இது புகழ்ச்சியா முகஸ்துதியா?
ஒருவர் உங்களிடம் இவ்வாறு சொல்கிறார், “உங்கள் புதிய முடியலங்காரம் உங்களுக்கு மிக பிரமாதமாக இருக்கிறது!” இது புகழ்ச்சியா அல்லது முகஸ்துதியா? “அந்த உடை உங்களுக்கு ரொம்ப கச்சிதமாக இருக்கிறது!” புகழ்ச்சியா அல்லது முகஸ்துதியா? “நான் சாப்பிட்டதிலேயே ரொம்ப பிரமாதமான சாப்பாடு இதுதான்!” இது புகழ்ச்சியா அல்லது முகஸ்துதியா? இத்தகைய பாராட்டுகளை நாம் பெறுகையில், அவை உண்மையில் உள்ளப்பூர்வமானவையும் மெய்யானவையுமா, அல்லது சொல்பவர் உண்மையிலேயே அவ்வாறு உணராமல், வெறுமனே நம்மைப் பிரியப்படுத்துவதற்காக அவ்விதம் சொன்னாரா என்று நாம் சிந்திக்கக்கூடும்.
ஒருவர் நம்மிடம் சொல்வது புகழ்ச்சியா அல்லது முகஸ்துதியா என்பதை நாம் எவ்வாறு அறிந்துகொள்ளலாம்? இது முக்கியமானதா? சொல்லப்படுவதன் மேலோட்டமான கருத்தை நாம் அப்படியே நம்பி, அது நமக்கு அளிக்கும் இன்பத்தில் திளைக்கலாமா? மற்றவர்களை நாம் புகழ்வதைப் பற்றியதென்ன? நம்முடைய உள்நோக்கங்களை நாம் எப்போதாவது சோதித்துப் பார்த்திருக்கிறோமா? இந்தக் கேள்விகளை சிந்திப்பது, பகுத்தறிகிறவர்களாக இருக்கவும், யெகோவா தேவனுக்குத் துதியைக் கொண்டுவரும் வகையில் நம் நாவைப் பயன்படுத்தவும் நமக்கு உதவிசெய்யலாம்.
புகழ்ச்சியையும் முகஸ்துதியையும் வரையறுத்தல்
புகழ்ச்சி, அங்கீகாரம் அல்லது பாராட்டின் ஒருவகை தெரிவிப்பே எனவும், அந்தச் சொல், வணக்கத்தை அல்லது மகிமை செலுத்துவதையும்கூட குறிக்கலாம் எனவும் உவெப்ஸ்டர்ஸ் டிக்ஷ்னரி வரையறுக்கிறது. பிற்பட்ட இரண்டு அர்த்தங்களும் யெகோவா தேவனுக்குச் செலுத்தப்படுகிற துதியை மாத்திரமே குறிப்பிடுகின்றன என்பது தெளிவாயுள்ளது. இது, தேவாவியால் ஏவப்பட்ட சங்கீதக்காரன் அறிவுரை கூறுகிறபடி, உண்மையான வணக்கத்தின் ஒரு பாகமாகவே உள்ளது: “அது நல்லது . . . , அது இனிமையானது—துதித்தலே தகுந்தது.” “சுவாசமுள்ள யாவும் யெகோவாவைத் துதிப்பதாக.”—சங்கீதம் 147:1; 150:6; NW.
எனினும், மனிதன் புகழ்ச்சிக்கு பாத்திரமானவன் அல்ல என இது அர்த்தப்படுகிறதில்லை. பாராட்டுதல், அங்கீகாரம் அளித்தல், அல்லது நல்லாதரவான தீர்ப்பு செய்தல் போன்ற கருத்தில் அதைச் செய்யலாம். இயேசு சொன்ன ஓர் உவமையில், ஓர் எஜமான் தன் ஊழியக்காரனிடம் இவ்வாறு சொல்கிறார்: “நல்லது, உத்தமமும் உண்மையுமுள்ள ஊழியக்காரனே”!—மத்தேயு 25:21.
