டபடியெல்லாம் அப்படியே செய்துமுடித்தார். (ஆதியாகமம் 6:22) நோவா தனக்கு கொடுக்கப்பட்ட கட்டளைகளுக்கும் மேல் அதிகமாக காரியங்களை செய்யவில்லை, மேலும் அலட்சியமாய் மிகவும் மெதுவாகவும் காரியங்களை செய்யவில்லை. யெகோவாவோடு மிக நெருங்கிய உறவை அனுபவித்தவராக, தயங்காமல் கடவுளிடம் ஜெபித்து, கடவுளுடைய வழிநடத்துதலை மதித்துப் போற்றி கடவுளோடு நடந்துகொண்டிருந்தார். நீங்கள் அதை செய்கிறீர்களா?

நிலையான வாழ்க்கைப்போக்கு

3. ஒப்புக்கொடுத்து, முழுக்காட்டப்பட்ட கடவுளுடைய ஊழியர்கள் அனைவருக்கும் எது மிகவும் முக்கியமானது?

3 ஜனங்கள் கடவுளோடு நடக்க ஆரம்பிப்பதை கவனிப்பது இருதயத்திற்கு அனலூட்டுகிறது. அவர்கள் யெகோவாவின் சித்தத்துக்கு இசைவாக உடன்பாடான நடவடிக்கைகளை எடுக்கும்போது, விசுவாசத்தை பெற்றிருப்பதற்கான அத்தாட்சியை அளிக்கின்றனர், ஏனெனில் விசுவாசமில்லாமல் எவருமே கடவுளைப் பிரியப்படுத்த முடியாது. (எபிரெயர் 11:6) கடந்த ஐந்து வருடங்கள் சராசரியாக ஒவ்வொரு வருடமும் 3,30,000-க்கும் மேற்பட்ட நபர்கள் தங்களை யெகோவாவுக்கு ஒப்புக்கொடுத்து, தண்ணீர் முழுக்காட்டுதல் பெற்றிருப்பதை கண்டு நாம் எவ்வளவு மகிழ்ச்சியடைகிறோம்! ஆனால் அவர்களும் நாம் அனைவரும் கடவுளோடு தொடர்ந்து நடப்பதும்கூட முக்கியம்.—மத்தேயு 24:13; வெளிப்படுத்துதல் 2:10.

4. அவர்கள் ஓரளவு விசுவாசம் காண்பித்தாலும், எகிப்தை விட்டுச்சென்ற பெரும்பாலான இஸ்ரவேலர் ஏன் வாக்குப்பண்ணப்பட்ட தேசத்துக்குள் பிரவேசிக்கவில்லை?

4 மோசேயின் நாளில், எகிப்தில் பஸ்காவை கொண்டாடி தங்கள் வீட்டு வாசல் நிலைக்கால்களிலும் நிலையின் மேற்சட்டத்திலும் இரத்தத்தை தெளிப்பதற்கு ஒரு இஸ்ரவேல குடும்பத்துக்கு விசுவாசம் தேவைப்பட்டது. (யாத்திராகமம் 12:1-28) இருப்பினும், சிவந்த சமுத்திரத்தில் பார்வோனின் சேனை தங்களுக்குப் பின்னே நெருங்கிவருவதை அவர்கள் கண்டபோது அநேகருடைய விசுவாசம் தடுமாற்றமடைந்தது. (யாத்திராகமம் 14:9-12) உலர்ந்த சமுத்திரத்தின் வழியாய் அவர்கள் பாதுகாப்பாக கடந்தபின்பும், அலையலையாய் பொங்கியெழுந்த தண்ணீர் எகிப்திய சேனையை அழிப்பதை பார்த்தபின்பும், அவர்கள் மறுபடியும் யெகோவாவுடைய ‘வார்த்தைகளை விசுவாசித்தார்கள்’ என்று சங்கீதம் 106:12 காண்பிக்கிறது. இருப்பினும், சிறிது காலத்திற்குப் பிறகு இஸ்ரவேலர் குடிநீர், உணவு, வழிநடத்துதல் ஆகியவற்றைக் குறித்து வனாந்தரத்தில் குறைகூற ஆரம்பித்தார்கள். வாக்குப்பண்ணப்பட்ட தேசத்திலிருந்து திரும்பிவந்த 12 வேவுகாரர்களில் 10 பேரின் எதிர்மறையான அறிக்கை அவர்களுக்கு பயமூட்டியது. அந்தச் சூழ்நிலைமைகளில் கடவுளுடைய ‘வார்த்தையை விசுவாசியாமல் போனார்கள்’ என்று சங்கீதம் 106:24 சொல்கிறது. அவர்கள் எகிப்துக்குத் திரும்பிப் போக விரும்பினார்கள். (எண்ணாகமம் 14:1-4) கடவுளுடைய வல்லமையின் சில வியக்கத்தக்க வெளிக்காட்டுதல்களை அவர்கள் பார்த்தபோது மட்டும்தான் அவர்களுக்கிருந்த விசுவாசம் தெளிவாக தெரிந்தது. அவர்கள் கடவுளோடு தொடர்ந்து நடக்கவில்லை. அதன் காரணமாக அந்த இஸ்ரவேலர் வாக்குப்பண்ணப்பட்ட தேசத்துக்குள் பிரவேசிக்கவில்லை.—சங்கீதம் 95:10, 11.

