விசுவாசமும் உங்கள் எதிர்காலமும்
“விசுவாசம் என்பது நம்பப்படும் காரியங்களின் நிச்சயிக்கப்பட்ட எதிர்பார்ப்பு.” —எபிரெயர் 11:1, NW.
1. பெரும்பாலான மக்கள் என்ன வகையான எதிர்காலத்தை விரும்புகின்றனர்?
எதிர்காலத்தைக் குறித்து நீங்கள் அக்கறையுடன் இருக்கிறீர்களா? பெரும்பாலான மக்கள் அக்கறையுடன் இருக்கின்றனர். அவர்கள் எதிர்பார்ப்பதெல்லாம் இதுவே: சமாதானமான எதிர்காலம், பயத்திலிருந்து விடுதலை, திருப்தியளிக்கும் வாழ்க்கைச் சூழல், பலன்தரும் அனுபவித்து மகிழக்கூடிய வேலை, நல்ல ஆரோக்கியம், நீண்ட ஆயுள். சரித்திரம் முழுவதிலும் ஒவ்வொரு சந்ததியினரும் இவற்றையே விரும்பினர் என்பதில் சந்தேகமே இல்லை. இன்று, பெரும் தொல்லைகள் நிறைந்த இவ்வுலகில், முன்னொருபோதையும்விட இப்படிப்பட்ட நிலைமைகள் அதிக விரும்பத்தக்கவையாக இருக்கின்றன.
2. எதிர்காலத்தைப் பற்றிய நோக்குநிலையை அரசியல் மேதை ஒருவர் எவ்வாறு தெரிவித்தார்?
2 மனிதவர்க்கம் 21-ம் நூற்றாண்டில் அடியெடுத்து வைக்கையில், எதிர்காலம் எதைப்போல் இருக்கும் என்பதை தீர்மானிக்க ஏதாவது வழியிருக்கிறதா? அமெரிக்க நாட்டு அரசியல் மேதை பேட்ரிக் ஹென்றி 200-க்கும் அதிகமான வருடங்களுக்கு முன்பு ஒரு வழியை தெரிவித்தார். அவர் சொன்னார்: “கடந்தகாலத்தை வைத்து எதிர்காலத்தை கணிப்பதைத் தவிர எனக்கு வேறு வழியே தெரியவில்லை.” இந்த நோக்குநிலையின்படி, கடந்த காலத்தில் மனிதன் என்ன செய்தான் என்பதை வைத்து மனித குடும்பத்தின் எதிர்காலத்தை ஓரளவு தெரிந்துகொள்ளலாம். இந்த யோசனையை பலர் ஒத்துக்கொள்கின்றனர்.
கடந்தகாலம் எதைப்போல் இருந்தது?
3. எதிர்கால நம்பிக்கைகளைப் பற்றி சரித்திரத்தின் பதிவு என்ன சுட்டிக்காட்டுகிறது?
3 எதிர்காலம் கடந்த காலத்தைப் போலவே இருக்கப்போகிறதென்றால், அது மனதிற்கு உற்சாகமூட்டுவதாக நீங்கள் காண்கிறீர்களா? காலங்கள் உருண்டோட கடந்தகால சந்ததியினருக்கு எதிர்காலம் மேம்பட்டதாகி வந்ததா? நிச்சயமாகவே இல்லை. ஆயிரக்கணக்கான ஆண்டுகளாய் மக்கள் நம்பிக்கையோடு இருந்திருக்கிறபோதிலும், சில இடங்களில் பொருளாதார வளர்ச்சி இருக்கிறபோதிலும், மனித சரித்திரம் ஒடுக்குமுறையாலும் குற்றச்செயலாலும் வன்முறையாலும் போராலும் வறுமையாலும்தான் நிறைந்திருக்கிறது. இந்த உலகம் ஒன்றன்பின் ஒன்றாக வந்த பெருந்துயரங்களை, முக்கியமாக திருப்தியளிக்காத மனித ஆட்சியால் வந்த பெருந்துயரங்களை அனுபவித்திருக்கிறது. பைபிள் இவ்வாறு துல்லியமாய் குறிப்பிடுகிறது: ‘மனிதன் தனக்கே கேடுண்டாக வேறொரு மனிதனை ஆண்டுவந்திருக்கிறான்.’—பிரசங்கி 8:9.
4, 5. (அ) 20-ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் மக்கள் ஏன் நம்பிக்கையோடு இருந்தார்கள்? (ஆ) எதிர்காலத்திற்கான அவர்களுடைய நம்பிக்கைக்கு என்ன ஆனது?
