இஸ்ரவேலின் சரித்திரத்தில் தனிச் சிறப்புவாய்ந்த பண்டிகைகள்
“வருஷத்தில் மூன்று தரம், . . . உன் ஆண்மக்கள் அனைவரும் உன் கடவுளாகிய யெகோவா தெரிந்துகொள்ளும் ஸ்தலத்திலே அவர் சந்நிதிக்குமுன்பாக வந்து காணப்படவேண்டும். அவர்கள் யெகோவாவின் சந்நிதியில் வெறுங்கையாய் வரலாகாது.”—உபாகமம் 16:16, தி.மொ.
1. பைபிள் கால பண்டிகை சந்தர்ப்பங்களைப் பற்றி என்ன சொல்லப்படலாம்?
ஒரு பண்டிகையைப் பற்றி நீங்கள் நினைக்கையில் எது மனதிற்கு வருகிறது? பூர்வ காலங்களில் கொண்டாடப்பட்ட சில பண்டிகைகள், கும்மாளத்துக்கும் ஒழுக்கக்கேட்டுக்கும் பேர்போனவை. தற்கால பண்டிகைகள் சிலவற்றிலும் அதுவே உண்மையாக இருக்கிறது. ஆனால், இஸ்ரவேலுக்கு அருளிய கடவுளுடைய நியாயப்பிரமாணத்தில் குறிப்பிடப்பட்ட பண்டிகைகள் வேறுபட்டவையாக இருந்தன. அவை மகிழ்ச்சிக்குரிய சந்தர்ப்பங்களாக இருந்தபோதிலும், அவற்றை ‘பரிசுத்த மாநாடுகளாகவும்’ விவரிக்கலாம்.—லேவியராகமம் 23:2, NW.
2. (அ) ஆண்டில் மூன்று தடவை இஸ்ரவேல ஆண்கள் என்ன செய்யும்படி கட்டளையிடப்பட்டார்கள்? (ஆ) உபாகமம் 16:16-ல் பயன்படுத்தப்பட்டிருக்கிற சொல்லின்படி ஒரு “பண்டிகை” என்பது என்ன?
2 உண்மையுள்ள இஸ்ரவேல ஆண்கள்—பெரும்பாலும் தங்கள் குடும்பங்களோடுகூட—‘யெகோவா தெரிந்துகொண்ட ஸ்தலமாகிய’ எருசலேமுக்குப் பயணப்படுவதில் புத்துயிரளிக்கும் இன்பத்தைக் கண்டடைந்தார்கள்; மேலும், மூன்று பெரிய பண்டிகைகளுக்கு அவர்கள் தயாள சிந்தையுடன் காணிக்கை செலுத்தினார்கள். (உபாகமம் 16:16, தி.மொ.) பழைய ஏற்பாட்டு சொல்லாராய்ச்சிகள் (ஆங்கிலம்) என்ற புத்தகம், உபாகமம் 16:16-ல் ‘பண்டிகை’ என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ள இந்த எபிரெயச் சொல்லை, “மிகுந்த மகிழ்ச்சிக்குரிய சந்தர்ப்பம் . . . அதில், கடவுளுடைய தயவுக்குரிய சிறப்பான சந்தர்ப்பங்கள் சில பலி செலுத்துவதலோடு விருந்துண்ணுதலோடு கொண்டாடப்பட்டன” என்பதாக விளக்கமளிக்கிறது. a
பெரிய பண்டிகைகளின் சிறப்பு
3. அந்த வருடாந்தர பண்டிகைகள் மூன்றும் என்ன ஆசீர்வாதங்களை நினைவுபடுத்தின?
3 இஸ்ரவேல சமுதாயத்தின் முக்கியத் தொழில் விவசாயம்; எனவே மழையின் ரூபத்தில் கடவுளுடைய ஆசீர்வாதம் பொழியும் என அவர்கள் நம்பி வந்தனர். மோசேயின் நியாயப்பிரமாணத்தில் குறிப்பிடப்பட்ட இந்த மூன்று பண்டிகைகளும், இளவேனிற்பருவ தொடக்கத்தில் வாற்கோதுமை அறுவடையும், இளவேனிற்பருவ முடிவில் கோதுமை அறுவடையும், கோடைக்கால முடிவில் மற்றவற்றின் அறுவடையும் செய்து சேர்ப்பதுடன் பொருத்தமாக அமைந்தன. இவை, மகிழ்ந்து களிகூருவதற்கும், மழை சுழற்சியை தொடர செய்பவரும், விளைச்சல் நிலத்தை உண்டாக்கினவருமான அவருக்கு நன்றி செலுத்துவதற்கும் ஏற்ற சந்தர்ப்பங்களாக இருந்தன. ஆனால் இந்தப் பண்டிகைகள் இன்னும் அதிகத்தை உட்படுத்தின.—உபாகமம் 11:11-14.
4. என்ன சரித்திரப்பூர்வ சம்பவம் முதல் பண்டிகையில் கொண்டாடப்பட்டது?
