செருக்குள்ள ஓர் அரசன் பேரரசை இழக்கிறான்
“பெல்ஷாத்சார் என்னும் ராஜா தன் பிரபுக்களில் ஆயிரம்பேருக்கு ஒரு பெரிய விருந்துசெய்து, அந்த ஆயிரம் பேருக்கு முன்பாகத் திராட்சரசம் குடித்தான்.” அந்த விருந்து கோலாகலமாக நடந்துகொண்டிருந்தது; அப்பொழுது திடீரென “ராஜாவின் முகம் வேறுபட்டது; அவனுடைய நினைவுகள் அவனைக் கலங்கப்பண்ணினது; அவனுடைய இடுப்பின் கட்டுகள் தளர்ந்தது, அவனுடைய முழங்கால்கள் ஒன்றோடொன்று மோதிக்கொண்டது.” அதே இரவிலேயே, “கல்தேயரின் ராஜாவாகிய பெல்ஷாத்சார் கொலை செய்யப்பட்டான். மேதியனாகிய தரியு . . . ராஜ்யத்தைக் கட்டிக்கொண்டான்” என்று தீர்க்கதரிசியாகிய தானியேல் எழுதினார்.—தானியேல் 5:1, 6, 30, 31.
பெல்ஷாத்சார் யார்? எவ்வாறு “கல்தேயரின் ராஜா” என்று அழைக்கப்படலானான்? சரியாக சொல்லப்போனால், பாபிலோனிய பேரரசில் அவன் வகித்த ஸ்தானம் என்ன? அவன் தன்னுடைய பேரரசை இழந்தது எப்படி?
துணை அரசனா அல்லது அரசனா?
நேபுகாத்நேச்சாரை பெல்ஷாத்சாரின் அப்பா என தானியேல் குறிப்பிடுகிறார். (தானியேல் 5:2, 11, 18, 22) ஆனால் உண்மையில் பார்க்கப்போனால், அவர் அப்பா அல்ல. பெல்ஷாத்சாருடைய தாயின் பெயர் நைட்டோகிரிஸ்; நேபுகாத்நேச்சார் ஒருவேளை அவருக்கு தாய்வழியில் தாத்தாவாக இருக்கலாம் என ரேமண்ட் பி. டௌர்ட்டி எழுதிய நபோனிடஸ் அண்ட் பெல்ஷாத்சார் என்ற புத்தகம் கருத்துத் தெரிவிக்கிறது. பெல்ஷாத்சாருக்கு முன்பு நேபுகாத்நேச்சார் ஆட்சிபுரிந்ததால், அந்தக் கருத்திலும் ஒருவேளை பெல்ஷாத்சாரின் “அப்பாவாக” இருந்திருக்கலாம். (ஆதியாகமம் 28:10, 13-ஐ ஒப்பிடுக.) எப்படியிருந்தபோதிலும், 19-ம் நூற்றாண்டில் ஈராக்கின் தென்பகுதியில் கண்டெடுக்கப்பட்ட பல்வேறு களிமண் உருளைகளில் பொறிக்கப்பட்ட ஆப்புவடிவ எழுத்துக்கள், பாபிலோன் ராஜாவாகிய நபோனிடஸின் மூத்த மகன் பெல்ஷாத்சார் என அடையாளம் காட்டுகின்றன.
பொ.ச.மு. 539-ல் பாபிலோன் வீழ்ச்சியடைந்த இரவில் நடந்த சம்பவங்களையே தானியேல் 5-ம் அதிகாரம் சொல்கிறது; பெல்ஷாத்சார் எவ்வாறு அரச அதிகாரத்தைப் பெற்றான் என்பதை விளக்குவதில்லை. ஆனால் தொல்பொருள் ஆராய்ச்சியின் தகவல்கள் நபோனிடஸுக்கும் பெல்ஷாத்சாருக்கும் இடையே உள்ள உறவைப் பற்றி கொஞ்சம் சொல்கின்றன. “நபோனிடஸ் வினோதமான ஒரு அரசன் என்பதை பாபிலோனிய எழுத்துக்கள் வெளிப்படுத்துகின்றன” என்று தொல்பொருள் ஆராய்ச்சியாளரும் பூர்வ செமிட்டிக் மொழி வல்லுநருமாகிய ஆலன் மிலர்டு கூறுகிறார். அவர் மேலும் கூறுகிறார்: “அவர் பாபிலோனிய தெய்வங்களை புறக்கணிக்காதபோதிலும், . . . ஊர், ஆரான் என்ற மற்ற இரண்டு நகரங்களிலுள்ள சந்திர தெய்வத்தின்மீது அவருக்கு அதிக பக்தி இருந்தது. நபோனிடஸ் தன்னுடைய ஆட்சி காலத்தில் பல ஆண்டுகள் பாபிலோனிலேயே வசிக்கவில்லை; அதற்குப் பதிலாக, வெகுதூரத்தில் வடக்கு அரேபியாவில் இருந்த டேய்மா [அல்லது, டேமா] என்ற பாலைவனச் சோலையில் தங்கியிருந்தார்.” அத்தாட்சிகளின்படி பார்த்தால், நபோனிடஸ் தன்னுடைய ஆட்சிகாலத்தில் பாதிநேரம்கூட தலைநகராகிய பாபிலோனில் தங்கவில்லை. அவர் இல்லாத சமயத்தில், பெல்ஷாத்சாருக்கு நிர்வாக அதிகாரம் கொடுக்கப்பட்டது.
