விரைவில் கடவுளுடைய பிள்ளைகளுக்கு மகிமையான சுயாதீனம்
“சிருஷ்டியுங்கூட அழிவுக்குரிய அடிமைத்தனத்தினின்று விடுதலையாக்கப்பட்டுக் கடவுளின் பிள்ளைகளுக்குரிய மகிமையான சுயாதீனத்தைப் பெற்றுக்கொள்ளுமென்கிற நம்பிக்கையோடே, . . . நிலையில்லாமைக்குக் கீழ்ப்படுத்தப்பட்டிருக்கிறது.” —ரோமர் 8:20, 21, தி.மொ.
1. பிராயச்சித்த நாளில் இயேசுவின் பலி எவ்வாறு அடையாளமாகக் காட்டப்பட்டது?
யெகோவா தம்முடைய ஒரே பேறான குமாரனை மீட்கும் பலியாக அளித்ததால், 1,44,000 பேருக்கு பரலோக வாழ்க்கைக்கும், மீதி மனிதவர்க்கத்திற்கு பூமிக்குரிய நித்திய ஆசீர்வாதங்களுக்கும் வழியைத்திறந்தது. (1 யோவான் 2:1, 2) முந்தின கட்டுரையில் குறிப்பிட்ட பிரகாரம், வருடாந்தர பிராயச்சித்த நாளில் இஸ்ரவேலின் பிரதான ஆசாரியன், தனக்காகவும் தன் குடும்பத்தாருக்காகவும், லேவி கோத்திரத்தாருக்காகவும் பாவநிவாரண பலியாக ஒரு காளையைப் பலிசெலுத்திய செயல், ஆவியால் பிறப்பிக்கப்பட்ட கிறிஸ்தவர்களுக்காக செலுத்தப்பட்ட இயேசுவின் பலியை முன்குறித்தது. அதே நாளில், மற்ற எல்லா இஸ்ரவேலருக்காகவும் பாவநிவாரண பலியாக ஒரு வெள்ளாட்டுக்கடாவை பலிசெலுத்தினார்; இது, பொதுவில் மனிதவர்க்கத்திற்கும் கிறிஸ்துவின் பலி நன்மை பயக்குவதை முன்குறித்தது. உயிருள்ள ஒரு வெள்ளாட்டுக்கடா, மொத்தமாக, ஜனங்களின் கடந்த ஆண்டு பாவங்களை அடையாளப்பூர்வமாக சுமந்து செல்வதாய் வனாந்தரத்துக்கு அனுப்பப்பட்டு மறைந்தது. a—லேவியராகமம் 16:7-15, 20-22, 26.
2, 3. ரோமர் 8:20, 21-ல் பதிவுசெய்யப்பட்டுள்ள பவுலுடைய கூற்றின் அர்த்தமென்ன?
2 பரலோகத்துக்குரிய “கடவுளின் புத்திரர்” ஆகப்போகிற மனிதர்களின் நம்பிக்கையைச் சுருக்கமாக விவரித்த பின்பு, பவுல் இவ்வாறு சொன்னார்: “கடவுளின் புத்திரர் வெளிப்படுவதற்குச் சிருஷ்டியானது பேராவலோடு காத்துக்கொண்டிருக்கிறது. அதேனென்றால் சிருஷ்டியுங்கூட அழிவுக்குரிய அடிமைத்தனத்தினின்று விடுதலையாக்கப்பட்டுக் கடவுளின் பிள்ளைகளுக்குரிய மகிமையான சுயாதீனத்தைப் பெற்றுக்கொள்ளுமென்கிற நம்பிக்கையோடே, அந்தச் சிருஷ்டி சுய இஷ்டத்தினாலே அல்ல, கீழ்ப்படுத்தினவரினிமித்தமே நிலையில்லாமைக்குக் கீழ்ப்படுத்தப்பட்டிருக்கிறது.” (ரோமர் 8:14, 17, 19-21, தி.மொ.) இந்தக் கூற்றின் அர்த்தமென்ன?