4 முதல் பண்டிகை, பூர்வ பைபிள் காலண்டரின் முதல் மாதமாகிய நிசான் 15-லிருந்து 21 வரையாக கொண்டாடப்பட்டது; இது நம்முடைய காலண்டரில் மார்ச் மாத கடைசி பகுதியிலிருந்து ஏப்ரல் தொடக்கப் பகுதி வரையான காலத்திற்கு ஒத்திருக்கிறது. அது, “புளிப்பில்லா அப்பப் பண்டிகை” என்று அழைக்கப்பட்டது; மேலும், நிசான் 14-ன் பஸ்காவை அடுத்து உடனடியாக அது வந்ததால், “பஸ்கா பண்டிகை” என்றும் அழைக்கப்பட்டது. (லூக்கா 2:41; லேவியராகமம் 23:5, 6) இந்தப் பண்டிகை, எகிப்தில் அனுபவித்த துன்பத்திலிருந்து இஸ்ரவேலர் விடுதலை செய்யப்பட்டதை அவர்களுக்கு நினைப்பூட்டினது; அந்தப் புளிப்பில்லாத அப்பங்கள் ‘சிறுமையின் அப்பம்’ என்று அழைக்கப்பட்டன. (உபாகமம் 16:3) எகிப்தைவிட்டு அவர்கள் அவ்வளவு அவசரமாய் வெளியே வந்ததால், பிசைந்த மாவுடன் புளிப்பைச் சேர்த்து அது பொங்கியெழும்பும்வரை காத்திருப்பதற்கு நேரம் இருக்கவில்லை என்பதை அது அவர்களுக்கு நினைப்பூட்டியது. (யாத்திராகமம் 12:34) இந்தப் பண்டிகையின்போது, இஸ்ரவேலர் எவருடைய வீட்டிலும், புளித்த அப்பம் காணப்படக்கூடாது. அந்நியர் உட்பட, இந்தப் பண்டிகையை ஆசரிப்போர் எவராயினும், புளித்த அப்பத்தைச் சாப்பிட்டால் அவனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட வேண்டும்.—யாத்திராகமம் 12:19.
5. இரண்டாவது பண்டிகையால் எந்த சிலாக்கியம் நினைவுபடுத்தப்பட்டிருக்கலாம், இந்தக் கொண்டாட்ட மகிழ்ச்சியில் யாரையும் சேர்த்துக்கொள்ள வேண்டும்?
5 இரண்டாவது பண்டிகை, நிசான் 16-க்கு பின், ஏழு வாரங்கள் (49 நாட்கள்) கழித்து கொண்டாடப்பட்டது; நம்முடைய காலண்டரில் மே மாதத்தின் பிற்பகுதிக்கு ஒத்த மூன்றாவது மாதமாகிய சீவன் 6-ல் அது தொடங்கினது. (லேவியராகமம் 23:15, 16) இது வாரங்களின் பண்டிகை என்று அழைக்கப்பட்டது (கிரேக்கில் “ஐம்பதாவது” என்ற அர்த்தத்தை உடைய பெந்தெகொஸ்தே என்றும் இயேசுவின் நாளில் அழைக்கப்பட்டது). இது, சீனாய் மலையில் இஸ்ரவேல் ஜனம் நியாயப்பிரமாண உடன்படிக்கைக்கு உட்பட்ட சமயத்தில், ஆண்டின் அந்தப் பகுதிக்கு நெருங்கிய காலத்தில் ஆசரிக்கப்பட்டது. (யாத்திராகமம் 19:1, 2) இந்தப் பண்டிகையின்போது, உண்மையுள்ள இஸ்ரவேலர், கடவுளுடைய பரிசுத்த ஜனங்களாய் தனிப்பட்டவர்களாக இருக்கும் தங்கள் சிலாக்கியத்தின் பேரில் சிந்தனை செலுத்தியிருக்கலாம். கடவுளுடைய தனிப்பட்ட ஜனமாக அவர்கள் இருந்ததானது, குறைவில் இருப்போரும் பண்டிகையை அனுபவித்து மகிழும்படி, அப்படிப்பட்டவர்களுக்கு அன்புள்ள கவனம் செலுத்தும்படியான கட்டளை போன்ற கடவுளுடைய நியாயப்பிரமாணத்திற்கு கீழ்ப்படிதலைத் தேவைப்படுத்தியது.—லேவியராகமம் 23:22; உபாகமம் 16:10-12.
6. எந்த அனுபவத்தை மூன்றாவது பண்டிகை கடவுளுடைய ஜனங்களுக்கு நினைப்பூட்டியது?
6 மூன்று பெரிய வருடாந்தர பண்டிகைகளில் கடைசியானது சேர்ப்புக்கால பண்டிகை அல்லது கூடாரப் பண்டிகை என்று அழைக்கப்பட்டது. இது, நம்முடைய காலண்டரில் அக்டோபர் தொடக்கப் பகுதிக்கு ஒப்பான, திஸ்ரி அல்லது எத்தானிம் எனப்படும் ஏழாவது மாதத்தில், 15-வது நாளிலிருந்து 21-வது நாள் வரையாக நடந்தது. (லேவியராகமம் 23:34) இந்தச் சமயத்தின்போது, கடவுளுடைய ஜனங்கள் தங்கள் வீடுகளுக்கு வெளியில் அல்லது தங்கள் மாடிகளில், கிளைகளையும் இலைகளையும் கொண்டு வேயப்பட்ட தற்காலிக கூடாரங்களில் வாசம் செய்தார்கள். இது, எகிப்திலிருந்து வாக்குப்பண்ணப்பட்ட தேசத்திற்குப் பயணப்பட்ட தங்கள் 40 ஆண்டு பயணத்தை அவர்களுக்கு நினைப்பூட்டியது; அப்போது அந்த ஜனத்தார் தங்கள் அன்றாட தேவைகளுக்கு கடவுளை சார்ந்திருக்க கற்றுக்கொண்டனர்.—லேவியராகமம் 23:42, 43; உபாகமம் 8:15, 16.
7. பூர்வ இஸ்ரவேலில் கொண்டாடப்பட்ட பண்டிகைகளுக்குத் திரும்ப கவனம் செலுத்துவதிலிருந்து நாம் எவ்வாறு பயனடைகிறோம்?
7 கடவுளுடைய பூர்வ ஜனங்களின் சரித்திரத்தில் குறிப்பிடத்தக்க உச்சக்கட்டங்களாக நிரூபித்த சில பண்டிகைகளுக்கு நாம் திரும்ப கவனம் செலுத்தலாம். இன்று இது நமக்கு ஊக்கமூட்டுவதாக இருக்க வேண்டும், ஏனெனில் நாமுங்கூட ஒவ்வொரு வாரமும், ஆண்டுக்கு மூன்று தடவையும் பெரிய அசெம்பிளிகளிலும் மாநாடுகளிலும் தவறாமல் ஒன்றாகக் கூடிவரும்படி அழைக்கப்படுகிறோம்.—எபிரெயர் 10:24, 25.
