நம் அன்புக்குரியோருக்காக முன்னேற்பாடு செய்தல்
ஆனியின் துயர்மிகுந்த சரிதை, சமீபத்தில் ஆப்பிரிக்க செய்தித்தாள் ஒன்றில் வெளிவந்தது. ஆனியின் கணவர் வாணிகராக இருந்தார். 1995-ல் அவர் இறந்துபோனார். அவர் 15 ஊர்திகளையும், பல வங்கிகளில் பண சேமிப்புகளையும், ரொக்கமாக சுமார் 4,000 அமெரிக்க டாலரையும், ஒரு கடையையும், ஒரு பார்-ரையும், மூன்று படுக்கை அறைகளையுடைய ஒரு வீட்டையும் பின்விட்டுச் சென்றார். அவர் விட்டுச் செல்லாதது உயில் ஒன்றுதான்.
ஆனியின் மைத்துனன் அந்தச் சொத்து அனைத்தையும் பணத்தையும் அபகரித்துக்கொண்டு அவளையும் அவளுடைய ஆறு பிள்ளைகளையும் அவர்களுடைய வீட்டிலிருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றினான் என்று சொல்லப்படுகிறது. ஆதரவற்றவர்களாக, அவளும் அவளுடைய பிள்ளைகளும் தற்போது அவளுடைய சகோதரன் வீட்டில் வாழ்கிறார்கள். பள்ளிக்கூட கட்டணத்திற்கோ பள்ளி சீருடைக்கோ பணம் இல்லாததால், அவளுடைய பிள்ளைகளில் நான்கு பேர் பள்ளியை விட்டு விலக வேண்டியதாயிற்று.
ஆனி, உயர் நீதிமன்றத்திற்கு மனு செய்தாள்; ஓர் ஊர்தி உட்பட ஓரளவு சொத்து அவளுக்குக் கொடுக்கப்பட வேண்டுமென அது தீர்ப்பளித்தது. ஆனால் ஒன்றும் திருப்பிக் கொடுக்கப்படவில்லை. உயர் நீதிமன்ற ஆணைக்கேற்ப செயல்பட தன் மைத்துனனை வற்புறுத்துவதற்கு அவள் மறுபடியுமாக நீதிமன்றத்துக்குச் செல்ல வேண்டும்.
மரணத்தைப் பற்றி ஏன் சிந்திக்க வேண்டும்?
தனக்கு மரணம் நேரிட்டால் செய்யப்பட வேண்டியவற்றை முன்னதாகவே சிந்தித்து, ஏற்பாடுகளைச் செய்ய ஒரு குடும்பத் தலைவர் தவறுகையில் என்ன நடக்கலாம் என்பதை ஆனியின் சரிதை விளக்கமாகத் தெரிவிக்கிறது. மரணத்தின்போது, எல்லா மானிடரும், ‘தங்கள் ஆஸ்தியை மற்றவர்களுக்கு வைத்துப்போகிறார்கள்.’ (சங்கீதம் 49:10) மேலும், தங்கள் உடைமைகள் என்ன செய்யப்படுகின்றன என்பதன்பேரில் மரித்தோருக்கு எந்தச் செல்வாக்கும் இல்லை. (பிரசங்கி 9:5, 10) தன் உடைமைகள் என்ன செய்யப்பட வேண்டுமென்று ஒருவர் விரும்புவதை, தன் மரணத்திற்கு முன்பாகவே திட்டமிட வேண்டும்.
எதிர்பாராது திடீரென்று நாம் மரிக்கக்கூடும் என்பதை நாம் எல்லாரும் அறிந்திருக்கிற போதிலும், உயிரோடிருக்கும் தங்கள் அன்புக்குரியோருக்கு முன்னதாகவே பொருளாதார ஏற்பாடுகளை செய்ய பலர் தவறுகின்றனர். ஆப்பிரிக்காவில் உள்ள சில கலாச்சார தொகுதிகளின்பேரில் நம் ஆய்வுரை கவனத்தை ஊன்றவைக்கிற போதிலும், உலகத்தின் மற்ற பாகங்களிலும் இவற்றைப்போன்ற பிரச்சினைகள் இருந்துவருகின்றன.