3 நம்முடைய முற்பிதாவாகிய ஆதாம், பரிபூரண மனிதனாக சிருஷ்டிக்கப்பட்டபோது, அவர் ‘கடவுளின் குமாரனாக’ அல்லது பிள்ளையாக இருந்தார். (லூக்கா 3:38, தி.மொ.) பாவம் செய்ததனால் அவர், ‘அழிவுக்குரிய அடிமைத்தனத்துக்குள்ளாகி’ இந்த நிலைமையை மனிதகுலத்துக்குக் கடத்தினார். (ரோமர் 5:12) சுதந்தரிக்கப்பட்ட பாவத்தின் நிமித்தமாக ‘நிலையில்லாமையை’ எதிர்ப்படுவோராய் மனிதர் பிறக்கும்படி கடவுள் அனுமதித்தார்: எனினும், ‘வித்தாகிய’ இயேசு கிறிஸ்துவின் மூலம் நம்பிக்கையை அளித்தார். (ஆதியாகமம் 3:15; 22:18; கலாத்தியர் 3:16) ‘மரணமும், துக்கமும், அலறுதலும், வேதனையும் இனிமேலும் இராத’ காலத்தை வெளிப்படுத்துதல் 21:1-4 (தி.மொ.) குறிப்பிட்டுக் காட்டுகிறது. இது ‘மனுஷர்களிடத்தில்’ கொடுக்கப்பட்ட வாக்குறுதியாக இருப்பதால், ராஜ்ய ஆட்சியின்கீழ் வாழவிருக்கும் புதிய பூமிக்குரிய மனித சமுதாயத்தினர், பூமிக்குரிய ‘கடவுளின் பிள்ளைகளாக,’ மனதும் உடலும் மீண்டும் பூரண சுகநலமும் நித்திய ஜீவனும் அடைவதை அனுபவிப்பார்கள் என்று நமக்கு நிச்சயப்படுத்துகிறது. கிறிஸ்துவின் ஆயிர ஆண்டு ஆட்சியின்போது, கீழ்ப்படிதலுள்ள மனிதர்கள், ‘அழிவுக்குரிய அடிமைத்தனத்தினின்று விடுதலையாக்கப்படுவார்கள்.’ கடைசி சோதனையின்போது, யெகோவாவிடம் உண்மைத்தவறாதவர்களாக அவர்கள் நிரூபித்த பின்பு, சுதந்தரிக்கப்பட்ட பாவத்திலிருந்தும் மரணத்திலிருந்தும் நிரந்தரமாக விடுதலையானவர்களாய் இருப்பார்கள். (வெளிப்படுத்துதல் 20:7-10) பூமியிலிருப்போர் அப்போது ‘கடவுளின் பிள்ளைகளுக்குரிய மகிமையான சுயாதீனத்தைப் பெற்றுக்கொண்டவர்களாக’ இருப்பார்கள்.
“வா” என்று அவர்கள் அழைக்கிறார்கள்
4. “ஜீவத்தண்ணீரை இலவசமாய் வாங்கிக்கொள்ளக்கடவன்” என்பதன் அர்த்தம் என்ன?
4 மனிதவர்க்கத்திற்கு முன்பாக எத்தகைய அதிசயமான நம்பிக்கை வைக்கப்பட்டிருக்கிறது! பூமியில் இன்னும் இருக்கிற, ஆவியால் பிறப்பிக்கப்பட்ட கிறிஸ்தவர்கள் இதைப் பற்றி மற்றவர்களுக்குச் சொல்வதில் ஆர்வத்துடன் தலைமை வகிப்பதில் ஆச்சரியம் ஒன்றுமில்லையே! மகிமைப்படுத்தப்பட்ட ஆட்டுக்குட்டியானவராகிய இயேசு கிறிஸ்துவினுடைய ‘மணவாட்டியின்’ பாகமாகப்போகிறவர்களாக, அபிஷேகஞ்செய்யப்பட்ட மீதிபேர், இந்தத் தீர்க்கதரிசன வார்த்தைகளின் நிறைவேற்றத்தில் உட்படுகிறார்கள்: “ஆவியும் மணவாட்டியும் வா என்கிறார்கள்; கேட்கிறவனும் வா என்பானாக; தாகமாயிருக்கிறவன் வரக்கடவன்; விருப்பமுள்ளவன் ஜீவத்தண்ணீரை இலவசமாய் வாங்கிக்கொள்ளக்கடவன்.” (வெளிப்படுத்துதல் 21:2, 9; 22:1, 2, 17) இல்லை, இயேசுவின் மீட்கும்பொருளாகிய பலியினுடைய நன்மைகள், 1,44,000 பேருக்கு மாத்திரமேயென மட்டுப்படுத்தப்பட்டில்லை. பூமியிலுள்ள மணவாட்டி வகுப்பினரில் மீதிபேரின் மூலமாக “வா” என்று சொல்வதில் கடவுளுடைய ஆவி தொடர்ந்து செயல்படுகிறது. நீதிக்காகத் தாகமுள்ளோராய் இருக்கிற, கேட்கும் எவரும் இரட்சிப்புக்கான யெகோவாவின் தயாள ஏற்பாட்டில் பங்குகொண்டு, “வா” என்று சொல்லும்படி அழைப்பளிக்கப்படுகிறார்கள்.
5. யாரைத் தங்கள் மத்தியில் கொண்டிருப்பதில் யெகோவாவின் சாட்சிகள் மகிழ்ச்சியடைகிறார்கள்?
5 ஜீவனடைவதற்காக இயேசு கிறிஸ்துவின் மூலமாய் செய்யப்பட்ட கடவுளுடைய ஏற்பாட்டில் யெகோவாவின் சாட்சிகள் விசுவாசமுள்ளவர்களாய் இருக்கிறார்கள். (அப்போஸ்தலர் 4:12) கடவுளுடைய நோக்கங்களைப் பற்றி கற்றறியவும் அவருடைய சித்தத்தைச் செய்யவும் விரும்புகிற நேர்மை இருதயமுள்ளவர்கள் தங்கள் மத்தியில் வந்திருப்பதில் அவர்கள் மகிழ்ச்சியடைகிறார்கள். இந்த ‘முடிவுகாலத்தில்,’ ‘வந்து ஜீவத்தண்ணீரை இலவசமாய் வாங்கிக்கொள்ள’ விரும்புகிற எல்லாருக்கும் அவர்களுடைய ராஜ்ய மன்றங்கள் திறந்திருக்கின்றன.—தானியேல் 12:4.
காலம் கடந்து செல்கையில் மாற்றங்கள்
6. பல்வேறு காலப்பகுதிகளின்போது, கடவுளுடைய ஆவி எவ்வாறு யெகோவாவின் சாட்சிகளின்மீது கிரியை செய்திருக்கிறது?
