எல்லா மக்களுக்கும் ஏற்ற ஒரு புத்தகம்
“தேவன் பட்சபாதமுள்ளவரல்ல, . . . எந்த ஜனத்திலாயினும் அவருக்குப் பயந்திருந்து நீதியைச் செய்கிறவன் எவனோ அவனே அவருக்கு உகந்தவன்.”—அப்போஸ்தலர் 10:34, 35.
1. பைபிளைப் பற்றி பேராசிரியர் ஒருவரிடம் அபிப்பிராயம் கேட்டபோது அவர் என்ன சொன்னார், பிறகு என்ன செய்ய அவர் தீர்மானம் எடுத்தார்?
அன்று ஞாயிற்றுக்கிழமை, மதியவேளை, பேராசிரியர் வீட்டில்தான் இருந்தார். எவருடைய வரவையும் அவர் எதிர்பார்க்கவில்லை. அப்போது, நம் கிறிஸ்தவ சகோதரி ஒருவர் அவருடைய வீட்டிற்கு வந்தார், சகோதரி பேசியதை அவர் செவிகொடுத்து கேட்டார். அவரிடத்தில் தூய்மைக்கேட்டைப் பற்றியும் பூமியின் எதிர்காலத்தைப் பற்றியும் சகோதரி பேசினார்; அந்தத் தலைப்புகள் அவரது ஆர்வத்தை தூண்டின. ஆனால், சகோதரி கலைந்துரையாடலில் பைபிளை உட்புகுத்தியதும், அதை நம்பாதவரைப்போல் அவர் தோன்றினார். ஆகவே, பைபிளை பற்றி அவர் என்ன நினைக்கிறார் என்று அவரிடத்தில் சகோதரி கேட்டார்.
“அறிவுள்ள ஒருசில மனிதர்களால் எழுதப்பட்ட ஒரு நல்ல புத்தகம் அது. ஆனால் பைபிளை அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்ததாக எடுத்துக்கொள்ளக்கூடாது” என்று பதிலளித்தார்.
“நீங்கள் பைபிளை எப்போதாவது படித்திருக்கிறீர்களா?” என்று சகோதரி கேட்டார்.
தர்மசங்கடத்தில் மாட்டிக்கொண்ட அந்தப் பேராசிரியர், தான் படிக்கவில்லை என்பதை ஒத்துக்கொள்ள வேண்டியதாயிற்று.
பிறகு சகோதரி இவ்வாறு கேட்டார்: “நீங்கள் படித்து பார்க்காத ஒரு புத்தகத்தைப் பற்றி எப்படி உங்களால் ஒரு கருத்தை ஆணித்தரமாகச் சொல்ல முடியும்?”
நம் சகோதரி கேட்டதில் அர்த்தம் இருந்தது. பைபிளை படித்தப் பிறகே அதைப் பற்றி கருத்து கணிக்கவேண்டும் என்ற முடிவுக்கு அந்தப் பேராசிரியர் வந்தார்.
2, 3. அநேகருக்கு பைபிள் ஏன் ஒரு மூடப்பட்ட புத்தகமாகவே இருக்கிறது, இதனால் நம்முன் வைக்கப்படும் சவால் என்ன?
2 இத்தகைய கருத்தை உடையவர்கள் இந்தப் பேராசிரியர் மட்டும் அல்ல. அநேக ஆட்கள், பைபிளை தனிப்பட்டமுறையில் ஒருபோதும் படிக்காவிட்டாலும்கூட அதைப்பற்றி ஆணித்தரமாக கருத்துகளை உருவாக்கியுள்ளனர். ஒருவேளை அவர்கள் பைபிளை வைத்திருப்பார்கள். பைபிளின் இலக்கிய அல்லது வரலாற்று சிறப்பைக்கூட அவர்கள் ஒத்துக்கொள்ளலாம். ஆனால் அநேகருக்கு அது ஒரு மூடப்பட்ட புத்தகமாகவே இருக்கிறது. ஒருசிலர் ‘எனக்கு பைபிள் படிக்க நேரமில்லை’ என்கிறார்கள். இப்படியும் ஒருசிலர் யோசிக்கிறார்கள்: ‘இவ்வளவு பழமையான ஒரு புத்தகம் எப்படி என் வாழ்க்கைக்கு ஒத்துவரும்?’ இப்படிப்பட்ட கருத்துக்கள் நம்முன் கஷ்டமான சவாலை வைக்கின்றன. பைபிள் “கடவுளுடைய ஆவியால் ஏவப்பட்டது, போதிப்பதற்கு பயனுள்ளது” என்பதில் யெகோவாவின் சாட்சிகளுக்கு அசைக்கமுடியாத நம்பிக்கை இருக்கிறது. (2 தீமோத்தேயு 3:16, 17, NW) ஆனால், குலம், தேசம், அல்லது இனம் போன்ற பல்வேறு பின்னணிகளையுடைய மற்றவர்களும் பைபிளை ஆராய்ந்துபார்க்க தூண்டும் அளவுக்கு எவ்வாறு நாம் அவர்களுக்கு நம்பிக்கையளிக்க முடியும்?
