கொடுக்கப்பட்ட வேலையில் மாற்றம்—80-வது வயதில்
க்வென்டலின் மாத்யூஸ் சொன்னபடி
எனக்கு 80 வயதானபோது, நானும் என் கணவரும் எங்களுக்கு சொந்தமான பொருட்களை எல்லாம் மூட்டை கட்டி வாடகைக்கு எடுத்த டிரக்கில் ஏற்றி இங்கிலாந்திலிருந்து ஸ்பெயினுக்கு இடம் மாறிச் செல்ல தீர்மானித்தோம். நாங்கள் ஸ்பானிய மொழி பேசவில்லை, ஆங்கிலம் பேசும் சுற்றுலா பயணிகள் வழக்கமாக செல்லும் இடத்திலிருந்து வெகு தூரத்திலுள்ள தென்மேற்கு ஸ்பெய்னுக்கு நாங்கள் சென்றுகொண்டிருந்தோம். நாங்கள் நடைமுறைக்கு ஒத்துவராத காரியத்தைச் செய்கிறோம் என்று எங்களுடைய பெரும்பாலான நண்பர்கள் நினைத்தார்கள், ஆனால் ஆபிரகாம் ஊர் தேசத்தை விட்டுச் சென்றபோது அவருக்கு 75 வயதாயிருந்தது என்று எனக்கு நானே மகிழ்ச்சியோடு நினைப்பூட்டிக் கொண்டேன்.
நாங்கள் ஏப்ரல் 1992-ல் ஸ்பெய்னுக்கு வந்துசேர்ந்த சமயத்திலிருந்து செலவழித்த ஆண்டுகள் எங்கள் வாழ்க்கையிலேயே அதிக பலன் தரும் ஆண்டுகளாக இருந்திருக்கின்றன. ஆனால் நாங்கள் ஏன் அவ்விடத்தை விட்டுச்சென்றோம் என்பதை விளக்குவதற்கு முன்பு, யெகோவாவின் சேவையில் எங்கள் வாழ்நாள் எப்படி அப்படிப்பட்ட ஒரு பெரிய தீர்மானத்தை செய்வதற்கு எங்களை வழிநடத்தியது என்பதை உங்களுக்குச் சொல்கிறேன்.
பைபிள் சத்தியம் எங்கள் வாழ்க்கையை மாற்றுகிறது
நான் இங்கிலாந்து, தென்மேற்கு லண்டனில் உள்ள ஒரு மதப்பற்றுள்ள வீட்டில் வளர்ந்து வந்தேன். என் அம்மா ஆவிக்குரிய திருப்திக்காக தேடிக்கொண்டே இருக்கையில் என்னையும் என் சகோதரியையும் கூட்டிக்கொண்டு பல வித்தியாசமான வணக்க ஸ்தலங்களுக்கு செல்வார்கள். என் அப்பா பல நாட்களாகவே காச நோயால் உடல் நலமின்றி இருந்ததால் எங்களோடு வரமுடியவில்லை. ஆனால் அவர் பைபிளை மிகவும் ஆர்வத்தோடு வாசிப்பார், அவர் தெளிவாக விளங்கிக்கொண்ட ஒரு பகுதியை கண்டுபிடித்த சமயத்தின்போதெல்லாம் அதை கோடிட்டு வைப்பார். அவர் மிகவும் விரும்பி உபயோகித்து கிழிந்துபோன பைபிளே நான் அதிகமாய் மதித்துப் போற்றிய உடைமைகளில் ஒன்றாக உள்ளது.
1925-ல், எனக்கு 14 வயதாயிருந்தபோது, எங்கள் வீட்டுக் கதவின் அடியில் ஒரு துண்டுப்பிரதி விட்டுச் செல்லப்பட்டிருந்தது, வெஸ்ட் ஹாம் டௌன் ஹாலில் நடக்கவிருக்கும் ஒரு பொது பேச்சுக்கான அழைப்பு அதில் இருந்தது. என் அம்மாவும் பக்கத்தில் வசித்து வந்த ஒருவரும் அந்தப் பேச்சுக்கு ஆஜராக தீர்மானித்தனர், நானும் என் சகோதரியும் அவர்களோடு சென்றோம். “இப்போது வாழும் லட்சக்கணக்கானோர் ஒருபோதும் மரிக்கவேமாட்டார்கள்” என்ற அந்தப் பேச்சு, என் அம்மாவின் இருதயத்தில் பைபிள் சத்தியத்தின் விதைகளை விதைத்தது.