மறுபட்சத்தில், முகஸ்துதி செய்தல், பொய்யான, மாய்மாலமான, அல்லது மிதமீறிய புகழ்ச்சி எனவும், இதில் முகஸ்துதி செய்பவன் வழக்கமாய்த் தன்னல அக்கறைக்குரிய உள்நோக்கத்தை உடையவனாக இருக்கிறான் எனவும் வரையறுக்கப்படுகிறது. மற்றொருவரிடமிருந்து சலுகையை அல்லது பொருளாதார ஆதாயத்தை அடைவதற்கு, அல்லது முகஸ்துதி செய்பவனிடமாக கடமையுணர்ச்சியை உண்டாக்குவதற்கு தந்திரமான பாராட்டு அல்லது முகப்புகழ்ச்சி செய்யப்படுகிறது. ஆகையால், முகஸ்துதி செய்பவர்கள் தன்னல நோக்கத்தால் தூண்டப்படுகிறார்கள். யூதா 16-ன்படி, இவர்கள், “அதில் ஏதேனும் அனுகூலத்தைக் காண்கையில், மற்றவர்களுக்கு முகஸ்துதி செய்வதற்கு ஆயத்தமாக இருக்கிறார்கள்.”—த ஜெரூசலம் பைபிள்.
வேதப்பூர்வமான கருத்து
உடன் மனிதரைப் புகழ்வதைப் பற்றிய வேதப்பூர்வமான கருத்து என்ன? இவ்விஷயத்தில் யெகோவா, நாம் பின்பற்றுவதற்கு ஒரு முன்மாதிரியை வைக்கிறார். நாம் யெகோவாவின் சித்தத்தைச் செய்தால் புகழப்படுவோம் என்று பைபிளில் சொல்லப்படுகிறோம். “அவனவனுக்குரிய புகழ்ச்சி தேவனால் உண்டாகும்” என்று அப்போஸ்தலன் பவுல் சொல்கிறார். நம்முடைய விசுவாசத்தின் பரிட்சிக்கப்பட்ட தன்மை, ‘புகழ்ச்சிக்கு ஏதுவாகக் காணப்படலாம்’ என்று பேதுரு நமக்குச் சொல்கிறார். ஆகையால், மனிதரை யெகோவா புகழுவார் என்ற உண்மையானது, மெய்யான புகழ்ச்சி, தயவான, அன்பான, பயனுள்ள செயலாக இருக்கிறது என்றும், அசட்டை செய்யக்கூடாத ஒன்றாக உள்ளது என்றும் நமக்குக் காட்டுகிறது.—1 கொரிந்தியர் 4:5; 1 பேதுரு 1:7, NW.
நம்முடைய நல்நடத்தையைக் கவனித்து, நேர்மையுடன் நம்மைப் புகழும் அரசாங்க அதிகாரிகள், பைபிளின் பிரகாரம், நமக்குப் புகழ்ச்சி ஏற்படும் மற்றொரு மூலகாரணமாக இருக்கிறார்கள். தொடர்ந்து “நன்மைசெய், அதினால் உனக்குப் புகழ்ச்சி உண்டாகும்” என்று நமக்குச் சொல்லப்படுகிறது. (ரோமர் 13:3) தாங்கள் சொல்வதை மனதார நம்புகிறவர்களிடமிருந்தும், நம்மைப் புகழ்வதில் உள்நோக்கம் எதுவும் இல்லாதவர்களிடமிருந்தும்கூட நாம் புகழ்ச்சியைப் பெறலாம். தேவாவியால் ஏவப்பட்ட வேதவசனங்கள், நீதிமொழிகள் 27:2-ல் இவ்வாறு சொல்கின்றன: “உன் வாய் அல்ல, புறத்தியானே உன்னைப் புகழட்டும்.” மனிதரிடமிருந்து வரும் புகழை ஏற்பது தகுந்ததே என இது காட்டுகிறது.