3 நாம் கருத்தூன்றி பார்க்க பைபிள் தகுதியானதே என்பதற்கு சில காரணங்களை கலந்தாலோசிக்கலாம். இத்தகைய கலந்தாலோசிப்பு, நம்முடைய ஊழியத்தில் நாம் சந்திக்கும் ஆட்களிடம் நியாயங்காட்டி பேசுவதற்கு நம்மை தயார்செய்வதோடு, செய்தியைக் கேட்பவர்களை பைபிள் அப்படி என்னதான் சொல்கிறது என்று ஆராய்ந்துபார்க்க சம்மதிக்க வைக்கலாம். அதேநேரத்தில், பைபிள் உண்மையில் “தேவனுடைய வார்த்தை” என்ற நம்முடைய சொந்த விசுவாசத்தை இந்தக் கலந்தாலோசிப்பு இன்னும் பலப்படுத்தும்.—எபிரெயர் 4:12.
உலகிலேயே மிகப் பரவலாக விநியோகிக்கப்படும் புத்தகம்
4. பைபிளே மிகப் பரவலாக விநியோகிக்கப்படும் புத்தகம் என்று ஏன் சொல்லலாம்?
4 முதலாவதாக, கருத்தூன்றி சிந்திக்க பைபிள் ஏன் தகுதியானது என்றால், அது மிக பரவலாக விநியோகிக்கப்பட்டு, வரலாற்றிலேயே அநேக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ள ஒரு புத்தகமாக உள்ளது. 500-க்கும் அதிக வருடங்களுக்கு முன்பே, பைபிளின் முதல் பதிப்பு, ஜோஹனஸ் கூட்டன்பர்க்கின் அச்சகத்திலிருந்து அச்சு கோர்த்து, அச்சடிக்கப்பட்டு வெளிவந்தது. அன்றுமுதல் கிட்டத்தட்ட 400 கோடி பைபிள்கள் முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ அச்சடிக்கப்பட்டுள்ளன. 1996-க்குள் 2,167 மொழிகளிலும், கிளை மொழிகளிலும் முழுமையாகவோ அல்லது பகுதிகளாகவோ பைபிள் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. a 90 சதவிகிதத்திற்கும் அதிகமான மக்களுக்கு அவர்களுடைய சொந்த மொழியிலேயே பைபிளின் பகுதியாவது கிடைக்கிறது. எந்தவொரு புத்தகமும்—மத புத்தகமாக இருந்தாலும்சரி அல்லது வேறு புத்தகமாக இருந்தாலும்சரி—எண்ணிக்கையில் பைபிளை எட்ட முடியவில்லை!
5. உலகெங்கிலும் மக்களுக்கு பைபிள் கிடைக்க வேண்டும் என நாம் ஏன் கண்டிப்பாக எதிர்பார்க்கலாம்?
5 பைபிள் கடவுளுடைய வார்த்தை என்று நிரூபிக்க புள்ளிவிவரங்கள் மாத்திரம் போதாது. ஆனால், பதிவுசெய்யப்பட்ட கடவுளின் ஏவப்பட்ட வார்த்தை உலகெங்கிலும் மக்களுக்கு கிடைக்க வேண்டும் என நாம் கண்டிப்பாக எதிர்பார்க்கலாம். ஏனென்றால் பைபிளே இவ்வாறு சொல்கிறது: “தேவன் பட்சபாதமுள்ளவரல்ல, . . . எந்த ஜனத்திலாயினும் அவருக்குப் பயந்திருந்து நீதியைச் செய்கிறவன் எவனோ அவனே அவருக்கு உகந்தவன்.” (அப்போஸ்தலர் 10:34, 35) வேறு எந்தவொரு புத்தகத்தைக் காட்டிலும், குலம், இனம் என்ற சுவர்களை உடைத்தெறிந்து, தேசிய எல்லைகளை கடந்து சென்றுள்ள ஒரே புத்தகம் பைபிளே. உண்மையில், பைபிள் எல்லா மக்களுக்கும் ஏற்ற ஒரு புத்தகம்!
பாதுகாக்கப்பட்டதன் விசேஷ பதிவு
6, 7. பைபிளின் அசல் பிரதிகள் எதுவும் கைவசம் இல்லாதது ஏன் ஆச்சரியம் தருவதில்லை, இதனால் என்ன கேள்வி எழுகிறது?
6 கருத்தூன்றி சிந்திக்க ஏன் பைபிள் தகுதியானது என்பதற்கு இன்னொரு காரணம் இருக்கிறது. இயற்கையாலும் மனிதர்களாலும் நேரிட்ட இடையூறுகளிலிருந்து அது தப்பித்துக்கொண்டது. மேற்கொள்ளவே முடியாது என தோன்றிய இடையூறுகளின் மத்தியிலும் பைபிள் பாதுகாக்கப்பட்டதன் பதிவு அதை மற்ற பழமையான புத்தகங்களிலிருந்து உண்மையில் தனித்து நிற்கும்படி செய்கிறது.