6 கடவுள், தம்முடைய நோக்கங்களை நிறைவேற்றுவதற்கு, அவற்றிற்குரிய காலத்தை வைத்திருக்கிறார்; இது, மனிதருடன் அவருடைய தொடர்புகளைப் பாதிக்கிறது. (பிரசங்கி 3:1; அப்போஸ்தலர் 1:7) கிறிஸ்தவத்திற்கு முந்தின காலங்களில் இருந்த கடவுளுடைய ஊழியர்களின்மீது அவருடைய ஆவி தங்கினபோதிலும், அவர்கள் அவருடைய ஆவிக்குரிய புத்திரராகப் பிறப்பிக்கப்படவில்லை. எனினும், இயேசுவுடன் தொடங்கி, ஒப்புக்கொடுத்த ஆண்களையும் பெண்களையும் பரலோக சுதந்தரத்திற்குப் பிறப்பிக்க பரிசுத்த ஆவியைப் பயன்படுத்துவதற்கான யெகோவாவின் காலம் வந்தது. ஆனால் நம்முடைய நாளைப் பற்றியதென்ன? அதே ஆவி, இயேசுவின் ‘மற்ற செம்மறியாடுகளின்மீது’ செயல்படுகிறது, ஆனால் பரலோக வாழ்க்கைக்கான நம்பிக்கையையும் ஆவலையும் அவர்களில் அது எழுப்புகிறதில்லை. (யோவான் 10:16, NW) பரதீஸ் பூமியில் நித்திய ஜீவனுடன் இருப்பதே, கடவுளால் அருளப்பட்ட அவர்களுடைய நம்பிக்கையைப் பற்றிக்கொண்டு, இந்தப் பழைய உலகத்திலிருந்து கடவுளுடைய நீதியுள்ள புதிய உலகத்திற்கு மாறுவதற்கான இந்தக் காலப்பகுதியின்போது சாட்சி பகருவதில், அபிஷேகஞ்செய்யப்பட்ட மீதிபேருக்கு அவர்கள் மகிழ்ச்சியுடன் உதவிசெய்கிறார்கள்.—2 பேதுரு 3:5-13.
7. எந்த அறுவடை வேலையில் பைபிள் மாணாக்கர்கள் அக்கறையுடையோராக இருந்தனர், ஆனால் பரதீஸைப் பற்றி எதை அறிந்திருந்தார்கள்?
7 பொ.ச. 33-ன் பெந்தெகொஸ்தே நாளன்று பரிசுத்த ஆவியை ஊற்றினதோடு, ‘அநேக புத்திரரை மகிமைக்குக் கொண்டுவர’ கடவுள் தொடங்கினார்; மேலும், மொத்தம் 1,44,000 பேரான ஆவிக்குரிய ‘தேவனுடைய இஸ்ரவேலரின்’ தொகையைப் பூர்த்திச் செய்வதற்கான ஒரு காலத்தையும் அவர் குறித்ததாகத் தெரிகிறது. (எபிரெயர் 2:10; கலாத்தியர் 6:16; வெளிப்படுத்துதல் 7:1-8) அபிஷேகஞ்செய்யப்பட்ட கிறிஸ்தவர்களை உட்படுத்தின ஓர் அறுவடை வேலை, 1879-ன் ஆரம்பம் முதல் இந்தப் பத்திரிகையில் அடிக்கடி குறிப்பிடப்பட்டது. ஆனால், ஒரு பரதீஸ் பூமியில் நித்திய ஜீவனின் நம்பிக்கையை வேதவசனங்கள் அளிக்கின்றன என்பதையும் அந்த பைபிள் மாணாக்கர்கள் (இப்போது யெகோவாவின் சாட்சிகள் என்று அழைக்கப்படுபவர்கள்) அறிந்திருந்தார்கள். உதாரணமாக, ஜூலை 1883-ன் உவாட்ச் டவர் வெளியீட்டில் இவ்வாறு சொல்லப்பட்டது: “இயேசு தம்முடைய ராஜ்யத்தை ஸ்தாபித்து, தீமை, முதலியவற்றை அழித்திடுகையில், இந்தப் பூமி ஒரு பரதீஸ் ஆகும், . . . தங்கள் சவக்குழிகளில் இருப்போர் எல்லாரும் அதற்குள் வருவார்கள். அதன் சட்டங்களுக்குக் கீழ்ப்படிவோராக ஆவதன்மூலம் அவர்கள் அதில் என்றென்றும் வாழலாம்.” காலம் கடந்து செல்கையில், அபிஷேகஞ்செய்யப்பட்டவர்களின் அறுவடை குறைவாகியது, பரலோக நம்பிக்கை இராத நபர்கள், யெகோவாவின் அமைப்புக்குள் படிப்படியாய் அறுவடை செய்யப்பட்டனர். இதற்கிடையில் கடவுள், அபிஷேகஞ்செய்யப்பட்ட தம்முடைய ஊழியர்களான, மறுபடியும் பிறந்த கிறிஸ்தவர்களுக்கு கவனிக்கத்தக்க உட்பார்வையை அருளினார்.—தானியேல் 12:3; பிலிப்பியர் 2:15; வெளிப்படுத்துதல் 14:15, 16.
8. 1930-களின் தொடக்கத்தில், பூமிக்குரிய நம்பிக்கையைப் பற்றி புரிந்துகொள்ளுதல் எவ்வாறு படிப்படியாய்த் தெளிவாகியது?
