ஏன் எதற்கெடுத்தாலும் வன்முறை
அமெரிக்காவிலுள்ள கொலராடோ மாநிலத்தைச் சேர்ந்த ஒரு நகரம்தான் டென்வர். அங்கு 27-வாரத்திலேயே தாயின் கருவறையிலிருந்து உலகை காண ஓடோடி வந்துவிட்டது ஒரு பிஞ்சு குழந்தை. அந்தப் பையன் பிழைத்துக்கொண்டான்; ஆஸ்பத்திரியில் மூன்று மாதங்கள் தங்கிவிட்டு தன் பெற்றோரிடம் வீட்டிற்கு திரும்பினான். மூன்று வாரங்களுக்குப் பிற்பாடு அந்தப் பையன் மீண்டும் ஆஸ்பத்திரியில். ஏன்? அவனுக்கு மூளையில் பெருத்த சேதம்—குழந்தையின் கூச்சலை பொறுக்க முடியாமல் அவனுடைய அப்பா வெறித்தனமாய் உலுக்கியதால் வந்த வினை. இப்போது அந்தக் குட்டி பையன் குருடாகவும் முடமாகவும் ஆகிவிட்டான். நவீன மருத்துவம் அவனை பிறப்பின் சமயத்தில் பயங்கர ஆபத்திலிருந்து காப்பாற்றிவிட்டது, ஆனால் அவனுடைய அப்பனின் வெறித்தனமான செயலிலிருந்து காப்பாற்ற முடியவில்லை.
பிள்ளைகள் துஷ்பிரயோகம் செய்யப்படுவதும் தாக்கப்படுவதும், கொல்லப்படுவதும் எண்ணிலடங்கா. இவையெல்லாம் நடப்பது இந்த ஜகத்திலேயே மிக மிக கொடூரமான இடங்களில் ஒன்றில்தான்—அதுதான் வீடு! சீராட்டிப் பாராட்ட வேண்டிய கரங்களே ஆண்டொன்றுக்கு 5,000 பிள்ளைகளை—அதுவும் அமெரிக்காவில் மட்டுமே—மாய்த்துவிடுகின்றன என சிலர் கணக்கிடுகின்றனர்! பிள்ளைகள் மட்டுமே பலிகடாக்கள் அல்ல. அமெரிக்காவில் “தாய்மையடையும் வயதில் பெண்களுக்கு ஏற்படும் காயங்களில் முன்னணி வகிக்கும் காரணம் மனைவியைக் கொடுமைப்படுத்துவதே” என உவர்ல்டு ஹெல்த் பத்திரிகையில் அச்சாகியிருக்கிறது. மற்ற நாடுகளைப் பற்றியென்ன என்று யோசிக்கிறீர்களா? “[வளரும் நாடுகளில்] புள்ளிவிவரம் எடுக்கப்பட்ட மூன்றில் ஒரு பாகமானோர் முதல் பாதிக்கும் அதிகமான பெண்கள் வரை கணவனால் தாக்கப்படுவதாக அறிக்கையிடுகின்றனர்.” ஆம், வன்முறை தாண்டவமாடுகிறது, முக்கியமாக வீட்டில்.
அநேக கணவர்களும் மனைவிகளும் தங்களுடைய கருத்துவேறுபாடுகளை வன்முறையால் தீர்த்துக்கொள்ள முயலுகின்றனர். சில நாடுகளில், பெற்றோர்களும் ஆசிரியர்களும் தங்களுடைய கோபத்தை பிள்ளைகள்மீது கொட்டுவதற்கு வன்முறையை பயன்படுத்துகின்றனர். அடாவடித்தனம் செய்கிறவர்கள் சும்மா விளையாட்டுக்காக “அப்பாவிகளை” தாக்குகின்றனர். எதற்கெடுத்தாலும் மனிதர்கள் ஏன் வன்முறையில் இறங்குகின்றனர்?