7 பைபிள் எழுத்தாளர்கள் வார்த்தைகளை பப்பைரஸ் என்னும் தாளிலும் (எகிப்தில், பப்பைரஸ் என்னும் ஒருவகை செடியிலிருந்து செய்யப்பட்டது) தோலிலும் (மிருகங்களின் தோல்களிலிருந்து செய்யப்பட்டது) மையால் எழுதிவைத்தனர் என்பதில் எந்தவொரு சந்தேகமும் இல்லை. b (யோபு 8:11) ஆனால், எழுத பயன்படுத்திய இப்பொருட்களுக்கு இயற்கை எதிரிகள் இருந்தன. இதைப்பற்றி ஆஸ்கார் பாரட் என்ற கல்விமான் தரும் விளக்கம்: “எழுதுவதற்காக உபயோகிக்கப்பட்ட இவ்விரண்டு பொருட்களும் ஈரப்பதம், பூஞ்சை, வேறு பல பூச்சிகளின் முட்டைப்புழுக்கள் ஆகியவற்றால் ஒரேயளவில் பாதிக்கப்பட்டன. காகிதம், உறுதியான தோலும்கூட திறந்தவெளியில் அல்லது ஓதமாக இருக்கும் அறையில் இருக்கையில் எவ்வளவு சுலபமாக கெட்டுவிடும் என்பது நமக்கு அன்றாட அனுபவத்திலிருந்தே தெரியும்.” ஆகவே பைபிளின் அசல் பிரதிகள் எதுவும் கைவசம் இல்லை என்பதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை; அநேகமாக அவை ரொம்ப காலத்திற்கு முன்பே சிதைந்துபோயிருக்கலாம். சரி, இயற்கை எதிரிகளால் மூலப்பிரதிகள் பாதிக்கப்பட்டிருந்தால், எப்படி நம் நாள் வரையாக பைபிள் நிலைத்திருக்கிறது?
8. பல நூற்றாண்டுகளாக எப்படி பைபிள் பிரதிகள் பாதுகாக்கப்பட்டன?
8 அசல் பிரதிகள் எழுதப்பட்டதுமே, கையெழுத்து பிரதிகள் எடுப்பதும் ஆரம்பிக்கப்பட்டது. பண்டைய இஸ்ரவேலில் நியாயப்பிரமாணத்தையும், வேதாகமத்தின் மற்ற பகுதிகளையும் பிரதியெடுப்பது உண்மையில் ஒரு தொழிலாகவே ஆனது. உதாரணத்திற்கு, வேதபாரகனாகிய எஸ்றா, “மோசேயின் நியாயப்பிரமாணத்தில் திறமையுள்ள பிரதியெடுப்பவராக இருந்தார்” என விவரிக்கப்படுகிறார். (எஸ்றா 7:6, 11, NW; ஒப்பிடுக: சங்கீதம் 45:1.) ஆனால், பிரதிகளும் அழியும் பொருட்களில்தான் எழுதப்பட்டன. ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப்பின், மற்ற புதிய கையெழுத்துப் பிரதிகளை வைத்துவிட்டு, இந்தப் பழைய பிரதிகளை மாற்றிவிட வேண்டும். இப்படியாக, நகலிலிருந்து நகல் எடுப்பது பல நூற்றாண்டுகளுக்குத் தொடர்ந்தது. பிழைசெய்யும் இயல்பு மனிதர்களுக்கு இருப்பதால், பிரதி எழுதியவர்கள் செய்த பிழைகள் பைபிளின் மூல உரையை பெருமளவுக்கு மாற்றியிருக்குமா? இல்லை என்றே திரளான அத்தாட்சிகள் காட்டுகின்றன!
9. பைபிள் பிரதி எழுதியவர்கள் ரொம்ப கவனமாகவும், திருத்தமாகவும் எழுதினார்கள் என்பதை மஸோரெட்டுகளின் உதாரணம் எவ்வாறு விளக்குகிறது?
9 பிரதி எழுதியவர்கள் அதிக திறமைசாலிகள் மட்டுமல்ல, ஆனால் அவர்கள் பிரதி எழுதிய வார்த்தைகளிடமாக ஆழ்ந்த மரியாதையும் வைத்திருந்தார்கள். “பிரதி எழுதுபவர்” என்பதற்கான எபிரெய வார்த்தை எண்ணுவதையும் பதிவு செய்வதையும் குறிப்பிடுகிறது. பிரதி எழுதியவர்கள் எவ்வளவு கவனமாகவும், திருத்தமாகவும் எழுதினார்கள் என்பதை தெளிவாக தெரிந்துகொள்ள, எபிரெய வேதாகமங்களை பிரதி எடுத்த மஸோரெட்டுகளை கொஞ்சம் எண்ணிப்பாருங்கள். அவர்கள் பொ.ச. ஆறுக்கும் பத்துக்கும் இடைப்பட்ட நூற்றாண்டுகளில் வாழ்ந்தார்கள். அவர்கள் “எபிரெய வேதாகமங்கள் முழுவதிலும் [எபிரெய] எழுத்துக்கள் ஒவ்வொன்றும் எத்தனை தடவை வருகின்றன என்று” எண்ணினார்கள் என்பதாக அவர்களைப் பற்றி தாமஸ் ஹார்ட்வெல் ஹார்ன் என்ற கல்விமான் கூறினார். இதில் அடங்கியிருக்கும் சிரமத்தை சற்று யோசித்துப்பாருங்கள்! ஒரு எழுத்தையும் விட்டு விடக்கூடாது என்பதற்காக, அவர்கள் பதிவு செய்த வார்த்தைகளை மட்டுமல்ல, எழுத்துக்களையும் ஒவ்வொன்றாக எண்ணினார்கள். அறிஞர் ஒருவருடைய கருத்தின்படி, அவர்கள் எபிரெய வேதாகமங்களில் இருந்த 8,15,140 தனி எழுத்துகள் ஒவ்வொன்றும் இருக்கின்றனவா என்று எண்ணி சரிபார்த்தார்கள் என்றால் யோசித்துப்பாருங்களேன்! அதிக திருத்தமாக இருக்கிறது என்பதற்கு இத்தகைய தளராத முயற்சியே உத்தரவாதம் அளிக்கிறது.