சில மாதங்களுக்குப் பின் என் அப்பா 38 வயதில் இறந்து போனார். அவருடைய மரணம் பயங்கர அதிர்ச்சியாக இருந்தது, ஏனென்றால் அது எங்களை கடுந்துயரத்திலும் அதோடு அநாதைகளாகவும் விட்டுச் சென்றது. உள்ளூர் சர்ச் ஆப் இங்லாண்டில் நடைபெற்ற சவ அடக்க நிகழ்ச்சியில், அப்பாவின் ஆத்துமா பரலோகத்தில் இருந்தது என்று பாதிரி உரிமைபாராட்டியதைக் கேட்டபோது அம்மாவுக்கு அதிர்ச்சியாயிருந்தது. மரித்தோர் பிரேதக்குழியில் உறங்கிக்கொண்டிருக்கின்றனர் என்பதை அவர்கள் பைபிளிலிருந்து அறிந்திருந்தார்கள், ஒரு நாள் அப்பா பூமியில் நித்திய ஜீவனைப் பெறுவதற்காக உயிர்த்தெழுப்பப்படுவார் என்று உறுதியாக நம்பியிருந்தார்கள். (சங்கீதம் 37:9-11, 29; 146:3, 4; பிரசங்கி 9:5; அப்போஸ்தலர் 24:15; வெளிப்படுத்துதல் 21:3, 4) கடவுளுடைய வார்த்தையை கற்பித்த மக்களோடு கூட்டுறவுகொள்ள வேண்டும் என்பதை உறுதியாய் நம்பிய பிறகு, சர்வதேச பைபிள் மாணாக்கர் என்று அப்போது அறியப்பட்டிருந்த யெகோவாவின் சாட்சிகளோடு அவர்கள் தங்கள் நட்பை வளர்த்துக்கொள்வதில் உறுதியாயிருந்தார்கள்.
நாங்கள் ஒவ்வொரு வாரமும் எங்கள் வீட்டிலிருந்து யெகோவாவின் சாட்சிகளுடைய கூட்டங்களுக்கு இரண்டு மணிநேரங்கள் நடந்தே செல்வோம். ஏனென்றால் எங்களிடம் போக்குவரத்துக்கு பணம் இருக்கவில்லை. அதற்குப் பிறகு, அடுத்த இரண்டு மணிநேரங்கள் கஷ்டப்பட்டு நடந்தே வீட்டுக்குத் திரும்புவோம். ஆனால் நாங்கள் அந்தக் கூட்டங்களை மிகவும் அதிகமாய் மதித்தோம், எல்லாரும் அறிந்திருந்த லண்டன் மூடுபனி நகரத்தை முழுவதுமாய் மறைத்திருந்த சமயங்களிலும்கூட நாங்கள் ஒரு கூட்டத்தையும்கூட தவறவிடவில்லை. என் அம்மா விரைவில் தன் வாழ்க்கையை யெகோவாவுக்கு ஒப்புக்கொடுத்து முழுக்காட்டுதல் பெற தீர்மானித்தார்கள், 1927-ல் நானும் முழுக்காட்டப்பட்டேன்.
எங்களுக்கு பொருளாதார பிரச்சினைகள் இருந்தபோதிலும், என் அம்மா ஆவிக்குரிய விஷயங்களை முதலிடத்தில் வைக்க வேண்டியதன் முக்கியத்துவத்தை எனக்கு எப்போதும் கற்பித்து வந்தார்கள். அவர்களுக்கு மிகவும் பிடித்தமான வசனங்களில் ஒன்று மத்தேயு 6:33, அவர்கள் உண்மையிலேயே ‘ராஜ்யத்தை முதலாவது தேடினார்கள்.’ அவர்கள் 1935-ல் புற்றுநோயால் உரியகாலத்துக்கு முன்பே இறந்து போன சமயத்தில், பிரான்சுக்கு சென்று அவர்கள் முழுநேர ஊழியர்களுக்காக கொடுத்த அழைப்புக்கு இணங்கி சேவை செய்ய திட்டமிட்டுக் கொண்டிருந்தார்கள்.
