சேனைகள்—நமக்கு எப்போதுமே தேவைப்படுமா?
சேனைகள் மனித வளங்களின் பெரும் பகுதியை வீணாக்கியிருக்கின்றன, மனிதனின் மகிழ்ச்சியை பெருமளவில் அழித்துப்போட்டிருக்கின்றன. எனவே, ‘சேனைகளைக் கலைத்துவிடுவதற்கு இடமளிப்பதன் மூலம் உலக பாதுகாப்பை மனிதவர்க்கம் எப்போதாவது அடையமுடியுமா?’ என்று சில ஆட்கள் யோசித்திருக்கின்றனர். எல்லா உயிரும் மாண்டு போகும் அளவுக்கு சாத்தியமுடைய பூண்டோடு அழிக்கும் போர் ஆயுதங்கள் இருக்கிறபடியால், இக்கேள்வி உடனடியாக கவனிக்க வேண்டியதாகிறது. சேனைகளே இல்லா ஓர் உலகத்திற்கான நம்பிக்கையைப் பெற்றிருப்பது எந்த அளவுக்கு உண்மையானது?
சாதகமான சர்வதேச உறவுகள் நம்பிக்கையை ஏற்படுத்தும்போது, அது ஒருவேளை கொஞ்சம் ஆயுதக் குறைப்புக்கு வழிநடத்தலாம் என்பதை அநேக முன்னோடி நிகழ்ச்சிகள் நிரூபிக்கின்றன. உதாரணமாக, கனடா மற்றும் ஐக்கிய மாகாணங்களுக்கு இடையே உள்ள பொதுவான நட்பு, ஒன்றரை நூற்றாண்டுகளுக்கு மேல் அவர்களுடைய 5,000 கிலோமீட்டர் எல்லைக்குப் பாதுகாப்பு படை இல்லாமலே இருப்பதை குறித்துக் காட்டியது. மற்ற பல தேசங்களைப் போலவே நார்வே மற்றும் ஸ்வீடன் அதற்கு ஒத்த ஒப்பந்தம் செய்திருக்கின்றன. எல்லா தேசங்களுக்கும் இடையிலான ஓர் ஒப்பந்தம், சேனைகளே இல்லா ஓர் உலகை ஏற்படுத்தமுடியுமா? முதல் உலகப் போரால் ஏற்பட்ட திகிலின் காரணமாக, இந்தக் கருத்து முன் என்றுமில்லாத அளவுக்கு பிரபலமானது.
1918-ல் சமாதானம் ஏற்பட்டபோது, வெர்சேய்ல்ஸ் சமாதான ஒப்பந்தத்தின் நோக்கங்களில் ஒன்று, “எல்லா தேசங்களும் பொதுவாக போர் ஆயுதங்களைக் குறைப்பதற்கு முதற்படி எடுப்பதை சாத்தியமாக்குவதே.” அதைப் பின்தொடர்ந்து வந்த வருடங்களில், போரைத் தவிர்க்க வேண்டும் என்ற கொள்கை பிரபலமானது. போரே ஒரு தேசத்தில் நிகழக்கூடிய மிக மோசமான சம்பவம்; ஆகவே தோல்வியுறுவதைக் காட்டிலும் அது மிகவும் மோசமானது என்று சில யுத்தத் தவிர்ப்புவாதிகள் தீவிரமாய் சிந்தித்து முடிவு செய்தனர். அதை யுத்தத் தவிர்ப்புவாதிகளின் எதிராளிகள் ஒத்துக்கொள்ளவில்லை; பெரிய இடங்களிலிருந்த யூதர்கள், தாக்குதல் செய்தவர்களுக்கு எதிராக மிகவும் குறைவாகவே தற்காப்பு ஆயுதங்களை உபயோகித்தனர் என்பதை குறிப்பிட்டுக் காட்டினர். இருப்பினும், அவர்களை பூண்டோடு அழிப்பதற்காக கொடூரமான முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வந்தன. அமெரிக்காக்களுக்கு தங்களை அடிமைகளாக கொண்டுவந்தவர்களை எதிர்ப்பதற்கு ஆப்பிரிக்கர்களுக்கு குறைவாகவே வாய்ப்புகள் இருந்தன; இருப்பினும், அவர்கள் பல நூற்றாண்டுகள் கொடூரமாக தவறாய் நடத்தப்பட்டு வந்தனர்.