8 பூமிக்குரிய நம்பிக்கையுடையவர்கள், முக்கியமாய் 1931-லிருந்து கிறிஸ்தவ சபையுடன் கூட்டுறவுகொண்டு வருகிறார்கள். அந்த ஆண்டில்தான் பூமிக்குரிய வகுப்பினரையே எசேக்கியேல் 9-ம் அதிகாரம் குறிப்பிடுகிறது என்றும், அவர்களே கடவுளுடைய புதிய உலகத்திற்குள் தப்பிப்பிழைக்க அடையாளம் போடப்படுகிறார்கள் என்றும் காணும்படி ஆவியால் பிறப்பிக்கப்பட்ட இந்த மீதிபேருக்கு யெகோவா அறிவொளி அளித்தார். இத்தகைய தற்கால செம்மறியாட்டைப் போன்றோர், யெகூவின் கூட்டாளியாகிய யோனதாபால் முன்குறிக்கப்பட்டனர் என்று 1932-ல் முடிவு செய்யப்பட்டது. (2 இராஜாக்கள் 10:15-17) யோனதாபுகள், கடவுளுக்குத் தங்களை “அர்ப்பணம் செய்ய” அல்லது “ஒப்புக்கொடுக்க” வேண்டும் என்பது 1934-ல் தெளிவாக்கப்பட்டது. 1935-ல், ‘திரள் கூட்டமானோர்’—இரண்டாந்தரமான ஆவிக்குரிய வகுப்பினர் என்று முன்பு எண்ணப்பட்டவர்களான இவர்கள் பரலோகத்தில் கிறிஸ்துவின் மணவாட்டியினுடைய ‘தோழிகளாக’ இருக்கப்போகிறவர்கள்—பூமிக்குரிய நம்பிக்கையுடைய மற்ற செம்மறியாடுகள் என அடையாளம் காட்டப்பட்டனர். (வெளிப்படுத்துதல் 7:4-15; 21:2, 9; சங்கீதம் 45:14, 15) முக்கியமாய் 1935-லிருந்து, பரதீஸ் பூமியில் என்றென்றும் வாழ ஆவலாயிருக்கும் நேர்மையுள்ளோரை தேடும் வேலையை அபிஷேகஞ்செய்யப்பட்டவர்கள் முன்நின்று நடத்திவருகின்றனர்.
9. 1935-க்குப் பின், கர்த்தருடைய இராப்போஜனத்தின்போது சின்னங்களில் பங்குகொள்வதை கிறிஸ்தவர்களில் சிலர் ஏன் நிறுத்திவிட்டனர்?
9 கர்த்தருடைய இராப்போஜனத்தின்போது அப்பத்திலும் திராட்சமதுவிலும் பங்குகொண்டிருந்த கிறிஸ்தவர்களில் சிலர், 1935-க்குப் பின்பு அதில் பங்குகொள்வதை நிறுத்திவிட்டனர். ஏன்? ஏனெனில் தங்கள் நம்பிக்கை பூமிக்குரியது, பரலோகத்திற்குரியவை அல்ல என்று அவர்கள் உணர்ந்தனர். 1930-ல் முழுக்காட்டப்பட்ட ஓர் அம்மாள் இவ்வாறு சொன்னார்கள்: “பங்குகொள்வது, முக்கியமாக ஆர்வமுள்ள முழுநேர ஊழியருக்குத் தகுந்ததாகக் கருதப்பட்டபோதிலும், பரலோக நம்பிக்கை எனக்கு இருந்ததென்று நான் ஒருபோதும் நம்பவில்லை. பின்பு, பூமியில் என்றென்றும் வாழும் நம்பிக்கையுடைய திரள்கூட்டத்தார் கூட்டிச்சேர்க்கப்படுகிறார்கள் என்று, 1935-ல் எங்களுக்குத் தெளிவாக்கப்பட்டது. நாங்கள் அந்தத் திரள்கூட்டத்தின் பாகமாக இருந்தோம் என்று எங்களில் பலர் புரிந்துகொண்டு மகிழ்ச்சியடைந்து, சின்னங்களில் பங்குகொள்வதை நிறுத்திவிட்டோம்.” கிறிஸ்தவ பிரசுரங்களுடைய இயல்பு மாறின. முந்தின ஆண்டுகளின் பிரசுரங்கள், இயேசுவைப் பின்பற்றிய ஆவியால் பிறப்பிக்கப்பட்டவர்களுக்கு முக்கியமாய்த் திட்டமிடப்பட்டிருந்தன. ஆனால் 1935-லிருந்து, ‘உண்மையுள்ள அடிமையின்’ த உவாட்ச்டவரும் மற்ற புத்தகங்களும், அபிஷேகஞ்செய்யப்பட்டவர்கள், பூமிக்குரிய நம்பிக்கை உடையோராயிருந்த அவர்களுடைய தோழர்கள் என்று இந்த இருவகுப்பாரின் தேவைகளுக்கும் பொருந்தும் வகையில் ஆவிக்குரிய உணவை அளித்தன.—மத்தேயு 24:45-47, NW.
10. உண்மையற்றுப்போகும் அபிஷேகஞ்செய்யப்பட்டவருக்குப் பதிலாக வேறு ஒருவர் எவ்வாறு வைக்கப்படலாம்?