4 உண்மை என்னவென்றால், மனிதவர்க்கத்தின் துயரமிக்க கடந்தகால சரித்திரம் வாழையடி வாழையாக தொடர்ந்துகொண்டேதான் இருக்கிறது—சொல்லப்போனால் முன்னொருபோதும் இல்லாத அளவில் இன்னும் அதிக பரவலாகவும் அதிகளவிலும் சேதம் விளைவித்துக் கொண்டுதான் இருக்கிறது. இந்த 20-ம் நூற்றாண்டே அதற்கு அத்தாட்சி. மனிதவர்க்கம் கடந்தகால தவறுகளிலிருந்து கற்றுக்கொண்டு, அவற்றை தவிர்த்ததா? நாம் பார்க்கலாம், இந்த நூற்றாண்டின் ஆரம்பத்தில், ஒளிமயமான எதிர்காலம் வருமென பலர் நம்பிக்கை வைத்திருந்தனர்; ஏனெனில் ஓரளவு காலம் அமைதி நிலவியது, தொழில்துறையும் விஞ்ஞானமும் கல்வியும் முன்னேற்றம் அடைந்திருந்தது. 1900-களின் ஆரம்பத்தில், பல்கலைக்கழக பேராசிரியர் ஒருவர் சொன்னார், போர் என்ற பேச்சுக்கே இடமில்லை, ஏனென்றால் “மக்கள் மிகவும் நாகரிகமடைந்து விட்டார்கள்.” அந்தச் சமயத்தில் மக்கள் வைத்திருந்த நோக்குநிலையைக் குறித்து முன்னாள் பிரிட்டிஷ் பிரதம மந்திரி ஒருவர் சொன்னார்: “எல்லாம் படிப்படியாக சீரடைந்துவிடும். நான் பிறந்த உலகம் இப்படித்தான் இருந்தது.” ஆனால் பின்பு அவர் சொன்னார்: “எதிர்பாராமல், திடீரென, 1914-ல் ஒருநாள் காலை, எல்லா நம்பிக்கையும் சுக்குநூறானது.”
5 ஒளிமயமான எதிர்காலம் வருமென்ற உறுதியான நம்பிக்கை அந்தச் சமயத்தில் நிலவியபோதிலும், அந்தப் புதிய நூற்றாண்டு அப்பொழுதுதான் பிறந்தது, அதற்குள் இந்த உலகம் மனிதனால் உண்டுபண்ணப்பட்ட பேரழிவிலேயே மிக மோசமான பேரழிவுக்குள்—முதல் உலகப் போருக்குள்—வீழ்ந்தது. இந்தப் போரின் தன்மைக்கு ஓர் உதாரணமாக, 1916-ல் பிரிட்டிஷ் படைகள் பிரான்ஸிலுள்ள சோமி நதி அருகில் ஜெர்மன் கப்பல்களை தாக்கியபோது என்ன நடந்தது என்பதை கவனியுங்கள். சில மணிநேரத்தில் பிரிட்டிஷ் படை 20,000 பேரை இழந்தது; ஜெர்மன் தரப்பில் பலர் கொல்லப்பட்டார்கள். நான்கு ஆண்டுகளாய் நடந்த அந்தப் படுகொலை, கிட்டத்தட்ட ஒரு கோடி படைவீரர்களையும் பொதுமக்கள் அநேகருடைய உயிரையும் பலிகொண்டது. ஆண்கள் பலர் இறந்துவிட்டதால் பிரான்ஸ் மக்கள்தொகை சிலகாலம் சரிந்துவிட்டது. பொருளாதாரம் சீரழிந்து, 1930-களில் மாபெரும் பொருளாதார மந்தநிலைக்கு வழிநடத்தியது. முதல் உலகப் போர் ஆரம்பமான அன்றே இவ்வுலகிற்கு பைத்தியம் பிடித்துவிட்டது என்று சிலர் சொன்னதைக் குறித்து ஆச்சரியப்படுவதிற்கில்லை!
6. முதல் உலகப் போருக்குப் பிற்பாடு வாழ்க்கை ஒளிமயமாகிவிட்டதா?
6 இதுதான் அந்தச் சந்ததியார் எதிர்பார்த்த எதிர்காலமா? நிச்சயமாகவே இல்லை. அவர்களுடைய நம்பிக்கைகள் தவிடுபொடியாகிவிட்டன; அந்தப் போரோ எந்த நன்மைக்கும் வழிநடத்தவில்லை. முதல் உலகப் போர் முடிந்து 21 வருடங்கள்தான் ஆகியிருக்கும்; 1939-ல், மனிதனால் உண்டுபண்ணப்பட்ட அதைவிட படுமோசமான ஒரு பேரழிவு ஏற்பட்டது—அதுதான் இரண்டாம் உலகப் போர். அது ஏறக்குறைய ஐந்து கோடி ஆண்கள், பெண்கள், பிள்ளைகளுடைய உயிரை கொள்ளைகொண்டது. சரமாரியான அணுகுண்டு தாக்குதல்கள் நகரங்களை தரைமட்டமாக்கின. முதல் உலகப் போரில், சுமார் ஆயிரக்கணக்கான படைவீரர்கள் சில மணிநேரத்தில் கொல்லப்பட்டார்கள்; ஆனால் இரண்டாம் உலக யுத்தத்தின்போதோ இரண்டே அணுகுண்டுகளால் சில விநாடிகளில் 1,00,000-க்கும் அதிகமான மக்கள் கொல்லப்பட்டார்கள். அதைவிட மிகக் கொடுமையானது என பலர் கருதுவது என்னவென்றால், நாஸி கான்ஷன்ட்ரேஷன் முகாம்களில் லட்சக்கணக்கானோர் சீராக கொலை செய்யப்பட்டதுதான்.