5. கடவுளோடு நடப்பதன் சம்பந்தமாக 2 கொரிந்தியர் 13:5-ம் நீதிமொழிகள் 3:5, 6-ம் எவ்வாறு சம்பந்தப்பட்டிருக்கின்றன?

5 பைபிள் நமக்கு இவ்வாறு அறிவுரை கூறுகிறது: “நீங்கள் விசுவாசமுள்ளவர்களோவென்று உங்களை நீங்களே சோதித்து அறியுங்கள்; உங்களை நீங்களே பரீட்சித்துப் பாருங்கள்.” (2 கொரிந்தியர் 13:5) ‘விசுவாசத்தில்’ இருப்பது என்பது, கிறிஸ்தவ நம்பிக்கைகள் அடங்கிய தொகுப்பை கடைப்பிடிப்பதை அர்த்தப்படுத்துகிறது. நம் வாழ்நாள் முழுவதும் கடவுளோடு நடப்பதில் நாம் வெற்றியடைய வேண்டுமென்றால் இது முக்கியம். கடவுளோடு நடப்பதற்கு நாம் விசுவாசம் என்னும் பண்பையும்கூட அப்பியாசித்து, யெகோவாவில் முழு நம்பிக்கை வைக்க வேண்டும். (நீதிமொழிகள் 3:5, 6) அவ்வாறு செய்ய தவறுகிறவர்களை கண்ணியில் சிக்கவைப்பதற்கு அநேக சூழ்ச்சிப் பொறிகளும் இடறுகுழிகளும் இருக்கின்றன. இவற்றில் சில யாவை?

தன்னம்பிக்கை என்னும் கண்ணியைத் தவிருங்கள்

6. வேசித்தனம், விபசாரம் ஆகியவற்றைப் பற்றி எல்லா கிறிஸ்தவர்களும் எதை அறிந்திருக்கின்றனர், இந்தப் பாவங்களைப் பற்றி அவர்கள் எவ்வாறு உணருகிறார்கள்?

6 பைபிளைப் படித்து தன் வாழ்க்கையை யெகோவாவுக்கு ஒப்புக்கொடுத்து, முழுக்காட்டுதல் பெற்றிருக்கும் ஒவ்வொரு நபரும் கடவுளுடைய வார்த்தை வேசித்தனத்தையும் விபசாரத்தையும் கண்டனம் செய்கிறது என்பதை அறிந்திருக்கிறார். (1 தெசலோனிக்கேயர் 4:1-3; எபிரெயர் 13:4) அப்படிப்பட்டவர்கள் இது சரி என்று ஒப்புக்கொள்கின்றனர். அவர்கள் அதற்கு இசைய வாழ நோக்கம் கொண்டுள்ளனர். இருப்பினும், பாலின ஒழுக்கக்கேடு சாத்தானின் அதிக திறம்பட்ட கண்ணிகளில் ஒன்றாய் தொடர்ந்து இருந்துவருகிறது. ஏன்?

7. மோவாபிய சமவெளியில், இஸ்ரவேல ஆண்கள் தவறு என்று தாங்கள் அறிந்திருந்த நடத்தையில் எவ்வாறு ஈடுபட்டனர்?

