அவர்கள் யெகோவாவின் சித்தத்தைச் செய்தார்கள்
யோபுவின் உத்தமத்தன்மை பலனளிக்கப்பட்டது
யோபு இரக்கமுள்ள மனிதராக இருந்தார், விதவைகள், அநாதைகள், துன்புறுவோர் ஆகியோர் மீது பரிவு காட்டி அவர்களை ஆதரித்தார். (யோபு 29:12-17; 31:16-21) பின்னர், திடீரென்று, தன் செல்வம், தன் பிள்ளைகள், தன் உடல் ஆரோக்கியம் ஆகியவற்றை இழந்து மிகவும் இக்கட்டான நிலைக்குள் வந்தார். வருத்தம்தரும் விதத்தில், ஒடுக்கப்பட்டோருக்கு தூணைப் போன்று ஆதரவாயிருந்த இந்த நற்குணமுள்ள மனிதருக்குதானே தேவை ஏற்பட்டபோது உதவி கிடைக்கவே இல்லை. அவருடைய சொந்த மனைவியும்கூட, “தேவனைத் தூஷித்து ஜீவனை விடும்!” என்று அவரிடம் கூறினாள். அவருக்கு ‘சிநேகிதராயிருந்த’ எலிப்பாசு, பில்தாத், சோப்பார் எவ்வித ஆறுதலையும் அளிக்கவில்லை. அதற்கு மாறாக, யோபு பாவம் செய்திருந்தார் என்றும் அந்த வேதனைக்கு தகுதியுள்ளவர் என்றும் அவர்கள் படிப்படியாக தந்திரமாய் கூறினார்கள்.—யோபு 2:9; 4:7, 8; 8:5, 6; 11:13-15.
துன்பங்கள் மிகுதியாய் இருந்தபோதிலும், யோபு உண்மையுள்ளவராக தொடர்ந்து நிலைத்திருந்தார். இதன் காரணமாக யெகோவா இறுதியில் யோபுவின் மீது இரக்கம் காண்பித்து அவரை ஆசீர்வதித்தார். அவர் எவ்விதமாக அதைச் செய்தார் என்பதைப் பற்றிய பதிவு, உத்தமத்தன்மையை காத்துக்கொள்ளும் எல்லா கடவுளுடைய ஊழியர்களும்கூட காலப்போக்கில் பலனடைவர் என்ற உறுதியை அளிக்கிறது.
பழிதுடைத்தலும் பழைய நிலைக்குக் கொண்டுவருதலும்
யெகோவா முதலாவது எலிப்பாசு, பில்தாத், சோப்பார் ஆகியோரை கண்டித்தார். தெளிவாய் தெரிகிறபடி, அவர்களில் மூத்தவராயிருந்த எலிப்பாஸை பார்த்து அவர் சொன்னார்: “உன்மேலும் உன் இரண்டு சிநேகிதர் மேலும் எனக்குக் கோபம் மூளுகிறது; என் தாசனாகிய யோபு பேசினது போல், நீங்கள் என்னைக் குறித்து நிதானமாய்ப் பேசவில்லை, ஆதலால் நீங்கள் ஏழு காளைகளையும், ஏழு ஆட்டுக்கடாக்களையும் தெரிந்துகொண்டு, என் தாசனாகிய யோபினிடத்தில் போய், உங்களுக்காகச் சர்வாங்க தகனபலிகளை இடுங்கள்; என் தாசனாகிய யோபும் உங்களுக்காக வேண்டுதல் செய்வான்.” (யோபு 42:7, 8) இது குறிப்பாக எதை உணர்த்தியது என்பதை சற்று சிந்தித்துப் பாருங்கள்!
எலிப்பாசு, பில்தாத், சோப்பார் ஆகியோரிடமிருந்து யெகோவா அதிகமான அளவு பலிகளைத் தேவைப்படுத்தினார், அவர்களுடைய பாவத்தின் கடுமையை அவர்களுடைய மனதில் பதிய வைப்பதற்கு ஒருவேளை அவர் அவ்வாறு செய்திருக்கலாம். கடவுள் ‘தம்முடைய பணிவிடைக்காரரிடத்தில் நம்பிக்கை வைப்பதில்லை’ என்றும் யோபு உண்மையுள்ளவராக இருந்தாலும் இல்லாவிட்டாலும் அது அவருக்கு முக்கியமல்ல என்றும் சொல்வதன் மூலம் உண்மையில் அவர்கள் வேண்டுமென்றே திட்டமிட்டோ அல்லது கவனக்குறைவாலோ கடவுளை நிந்தித்திருந்தனர். கடவுளுடைய பார்வையில் யோபு பொட்டுப்பூச்சியளவே மதிப்புள்ளவர் என்றும்கூட எலிப்பாசு சொன்னான்! (யோபு 4:18, 19; 22:2, 3) “நீங்கள் என்னைக் குறித்து உண்மையாய் பேசவில்லை” என்று யெகோவா சொன்னது குறித்து ஆச்சரியப்படுவதற்கில்லை.