10 அபிஷேகஞ்செய்யப்பட்ட ஒருவர் உண்மையற்றவராக ஆகிவிட்டாரென வைத்துக்கொள்வோம். அவருக்குப் பதிலாக இன்னொருவர் வைக்கப்படுவாரா? வைக்கப்படுவார் என்றவாறே பவுல், அடையாளப்பூர்வமான ஒலிவ மரத்தைப் பற்றிய தர்க்கரீதியான பேச்சில் குறிப்பிட்டார். (ரோமர் 11:11-32) ஆவியால் பிறப்பிக்கப்பட்ட ஒருவருக்குப் பதிலாக இன்னொருவர் வைக்கப்படுவது தேவைப்பட்டால், தமக்குப் பல ஆண்டுகளாக பரிசுத்த சேவை செய்து, விசுவாசத்தில் முன்மாதிரியாக இருந்திருக்கிற ஒருவருக்கு அந்தப் பரலோக அழைப்பை கடவுள் ஒருவேளை கொடுக்கலாம்.—ஒப்பிடுக: லூக்கா 22:28, 29; 1 பேதுரு 1:6, 7.
நன்றியறிதலுக்குப் பல காரணங்கள்
11. நம்முடைய நம்பிக்கையின் இயல்பு என்னவாயிருந்தாலும், யாக்கோபு 1:17 நமக்கு என்ன உறுதியளிக்கிறது?
11 நாம் எங்கிருந்து யெகோவாவை உண்மையுடன் சேவித்தாலும், அவர் நம் தேவைகளையும் நேர்மையான விருப்பங்களையும் திருப்திசெய்வார். (சங்கீதம் 145:16; லூக்கா 1:67-74) நமக்கு உண்மையில் பரலோக நம்பிக்கை இருந்தாலும்சரி அல்லது பூமிக்குரிய எதிர்பார்ப்பு இருந்தாலும்சரி கடவுளிடம் நன்றியுள்ளவர்களாக இருப்பதற்கு பல நல்ல காரணங்கள் நமக்கு இருக்கின்றன. தம்மை நேசிப்போரின் மிகச் சிறந்த அக்கறைகளுக்கு ஏதுவான காரியங்களையே அவர் எப்பொழுதும் செய்கிறார். “நன்மையான எந்த ஈவும் பூரணமான எந்த வரமும் பரத்திலிருந்துண்டாகி, சோதிகளின் பிதாவினிடத்திலிருந்து [யெகோவா தேவனிடமிருந்து] இறங்கிவருகிறது,” என்று சீஷனாகிய யாக்கோபு சொன்னார். (யாக்கோபு 1:17) இந்த ஈவுகளிலும் ஆசீர்வாதங்களிலும் சிலவற்றை நாம் கவனிக்கலாம்.
12. யெகோவா, தம்முடைய உண்மையுள்ள ஊழியர்கள் ஒவ்வொருவருக்கும் அருமையான நம்பிக்கையை அளித்திருக்கிறார் என்று நாம் ஏன் சொல்லலாம்?
12 தம்முடைய உண்மையுள்ள ஊழியக்காரர் ஒவ்வொருவருக்கும் அருமையான நம்பிக்கையை யெகோவா அளித்திருக்கிறார். சிலரை பரலோக வாழ்க்கைக்கு அழைத்திருக்கிறார். கிறிஸ்தவ காலத்திற்கு முன்னிருந்த தம்முடைய சாட்சிகளுக்கு, பூமியில் நித்தியமாய் வாழ்வதற்காக உயிர்த்தெழுப்பப்படும் சிறந்த நம்பிக்கையை யெகோவா அளித்தார். உதாரணமாக, ஆபிரகாம், உயிர்த்தெழுதலில் நம்பிக்கை உடையவராக இருந்து, ‘மெய்யான அஸ்திபாரங்களுள்ள நகரத்துக்கு,’ அதாவது பரலோக ராஜ்யத்தின்கீழ் பூமிக்குரிய வாழ்க்கைக்கு உயிர்த்தெழுப்பப்பட காத்திருந்தார். (எபிரெயர் 11:10, NW, 17-19) பரதீஸான பூமியில் நித்தியமாய் வாழும் நம்பிக்கையை, கடவுள் மறுபடியுமாக இந்த முடிவு காலத்தில் லட்சக்கணக்கானோருக்கு அளிக்கிறார். (லூக்கா 23:43; யோவான் 17:3) நிச்சயமாகவே, இத்தகைய மகத்தான நம்பிக்கையை யெகோவா அளித்திருக்கிற எவரும், அதற்காக உள்ளப்பூர்வமாக ஆழ்ந்த நன்றியுள்ளோராக இருக்க வேண்டும்.
13. கடவுளுடைய பரிசுத்த ஆவி அவருடைய ஜனங்களின்மீது எவ்வாறு கிரியை செய்திருக்கிறது?