7 ஆரம்பத்தில், அப்படிப்பட்ட ஒழுக்கங்கெட்ட நடத்தையில் ஈடுபடுபவர்கள் அதற்காக திட்டமிடாமல் இருக்கலாம். மோவாபிய சமவெளியில் இருந்த இஸ்ரவேலருடைய விஷயத்திலும்கூட அது ஒருவேளை உண்மையாய் இருந்திருக்கலாம். வனாந்தர வாழ்க்கையில் சலிப்படைந்திருந்த இஸ்ரவேல ஆண்களுக்கு, அவர்களை கவர்ந்திழுத்த மோவாபிய மற்றும் மீதியானிய பெண்கள் ஆரம்பத்தில் சிநேகப்பான்மையானவர்களாயும் உபசரிப்பவர்களாயும் தோன்றியிருக்கலாம். ஆனால் அவர்கள் திருமணம் செய்திராத ஆண்களோடு பாலுறவுகொள்வதற்கு தங்கள் இளம் மகள்களை (முக்கியத்துவம் வாய்ந்த குடும்பங்களிலிருந்தும்கூட) அனுமதித்த பாகாலைச் சேவித்து யெகோவாவை சேவிக்காத ஜனங்கள், தங்களோடு தோழமைகொள்ள இஸ்ரவேலரை அழைத்தபோது அதை ஏற்றுக்கொண்டவர்களுக்கு என்ன நடந்தது? பாளயத்திலிருந்த இஸ்ரவேல ஆண்கள் அப்படிப்பட்ட கூட்டுறவை விரும்பத்தக்கதாக நோக்க ஆரம்பித்தபோது, தவறு என்று தாங்கள் அறிந்திருந்த காரியங்களை செய்யும்படி கவர்ந்திழுக்கப்பட்டனர், இது அவர்கள் தங்கள் உயிரை இழக்கும்படி செய்தது.—எண்ணாகமம் 22:1; 25:1-15; 31:16; வெளிப்படுத்துதல் 2:14.

8. நம் நாளில் எது ஒரு கிறிஸ்தவரை பாலின ஒழுக்கக்கேட்டுக்குள் வழிநடத்தலாம்?

8 நம் நாளில் அதுபோன்ற ஒரு கண்ணிக்குள் விழுந்துவிட எது ஒரு நபரை செய்விக்கலாம்? பாலின ஒழுக்கக்கேட்டின் வினைமையானத்தன்மையை அவர் அறிந்திருந்தாலும், தன்னம்பிக்கையினால் வரும் ஆபத்தையும்கூட அவர் மதித்துணர வேண்டும்; தவறினால், அவருடைய நியாயமாய் சிந்திக்கும் திறனை முழுவதுமாய் மேற்கொண்டுவிடும் அளவுக்கு தவறான காரியங்களைச் செய்வதற்கான கவர்ந்திழுக்கும் சூழ்நிலைக்குள் சிக்க தன்னை அனுமதித்துவிடலாம்.—நீதிமொழிகள் 7:6-9, 21, 22; 14:16.

9. ஒழுக்கக்கேட்டுக்கு எதிராக என்ன வேதப்பூர்வ எச்சரிப்புகள் நம்மை பாதுகாக்கலாம்?

9 நேரடியாக சொன்னால், நாம் அதிக பலமாக இருப்பதால் கெட்ட கூட்டுறவு நம்மை கறைப்படுத்தாது என்று தவறாக சிந்திப்பதைத் தவிர்க்கும்படி கடவுளுடைய வார்த்தை நம்மை எச்சரிக்கிறது. ஒழுக்கங்கெட்ட ஆட்களின் வாழ்க்கையை சிறப்பித்துக்காட்டும் டிவி நிகழ்ச்சிகளைப் பார்ப்பது, ஒழுக்கங்கெட்ட ஆசைகளை தூண்டும் பத்திரிகைகளை பார்ப்பது ஆகியவை அதில் அடங்கும். (1 கொரிந்தியர் 10:11, 12; 15:33) தவறான சூழ்நிலைமைகளில் உடன்விசுவாசிகளோடு கூட்டுறவுகொள்வதுகூட வினைமையான பிரச்சினைகளுக்கு வழிநடத்தக்கூடும். இருபாலருக்கும் இடையே உள்ள கவர்ச்சி மிகவும் பலமானது. ஆகையால் நாம் திருமணம் செய்திராத அல்லது குடும்ப அங்கத்தினரல்லாத எதிர்பாலார் ஒருவரோடு தனியாக இருப்பது, பொதுமக்கள் பார்வையில் இல்லாமல் தனியே இருப்பது ஆகியவற்றுக்கு எதிராக யெகோவாவின் அமைப்பு அன்பான அக்கறையோடு எச்சரித்திருக்கிறது. கடவுளோடு தொடர்ந்து நடப்பதற்கு, தன்னம்பிக்கை என்னும் கண்ணியை தவிர்த்து அவர் நமக்கு அளிக்கும் எச்சரிப்பின் புத்திமதியை ஏற்றுக்கொள்வது அவசியம்.—சங்கீதம் 85:8.

