பெற்றோரே—உங்கள் பிள்ளைகளைப் பாதுகாத்திடுங்கள்!
நைஜீரியாவிலுள்ள ஒரு உயர்நிலைப் பள்ளியில், ஒழுக்கக்கேட்டுக்கு பேர்போன ஒரு பெண் இருந்தாள். அவளுக்கு பாலியலைப் பற்றி தன்னுடைய சக மாணவிகளுக்கு லெக்சர் அடிப்பதில் அலாதி பிரியம். கருக்கலைப்புக்கு அவள் சிபாரிசு செய்த பொருட்களில் ஒன்றுதான் புகையிலை கலவையால் தீவிரமாக போதையூட்டப்பட்ட ஸ்டௌட் பீர். ஆபாச இலக்கியங்களிலிருந்து அவள் பொருக்கியெடுத்த கதைகள், அவளுடைய சக மாணவிகளை கவர்ந்தன. சிலர் உடலுறவில் ஈடுபடத் தொடங்கினர்; அதனால் அவர்களில் ஒருத்தி கர்ப்பமானாள். கருக்கலைப்பு செய்துகொள்ள வேண்டுமென்ற முயற்சியில் அவள் ஸ்டௌட்/புகையிலை கலவையை குடித்தாள். சிலமணிநேரத்திற்குள், இரத்த வாந்தியெடுக்க ஆரம்பித்தாள். சில நாட்கள் கழித்து, மருத்துவமனையில் இறந்தாள்.
இன்றைய உலகில், அநேக இளைஞர் பாலினத்தைப் பற்றி ஓயாமல் பேசி, அதற்கு செவிகொடுக்கும் அப்பாவிகளின் வாழ்க்கையை சீரழிக்கிறார்கள். தங்களை பாதுகாக்கக்கூடிய திருத்தமான அறிவைப் பெற இளைஞர்கள் யாரை நாட வேண்டும்? பிள்ளைகளை “யெகோவாவுக்கேற்ற சிட்சையிலும் மனக்கட்டுப்பாட்டிலும்” வளர்க்கவேண்டிய பொறுப்பை உடைய தங்கள் தேவபயமுள்ள பெற்றோரை நாடிச் செல்வதே சாலச்சிறந்தது.—எபேசியர் 6:4, NW.
பாலியல் கல்வியைக் குறித்ததில் ஆப்பிரிக்கர்களின் மனநிலை
உலகம் முழுவதுமாக, பாலியலைப் பற்றி தங்கள் பிள்ளைகளிடம் பேசுவதை அநேக பெற்றோர் சங்கடமாக உணருகின்றனர். இது, ஆப்பிரிக்காவில் குறிப்பாக உண்மையாக இருக்கிறது. சியர்ரா லியோனிலுள்ள ஒரு தகப்பன் இவ்வாறு குறிப்பிடுகிறார்: “பெரும்பாலும் இந்த விஷயம் பிள்ளைங்ககிட்ட ஒருகாலும் பேசப்படாது. அப்படி செய்வது எங்க ஆப்பிரிக்க கலாச்சாரத்திலேயே இல்ல.” கான்பிடன்ட் என்ற நைஜீரியப் பெண் இவ்வாறு ஒத்துக் கொள்கிறாள்: “பாலுறவுங்கற விஷயம் வெளிப்படையா பேசக்கூடாத ஒன்னுன்னுதான் என் பெற்றோர் நெனைக்கிறாங்க; அது கலாச்சாரத்தாலேயே தடை செய்யப்பட்ட ஒரு விஷயம்.”