13 யெகோவா தம்முடைய பரிசுத்த ஆவியை தம்முடைய ஜனத்துக்கு ஈவாக அளிக்கிறார். பரலோக நம்பிக்கை அளிக்கப்படுகிற கிறிஸ்தவர்கள் பரிசுத்த ஆவியால் அபிஷேகஞ்செய்யப்படுகிறார்கள். (1 யோவான் 2:20; 5:1-4, 18) எனினும், பூமிக்குரிய எதிர்பார்ப்பை உடையோரான கடவுளுடைய ஊழியர்களுக்கும் பரிசுத்த ஆவியின் உதவியும் வழிநடத்துதலும் இருக்கிறது. யெகோவாவின் ஆவி அளிக்கப்பட்டோரில் ஒருவராக மோசே இருந்தார். அவருக்கு உதவிசெய்யும்படி நியமிக்கப்பட்ட 70 பேருக்கும் அவ்வாறு அளிக்கப்பட்டது. (எண்ணாகமம் 11:24, 25) பரிசுத்த ஆவியின் செல்வாக்கால், பெசலெயேல், இஸ்ரவேலின் ஆசரிப்புக் கூடாரத்தின் சம்பந்தமாக திறம்பட்ட சிற்பாசிரியராகச் சேவித்தார். (யாத்திராகமம் 31:1-11) கிதியோன், யெப்தா, சிம்சோன், தாவீது, எலியா, எலிசா, இன்னும் மற்றவர்களின்மேல் கடவுளுடைய ஆவி வந்தது. இந்தப் பூர்வகால ஆட்கள், பரலோக மகிமைக்கு ஒருபோதும் கொண்டுவரப்படுவதில்லை என்றபோதிலும், பரிசுத்த ஆவியால் வழிநடத்தப்பட்டு உதவிசெய்யப்பட்டார்கள். இன்று இயேசுவின் மற்ற செம்மறியாடுகளுக்கும் அவ்வாறே செய்யப்படுகிறது. ஆகையால், கடவுளுடைய ஆவியை உடையோராக இருப்பது, நமக்கு பரலோக அழைப்பு இருக்கிறதென்று அர்த்தப்பட வேண்டியதில்லை. எனினும் யெகோவாவின் ஆவி, வழிநடத்துதலை அளிக்கிறது; பிரசங்கிப்பதற்கும், கடவுளால் அளிக்கப்பட்ட மற்ற ஊழிய நியமிப்புகளை நிறைவேற்றுவதற்கும் நமக்கு உதவிசெய்கிறது; இயல்புக்கு மீறிய சக்தியை நமக்கு அளிக்கிறது; அதன் கனியாகிய அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடியபொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம், சாந்தம், இச்சையடக்கம் ஆகியவற்றை நம்மில் பிறப்பிக்கிறது. (யோவான் 16:13; அப்போஸ்தலர் 1:8; 2 கொரிந்தியர் 4:7-10, NW; கலாத்தியர் 5:22, 23) கடவுள் அருளும் இந்த அன்பான ஈவுக்காக நாம் நன்றியுள்ளோராக இருக்க வேண்டுமல்லவா?
14. கடவுள் அருளும் அறிவு, ஞானம் ஆகிய ஈவுகளிலிருந்து நாம் எவ்வாறு நன்மை அடைகிறோம்?
14 நம்முடைய நம்பிக்கை பரலோகத்திற்குரியதாகவோ பூமிக்குரியதாகவோ எவ்வாறு இருந்தாலும், அறிவும் ஞானமும் கடவுள் அருளும் ஈவுகளாக உள்ளன, அவற்றிற்காக நாம் நன்றியுள்ளோராய் இருக்க வேண்டும். யெகோவாவைப் பற்றிய திருத்தமான அறிவு, ‘அதிமுக்கியமான காரியங்களை நிச்சயப்படுத்திக்கொள்ளவும்,’ ‘யெகோவாவை முழுமையாகப் பிரியப்படுத்தும் நோக்கத்துடன் அவருக்குத் தகுதியாக நடக்கவும்’ நமக்கு உதவிசெய்கிறது. (பிலிப்பியர் 1:9-11; கொலோசெயர் 1:9, 10; NW) தேவ ஞானம் ஒரு பாதுகாப்பாகவும் வாழ்க்கையில் ஒரு வழிகாட்டியாகவும் சேவிக்கிறது. (நீதிமொழிகள் 4:5-7; பிரசங்கி 7:12) உண்மையான அறிவும் ஞானமும் கடவுளுடைய வார்த்தையில் ஆதாரங்கொண்டிருக்கின்றன. அபிஷேகஞ்செய்யப்பட்டோரில் மீந்திருப்போரான சொற்பபேர், தங்கள் பரலோக நம்பிக்கையைப் பற்றி அது சொல்பவற்றிற்கே முக்கியமாய் மனம் கவரப்படுகிறவர்களாக இருக்கிறார்கள். எனினும், கடவுளுடைய வார்த்தையை நேசிப்பதும், அதை நன்றாய்ப் புரிந்துகொள்வதும், நாம் பரலோக வாழ்க்கைக்கு அழைக்கப்பட்டிருக்கிறோம் என்பதைத் தெரிவிப்பதற்கான கடவுளுடைய வழியல்ல. மோசே, தானியேல் போன்ற மனிதர்கள் பைபிளின் பாகங்களையுங்கூட எழுதினார்கள், ஆனால் அவர்கள் பூமியில் வாழ்வதற்கே உயிர்த்தெழுப்பப்படுவார்கள். நம்முடைய நம்பிக்கை பரலோகத்துக்குரியதோ பூமிக்குரியதோ என்னவாக இருந்தாலும், நாம் எல்லாரும், யெகோவா அங்கீகரித்திருக்கிற ‘உண்மையும் விவேமுமுள்ள அடிமையின்’ மூலமாகவே ஆவிக்குரிய உணவைப் பெறுகிறோம். (மத்தேயு 24:45-47, NW) இவ்வாறு பெற்றிருக்கிற அறிவுக்காக நாம் எல்லாரும் எவ்வளவாய் நன்றியுள்ளோராக இருக்கிறோம்!