முகஸ்துதி செய்வதை அல்லது பெற்றுக்கொள்வதைக் குறித்ததில் அவ்வாறு இல்லை. முகஸ்துதியானப் பேச்சு ஏன் யெகோவாவுக்கு அந்தளவு வெறுப்பானதாக இருக்கிறது? ஒரு காரணம் அது மாய்மாலமானது, மாய்மாலத்தை யெகோவா கண்டனம் செய்கிறார். (நீதிமொழிகள் 23:6, 7-ஐ ஒப்பிடுக.) மேலும், அது நேர்மையானதல்ல. கடவுளுடைய அங்கீகாரத்தைப் பெற முடியாதவர்களை விவரித்து சங்கீதக்காரன் இவ்வாறு சொல்கிறார்: “அவரவர் தங்கள் தோழரோடே பொய்பேசுகிறார்கள்; இச்சக உதடுகளால் இருமனதாய்ப் பேசுகிறார்கள். இச்சகம்பேசுகிற எல்லா உதடுகளையும், . . . கர்த்தர் [“யெகோவா,” NW] அறுத்துப்போடுவார்.”—சங்கீதம் 12:2, 3.
எல்லாவற்றிற்கும் மேலாக, முகஸ்துதி அன்பற்றதாக இருக்கிறது. அது தன்னல நோக்கத்தால் தூண்டப்படுகிறது. முகஸ்துதி பேசுவோரைப் பற்றி குறிப்பிட்ட பின், சங்கீதக்காரனாகிய தாவீது அவர்கள் சொல்வதை இவ்வாறு எடுத்துக் கூறுகிறார்: “எங்கள் நாவின் வலிமையால் எல்லாரையும் வெல்லுவோம், எங்கள் உதடுகள் எங்களுடையவைகளே, எங்களுக்கு எஜமானன் யார்”? ‘சிறுமையானவர்களைக் கொள்ளையிடுவோர்’ என இத்தகைய சுயநலக்காரரை யெகோவா விவரிக்கிறார். அவர்களுடைய முகஸ்துதி பேசும் நாவுகள், மற்றவர்களை உற்சாகப்படுத்துவதற்கு அல்ல, அவர்களைக் கொள்ளையிடுவதற்கும் துன்பப்படுத்துவதற்குமே பயன்படுத்தப்படுகின்றன.—சங்கீதம் 12:4, 5, தி.மொ.
முகஸ்துதி—ஒரு பொறி
“பிறனை முகஸ்துதி செய்கிறவன், அவன் கால்களுக்கு வலையை விரிக்கிறான்.” ஞானியாகிய சாலொமோன் அரசன் இவ்வாறே சொல்கிறார்; இது எவ்வளவு உண்மையாக இருக்கிறது! (நீதிமொழிகள் 29:5) முகஸ்துதியால் இயேசுவுக்கு ஒரு வலையை விரிக்க பரிசேயர்கள் முயன்றனர். அவர்கள் இவ்வாறு சொன்னார்கள்: “போதகரே, நீர் சத்தியமுள்ளவரென்றும், தேவனுடைய மார்க்கத்தைச் சத்தியமாய்ப் போதிக்கிறவரென்றும், நீர் முகதாட்சிணியம் இல்லாதவராகையால் எவனைக்குறித்தும் உமக்குக் கவலையில்லையென்றும் அறிந்திருக்கிறோம்.” அது எவ்வளவாய்த் தீங்கற்றதாகத் தொனித்தது! ஆனால், அவர்களுடைய நயமான பேச்சில் இயேசு மயங்கிவிடவில்லை. தம்முடைய சத்தியமுள்ள போதகத்தை அவர்கள் நம்பவில்லை என்றும், இராயனுக்கு வரி செலுத்தும் விஷயத்தில் தம் வார்த்தைகளினால் தம்மைப் பொறியில் அகப்படுத்தவே அவர்கள் முயன்றனர் என்றும் அவர் அறிந்திருந்தார்.—மத்தேயு 22:15-22.