சில ஆப்பிரிக்க கலாச்சாரங்களில், ஆண்குறி, விந்து, மாதவிடாய் போன்ற பாலியல் தொடர்புடைய வார்த்தைகளைக் குறிப்பிடுவது இழிவானதாகக் கருதப்படுகிறது. ஒரு கிறிஸ்தவ தாய் தன் மகளை “செக்ஸ்” (பாலினம்) என்ற வார்த்தையைக்கூட உச்சரிக்கக்கூடாதென்று சொன்னார்; ஆனாலும் “வேசித்தனம்” என்ற வார்த்தையை சொல்வதை அவர் தடைசெய்யவில்லை. இதற்கு எதிர்மாறாக, கடவுளுடைய வார்த்தையாகிய பைபிள் பாலியலைப் பற்றியும் பாலின உறுப்புகளைப் பற்றியும் வெளிப்படையாகப் பேசுகிறது. (ஆதியாகமம் 17:11; 18:11; 30:16, 17; லேவியராகமம் 15:2) அதிர்ச்சியடையச் செய்வதோ கிளர்ச்சியூட்டுவதோ இதன் நோக்கமல்ல; மாறாக கடவுளுடைய மக்களை பாதுகாப்பதும் போதிப்பதுமே இதன் நோக்கம்.—2 தீமோத்தேயு 3:16, 17.
கலாச்சாரத் தடைகள் ஒருபுறமிருந்தாலும், ஏன் சில பெற்றோர் இதைப் பற்றி பேசத் தயங்குகின்றனர் என்பதற்கான மற்றொரு காரணம் நைஜீரியத் தகப்பன் ஒருவரால் இவ்வாறு சொல்லப்பட்டது: “நான் என்னுடைய பிள்ளைகளுடன் பாலியலைப் பற்றி கலந்தாலோசிப்பேனானால், அது ஒழுக்கக்கேட்டில் ஈடுபட அவர்களைத் தூண்டக்கூடும்.” ஆனால், பாலினத்தைப் பற்றிய கண்ணியமான, பைபிள் சார்ந்த தகவல்கள் பிள்ளைகளை அதில் ஈடுபடவேண்டுமென்று தூண்டுமா? இல்லை, இல்லவேயில்லை. உண்மையில், இதைப் பற்றி எந்தளவு குறைந்த அறிவை இளைஞர்கள் பெற்றிருக்கிறார்களோ, அந்தளவுக்கு அவர்கள் தொந்தரவுக்குள் விழுவதற்கான சாத்தியமும் இருக்கிறது. திருத்தமான அறிவை அடிப்படையாகக் கொண்ட “ஞானம்” ‘ஒரு கேடகம்’ என்று பைபிள் சொல்கிறது.—பிரசங்கி 7:12.
இயேசு சொன்ன ஒரு உவமையில், எதிர்காலத்தில் புயல் ஏற்படக்கூடும் என்பதை மனதில் கொண்டிருந்த புத்தியுள்ள மனிதன், தன்னுடைய வீட்டை கன்மலையின்மேல் கட்டுகிறான்; ஆனால், புத்தியில்லாத மனிதனோ மணலின் மீது கட்டி அழிவை எதிர்ப்படுகிறான். (மத்தேயு 7:24-27) அதைப் போலவே இவ்வுலகின் வரைமுறையற்ற ஒழுக்க தராதரங்களுக்கு இசைவாக நடக்கும்படியான, புயலைப் போன்ற அழுத்தங்களை பிள்ளைகள் எதிர்ப்படுவார்களென்று புத்தியுள்ள கிறிஸ்தவ பெற்றோர் அறிந்திருக்கின்றனர்; எனவே, தங்கள் பிள்ளைகள் உறுதியாக நிற்பதற்கு உதவி செய்யக்கூடிய திருத்தமான அறிவையும் புரிந்துகொள்ளுதலையும் தந்து அவர்களை பலப்படுத்துகிறார்கள்.
அநேக பெற்றோர் ஏன் தங்களுடைய பிள்ளைகளுடன் பாலினத்தைக் குறித்து கலந்து பேசுவதில்லை என்பதற்குரிய கூடுதலான காரணத்தை ஒரு ஆப்பிரிக்க பெண் இவ்வாறு கொடுக்கிறாள்: “நான் வாலிபப் பெண்ணா இருக்கும்போது, சாட்சிகளான என்னோட பெற்றோர் பாலினத்தப் பத்தி என்கிட்ட பேசினதில்ல, அதனால என் பிள்ளைங்ககிட்டேயும் இதப்பத்தி பேசனும்னு எனக்கு தோணவேயில்ல.” இருப்பினும், 10 அல்லது 20 ஆண்டுகளுக்கு முன்பிருந்த இளைஞர்களைக் காட்டிலும் இன்றுள்ள இளைஞர்களுக்கு வரும் அழுத்தங்கள் மிக அதிகம். இது ஆச்சரியத்திற்குரியதல்ல. ஏனென்றால், “கடைசிநாட்களில் . . . , பொல்லாதவர்களும் எத்தர்களுமானவர்கள் மோசம்போக்குகிறவர்களாகவும், மோசம்போகிறவர்களாகவுமிருந்து மேன்மேலும் கேடுள்ளவர்களாவார்கள்” என்று கடவுளுடைய வார்த்தை முன்னறிவித்தது.—2 தீமோத்தேயு 3:1, 13.