மரணம் நேரிட்டால் உங்கள் சொத்து என்ன செய்யப்பட வேண்டும் என்பதன்பேரில் சட்டப்பூர்வ ஏற்பாடுகளை நீங்கள் செய்கிறீர்களா இல்லையா என்பது உங்கள் சொந்த விஷயம். (கலாத்தியர் 6:5) எனினும், ஒருவர் இவ்வாறு கேட்கலாம், ‘ஒரு மனிதன் உயிரோடிருக்கையில் தன் மனைவியையும் பிள்ளைகளையும் நேசித்து ஆதரிக்கையில், தான் மரிக்க நேரிட்டால் அவர்களுடைய சுகநலத்திற்கான பொருளாதாரத்தை ஏன் அவன் திட்டமிடுகிறதில்லை?’ நாம் மரிக்கக்கூடும் என்ற சாத்தியத்தைப் பற்றி நினைக்க, நம்மில் பெரும்பான்மையர் விரும்புகிறதில்லை என்பதே ஒரு முக்கிய காரணமாக இருக்கிறது. எனவே மரித்தபின் நடைபெற வேண்டியவற்றிற்கு எந்த ஏற்பாடும் செய்வதில்லை. உண்மையில், பைபிள் பின்வருமாறு சொல்லுகிற பிரகாரம் நம்முடைய மரண நாளை நாம் முன்னறிய முடியாது: “நாளைத்தினம் உங்கள் ஜீவன் எப்படிப்பட்டதாகுமென்று உங்களுக்குத் தெரியாதே. அது கொஞ்சநேரந் தோன்றிப் பின்பு தோன்றாமற்போகிற புகையே.”—யாக்கோபு 4:14, தி.மொ.
மரணம் ஏற்படும் சாத்தியத்தை மனதில் வைத்து ஏற்பாடுகள் செய்வது நடைமுறைக்கு உகந்ததாக உள்ளது. உயிரோடிருப்பவர்களுக்கு அன்புள்ள அக்கறை காட்டுவதாகவும் அது இருக்கிறது. நம்முடைய விவகாரங்களை நாம் ஒழுங்கு செய்யாவிட்டால், மற்றவர்கள் அதைச் செய்வார்கள். நாம் ஒருபோதும் சந்தித்திராத ஆட்கள் ஒருவேளை, நம் உடைமைகளையும் சவ அடக்க ஏற்பாடுகளையும் பற்றிய தீர்மானங்களைச் செய்வார்கள். சில நாடுகளில், அத்தகைய சூழ்நிலைமைகளில், நம்முடைய பணத்தையும் சொத்தையும் யார் பெறுவர் என்பதை அரசாங்கம் தீர்மானிக்கிறது. மற்ற இடங்களில், உறவினர் தீர்மானிக்கின்றனர்; இந்தத் தீர்மானங்கள் குடும்பத்துக்குள் பகைமையை உண்டாக்கி, சண்டை சச்சரவுகளை அடிக்கடி கிளப்பிவிடுகின்றன. மேலும், அவர்களால் தீர்மானிக்கப்பட்டது நம் விருப்பத்திற்கு முற்றிலும் மாறுபட்டதாக இருக்கலாம்.
அடாவடியாக சொத்து பறிப்பு
தன் கணவர் மரிக்கையில் விதவையே பெருமளவில் துன்பப்படுகிறாள். தன் துணைவரை இழந்த துயரத்தை மட்டுமல்லாமல், சொத்து பறிக்கப்படுவதற்கும் அவள் பெரும்பாலும் ஆளாகிறாள். ஆனியின் காரியத்தில் முன்பு இது விவரிக்கப்பட்டது. சொத்தைப் பறித்துக்கொள்வதற்கு ஓரளவு காரணம், மனைவிகள் எவ்வாறு கருதப்படுகிறார்கள் என்பதோடு சம்பந்தப்பட்டிருக்கிறது. சில கலாச்சாரங்களில் ஒருவனின் மனைவி, அவனுடைய குடும்பத்தின் பாகமாகக் கருதப்படுகிறதில்லை. அவள் எப்போதாயினும் தன் குடும்பத்தினிடம் திரும்ப சென்றுவிடும் அல்லது மற்றொரு குடும்பத்தில் மறுமணம் செய்துகொள்ளும் அந்நிய பெண்ணாக கருதப்படுகிறாள். இதற்கு நேர்மாறாக, ஒருவனின் சகோதரர்களும், சகோதரிகளும், பெற்றோரும் அவனை விட்டு ஒருபோதும் செல்வதில்லை என்றவாறு அவர்களுடைய சிந்தனை போக்கு செல்கிறது. அவன் மரித்தால், அவனுடைய உடைமை, அவனுடைய மனைவிக்கும் பிள்ளைகளுக்கும் அல்ல, தங்களுக்கே உரியது என்று அவனுடைய குடும்பம் நம்புகிறது.