7. இந்த முழு நூற்றாண்டின் மெய்மை என்ன?
7 தேசங்களுக்கிடையே நடந்த போர்களையும் உள்நாட்டு சண்டைகளையும் அரசாங்கங்கள் தங்களுடைய சொந்த குடிமக்கள்மீது திணித்த மரணங்களையும் நாம் சேர்த்துக்கொண்டால், இந்த நூற்றாண்டில் கொலை செய்யப்பட்டவர்களுடைய மொத்த எண்ணிக்கை சுமார் 20 கோடி இருக்குமென பல்வேறு தகவல்மூலங்கள் தெரிவிக்கின்றன. இந்த எண்ணிக்கை 36 கோடி இருக்கும் என்றுகூட ஒரு தகவல்மூலம் சொல்கிறது. இவை அனைத்தினால் உண்டான பீதியையும்—வேதனை, கண்ணீர், துயர், சீரழிந்த வாழ்க்கையையும்—சற்று கற்பனை செய்துபாருங்கள்! இதோடுகூட, சராசரியாக சுமார் 40,000 பேர், பெரும்பாலும் பிள்ளைகள், வறுமையோடு சம்பந்தப்பட்ட நிலைமைகளால் ஒவ்வொரு நாளும் மாள்கின்றனர். இதைப்போல மூன்று மடங்கு எண்ணிக்கையானோர் கருக்கலைப்பினால் ஒவ்வொரு நாளும் கொல்லப்படுகின்றனர். மேலும், சுமார் நூறு கோடி மக்கள் மிகவும் வறுமையில் வாடுவதால், வழக்கமாக அன்றாட வேலை செய்வதற்குத் தேவையான தெம்பை அளிக்கும் உணவைக்கூட பெற முடியாமல் தவிக்கின்றனர். இந்தப் பொல்லாத காரிய ஒழுங்குமுறையின் ‘கடைசிநாட்களில்’ நாம் வாழ்கிறோம் என்று பைபிள் தீர்க்கதரிசனத்தில் முன்னறிவிக்கப்பட்டுள்ளது, அதற்கு இந்த அனைத்து நிலைமைகளும் அத்தாட்சி அளிக்கின்றன.—2 தீமோத்தேயு 3:1-5, 13; மத்தேயு 24:3-12; லூக்கா 21:10, 11; வெளிப்படுத்துதல் 6:3-8.
மனித பரிகாரங்கள் எதுவுமில்லை
8. உலக பிரச்சினைகளை ஏன் மனித தலைவர்களால் தீர்க்க முடியாது?
8 இந்த 20-ம் நூற்றாண்டு அதன் முடிவை நெருங்கி வருகையில், அது அனுபவித்ததை கடந்த நூற்றாண்டுகளில் அனுபவித்தவற்றோடு நாம் சேர்த்துக்கொள்ளலாம். இந்த அனைத்து சரித்திரமும் நமக்கு என்ன சொல்கிறது? உலகத்தின் பெரும் பிரச்சினைகளை மனித தலைவர்கள் ஒருபோதும் தீர்க்கவில்லை, அவற்றை இப்பொழுதும் தீர்ப்பதில்லை, எதிர்காலத்திலும் தீர்க்கப்போவதில்லை என்பதையே நமக்குச் சொல்கிறது. அவர்கள் எவ்வளவு நல்லெண்ணம் படைத்தவர்களாய் இருந்தாலும்கூட, நாம் விரும்பும் வகையான எதிர்காலத்தை அமைத்துக் கொடுப்பது அவர்களுடைய திறமைக்கு அப்பாற்பட்டது. அதோடு அதிகாரத்திலுள்ள சிலர் நல்லெண்ணத்துடனும் இல்லை. அவர்கள் பிறருடைய நன்மைக்காக அல்ல, தங்களுடைய சுயகெளரவத்திற்காகவும் பொருள் சம்பந்தமான ஆதாயத்திற்காகவுமே பதவியையும் அதிகாரத்தையும் நாடுகின்றனர்.
9. மனிதனுடைய பிரச்சினைகளுக்கு விஞ்ஞானத்திடம் பதில்கள் இருப்பதைக் குறித்து சந்தேகிப்பதற்கு என்ன காரணம் இருக்கிறது?