அநேக பிள்ளைகள் தங்கள் பெற்றோருடன் மனம்விட்டுப் பேசுவதற்கு தயங்குவதால் அல்லது முடியாமல் போவதால் இப்பிரச்சினை இன்னும் அதிகமாகிறது. சாதாரண விஷயங்களிலும்கூட பெற்றோர் பிள்ளைகளுக்கிடையே உள்ள பேச்சுத் தொடர்பு குறைவாகவே இருக்கிறது. 19 வயது வாலிபர் இவ்வாறு புலம்பினார்: “நான் என்னோட அப்பாம்மாகிட்ட எந்த விஷயத்தையும் பேச மாட்டேன். என் அப்பாக்கும் எனக்கும் நல்ல பேச்சுத்தொடர்பு கிடையாது; நான் சொல்ற எதையுமே அவர் காது குடுத்துக் கேட்கறதில்ல.”
பாலியலைப் பற்றி கேள்வி கேட்பதுதானே பாதகமான விளைவுகளைக் கொண்டுவரும் எனகருதிகூட இளைஞர்கள் பயப்படலாம். 16 வயது பெண் ஒருத்தி இவ்வாறு சொன்னாள்: “நான் பாலினப் பிரச்சினையைப் பத்தி என் பெற்றோர்கிட்ட பேசறதேயில்ல; இந்தமாதிரி விஷயங்கள கேட்டா அவங்க நடந்துக்கற விதம்தான் இதுக்கு காரணம். கொஞ்ச நாளைக்கு முந்தி என்னோட பெரியக்கா அம்மாகிட்ட பாலினம் சம்பந்தமா சில கேள்விகளை கேட்டாங்க. அவளுக்கு என்ன பிரச்சினைனு தெரிஞ்சுகிட்டு உதவி செய்யறதுக்கு பதிலா எத மனசுல வெச்சுகிட்டு கேட்டாலோனு அம்மா அவமேல சந்தேகப்பட ஆரம்பிச்சாங்க. அம்மா அடிக்கடி என்கிட்ட அவளைப் பத்தி துருவித்துருவி கேட்பாங்க; சில சமயங்கள்ல அவளோட நடத்தையைப் பத்தியும்கூட மறைமுகமா கேட்க ஆரம்பிச்சாங்க. நான் என் அம்மாவோட அன்ப இழக்க விரும்பல, அதனால என்னோட பிரச்சினைகளப் பத்தி அவங்ககிட்ட பேசறதேயில்ல.”
ஏன் போதிக்கவேண்டும்?
பாலியலைப் பற்றி நம் பிள்ளைகளுக்கு போதிய அளவுக்கு போதிப்பதானது செய்வதற்குரிய சரியான காரியம் மட்டுமல்ல, தயவான காரியமாகவும் இருக்கிறது. பாலியலைக் குறித்து பெற்றோர் பிள்ளைகளுக்கு போதிக்கவில்லையென்றால், மற்றவர்கள் அவ்வாறு செய்வார்கள்; சாதாரணமாக பெற்றோர் எதிர்பார்ப்பதற்கு முன்பாகவும், பெரும்பாலும் கடவுளுடைய நியமங்களுக்கு இசைவாக இல்லாதவற்றையுமே போதிப்பர். 13 வயது பெண்ணொருத்தி திருட்டுத்தனமாக உடலுறவு கொண்டாள்; அவள் தன் கன்னித்தன்மையை இழக்கவில்லையென்றால், எதிர்காலத்தில் பயங்கரமான வேதனையை அனுபவிப்பாள் என்பதாக அவளுடைய சகமாணவி சொன்னதால், அவ்வாறு செய்தாள். “உன்னுடைய பெண் குறியின் கன்னி சவ்வை கத்திரிக்கோலால் வெட்டுவார்கள்” என்பதாக அவளுக்கு சொல்லப்பட்டுள்ளது. தான் கேள்விப்பட்டதை ஏன் தன்னுடைய கிறிஸ்தவ தாய்க்கு சொல்லவில்லையென்று பிறகு அப்பெண்ணிடம் கேட்கப்பட்டபோது, இத்தகைய காரியங்கள் பெரியவர்களுடன் எப்போதுமே கலந்துபேசப்படாதவையென்று அவள் பதிலளித்தாள்.