தங்கள் மனைவிகளை நம்பி காரியங்களைத் தெரிவிக்காத கணவர்கள், இத்தகைய சிந்தனையை ஊக்குவிக்கிறார்கள். மைக் தன் அலுவல் விவகாரங்கள் அனைத்தையும், தன் உடன்பிறந்த சகோதரர்களுடன் மாத்திரமே கலந்து பேசினார். அவருடைய உடைமைகள் எவை என்பதை அவர்கள் அறிந்திருந்தார்கள், ஆனால் அவருடைய மனைவிக்கோ அவ்வளவாகத் தெரியாது. அவர் மரித்தபோது, அவருடைய சகோதரர்கள் அவளிடம் வந்து, கடன் வாங்கின ஒருவனிடமிருந்து அவளுடைய கணவர் எதிர்பார்த்துக் கொண்டிருந்த பணத்தொகையைக் கொடுக்கும்படி வற்புறுத்தினர். அதைப்பற்றி அவளுக்குத் தெரியவும்கூட இல்லை. அடுத்தபடியாக, அவளுடைய கணவர் அவளுக்காக வாங்கியிருந்த ஜெராக்ஸ் கருவிகளையும், தட்டச்சுப் பொறிகளையும் அபகரித்துக்கொண்டனர். முடிவில், அந்த வீட்டையும் அதிலிருந்த எல்லாவற்றையும் அவருடைய சகோதரர்கள் எடுத்துக்கொண்டனர். இந்த விதவையும் அவளுடைய இளம் மகளும், தங்கள் உடைகளை மட்டுமே எடுத்துக்கொண்டு வெளியேறும்படி வற்புறுத்தப்பட்டனர்.
“இருவரும் ஒரே மாம்சமாயிருப்பார்கள்”
கிறிஸ்தவ கணவர்கள் தங்கள் மனைவிகளை நேசித்து அவர்களை நம்பத்தகுந்தவர்களாகக் கருதுகிறார்கள். இத்தகைய மனிதர் இந்த வேதப்பூர்வ அறிவுரையை இருதயத்தில் ஏற்று நடக்கிறார்கள்: “புருஷர்களும் தங்கள் மனைவிகளைத் தங்கள் சொந்தச் சரீரங்களாகப் பாவித்து, அவர்களில் அன்புகூர வேண்டும்.” தேவாவியால் ஏவப்பட்ட இந்தக் கூற்றையும் இவர்கள் ஒப்புக்கொள்கிறார்கள்: “மனுஷன் தன் தகப்பனையும் தன் தாயையும் விட்டு, தன் மனைவியுடன் இசைந்து, இருவரும் ஒரே மாம்சமாயிருப்பார்கள்.”—எபேசியர் 5:28, 31.
பின்வருமாறு எழுதின கிறிஸ்தவ அப்போஸ்தலனாகிய பவுல் சொன்னதை, தேவபக்தியுள்ள கணவர்கள் ஒத்துக்கொள்கிறார்கள்: “ஒருவன் தன் சொந்த ஜனங்களையும், விசேஷமாகத் தன் வீட்டாரையும் பராமரியாமற்போனால், அவன் விசுவாசத்தை மறுதலித்தவன், அவிசுவாசியிலுங் கெட்டவன்.” (1 தீமோத்தேயு 5:8, தி.மொ.) இந்த நியமத்திற்கு இசைவாக, கிறிஸ்தவ கணவர் ஒருவர், தொலைதூர பயணம் ஒன்றைத் திட்டமிட்டால், தான் வீட்டில் இராதபோது தன் குடும்பத்தார் ஆதரிக்கப்பட்டு வருவதை நிச்சயப்படுத்திக்கொள்வார். அதைப்போலவே, தனக்கு மரணம் ஏற்படுமானால், தன் மனைவிக்கும் பிள்ளைகளுக்கும் அவர் பொருளாதார முன்னேற்பாடுகளைச் செய்வது நியாயமானதல்லவா? எதிர்பாராத விபத்துக்காக ஆயத்தம் செய்வது நடைமுறைக்குரியது மட்டுமல்லாமல் அன்புக்குரியதாகவும் இருக்கிறது.