முதல் நூற்றாண்டு அரசன் ஏரோது இயேசுவுக்கு நேர்மாறாக இருந்தான். செசரியா பட்டணத்தில் அவன் ஒரு பொதுப் பேச்சைக் கொடுத்தபோது, அந்த ஜனங்கள்: “இது மனுஷசத்தமல்ல, இது தேவசத்தம்” என்று ஆர்ப்பரித்தார்கள். அத்தகைய பொய்ப் புகழ்ச்சியை ஆர்ப்பரிக்காதபடி ஜனங்களைத் தடுப்பதற்குப் பதிலாக, ஏரோது அந்த முகஸ்துதியை ஏற்றான். யெகோவாவின் தூதன் உடனடியாக தண்டனையை அளித்தார், ஏரோது புழுப்புழுத்து, அதன் விளைவாக இறந்தான்.—அப்போஸ்தலர் 12:21-23.
எதற்காக முகஸ்துதி செய்யப்படுகிறது என்பதை உணர்ந்துகொள்வதற்கு முதிர்ச்சியுள்ள ஒரு கிறிஸ்தவர் எச்சரிக்கையாக இருப்பார். நியாய விசாரணையில் உட்பட்டிருக்கும் ஒருவர், அதிக புகழாரங்களை சூட்டுகையில், ஒருவேளை ஒரு மூப்பரை மற்றொருவருடன் ஒப்பிட்டு, அவர் அந்த மற்ற மூப்பரைப் பார்க்கிலும் எவ்வளவு தயவாயும் மற்றவர் நிலையில் தன்னை வைத்துக் காண்பவராயும் இருக்கிறார் என்று சொல்லும் அளவுக்கும் செல்கையில் முக்கியமாய்ச் சபை மூப்பர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
ஒரு வாலிபன், ஒழுக்கக்கேட்டு நடத்தைக்கு உட்படும்படி எவ்வாறு ஒரு வேசியால் வசீகரிக்கப்படுகிறான் என்பதை பைபிள் விவரிக்கையில், முகஸ்துதியால் உண்டாகக்கூடிய மற்றொரு ஆபத்தையும் அது தெளிவாகக் காட்டுகிறது. (நீதிமொழிகள் 7:4, 21) இந்த எச்சரிக்கை, இன்றைய நிலைமைக்குப் பொருத்தமாக இருக்கிறது. ஒவ்வொரு ஆண்டிலும் கிறிஸ்தவ சபையிலிருந்து நீக்கப்படுவோரில், பலர் ஒழுக்கங்கெட்ட நடத்தையின் நிமித்தமாக நீக்கப்படுகின்றனர். இத்தகைய பெரும் பாவத்திற்குள் வீழ்வது முகஸ்துதியால் தொடங்கியிருக்கலாமா? பாராட்டுகளையும், நல்ல முறையில் பேசப்படுவதையும் மனிதர்கள் அவ்வளவு அதிகமாக விரும்புவதனால், முகஸ்துதி பேசும் உதடுகளிலிருந்து வரும் நயவஞ்சகமான பேச்சு, தகாத நடத்தைக்கு ஒரு கிறிஸ்தவன் காட்டும் எதிர்ப்பை ஓரளவு குறைக்கக்கூடும். இத்தகைய நயவஞ்சகமான பேச்சுக்கும் பாராட்டுக்கும் எதிராக எச்சரிக்கையாய் இராவிட்டால், வினைமையான விளைவுகளுக்கு அது வழிநடத்தலாம்.