நைஜீரியப் பெண் ஒருத்தி இவ்வாறு சொன்னாள்: “இயல்பா இருக்கிற எல்லா மனுஷங்களும் பாலுறவில ஈடுபடவேணும்னு சொல்லி என்னோட ஸ்கூல் நண்பர்கள் என்னை நம்பவைக்க பார்த்தாங்க. இப்ப நான் பாலுறவுல ஈடுபடலேனா 21 வயசு ஆகும்போது, என்னோட பெண்மையை நாசப்படுத்தற ஒரு குறைபாடால வேதனப்படுவேன்னு சொன்னாங்க. அதனால அத்தன பயங்கரமான காரியத்த தவிர்க்கிறதுக்கு, கல்யாணத்துக்கு முன்னாடியே பாலுறவு கொள்றதுதான் நல்லதுனும் சொன்னாங்க.”
பெற்றோர்களுடன் நல்ல பேச்சுத்தொடர்பைக் கொண்டிருந்த இப்பெண், தனக்கு வீட்டில் கற்பிக்கப்பட்டதற்கும் இதற்கும் உள்ள முரண்பாட்டை உடனடியாக புரிந்து கொண்டாள். “வழக்கம்போல நான் வீட்டுக்கு போனவுடனே அவங்க ஸ்கூல்ல என்கிட்ட சொன்னத அம்மாகிட்ட சொன்னேன்.” அவளுடைய தாய் அது பொய்யான தகவல் என்பதை அவளுக்கு புரியவைத்தாள்.—நீதிமொழிகள் 14:15-ஐ ஒப்பிடுக.
பிள்ளைகள் பாலினத்தைப் பற்றிய தெய்வீக ஞானத்தை அடைவதற்கு தேவைப்படும் அறிவைப் பெற பெற்றோர் உதவிசெய்ய வேண்டும். இவ்விதமாக ஆபத்தான சூழ்நிலைகளை புரிந்து கொள்ளவும், தங்களை சீரழிக்க நினைக்கும் ஆட்களை அடையாளம் கண்டுகொள்ளவும் பிள்ளைகளை பெற்றோர் தயார்படுத்துகின்றனர். இது பால்வினை நோய்கள், தேவையற்ற கருத்தரிப்புகள் ஆகியவற்றின் மனவேதனைகளிலிருந்து பிள்ளைகளை பாதுகாக்க உதவுகிறது. இது, பிள்ளைகளுக்கு சுயமரியாதையை அளிப்பதோடு, மற்றவர்களிடமிருந்து மரியாதை பெற்றுக்கொள்ளவும் வழிவகுக்கிறது. இது தவறான கருத்துக்களிலிருந்தும் கவலைகளிலிருந்தும் அவர்களை விடுவிக்கிறது. முறையான பாலுறவிடமாக ஆரோக்கியமான, நேர்மறையான மனநிலையை வளர்க்கவும், பிறகு மணம் செய்வார்களேயென்றால் மகிழ்ச்சியாக இருக்கவும் உதவுகிறது. கடவுளுடன் ஒரு அங்கீகரிக்கப்பட்ட நிலையை காத்துக்கொள்ள இது அவர்களுக்கு உதவலாம். தங்களுக்கு காட்டப்பட்ட அன்பான அக்கறையை பிள்ளைகள் உணரும்போது, தங்கள் பெற்றோரை மிக அதிகமாக மதிக்கவும் அன்புகாட்டவும் தூண்டப்படலாம்.
