ராஜ்ய அறிவிப்பாளர் அறிக்கை
ஒவ்வொரு சந்தர்ப்பத்தையும் பயன்படுத்துதல்
யெகோவாவின் சாட்சிகள் பைபிள் கல்வி அளிப்பவர்கள் என உலகமுழுவதும் அறியப்பட்டிருக்கிறார்கள். அதுமட்டுமல்லாமல், சமுதாயத்திற்கு பயனளிக்கும் திட்டங்களையும்கூட அவர்கள் செயல்படுத்துகின்றனர். இந்தப் பொது சேவைக்கு நல்ல வரவேற்பு கிடைத்திருப்பதாக ஈக்வடாரிலிருந்து வரும் பின்வரும் அனுபவங்கள் காண்பிக்கின்றன.
◻ ஒரு பெரிய கண்ணாடி தொழிற்சாலையின் நிர்வாகம் அதில் வேலை செய்பவர்களுக்காக குடும்ப மதிப்பீடுகளின் பேரில் தொடர் பேச்சுகளை ஏற்பாடு செய்ய விரும்பியது. அதில் பங்குகொள்வதற்காக மனித வள இயக்குநர் அநேக கத்தோலிக்க பாதிரிமாரை அழைத்தார், ஆனால் அந்த அழைப்புக்கு மறுபதில் வரவில்லை. அந்தத் தலைப்பின் பேரில் பேசுவதற்கு வெகு சில பாதிரிமாரே தகுதி பெற்றிருந்ததால், எவருமே கிடைக்க மாட்டார்கள் என ஒரு பாதிரி அவரிடம் சொன்னார். இதைக் கேட்டவுடன், யெகோவாவின் சாட்சியாயிருந்த ஒரு வேலையாள், வாணிப பிராந்தியங்களில் அடிக்கடி ஊழியம் செய்யும் ஒரு சகோதரர் தொழிற்சாலையை விஜயம் செய்ய ஏற்பாடுகள் செய்தார்.
அதற்கு அடுத்த நாளே அந்தச் சாட்சி, தயாரிக்கப்பட்ட படிப்புத்திட்டத்தைப் பற்றிய குறிப்போடு மனித வளங்களின் இயக்குநரை சென்று பார்த்தார். உவாட்ச் டவர் சங்கத்தின் பல்வேறு பிரசுரங்களிலிருந்து எடுக்கப்பட்ட பல தலைப்புகள் அடங்கிய பட்டியல் ஒன்றை தயாரித்தார். அந்த இயக்குநர் கவரப்பட்டார். அவர் கலந்து பேசுவதற்கென்று மூன்று தலைப்புகளை தேர்ந்தெடுத்தார்—மனித உறவுகள், வேலை செய்யும் இடத்தில் நடத்தை, குடும்பத்தில் நடத்தை. பின்னர் எல்லா வேலையாட்களோடும் சேர்ந்து அத்தகவலை சிந்தித்துப் பார்ப்பதற்காக ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
வேலையாட்கள் ஏழு தொகுதிகளாக பிரிக்கப்பட்டனர், ஒவ்வொன்றிலும் 30 பேர் இருந்தனர். அதற்குப் பிறகு மூன்று தகுதிவாய்ந்த சகோதரர்கள் அவர்களிடம் அத்தகவலில் பேச்சுக் கொடுத்தனர். ஏற்பட்ட விளைவுகள் யாவை? பெரும் எண்ணிக்கையான வேலையாட்கள் தங்கள் வீடுகளுக்கு வரும்படி கேட்டுக்கொண்டனர், 216 பைபிள் படிப்பு உதவி புத்தகங்களை ஏற்றுக்கொண்டனர். அந்த நிர்வாகத்தினர் அவ்வளவாக கவரப்பட்டதால், சாட்சிகள் மற்றொருமுறை தொடர்பேச்சுகளை தயாரித்தளிக்க முடியுமா என்று கேட்டது.