மனுஷனுக்குப் பயப்படும் பயம் உங்களைக் கட்டுப்படுத்த அனுமதிக்காதீர்கள்

10. “மனுஷனுக்குப் பயப்படும் பயம்” எப்படி ஒரு கண்ணியாக அமையலாம்?

10 மற்றொரு ஆபத்து நீதிமொழிகள் 29:25-ல் அடையாளம் காண்பிக்கப்பட்டிருக்கிறது, அது சொல்கிறது: “மனுஷனுக்குப் பயப்படும் பயம் கண்ணியை வருவிக்கும்.” ஒரு வேட்டைக்காரனின் கண்ணி பெரும்பாலும் ஒரு மிருகத்தின் கழுத்தை இறுக்கும் சுருக்குக்கயிறாக இருக்கலாம் அல்லது அதன் பாதங்களை சிக்கவைக்கும் கயிறுகளாக இருக்கலாம். (யோபு 18:8-11) அதேபோல் மனுஷனுக்குப் பயப்படுவது, ஒரு நபர் தாராளமாக பேசுவதற்குரிய திறமையையும் கடவுளுக்குப் பிரியமானவிதத்தில் தன்னை நடத்திக்கொள்வதையும் நெரித்து ஒடுக்கிவிடலாம். மற்றவர்களைப் பிரியப்படுத்த வேண்டுமென்ற விருப்பம் இயல்பானதே, ஆனால், மற்ற ஆட்கள் என்ன நினைப்பார்கள் என்பதை உணர்ச்சியற்று கொஞ்சமும் பொருட்படுத்தாமல் இருப்பது கிறிஸ்தவமல்ல. ஆகையால் சமநிலை தேவைப்படுகிறது. மற்ற மனிதர்கள் எப்படி பிரதிபலிப்பார்களோ என்று கவலைப்படுவதன் காரணமாக, கடவுள் தடைசெய்பவற்றை ஒரு நபர் செய்தார் என்றால், அல்லது கடவுளுடைய வார்த்தை கட்டளையிடுபவற்றை செய்யாமல் தவிர்த்தார் என்றால், அந்த நபர் கண்ணியில் சிக்கியிருக்கிறார்.

11. (அ) மனுஷனுக்குப் பயப்படும் பயம் ஒருவரை கட்டுப்படுத்த அனுமதிப்பதற்கு எதிராக என்ன பாதுகாப்பு உள்ளது? (ஆ) மனுஷனுக்குப் பயப்படும் பயத்தால் போராடிக்கொண்டிருந்த தம் ஊழியர்களுக்கு யெகோவா எவ்வாறு உதவி செய்திருக்கிறார்?

11 அப்படிப்பட்ட கண்ணிக்கு எதிரான பாதுகாப்பு, ஒருவரின் இயல்பாய் அமைந்துள்ள மனநிலையில் அல்ல, ஆனால், ‘யெகோவாவை நம்புவதன்’ பேரிலேயே சார்ந்திருக்கிறது. (நீதிமொழிகள் 29:25ஆ, NW) இயல்பாகவே கூச்ச சுபாவமுள்ள ஒரு நபரும்கூட கடவுள்மீது நம்பிக்கை வைக்கையில் தைரியமானவராகவும் உறுதிவாய்ந்தவராகவும் நிரூபிக்கலாம். நாம் இந்தச் சாத்தானிய ஒழுங்குமுறையின் அழுத்தங்களால் சூழப்பட்டிருக்கும்வரை, நம்மை கண்ணியில் சிக்கவைக்கக்கூடிய மனுஷனுக்குப் பயப்படும் பயத்துக்கு எதிராக விழிப்பாயிருப்பது அவசியம். தீர்க்கதரிசியாகிய எலியா, தைரியமாய் சேவை செய்ததாக ஒரு சிறந்த பதிவை பெற்றிருந்தபோதிலும், யேசபேல் அவரைக் கொலை செய்யப்போவதாக பயமுறுத்தியபோது, அவர் பயப்பட்டு அங்கிருந்து ஓடினார். (1 இராஜாக்கள் 19:2-18) அப்போஸ்தலனாகிய பேதுரு அழுத்தத்தின் காரணமாக பயப்பட்டு இயேசு கிறிஸ்துவை அறிந்திருப்பதையே மறுதலித்துவிட்டார்; மேலும் பல வருடங்களுக்குப்பின், பயத்தின் காரணமாக விசுவாசத்துக்கு முரணானவிதத்தில் நடந்துகொள்ளவும் செய்தார். (மாற்கு 14:66-71; கலாத்தியர் 2:11, 12) இருப்பினும், எலியாவும் பேதுருவும் ஆவிக்குரிய உதவியை ஏற்றுக்கொண்டு, யெகோவாவின்மீது நம்பிக்கை வைத்து ஏற்கத்தகுந்தவிதத்தில் கடவுளை தொடர்ந்து சேவித்தனர்.

