அபாயம் நெருங்குவது தெரிகிறதா?
ஆபத்தைக் குறித்து விழிப்புடன் இருக்கிறீர்களா, இல்லையா என்பதில்தான் வாழ்வோ சாவோ இருக்கிறது. இரண்டு எரிமலைத் தீவுகளில் நடந்த சம்பவங்கள் இதற்கு ஓர் உதாரணம்.
20-ம் நூற்றாண்டில் எக்கச்சக்கமான உயிர்களை தன் கோரப்பசிக்கு இரையாக்கிய மௌன்ட் பிலீ எனும் எரிமலை மே 8, 1902-ல் கரிபியன் தீவிலுள்ள மார்டினிக்கில் வீறுகொண்டெழுந்தது. எரிமலையின் அடிவாரத்தில் உள்ள ஊர்தான் செயின்ட் பியரி. அதில் வாழ்ந்த ஒருசிலரைத் தவிர, கிட்டத்தட்ட 30,000 குடிமக்களை அது பூண்டோடு கபளீகரம் செய்தது.
ஜூன் 1991-ல் மௌன்ட் பினட்டூபோ வெடித்தது; இந்நூற்றாண்டிலேயே இந்தளவு சீற்றத்தோடு வெடித்தெழுந்தது இதுவாகவே இருக்கலாம். அது பிலிப்பீன்ஸில் ஜனநெருக்கம் மிக்க இடத்தில் ஏற்பட்டது. சுமார் 900 ஆட்களின் உயிரை பலி வாங்கியது. ஆனால், இந்த சமயத்தில் ஆயிரக்கணக்கான ஆட்களைக் காப்பாற்ற இரண்டு அம்சங்கள் கைகொடுத்து உதவின: (1) ஆபத்தைக் குறித்து விழிப்புடன் இருந்தது, (2) கொடுக்கப்பட்ட எச்சரிக்கைக்கு மனமுவந்து செயல்பட்டது.
உடனடி நடவடிக்கையால் தலைதப்பியது
மௌன்ட் பினட்டூபோ நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக “தூங்கிக்” கொண்டிருந்தது. ஆனால் ஏப்ரல் 1991-ல் எப்போது வேண்டுமானாலும் வெகுண்டெழும் என்பதற்கான அறிகுறிகளைக் காட்டியது. எரிமலை நீராவியையும் சல்பர் டை ஆக்சைடையும் கக்க ஆரம்பித்தது. திடீர் திடீரென நில அதிர்வுகள் ஏற்படுவதை உள்ளூர்வாசிகள் உணர்ந்தனர். அம்மலையிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாய் வெளியேறிய லாவா கட்டியாக அங்கேயே நின்றது. அது பார்ப்பதற்கு மலை முகட்டில் கூடையை கவிழ்த்து வைத்ததுபோல இருந்தது. கெட்டது நடக்கப் போகிறது என்பதற்கு அது சாவுமணி அடித்தது. எரிமலை மற்றும் நிலநடுக்க ஆய்வுக்கான பிலிப்பீன் இன்ஸ்டிட்யூட்டில் உள்ள விஞ்ஞானிகள் கண்ணில் விளக்கெண்ணை ஊற்றியதுபோல அதை இரவுபகலாக கண்காணித்தனர்; பின், சுற்று வட்டாரத்திலுள்ள டவுன்களிலும் கிராமங்களிலும் வசிக்கும் 35,000 குடிமக்களை சட்டுபுட்டென்று வெளியேற்றுவது எவ்வளவு நல்லது என்பதை அதிகாரிகளுக்குப் புரியவைத்தனர்.
எதுவுமே நடக்காததற்கு முன்பு வீடு, வாசல் எல்லாவற்றையும் விட்டுவிட்டு ஓடும்படி சொல்கையில் ஜனங்கள் தயங்குவது இயல்பே. ஆனால் எரிமலை சீற்றத்தின் பின்விளைவுகளை தெளிவாக விளக்கிய ஒரு வீடியோ காட்டப்பட்டது; இது அவர்களுடைய தயக்கத்தைப் போக்கியது. தக்க நேரத்தில் எல்லா ஜனங்களும் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர். இரண்டு நாட்கள் கழித்து எரிமலை குமுறி வெடித்தது; அதிலிருந்து ஆக்ரோஷமாக வெளியேறிய சாம்பல் 8 கன கிலோமீட்டர் தூரம் வரை சிதறியது. பிறகு, நூற்றுக்கணக்கானோர் சேற்றுப் பாய்வுகளின் அல்லது லாஹார்களின் பிடியில் சிக்கி மாண்டனர். ஆனால், ஆபத்தைக் குறித்து உஷார்படுத்துகையில் அதற்கு இசைவாக செயல்பட்டதால் ஆயிரக்கணக்கானோர் தப்பித்தனர்.