தாவீது வம்ச அரசர்கள் ஆண்ட காலத்தில்
8. (அ) அரசனாகிய சாலொமோனின் நாட்களில் சரித்திர புகழ்பெற்ற என்ன ஆசரிப்பு நடத்தப்பட்டது? (ஆ) மாதிரி முன்குறித்த மெய்ம்மையான எந்தக் கூடாரப் பண்டிகையின் மகத்தான உச்சக்கட்ட நிகழ்ச்சிக்கு நாம் ஆவலோடு எதிர்பார்க்கலாம்?
8 தாவீதின் குமாரனாகிய சாலொமோன் ராஜாவின் செழிப்பான ஆட்சி காலத்தில் கூடாரப் பண்டிகை சமயத்தின்போது சரித்திர புகழ்பெற்ற ஆசரிப்பு நடந்தேறியது. வாக்குப்பண்ணப்பட்ட தேசத்தின் கடைக்கோடிகளிலிருந்து ‘மகா பெரிய கூட்டம்,’ கூடாரப் பண்டிகைக்காகவும் ஆலய பிரதிஷ்டைக்காகவும் ஒன்றுகூடியது. (2 நாளாகமம் 7:8) அது முடிந்தபோது, கொண்டாடியவர்களுக்கு அரசன் சாலொமோன் விடைகொடுத்து அனுப்பினபோது அவர்கள், “ராஜாவை வாழ்த்தி யெகோவா தமது தாசனாகிய தாவீதுக்கும் தமது ஜனமாகிய இஸ்ரவேலுக்கும் செய்த எல்லா நன்மையினிமித்தமும் சந்தோஷப்பட்டு மனமகிழ்ச்சியோடே தங்கள் கூடாரங்களுக்குப் போய்விட்டார்கள்.” (1 இராஜாக்கள் 8:66, தி.மொ.) அது நிச்சயமாகவே தனிச்சிறப்பு வாய்ந்த பண்டிகையின் உச்சக்கட்டமாகும். இன்று கடவுளுடைய ஊழியர்கள், பெரிய சாலொமோனாகிய இயேசு கிறிஸ்துவின் ஆயிர ஆண்டு ஆட்சியின் முடிவில் வரவிருக்கிற, மாதிரி முன்குறித்த மெய்ம்மையான கூடாரப் பண்டிகையின் மகத்தான உச்சக்கட்டத்திற்காக ஆவலுடன் எதிர்நோக்குகிறார்கள். (வெளிப்படுத்துதல் 20:3, 7-10, 14, 15) அந்தச் சமயத்தில், உயிர்த்தெழுப்பப்பட்டவர்களும் அர்மகெதோனைத் தப்பிப்பிழைத்திருப்பவர்களும் உட்பட, பூமியின் எல்லா முனைகளிலும் வாழும் ஜனங்கள், யெகோவா தேவனை வணங்கும் மகிழ்ச்சியுள்ள வணக்கத்தில் ஐக்கியப்பட்டிருப்பார்கள்.—சகரியா 14:16.
9-11. (அ) அரசனாகிய எசேக்கியாவின் நாட்களில் தனிச் சிறப்புவாய்ந்த ஒரு பண்டிகைக்கு எது வழிநடத்தினது? (ஆ) வடக்கில் இருந்த இஸ்ரவேலின் பத்துக் கோத்திர ராஜ்யத்திலிருந்து வந்த பலரால் என்ன முன்மாதிரி வைக்கப்பட்டது, இன்று நமக்கு இது எதை நினைப்பூட்டுகிறது?
9 பைபிளில் அறிவிக்கப்பட்டுள்ள முக்கியமான அடுத்த பண்டிகை, ஆலயத்தை மூடிவிட்டு யூதா ராஜ்யத்தை விசுவாச துரோகத்திற்கு வழிநடத்தின பொல்லாத அரசனாகிய ஆகாஸின் ஆட்சிக்குப் பின் வந்தது. ஆகாஸுக்குப் பின் வந்தவர் நல்ல அரசனாகிய எசேக்கியா. தன்னுடைய ஆட்சியின் முதல் ஆண்டில் எசேக்கியா, 25 வயதானவராக இருந்தபோது, திரும்ப சரிசெய்வதும் சீர்திருத்துவதுமான ஒரு பெரிய திட்டத்தைத் தொடங்கினார். ஆலயத்தை உடனடியாகத் திறந்து அதைப் பழுதுபார்க்க ஏற்பாடு செய்தார். பின்பு, பகைமையுடன் வடக்கில் இருந்த இஸ்ரவேலின் பத்துக் கோத்திர ராஜ்யத்தில் வாழ்ந்த இஸ்ரவேலருக்கு கடிதங்களை அரசர் அனுப்பி, அவர்களும் வந்து பஸ்காவையும் புளிப்பில்லா அப்பப் பண்டிகையையும் ஆசரிக்கும்படி அழைப்பு கொடுத்தார். தங்கள் உடன்தோழர்கள் பரியாசம் செய்தபோதிலும் பலர் வந்தனர்.—2 நாளாகமம் 30:1, 10, 11, 18.
10 அந்தப் பண்டிகை வெற்றிகரமாக நடந்ததா? பைபிள் இவ்வாறு அறிவிக்கிறது: “இப்படியாக எருசலேமிலே கூடியிருந்த இஸ்ரவேல் புத்திரர் புளிப்பில்லா அப்பப் பண்டிகையை ஏழுநாளளவும் மகா ஆனந்தத்தோடே கொண்டாடினார்கள்; லேவியரும் ஆசாரியரும் யெகோவாவுக்கென்று பேரோசையாய்த் தொனிக்கும் கீதவாக்கியங்களை முழக்கித் தினந்தோறும் யெகோவாவைத் துதித்துக்கொண்டிருந்தார்கள்.” (2 நாளாகமம் 30:21, தி.மொ.) இன்றிருக்கும் கடவுளுடைய ஜனங்களுக்கு எத்தகைய சிறந்த முன்மாதிரியை அந்த இஸ்ரவேலர் வைத்தார்கள்; இவர்களில் பலர் எதிர்ப்பைச் சகித்து, மாநாடுகளுக்கு ஆஜராகும்படி நெடுந்தூரம் பயணப்படுகிறார்கள்!