12. கடவுளைப் பிரியப்படுத்துவதிலிருந்து தடைசெய்யும் பயத்தை தவிர்க்க எப்படி தனிப்பட்ட நபர்கள் உதவப்பட்டிருக்கின்றனர் என்பதை என்ன நவீன நாளைய உதாரணங்கள் காண்பிக்கின்றன?

12 நம் நாளிலுள்ள யெகோவாவின் ஊழியர்களில் அநேகரும்கூட கண்ணியில் சிக்கவைக்கக்கூடிய பயத்தை எவ்வாறு மேற்கொள்வது என்பதை கற்றிருக்கின்றனர். கயானாவில் உள்ள ஒரு பருவ வயது சாட்சி இவ்வாறு ஒப்புக்கொண்டாள்: “பள்ளியில் சகாக்களின் அழுத்தத்தை எதிர்த்துப் போராடுவது மிகவும் கடினம்.” ஆனால் அவள் கூடுதலாக சொன்னாள்: “யெகோவாவின்மீது எனக்கு இருக்கும் விசுவாசமும்கூட அவ்வாறே பலமாக உள்ளது.” அவளுடைய விசுவாசத்தின் காரணமாக அவளுடைய ஆசிரியர் அவளை வகுப்பில் எல்லாருக்கும் முன்பாக கேலி செய்தபோது, அவள் அமைதலாக யெகோவாவிடம் ஜெபித்தாள். பின்னர் தனியே இருக்கையில் அவள் அந்த ஆசிரியருக்கு சாதுரியமாக சாட்சி கொடுத்தாள். யெகோவா தேவைப்படுத்துகிறவற்றை கற்றுக்கொண்டிருந்த ஒரு இளம் நபர் பெனினிலிருந்த தன் சொந்த ஊருக்கு ஒருமுறை சென்றிருந்தபோது, தன்னுடைய தந்தை தனக்காக செய்து கொடுத்திருந்த ஒரு விக்கிரகத்தை ஒழித்துவிடுவதற்கு தீர்மானமாயிருந்தார். அந்த விக்கிரகத்துக்கு உயிரில்லை என்பதை அந்த இளம் நபர் அறிந்திருந்தார், மேலும் அவர் அதை பார்த்து பயப்படவுமில்லை; ஆனால், கோபமாயிருந்த கிராமவாசிகள் தன்னைக் கொலைசெய்வதற்கு நாடலாம் என்பதையும்கூட அவர் அறிந்திருந்தார். அவர் யெகோவாவிடம் ஜெபித்தார், பிறகு இரவில் அந்த விக்கிரகத்தை எடுத்துச்சென்று புதருக்குள் போட்டுவிட்டார். (ஒப்பிடுக: நியாயாதிபதிகள் 6:27-31.) டொமினிகன் குடியரசில் வசிக்கும் ஒரு பெண் யெகோவாவை சேவிக்க ஆரம்பித்தபோது, அவளுடைய கணவர் தான் வேண்டுமா அல்லது யெகோவா வேண்டுமா என்று தெரிந்தெடுக்கும்படி வற்புறுத்தினார். கணவர் விவாகரத்து செய்துவிடப்போவதாக பயமுறுத்தினார். பயம் அவளுடைய விசுவாசத்தை விட்டுவிடும்படி அவளைச் செய்விக்குமா? அவள் பதிலளித்தாள்: “கணவனுக்கு துரோகம் செய்திருந்தால் நான் வெட்கப்படுவேன், ஆனால் யெகோவா தேவனை சேவிப்பதற்கு வெட்கப்பட மாட்டேன்!” அவள் கடவுளோடு தொடர்ந்து நடந்தாள், காலப்போக்கில் அவளுடைய கணவரும் யெகோவாவின் சித்தத்தைச் செய்வதில் அவளோடு சேர்ந்துகொண்டார். நம் பரலோக தகப்பன்மீது முழு நம்பிக்கை வைத்து, யெகோவாவுக்கு பிரியமானவை என்று நாம் அறிந்திருக்கும் காரியங்களை செய்வதிலிருந்து மனுஷனுக்குப் பயப்படும் பயம் நம்மை தடுப்பதை நாமும்கூட தவிர்க்கலாம்.