10. இன்றைய மொழிபெயர்ப்பாளர்களின் மொழிபெயர்ப்புக்கு அடிப்படையாக இருக்கும் எபிரெய மற்றும் கிரேக்க உரைகளில், மூல எழுத்தாளர்கள் எழுதிய வார்த்தைகளே இருக்கின்றன என்பதற்கு என்ன அசைக்க முடியாத ஆதாரம் இருக்கிறது?
10 இன்றைய மொழிபெயர்ப்பாளர்களின் மொழிபெயர்ப்புக்கு அடிப்படையாக இருக்கும் எபிரெய மற்றும் கிரேக்க உரைகளில், மூல எழுத்தாளர்கள் எழுதிய வார்த்தைகளே திருத்தமாக கைமாறி வந்திருக்கின்றன என்பது ஊர்ஜிதம் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு ஊர்ஜிதம் செய்யும் பைபிள் மூலப்பிரதியின் ஆயிரக்கணக்கான கைப்பிரதிகள்—முழுமையாக அல்லது ஒருசில பகுதிகளாக எபிரெய வேதாகமங்களில் 6,000 பிரதிகளும், கிறிஸ்தவ கிரேக்க வேதாகமங்களில் கிட்டத்தட்ட 5,000 பிரதிகளும்—இன்று வரை இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளன. இன்று கிடைக்கக்கூடிய ஆயிரக்கணக்கான கையெழுத்துப் பிரதிகளை ஒப்பிட்டு ஆய்வு செய்வதன் மூலம் எழுத்து அறிஞர்களால் (textual scholars) பிழைகளைத் தனியே பிரிக்க முடிந்துள்ளது. எபிரெய வேதாகமத்தின் உரையைப் பற்றி குறிப்பிடுகையில் வில்லியம் ஹெச். கிரீன் என்ற மேதை இவ்வாறு சொன்னார்: “வேறு எந்தவொரு பழமையான புத்தகத்தைக் காட்டிலும் இது மாத்திரம் திருத்தமாக கைமாறி வந்தது என ஐயத்திற்கிடமின்றி சொல்லலாம்.” கிறிஸ்தவ கிரேக்க வேதாகம உரையையும் இவ்வாறே நம்பலாம்.
11. 1 பேதுரு 1:24, 25 சொல்வதற்கு இசைவாக, இன்று வரை பைபிள் நிலைத்திருக்க காரணம் என்ன?
11 அசல் பிரதிகளுக்கு பதில் கையெழுத்துப் பிரதிகளை மாற்றி மாற்றி வைக்காதிருந்தால் பைபிளும் அதன் அருமையான செய்தியும் எவ்வளவு எளிதில் அழிந்துவிட்டிருக்கும்! யெகோவா தம் வார்த்தையைப் பாதுகாத்து, கண்ணும் கருத்துமாக கவனித்துக்கொண்ட ஒரே காரணத்தால் அது இன்று வரை நிலைத்திருக்கிறது. 1 பேதுரு 1:24, 25-ல் பைபிள் இவ்வாறு சொல்கிறது: “மாம்சமெல்லாம் புல்லைப்போலவும், மனுஷருடைய மகிமையெல்லாம் புல்லின் பூவைப்போலவுமிருக்கிறது; புல் உலர்ந்தது, அதின் பூவும் உதிர்ந்தது. கர்த்தருடைய வசனமோ என்றென்றைக்கும் நிலைத்திருக்கும்.”
மனிதர் பேசும் உயிருள்ள மொழிகளில் பேசுதல்
12. பல நூற்றாண்டுகளாக மறுபடியும் மறுபடியும் கையெழுத்து பிரதிகள் எடுக்கப்பட்டதோடு, வேறு என்ன இடையூறையும் பைபிள் எதிர்ப்பட்டது?
12 பல நூற்றாண்டுகளாக மறுபடியும் மறுபடியும் கையெழுத்து பிரதிகளை மனிதன் எடுத்தும் பைபிள் நம்பத்தகுந்த விதத்தில் நிலைத்திருக்கிறது என்றால் உண்மையில் அது பெரும் சவால்தான். ஆனால், அதைவிட மற்றொரு பெரும் இடையூறை பைபிள் எதிர்ப்பட்டது—மக்கள் பேசிய மொழிகளில் அதனை மொழிபெயர்க்க வேண்டும். மக்களுடைய இருதயங்களை பைபிள் சென்றெட்டவேண்டுமென்றால், அவர்களுடைய மொழிகளில் அது பேசியே தீரவேண்டும். ஆனால், 1,100-க்கும் மேற்பட்ட அதிகாரங்களையும் 31,000-க்கும் மேற்பட்ட வசனங்களையும் உடைய பைபிளை மொழிபெயர்ப்பது ஒன்றும் அவ்வளவு சுலபம் அல்ல. இருந்தாலும்கூட, பல நூற்றாண்டுகளினூடே, தங்களையே அர்ப்பணம் செய்த மொழிபெயர்ப்பாளர்கள் அவர்களாகவே முன்வந்து இந்த வேலையை ஏற்றுக்கொண்டார்கள். அவர்கள் எதிர்ப்பட்ட சவால்கள் கொஞ்சநஞ்சமல்ல.