9 விஞ்ஞானத்திடம் பதில் இருக்கிறதா? நாம் கடந்தகாலத்தைச் சிந்தித்துப் பார்ப்போமானால் அதனிடம் பதில் இல்லை என்றே சொல்லலாம். அழிவுண்டாக்கும் அதிபயங்கர ரசாயன, உயிரியல், மற்றும் வேறு வகையான போர் கருவிகளைத் தயாரிப்பதற்கே அரசாங்க விஞ்ஞானிகள் பேரளவில் பணத்தையும் நேரத்தையும் முயற்சியையும் விரயமாக்குகின்றனர். தேசங்கள், ஏழ்மையானவை உட்பட, ஒவ்வொரு ஆண்டும் படைக் கருவிகளுக்காக 700 பில்லியன் டாலருக்கும் அதிகம் செலவழிக்கின்றன! மேலும், காற்று, நிலம், நீர், உணவு ஆகியவற்றின் தூய்மைக்கேட்டுக்கு காரணமான ரசாயனங்களுக்கு ‘விஞ்ஞான முன்னேற்றமே’ ஓரளவு காரணமாகும்.
10. ஏன் கல்வியும்கூட ஒளிமயமான எதிர்காலத்தை உறுதியளிக்கிறதில்லை?
10 சிறந்த ஒழுக்கத் தராதரங்களையும் மற்றவர்கள்மீது கரிசனை காண்பிப்பதையும் அயலகத்தார்மீது அன்பு செலுத்துவதையும் கற்றுக்கொடுப்பதன் மூலம் இவ்வுலக கல்வி நிறுவனங்கள் மேம்பட்ட ஓர் எதிர்காலத்தை கட்டுவதற்கு உதவுமென நாம் எதிர்பார்க்க முடியுமா? முடியாது. அதற்கு மாறாக, அவை பணம் சம்பாதிக்கும் தொழில்கள்மீதே கவனத்தை ஒருமுகப்படுத்துகின்றன. அவை ஒத்துழைக்கும் மனப்பான்மையை அல்ல, மாறாக போட்டி மனப்பான்மையையே தூண்டுவிக்கின்றன; பள்ளிகளும் ஒழுக்கநெறிகளைக் கற்பிப்பதில்லை. அதற்குப் பதிலாக, அவற்றில் பல கட்டுப்பாடற்ற பாலின செயல்களை கண்டும் காணாததுபோல விட்டுவிடுகின்றன; இது பருவ வயது கருத்தரிப்புகளும் பாலுறவால் கடத்தப்படும் வியாதிகளும் பெருமளவில் அதிகரிக்கும்படிதான் செய்திருக்கிறது.
11. எதிர்காலத்தின் பேரில் வியாபார நிறுவனங்களின் பதிவு எவ்வாறு சந்தேகத்தை உண்டாக்குகிறது?
11 இவ்வுலகிலுள்ள பெரும் வியாபார நிறுவனங்கள் நம்முடைய கிரகத்தை கவனித்துக்கொள்வதற்கும், வெறுமனே இலாபத்திற்காக அல்ல உண்மையிலேயே பயன்தரும் பொருட்களை மட்டுமே தயாரிப்பதன் மூலம் மற்றவர்களுக்கான அன்பை காண்பிப்பதற்கும் திடீரென தூண்டப்படுமா? அது சாத்தியமில்லாததே. மக்களுடைய மனதை, முக்கியமாய் இளைஞருடைய மனதை கறைபடுத்துகிற வன்முறையும் ஒழுக்கயீனமும் நிறைந்த டெலிவிஷன் நிகழ்ச்சிகளைத் தயாரித்தளிப்பதை அவர்கள் நிறுத்திவிடுவார்களா? கடந்துசென்ற காலம் கொஞ்சம்கூட ஊக்கமூட்டுவதாய் இல்லை; ஏனென்றால் பெரும்பாலும் டிவியானது ஒழுக்கயீனத்திற்கும் வன்முறைக்கும் ஓர் சாக்கடை தேக்கமாய் ஆகியிருக்கிறது.
12. வியாதி மற்றும் மரணத்தைக் குறித்ததில் மனிதனின் நிலை என்ன?