இருந்தபோதிலும், இரண்டாம் உலகப்போர் திடீரென ஆரம்பித்தபோது, தேசங்களுக்கு பாதுகாப்பு தேவை என்ற முடிவுக்கு அநேக யுத்த எதிர்ப்புவாதிகள் வந்தனர். ஆகையால், இரண்டாம் உலகப்போருக்குப் பிறகு, ஐக்கியநாட்டு சங்கம் ஸ்தாபிக்கப்பட்டபோது, வலுச்சண்டைக்குப் போவதைத் தவிர்ப்பதற்காக, போராயுதங்களைக் குறைப்பதன் பேரில் குறைவான வலியுறுத்துதலும் சர்வதேச ஒத்துழைப்பின் பேரில் அதிகமான வலியுறுத்துதலும் கொடுக்கப்பட்டது. இவ்வாறு அளிக்கப்படும் பாதுகாப்பு, போராயுதங்களின்றி இருப்பதற்கான நம்பிக்கையை தேசங்களுக்கு அளிக்கும் என்று அங்கத்தின தேசங்கள் நினைத்தன.
மற்றொரு பிரச்சினை அதிகமதிகமாக தெளிவானது. பாதுகாப்புக்காக ஒரு தேசம் எடுக்கும் முயற்சிகள் பெரும்பாலும் அதன் அருகாமையில் உள்ள தேசம் பாதுகாப்பற்றதாக உணரும்படி செய்தது. சுற்றிச் சுற்றி ஒரே இடத்திற்குத் திரும்பக்கொண்டு வந்துவிடும் இந்த நச்சுச் சுழல் போராயுதப் போட்டிக்கு வழிநடத்தியது. ஆனால் சமீபத்தில், பெரும் தேசங்களுக்கு இடையே நிலவும் மேம்பட்ட உறவுகள், போராயுதங்களைக் குறைப்பதற்கான நம்பிக்கையை பலப்படுத்தியிருக்கின்றன. என்றபோதிலும், அந்தச் சமயம் முதற்கொண்டு, வளைகுடாப் போரும் முன்னாள் யுகோஸ்லாவியாவில் நடந்த குழப்பங்களும் அநேகருக்கு போராயுதக் குறைப்புக்கான நம்பிக்கைகளை தவிடுபொடியாக்கிப் போட்டிருக்கின்றன. சுமார் ஐந்து வருடங்களுக்கு முன்பு, டைம் பத்திரிகை இவ்வாறு குறிப்பிட்டது: “பனிப்போர் முடிந்துவிட்டபோதிலும் இவ்வுலகில் ஆபத்து அதிகரித்திருக்கிறதே தவிர குறையவில்லை.”
உலகளாவிய “போலீஸ்காரர்” ஒருவருக்கான விருப்பம்
எல்லாரையும் பாதுகாப்பதற்கென்று போதுமான பலம்பொருந்திய ஒரு சேனையை உடைய ஓர் உலக அரசாங்கம் மனிதவர்க்கத்திற்குத் தேவை என்ற முடிவுக்கு அநேக கவனிப்பாளர்கள் வந்திருக்கின்றனர். ஐக்கிய நாட்டு சங்கமோ அல்லது உலகின் முதன்மைவாய்ந்த இராணுவங்களோ இதை செய்யமுடியாத காரணத்தால், எதிர்காலத்துக்கான இத்தகைய நம்பிக்கை மிகவும் குறைவாகவே உள்ளது என்று சிலர் உணருகின்றனர். ஆனால் நீங்கள் பைபிளை கடவுளுடைய வார்த்தையாக ஏற்றுக்கொண்டால், இந்த அவசரமான தேவையை சர்வவல்லமையுள்ள கடவுள் திருப்தி செய்வாரா என்று நீங்கள் ஒருவேளை யோசித்திருக்கலாம்.
பைபிள் கடவுளை “அன்புக்கும் சமாதானத்துக்கும் காரணராகிய தேவன்” என்று அழைக்கிறது. ஆகையால் அவர் நியாயத்தை நடைமுறைப்படுத்துவதற்கு இராணுவ பலத்தை பயன்படுத்துவாரா? அப்படி செய்வாரென்றால், எந்தச் சேனையை பயன்படுத்துவார்? இன்றைக்குள்ள சேனைகளில் பெரும்பாலானவை கடவுளுடைய ஆதரவைப் பெற்றிருப்பதாக உரிமைபாராட்டுகின்றன; ஆனால் அவை உண்மையிலேயே கடவுளுடைய சித்தத்தை நிறைவேற்றுகின்றனவா? அல்லது கடவுள் வேறு ஏதாவது ஒரு வழியில் குறுக்கிட்டு சமாதானத்தையும் பாதுகாப்பையும் அளிப்பாரா?—2 கொரிந்தியர் 13:11.