புத்திமதியை குறைவாக மதிப்பிடுவதை தவிருங்கள்

13. எந்தக் கண்ணியைப் பற்றி 1 தீமோத்தேயு 6:9-ல் நாம் எச்சரிக்கப்பட்டிருக்கிறோம்?

13 வேட்டைக்காரர் பயன்படுத்தும் சில கண்ணிகள் ஒரு குறிப்பிட்ட இடத்தை கடந்துசெல்லும் எந்தவொரு மிருகத்தையும் பிடிப்பதற்கென வடிவமைக்கப்பட்டிருந்தாலும், வேறு கண்ணிகள் ஏமாற்றும் இயல்புடைய கவர்ச்சியூட்டும் இரையின் மூலம் மிருகங்களை கவர்ந்திழுக்கின்றன. பெரும்பாலான மனிதருக்கு செல்வங்கள் அவ்வாறுதான் இருக்கின்றன. (மத்தேயு 13:22) 1 தீமோத்தேயு 6:8, 9-ல், உண்ணவும் உடுக்கவும் நமக்கு உண்டாயிருந்தால் அது போதுமென்றிருக்கக்கடவோம் என்று பைபிள் நம்மை உற்சாகப்படுத்துகிறது. பிறகு அது இவ்வாறு எச்சரிக்கிறது: “ஐசுவரியவான்களாக விரும்புகிறவர்கள் சோதனையிலும் கண்ணியிலும், மனுஷரைக் கேட்டிலும் அழிவிலும் அமிழ்த்துகிற மதிகேடும் சேதமுமான பலவித இச்சைகளிலும் விழுகிறார்கள்.”

14. (அ) உண்ணவும் உடுக்கவும் இருந்தால் போதும் என்ற புத்திமதியை இருதயத்தில் ஏற்றுக்கொள்வதிலிருந்து எது ஒரு நபரை தடைசெய்யலாம்? (ஆ) செல்வங்களைப் பற்றிய எந்தத் தவறான விளக்கம், 1 தீமோத்தேயு 6:9-ல் பதிவுசெய்யப்பட்டுள்ள எச்சரிப்பின் முக்கியத்துவத்தை குறைப்பதற்கு ஒருவரை தூண்டலாம்? (இ) எந்த விதத்தில் “கண்களின் இச்சை” சிலருக்கு, தங்களுக்காக காத்திருக்கும் கண்ணியை மறைத்துப்போடலாம்?

14 இந்த எச்சரிப்பு இருந்தபோதிலும், அநேகர் இக்கண்ணியில் சிக்கிக்கொள்கிறார்கள், ஏனென்றால் அவர்கள் இந்தப் புத்திமதியை தங்களுக்கென்று பொருத்திக்கொள்வதில்லை. ஏன்? “உண்ணவும் உடுக்கவும்” இருந்தால் போதும் என்று திருப்தியோடிருக்கும்படி பைபிள் நம்மை ஊக்குவிக்கிறது; ஆனால், அதற்கும்மேல் கூடுதலாக தேவைப்படுத்தும் வாழ்க்கை பாணியை கட்டாயமாய் கடைப்பிடிக்க வேண்டுமென்று பெருமை அவர்களை உந்தித்தள்ளுகிறதா? பெரும் செல்வந்தர்கள் வைத்திருப்பவற்றிற்கு ஏற்ப செல்வங்களை இவர்கள் மதிப்பிடுவதால் பைபிள் கொடுக்கும் எச்சரிப்பின் முக்கியத்துவத்தை ஒருவேளை குறைக்கிறார்களா? செல்வந்தர்களாக ஆக வேண்டுமென்று தீர்மானமாயிருப்பதை உண்ணவும் உடுக்கவும் இருந்தால் போதும் என்று இருப்பதோடு பைபிள் தெளிவாக வேறுபடுத்திக் காண்பிக்கிறது. (ஒப்பிடுக: எபிரெயர் 13:5.) “கண்களின் இச்சை”—தாங்கள் காணும் பொருட்களை பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற விருப்பம், ஆவிக்குரிய நாட்டங்களையும் தியாகம்செய்துவிட்டு—மெய்வணக்கத்தின் அக்கறைகளை இரண்டாவது இடத்திற்கு தள்ளிவிடும்படி அவர்களை தூண்டுகிறதா? (1 யோவான் 2:15-17; ஆகாய் 1:2-8) யெகோவாவின் சேவைக்கு தங்கள் வாழ்க்கையில் முக்கிய இடத்தைக் கொடுப்பதன் மூலம் பைபிளின் புத்திமதியை உண்மையிலேயே இருதயத்தில் ஏற்றுக்கொண்டு, கடவுளோடு நடப்பவர்கள் எவ்வளவு மகிழ்ச்சியாய் இருக்கின்றனர்!