ஆனால் அதோடு நிறுத்திக்கொள்ளவில்லை. அவரே தன் மீது பிரச்சினைகளைக் கொண்டு வந்தார் என்று அவரிடம் சொல்வதன் மூலம் எலிப்பாசு, பில்தாது, சோப்பார் ஆகியோர் யோபுவுக்கு விரோதமாய் தனிப்பட்ட விதமாகவும்கூட பாவம் செய்தனர். அவர்களுடைய ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளும் ஒத்துணர்வு முழுவதுமாக குறைவுபட்டதும் யோபுவுக்கு மனச்சோர்வையும் மனக்கசப்பையும் ஏற்படுத்தி அவர் இவ்வாறு கூக்குரலிடும்படி செய்தது: “நீங்கள் எந்தமட்டும் என் ஆத்துமாவை வருத்தப்படுத்தி, வார்த்தைகளினால் என்னை நொறுக்குவீர்கள்?” (யோபு 10:1; 19:2) இப்போது அவர்கள் யோபுவுக்கு தங்கள் பாவங்களுக்காக பலி செலுத்த வேண்டிய நிலையில் இருக்கையில் இந்த மூன்று மனிதர்களின் வெட்கக்கேடான முகத் தோற்றத்தை கற்பனை செய்து பாருங்கள்!
ஆனால் யோபு அவர்கள் தாழ்த்தப்பட்டதைக் குறித்து பெருமைப்படக்கூடாது. உண்மையில், அவர்மீது குற்றஞ்சாட்டியவர்கள் சார்பாக அவர் ஜெபிக்கும்படி யெகோவா தேவைப்படுத்தினார். சொல்லப்பட்டபடியே யோபு செய்தார், அதற்காக அவர் ஆசீர்வதிக்கப்பட்டார். முதலாவது, யெகோவா அவருடைய பயங்கர நோயை சுகப்படுத்தினார். பின்னர், யோபுவின் சகோதரர்கள், சகோதரிகள், முன்னாள் தோழர்கள் அவரை ஆறுதல்படுத்த வந்தனர், “அவரவர் ஒவ்வொரு தங்கக்காசையும், அவரவர் ஒவ்வொரு பொன் ஆபரணத்தையும் அவருக்குக் கொடுத்தார்கள்.” a மேலும், “பதினாலாயிரம் ஆடுகளும், ஆறாயிரம் ஒட்டகங்களும், ஆயிரம் ஏர்களும், ஆயிரம் கழுதைகளும் [பெண்கழுதைகள், NW] அவனுக்கு உண்டாயின.” b யோபுவின் மனைவி அவரோடு சமரசமாகியிருக்க வேண்டும் என்பது தெளிவாயிருக்கிறது. காலப்போக்கில், யோபு ஆசீர்வதிக்கப்பட்டார், அவருக்கு ஏழு மகன்களும் மூன்று மகள்களும் பிறந்தனர், அவர் தன் நான்கு தலைமுறைப் பிள்ளைகளைப் பார்க்கும்வரையில் உயிரோடிருந்தார்.—யோபு 42:10-17.
நாம் கற்றுக்கொள்ளும் பாடங்கள்
நவீன-நாளைய கடவுளுடைய ஊழியர்களுக்கு யோபு ஒரு மிகச்சிறந்த முன்மாதிரியை வைத்தார். அவர் “உத்தமனும் சன்மார்க்கனுமாய்” இருந்தார், ‘என் தாசன்’ என்று யெகோவா பெருமையாய் அழைத்த மனிதராக இருந்தார். (யோபு 1:8; 42:7, 8) இருப்பினும், யோபு பரிபூரணராய் இருந்தார் என்பதை இது அர்த்தப்படுத்துகிறதில்லை. அவருக்கு ஏற்பட்ட சோதனைகளின்போது ஒரு சமயத்தில், அவருடைய பெருந்துன்பத்துக்கு காரணர் கடவுளே என்று அவர் தவறாக நினைத்தார். கடவுள் மனிதனைக் கையாண்டவிதத்தைக் குறித்தும்கூட அவர் குறைகூறினார். (யோபு 27:2; 30:20, 21) மேலும் அவர் கடவுளுடைய நீதிக்குப் பதிலாக தன் சுய நீதியை அறிவித்தார். (யோபு 32:2) ஆனால் யோபு சிருஷ்டிகரை புறக்கணிக்க மறுத்துவிட்டார், கடவுளிடமிருந்து வந்த திருத்தத்தை மனத்தாழ்மையோடு ஏற்றார். ‘நான் எனக்குத் தெரியாததையும், என் புத்திக்கு எட்டாததையும், நான் அறியாததையும் அலப்பினேன்’ என்று அவர் ஒப்புக்கொண்டார். “நான் என்னை அருவருத்து, தூளிலும் சாம்பலிலும் இருந்து மனஸ்தாபப்படுகிறேன்.”—யோபு 42:3, 6.