12 மேலும், டாக்டர்கள் எவ்வளவுதான் நேர்மை மனமுள்ளவர்களாய் இருந்தாலும், அவர்களால் வியாதியையும் மரணத்தையும் வெல்லவே முடியாது. உதாரணமாக, முதல் உலகப் போரின் முடிவில், ஸ்பானிஷ் ஃப்ளூ பரவுவதை அவர்களால் கட்டுப்படுத்த முடியவில்லை; அந்நோய் உலகளவில் சுமார் இரண்டு கோடி உயிர்களை காவுகொண்டது. இன்று, இருதய நோய், புற்றுநோய், சாவுக்கேதுவான வேறுசில வியாதிகள் தாண்டவமாடுகின்றன. எய்ட்ஸ் என்ற நவீன கொள்ளைநோயையும் மருத்துவ உலகம் வெற்றிகொள்ளவில்லை. மாறாக, நவம்பர் 1997-ல் விளம்பரப்படுத்தப்பட்ட ஐ.நா. அறிக்கையின்படி, எய்ட்ஸ் வைரஸ் பரவும் வீதம் கடந்த மதிப்பீடுகளைவிட இரண்டு மடங்காகிவிட்டது. ஏற்கெனவே லட்சக்கணக்கானோர் அதனால் இறந்துவிட்டார்கள். சமீப வருடத்தில், இன்னும் 30 லட்சம் பேர் இந்த வியாதி தொற்றப்பட்டுள்ளனர்.
எதிர்காலத்தை யெகோவாவின் சாட்சிகள் எவ்வாறு நோக்குகின்றனர்
13, 14. (அ) எதிர்காலத்தை யெகோவாவின் சாட்சிகள் எவ்வாறு நோக்குகிறார்கள்? (ஆ) ஏன் மனிதர்களால் மேம்பட்ட எதிர்காலத்தைக் கொண்டுவர முடியாது?
13 என்றபோதிலும், மனிதவர்க்கத்திற்கு ஒளிமயமான எதிர்காலம், பொன்னான எதிர்காலம் இருக்கிறது என யெகோவாவின் சாட்சிகள் நம்புகின்றனர்! ஆனால் அந்த ஒளிமயமான எதிர்காலம் மனித முயற்சிகளால் வருமென அவர்கள் எதிர்பார்ப்பதில்லை. அதற்கு மாறாக, படைப்பாளராகிய யெகோவா தேவனையே அவர்கள் எதிர்நோக்கியிருக்கின்றனர். எதிர்காலம் எதைப்போல் இருக்கும் என்பதை அவர் அறிந்திருக்கிறார்—அது வியக்கத்தக்க ஒன்றாய் இருக்கும்! இப்படிப்பட்ட ஓர் எதிர்காலத்தை மனிதர்களால் உருவாக்க முடியாது என்பதையும் அவர் அறிந்திருக்கிறார். கடவுள் அவர்களை படைத்திருப்பதால், வேறு எவரைக்காட்டிலும் அவர்களுடைய வரம்புகளை அவரே மிக நன்றாக அறிந்திருக்கிறார். தெய்வீக வழிநடத்துதல் இல்லாமல் தாங்களாகவே வெற்றிகரமாய் ஆண்டுகொள்ளும் திறமையுடன் மனிதர்களை அவர் படைக்கவில்லை என்பதை அவருடைய வார்த்தையில் தெளிவாக நமக்கு சொல்கிறார். தம்மிடமிருந்து பிரிந்து தன்னிச்சையாக ஆளும் மனித ஆட்சியை கடவுள் நீண்டகாலம் அனுமதித்திருப்பது, மனிதனுடைய திறமையின்மையை எந்தவித சந்தேகத்திற்கிடமின்றி நிரூபித்திருக்கிறது. ஓர் நூலாசிரியர் இவ்வாறு ஒப்புக்கொண்டார்: “மனிதனுடைய மனம் சாத்தியமான எல்லாவித கூட்டாட்சியையும் முயன்று பார்த்துவிட்டது, அவற்றால் ஒரு பலனுமில்லை.”
14 எரேமியா 10:23-ல், ஏவுதலினால் எழுதிய தீர்க்கதரிசியின் வார்த்தைகளை நாம் வாசிக்கிறோம்: “கர்த்தாவே, மனுஷனுடைய வழி அவனாலே ஆகிறதல்லவென்றும், தன் நடைகளை நடத்துவது நடக்கிறவனாலே ஆகிறதல்லவென்றும் அறிவேன்.” அதோடு, சங்கீதம் 146:3 இவ்வாறு குறிப்பிடுகிறது: “பிரபுக்களையும், இரட்சிக்கத் திராணியில்லாத மனுபுத்திரனையும் நம்பாதேயுங்கள்.” சொல்லப்போனால், ரோமர் 5:12 காட்டுகிறபடி, நாம் அபூரணராக இருப்பதால் நம்மையே நாம் நம்ப வேண்டாம் என்று கடவுளுடைய வார்த்தை எச்சரிக்கிறது. எரேமியா 17:9 சொல்கிறது: “எல்லாவற்றைப்பார்க்கிலும் இருதயமே திருக்குள்ளதும் மகா கேடுள்ளதுமாயிருக்கிறது.” எனவே நீதிமொழிகள் 28:26 சொல்கிறது: “தன் இருதயத்தை நம்புகிறவன் மூடன்; ஞானமாய் நடக்கிறவனோ இரட்சிக்கப்படுவான்.”
15. நம் வழிநடத்துதலுக்கான ஞானத்தை நாம் எங்கே கண்டடையலாம்?