எங்களைப் பலப்படுத்திய உதாரணங்கள்
அந்த ஆரம்ப வருடங்களில், லண்டனில் கூட்டங்களுக்கு ஆஜராகியிருந்த சிலர் தங்கள் சொந்தக் கருத்துக்களை அறிவிக்க விரும்பினர், இப்படிப்பட்ட மக்கள் சண்டைகளையும் கடுமையான கோப வெளிக்காட்டல்களையும் தூண்டிவிட்டார்கள். இருப்பினும், நாம் யெகோவாவின் அமைப்பிலிருந்து கற்றுக்கொண்ட எல்லா விஷயங்களையும் விட்டுவிட்டு அதை புறக்கணித்து விடுவது உண்மையற்ற தன்மையாய் இருக்கும் என்று அம்மா எப்போதும் என்னிடமாக சொல்வார்கள். அப்போது உவாட்ச்டவர் பைபிள் அண்ட் டிராக்ட் சொஸைட்டியின் பிரசிடென்ட்டாக இருந்த ஜோசப் எஃப். ரதர்போர்ட் எங்களை சந்தித்தது, எங்களை உண்மைத்தன்மையோடு தொடர்ந்து சேவிக்கும்படி தூண்டுதல் அளித்தது.
சகோதரர் ரதர்போர்ட் தயவான, அணுகக்கூடிய நபராக இருந்தது எனக்கு நினைவிருக்கிறது. நான் இன்னும் ஒரு பருவ வயது பெண்ணாக இருந்த சமயத்தில், லண்டன் சபை இன்பப்பயணம் சென்றபோது அதற்கு அவர் வந்தார். நான் ஒரு காமிராவுடன் இருப்பதை பார்த்தார், நான் அப்போது கூச்ச சுபாவமுள்ள பெண்ணாக இருந்தேன், அவரை போட்டோ எடுக்கும்படி என்னைக் கேட்டுக்கொண்டார். அந்தப் போட்டோ நான் ஆசையாய் வைத்திருந்த நினைவு பொருளாக ஆனது.
பின்னர், கிறிஸ்தவ சபையில் தலைமைதாங்கி வழிநடத்துவோருக்கும் உலகிலுள்ள பிரபலமான மனிதர்களுக்குமிடையே உள்ள வேறுபாட்டை ஒரு அனுபவம் எனக்கு மனதில் பதிய வைத்தது. நான் லண்டனில் ஒரு பெரிய வீட்டில் பணிப்பெண்ணாக வேலை செய்து வந்தேன், ஹிட்லரின் இரகசிய ஏஜென்ட்டாக இருந்த ஃபிரான்ஸ் வான் பேப்பன் பகல் உணவுக்காக அழைக்கப்பட்டிருந்தார். அவர் சாப்பிடுவதற்காக அமர்கையில் தன் சீருடையிலிருந்த வாளை எடுக்க மறுத்துவிட்டார், நான் அதன் மீது கால் தடுமாறி, எடுத்துச்சென்ற சூப்பை கீழே சிந்திவிட்டேன். ஜெர்மனியில் அப்படி கவனக்குறைவாய் நடந்துகொண்டால் என்னைச் சுட்டுவிடுவார்கள் என்று அவர் கோபமாக சொன்னார். அதற்குப் பிறகு சாப்பாடு முடியும்வரை, அவரிடமிருந்து தூர விலகியே இருந்தேன்.
அலெக்ஸாண்ட்ரா பேலஸில் 1931-ல் நடந்த ஒரு முக்கியமான மாநாட்டில் நான் சகோதரர் ரதர்போர்ட் பேசுவதை கேட்டேன். நாங்கள் அங்கே யெகோவாவின் சாட்சிகள் என்ற புதிய பெயரை மிகவும் ஆர்வத்தோடு ஏற்றோம். (ஏசாயா 43:10, 12) இரண்டு வருடங்களுக்குப் பிறகு, 1933-ல், நான் பயனியர் சேவை என்று அழைக்கப்பட்ட முழு-நேர ஊழியத்தை செய்ய ஆரம்பித்தேன். அந்த வருடங்களில் கிடைத்த மற்றொரு ஆசீர்வாதம் என் நினைவுக்கு வருகிறது, பூமியின் நெடுந்தொலைவில் உள்ள இடங்களில் பின்னர் மிஷனரிகளாக ஆன சிறந்த இளம் ஆண்களோடு என்னால் கூட்டுறவுகொள்ள முடிந்தது. க்ளாட் குட்மேன், ஹாரல்ட் கிங், ஜான் குக், எட்வின் ஸ்கின்னர் ஆகியோர் இதில் அடங்குவர். இப்படிப்பட்ட உண்மைத்தன்மையுள்ள முன்மாதிரிகள், அயல்நாட்டில் சேவை செய்ய வேண்டும் என்ற விருப்பத்தை எனக்குள் ஏற்படுத்தின.