நாமும்கூட சோதனையை அனுபவிக்கையில் பொருத்தமற்ற விதத்தில் சிந்திக்கலாம், பேசலாம், அல்லது செயல்படலாம். (ஒப்பிடுக பிரசங்கி 7:7.) இருந்தபோதிலும், கடவுள் பேரில் நமக்குள்ள அன்பு ஆழமாய் இருந்தால், நாம் அவருக்கு விரோதமாய் கலகம் செய்யமாட்டோம் அல்லது அவர் துன்பங்களை அனுபவிக்கும்படி நம்மை அனுமதிப்பதால் மனக்கசப்படைய மாட்டோம். மாறாக, நாம் நம் உத்தமத்தன்மையைக் காத்துக்கொள்வோம், இவ்வாறு இறுதியில் பெரிய ஆசீர்வாதத்தை பலனாக பெறுவோம். யெகோவாவைக் குறித்து சங்கீதக்காரன் இவ்வாறு சொன்னார்: “உத்தமனுக்கு நீர் உத்தமராகவும் தோன்றுவீர்.”—சங்கீதம் 18:25.
யோபு ஆரோக்கியமான நிலைக்கு திரும்பவும் நிலைநாட்டப்படுவதற்கு முன்பு, அவருக்கு விரோதமாக பாவம் செய்தவர்கள் சார்பாக ஜெபிக்கும்படி யெகோவா தேவைப்படுத்தினார். நமக்கு என்னே ஒரு சிறந்த முன்மாதிரி! நம்முடைய பாவங்கள் மன்னிக்கப்படுவதற்கு முன், நமக்கு விரோதமாய் பாவம் செய்கிறவர்களை நாம் மன்னிக்கும்படி யெகோவா தேவைப்படுத்துகிறார். (மத்தேயு 6:12; எபேசியர் 4:32) அவ்வாறு செய்வதற்கு நியாயமான காரணம் இருந்தபோதிலும் மன்னிப்பதற்கு நமக்கு விருப்பமில்லையென்றால், யெகோவா நம்மீது இரக்கம் காண்பிக்கும்படி நாம் சரியாகவே எதிர்பார்க்கலாமா?—மத்தேயு 18:21-35.
நாம் அனைவருமே ஏதாவது ஒரு சமயத்தில் சோதனைகளை எதிர்ப்படுகிறோம். (2 தீமோத்தேயு 3:12) இருப்பினும், யோபுவைப் போல் நாம் உத்தமத்தன்மையைக் காத்துக்கொள்ள முடியும். அவ்வாறு செய்வதன் மூலம், நாம் பெரும் வெகுமதியை பலனாக அடைவோம். யாக்கோபு எழுதினார்: “இதோ, பொறுமையாயிருக்கிறவர்களைப் பாக்கியவான்களென்கிறோமே! யோபின் பொறுமையைக் குறித்துக் கேள்விப்பட்டிருக்கிறீர்கள்; கர்த்தருடைய செயலின் முடிவையும் கண்டிருக்கிறீர்கள்; கர்த்தர் மிகுந்த உருக்கமும் இரக்கமுமுள்ளவராயிருக்கிறாரே.”—யாக்கோபு 5:11.
[அடிக்குறிப்புகள்]
a ‘ஒரு தங்கக்காசின்‘ (எபிரெய மொழியில், க்வெசிட்டா) மதிப்பை நிர்ணயிக்க முடியாது. ஆனால் யாக்கோபின் நாளில் ‘நூறு வெள்ளிக்காசை’ வைத்து கணிசமான அளவுள்ள நிலப்பரப்பை வாங்கமுடியும். (யோசுவா 24:32) ஆகையால், வருகை தந்த ஒவ்வொரு நபரிடமிருந்து வந்த ‘ஒவ்வொரு தங்கக்காசும்’ தாராளமான வெகுமதியாய் இருந்திருக்க வேண்டும்.
b கழுதையின் பால்வகை குறிப்பிடப்பட்டிருப்பது, இனப்பெருக்கத்தின் காரணமாக அவற்றுக்கு இருக்கும் மதிப்பே என்பதாக தோன்றுகிறது.