ஏதேனிலிருந்து ஆதாமையும் ஏவாளையும் வெளியே துரத்துவதன் மூலமும் அவர்கள் திரும்பி உள்ளே அதனுள் வருவதை தடைசெய்வதற்கு கேருபீன்களை நிறுத்தி வைப்பதன் மூலமும் சர்வவல்லமையுள்ள கடவுள் முதலில் நடந்த கலகத்தை கையாண்டார். அவருடைய அரசுரிமைக்கு விரோதமான எல்லா கலகத்தையும் நொறுக்கிப்போடப்போகும் தம் நோக்கத்தையும்கூட அவர் அறிவித்தார். (ஆதியாகமம் 3:15) அது கடவுள் ஒரு சேனையை பயன்படுத்துவதை உட்படுத்துமா?
கடவுள் தம் நியாயத்தீர்ப்புகளை நிறைவேற்றுவதற்காக சேனைகளை பயன்படுத்திய சமயங்களைப் பற்றி பைபிள் சொல்கிறது. உதாரணமாக, கானான் தேசத்திலிருந்த ராஜ்யங்கள் மிருகப்புணர்ச்சி, பிள்ளைகளை பலி கொடுத்தல், கொடூரமான போர் போன்றவற்றை பழக்கமாக செய்துவந்தன. கடவுள் அவற்றை முழுவதுமாய் அழிக்கும்படி கட்டளையிட்டார், தண்டனையை நிறைவேற்றுவதற்கு யோசுவாவின் சேனையை உபயோகித்தார். (உபாகமம் 7:1, 2) அதேபோல், கடவுள் தம் நியாயத்தீர்ப்பின் கடைசி நாளில் எவ்வாறு எல்லா துன்மார்க்கத்தையும் அழிப்பார் என்பதற்கு உதாரணமாக தாவீது ராஜாவின் சேனை பெலிஸ்தியருக்கு எதிராக எழும்பி கடவுளுடைய நியாயத்தீர்ப்பை நிறைவேற்றியது.
அந்தச் சம்பவங்கள் பாடம் கற்பிப்பவையாய் இருந்தன. மக்களுக்கு பாதுகாப்பை அளிக்க யெகோவா தம் சேனையை பயன்படுத்தலாம் என்பதை அவர் நடைமுறையில் காண்பித்தார். உண்மையில், அவருடைய ஆட்சிக்கு எதிராக உள்ள சர்வலோக அளவிலான கலகத்தனத்தை அடக்கப்போகும் தனித்தன்மைவாய்ந்த சேனை ஒன்றை யெகோவா வைத்திருக்கிறார்.
“சேனைகளின் யெகோவா”
பைபிள் “சேனைகளின் யெகோவா” என்ற பதத்தை 250 தடவைக்கும் மேல் பயன்படுத்துகிறது. தேவதூதர்கள் அடங்கிய பெரும் சேனைகளுக்கு கடவுள் தலைவராய் இருக்கும் மிக உயர்ந்த ஸ்தானத்தை இந்தப் பதம் அடிப்படையில் குறிப்பிடுகிறது. ஒரு சமயம் மிகாயா தீர்க்கதரிசி, ஆகாப், யோசபாத் ராஜாக்களிடம் இவ்வாறு சொன்னார்: “கர்த்தர் தம்முடைய சிங்காசனத்தின் மேல் வீற்றிருக்கிறதையும், பரமசேனையெல்லாம் அவரிடம் அவர் வலதுபக்கத்திலும் அவர் இடதுபக்கத்திலும் நிற்கிறதையும் கண்டேன்.” (1 இராஜாக்கள் 22:19) தேவதூதர்கள் அடங்கிய சேனைகளைப் பற்றி இங்கே குறிப்பிடப்பட்டுள்ளது. யெகோவா தம் ஜனங்களைப் பாதுகாப்பதற்கு இந்தச் சேனைகளைப் பயன்படுத்தினார். தோத்தான் பட்டணம் முற்றுகையிடப்பட்டபோது, எலிசாவின் வேலைக்காரன் நம்பிக்கையிழந்து போனார். இருப்பினும், இழந்துவிட்ட நம்பிக்கையை மீட்டளிப்பதற்கு, கடவுள் தம் ஆவி சிருஷ்டிகள் அடங்கிய சேனையைப் பற்றிய அற்புதமான தரிசனத்தை அவருக்கு காண்பித்தார். “கர்த்தர் அந்த வேலைக்காரன் கண்களைத் திறந்தார்; இதோ, எலிசாவைச் சுற்றிலும் அக்கினிமயமான குதிரைகளாலும் இரதங்களாலும் அந்த மலை நிறைந்திருக்கிறதை அவன் கண்டான்.”—2 இராஜாக்கள் 6:15-17.