சவ அடக்க பழக்கவழக்கங்கள்
இந்தக் காரியத்தில் கிறிஸ்தவ கணவர்கள் கவனிக்க வேண்டிய மற்றொரு அம்சமும் இருக்கிறது. தன் மணத்துணைவரையும், உடைமைகளையும், ஒருவேளை தன் பிள்ளைகளையும்கூட இழந்ததன்பேரில் ஒரு விதவைக்கு உண்டாயிருக்கும் துயரத்தோடு மேலும் கூட்டுவதாக, பாரம்பரிய துக்கங்கொண்டாடும் சடங்காச்சாரங்களை நிறைவேற்றும்படியும் சில சமுதாயங்கள் அவளை வற்புறுத்துகின்றன. சில இடங்களில், ஒரு விதவை, தன் கணவனின் சடலம் கிடத்தியிருக்கும் விளக்கேற்றப்படாத அதே இருண்ட அறையில் தூங்கும்படி, பாரம்பரியம் தேவைப்படுத்துகிறதென, நைஜீரியாவின் த கார்டியன் செய்தித்தாள் வருத்தம் தெரிவிக்கிறது. வேறு இடங்களில், ஏறக்குறைய ஆறு மாதங்கள் நீடிக்கும் துக்கங்கொண்டாடும் காலமளவும், விதவைகள் தங்கள் வீடுகளைவிட்டு வெளியே செல்ல அனுமதிக்கப்படுகிறதில்லை. இந்தக் காலப்பகுதியின்போது, அவர்கள் குளிக்கக்கூடாது; சாப்பாட்டுக்கு முன்பும் பின்பும் கைகளைக் கழுவவும்கூட அனுமதிக்கப்படுகிறதில்லை.
இத்தகைய பழக்கவழக்கங்கள், முக்கியமாய் கிறிஸ்தவ விதவைகளுக்கு, பிரச்சினைகளை அளிக்கின்றன. கடவுளைப் பிரியப்படுத்தும்படியான அவர்களுடைய ஆவல், பைபிளின் போதகங்களுக்கு ஒத்திராத பழக்கவழக்கங்களைத் தவிர்க்கும்படி அவர்களைச் செய்விக்கிறது. (2 கொரிந்தியர் 6:14, 17) எனினும், இவற்றிற்கு உடன்படாததற்காக, ஒரு விதவை துன்புறுத்துதலை அனுபவிக்கக்கூடும். தன் உயிர் தப்புவதற்காக அவள் ஓடிப்போகவும் வேண்டியதாக இருக்கலாம்.
சட்ட நடவடிக்கைகள் எடுப்பது
பைபிள் ஞானமாய் இவ்வாறு சொல்கிறது: “ஊக்கந்தளராதவனின் திட்டங்கள் நிச்சயமாகவே அனுகூலத்திற்கு உகந்தவை.” (நீதிமொழிகள் 21:5, NW) குடும்பத் தலைவர் என்ன திட்டமிடலாம்? ஒருவருக்கு மரணம் நேரிட்டால், அவருடைய உடைமை எவ்வாறு பகிர்ந்துகொடுக்கப்பட வேண்டுமென்பதைத் தெரிவிக்கிற உயில் எழுதுவது அல்லது ஒரு பத்திரத்தைத் தயார் செய்வது, பெரும்பான்மையான சமுதாயங்களில் சாத்தியமாக இருக்கிறது. சவ அடக்க ஏற்பாடுகளைப் பற்றிய விவரங்கள் அதில் உட்பட்டிருக்கலாம். சவ அடக்க மற்றும் துக்கம்கொண்டாடும் பழக்கவழக்கங்கள் சம்பந்தமாக மணத்துணை என்ன செய்ய வேண்டும் (அல்லது செய்யக்கூடாது) என்பதும் அதில் திட்டவட்டமாகக் குறிப்பிடப்படலாம்.
