“சத்தியம் உங்களை விடுதலையாக்கும்”
‘சத்தியத்தை அறிவீர்கள், சத்தியம் உங்களை விடுதலையாக்கும்.’ எருசலேம் ஆலயத்தில் கூடியிருந்த திரளான மக்களுக்கு போதிக்கையில் இயேசு சொன்ன வார்த்தைகளே இவை. (யோவான் 8:32) இயேசுவின் போதனைகள் சத்தியம் என்பதை அவருடைய அப்போஸ்தலர் சட்டென்று விளங்கிக்கொண்டார்கள். தங்களுடைய போதகர் பரத்திலிருந்து வந்தவர் என்பதற்கு ஏராளமான அத்தாட்சியை பார்த்திருந்தார்கள்.
ஆனால் இன்றோ, இயேசு பேசிய சத்தியத்தை இனம் கண்டுகொள்வதை சிலர் சிரமமாக காணலாம். ஏசாயா தீர்க்கதரிசியின் காலத்தில் வாழ்ந்தவர்களை அச்சுவார்த்தது போலவே இன்றும் சிலர் இருக்கின்றனர். இவர்கள், ‘தீமையை நன்மையென்றும், நன்மையைத் தீமையென்றும் சொல்லி, இருளை வெளிச்சமும், வெளிச்சத்தை இருளுமாகப் பாவித்து, கசப்பைத் தித்திப்பும், தித்திப்பைக் கசப்புமென்று சாதிக்கிறார்கள்.’ (ஏசாயா 5:20) இந்தக் காலத்தில், எண்ணற்ற அபிப்பிராயங்களும் தத்துவங்களும் வாழ்க்கை பாணிகளும் மக்களின் மனங்களில் ஊட்டி வளர்க்கப்படுகின்றன. அதனால், எல்லாவற்றிலும் ஏதோ உண்மை இருந்தாலும் சத்தியம் என்று தனியாக ஒன்றும் கிடையாது என பலர் நினைக்கின்றனர்.
சத்தியம் உங்களை விடுதலையாக்கும் என்று இயேசு சொன்னபோது, அதைக் கேட்டுக்கொண்டிருந்தவர்கள் இப்படிச் சொன்னார்கள்: “நாங்கள் ஆபிரகாமின் சந்ததியாயிருக்கிறோம், நாங்கள் ஒருக்காலும் ஒருவனுக்கும் அடிமைகளாயிருக்கவில்லை; விடுதலையாவீர்களென்று நீர் எப்படிச் சொல்லுகிறீர்.” (யோவான் 8:33) யாராவது அல்லது ஏதாவது தங்களை விடுதலை செய்ய வேண்டிய அவசியமென்ன என்று அவர்கள் நினைத்தார்கள். அதற்கு இயேசு இவ்வாறு விளக்கம் தந்தார்: “பாவஞ்செய்கிறவன் எவனும் பாவத்துக்கு அடிமையாயிருக்கிறான் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.” (யோவான் 8:34) இயேசு பேசிக்கொண்டிருந்த சத்தியம், பாவம் எனும் விலங்கை தகர்த்தெறிந்து விடுதலைக்கு வழிநடத்தும். இயேசு சொன்னார்: “குமாரன் உங்களை விடுதலையாக்கினால் மெய்யாகவே விடுதலையாவீர்கள்.” (யோவான் 8:36) ஆகையால், கடவுளுடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவைப் பற்றிய சத்தியமே மக்களை விடுதலை செய்யும் சத்தியம். இயேசுவினுடைய பரிபூரண மானிட உயிர்ப் பலியில் விசுவாசம் வைப்பதன் மூலமே பாவத்திலிருந்தும் மரணத்திலிருந்தும் எவரும் விடுதலை பெற முடியும்.
மற்றொரு சந்தர்ப்பத்தில் இயேசு சொன்னார்: “சத்தியத்தினாலே அவர்களைப் பரிசுத்தமாக்கும்; உம்முடைய வசனமே சத்தியம்.” (யோவான் 17:17) பைபிளில் சொல்லப்பட்டுள்ள கடவுளுடைய வார்த்தையே சத்தியம்; அது மூடநம்பிக்கையிலிருந்தும் பொய் வணக்கத்திலிருந்தும் விடுதலையளிக்கும். பைபிளில் இயேசுவைப் பற்றிய சத்தியம் உள்ளது; அது, அவரில் விசுவாசம் வைப்பதற்கும் எதிர்காலத்தைப் பற்றிய ஒளிமயமான நம்பிக்கையைப் பெறுவதற்கும் வழிநடத்துகிறது. கடவுளுடைய வார்த்தையில் உள்ள சத்தியத்தை அறிந்துகொள்வது எப்பேர்ப்பட்ட மகத்தான காரியம்!
சத்தியத்தை அறிந்துகொள்வது எவ்வளவு இன்றியமையாதது? இன்றுள்ள அநேக மதங்கள், பைபிளை பின்பற்றுவதாக சொல்லிக்கொள்கின்றன; ஆனால் அவற்றை மனித தத்துவங்களும் பாரம்பரியங்களுமே பெரும்பாலும் செல்வாக்கு செலுத்துகின்றன. மதத் தலைவர்கள், தங்களுடைய செய்தி உண்மையாக இருக்கிறதா என்பதில் அக்கறை காட்டுவதைவிட மக்கள் தங்களை ஏற்றுக்கொள்கிறார்களா என்பதிலேயே அதிக அக்கறையுடன் இருப்பதாக தெரிகிறது. எப்படி வணங்கினாலும்சரி, நேர்மையாக நடந்தால் போதும், அதுவே கடவுளுக்கு திருப்திதான் என சிலர் நினைக்கிறார்கள். ஆனால் இயேசு கிறிஸ்து இவ்வாறு விளக்கினார்: “உண்மையாய்த் தொழுதுகொள்ளுகிறவர்கள் பிதாவை ஆவியோடும் உண்மையோடும் [“சத்தியத்தோடும்,” NW] தொழுதுகொள்ளுங்காலம் வரும், அது இப்பொழுதே வந்திருக்கிறது; தம்மைத் தொழுதுகொள்ளுகிறவர்கள் இப்படிப்பட்டவர்களாயிருக்கும்படி பிதாவானவர் விரும்புகிறார்.”—யோவான் 4:23.
கடவுள் ஏற்றுக்கொள்ளத்தக்க முறையில் அவரை வணங்க விரும்பினால், நாம் கண்டிப்பாக சத்தியத்தை அறிய வேண்டும். இது மிகவும் முக்கியமானது. நம்முடைய நித்தியகால மகிழ்ச்சி அதன்மீதே சார்ந்திருக்கிறது. ஆகையால், ஒவ்வொருவரும் தன்னைத்தானே இவ்வாறு கேட்டுக்கொள்ள வேண்டும்: ‘என் வணக்கத்தை கடவுள் ஏற்றுக்கொள்கிறாரா? கடவுளுடைய வார்த்தையிலுள்ள சத்தியத்தைக் கற்றுக்கொள்ள எனக்கு உண்மையிலேயே விருப்பமா? அல்லது, இந்த விஷயத்தில் ஆழமாய் தோண்டிப்பார்க்கப்போய் வண்டவாளமெல்லாம் வெளியில் வந்துவிடுமோ என பயப்படுகிறேனா?’