கிழக்கு ஆங்கிலியாவில் பயனியர் சேவை
என் பயனியர் நியமிப்பு கிழக்கு ஆங்கிலியாவில் (கிழக்கு இங்கிலாந்து) இருந்தது, அங்கு பிரசங்கம் செய்வதற்கு உற்சாகமும் வைராக்கியமும் தேவைப்பட்டது. எங்களுடைய பெரிய பிராந்தியத்தை செய்துமுடிப்பதற்கு, ஒரு பட்டணத்திலிருந்து மற்றொரு பட்டணத்துக்கும் ஒரு கிராமத்திலிருந்து மற்றொரு கிராமத்துக்கும் சைக்கிளில் பிரயாணம் செய்து வாடகைக்கு எடுத்த அறைகளில் தங்கினோம். அந்தப் பிராந்தியத்தில் சபைகளே இல்லை, ஆகையால் நானும் என் கூட்டாளியும் ஒன்றாக சேர்ந்து ஒழுங்காக நடைபெற்ற வாராந்தர கூட்டங்களின் எல்லா பகுதிகளையும் நாங்களே கலந்து உரையாடினோம். கடவுளுடைய நோக்கங்களை விளக்கிய நூற்றுக்கணக்கான புத்தகங்களையும் சிறு புத்தகங்களையும் எங்களுடைய ஊழியத்தில் நாங்கள் அளித்தோம்.
ஒரு சமயம் சர்ச் ஆப் இங்லாண்டின் பாதிரியாரின் வீட்டுக்குச் சென்று உள்ளூர் பாதிரியிடம் பேசியது எளிதில் மறக்கமுடியாத அனுபவமாய் இருந்தது. பெரும்பாலான இடங்களில், ஆங்கிலிக்கன் பாதிரியிடம் செல்வதை நாங்கள் கடைசிவரை தள்ளிப்போட்டோம், ஏனென்றால், நாங்கள் அந்தப் பிராந்தியத்தில் நற்செய்தியை பிரசங்கித்துக் கொண்டிருப்பதை கேள்விப்படும்போது அவர் எங்களுக்கு அடிக்கடி கஷ்டத்தைக் கொடுத்தார். ஆனால் இந்த கிராமத்தில் எல்லாரும் பாதிரியை பற்றி நன்றாக பேசினார்கள். அவர் நோயாளிகளை சென்று சந்தித்தார், வாசிக்க விருப்பமிருந்தவர்களுக்கு அவர் புத்தகங்களை இரவலாக கொடுத்தார், அவருடைய சர்ச் அங்கத்தினர்களுடைய வீடுகளுக்கும்கூட சென்று பைபிளை விளக்கினார்.
எதிர்பார்த்தவிதமாகவே, நாங்கள் அவரைச் சந்தித்தபோது, அவர் மிகவும் சிநேகபான்மை உள்ளவராய் இருந்தார், அநேக புத்தகங்களை எடுத்துக்கொண்டார். அந்த கிராமத்திலிருந்த எவராவது நம்முடைய புத்தகங்களை எடுத்துக்கொள்ள விரும்பி, ஆனால் பணம் கொடுத்து வாங்க முடியவில்லையென்றால், அதற்கான பணத்தை அவர் கொடுப்பதாகவும்கூட எங்களிடம் உறுதியாக சொன்னார். முதல் உலகப்போரில் அவருக்கு ஏற்பட்ட பயங்கரமான அனுபவங்கள் காரணமாக அவருடைய சர்ச்சில் சமாதானத்தையும் அன்பான ஆதரவையும் முன்னேற்றுவிக்க அவர் தீர்மானமாயிருந்தார் என்பதை நாங்கள் அறிந்துகொண்டோம். நாங்கள் புறப்படுவதற்கு முன், அவருடைய ஆசீர்வாதத்தை எங்களுக்குத் தந்தார், எங்களுடைய நல்ல வேலையை தொடர்ந்து செய்யும்படி எங்களை உற்சாகப்படுத்தினார். அவர் பிரிந்துசென்ற போது எங்களிடம் கூறிய வார்த்தைகள் எண்ணாகமம் 6:24-ல் உள்ளவை: “கர்த்தர் உன்னை ஆசீர்வதித்து, உன்னைக் காக்கக்கடவர்.”