11 உதாரணமாக, 1989-ல் போலாந்தில் நடத்தப்பட்ட “தேவ பக்தி” மாவட்ட மாநாடுகள் மூன்றைக் கவனியுங்கள். வந்திருந்த 1,66,518 பேரில், யெகோவாவின் சாட்சிகளுடைய ஊழியம் அச்சமயம் தடை செய்யப்பட்டிருந்த முன்னாள் சோவியத் யூனியனிலிருந்தும் மற்ற கிழக்கு ஐரோப்பிய நாடுகளிலிருந்தும் வந்த பெரும் தொகுதியினர் அடங்கியிருந்தனர். “இந்த மாநாடுகளுக்கு வந்திருந்தவர்களில் சிலருக்கு, 15 அல்லது 20-க்கு மேற்பட்ட யெகோவாவின் ஜனங்கள் கூடின பெரிய கூட்டத்தில் அவர்கள் இருந்தது இதுவே முதல் தடவை. ஸ்டேடியத்திலிருந்த பத்தாயிரக்கணக்கானோரை அவர்கள் பார்த்து, அவர்களோடு ஜெபத்திலும், யெகோவாவுக்குச் செலுத்தும் துதி பாடல்களிலும் அவர்களோடு ஒன்றுசேர்ந்துகொண்டபோது, அவர்களுடைய இருதயங்கள் நன்றியுணர்வால் பொங்கின” என்று யெகோவாவின் சாட்சிகள்—கடவுளுடைய ராஜ்யத்தை அறிவிப்போர் b (ஆங்கிலம்) புத்தகம் அறிவிக்கிறது.—பக்கம் 279.
12. அரசனாகிய யோசியாவின் ஆட்சியில் அந்தத் தனிச் சிறப்புவாய்ந்த பண்டிகைக்கு எது வழிநடத்தினது?
12 எசேக்கியாவின் மரணத்திற்குப் பின், மனாசே, ஆமோன் ஆகிய அரசர்களின் ஆட்சியின்கீழ், யூதேயர்கள் மறுபடியுமாக பொய் வணக்கத்திற்கு உட்பட்டனர். பின்பு மற்றொரு நல்ல அரசனாகிய, இளைஞன் யோசியாவின் ஆட்சி வந்தது. இவர், உண்மையான வணக்கத்தைத் திரும்ப நிலைநாட்டுவதற்கு தைரியத்துடன் செயல்பட்டார். 25 வயதில் யோசியா, ஆலயம் பழுதுபார்க்கப்படும்படி கட்டளையிட்டார். (2 நாளாகமம் 34:8) ஆலயம் பழுதுபார்க்கப்படுகையில், மோசேயால் எழுதப்பட்ட நியாயப்பிரமாணம் அங்கு கண்டெடுக்கப்பட்டது. கடவுளுடைய நியாயப்பிரமாணத்தில் தான் வாசித்தவற்றால் அரசனாகிய யோசியா உள்ளாழத்தில் தூண்டுவிக்கப்பட்டு, எல்லா ஜனங்களுக்கும் அது வாசிக்கப்படும்படி ஏற்பாடு செய்தார். (2 நாளாகமம் 34:14, 30) பின்பு, எழுதப்பட்டிருந்ததன்படியே ஒரு பஸ்கா ஆசரிப்புக்காக அவர் ஏற்பாடு செய்தார். அந்த நிகழ்ச்சிக்காக தாராளமாய் நன்கொடை அளிப்பதன்மூலம் அரசன் நல்ல முன்மாதிரியை வைத்தார். இதன் பலனாக, பைபிள் இவ்வாறு அறிவிக்கிறது: “தீர்க்கதரிசியாகிய சாமுவேலின் நாள் தொடங்கி, இஸ்ரவேலிலே அப்படிக்கொத்த பஸ்கா ஆசரிக்கப்படவில்லை.”—2 நாளாகமம் 35:7, 17, 18.
13. எசேக்கியா, யோசியா ஆகியோர் நடத்தின பண்டிகை கொண்டாட்டங்கள், இன்று நமக்கு எதை நினைப்பூட்டுகின்றன?
13 எசேக்கியாவும் யோசியாவும் செய்த சீர்திருத்தங்கள், 1914-ல் இயேசு கிறிஸ்து சிங்காசனத்தில் ஏற்றப்பட்டதிலிருந்து மெய்க் கிறிஸ்தவர்களிடையே உண்மையான வணக்கம் அருமையான விதத்தில் மீண்டும் நிலைநாட்டப்பட்டிருப்பதோடு ஒத்திருக்கின்றன. முக்கியமாய் யோசியாவின் சீர்திருத்தங்களைக் குறித்ததில் உண்மையாக இருந்ததுபோல், நவீனநாளில் உண்மை வணக்கம் நிலைநாட்டப்பட்டிருப்பதும் கடவுளுடைய வார்த்தையில் எழுதப்பட்டிருப்பதை ஆதாரமாகக் கொண்டு செய்யப்பட்டிருக்கிறது. மேலும், எசேக்கியாவின் நாட்களுக்கும் யோசியாவின் நாட்களுக்கும் இணையாக தற்கால திரும்பப் புதுப்பித்தல், அசெம்பிளிகளாலும் மாநாடுகளாலும் குறிக்கப்பட்டிருக்கிறது; அவற்றில் பைபிள் தீர்க்கதரிசனத்தின் கிளர்ச்சியூட்டும் விளக்கங்களும், பைபிள் நியமங்களின் சமயோசித பொருத்தப் பிரயோகிப்புகளும் தெளிவாக எடுத்துக் காட்டப்பட்டிருக்கின்றன. அச்சமயம் பெரும் எண்ணிக்கையானோர் முழுக்காட்டப்பட்டதும் இந்த அறிவூட்டும் நிகழ்ச்சிகளின் மகிழ்ச்சியை மேலும் அதிகரித்திருக்கிறது. எசேக்கியாவின் நாட்களிலும் யோசியாவின் நாட்களிலும் மனந்திரும்பின இஸ்ரவேலரைப்போல், புதிதாக முழுக்காட்டப்பட்டவர்கள், கிறிஸ்தவமண்டலத்தின் மற்றும் சாத்தானுடைய உலகத்தின் மீதிபாகத்தின் பொல்லாத பழக்கவழக்கச் செயல்களை விட்டொழித்தனர். 1997-ல் 3,75,000 பேர் பரிசுத்த கடவுளாகிய யெகோவாவுக்குத் தங்கள் ஒப்புக்கொடுத்தலின் அடையாளமாக முழுக்காட்டப்பட்டனர்—சராசரியாக ஒரு நாளுக்கு 1,000-த்திற்கு மேற்பட்டவர்கள்.