மனுஷர் வன்முறைமிக்கவர்களாய் மாறுவதேன்
வன்முறை என்பது மனுஷர்களுடைய பிறவி குணம்—இப்படி வாதிடுகின்றனர் சிலர். அமெரிக்காவில் பொதுவாக வன்முறை தணிந்துவிட்டபோதிலும், இளைஞர் மத்தியில் சூடுபிடித்துவிட்டது. வன்முறைமீது “வசியமும்” கூடிவிட்டது. முப்பெரும் டெலிவிஷன் நெட்வர்க்குகள் “க்ரைம்” கதைகளை இரட்டிப்பாக்கிவிட்டன, கொலை கதைகளை மும்மடங்காக்கிவிட்டன. ஆம், “க்ரைம்” விலைபோகிறது! “நாம் வன்முறையை பொறுத்துக்கொள்வதோடு மட்டுமல்லாமல், அதை நம்முடைய செய்தித்தாள்களின் முன்பக்கத்திலும் போடுகிறோம். நம்முடைய பிள்ளைகளை ‘குதூகலிப்பதற்கு’ டெலிவிஷன் புரோகிராம்களில் மூன்றில் ஒன்று அல்லது நான்கில் ஒன்று அதை ஒளிபரப்புகின்றன. அதை கண்டும் காணாமலும் விட்டுவிடுகிறோம்! அதுமட்டுமா, எனது அன்பர்களே, நாம் அதை விரும்பவும் செய்கிறோம்” என்று சொன்னார் மனநோய் மருத்துவர் கார்ல் மெனிங்கர்.
மூளை உயிரியலும் சூழ்நிலையும் மனிதனுடைய மூர்க்கத்தனத்தோடு அதிக தொடர்புடையது என சமீப விஞ்ஞான ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. “நாங்கள் அனைவரும் என்ன முடிவுக்கு வர ஆரம்பித்திருக்கிறோம் என்றால், அதிகமதிகமான பிள்ளைகள் மோசமான சூழ்நிலைக்கு ஆளாவது வன்முறை என்ற கொள்ளைநோயை பெருவாரியாக பரப்புகிறது” என்று சொல்கிறார் டாக்டர் மார்கஸ் ஜே. குரூஸி. இவர் இல்லினாய்ஸிலுள்ள பல்கலைக்கழகத்தின் பாலியர் ஆராய்ச்சி நிறுவனத்தைச் சேர்ந்தவர். மூளைக்கு உள்ளே (ஆங்கிலம்) என்ற நூல் சொல்கிறது: “சூழ்நிலை சார்ந்த சம்பவங்கள் உண்மையிலேயே மூளையில் மூலக்கூறு மாற்றங்களை ஏற்படுத்துகின்றன, அது மக்களை திடீரென்று கட்டுப்பாடின்றி செயல்படத் தூண்டுகிறது. குடும்ப அமைப்பு வீழ்ச்சியடைதல், தாயோ தகப்பனோ மட்டுமே உள்ள குடும்பங்களின் எண்ணிக்கை அதிகரித்தல், தீராத வறுமை, சதா போதைப்பொருள் துஷ்பிரயோகம் போன்ற காரணிகள் மூளை வேதியலை மூர்க்கத்தனமான நடத்தைக்கு கொண்டுசெல்கின்றன. இப்படி நடக்காது என ஒருகாலத்தில் நினைத்த விளைவு இது.”
மூளையில் ஏற்படும் மாற்றங்கள், கண்டிப்பாக செரோடோனியத்தின் அளவை குறைக்கிறது என சொல்லப்படுகிறது. இந்த செரோடோனியம் என்பது மூர்க்கத்தனத்தை கட்டுப்படுத்துவதாக கருதப்படும் மூளையிலுள்ள ஒரு ரசாயனம். மூளையிலுள்ள செரோடோனியத்தின் அளவை மதுபானம் குறைக்கலாம் என ஆராய்ச்சிகள் காட்டுகின்றன. அதனால், வன்முறைக்கும் மதுபான துஷ்பிரயோகத்திற்கும் இடையே தொடர்பு இருப்பதாக நீண்ட காலமாய் நிலவும் நம்பிக்கைக்கு ஓரளவு விஞ்ஞானப்பூர்வ ஆதாரத்தை இது கொடுக்கிறது.