நல்ல பேச்சுத்தொடர்பு
பெற்றோர் தங்கள் பிள்ளைகளின் தேவைகளுக்கு ஏற்ப ஆலோசனை கொடுப்பதற்கு, இருவழி பேச்சுத்தொடர்பு அவசியமாயிருக்கிறது. தங்கள் பிள்ளைகளின் மனதிலும் இருதயத்திலும் என்ன இருக்கிறது என்பதை பெற்றோர் அறியாதவரை, அவர்களுடைய நல்ல ஆலோசனைகளும்கூட அவ்வளவாக பயனை தராது; இது நோயாளிக்கு எத்தகைய வியாதி இருக்கிறது என்பதை அறியாமல் மருத்துவர் மருந்தை பரிந்துரைப்பதற்கு ஒப்பாயிருக்கிறது. திறமையான ஆலோசகர்களாக இருப்பதற்கு பெற்றோர் தங்கள் பிள்ளைகள் என்ன உணருகிறார்கள், என்ன சிந்திக்கிறார்கள் என்பதை அறிந்திருக்க வேண்டும். தங்கள் பிள்ளைகள் எதிர்ப்படும் நெருக்கடிகளையும் பிரச்சினைகளையும், அவர்களை தொந்தரவுபடுத்தும் கேள்விகளையும் பெற்றோர் புரிந்துகொள்வது அவசியம். “கேட்கிறதற்குத் தீவிரமாயும், பேசுகிறதற்குப் பொறுமையாயும்” இருந்து பிள்ளைகளுக்கு கவனமாக செவிகொடுக்கவேண்டியது மிக முக்கியம்.—யாக்கோபு 1:19; நீதிமொழிகள் 12:18; பிரசங்கி 7:8.
பிள்ளைகளோடு நெருக்கமான உறவை வளர்க்கவும், காத்துக்கொள்ளவும் பெற்றோருக்கு நேரம், பொறுமை, முயற்சி ஆகியவை தேவைப்படுகிறது. அத்தகைய உறவிருந்தால்தான் பிள்ளைகள் தங்களுடைய உள்ளார்ந்த உணர்வுகளையும்கூட மனம்திறந்து சொல்வர். இத்தகைய உறவு அடையப்படுமெனில் அது எத்தனை இன்பமானது! மேற்காப்பிரிக்காவில் வசிக்கும் ஐந்து பிள்ளைகளையுடைய தகப்பன் ஒருவர் இவ்வாறு சொல்கிறார்: “நான் பிள்ளைங்களுக்கு தகப்பன் மட்டுமல்ல, நம்பிக்கைக்கு பாத்திரமாகவும் இருக்கிறேன். பிள்ளைங்க, பாலினம் உட்பட எல்லா விஷயத்தை பத்தியும் என்கிட்ட ஒளிவுமறைவில்லாம பேசுவாங்க. மகள்களும்கூட என்கிட்ட மனம்விட்டு பேசுவாங்க. அவங்களோட பிரச்சினைகள கலந்துபேசறதுக்கு நாங்க நேரம் ஒதுக்குவோம். அவங்க தங்களோட சந்தோஷங்களையும்கூட என்கிட்ட பகிர்ந்துப்பாங்க.”
அவருடைய மகள்களில் ஒருத்தியான போலா இவ்வாறு சொல்கிறாள்: “நான் எந்த விஷயத்தையுமே என் அப்பாகிட்ட மறைக்கமாட்டேன். அப்பா புரிந்துகொள்ளுதலும் கரிசனையும் உள்ளவரு. நாங்க தவறு செய்யறப்பகூட கண்டபடி திட்டவோ கடுமையாக நடத்தவோ மாட்டாரு. கோபப்படறதுக்கு பதிலா, அந்த விஷயத்தை அலசி ஆராய்ஞ்சு, நாங்க என்ன செய்திருக்கனும், எதை செய்திருக்கக்கூடாதுனு தெளிவாக காண்பிப்பாரு. பெரும்பாலும் இளமை புஸ்தகத்திலிருந்தும் குடும்ப மகிழ்ச்சி புஸ்தகத்திலிருந்தும் எடுத்துக் காண்பிப்பாரு.” a
பிள்ளைகள் மிகச் சிறியவர்களாய் இருக்கும்போதே, பாலினத்தைப் பற்றி எப்போது சாத்தியமோ அப்போது பெற்றோர் பேசத் தொடங்குவது நல்லது. பெரும்பாலும் கடினமான வளரிளம் பருவத்தில் தொடரக்கூடிய உரையாடல்களுக்கு இவை அடிப்படையாக அமையலாம். பிள்ளைகள் சிறியவர்களாய் இருக்கும்போதே உரையாடல் தொடங்கப்படவில்லையென்றால், பின்பு அதை ஆரம்பிப்பது கொஞ்சம் தர்மசங்கடமாக இருக்கலாம்; ஆனால் அது செய்யப்படலாம். ஐந்து பிள்ளைகளை உடைய தாய் இவ்வாறு சொன்னார்: “நானும் பிள்ளையும் இந்த விஷயத்தைப் பத்தி பேசும்போது சகஜமாக உணர ஆரம்பிக்கிற வரைக்கும் இதைப் பற்றி பேச என்னை நானே கட்டாயப்படுத்திக்கிட்டேன்.” உங்கள் பிள்ளையின் நலத்திற்கு வரும் ஆபத்தைக் கருதுகையில், இத்தகைய முயற்சி நிச்சயமாகவே பிரயோஜனமுள்ளது.