◻ சமீபத்தில், பள்ளியில் மத கல்வியை அனுமதிக்கும் ஒரு சட்டத்தை ஈக்வடார் இயற்றியது. ஒரு மிஷனரி சகோதரி ஒரு ஆரம்ப பள்ளியின் பெண் மேலதிகாரியை சந்தித்து, புதிய சட்டம் எவ்வாறு செயல்படுகிறது என்று கேட்டார். மரியாள் வழிபாட்டின் பேரில் ஒரு நிகழ்ச்சிநிரலை ஆரம்பிப்பதற்கு முயற்சி செய்ததாகவும், ஆனால் அது நிறைவேறாமலே போனதாகவும் அந்த மேலதிகாரி விளக்கினார். அந்த வழிபாடு கத்தோலிக்க மதத்தைச் சேராத பிள்ளைகளுக்கு பிரச்சினைகளை உண்டாக்கும் என்று அந்தச் சகோதரி குறிப்பிட்டபோது மேலதிகாரி அதை ஒப்புக்கொண்டார். “மறுபட்சத்தில், பைபிளிலிருந்து ஒழுக்க நியமங்களை கற்பிப்பதற்கு எங்களிடம் ஒரு திட்டம் உள்ளது, அது ஒரு குறிப்பிட்ட மதத்தை ஏற்றுக்கொள்ளும்படி ஒரு நபரை கட்டாயப்படுத்துவதில்லை” என்று அந்த மிஷனரி சொன்னார். மேலதிகாரி கேட்டார்: “நீங்க எப்போ வரமுடியும்? நாளை மறுநாள் வரமுடியுமா?” பெரிய போதகருக்குச் செவிகொடுத்தல் என்ற புத்தகத்தை மிஷனரி அவர்களிடம் காண்பித்த பிறகு, ‘சமாதானம் பண்ணுகிறவர்கள் சந்தோஷமுள்ளவர்கள்’ என்ற அதிகாரத்தை சிந்தித்துப் பார்க்கலாம் என அவர்கள் முடிவு செய்தனர்.
அந்த மிஷனரி திரும்பி வந்தபோது, ஏழு வித்தியாசமான வகுப்புகளைச் சேர்ந்த மாணவர்களை சந்தித்து, மூன்று மணிநேரம் செலவழித்தார், மேலதிகாரியும் அவர் சொல்பவற்றிற்கு செவிகொடுத்துக் கேட்டார். ஐந்தாம் வகுப்பு மாணவர்களோடு கூடிப் பேசிய பிறகு, மாணவர்களில் ஒருவன் இவ்வாறு சொன்னான்: “மிஸ், தயவுசெய்து ஆறாம் வகுப்பு மாணவர்களை கட்டாயம் போய் பாருங்கள். அவர்கள் எப்போதும் எங்களை அடித்து நொறுக்கி சண்டை போட ஆரம்பித்து விடுகிறார்கள்!” ஒரு ஆசிரியர் இவ்வாறு குறிப்பிட்டார்: “வன்முறையைப் பத்திதான் சதா பேச்சு. இந்த விஷயத்தைக் குறித்து கலந்து பேச எங்களுக்கு அதிக நேரம் தேவை.”
அப்பள்ளிக்கு மறுபடியும் சென்று, கீழ்ப்படிதல், பொய் சொல்லுதல் போன்ற தலைப்புகளில் கலந்து பேசுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இதுவரை, விளைவுகள் திருப்திகரமாய் இருந்திருக்கின்றன. இப்போது அந்த மிஷனரி சகோதரி தெருவில் நடந்து செல்லும்போது, பிள்ளைகள் அவருக்கு ‘ஹலோ’ சொல்வதற்காகவும் பைபிள் கேள்விகளை கேட்பதற்காகவும் ஓடிவருகிறார்கள். மற்றவர்கள் அவரை பெருமையுடன் தங்கள் பெற்றோருக்கு அறிமுகப்படுத்தி வைக்கின்றனர். கூடுதலாக, பள்ளி பிள்ளைகள் இருவருடன் ஒரு வீட்டு பைபிள் படிப்பு ஆரம்பிக்கப்பட்டுள்ளது.