இன்று வன்முறை அதிகரித்து வருவதில் மற்றொரு காரணியும் உட்பட்டுள்ளது. “ஞாபகத்தில் வைத்துக்கொள்ளுங்கள்” என்பதாக சொல்லி நம்பகமான தீர்க்கதரிசன புத்தகமாகிய பைபிள் எச்சரிக்கிறது. “கடைசி நாட்களில் கடினமான சமயங்கள் ஏற்படும். மக்கள் சுயநலக்காரர்களாகவும் பேராசைமிக்கவர்களாகவும் பெருமையுள்ளவர்களாகவும் தலைக்கனமுள்ளவர்களாகவும் இருப்பார்கள்; . . . அவர்கள் அன்பற்றவர்களாகவும் இரக்கமற்றவர்களாகவும் பழிதூற்றுகிறவர்களாகவும் வன்முறைமிக்கவர்களாகவும் கொடுமையுள்ளவர்களாகவும் இருப்பார்கள்; நல்லவர்களைப் பகைப்பார்கள்; ஏமாற்றுகிறவர்களாகவும் துணிகரமுள்ளவர்களாகவும் இறுமாப்புள்ளவர்களாகவும் இருப்பார்கள் . . . இப்படிப்பட்ட ஆட்களை விட்டுவிலகு.” (2 தீமோத்தேயு 3:1-5, டுடேஷ் இங்லிஷ் வர்ஷன்) ஆம், ‘கடைசி நாட்களைப்’ பற்றிய பைபிள் தீர்க்கதரிசனத்தின் நிறைவேற்றமே இன்று நாம் காணும் வன்முறை.
வேறொன்றும் இக்காலத்தை இன்னும் வன்முறைமிக்க காலமாக்குகிறது. “பூமியிலும் சமுத்திரத்திலும் குடியிருக்கிறவர்களே! ஐயோ” என்பதாக பைபிள் சொல்கிறது. காரணம்? “பிசாசானவன் தனக்குக் கொஞ்சக்காலமாத்திரம் உண்டென்று அறிந்து, மிகுந்த கோபங்கொண்டு, உங்களிடத்தில் இறங்கி[யிருக்கிறான்].” (வெளிப்படுத்துதல் 12:2) பிசாசும் அவனுடைய பேய்களும் பரலோகத்திலிருந்து தள்ளப்பட்டனர், இப்பொழுது அவர்கள் தங்களுடைய மூர்க்கத்தனத்தை மனிதவர்க்கத்தினரின்மீது திருப்பியிருக்கின்றனர். “ஆகாயத்து அதிகாரப் பிரபுவாகிய” பிசாசு ‘கீழ்ப்படியாமையின் பிள்ளைகளிடத்தில் இப்பொழுது கிரியைசெய்து’ இந்தப் பூமியை மேன்மேலும் வன்முறைக் களமாக ஆக்குகிறான்.—எபேசியர் 2:2.
அப்படியானால், இன்றைய வன்முறைமிக்க சூழலை சமாளிப்பது எப்படி? வன்முறையின்றி எப்படி நாம் கருத்துவேறுபாடுகளை தீர்த்துக்கொள்ளலாம்?
[பக்கம் 5-ன் சிறு குறிப்பு]
பிள்ளைகள் துஷ்பிரயோகம் செய்யப்படுவதும் தாக்கப்படுவதும் கொல்லப்படுவதும் எண்ணிலடங்கா. இவையெல்லாம் நடப்பது இந்த ஜகத்திலேயே மிக மிக கொடூரமான இடங்களில் ஒன்றில்தான்.—அதுதான் வீடு!