15. கடவுளுடைய மிகப் பெரிய ஈவுகளில் ஒன்று என்ன, அதை நீங்கள் எவ்வாறு கருதுகிறீர்கள்?
15 மீட்கும்பொருளான இயேசுவின் பலிக்குரிய இந்த அன்புள்ள ஏற்பாடு, கடவுளுடைய மிகப் பெரிய ஈவுகளில் ஒன்றாகும்; நமக்கு இருப்பது பரலோக எதிர்பார்ப்போ பூமிக்குரிய நம்பிக்கையோ எதுவாயினும், இது நமக்குப் பயனளிக்கிறது. மனிதவர்க்க உலகத்தை கடவுள் அவ்வளவாய் நேசித்ததனால், “தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்.” (யோவான் 3:16) மேலும், இயேசுவின் அன்பு, “அநேகரை மீட்கும்பொருளாகத் தம்முடைய ஜீவனைக் கொடுக்க” அவரைத் தூண்டுவித்தது. (மத்தேயு 20:28) அப்போஸ்தலன் யோவான் விளக்கினபடி, இயேசு கிறிஸ்து, “நமது [அபிஷேகஞ்செய்யப்பட்டவர்களினுடைய] பாவங்களுக்கு அவரே பிராயச்சித்த பலி; நமது பாவங்களுக்கு மாத்திரமல்ல சர்வலோகத்தின் பாவங்களுக்குமே.” (1 யோவான் 2:1, 2, தி.மொ.) ஆகையால், நித்திய ஜீவனடைவதற்கு செய்யப்பட்ட இந்த அன்புள்ள மீட்பின் ஏற்பாட்டிற்காக நாம் எல்லாரும் உள்ளப்பூர்வமாக நன்றியுள்ளோராக இருக்க வேண்டும். b
நீங்கள் அங்கிருப்பீர்களா?
16. ஏப்ரல் 11, 1998-ல், சூரிய அஸ்தமனத்திற்குப் பின், என்ன முக்கிய சம்பவம் நினைவுகூருதலாக ஆசரிக்கப்படும், யார் அதற்கு ஆஜராக வேண்டும்?
16 யெகோவாவின் சாட்சிகள், ஏப்ரல் 11, 1998-ல் சூரிய அஸ்தமனத்திற்குப் பின், கிறிஸ்துவின் மரணத்தை நினைவுகூரும் ஆசரிப்புக்காக ராஜ்ய மன்றங்களில் அல்லது மற்ற இடங்களில் கூடுவார்கள். அப்போது அங்கிருப்பதற்கு, கடவுள் தம்முடைய குமாரன் மூலமாய் அருளிய இந்த மீட்கும்பொருளுக்கான நன்றியுணர்வு நம்மைத் தூண்டுவிக்க வேண்டும். இயேசு கிறிஸ்து, தம்முடைய பூமிக்குரிய வாழ்க்கையின் கடைசி இரவின்போது தம்முடைய உண்மையுள்ள அப்போஸ்தலருடன் இந்த ஆசரிப்பைத் தொடங்கி வைத்தபோது: “என்னை நினைவுகூரும்படி இதைச் செய்யுங்கள்” என்று சொன்னார். (லூக்கா 22:19, 20; மத்தேயு 26:26-30) மீந்திருக்கிற சொற்ப பேரான அபிஷேகஞ்செய்யப்பட்டவர்கள், இயேசுவின் பாவமில்லாத மனித சரீரத்தை அடையாளமாகக் குறிக்கும் புளிப்பில்லா அப்பத்திலும், பலியாகச் சிந்தப்பட்ட அவருடைய இரத்தத்தை அடையாளமாகக் குறிக்கும் கலப்படமில்லாத சிவந்த திராட்சமதுவிலும் பங்கெடுப்பார்கள். ஆவியால் பிறப்பிக்கப்பட்ட கிறிஸ்தவர்கள் மாத்திரமே பங்கெடுக்க வேண்டும். ஏனெனில் அவர்கள் மாத்திரமே புதிய உடன்படிக்கையிலும் ராஜ்ய உடன்படிக்கையிலும் அங்கத்தினர்களாக இருக்கிறார்கள்; மேலும் பரலோக நம்பிக்கை தங்களுடையதாக இருக்கிறது என்று கடவுளுடைய பரிசுத்த ஆவியின் மறுக்கமுடியாத சாட்சியத்தை உடையோராகவும் இருக்கிறார்கள். லட்சக்கணக்கான மற்றவர்கள், நித்திய ஜீவனை சாத்தியமாக்கின இயேசுவினுடைய பலியின் சம்பந்தமாக, கடவுளும் கிறிஸ்துவும் காட்டின அன்புக்கு நன்றியுள்ளவர்களாய், மரியாதையுடன் கவனிப்போராக அங்கிருப்பார்கள்.—ரோமர் 6:23.
17. ஆவியால் அபிஷேகஞ்செய்யப்படுதலைக் குறித்ததில் எதை நாம் நினைவில் வைக்க வேண்டும்?