13, 14. (அ) 19-ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் பைபிள் மொழிபெயர்ப்பாளர் ராபர்ட் மாஃபெட் ஆப்பிரிக்காவில் என்ன சவாலை எதிர்ப்பட்டார்? (ஆ) லூக்காவின் சுவிசேஷம் தங்களுடைய சொந்த மொழியில் கிடைத்தபோது ட்ஸ்வானா மொழிபேசிய மக்கள் எப்படி பிரதிபலித்தனர்?
13 உதாரணத்திற்கு, ஆப்பிரிக்க மொழிகளில் எவ்வாறு பைபிள் மொழிபெயர்க்கப்பட்டது என்பதை சற்று சிந்தித்துப்பாருங்கள். 1800-ல், ஆப்பிரிக்கா முழுவதிலும் சுமார் ஒரு டஜன் மொழிகள் மாத்திரம் எழுத்து வடிவில் இருந்தன. வெறும் பேச்சு வடிவில் இருந்த நூற்றுக்கணக்கான மற்ற மொழிகளுக்கு எழுத்து முறை இருக்கவில்லை. இத்தகைய சவாலையே ராபர்ட் மாஃபெட் என்ற மொழிபெயர்ப்பாளர் எதிர்ப்பட்டார். மாஃபெட் 1821-ல், தன்னுடைய 25-ம் வயதில், மிஷனரி ஊழியத்திற்கு பயணமானார். தென் ஆப்பிரிக்காவில், ட்ஸ்வானா மொழிபேசும் மக்களிடம் அவர் வந்து சேர்ந்தார். எழுதப்படாத அவர்களது மொழியைக் கற்றுக்கொள்வதற்காக அவர் அந்த மக்களோடு மக்களாய் கலந்து பழகினார். மாஃபெட் விடாமுயற்சியோடு உழைத்தார். தொடக்கப் பாடப்புத்தகத்தின் துணையோ அகராதிகளின் உதவியோ இன்றி ஒருவழியாக, அம்மொழியை நன்றாக கற்றுக்கொண்டு, அதற்கு எழுத்து வடிவத்தையும் உருவாக்கி, ஒருசில ட்ஸ்வானா மக்களுக்கு படிக்கவும் எழுதவும் கற்றுக்கொடுத்தார். எட்டு வருடங்களாக ட்ஸ்வானா மக்கள் மத்தியில் உழைத்தப்பின் 1829-ல் லூக்காவின் சுவிசேஷத்தை மாஃபெட் மொழிபெயர்த்து முடித்தார். பிற்பாடு இவ்வாறு அவர் கூறினார்: “செயின்ட் லூக்காவின் பிரதிகளைப் பெறுவதற்காக, பல நூற்றுக்கணக்கான மைல்களைக் கடந்து ஆட்கள் வந்திருப்பது எனக்கு தெரிய வந்தது. . . . செயின்ட் லூக்காவின் பகுதிகளை அவர்கள் பெற்றுக்கொண்டபோது, அதற்காக அவர்கள் ஆனந்தக்கண்ணீர் வடித்ததை நான் பார்த்தேன். அவற்றை தங்கள் மார்போடு சேர்த்தணைத்து, நன்றி மிகுதியால் அவர்கள் கண்களிலிருந்து வரும் கண்ணீர் ஆறாக பெருக்கெடுத்து ஓடும். அப்போது நான் ‘அழுது அழுது உங்களுடைய புத்தகத்தை பாழாக்கிவிடப்போகிறீர்கள்’ என்று இரண்டொரு பேரிடம் மட்டுமல்ல, பல பேரிடம் சொல்லியிருக்கிறேன்.” ஒரு ஆப்பிரிக்க மனிதனைப் பற்றியும் மாஃபெட் கூறினார். நிறையப்பேர் லூக்காவின் சுவிசேஷத்தை படிப்பதை பார்த்த அவன், அப்படி என்னதான் அவர்கள் படித்துக்கொண்டிருக்கிறார்கள் என்று கேட்டான். அதற்கு அவர்கள் “இது கடவுளோட வார்த்தை” என்றார்கள். “அப்போ, அது பேசுமா?” என்று அவன் கேட்டான். “ஆமாம், அது மனசோடு மனசா இருந்து பேசுது” என்று பதில் சொன்னார்கள்.