வாழ்க்கையின் கவலைகளை வெற்றிகரமாய் சமாளித்தல்

15. புரிந்துகொள்ளும்விதமாகவே, யெகோவாவின் மக்களில் அநேகருக்கு என்ன சூழ்நிலைகள் கவலையை உண்டாக்குகின்றன, அப்படிப்பட்ட அழுத்தத்தில் நாம் இருக்கையில் எந்தக் கண்ணிக்கு விழிப்புள்ளவர்களாய் இருக்க வேண்டும்?

15 செல்வந்தர்களாக ஆக வேண்டுமென்று தீர்மானமாயிருப்பதைவிட வாழ்க்கையின் அடிப்படை தேவைகளை பெற்றுக்கொள்வதைப் பற்றி அக்கறையோடு கவலைகொள்வது சர்வசாதாரணமாய் இருக்கிறது. யெகோவாவின் ஊழியர்களில் அநேகர் மிகவும் குறைவான உடைமைகளை வைத்தே வாழ்கின்றனர். அடிப்படை தேவைகளான உடை, இரவில் தங்கள் குடும்பம் உறங்குவதற்கு ஒரு இடம், நாள்தோறும் கொஞ்சமாவது உணவு ஆகியவற்றைப் பெறுவதற்கு அவர்கள் பல மணிநேரங்கள் கடினமாக உழைக்கின்றனர். இன்னும் சிலர் நோய், தாங்களோ அல்லது தங்கள் குடும்ப அங்கத்தினர்களோ முதுமையடைதல் போன்ற பிரச்சினைகளோடு போராடுகின்றனர். அவர்களுடைய வாழ்க்கையில் அப்படிப்பட்ட சூழ்நிலைமைகள் ஆவிக்குரிய அக்கறைகளை நெருக்கிப்போடுவதற்கு அனுமதிப்பது எவ்வளவு சுலபமாய் இருக்கும்!—மத்தேயு 13:22.

16. வாழ்க்கையின் அழுத்தங்களை சமாளிப்பதற்கு யெகோவா நமக்கு எப்படி உதவிசெய்கிறார்?

16 மேசியானிய ராஜ்யத்தில் அனுபவிக்கப்போகும் விடுதலையைப் பற்றி யெகோவா அன்புடன் நமக்கு சொல்கிறார். (சங்கீதம் 72:1-4, 16; ஏசாயா 25:7, 8) நாம் எப்படி முதன்மையான காரியங்களை சரியாக ஒழுங்குபடுத்தி வைப்பது என்பதன் பேரில் நமக்கு புத்திமதி அளிப்பதன் மூலம் வாழ்க்கையின் அழுத்தங்களை இப்போது சமாளிக்கவும்கூட அவர் நமக்கு உதவிசெய்கிறார். (மத்தேயு 4:4; 6:25-34) கடந்த காலங்களில் தம் ஊழியர்களுக்கு எவ்வாறு உதவி செய்தார் என்ற பதிவின் மூலம் யெகோவா நமக்கு திரும்பவும் உறுதியளிக்கிறார். (எரேமியா 37:21; யாக்கோபு 5:11) எப்படிப்பட்ட துன்பங்கள் நமக்கு வந்தாலும் தம்முடைய உண்மையுள்ள ஊழியர்கள்மீது அவர் வைத்திருக்கும் அன்பு நிலைத்துநிற்கும் என்பதை நாம் அறிந்துகொள்ளச் செய்வதன் மூலம் அவர் நம்மை பலப்படுத்துகிறார். (ரோமர் 8:35-39) யெகோவாவில் நம்பிக்கை வைப்போருக்கு அவர் அறிவிக்கிறார்: “நான் உன்னைவிட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை.”—எபிரெயர் 13:5.

17. தனிப்பட்ட நபர்கள் கடும் துன்பங்களை அனுபவிக்கையில் எப்படி கடவுளோடு தொடர்ந்து நடக்கமுடிந்திருக்கிறது என்பதற்கான உதாரணங்களைக் கொடுங்கள்.