ஆப்புவடிவ எழுத்துக்கள் அடங்கிய ஒரு ஆவணம் பெல்ஷாத்சார் வகித்த உண்மையான ஸ்தானத்தைக் குறித்து விளக்கமளிக்கிறது. “நபோனிடஸைப் பற்றிய செய்யுள் விவரப்பதிவு” என விவரிக்கப்படும் அந்த ஆவணம் இவ்வாறு குறிப்பிடுகிறது: “அவர் [நபோனிடஸ்] ‘இராணுவத்தை’ தன்னுடைய மூத்த (மகனிடம்) ஒப்படைத்துவிட்டார்; நாட்டில் எல்லா இடங்களிலும் இருந்த படைகள் அவருடைய (ஆணையின்படி) நடப்பதற்கு கட்டளையிடப்பட்டன. அவர் தன்னுடைய அதிகாரம் (அனைத்தையும்) கொடுத்துவிட்டார், [அவர்] ராஜ்யபாரத்தை அவரிடம் ஒப்படைத்துவிட்டார்.” இவ்விதமாய், பெல்ஷாத்சார் துணை அரசராக இருந்தார்.
ஆனால், துணை அரசரை ஒரு ராஜாவாக கருதமுடியுமா? 1970-களில் வடக்கு சீரியாவில் பூர்வீக ஆட்சியாளர் ஒருவருடைய சிலை கண்டெடுக்கப்பட்டது; ஒரு ஆட்சியாளரை ராஜாவாக அழைப்பது, அதாவது அவருக்கு கீழான ஸ்தானத்தில் இருந்தாலும் அவ்வாறு அழைப்பது நன்கு அறியப்பட்ட ஒன்று என்பதை அது காண்பிக்கிறது. அந்தச் சிலை கோசானை ஆண்ட ஆட்சியாளருடையது; அதிலுள்ள எழுத்துக்கள் அசீரிய மொழியிலும் அரமேயிக் மொழியிலும் பொறிக்கப்பட்டிருந்தன. அசீரிய கல்வெட்டு அந்த மனிதரை கோசானின் ஆளுநர் என்று அழைத்தது, ஆனால் அதற்கு இணையான அரமேயிக் கல்வெட்டு அவரை ராஜா என்று அழைத்தது. ஆகவே, பாபிலோனிய அரசாங்க கல்வெட்டுகள் பெல்ஷாத்சாரை இளவரசர் என்றும், அரமேயிக்கில் எழுதப்பட்ட தானியேல் புத்தகம் அவரை ராஜா என்றும் அழைப்பது புதிது அல்ல.
நபோனிடஸுக்கும் பெல்ஷாத்சாருக்கும் இடையிலான கூட்டு ஆட்சி பாபிலோன் பேரரசின் முடிவுவரை தொடர்ந்திருந்தது. ஆகவே, பாபிலோன் வீழ்ந்த அதே இரவிலேயே, தானியேலை ராஜ்யத்தில் மூன்றாம் ஆட்சியாளராக பெல்ஷாத்சார் நியமித்தார், இரண்டாவதாக அல்ல.—தானியேல் 5:16.