கடவுள் இன்று சேனைகளை ஆதரிக்கிறார் என்று அப்படிப்பட்ட சம்பவங்கள் அர்த்தப்படுத்துகின்றனவா? சில கிறிஸ்தவமண்டல படைகள் கடவுளுடைய சேனைகள் என தங்களை உரிமைபாராட்டிக்கொள்ளலாம். அவற்றை ஆசீர்வதிக்கும்படி அநேகர் குருமாரை கேட்கின்றனர். ஆனால் கிறிஸ்தவமண்டல படைகள் பெரும்பாலும் ஒன்றோடொன்று, உடன் விசுவாசிகளுக்கு எதிராக சண்டை போட்டுக்கொள்கின்றன. இந்த நூற்றாண்டின் இரண்டு உலகப்போர்களும் கிறிஸ்தவர்கள் என தங்களை அழைத்துக்கொண்ட படைகளுக்கு இடையே ஆரம்பமாயின. இது கடவுளுடைய செயலாக இருக்கமுடியாது. (1 யோவான் 4:20) அப்படிப்பட்ட இராணுவ சேனைகள் சமாதானத்துக்காக போரிடுவதாக ஒருவேளை உரிமைபாராட்டிக்கொண்டாலும், உலகில் சமாதானம் குலைக்கப்படுவதை தடுப்பதற்கு அப்படிப்பட்ட சேனைகளை ஒழுங்கமைக்கும்படி இயேசு தம்மைப் பின்பற்றியவர்களுக்கு போதித்தாரா?
இயேசு ஒரு தோட்டத்தில் தம் சீஷர்களோடுகூட ஜெபிக்கையில் ஆயுதம்தரித்த கூட்டம் ஒன்று இயேசுவின்மீது கைகளை போட்டபோது, சமாதானம் மிகவும் மோசமாய் குலைக்கப்பட்டது. சீஷர்களில் ஒருவர் கூட்டத்தில் இருந்த ஒரு மனிதனுடைய காதை பட்டயத்தால் வெட்டினார். இயேசு ஒரு முக்கியமான நியமத்தை விளக்குவதற்கு அந்தச் சந்தர்ப்பத்தை பயன்படுத்தினார். அவர் சொன்னார்: “உன் பட்டயத்தைத் திரும்ப அதின் உறையிலே போடு; பட்டயத்தை எடுக்கிற யாவரும் பட்டயத்தால் மடிந்துபோவார்கள். நான் இப்பொழுது என் பிதாவை வேண்டிக்கொண்டால், அவர் பன்னிரண்டு லேகியோனுக்கு அதிகமான தூதரை என்னிடத்தில் அனுப்பமாட்டாரென்று நினைக்கிறாயா?” இயேசு தம் தலைமையில் பெரும் சேனையை வைத்திருந்தார், ஆனால் பேதுருவோ அல்லது வேறு எந்த மனிதனோ அதில் ஒரு படைவீரராக இருக்கும்படி சேர்த்துக்கொள்ளப்படவில்லை. மாறாக, பேதுருவும் இயேசுவைப் பின்பற்றிய மற்றவர்களும் ‘மனுஷரைப் பிடிக்கிறவர்களாகும்படி’ அவர் அழைத்திருந்தார். (மத்தேயு 4:19; 26:47-53) ஒருசில மணிநேரத்திற்குப் பிறகு, இயேசு பிலாத்துவிடம் நிலைமையை விளக்கினார். அவர் சொன்னார்: “என் ராஜ்யம் இவ்வுலகத்திற்குரியதல்ல, என் ராஜ்யம் இவ்வுலகத்திற்குரியதானால் நான் யூதரிடத்தில் ஒப்புக்கொடுக்கப்படாதபடிக்கு என் ஊழியக்காரர் போராடியிருப்பார்களே; இப்படியிருக்க என் ராஜ்யம் இவ்விடத்திற்குரியதல்ல.” (யோவான் 18:36) பூமியில் ஸ்தாபிக்கப்பட்ட தாவீதின் ராஜ்யத்தைப் போல் அல்லாமல், கடவுள் இயேசுவுக்கு கொடுத்திருக்கும் ராஜ்யம் பரலோகத்தில் உள்ளது; அது பூமியின்மீது சமாதானத்தைக் கொண்டுவரும்.