மனிதன் உண்டாக்கிய பேரழிவிலிருந்து தப்பித்தல்
நம்முடைய சகாப்தத்தின் முதல் நூற்றாண்டில், எருசலேமில் வாழ்ந்த கிறிஸ்தவர்களும் தங்களுடைய வீடு வாசல்களை விட்டு ஓட வேண்டுமா என்பதைக் குறித்து தீர்மானிக்க வேண்டியிருந்தது. எருசலேமின் குடிகளும் பொ.ச. 70-ல் பஸ்காவை ஆசரிக்க அங்கு வந்திருந்த ஆயிரக்கணக்கான யூதர்களும் அழிந்தனர். ஆனால் பொ.ச. 66-ல் அந்நகரை விட்டு ஓடியவர்களின் தலையோ தப்பியது. ரோம சேனை அந்நகரை முற்றுகையிட்டது; இந்த சூழ்நிலையில் தப்பிப்பது என்ற பேச்சுக்கே இடமில்லை. மதில்சூழ்ந்த அந்நகருக்குள்ளே பஸ்கா பண்டிகைக்காக வந்த பத்து லட்சத்துக்கும் அதிகமான மக்கள் இருந்தனர். பஞ்சம், அதிகாரத்தைப் பிடிப்பதற்கான போராட்டங்கள், ரோமர்களின் ஈவிரக்கமற்ற தாக்குதல்கள் ஆகியவற்றால் பத்து லட்சத்துக்கும் அதிகமானோர் மடிந்தனர்.
ரோமர்களுக்கு எதிரான யூதர்களின் கலகத்துக்கு முடிவுகட்டிய இந்த பேரழிவு முன்னறிவிப்பின்றி எதேச்சையாக வந்துவிடவில்லை. பல ஆண்டுகளுக்கு முன்னரே எருசலேம் எதிரிகளால் சூழப்படும் என்று இயேசு கிறிஸ்து சொல்லியிருந்தார். அவர் இவ்வாறு சொன்னார்: “எருசலேம் சேனைகளால் சூழப்பட்டிருப்பதை நீங்கள் காணும்போது, அதின் அழிவு சமீபமாயிற்றென்று அறியுங்கள். அப்பொழுது யூதேயாவிலிருக்கிறவர்கள் மலைகளுக்கு ஓடிப்போகவும், எருசலேமிலிருக்கிறவர்கள் வெளியே புறப்படவும், நாட்டுப்புறங்களிலிருக்கிறவர்கள் நகரத்தில் பிரவேசியாமலிருக்கவும் கடவர்கள்.” (லூக்கா 21:20, 21) கொடுக்கப்பட்ட எச்சரிப்பு தெள்ளத்தெளிவாக இருந்தது. இயேசுவின் சீடர்கள் அதை அச்சுப்பிசகாமல் பின்பற்றினர்.
யூதேயா எங்கும் வாழ்ந்த கிறிஸ்தவர்கள் இயேசுவின் எச்சரிப்புக்கு இசைவாக செயல்பட்டனர் என செசரியாவைச் சேர்ந்த நான்காம் நூற்றாண்டைய சரித்திராசிரியர் யூசிபியஸ் குறிப்பிடுகிறார். பொ.ச. 66-ல் ரோமர்கள் தங்களுடைய முதல்கட்ட தாக்குதலை கைவிட்டுவிட்டு திரும்பிச் சென்ற போது, யூத கிறிஸ்தவர்களில் அநேகர் யூதரல்லாதவரின் நகராகிய பெல்லாவுக்குச் சென்றனர். அது ரோம மாகாணமாகிய பெரேயாவைச் சேர்ந்தது. தாங்கள் வாழ்ந்த ஆபத்தான நாட்களைக் குறித்து விழிப்பாயிருந்ததன் மூலமும், இயேசுவின் எச்சரிப்புக்கு செவிசாய்த்ததன் மூலமும் “சரித்திரத்தின் படுமோசமான தாக்குதல்” என விவரிக்கப்படும் ஒன்றிலிருந்து அவர்கள் தப்பினர்.
இன்றும்கூட, அதேவிதமான விழிப்புணர்வு தேவை. உடனடி நடவடிக்கையும்தான். ஏன் என்பதற்கான பதிலை அடுத்த கட்டுரை விளக்கும்.
[பக்கம் 3-ன் படத்திற்கான நன்றி]
Godo-Foto, West Stock