நான் பயனியர் செய்ய ஆரம்பித்து இரண்டு வருடங்கள் கழித்து என் அம்மா இறந்துபோனார்கள், பணமும் இல்லாமல் குடும்பமும் இல்லாமல் லண்டனுக்கு திரும்பினேன். ஒரு அன்பான ஸ்காட்டிஷ் சாட்சி என்னை அவர்களுடைய வீட்டில் ஏற்றுக்கொண்டு என் அம்மாவின் மரணத்தை சமாளிக்க எனக்கு உதவினார்கள், முழு-நேர ஊழியத்தில் தொடர்ந்திருக்க என்னை உற்சாகப்படுத்தினார்கள். ஆகையால் நான் ஜூலியா பேர்பேக்ஸ் என்ற புதிய பயனியர் கூட்டாளியோடு கிழக்கு ஆங்கிலியாவுக்கு திரும்பி வந்தேன். நாங்கள் ஒரு பழைய மூடுவண்டியை ஒரு நடமாடும் வீடாக உபயோகிப்பதற்காக மாற்றியமைத்தோம்; அதை ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டுசெல்ல ஒரு டிராக்டர் அல்லது டிரக்கை நாங்கள் பயன்படுத்தினோம். ஆல்பெர்ட் மற்றும் எதெல் ஏபட் என்ற வயதான தம்பதியரோடு சேர்ந்து நாங்கள் தொடர்ந்து பிரசங்க வேலையை செய்தோம், அவர்களும் ஒரு சிறிய நடமாடும் வீடு ஒன்றை வைத்திருந்தனர். ஆல்பெர்ட்டும் இதெலும் எனக்கு பெற்றோரைப் போல் ஆயினர்.
கேம்பிரிட்ஜ்ஷெரில் பயனியராக இருந்தபோது, நான் ஜான் மாத்யூஸ் என்ற ஒரு சிறந்த கிறிஸ்தவ சகோதரரை சந்தித்தேன், அவர் கடினமான சூழ்நிலைகளில் யெகோவாவுக்கு தன் உத்தமத்தன்மையை ஏற்கெனவே நிரூபித்திருந்தார். இரண்டாம் உலகப்போர் ஆரம்பித்து சிறிது காலத்துக்குப் பின் நாங்கள் 1940-ல் திருமணம் செய்துகொண்டோம்.
போர்க்காலமும் ஒரு குடும்பமும்
நாங்கள் புதிதாக திருமணமான தம்பதியராக இருந்தபோது, எங்களுடைய வீடு ஒரு சிறிய அறையை உடைய சின்னஞ்சிறு நடமாடும் வீடாக இருந்தது, நாங்கள் எங்கள் நம்பத்தக்க மோட்டர் பைக் ஒன்றில் பல இடங்களுக்கும் சென்று ஊழியம் செய்தோம். எங்களுக்கு திருமணமாகி ஒரு ஆண்டுக்குப் பின்னர் ஜான் பைபிள் அடிப்படையிலான நம்பிக்கைகளின் காரணமாக இராணுவ சேவை செய்ய மறுத்ததால் பண்ணைத் தொழிலாளியாக வேலை செய்வதற்கு அனுப்பப்பட்டார். (ஏசாயா 2:4) இது நாங்கள் பயனியர் சேவை செய்வதை முடிவுக்கு கொண்டுவந்தபோதிலும், நான் ஒரு குழந்தையை எதிர்பார்த்துக் கொண்டிருந்ததால் எங்களை ஆதரிக்கும் வகையில் ஜானின் வேலை நல்வாய்ப்பாக அமைந்தது.