14 தன்னையே அர்ப்பணம் செய்த மாஃபெட் போன்ற பல மொழிபெயர்ப்பாளர்கள், பல ஆப்பிரிக்க மக்களுக்கு முதல் முறையாக எழுத்து வடிவில் பேச்சுத்தொடர்பு கொள்ளும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தார்கள். ஆனால் அந்த மொழிபெயர்ப்பாளர்கள் இதைவிட மிக உயர்வான பரிசை, அதாவது ஆப்பிரிக்க மக்களின் சொந்த மொழியில் பைபிள் என்னும் பரிசை அளித்தனர். மேலும், கடவுளுடைய பெயரை ட்ஸ்வானா மொழியில் மாஃபெட் அறிமுகம் செய்துவைத்தார்; அவரது மொழிபெயர்ப்பு முழுவதிலும் அவர் அந்தப் பெயரை உபயோகித்தார். c இவ்வாறாக ட்ஸ்வானா மொழி, பைபிளை “யெகோவாவின் வாய்” என்று அழைத்தது.—சங்கீதம் 83:17.
15. பைபிள் எப்படி இன்றுவரை நிலைத்திருக்கிறது?
15 உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்த மொழிபெயர்ப்பாளர்களும் இதேவிதமான இடையூறுகளை எதிர்ப்பட்டனர். பைபிளை மொழிபெயர்ப்பதற்காக தங்கள் உயிரையும் சிலர் பணயம் வைத்தார்கள். இதை கொஞ்சம் யோசித்துப்பாருங்கள்: பைபிள் பண்டைய எபிரெய மற்றும் கிரேக்க மொழிகளில் மாத்திரம் இருந்திருந்தால், அது எப்போதோ “அழிந்துவிட்டிருக்கும்.” ஏனென்றால் அம்மொழிகள் மெல்ல மெல்ல மறைந்துவிட்டன, உலகில் பல பாகங்களில் உள்ள மக்களுக்கு அம்மொழிகள் தெரியவே தெரியாது. பைபிளோ இன்றுவரை நிலைத்திருக்கிறது. மற்ற புத்தகங்களைப் போல் இன்றி, உலக மக்கள் பேசிக்கொண்டிருக்கும் உயிருள்ள மொழிகளிலெல்லாம் பைபிள் “பேச” கற்றுக்கொண்டதால் இன்னும் நிலைத்திருக்கிறது. இவ்வாறாக, பைபிள் செய்தி “விசுவாசத்தில் உள்ளவர்களில் செயலாற்றி” தொடர்ந்து நிலைத்திருக்கிறது. (1 தெசலோனிக்கேயர் 2:13, NW) இதையே த ஜெரூசலம் பைபிள் இவ்வாறு குறிப்பிடுகிறது: “அது விசுவாசிக்கும் உங்களுக்குள் ஜீவ சக்தியாய் இன்னும் இருந்துகொண்டிருக்கிறது.”
தாராளமாக நம்பலாம்
16, 17. (அ) பைபிள் நம்பகமானது என்பதற்கு என்ன உறுதியான நிரூபணம் இருக்க வேண்டும்? (ஆ) பைபிள் எழுத்தாளர் மோசேயின் நேர்மையை விளக்க ஒரு உதாரணம் தருக.
16 ‘ஆனால், பைபிளை நம்பமுடியுமா? உண்மையில் வாழ்ந்த மக்களைப் பற்றியும், உண்மையில் இருந்த இடங்களைப் பற்றியும், நிஜத்தில் நடந்த சம்பவங்களைப் பற்றியும் இது குறிப்பிடுகிறதா?’ என்று சிலர் யோசிக்கலாம். நாம் பைபிளை நம்பவேண்டும் என்றால், அதை நேர்மையான எழுத்தாளர்கள் கவனத்தோடு எழுதினார்கள் என்பதற்கு ஆதாரம் வேண்டும். இது பைபிளை ஆராய மற்றொரு காரணத்தை நம்முன் வைக்கிறது: பைபிள் திருத்தமானது, நம்பகமானது என்பதற்கு உறுதியான நிரூபணம் இருக்கிறது.
17 ஒளிவுமறைவின்றி எழுதும் எழுத்தாளர்கள் வெறும் வெற்றிகளை மாத்திரம் அல்ல ஆனால் தோல்விகளையும், வெறும் பலங்களை மாத்திரம் அல்ல ஆனால் பலவீனங்களையும் பதிவுசெய்வார்கள். பைபிள் எழுத்தாளர்கள் நேர்மைக்கு இலக்கணமாய் திகழ்ந்தார்கள். உதாரணத்திற்கு, ஒளிவுமறைவின்றி எழுதிய மோசே பற்றி சிந்தித்துபாருங்கள். அவர் ஒளிவுமறைவின்றி அறிவித்த விஷயங்களில், தனக்கு சரளமாக பேசவராத காரணத்தால், இஸ்ரவேலில் தலைவனாய் இருக்க தான் தகுதியற்றவராய் உணர்ந்ததையும் (யாத்திராகமம் 4:10); வாக்குப்பண்ணப்பட்ட தேசத்தில் நுழையும் தகுதியை இழக்கவைத்த அவரது பெரும் தவற்றையும் (எண்ணாகமம் 20:9-12; 27:12-14); கலகம் செய்த இஸ்ரவேலர்களோடு சேர்ந்துகொண்டு தன் சகோதரன் ஆரோன் தங்க கன்றுக்குட்டி செய்ததையும் (யாத்திராகமம் 32:1-6); தன் சகோதரி மிரியாம் கலகம் செய்ததால் அவளுக்கு கிடைத்த இழிவான தண்டனையையும் (எண்ணாகமம் 12:1-3, 10); ஆரோனின் மகன்களான நாதாப், அபியூ ஆகியோர் செய்த அவபக்தியான செயலையும் (லேவியராகமம் 10:1, 2); கடவுளின் சொந்த மக்கள் சும்மா சும்மா குறைகூறி, முணுமுணுத்ததையும் அப்படியே சொல்லிவிட்டார். (யாத்திராகமம் 14:11, 12; எண்ணாகமம் 14:1-10) இவ்வாறு ஒளிவுமறைவின்றி, திறந்தமனதோடு உள்ளதை உள்ளபடி சொல்வது, சத்தியத்திற்காக கொண்டுள்ள மனப்பூர்வமான அக்கறையைச் சுட்டிக்காட்டவில்லையா? பைபிள் எழுத்தாளர்கள் தங்கள் அன்பானவர்களைப் பற்றியும், தங்கள் சொந்த மக்களைப் பற்றியும், ஏன் தங்களைப் பற்றியும்கூட சாதகமற்ற தகவலை அறிவிக்க கொஞ்சமும் தயங்கவில்லை என்றால், அவர்கள் எழுதியவற்றை நம்பலாம் என்பதற்கு இதைவிட வேறு நல்ல காரணம் இருக்க முடியுமா?