முகஸ்துதிக்கு எதிராக பாதுகாப்பு நடவடிக்கைகள்
முகஸ்துதியானது, முகஸ்துதி செய்யப்படுவோரின் சுயபற்றை அல்லது தற்பெருமையை திருப்தி செய்கிறது. ஒருவருக்கு அவருடைய சொந்த தகுதியைப் பற்றி மிதமீறிய நோக்கை அளிக்கும் பாங்குடையதாக, ஏதோ ஒரு வகையில் மற்றவர்களைவிட தான் மேம்பட்டவர் என்று உணரும்படி செய்விக்கிறது. தத்துவ ஞானியாகிய ஃபிரான்ஸ்வா டி லா ராஸ்பூகோல்ட், முகஸ்துதியை கள்ள நோட்டுகளுக்கு ஒப்பிட்டார்; “அவை போலித் தோற்றத்தை தருமே அல்லாமல், மற்றபடி பயன்படாது.” இவ்வாறு, ஒருவர் தன்னைப் பாதுகாத்துக்கொள்வதற்கான வழியானது, அப்போஸ்தலன் பவுலின் நடைமுறையான அறிவுரைக்குச் செவிகொடுப்பதேயாகும்: “நான் சொல்லுகிறதாவது; உங்களில் எவனானாலும் தன்னைக்குறித்து எண்ணவேண்டியதற்கு மிஞ்சி எண்ணாமல், அவனவனுக்கு தேவன் பகிர்ந்த விசுவாச அளவின்படியே, தெளிந்த எண்ணமுள்ளவனாய் எண்ணவேண்டும்.”—ரோமர் 12:3.
காதுக்கு இனியவற்றையே கேட்கும்படி விரும்புவது நம்முடைய இயல்பான மனப்போக்காக இருக்கிறபோதிலும், பெரும்பான்மையான சமயத்தில் நமக்கு உண்மையில் தேவைப்படுவது, பைபிளில் ஆதாரமுடைய அறிவுரையும் சிட்சையுமே. (நீதிமொழிகள் 16:25) அரசனாகிய ஆகாப், தனக்குப் பிரியமானதை மாத்திரமே கேட்பதற்கு விரும்பினான்; அவனுடைய ஊழியர்கள் தீர்க்கதரிசியாகிய மிகாயாவிடம்: “உம்முடைய வார்த்தையும் அவர்களில் [ஆகாபின் முகஸ்துதி செய்யும் தீர்க்கதரிசிகளில்] ஒருவர் வார்த்தையைப்போல இருக்கும்படி நன்மையாகச் சொல்லும்” என்றுங்கூட கேட்டார்கள். (1 இராஜாக்கள் 22:13) நேர்மையான பேச்சுக்குச் செவிகொடுக்க ஆகாப் மனமுள்ளவனாக இருந்து, தன் கலகத்தனமான வழிகளை விட்டு மாறியிருந்தால், இஸ்ரவேலுக்கு உண்டான அந்தப் பயங்கர போர் நாசங்களையும், தன் சொந்த மரணத்தையும்கூட தடுத்திருக்கலாம். நாம் எவ்வளவு பிரமாதமானவர்கள், என்று தொடர்ந்து சொல்லிக்கொண்டு, முகஸ்துதியான பேச்சால் நம்முடைய செவிகளை குளிரச்செய்யும் ஆட்களைத் தேடிச்செல்வதற்கு மாறாக, சத்தியத்தின் நேர்மையான பாதையில் நிலைத்திருக்கும்படி நமக்கு உதவிசெய்ய விரும்புகிற, நியமிக்கப்பட்ட கிறிஸ்தவ மூப்பர்களின் உறுதியான எனினும் அன்பான அறிவுரையை, நம் சொந்த ஆவிக்குரிய நலனுக்காக, நாம் விரைவில் ஏற்று செயல்பட வேண்டும்!—2 தீமோத்தேயு 4:3-ஐ ஒப்பிடுக.