15 இந்த ஞானத்தை நாம் எங்கே கண்டடையலாம்? “கர்த்தருக்குப் பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம்; பரிசுத்தரின் அறிவே அறிவு.” (நீதிமொழிகள் 9:10) படைப்பாளராகிய யெகோவா மாத்திரமே, பயம்நிறைந்த இந்தக் காலங்களில் நம்மை வழிநடத்தும் ஞானத்தை உடையவராயிருக்கிறார். நம்முடைய வழிநடத்துதலுக்காக ஏவப்பட்டு எழுதப்பட்ட பரிசுத்த வேதாகமத்தின்மூலம், அவருடைய ஞானத்தைப் பெற நமக்கு அதைக் கொடுத்திருக்கிறார்.—நீதிமொழிகள் 2:1-9; 3:1-6; 2 தீமோத்தேயு 3:16, 17.
மனித ஆட்சியின் எதிர்காலம்
16. எதிர்காலத்தை யார் தீர்மானித்திருக்கிறார்?
16 அப்படியானால், எதிர்காலத்தைப் பற்றி கடவுளுடைய வார்த்தை நமக்கு என்ன சொல்கிறது? அதிநிச்சயமாகவே, மனிதர்கள் கடந்த காலத்தில் என்ன செய்திருக்கிறார்களோ அவ்வாறே எதிர்காலம் இருக்காது என அது நமக்கு சொல்கிறது. எனவே, பேட்ரிக் ஹென்றியின் கருத்து தவறானதாய் இருந்தது. இந்தப் பூமிக்கும் அதிலுள்ள மக்களுக்குமுரிய எதிர்காலம், மனிதர்களால் அல்ல, ஆனால் யெகோவா தேவனால் தீர்மானிக்கப்படவிருக்கிறது. எந்த மனிதர்களுடைய சித்தமோ இந்த உலக தேசங்களுடைய சித்தமோ அல்ல, அவருடைய சித்தமே பூமியில் செய்யப்படவிருக்கிறது. “மனுஷனுடைய இருதயத்தின் எண்ணங்கள் அநேகம்; ஆனாலும் கர்த்தருடைய யோசனையே நிலைநிற்கும்.”—நீதிமொழிகள் 19:21.
17, 18. நம்முடைய நாளுக்கான கடவுளுடைய சித்தம் என்ன?
17 நம்முடைய நாளுக்கான கடவுளுடைய சித்தம் என்ன? வன்முறைமிக்க, ஒழுக்கங்கெட்ட இந்தக் காரிய ஒழுங்குமுறைக்கு ஒரு முடிவைக் கொண்டுவர அவர் நோக்கம் கொண்டிருக்கிறார். நூற்றாண்டுக்கணக்கில் பழையதாகிப்போன, சீர்கெட்ட இந்த மனித ஆட்சியை, கடவுள் உருவாக்கிய ஆட்சி விரைவில் நீக்கிவிடும். தானியேல் 2:44-ல் உள்ள தீர்க்கதரிசனம் குறிப்பிடுகிறது: “அந்த ராஜாக்களின் [அதாவது, இன்றுள்ள ராஜாக்களின்] நாட்களிலே, பரலோகத்தின் தேவன் என்றென்றைக்கும் அழியாத ஒரு ராஜ்யத்தை [பரலோகத்தில்] எழும்பப்பண்ணுவார்; அந்த ராஜ்யம் வேறே ஜனத்துக்கு விடப்படுவதில்லை; . . . அது அந்த ராஜ்யங்களையெல்லாம் நொறுக்கி, நிர்மூலமாக்கி, தானோ என்றென்றைக்கும் நிற்கும்.” பிசாசாகிய சாத்தானின் தீய செல்வாக்கையும்கூட அந்த ராஜ்யம் ஒழித்துவிடும்—இது மனிதர்களால் ஒருபோதும் செய்ய முடியாத ஒன்று. இந்த உலகில் அவனுடைய ஆட்சி என்றென்றும் இல்லாமற்போகும்.—ரோமர் 16:20; 2 கொரிந்தியர் 4:4; 1 யோவான் 5:19.
18 பரலோக அரசாங்கம் எல்லா வகையான மனித ஆட்சியையும் முற்றிலும் இல்லாமல் நொறுக்கிப்போடும் என்பதை கவனியுங்கள். இந்தப் பூமியை ஆளுவது மக்களிடம் ஒப்படைக்கப்படாது. பரலோகத்தில் கடவுளுடைய ராஜ்யத்தில் ஆளுகைசெய்வோர், மனிதவர்க்கத்தின் நன்மைக்காக பூமியின் விவகாரங்கள் அனைத்தையும் கட்டுப்படுத்துவார்கள். (வெளிப்படுத்துதல் 5:10; 20:4-6) பூமியில் இருக்கும் உண்மையுள்ள மானிடர்கள், கடவுளுடைய ராஜ்ய வழிநடத்துதல்களுக்கு ஒத்துழைப்பார்கள். “உம்முடைய ராஜ்யம் வருவதாக. உம்முடைய சித்தம் பரலோகத்தில் செய்யப்படுவதுபோல பூமியிலேயும் செய்யப்படுவதாக” என்று இயேசு சொன்னபோது நாம் ஜெபிக்கும்படி நமக்கு கற்றுக்கொடுத்த அரசாட்சி இதுவே.—மத்தேயு 6:10.