கடவுளுடைய சேனைகள் போருக்கு தயார்
கடவுளுடைய சேனைகள் விரைவில் நடவடிக்கை எடுக்கும். வரவிருக்கும் பலமான மோதலை விவரிக்கையில், வெளிப்படுத்துதல் இயேசுவை “தேவனுடைய வார்த்தை” என்றழைக்கிறது. நாம் இவ்வாறு வாசிக்கிறோம்: “பரலோகத்திலுள்ள சேனைகள் வெண்மையும் சுத்தமுமான மெல்லிய வஸ்திரந் தரித்தவர்களாய், வெள்ளைக் குதிரைகளின்மேல் ஏறி அவருக்குப் பின்சென்றார்கள். புறஜாதிகளை வெட்டும்படிக்கு அவருடைய வாயிலிருந்து கூர்மையான பட்டயம் புறப்படுகிறது.” இவ்வாறு பகையோடு ஒன்றோடொன்று மோதிக்கொள்வது, “பூமியின் ராஜாக்களும் அவர்களுடைய சேனைகளும்” அழிக்கப்படுவதில் விளைவடையும். கடவுளிடம் தங்கள் உண்மைப்பற்றுறுதியை வெளிப்படுத்திக் காட்டத் தவறும் மற்றவர்களுக்கு, அந்தத் தீர்க்கதரிசனம் கூடுதலாக சொல்கிறது: “மற்றவர்கள் குதிரையின்மேல் ஏறினவருடைய வாயிலிருந்து புறப்படுகிற பட்டயத்தால் கொல்லப்பட்டார்கள்.” பிசாசாகிய சாத்தானும்கூட செயல்பட முடியாதபடி செய்யப்படுவான். இது உண்மையில் சேனைகளே இல்லாத ஓர் சமாதானமான உலகிற்கு இடமளிக்கும்.—வெளிப்படுத்துதல் 19:11-21; 20:1-3.
போரில்லா ஓர் உலகை கற்பனை செய்து பாருங்கள்
சேனைகளே தேவைப்படாத அதிக பாதுகாப்பாய் உள்ள ஓர் உலகை நீங்கள் கற்பனை செய்து பார்க்கமுடியுமா? பைபிள் சங்கீதம் ஒன்று சொல்கிறது: “பூமியிலே பாழ்க்கடிப்புகளை நடப்பிக்கிற கர்த்தருடைய செய்கைகளை வந்து பாருங்கள். அவர் பூமியின் கடைமுனை மட்டும் யுத்தங்களை ஓயப்பண்ணுகிறார்.”—சங்கீதம் 46:8, 9.
இது எப்பேர்ப்பட்ட விடுதலையாய் இருக்கும்! சேனைகளுக்கும் அவற்றின் ஆயுதங்களுக்கும் வரி செலுத்தும் பாரமான சுமையிலிருந்து கடைசியாக விடுவிக்கப்படும்போது மனித சமுதாயத்துக்கான எதிர்பார்ப்புகளை கற்பனை செய்துபாருங்கள்! மக்கள் தங்கள் சக்திகளை, வாழ்க்கை சூழ்நிலைகளை எல்லாருக்கும் மேம்படுத்துவதிலும் பூமியை சுத்தம் செய்வதிலும் அதை மறுபடியும் நிலைநாட்டுவதிலும் பயன்படுத்துவார்கள். அங்கே மனிதவர்க்கத்திற்கு உண்மையிலேயே பயனுள்ளதாயிருக்கும் காரியங்களை கண்டுபிடிப்பதற்கு புதிய வாய்ப்புகள் இருக்கும்.