17 இதை அறிந்திருப்பதனால் பலப்படுத்தப்பட்டு, மெய்க் கிறிஸ்தவர்கள் உலகப்பிரகாரமான வழிகளுக்குத் திரும்பிவிடுவதற்குப் பதிலாக கடவுளோடு தொடர்ந்து நடக்கின்றனர். அநேக தேசங்களில் ஏழைகள் மத்தியில் உள்ள ஒரு பொதுவான உலக தத்துவம் என்னவென்றால், உங்கள் குடும்பத்திற்கு உணவளிக்க அதிகம் உள்ளவனிடமிருந்து பறித்துக்கொள்ளலாம். இது ஒன்றும் திருட்டல்ல. ஆனால் விசுவாசித்து நடப்பவர்கள் அந்த எண்ணத்தை ஏற்க மறுத்துவிடுகின்றனர். எல்லாவற்றுக்கும் மேலாக கடவுளுடைய அங்கீகாரத்தையே அவர்கள் மதிக்கின்றனர், தங்கள் நேர்மையான நடத்தைக்கு பலனளிக்க அவரையே நோக்கியிருக்கின்றனர். (நீதிமொழிகள் 30:8, 9; 1 கொரிந்தியர் 10:13; எபிரெயர் 13:18) வேலை செய்வதற்கு விருப்பமும் அதோடுகூட பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்புகளை பயன்படுத்திக்கொண்டதும் சமாளிப்பதற்கு உதவிசெய்தன என்பதை இந்தியாவிலுள்ள ஒரு விதவை கண்டுணர்ந்தார். வாழ்க்கையில் தன் நிலையைக் குறித்து மனக்கசப்படையாமல், கடவுளுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தன் வாழ்க்கையில் முதலிடத்தில் வைத்தால், தனக்கும் தன் மகனுக்கும் தேவையானதை பெற்றுக்கொள்வதற்கு யெகோவா அவருடைய முயற்சிகளை ஆசீர்வதிப்பார் என்பதை அவர் அறிந்திருந்தார். (மத்தேயு 6:33, 34) தாங்கள் எப்படிப்பட்ட துன்பத்தை அனுபவித்தாலும், யெகோவாவே தங்கள் அடைக்கலம், கோட்டை என்பதை பூமி முழுவதிலுமுள்ள அநேகமாயிரம் பேர் நடைமுறையில் வெளிப்படுத்திக் காண்பிக்கின்றனர். (சங்கீதம் 91:2) உங்கள் விஷயத்திலும் அது உண்மையாயிருக்கிறதா?

18. சாத்தானுடைய உலகின் கண்ணிகளை தவிர்ப்பதற்கு திறவுகோல் என்ன?

18 இந்தக் காரிய ஒழுங்குமுறையில் நாம் வாழும்வரை, தவிர்க்கவேண்டிய கண்ணிகள் இருக்கும். (1 யோவான் 5:19) பைபிள் இவற்றை அடையாளம் காண்பித்து, அவற்றை எப்படி தவிர்ப்பது என்பதையும் நமக்கு காட்டுகிறது. யெகோவாவை உண்மையிலேயே நேசித்து அவரைப் பிரியப்படுத்தாமல் போய்விடுவோமோ என்ற ஆரோக்கியமான பயத்தை உடையோர் அப்படிப்பட்ட கண்ணிகளை வெற்றிகரமாய் சமாளிக்கலாம். அவர்கள் தொடர்ந்து ‘ஆவிக்கேற்றபடி நடந்தால்,’ உலகப்பிரகாரமான வழிகளுக்கு அடிபணிந்து விடமாட்டார்கள். (கலாத்தியர் 5:16-25) யெகோவாவுடன் உள்ள உறவைச்சுற்றி தங்கள் வாழ்க்கையை உண்மையிலேயே அமைத்துக்கொள்வோருக்கு, கடவுளோடு நடந்து அவரோடு மிக நெருங்கிய உறவை என்றென்றும் அனுபவித்து மகிழும் மகத்தான எதிர்பார்ப்பு உள்ளது.—சங்கீதம் 25:14.

உங்கள் குறிப்பு என்ன?

◻ தன்னம்பிக்கை எப்படி ஒரு கண்ணியாக இருக்கலாம்?

◻ மனுஷனுக்குப் பயப்படும் பயம் நம்மைக் கட்டுப்படுத்துவதற்கு எதிராக எது நம்மை பாதுகாக்கலாம்?

◻ செல்வங்களை நாடுவதால் வரும் ஆபத்தின் பேரிலுள்ள புத்திமதியை பொருத்த தவறும்படி எது நம்மை தூண்டலாம்?

◻ வாழ்க்கையின் கவலைகள் என்னும் கண்ணியில் சிக்கிக்கொள்வதைத் தவிர்க்க எது நமக்கு உதவக்கூடும்?

[பக்கம் 16, 17-ன் படம்]

அநேகர் வாழ்நாள் முழுவதும் கடவுளோடு தொடர்ந்து நடக்கின்றனர்

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்