நாடு கடத்தப்பட்டதற்குப் பின்பு
14. பொ.ச.மு. 537-ல் தனிச் சிறப்புவாய்ந்த ஒரு பண்டிகைக்கு எது வழிநடத்தினது?
14 யோசியா இறந்த பின்பு, அந்த ஜனம் மறுபடியுமாக இழிவான பொய் வணக்கத்திற்குத் திரும்பினது. முடிவாக, பொ.ச.மு. 607-ல், எருசலேமுக்கு விரோதமாக பாபிலோனிய சேனைகளை வரவழைப்பதன் மூலம் யெகோவா தம்முடைய ஜனத்தைத் தண்டித்தார். அந்த நகரமும் அதன் ஆலயமும் அழிக்கப்பட்டன, தேசம் பாழாக்கப்பட்டது. பாபிலோனில் யூதருடைய சிறையிருப்பின் 70 ஆண்டுகள் அதைப் பின்தொடர்ந்தன. பின்பு, மனந்திரும்பின மீதியான யூதருக்கு கடவுள் மறுபடியுமாக புது ஊக்கம் அளித்தார். அவர்கள், உண்மையான வணக்கத்தைத் திரும்ப நிலைநாட்டும்படி வாக்குப்பண்ணப்பட்ட தேசத்திற்குத் திரும்பிச் சென்றனர். பாழ்ப்படுத்தப்பட்ட எருசலேம் நகரத்திற்கு, பொ.ச.மு. 537-ம் ஆண்டின் ஏழாம் மாதத்தில் அவர்கள் வந்துசேர்ந்தனர். நியாயப்பிரமாணத்தில் குறிக்கப்பட்டபடி தவறாமல் அன்றாட பலிகளைச் செலுத்துவதற்கு ஒரு பலிபீடத்தைக் கட்டினதே அவர்கள் செய்த முதல் காரியமாக இருந்தது. அது, மற்றொரு சரித்திரப்பூர்வ கொண்டாட்டத்திற்கு ஏற்ற சமயமாக இருந்தது. ‘எழுதியிருக்கிறபடியே அவர்கள் கூடாரப்பண்டிகையை ஆசரித்தார்கள்.’—எஸ்றா 3:1-4.
15. பொ.ச.மு. 537-ல் திரும்ப நிலைநாட்டப்பட்ட மீதிபேருக்கு முன்னால் என்ன வேலை இருந்தது, எவ்வாறு இதற்கு ஒப்பான ஒரு நிலைமை 1919-ல் இருந்தது?
15 நாடுகடத்தப்பட்டு சிறையிருப்பிலிருந்து திரும்பின இவர்களுக்கு முன்னால், கடவுளுடைய ஆலயத்தையும் எருசலேமையும் அதன் மதில்களையும் திரும்பக் கட்டும் ஒரு பெரிய வேலை இருந்தது. பொறாமைகொண்ட சுற்றுப்புறத்தாரிடமிருந்து மிகுதியான எதிர்ப்பு இருந்தது. ஆலயம் கட்டப்பட்டு வந்தபோது, அது ‘அற்பமான ஆரம்பத்தின் நாளாக’ இருந்தது. (சகரியா 4:10) அந்த நிலைமை, அபிஷேகஞ்செய்யப்பட்ட உண்மையுள்ள கிறிஸ்தவர்கள் 1919-ல் இருந்த நிலைமைக்கு ஒப்பாக இருந்தது. பொய்மத உலகப் பேரரசாகிய மகா பாபிலோனுக்கு சிறைப்பட்டிருந்த ஆவிக்குரிய சிறையிருப்பிலிருந்து அந்த மறக்க முடியாத ஆண்டில் அவர்கள் விடுதலை செய்யப்பட்டனர். அவர்கள் சில ஆயிரம் பேராக மாத்திரமே இருந்து, பகைமைகொண்ட எதிரி உலகத்தை எதிர்ப்பட்டனர். உண்மையான வணக்கத்தின் முன்னேற்றத்தை கடவுளுடைய சத்துருக்கள் தடுத்து நிறுத்த முடியுமா? இந்தக் கேள்விக்குப் பதில், எபிரெய வேதவசனங்களில் பதிவுசெய்யப்பட்டுள்ள கடைசி இரண்டு பண்டிகைகளின் ஆசரிப்புகளை மனதுக்குக் கொண்டுவருகிறது.
16. பொ.ச.மு. 515-ல் நடத்தப்பட்ட பண்டிகையைப் பற்றியதில் எது குறிப்பிடத்தக்கதாக இருந்தது?