19, 20. (அ) ராஜ்ய ஏற்பாட்டை பைபிள் எவ்வாறு விவரிக்கிறது? (ஆ) அந்த ஆட்சி மனிதவர்க்கத்தினருக்கு என்ன செய்யும்?
19 யெகோவாவின் சாட்சிகள் கடவுளுடைய ராஜ்யத்தில் விசுவாசம் வைக்கின்றனர். அப்போஸ்தலன் பேதுரு எழுதிய ‘புதிய வானங்கள்’ இதுவே. அதைப் பற்றி அவர் எழுதியதாவது: “அவருடைய வாக்குத்தத்தத்தின்படியே நீதி வாசமாயிருக்கும் புதிய வானங்களும் புதிய பூமியும் உண்டாகுமென்று காத்திருக்கிறோம்.” (2 பேதுரு 3:13) ‘புதிய வானங்களாகிய’ கடவுளுடைய ராஜ்யத்தால் ஆளப்படும் புதிய மனித சமுதாயமே அந்தப் “புதிய பூமி.” இதுவே அப்போஸ்தலன் யோவானுக்கு ஒரு தரிசனத்தில் கடவுள் வெளிப்படுத்திய ஏற்பாடு; அவர் இவ்வாறு எழுதினார்: “பின்பு, நான் புதிய வானத்தையும் புதிய பூமியையும் கண்டேன்; முந்தின வானமும் முந்தின பூமியும் ஒழிந்துபோயின; சமுத்திரமும் இல்லாமற்போயிற்று. அவர்களுடைய கண்ணீர் யாவையும் தேவன் துடைப்பார்; இனி மரணமுமில்லை, துக்கமுமில்லை, அலறுதலுமில்லை, வருத்தமுமில்லை; முந்தினவைகள் ஒழிந்துபோயின என்று விளம்பினது.”—வெளிப்படுத்துதல் 21:1, 4.
20 இந்தப் புதிய பூமி நீதியுள்ள ஒன்றாக இருக்கும் என்பதை கவனியுங்கள். அநீதியான காரியங்களெல்லாம் கடவுளுடைய தலையிடுதலால் அர்மகெதோனில் நீக்கப்பட்டிருக்கும். (வெளிப்படுத்துதல் 16:14, 16) நீதிமொழிகள் 2:21, 22-ல் உள்ள தீர்க்கதரிசனம் அதை இவ்வாறு சொல்கிறது: “செவ்வையானவர்கள் பூமியிலே வாசம்பண்ணுவார்கள்; உத்தமர்கள் அதிலே தங்கியிருப்பார்கள். துன்மார்க்கரோ பூமியிலிருந்து அறுப்புண்டுபோவார்கள்.” சங்கீதம் 37:9 இவ்வாறு வாக்குறுதி அளிக்கிறது: “பொல்லாதவர்கள் அறுப்புண்டுபோவார்கள்; கர்த்தருக்குக் காத்திருக்கிறவர்களோ பூமியைச் சுதந்தரித்துக்கொள்வார்கள்.” இப்படிப்பட்ட ஒரு புதிய உலகில் வாழ உங்களுக்கு விருப்பமில்லையா?
யெகோவாவின் வாக்குறுதிகளில் விசுவாசம் வையுங்கள்
21. நாம் ஏன் யெகோவாவின் வாக்குறுதிகளில் விசுவாசம் வைக்கலாம்?
21 யெகோவாவின் வாக்குறுதிகளில் நாம் விசுவாசம் வைக்கமுடியுமா? தம்முடைய தீர்க்கதரிசியாகிய ஏசாயா மூலம் அவர் என்ன சொல்கிறார் என்பதை செவிமடுத்துக் கேளுங்கள்: “முந்திப் பூர்வகாலத்தில் நடந்தவைகளை நினையுங்கள்; நானே தேவன், வேறொருவரும் இல்லை; நானே தேவன், எனக்குச் சமானமில்லை. அந்தத்திலுள்ளவைகளை ஆதிமுதற்கொண்டும், இன்னும் செய்யப்படாதவைகளைப் பூர்வகாலமுதற்கொண்டும் அறிவிக்கிறேன்; என் ஆலோசனை நிலைநிற்கும், எனக்குச் சித்தமானவைகளையெல்லாம் செய்வேன் என்று சொ[ன்னார்].” 11-ம் வசனத்தின் பிற்பகுதி சொல்கிறது: “[நான்] அதைச் சொன்னேன், அதை நிறைவேற்றுவேன்; அதைத் திட்டம் பண்ணினேன், அதைச் செய்து முடிப்பேன்.” (ஏசாயா 46:9-11) ஆம், அவருடைய வாக்குறுதிகள் ஏற்கெனவே நிறைவேறிவிட்டதைப் போல, நாம் யெகோவாவிலும் அவருடைய வாக்குறுதிகளிலும் விசுவாசம் வைக்க முடியும். பைபிள் அதை இவ்வாறு சொல்லுகிறது: “விசுவாசம் என்பது நம்பப்படும் காரியங்களின் நிச்சயிக்கப்பட்ட எதிர்பார்ப்பு; காணாவிடினும் உண்மைகளைப் பற்றிய தெளிவான வெளிக்காட்டல்.”—எபிரெயர் 11:1, NW.