பாதுகாப்பாகவும் மகிழ்ச்சியாகவும்
தங்களைப் பாதுகாக்கக்கூடிய அறிவை அன்புடன் கொடுத்து பயிற்றுவிக்கும் பெற்றோரை பிள்ளைகள் பெரிதும் போற்றுகின்றனர். ஆப்பிரிக்காவிலுள்ள யெகோவாவின் சாட்சிகள் சிலரின் குறிப்புகளை கவனியுங்கள்:
மோகிசோலா என்ற 24 வயது பெண் இவ்வாறு சொன்னார்: “நான் எங்கம்மாவுக்கு எப்பவுமே நன்றியுள்ளவளா இருப்பேன். அவங்க சரியான சமயத்தில் பாலினத்தைப் பத்தின தேவையான அறிவைக் கொடுத்தாங்க. நான் சின்னபிள்ளையா இருந்தபோது, இந்த விஷயங்களைப் பத்தி அவங்க என்கிட்ட பேசினப்ப எனக்கு தர்மசங்கடமா இருந்தாலும்கூட, அம்மா செஞ்ச பிரயோஜனமான காரியங்கள இப்ப என்னால் புரிஞ்சுக்க முடியுது.”
இனியோபாங் என்ற பெண் இவ்வாறு தொடருகிறாள்: “பாலினத்தைப் பத்தி எனக்கு போதியளவு போதனையை கொடுத்ததனால அம்மா எனக்காக செய்ததை நினைச்சுப் பார்க்கும்போது எனக்கு எப்பவுமே சந்தோஷமாக இருக்குது. பெண் என்ற முதிர்ச்சியை அடைய அது மிகவும் உதவியாக இருந்தது. என்னோட எதிர்கால பிள்ளைகளுக்கும் இதையே செய்ய நான் தீர்மானிச்சிருக்கிறேன்.”
பத்தொன்பது வயது கியூன்லே இவ்வாறு சொல்கிறார்: “கட்டுப்பாடு இல்லாம யாரோட வேணுமின்னாலும் பாலுறவு கொள்ளலாம்னு இருக்கிற உலகப்பிரகாரமான பெண்கள்கிட்டேயிருந்து வரும் அழுத்தங்களை எதிர்த்து நிற்க என்னோட பெற்றோர் எனக்கு உதவி செஞ்சாங்க. அவங்கமட்டும் என்னை ஒழுக்கரீதியா நல்லபடியா வளர்த்திருக்கலேனா நானும் தப்பு பண்ணியிருப்பேன். அவங்க எனக்கு செஞ்சதுக்கு நான் எப்பவுமே போற்றுதலோட இருப்பேன்.”