இந்த வாக்குறுதி உலகளாவிய நிறைவேற்றத்தை உடையதாயிருக்கும்: “இனிக் கொடுமை உன் தேசத்திலும், அழிவும் நாசமும் உன் எல்லைகளிலும் கேட்கப்படமாட்டாது.” (ஏசாயா 60:18) ஆயிரக்கணக்கான அகதிகள் நம்பிக்கையிழந்த நிலையில் போர் நடக்கும் இடங்களிலிருந்து திரள் திரளாய் தங்கள் வீடுகளையும் சொத்துக்களையும் இழந்து அகதிகள் முகாமில் கஷ்டத்தோடு வாழவேண்டிய கட்டாய நிலைக்குள் வரமாட்டார்கள். தேசங்களுக்கு இடையே நிகழும் போர்களில் அன்பானவர்கள் கொல்லப்படுவதையோ அல்லது முடமாக்கப்படுவதையோ கண்டு மக்கள் புலம்ப மாட்டார்கள். யெகோவாவின் பரலோக ராஜா நிரந்தரமான உலக சமாதானத்தை நிலைநாட்டுவார். “அவருடைய நாட்களில் நீதிமான் செழிப்பான்; சந்திரனுள்ளவரைக்கும் மிகுந்த சமாதானம் இருக்கும். அவர்கள் ஆத்துமாக்களை வஞ்சகத்திற்கும் கொடுமைக்கும் தப்புவிப்பார்.”—சங்கீதம் 72:7, 14.
விரோதிக்க கற்றுக்கொள்ளாமல் கடவுளுடைய அன்பான வழிகளைப் பார்த்து பின்பற்றுவதற்கு கற்றுக்கொண்டிருக்கும் மக்களின் மத்தியில் வாழ்க்கை இன்னும் அதிக இன்பமாய் இருக்கும். கடவுளுடைய வார்த்தை இவ்வாறு முன்னறிவிக்கிறது: “என் பரிசுத்த பர்வதமெங்கும் தீங்குசெய்வாருமில்லை; கேடுசெய்வாருமில்லை; சமுத்திரம் ஜலத்தினால் நிறைந்திருக்கிறதுபோல், பூமி கர்த்தரை அறிகிற அறிவினால் நிறைந்திருக்கும்.” யெகோவாவை அறிந்து அவரை நேசிக்கும் மக்களின் மத்தியில் வாழ்வது எப்படியிருக்கும்? அதே புத்தகம் இவ்வாறு முன்னுரைக்கிறது: “நீதியின் கிரியை சமாதானமும், நீதியின் பலன் என்றுமுள்ள அமரிக்கையும் சுகமுமாம். என் ஜனம் சமாதான தாபரங்களிலும், நிலையான வாசஸ்தலங்களிலும், அமைதியாய்த் தங்கும் இடங்களிலும் குடியிருக்கும்.”—ஏசாயா 11:9; 32:17, 18.
சமாதானத்துக்கு விரோதிகளாய் இருக்கும் அனைவரையும் நீக்கி பூமியை சுத்தம் செய்வதற்கு கடவுளுடைய சேனைகள் தயார்நிலையில் இருக்கின்றன; இதை பைபிள் அறிவின் பேரில் சார்ந்த விசுவாசத்தை உடைய மக்கள் கண்டுணருகின்றனர். ‘கடைசி நாட்களில் நிகழப்போகும்’ காரியங்களைப் பற்றி பைபிள் சொல்பவற்றின் பேரில் செயல்படுவதற்கு இந்த அறிவு அவர்களுக்கு நம்பிக்கை அளிக்கிறது. அதாவது: “அவர்கள் தங்கள் பட்டயங்களை மண்வெட்டிகளாகவும், தங்கள் ஈட்டிகளை அரிவாள்களாகவும் அடிப்பார்கள்; ஜாதிக்கு விரோதமாய் ஜாதி பட்டயம் எடுப்பதில்லை, இனி அவர்கள் யுத்தத்தைக் கற்பதுமில்லை.”—ஏசாயா 2:2-4.
அநேக தேசங்களிலிருந்து யெகோவாவின் சாட்சிகளாய் ஆகியிருக்கும் மக்கள் ‘யுத்தத்தைக் கற்பதிலிருந்து’ ஏற்கெனவே விலகியிருக்கின்றனர். அவர்கள் கடவுளுடைய பரலோக சேனைகளின் பாதுகாப்பில் தங்கள் நம்பிக்கையை வைத்திருக்கின்றனர். அவர்களோடு பைபிளை படிப்பதன் மூலம் நீங்களும்கூட அதேபோன்ற நம்பிக்கையை வளர்த்துக்கொள்ளலாம்.
[பக்கம் 28-ன் படத்திற்கான நன்றி]
U.S. National Archives photo