போர் நடந்த ஆண்டுகளின்போது, இன்னல்கள் மத்தியிலும் நடந்த விசேஷித்த கூட்டங்களை நாங்கள் அனுபவித்து மகிழ்ந்தோம். 1941-ல் எங்களுடைய முதல் குழந்தையை கருத்தரித்திருந்தபோது ஜானும் நானும் மோட்டர்பைக்கில் 300 கிலோமீட்டர் தூரத்திலிருந்த மான்ச்செஸ்டருக்கு சென்றோம். வழியில் நாங்கள் வெடிகுண்டால் தாக்கப்பட்டிருந்த பட்டணங்களை கடந்து சென்றோம், அப்படிப்பட்ட சூழ்நிலைகளின்கீழ் கூட்டங்களை நடத்தமுடியுமா என்று நாங்கள் யோசித்தோம். எனினும் கூட்டங்கள் நடந்தன. மான்ச்செஸ்டர் நடுவே இருந்த ப்ஃரீ டிரேட் ஹால், இங்கிலாந்தின் பல பகுதிகளிலிருந்து வந்த சாட்சிகளால் நிரம்பியிருந்தது, முழு நிகழ்ச்சிநிரலும் நடைபெற்றது.
திடீர் விமானத்தாக்குதலை எதிர்பார்ப்பதால் அந்த இடத்தைவிட்டு உடனடியாக காலி செய்ய வேண்டும் என்று மாநாட்டின் கடைசி பேச்சாளர் அவருடைய பேச்சின் முடிவில் சபையாருக்கு தெரிவித்தார். அந்த எச்சரிக்கை சரியான நேரத்தில் கிடைத்தது. நாங்கள் அபாயச் சங்குகளையும் எதிரி விமானத்தைச் சுட்டு வீழ்த்துவதற்குரிய பீரங்கிகளின் சப்தத்தையும் கேட்டபோது மன்றத்திலிருந்து வெகுதூரத்தில் இல்லை. திரும்பிப் பார்த்தபோது, சிட்டி சென்ட்டரின் மீது டஜன் கணக்கில் விமானங்கள் குண்டுகளை வீசியதை பார்த்தோம். தூரத்தில், தீ, புகை ஆகியவற்றின் மத்தியில் நாங்கள் கடைசியாக உட்கார்ந்து கொண்டிருந்த ஹாலை பார்த்தோம்; அது முழுவதுமாக அழிக்கப்பட்டது! நன்றி செலுத்தும்வகையில், நம்முடைய கிறிஸ்தவ சகோதரர்கள் அல்லது சகோதரிகளில் ஒருவர்கூட கொல்லப்படவில்லை.
நாங்கள் எங்கள் பிள்ளைகளை வளர்த்து வந்தபோது, எங்களால் பயனியர் சேவை செய்யமுடியவில்லை, ஆனால் பயணக் கண்காணிகளுக்கும் தங்குவதற்கு இடமில்லாதிருந்த பயனியர்களுக்கும் எங்கள் வீட்டில் தங்குவதற்கு இடமளித்தோம். ஒரு சமயம், எங்கள் வீட்டில் ஆறு பயனியர்கள் சில மாதங்கள் தங்கியிருந்தனர். எங்கள் மகள் யூனிஸ் வெறும் 15 வயதாயிருந்தபோதே பயனியர் சேவை செய்ய ஆரம்பித்ததற்கான ஒரு காரணம் அப்படிப்பட்டவர்களோடு கூட்டுறவுகொண்டதுதானே என்பதில் சந்தேகமில்லை. வருந்தத்தக்க விதத்தில், எங்கள் மகன் டேவிட் வளர்ந்து பெரியவனாய் ஆனபோது யெகோவாவை சேவிப்பதில் தொடர்ந்து நிலைத்திருக்கவில்லை, எங்களுடைய அடுத்த மகள் லின்டா போர் நடந்த சமயத்தின்போது பரிதாபமான சூழலில் மரித்துப் போனாள்.
ஸ்பெயினுக்குச் செல்ல எங்கள் தீர்மானம்
என் அம்மாவின் முன்மாதிரியும் உற்சாகமும் ஒரு மிஷனரியாக இருக்க வேண்டும் என்ற விருப்பத்தை என்னில் தூண்டியிருந்தது, நான் அந்த இலக்கை முழுவதுமாக மறந்துவிடவில்லை. ஆகையால் 1973-ல் ராஜ்ய பிரஸ்தாபிகளுக்கு தேவை அதிகமாயிருந்த ஸ்பெயினுக்குச் செல்ல யூனிஸ் இங்கிலாந்தை விட்டுப் புறப்பட்டபோது நாங்கள் மகிழ்ச்சியடைந்தோம். அவள் புறப்பட்டுச் செல்வதைக் காண நாங்கள் வருத்தப்பட்டோம், ஆனால் அவள் அயல்நாட்டில் சேவை செய்ய விரும்பியதற்காக நாங்கள் பெருமைப்பட்டோம்.