கிறிஸ்டியானா சொல்கிறாள்: “என்னோட அம்மாகிட்ட பாலினத்தைப் பத்தின உரையாடலைக் கொண்டிருந்ததால நான் நிறைய பயனடைஞ்சிருக்கேன். சாவை ஏற்படுத்துற வியாதிகளில் இருந்தும், தேவையில்லாத கருத்தறிப்பிலிருந்தும் நான் பாதுகாக்கப்பட்டிருக்கேன். அதோட என்னோட தம்பி தங்கச்சிகளுக்கும்கூட என்னால நல்ல முன்மாதிரி வைக்க முடிஞ்சது. எனக்கு மத்தவங்ககிட்டேயிருந்து மரியாதை கிடைக்குது; என்னோட எதிர்கால கணவரும்கூட என்னை மதிப்பாரு. எல்லாத்தையும்விட முக்கியமா, யெகோவா தேவனுடைய சட்டதிட்டங்களை கடைபிடிக்கிறதினால எனக்கும் அவருக்கும் இடையில நல்ல உறவு இருக்குது.”
முதலில் குறிப்பிடப்பட்ட போலா இவ்வாறு சொல்கிறாள்: “பாலுறவுல ஈடுபடறதுக்கு திருமணம் அப்படிங்கிற எந்த ஒப்பந்தமும் தேவையில்லனு என்னோட பள்ளி தோழி ஒருத்தி என்கிட்ட சொன்னா. அவளுக்கு அது வேடிக்கை விளையாட்டா இருந்துச்சு. ஆனா, அவ கர்ப்பமாயி, எங்களோட ஹை-ஸ்கூல் பரிட்சை எழுதமுடியாம போனப்ப, அது விளையாட்டில்லனு அவ புரிஞ்சுகிட்டா. என்னை வழிநடத்த ஒரு நல்ல அப்பா இல்லாம போயிருந்தா, நானும் அவளைப் போலவே இருந்து, இதுமாதிரி கசப்பான அனுபவத்திலிருந்துதான் பாடம் கத்திருப்பேன்.”
பாலுறவு பித்துப் பிடித்து அலையும் இந்த உலகில் கிறிஸ்தவ பெற்றோர் தங்களுடைய பிள்ளைகளை ‘இரட்சிப்புக்கேற்ற ஞானமுள்ளவர்களாக’ ஆக உதவுவது எத்தகைய ஆசீர்வாதம்! (2 தீமோத்தேயு 3:15) அவர்களுடைய பைபிள் சார்ந்த போதனை, அலங்காரமான விலைமதிப்பில்லாத அட்டிகையைப் போல பிள்ளைகளை கடவுளுடைய பார்வையில் அழகுள்ளவர்களாக்கும். (நீதிமொழிகள் 1:8, 9) பிள்ளைகள் பாதுகாப்பாக உணருவர்; பெற்றோர் அதிக மனதிருப்தி அடைவர். தன்னுடைய இளம் பிள்ளைகளோடு எப்போதுமே வெளிப்படையான பேச்சுத்தொடர்பை கொண்டிருக்க முயன்றுவரும் ஒரு ஆப்பிரிக்க தகப்பன் இவ்வாறு சொல்கிறார்: “எங்களுக்கு மன சமாதானம் இருக்குது. யெகோவாவுக்கு எது பிரியமானது என்பத எங்க பிள்ளைங்க தெரிஞ்சி வெச்சிருக்காங்க என்பதில் எங்களுக்கு அசைக்க முடியாத நம்பிக்கை இருக்கு; வெளியாட்கள் அவங்கள தவறான பாதைக்கு வழிநடத்த முடியாது. குடும்பத்துக்கு மனவேதனை தரும் காரியங்கள அவங்க செய்ய மாட்டாங்கன்னு நாங்க உறுதியா நம்புறோம். எங்க பிள்ளைங்க எங்களோட நம்பிக்கைக்கு பாத்திரமா நடந்துக் கொண்டதாலே நான் யெகோவா தேவனுக்கு நன்றி சொல்றேன்.”
[அடிக்குறிப்பு]
a உவாட்ச் டவர் பைபிள் சொஸைட்டி ஆஃப் இண்டியாவால் பிரசுரிக்கப்பட்டது.
[பக்கம் 10-ன் படம்]
பெற்றோரிடமிருந்து பைபிள் சார்ந்த தகவலைப் பெறும் கிறிஸ்தவ இளைஞர்கள், மற்ற இளைஞர்கள் பாலியலைப் பற்றி திரித்துக் கூறும் கட்டுக்கதைகளை ஒதுக்கிவிட முடியும்