16 பொ.ச.மு. 515-ம் ஆண்டின் ஆதார் மாதத்தில் அந்த ஆலயம் கடைசியாகத் திரும்பக் கட்டப்பட்டது. அது, நிசான் மாத இளவேனிற்பருவ பண்டிகை கொண்டாடுவதற்குச் சரியான சமயமாயிருந்தது. பைபிள் இவ்வாறு அறிவிக்கிறது: “புளிப்பில்லாத அப்பப் பண்டிகையை ஏழுநாளாகச் சந்தோஷத்துடனே ஆசரித்தார்கள்; கர்த்தர் [“யெகோவா,” தி.மொ.] அவர்களை மகிழ்ச்சியாக்கி, அவர்கள் கைகளை இஸ்ரவேலின் தேவன் என்னும் தேவனுடைய ஆலயத்தின் வேலையிலே பலப்படுத்தத்தக்கதாய் அசீரியருடைய ராஜாவின் இருதயத்தை அவர்கள் பட்சத்தில் சார்ந்திருக்கப் பண்ணினார்.”—எஸ்றா 6:22.
17, 18. (அ) பண்டிகைக்குரிய எந்தத் தனிச் சிறப்புவாய்ந்த உச்சக்கட்டம் பொ.ச.மு. 455-ல் எட்டப்பட்டது? (ஆ) இன்று, நாம் எவ்வாறு அதைப்போன்ற நிலைமையில் இருக்கிறோம்?
17 அறுபது ஆண்டுகளுக்குப் பிறகு, பொ.ச.மு. 455-ல் மற்றொரு தனிச் சிறப்புவாய்ந்த உச்சக்கட்டம் எட்டப்பட்டது. அந்த ஆண்டின் கூடாரப் பண்டிகை, எருசலேமின் மதில்கள் திரும்பக் கட்டப்பட்டு முடிந்ததைக் குறித்தது. பைபிள் இவ்வாறு அறிவிக்கிறது: “சிறையிருப்பிலிருந்து திரும்பிவந்தவர்களின் சபையார் எல்லாரும் கூடாரங்களைப் போட்டு, கூடாரங்களில் குடியிருந்தார்கள்; இப்படியே நூனின் குமாரனாகிய யோசுவாவின் நாட்கள்முதல் அந்நாள் மட்டும் இஸ்ரவேல் புத்திரர் செய்யாதிருந்து இப்பொழுது செய்தபடியால், மிகுந்த சந்தோஷமுண்டாயிருந்தது.”—நெகேமியா 8:17.
18 கடும் எதிர்ப்பின் மத்தியிலும் கடவுளுடைய உண்மையான வணக்கத்தின் மறக்கமுடியாத எத்தகைய ஒரு திரும்ப நிலைநாட்டுதலாக அது இருந்தது! இன்று இருக்கும் நிலைமையும் இதைப் போன்றதே. துன்புறுத்துதலும் எதிர்ப்பும் தொடர்ந்து தாக்குகிறபோதிலும், கடவுளுடைய ராஜ்யத்தைப் பற்றிய நற்செய்தியைப் பிரசங்கிக்கும் இந்த மகத்தான ஊழியம் பூமியின் கடைமுனைகள் வரையாக எட்டிவிட்டது; கடவுளுடைய நியாயத்தீர்ப்பு செய்திகள் பூமியெங்கும் விரிவாக தொனிக்கப்பட்டிருக்கின்றன. (மத்தேயு 24:14) அபிஷேகஞ்செய்யப்பட்ட 1,44,000 பேரில் மீதியானோர், கடைசியாக முத்திரை போடப்படுவது நெருங்கி வருகிறது. 50 லட்சத்துக்கும் மேற்பட்ட “மற்ற செம்மறியாடுகளான” அவர்களுடைய தோழர்கள், அபிஷேகஞ்செய்யப்பட்ட மீதியானோருடன் ‘ஒரே மந்தையாக’ சகல தேசங்களிலிருந்தும் கூட்டிச் சேர்க்கப்பட்டிருக்கின்றனர். (யோவான் 10:16, NW; வெளிப்படுத்துதல் 7:3, 9, 10) கூடாரப் பண்டிகையினுடைய தீர்க்கதரிசனக் காட்சியின் எத்தகைய அதிசயமான நிறைவேற்றம்! கூட்டிச்சேர்க்கும் இந்த மகத்தான ஊழியம் புதிய உலகத்திலும் தொடரும்; அப்போது உயிர்த்தெழுப்பப்படும் நூற்றுக்கோடிக்கணக்கானவர்கள், மாதிரி முன்குறித்த மெய்ம்மையான கூடாரப் பண்டிகையை ஆசரிப்பதில் சேர்ந்துகொள்ளும்படி அழைக்கப்படுவார்கள்.—சகரியா 14:16-19.
பொ.ச. முதல் நூற்றாண்டில்
19. பொ.ச.மு. 32-ல் நடந்த கூடாரப் பண்டிகையை எது கவனிக்கத்தக்கதாக்கிற்று?
19 பைபிளில் பதிவுசெய்யப்பட்ட மிக முக்கியமான பண்டிகை ஆசரிப்புகளில், சந்தேகமில்லாமல், கடவுளுடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்து சென்றிருந்தவை இருந்தன. உதாரணமாக, பொ.ச. 32-ம் ஆண்டில் கூடாரப் பண்டிகைக்கு இயேசு வந்திருந்ததைக் கவனியுங்கள். முக்கியமான சத்தியங்களைப் போதிப்பதற்கு அவர் அந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி எபிரெய வேதவசனங்களிலிருந்து மேற்கோள் காட்டுவதன்மூலம் தம்முடைய போதகத்திற்கு ஆதாரம் அளித்தார். (யோவான் 7:2, 14, 37-39) ஆலயத்தின் ஓர் உட்பிரகாரத்தில் நான்கு பெரிய விளக்குகள் பொருத்தப்படுவது இந்தப் பண்டிகையின் வழக்கமான ஓர் அம்சமாக இருந்தது. இது, இரவில் வெகுநேரம் வரையாகத் தொடர்ந்த பண்டிகை நடவடிக்கைகளை அனுபவித்து மகிழ்வதற்கு உதவிசெய்தது. இயேசு பின்வருமாறு சொன்னபோது இந்தப் பெரிய விளக்குகளை இணைவாக வைத்து சொன்னதாகத் தெரிகிறது: “மறுபடியும் இயேசு ஜனங்களை நோக்கி: நான் உலகத்திற்கு ஒளியாயிருக்கிறேன், என்னைப் பின்பற்றுகிறவன் இருளிலே நடவாமல் ஜீவஒளியை அடைந்திருப்பான்” என்று சொன்னார்.—யோவான் 8:12.