லீயா என்ற பெயருள்ள பெண், 1992-ல் தன் கணவரை மரணத்தில் இழந்துவிட்டாள். அவள் சொல்வதாவது: “எனக்கு ஐந்து பிள்ளைகள்—நான்கு பையன்களும் ஒரு பெண்ணும்—இருக்கிறார்கள். என் கணவர் மரிப்பதற்கு முன்பாக சிறிது காலம் நோயுற்றிருந்தார். ஆனால், தான் நோயுறுவதற்கு முன்பாகவே, அவர் ஓர் உயில் எழுதி, தன் உடைமைகள் எல்லாம் எனக்கும் எங்கள் பிள்ளைகளுக்கும் போய்ச்சேர வேண்டும் என்று குறிப்பிட்டார். இதில் இன்சூரன்ஸ் பணமும், பண்ணை நிலமும், பண்ணை விலங்குகளும், ஒரு வீடும் அடங்கியிருந்தன. அந்த உயிலில் அவர் கையெழுத்திட்டு என்னிடம் கொடுத்தார். . . . என் கணவரின் மரணத்திற்குப்பின், அவருடைய உடைமையில் ஒரு பங்கு வேண்டுமென்று உறவினர் கேட்டனர். என் கணவர் அந்தப் பண்ணை நிலத்தைத் தன் சொந்த பணத்தைக்கொண்டு வாங்கினார் என்பதையும், எதையும் கேட்க அவர்களுக்கு உரிமை இல்லை என்பதையும் குறிப்பிட்டுக் காட்டினேன். எழுதப்பட்ட அந்த உயிலை அவர்கள் கண்டபோது, அதை ஏற்றுக்கொண்டார்கள்.”
குடும்பத்துடன் விவகாரங்களைக் கலந்தாலோசித்தல்
ஒருவர், தன் நம்பிக்கைகளையும் விருப்பங்களையும் பற்றி தன் குடும்பத்தினரிடம் பேசுகிறதில்லை என்றால், பிரச்சினைகள் எழும்பலாம். ஒரு மனிதரின் சவ அடக்கம் சம்பந்தமாக நடந்ததைக் கவனியுங்கள்; அவருடைய சவ அடக்கம் அந்தக் கிராமத்தில், அவ்விடத்து பழக்கவழக்கத்தின்படி நடைபெற வேண்டும் என்று அவருடைய உறவினர்கள் வற்புறுத்தினர். மரித்தவருடைய விதவையும் அவளுடைய பிள்ளைகளும் கொல்லப்படுவரென பயமுறுத்தப்பட்டபோது, அவர்கள் அவருடைய உடலை உறவினரிடம் விட்டுச் செல்லும் இக்கட்டான நிலைமைக்குள்ளானார்கள். அவள் இவ்வாறு வருந்துகிறாள்: “என் கணவர், தான் எவ்வாறு அடக்கம் செய்யப்பட வேண்டும் என்பதைத் தன் மாமாக்களில் அல்லது அவர்களுடைய பிள்ளைகளில் ஒருவரிடமாவது சொல்லியிருந்தால், அந்தக் குடும்பத்தினர் தங்கள் பாரம்பரிய சவ அடக்க பழக்கவழக்கங்களை வற்புறுத்தியிருக்க மாட்டார்கள்.”
சில சமுதாயங்களில், வாய்மொழி ஒப்பந்தம், எழுதப்பட்ட ஆவணத்தைப்போல் அவ்வளவு உறுதிப்பட்டதாக இருக்கிறது. ஸ்வாஸிலாந்தின் பகுதிகளில் இந்த நிலைமை இருக்கிறது. அங்கு, பாரம்பரிய சவ அடக்கத்தையும் துக்கம்கொண்டாடும் பழக்கவழக்கங்களையும் ஊக்குவிக்கும் நம்பிக்கை உடையோர் பலர் இருக்கின்றனர். இதை அறிந்தவராய், ஐசக் என்ற பெயருடைய ஒரு கிறிஸ்தவ மனிதர், யெகோவாவின் சாட்சிகளாக இராத தன் உறவினர்களைக் கூடிவரும்படி அழைத்து, தன் மரணத்திற்குப்பின் தனக்கு என்ன செய்யப்படவேண்டுமென்று தான் விரும்புவதைக் கலந்து பேசினார். திட்டவட்டமாக எந்தப் பொருளுடைமைகளை எவர் பெறவேண்டும் என்பதை அவர்களிடம் சொன்னார்; தன் சவ அடக்கம் எவ்வாறு நடத்தப்பட வேண்டும் என்பதையும் தெளிவாக விளக்கினார். அவர் மரித்த பின்பு, அவருடைய விருப்பங்களின்படியே காரியங்கள் நடைபெற்றன. ஐசக் கிறிஸ்தவ முறையில் அடக்கம் செய்யப்பட்டார், அவருடைய மனைவியும் நன்றாகக் கவனிக்கப்பட்டாள்.