22. யெகோவா தம்முடைய வாக்குறுதிகளை நிறைவேற்றுவார் என்பதில் நாம் ஏன் விசுவாசத்துடன் இருக்கலாம்?
22 மனத்தாழ்மையுள்ள மக்கள் இப்படிப்பட்ட விசுவாசத்தைக் காண்பிக்கிறார்கள், ஏனென்றால் கடவுள் தம்முடைய வாக்குறுதிகளை நிறைவேற்றுவார் என்பதை அவர்கள் அறிந்திருக்கிறார்கள். உதாரணமாக, சங்கீதம் 37:29-ல் நாம் இவ்வாறு வாசிக்கிறோம்: “நீதிமான்கள் பூமியைச் சுதந்தரித்துக்கொண்டு, என்றைக்கும் அதிலே வாசமாயிருப்பார்கள்.” நாம் இதை நம்ப முடியுமா? ஆம், ஏனென்றால் எபிரெயர் 6:18 (NW) இவ்வாறு சொல்கிறது: ‘தேவன் பொய் சொல்லக்கூடாதவராய் இருக்கிறார்.’ மனத்தாழ்மையுள்ளோருக்கு கொடுப்பதற்காக கடவுள் இந்தப் பூமியை சொந்தமாக வைத்திருக்கிறாரா? வெளிப்படுத்துதல் 4:11 அறிவிக்கிறது: “நீரே சகலத்தையும் சிருஷ்டித்தீர், உம்முடைய சித்தத்தினாலே அவைகள் உண்டாயிருக்கிறவைகளும் சிருஷ்டிக்கப்பட்டவைகளுமாயிருக்கிறது.” எனவே, சங்கீதம் 24:1 சொல்கிறது: “பூமியும் அதின் நிறைவும், உலகமும் அதிலுள்ள குடிகளும் கர்த்தருடையது.” யெகோவா இந்தப் பூமியைப் படைத்தார். அதை அவர் சொந்தமாக வைத்திருக்கிறார். தம்மில் விசுவாசம் வைப்போருக்கு அதைக் கொடுக்கிறார். இதில் நம்முடைய விசுவாசத்தைப் பலப்படுத்துவதற்கு உதவும்படி, கடந்த காலங்களிலும் நம்முடைய நாளிலும் கடவுள் எவ்வாறு தம்முடைய வாக்குறுதிகளை நிறைவேற்றியிருக்கிறார் என்பதையும், எதிர்காலத்திலும் அவ்வாறே நிறைவேற்றுவார் என்பதில் நாம் ஏன் முழு நம்பிக்கையுடன் இருக்கலாம் என்பதையும் அடுத்த கட்டுரை காண்பிக்கும்.
மறுபார்வைக்கான குறிப்புகள்
◻ சரித்திரம் முழுவதும் மக்களுடைய எதிர்பார்ப்புகளுக்கு என்ன ஏற்பட்டிருக்கிறது?
◻ ஒளிமயமான எதிர்காலத்திற்காக நாம் ஏன் மனிதர்களை நோக்கியிருக்கக் கூடாது?
◻ எதிர்காலத்தைக் குறித்ததில் கடவுளுடைய சித்தம் என்ன?
◻ கடவுள் தம்முடைய வாக்குறுதிகளை நிறைவேற்றுவார் என்பதில் நாம் ஏன் விசுவாசத்துடன் இருக்கிறோம்?
[பக்கம் 10-ன் படம்]
பைபிள் துல்லியமாய் குறிப்பிடுகிறது: ‘தன் நடைகளை நடத்துவது [மனுஷனாலே] ஆகிறதல்ல.’—எரேமியா 10:23
[படத்திற்கான நன்றி]
அணுகுண்டு: U.S. National Archives photo; பசியால் வாடும் பிள்ளைகள்: WHO/OXFAM; அகதிகள்: UN PHOTO 186763/J. Isaac; முசோலினியும் ஹிட்லரும்: U.S. National Archives photo