மிதிமீறிய தன்னம்பிக்கையும் செருக்கும் நிறைந்த அரசன்
பெல்ஷாத்சார் மிதமீறிய தன்னம்பிக்கையும் செருக்கும் நிறைந்தவனாய் இருந்ததாக அவனது ஆட்சியின் இறுதிக்கட்டத்தில் நடந்த சம்பவங்கள் சுட்டிக்காட்டுகின்றன. பொ.ச.மு. 539, அக்டோபர் 5-ல் அவனுடைய ஆட்சி முடிவுக்கு வந்தபோது, நபோனிடஸ் போர்சிப்பாவில் ஒரு குகையில் ஒளிந்திருந்தார்; அவர் மேதிய-பெர்சிய படைகளால் தோல்வியைத் தழுவியிருந்தார். பாபிலோன் முற்றுகையிடப்பட்டிருந்தது. ஆனால், பிரமாண்டமான மதிற்சுவர்களால் சூழப்பட்ட அந்த நகரத்தில் பெல்ஷாத்சார் அந்தளவு பாதுகாப்பாக உணர்ந்ததால் அதே இரவில் ‘தன் பிரபுக்களில் ஆயிரம்பேருக்கு ஒரு பெரிய விருந்தை’ நடத்திக்கொண்டிருந்தார். நகரத்திற்குள் இருந்த மக்கள் “அந்த சமயத்தில் ஆடிக்கொண்டும் பாடிக்கொண்டும் உல்லாசமாக இருந்தார்கள்” என பொ.ச.மு. ஐந்தாம் நூற்றாண்டில் வாழ்ந்த கிரேக்க சரித்திராசிரியர் ஹிராடட்டஸ் சொல்கிறார்.
ஆனால், பாபிலோனிய மதிற்சுவர்களுக்கு வெளியே, மேதிய-பெர்சிய படை உஷாராய் இருந்தது. கோரேசுவின் கட்டளையின்படி, நகரத்தின் நடுவில் ஓடிக்கொண்டிருந்த யூப்ரடிஸ் நதியை வேறு வழியாக அவர்கள் திருப்பிவிட்டார்கள். தண்ணீரின் மட்டம் போதுமானளவு குறைந்தவுடனே நதிப்படுகையின் வழியாக செல்ல அவருடைய போர்வீரர்கள் தயாரானார்கள். சாய்தளத்தின்மீது ஏறி, நதிக்கரையோர மதிற்சுவரில் அமைக்கப்பட்டிருந்த திறந்துகிடந்த செம்பு கதவுகளின் வழியாக அந்நகரத்திற்குள் நுழைவார்கள்.
நகரத்திற்கு வெளியே நடந்தவற்றை பெல்ஷாத்சார் கவனித்திருந்தால், செம்புக் கதவுகளை அடைத்திருக்கலாம்; மேலும், பலசாலியான ஆட்களை நதிக்கரையோரம் இருந்த மதிற்சுவர்களின்மீது நிறுத்தி பகைவர்களை பிடித்திருக்கலாம். அதற்கு மாறாக, திராட்ச மதுவின் போதையிலிருந்த ஆணவமிக்க பெல்ஷாத்சார், யெகோவாவின் ஆலயத்திலிருந்து பாத்திரங்களைக் கொண்டுவரும்படி கட்டளையிட்டான். அதன்பின்பு, அவனும் விருந்தினரும் அவனுடைய மனைவிகளும் மறுமனையாட்டிகளும் பாபிலோனிய தெய்வங்களைத் துதித்துக்கொண்டு அகந்தையுடன் அந்தப் பாத்திரங்களிலிருந்து குடித்தார்கள். திடீரென, ஒரு கை அற்புதமாக தோன்றி அரண்மனை சுவற்றில் எழுத ஆரம்பித்தது. பெல்ஷாத்சார் திகிலடைந்து, அந்தச் செய்தியையும் அதன் அர்த்தத்தையும் சொல்லும்படி தன்னுடைய ஞானிகளை அழைத்தான். ஆனால் அவர்களால் ‘அந்த எழுத்துக்களை வாசிக்கவும், அதின் அர்த்தத்தை ராஜாவுக்குத் தெரிவிக்கவும் கூடாதிருந்தது.’ இறுதியில், தானியேல் “ராஜாவின்முன் உள்ளே அழைத்துவந்து விடப்பட்டான்.” யெகோவாவின் தைரியமிக்க அந்தத் தீர்க்கதரிசி, அற்புதமான அச்செய்தியின் அர்த்தத்தை தெய்வீக ஏவுதலால் வெளிப்படுத்தி, மேதிய-பெர்சியரின் கையில் பாபிலோன் வீழ்ச்சியடையும் என்று சொன்னார்.—தானியேல் 5:2-28.
மேதியர்களும் பெர்சியர்களும் அந்நகரத்தை எளிதில் கைப்பற்றிவிட்டார்கள்; பெல்ஷாத்சார் அதே இரவில் கொல்லப்பட்டான். கோரேசுவிடம் நபோனிடஸ் சரணடைந்ததாக தெரிகிறது; இவ்வாறு பாபிலோன் பேரரசின் சகாப்தம் முடிந்தது.
[பக்கம் 9-ன் படம்]
பாபிலோனிய பேரரசுக்கு வரவிருந்த அழிவின் செய்தியை தானியேல் விளக்குகிறார்