உங்கள் குடும்பத்தைப் பாதுகாத்துக்கொள்ளுங்கள்
உங்களுக்கு மரணம் நேரிடும் சந்தர்ப்பத்தில் உங்கள் குடும்பம் பாதுகாக்கப்படுவதற்கு நீங்கள் என்ன செய்வீர்கள் என்பது அவரவருடைய சொந்த விஷயம், ஆனால் எட்வர்ட் என்ற பெயருள்ள ஒரு கிறிஸ்தவர் இவ்வாறு சொல்கிறார்: “என் குடும்பத்தின் எட்டு உறுப்பினருக்கு நன்மை பயக்கும்படியான ஆயுள் காப்பீடு (லைஃப் இன்சூரன்ஸ்) எனக்கு இருக்கிறது. என் வங்கி கணக்கிற்கு என் மனைவியையே நான் நியமித்திருக்கிறேன். ஆகையால் நான் மரித்தால், அந்த வங்கி கணக்கிலிருந்து அவள் பணம் எடுத்துக்கொள்ளலாம். . . . என் குடும்பத்திற்கு நன்மை பயக்கும்படி ஓர் உயிலையும் தயார் செய்து வைத்திருக்கிறேன். மரித்தால், நான் விட்டுச் செல்லும் எல்லாம் என் மனைவிக்கும் பிள்ளைகளுக்கும் உரியவையாக இருக்கும். என் உயிலை ஐந்து ஆண்டுகளுக்கு முன்பாக எழுதினேன். வழக்குரைஞர் ஒருவரால் அது தயார் செய்யப்பட்டது, என் மனைவியும் மகனும் ஒரு பிரதியை வைத்திருக்கிறார்கள். என் சவ அடக்கத்தைப்பற்றிய தீர்மானங்களில் என் உறவினர் தலையிடக்கூடாது என்று உயிலில் திட்டவட்டமாகக் குறிப்பிட்டிருக்கிறேன். நான் யெகோவாவின் அமைப்பைச் சேர்ந்தவன். ஆகையால், என் சவ அடக்கத்தை நடத்துவதற்கு ஒன்று அல்லது இரண்டு சாட்சிகள் மாத்திரமே அங்கு இருந்தாலும், அது போதுமானது. இதை என் உறவினரிடம் நான் கலந்து பேசியிருக்கிறேன்.”
ஒரு கருத்தில், இப்படி திட்டமிடுவது உங்கள் குடும்பத்திற்கு ஒரு நன்கொடையாக இருக்கிறது. நிச்சயமாகவே, மரணம் ஏற்படக்கூடும் என்பதற்காக செய்யும் ஏற்பாடு சாக்லெட்டுகளோ பூச்செண்டுகளோ பரிசாக அளிப்பதைப்போல் இல்லை. எனினும், அது உங்களுடைய அன்பைத் தெரிவிக்கிறது. உங்கள் குடும்பத்துடன் நீங்கள் அதற்குமேலும் இராதபோதிலும்கூட, உங்கள் ‘வீட்டாரைப் பராமரிக்க’ விரும்புகிறீர்கள் என்று இது நிரூபிக்கிறது.
[பக்கம் 21-ன் பெட்டி/படம்]
இயேசு தம் தாயாரின் பராமரிப்புக்காக ஏற்பாடு செய்தார்
“இயேசுவினுடைய சிலுவையின் [“வாதனையின் கழுமரத்தின்,” NW] பக்கத்தில் அவர் தாயாரும் அவர் தாயாரின் சகோதரியும் கிலோப்பாவின் மரியாளும் மகதலேனா மரியாளும் நின்றுகொண்டிருந்தார்கள். அப்பொழுது இயேசு தமது தாயாரையும் தாம் அன்புகூர்ந்த சீஷனையுங் கண்டார். சீஷனை அவள் பக்கத்தில் நிற்கக்கண்டு தாயாரிடம்: அம்மா, அதோ, உன் மகன் என்றார். பின்பு சீஷனிடம்: அதோ, உன் தாய் என்றார். அந்நேரமுதல் அந்தச் சீஷன் [யோவான்] அவளைத் தன் வீட்டிலே ஏற்றுக்கொண்டான்.”—யோவான் 19:25-27, தி.மொ.
[பக்கம் 22-ன் படம்]
கிறிஸ்தவர்கள் பலர், தங்கள் குடும்பங்களைப் பாதுகாப்பதற்கு முன்னாலோசனையுடன் சட்டப்பூர்வ ஏற்பாடுகளைச் செய்கின்றனர்