20. பொ.ச. 33-ன் பஸ்கா ஏன் கவனிக்கத்தக்கதாக இருந்தது?
20 பின்பு, கவனிக்கத்தக்க ஆண்டாகிய பொ.ச. 33-ன் பஸ்காவும் புளிப்பில்லா அப்பப் பண்டிகையும் வந்தது. அந்தப் பஸ்காவின் நாளில் இயேசு அவருடைய பகைஞர்களால் கொல்லப்பட்டு, “உலகத்தின் பாவத்தைச்” சுமந்து தீர்க்கிறவராக மரித்து, இந்த மாதிரி முன்குறித்த உண்மையான பஸ்கா ஆட்டுக்குட்டியானார். (யோவான் 1:29; 1 கொரிந்தியர் 5:7) மூன்று நாட்களுக்குப்பின், நிசான் 16-ல் கடவுள், இயேசுவை அழியாமையுடைய ஓர் ஆவி சரீரத்துடன் உயிர்த்தெழுப்பினார். இது, நியாயப்பிரமாணத்தில் கட்டளையிட்டிருந்தபடி வாற்கோதுமையின் முதற்கனிகளைச் செலுத்துவதுடன் ஒத்திருந்தது. இவ்வாறு, உயிர்த்தெழுப்பப்பட்ட கர்த்தராகிய இயேசு கிறிஸ்து, “நித்திரையடைந்தவர்களில் முதற்பலனானார்.”—1 கொரிந்தியர் 15:20.
21. பொ.ச. 33-ன் பெந்தெகொஸ்தே நாளில் என்ன சம்பவித்தது?
21 பொ.ச. 33-ன் பெந்தெகொஸ்தே, உண்மையாகவே முக்கியமான பண்டிகையாக இருந்தது. இந்த நாளில், இயேசுவின் சீஷர்களான ஏறக்குறைய 120 பேர் உட்பட, யூதர்களும் யூத மதத்திற்கு மாறியவர்களுமான பலர், எருசலேமில் கூடிவந்திருந்தனர். பண்டிகை ஆசரிக்கப்படுகையில், உயிர்த்தெழுப்பப்பட்ட கர்த்தராகிய இயேசு கிறிஸ்து, 120 பேர் மீது கடவுளுடைய பரிசுத்த ஆவியை ஊற்றினார். (அப்போஸ்தலர் 1:15; 2:1-4, 33) அதனால் அவர்கள் அபிஷேகஞ்செய்யப்பட்டு, இயேசு கிறிஸ்துவால் மத்தியஸ்தம் செய்யப்பட்ட புது உடன்படிக்கையின் மூலமாக கடவுளுடைய தெரிந்துகொள்ளப்பட்ட புதிய ஜனம் ஆனார்கள். அந்தப் பண்டிகையின்போது, யூத பிரதான ஆசாரியர், கோதுமை அறுவடையின் முதற்கனிகளிலிருந்து செய்யப்பட்ட புளிப்புள்ள இரண்டு அப்பங்களை கடவுளுக்குச் செலுத்தினார். (லேவியராகமம் 23:15-17) இந்தப் புளிப்புள்ள அப்பங்கள், ‘ஒரு ராஜ்யமும் ஆசாரியருமாய் . . . பூமியின்மீது அரசாளுவோராகச்’ சேவிக்கும்படி இயேசு, ‘கடவுளுக்கென்று மீட்டுக்கொண்ட’ 1,44,000 அபூரண மனிதர்களைப் படமாகக் குறிக்கின்றன. (வெளிப்படுத்துதல் [தரிசனம்] 5:9, 10, தி.மொ.; 14:1, 3) இந்தப் பரலோக அரசர்கள், பாவிகளான மனிதவர்க்கத்தின் இரண்டு கிளைகளாகிய யூதரிலிருந்தும் புறஜாதியாரிலிருந்தும் வருவதும், அந்தப் புளிப்புள்ள இரண்டு அப்பங்களால் அடையாளமாகக் குறிக்கப்படலாம்.
22. (அ) நியாயப்பிரமாண உடன்படிக்கையின் பண்டிகைகளை கிறிஸ்தவர்கள் ஏன் ஆசரிக்கிறதில்லை? (ஆ) அடுத்தக் கட்டுரையில் எதை நாம் சிந்திப்போம்?