17 முன்பு கொண்டிருந்த மத நம்பிக்கைகள், அன்புக்குரிய ஒருவரின் மரணத்தால் எழும்பிய உணர்ச்சிகள், பூமிக்குரிய நம்முடைய அன்றாட வாழ்க்கையில் இப்போது எதிர்ப்படும் இக்கட்டுகள், அல்லது யெகோவாவிடமிருந்து தனிப்பட்ட ஏதோ ஆசீர்வாதத்தைப் பெற்றதுபோன்ற உணர்வு ஆகியவை, தங்களுக்கும் பரலோக வாழ்க்கை என்று தவறாகக் கருதிக்கொள்ளும்படி சிலரை வழிநடத்தக்கூடும். ஆனால், கிறிஸ்துவினுடைய மீட்கும் பலிக்கான நம்முடைய நன்றியுணர்வைக் காட்டுவதற்காக நினைவு ஆசரிப்பு சின்னங்களில் பங்குகொள்ளும்படி வேதவசனங்கள் நம்மைக் கட்டளையிடுகிறதில்லை என்பதை நாம் எல்லாரும் நினைவில் வைக்க வேண்டும். மேலும், ஆவியால் அபிஷேகஞ்செய்யப்படுதல் ‘விரும்புகிறவனாலும் அல்ல, ஓடுகிறவனாலும் அல்ல, . . . தேவன்பேரிலேயே’ சார்ந்திருக்கிறது. இயேசுவை ஆவிக்குரிய குமாரனாகப் பிறப்பித்தவரும், 1,44,000 மற்ற புத்திரரை மாத்திரமே மகிமைக்குக் கொண்டுவருகிறவருமான அவர்பேரிலேயே சார்ந்திருக்கிறது.—ரோமர் 9:16; ஏசாயா 64:8.
18. இன்று யெகோவாவைச் சேவிக்கும் பெரும்பான்மையோருக்கு, எதிர்காலத்தில் என்ன ஆசீர்வாதங்கள் வைக்கப்பட்டிருக்கின்றன?
18 பரதீஸ் பூமியில் நித்தியமாய் வாழ்வதே, இந்தக் கடைசி நாட்களில் யெகோவாவைச் சேவிக்கும் மிகப் பெரும்பான்மையோரான மனிதருக்கு கடவுள் அருளிய நம்பிக்கையாக இருக்கிறது. (2 தீமோத்தேயு 3:1-5) சீக்கிரத்தில், இந்த அற்புதமான பரதீஸை அவர்கள் அனுபவித்து மகிழ்வார்கள். அப்போது, பரலோக ஆட்சியின்கீழ் பிரபுக்கள், பூமிக்குரிய விவகாரங்களை நிர்வகிப்பார்கள். (சங்கீதம் 45:16) பூமியின் குடிகள் கடவுளுடைய சட்டங்களுக்குக் கீழ்ப்படிந்து, யெகோவாவின் வழிகளைக் குறித்து மேலும் அதிகமாகக் கற்றுவருகையில் சமாதான நிலைமைகள் நிலவும். (ஏசாயா 9:6, 7; வெளிப்படுத்துதல் 20:12) வீடுகளைக் கட்டுவதிலும் பூமியைப் பண்படுத்துவதிலும், செய்வதற்கு ஏராளமான வேலை இருக்கும். (ஏசாயா 65:17-25) மேலும், மரித்தோர் திரும்ப உயிரடைகையில் குடும்பங்கள் திரும்பவும் ஒன்றுபடும் மகிழ்ச்சியைச் சிந்தித்துப் பாருங்கள்! (யோவான் 5:28, 29) கடைசி பரீட்சைக்குப் பின், எல்லா பொல்லாங்கும் ஒழிந்துவிட்டிருக்கும். (வெளிப்படுத்துதல் 20:7-10) அதன்பின் என்றுமாக இந்தப் பூமி, ‘அழிவுக்குரிய அடிமைத்தனத்தினின்று விடுதலையாக்கப்பட்டுக் கடவுளின் பிள்ளைகளுக்குரிய மகிமையான சுயாதீனத்தைப் பெற்றிருக்கிற’ பரிபூரண மனிதரால் நிரம்பியிருக்கும்.
[அடிக்குறிப்புகள்]
a வேதவாக்கியங்களின்பேரில் உட்பார்வை (ஆங்கிலம்), தொகுதி 1, பக்கங்கள் 225-6 காண்க.
b ஆங்கில காவற்கோபுரம், மார்ச் 15, 1991, பக்கங்கள் 19-22-ஐக் காண்க.
நீங்கள் எவ்வாறு பதிலளிப்பீர்கள்?
◻ “ஜீவத்தண்ணீரை இலவசமாய் வாங்கிக்கொள்ளக்கடவன்” என்பதன் அர்த்தம் என்ன?
◻ நம்முடைய நம்பிக்கை பரலோகத்துக்குரியதாயினும் அல்லது பூமிக்குரியதாயினும், கடவுளுக்கு நாம் நன்றியுள்ளவர்களாய் இருக்க என்ன காரணங்கள் நமக்கு இருக்கின்றன?
◻ என்ன வருடாந்தர ஆசரிப்புக்கு நாம் எல்லாரும் ஆஜராக வேண்டும்?
◻ யெகோவாவின் ஜனங்கள் பெரும்பான்மையோருக்கு எதிர்காலத்தில் என்ன இருக்கிறது?
[பக்கம் 18-ன் படம்]
லட்சக்கணக்கானோர் ‘ஜீவத்தண்ணீரை இலவசமாய் பெற’ ஆரம்பித்திருக்கின்றனர். நீங்களும் அவர்களில் ஒருவரா?