வருடங்கள் கடந்துசெல்கையில் நாங்கள் யூனிஸை பல முறை சென்று சந்தித்தோம், ஸ்பெயினையும் நன்றாக அறிந்துகொண்டோம். உண்மையில், ஜானும் நானும் யூனிஸ் நான்கு வித்தியாசமான வேலை நியமிப்புகளில் இருந்தபோது சென்று பார்த்தோம். பின்னர் வருடங்கள் கடந்து செல்ல செல்ல, எங்கள் பலம் குறைய ஆரம்பித்தது. ஜான் கீழே விழுந்ததன் காரணமாக அவருடைய உடல்நிலை மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டிருந்தது, எனக்கு இருதய மற்றும் தைராய்டு பிரச்சினைகள் இருந்தன. அதுமட்டுமின்றி, நாங்கள் இருவரும் மூட்டுவலியால் கஷ்டப்பட்டோம். எங்களுக்கு யூனிஸின் உதவி உண்மையில் தேவைப்பட்டபோதிலும், எங்கள் நிமித்தமாக அவள் தன்னுடைய வேலையை விட்டுவிட்டு வருவதை நாங்கள் விரும்பவில்லை.
நாங்கள் யூனிஸுடன் எங்கள் விருப்பத்தை கலந்து பேசினோம், வழிநடத்துதலுக்காக ஜெபித்தோம். எங்களுடைய வீட்டுக்கு வந்து உதவிசெய்ய அவள் விருப்பப்பட்டாள். ஆனால் ஜானும் நானும் அவளோடு ஸ்பெயினில் வசிப்பதே சிறந்த தீர்வு என தீர்மானித்தோம். நான் ஒரு மிஷனரியாக இல்லாவிட்டாலும், என் மகளும் அவளுடைய இரண்டு பயனியர் கூட்டாளிகளும் முழுநேர ஊழியம் செய்வதற்கு நான் ஆதரவாவது கொடுக்கலாம். அதற்குள் யூனிஸுக்கு 15 வருடங்களாக பயனியர் கூட்டாளிகளாக இருந்த நூரியாவையும் ஆனாவையும் எங்கள் சொந்த மகள்களாக ஜானும் நானும் கருத ஆரம்பித்தோம். அவர்கள் எங்கு நியமிக்கப்படுகிறார்களோ அங்கு வந்து அவர்களோடு நாங்கள் வசிக்க அவர்கள் சந்தோஷப்பட்டார்கள்.
நாங்கள் அந்தத் தீர்மானத்தை செய்து ஆறு வருடங்களுக்கு மேல் ஆகிறது. எங்கள் ஆரோக்கியம் இன்னும் மோசமடையவில்லை, எங்களுடைய வாழ்க்கை நிச்சயமாகவே அதிக ஆர்வமுள்ளதாய் ஆகியிருக்கிறது. எனக்கு இன்னும் ஸ்பானிஷ் அதிகம் பேசத் தெரியாது, ஆனால் பிரசங்கம் செய்வதிலிருந்து அது என்னை தடுத்து நிறுத்துவதில்லை. தென்மேற்கு ஸ்பெயின், எக்ஸ்ட்ரிமடுராவில் உள்ள எங்கள் சிறிய சபையில் ஜானும் நானும் சந்தோஷமாய் இருக்கிறோம்.
ஸ்பெயினில் வாழ்வது, எங்கள் ராஜ்ய பிரசங்கிப்பு வேலையின் சர்வதேச தன்மையைக் குறித்து எனக்கு அதிகத்தைக் கற்றுத் தந்துள்ளது, “நிலம் உலகம்” என்று இயேசு கிறிஸ்து சொன்னதை நான் இப்போது இன்னும் அதிக தெளிவாய் புரிந்துகொண்டிருக்கிறேன்.—மத்தேயு 13:38.
[பக்கம் 28-ன் படங்கள்]
1930-களில் செய்த பயனியர் ஊழியம்