22 பொ.ச. 33-ன் பெந்தெகொஸ்தே நாளில் இந்தப் புது உடன்படிக்கை செயல்பட தொடங்கினபோது, பழைய நியாயப்பிரமாண உடன்படிக்கை கடவுளுடைய பார்வையில் இனிமேலும் பயனுடையதாக இல்லாமல் நின்றுபோயிற்று என்று அர்த்தமாகியது. (2 கொரிந்தியர் 3:14, NW; எபிரெயர் 9:15; 10:16) இது, அபிஷேகஞ்செய்யப்பட்ட கிறிஸ்தவர்கள் சட்டங்கள் இல்லாதவர்களாக இருக்கிறார்கள் என்று அர்த்தப்படுகிறதில்லை. இயேசு கிறிஸ்துவால் கற்பிக்கப்பட்டு, தங்கள் இருதயங்களில் எழுதப்பட்டிருக்கிற தேவப் பிரமாணத்திற்குக் கீழ்ப்பட்டவர்களாக அவர்கள் இருக்கிறார்கள். (கலாத்தியர் 6:2) ஆகையால், இந்த மூன்று வருடாந்தர பண்டிகைகளும், பழைய நியாயப்பிரமாண உடன்படிக்கையின் பாகமாக இருப்பதனால், கிறிஸ்தவர்களால் ஆசரிக்கப்படுகிறதில்லை. (கொலோசெயர் 2:16, 17) இருப்பினும், தங்கள் பண்டிகைகளையும், வணக்கத்திற்குரிய மற்ற கூட்டங்களையும் பற்றியவற்றில், கிறிஸ்தவ காலத்திற்கு முன்னிருந்த கடவுளுடைய ஊழியர்களின் மனப்பான்மையிலிருந்து நாம் அதிகம் கற்றுக்கொள்ளலாம். கிறிஸ்தவ கூட்டங்களுக்கு தவறாமல் வரவேண்டிய அவசியத்தை மதித்துணரும்படி, சந்தேகமில்லாமல் எல்லாரையும் தூண்டி ஊக்குவிக்கும் முன்மாதிரிகளை எமது அடுத்தக் கட்டுரையில் சிந்திப்போம்.
[அடிக்குறிப்புகள்]
a உவாட்ச்டவர் பைபிள் அண்ட் டிராக்ட் சொஸைட்டி பிரசுரித்த, வேதாகமங்களின்பேரில் உட்பார்வை (ஆங்கிலம்), தொகுதி 1, பக்கம் 820, பத்தி 1, “பண்டிகை” என்பதன் கீழ், பாராக்கள் 1-ஐயும் 3-ஐயும் காண்க.
b உவாட்ச்டவர் பைபிள் அண்ட் டிராக்ட் சொஸைட்டியால் பிரசுரிக்கப்பட்டது.
மறுபார்வை கேள்விகள்
◻ இஸ்ரவேல் ஜனத்தின் மூன்று பெரிய பண்டிகைகள் என்ன நோக்கத்தைச் சேவித்தன?
◻ எசேக்கியாவின் நாளிலும் யோசியாவின் நாளிலும் கொண்டாடப்பட்ட பண்டிகைகள் என்ன தனிச் சிறப்புவாய்ந்தவையாக இருந்தன?
◻ பொ.ச.மு. 455-ல், தனிச் சிறப்புவாய்ந்த என்ன பண்டிகை கொண்டாடப்பட்டது, அது ஏன் நமக்கு ஊக்கமூட்டுதலாக இருக்கிறது?
◻ பொ.ச. 33-ன் பஸ்காவையும் பெந்தெகொஸ்தே நாளையும் பற்றியவற்றில் எது கவனிக்கத்தக்கதாக இருந்தது?
[பக்கம் 12-ன் பெட்டி]
இன்று நமக்கு ஒரு பண்டிகைக்குரிய பாடம்
பாவத்திற்கு ஈடுசெய்யும் இயேசுவின் பலியிலிருந்து நிலையான நன்மைபெற விரும்புவோர் யாவரும், புளிப்பில்லா அப்பப் பண்டிகையால் சித்தரித்துக் காட்டப்படுகிறதற்கு இசைவாக வாழவேண்டும். மாதிரி முன்குறித்த மெய்ம்மையான இந்தப் பண்டிகை, அபிஷேகஞ்செய்யப்பட்ட கிறிஸ்தவர்கள் இந்தப் பொல்லாத உலகத்திலிருந்து தாங்கள் விடுதலை செய்யப்பட்டதன் பேரிலும், இயேசுவின் மீட்கும் கிரயத்தின் மூலம் பாவக் கண்டனத்திலிருந்து தாங்கள் விடுதலை செய்யப்பட்டதன்பேரிலும் கிடைத்த மகிழ்ச்சியைக் கொண்டாடுவதாக இருக்கிறது. (கலாத்தியர் 1:4; கொலோசெயர் 1:13, 14) சொல்லர்த்தமான பண்டிகை ஏழு நாட்கள் நீடித்தது—ஆவிக்குரிய முழுமையை அடையாளமாகக் குறிப்பதற்கு பைபிளில் பயன்படுத்தப்படும் ஓர் எண். மாதிரி முன்குறித்த மெய்ம்மையான இந்தப் பண்டிகை, அபிஷேகஞ்செய்யப்பட்ட கிறிஸ்தவ சபை பூமியில் இருக்கும் காலம் முழுவதும் நீடிக்கிறது; மேலும் ‘துப்புரவோடும் உண்மையோடும்’ ஆசரிக்கப்பட வேண்டும். அடையாள அர்த்தமான புளித்த மாவு சேராதபடி இடைவிடாமல் கவனமாயிருக்க வேண்டியதை இது அர்த்தப்படுத்துகிறது. கள்ளப் போதகங்களையும், பாசாங்குத்தனத்தையும், கேட்டையும் சித்தரிக்க புளித்த மாவு பைபிளில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. யெகோவாவின் உண்மை வணக்கத்தார் அப்படிப்பட்ட புளித்த மாவுக்கு வெறுப்பைக் காட்ட வேண்டும். அது தங்கள் சொந்த வாழ்க்கையைக் கெடுக்க அனுமதிக்கக் கூடாது, கிறிஸ்தவ சபையின் தூய்மையைக் கெடுக்கவும் இடமளிக்கக்கூடாது.—1 கொரிந்தியர் 5:6-8; மத்தேயு 16:6, 12.
புதிதாக அறுவடை செய்யப்பட்ட வாற்கோதுமை கதிர்க்கட்டு ஒன்று, ஆண்டுதோறும் நிசான் 16-ல் செலுத்தப்பட்டது; இயேசு அந்நாளில் உயிர்த்தெழுப்பப்பட்டார்
இயேசு தம்மை ‘உலகத்திற்கு ஒளி’ என்பதாகக்
குறிப்பிட்டபோது, பண்டிகைகளில் ஏற்றப்பட்ட விளக்குகளோடு சம்பந்தப்படுத்தியிருக்கலாம்