18. பைபிள் எழுத்தாளர்கள் எழுதியவை நம்பகமானவை என்று எது ஊர்ஜிதம் செய்கிறது?
18 பைபிள் எழுத்தாளர்களிடையே இருக்கும் ஒத்திசைவும்கூட, அவர்கள் எழுதியவை நம்பகமானவை என்பதை ஊர்ஜிதம் செய்கிறது. சுமார் 1,600 வருடங்களாக, 40 ஆட்கள் எழுதியபோதிலும், சின்னஞ்சிறிய விவரங்களில்கூட அவர்களுக்கிடையே அப்படியொரு ஒத்திசைவு இருப்பது உண்மையில் பிரமிக்க வைக்கிறது. ஆனால், ஒவ்வொரு விவரத்தையும் மிக கவனமாக வேண்டுமென்றே வரிசைப்படுத்தி அமைத்ததால் வரவில்லை இந்த ஒத்திசைவு. அப்படியிருந்தால், அது தந்திரமாக செய்யப்பட்டிருக்கிறது என்ற சந்தேகத்தை தந்திருக்கும். இதற்கு மாறாக, சில நேரங்களில் சில விவரங்கள் விட்டுப்போயிருந்தால், அது எதிர்பாராமலே வேறொரு இடத்தில் கொடுக்கப்பட்டிருக்கிறது. இத்தகைய ஒத்திசைவு பெரும்பாலான சந்தர்ப்பங்களில் எதிர்பாராமலேயே அமைந்திருப்பதும் தெள்ளத்தெளிவாக உள்ளது.
19. கொஞ்சம்கூட எதிர்பாராமலேயே ஒத்திசைவு அமைந்தது என்பதை இயேசு கைதான சம்பவத்தைப் பற்றிய சுவிசேஷக பதிவுகள் எப்படி காட்டுகின்றன?
19 இதைப் புரிந்துகொள்ள, இயேசு கைதான இரவில் நடந்த ஒரு சம்பவத்தை கவனிக்கலாம். ஒரு சீஷன் கத்தியை உருவி, பிரதான ஆசாரியனுடைய வேலைக்காரனின் காதை ஒரே வெட்டில் துண்டித்துப்போட்டார் என்ற விவரத்தை சுவிசேஷக எழுத்தாளர்கள் நான்குபேரும் பதிவுசெய்துள்ளனர். ஆனால், இயேசு “அவனுடைய காதைத்தொட்டு, அவனைச் சொஸ்தப்படுத்தினார்” என்ற விஷயத்தை லூக்கா மாத்திரம் தெரிவிக்கிறார். (லூக்கா 22:51) ஆனால், ‘பிரியமான வைத்தியன்’ என்று அறியப்பட்டிருந்த ஒரு எழுத்தாளரிடமிருந்து இதைத்தான் நாம் எதிர்பார்ப்போம் அல்லவா? (கொலோசெயர் 4:14) எல்லா சீஷர்களும் அங்கிருக்கையில், கத்தியை எடுத்து காதை வெட்டியவர் பேதுரு என்ற விவரத்தை யோவானின் பதிவு தெரிவிக்கிறது. இதில் ஆச்சரியம் ஏதுமில்லை. ஏனென்றால் பேதுரு கொஞ்சம் அவசரப்புத்திக்காரர்; முன்பின் யோசிக்காமல் எதையாவது செய்துவிடும் சுபாவமுள்ளவர். (யோவான் 18:10; ஒப்பிடுக: மத்தேயு 16:22, 23 மற்றும் யோவான் 21:7, 8.) தேவையற்ற விஷயமாக நினைக்கத்தோன்றும் வேறொரு விவரத்தையும் யோவான் தருகிறார்: “அந்த வேலைக்காரனுக்கு மல்குஸ் என்று பெயர்.” ஏன் யோவான் மாத்திரம் அந்த ஆளின் பெயரைச் சொல்கிறார்? வேறு எங்குமே சொல்லப்படாத ஒரு சிறிய உண்மை பின்வரும் யோவானின் பதிவில் மாத்திரம் கொடுக்கப்பட்டுள்ளது: யோவான் ‘பிரதான ஆசாரியனுக்கு அறிமுகமானவனாயிருந்தான்.’ பிரதான ஆசாரியனுடைய குடும்ப அங்கத்தினர்களை அவருக்கு நன்கு தெரியும். வேலைக்காரர்களுக்கும் அவரை நன்றாகத் தெரியும். அவர்களோடு அவர் பழகி இருக்கிறார். d (யோவான் 18:10, 15, 16) எனவே, காயப்பட்ட ஆளின் பெயரை யோவான் மாத்திரம் எழுதினார் என்றால் அதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை. ஆனால் மற்ற சுவிசேஷக எழுத்தாளர்களைப் பொருத்தமட்டில், அந்த ஆள் ஒரு அன்னியனே; அதனால் அவர்கள் அவனுடைய பெயரை குறிப்பிடவில்லை. இந்த எல்லா விவரப்பதிவுகளுக்கு இடையே அமைந்திருக்கும் ஒத்திசைவு அபாரமாக உள்ளது. இருப்பினும், அவை எதிர்பாராமலேயே அமைந்தன என்பதும் தெளிவாக உள்ளது. இப்படிப்பட்ட உதாரணங்கள் பைபிள் முழுவதும் நிறைய இருக்கின்றன.