கிறிஸ்தவர்கள், எந்தக் காரணத்தின் நிமித்தமாகவும், முகஸ்துதியை நாட ஒருபோதும் விரும்பமாட்டார்கள். உண்மையுள்ள எலிகூவைப்போல், அவர்கள் திடதீர்மானத்துடன் இவ்வாறு ஜெபிக்கிறார்கள்: “நான் ஒருவனுடைய முகத்தைப்பாராமலும், ஒரு மனுஷனுக்கும் இச்சகம் [“முகஸ்துதி,” NW] பேசாமலும் இருப்பேனாக. நான் இச்சகம் பேச அறியேன்; பேசினால் என்னை உண்டாக்கினவர் சீக்கிரமாய் என்னை எடுத்துக்கொள்வார்.” அப்போது, பவுலைப்போல் அவர்கள் இவ்வாறு சொல்ல முடியும்: “நாங்கள் ஒருக்காலும் முகஸ்துதி பேசுகிறவர்களாய் வரவில்லை, . . . பொருளாசையுள்ளவர்களாய் மாயம் பண்ணவுமில்லை.”—யோபு 32:21, 22; 1 தெசலோனிக்கேயர் 2:5, 6, தி.மொ.
புகழ்ச்சி அவசியமாக இருக்கையில்
புகழ்ச்சி உரைகல்லைப்போல் செயல்படுவதை தேவாவியால் ஏவப்பட்ட நீதிமொழி காட்டுகிறது. அது இவ்வாறு சொல்கிறது: “வெள்ளிக்குக் குகையும், பொன்னுக்குப் புடமும் சோதனை; மனுஷனுக்கு அவனுக்கு உண்டாகும் புகழ்ச்சியே சோதனை.” (நீதிமொழிகள் 27:21) ஆம், புகழ்ச்சியானது, மேம்பட்டநிலை அல்லது தற்பெருமையின் உணர்ச்சிகளைப் பெருகச் செய்து, ஒருவரின் வீழ்ச்சிக்கு வழிநடத்தலாம். மறுபட்சத்தில், தான் செய்த செயல் ஏதாவது தனக்குப் புகழைத் தந்திருக்கிறதென்றால் அதற்காக யெகோவாவுக்கே நன்றி செலுத்த தான் கடமைப்பட்டிருப்பதை அவர் ஒப்புக்கொண்டால், அது அவருடைய பணிவான தன்மையையும் மனத்தாழ்மையையும் வெளிப்படுத்தலாம்.
தகுதியான நடத்தைக்கான அல்லது நிறைவேற்றங்களுக்கான உள்ளப்பூர்வமான புகழ்ச்சி, அதை அளிப்பவரும் பெறுபவருமான இருவரையுமே கட்டியெழுப்புகிறது. ஒருவருக்கொருவர், மனமார்ந்த நற்பயனளிக்கிற மதித்துணர்வுக்கு இடமளிக்கிறது. புகழத்தகுந்த இலக்குகளை அடைய முயற்சி செய்யும்படி ஊக்குவிக்கிறது. இளைஞருக்கு அளிக்கப்படும் தகுதியுள்ள புகழ்ச்சி, மேலும் கடினமாக உழைக்கும்படி அவர்களை தூண்டுகிறது. தங்களிடம் எதிர்பார்க்கப்படும் தராதரங்களின்படி வாழ்வதை இலக்காக வைத்து அவர்கள் பிரயாசப்படுகையில் அவர்களுடைய நடத்தையைத் தக்கவாறு மாற்றியமைக்க அது உதவிசெய்யலாம்.
ஆகையால், முகஸ்துதி செய்வதோ பெறுவதோ எதுவாக இருந்தாலும் சரி அதை நாம் தவிர்ப்போமாக. புகழப்படுகையில் நாம் மனத்தாழ்மையுடன் இருப்போமாக. நம்முடைய வணக்கத்தில் யெகோவாவைத் தவறாமல் புகழுவதிலும், உகந்த பாராட்டுதலும் மதித்துணருதலுமான உருவில் உள்ளப்பூர்வமாய் மற்றவர்களைப் புகழுவதிலும், நாம் தாராளமானவர்களாயும் முழு ஆத்துமாவோடும் இருப்போமாக. “ஏற்ற காலத்தில் சொன்ன வார்த்தை எவ்வளவு நல்லது!” என்பதை நினைவில் வைப்போமாக.—நீதிமொழிகள் 15:23.