20. பைபிள் நம்பகமானது என்று நேர்மை இருதயம் உள்ளவர்கள் ஏன் அவசியம் அறிந்துகொள்ளவேண்டும்?
20 ஆகவே, நாம் பைபிளை நம்பலாமா? கண்டிப்பாக! பைபிள் எழுத்தாளர்களின் நேர்மை, மேலும் பைபிளின் ஒத்திசைவு ஆகியவை பைபிள் முழுவதிலும் சத்தியம் ஊடுருவி செல்வதை தெள்ளத்தெளிவாக காட்டுகின்றன. பைபிள் நம்பகமானது என்று நேர்மை இருதயம் உள்ளவர்கள் அவசியம் அறிந்துகொள்ளவேண்டும். ஏனென்றால் அது, “சத்தியபரராகிய யெகோவாவின்” ஏவப்பட்ட வார்த்தை. (சங்கீதம் 31:5, NW) பைபிள் ஏன் எல்லா மக்களுக்கும் ஏற்ற ஒரு புத்தகமாக இருக்கிறது என்பதற்கு இன்னும் கூடுதலான காரணங்களை அடுத்த கட்டுரை கலந்தாராயும்.
[அடிக்குறிப்புகள்]
a யுனைட்டெட் பைபிள் சொஸைட்டிஸ் வெளியிட்ட புள்ளிவிவரங்களை அடிப்படையாக கொண்டது.
b பவுல் இரண்டாம் முறையாக சிறையில் இருந்தபோது, தீமோத்தேயுவிடம் “விசேஷமாய்த் தோற்சுருள்களை” கொண்டுவரும்படி சொன்னார். (2 தீமோத்தேயு 4:13) சிறையில் இருக்கும்போது படிப்பதற்காக, எபிரெய வேதாகமத்தின் பகுதிகளை கொண்டுவரும்படி பவுல் கேட்டிருக்கலாம். இங்கே, “விசேஷமாய்த் தோற்சுருள்” என்று கூறியதிலிருந்து அநேகமாக பப்பைரஸ் சுருள்களும், தோலால் ஆன மற்ற சுருள்களும் இருந்திருக்க வேண்டும் என தெரிகிறது.
c மாஃபெட், 1838-ல் கிறிஸ்தவ கிரேக்க வேதாகமத்தை மொழிபெயர்த்து முடித்தார். தன்னுடன் வேலைபார்த்த ஒருவரின் உதவியைக்கொண்டு 1857-ல் எபிரெய வேதாகமத்தை மொழிபெயர்த்துவிட்டார்.
d பிரதான ஆசாரியனையும் அவருடைய குடும்ப அங்கத்தினர்களையும் யோவானுக்கு நன்கு தெரியும் என்ற விவரம் அதே பதிவில் பிற்பகுதியில் கொடுக்கப்பட்டுள்ளது. பேதுரு இயேசுவோடு இருந்ததாக காட்டிக்கொடுத்த பிரதான ஆசாரியனின் வேறொரு வேலைக்காரனைப் பற்றி சொல்லும்போது, அவன் ‘பேதுரு காதறவெட்டினவனுக்கு இனத்தான்’ என்று யோவான் விளக்குகிறார்.—யோவான் 18:26.
நீங்கள் எவ்வாறு பதிலளிப்பீர்கள்?
◻ பைபிள் உலகெங்கும் கிடைக்க வேண்டிய ஒரு புத்தகம் என நாம் ஏன் எதிர்பார்க்கலாம்?
◻ பைபிள் திருத்தமாக பாதுகாக்கப்பட்டது என்பதற்கு என்ன அத்தாட்சி இருக்கிறது?
◻ பைபிளை மொழிபெயர்த்தவர்கள் என்ன என்ன சவால்களை எதிர்ப்பட்டனர்?
◻ பைபிளில் எழுதியிருப்பவை நம்பகமானவை என்று எது ஊர்ஜிதம் செய்கிறது?