உங்கள் உழைப்பு அக்கினிப் பரிட்சையை வெல்லுமா?
“[அஸ்திவாரத்தின்] மேல் எப்படி கட்டுகிறானென்று ஒவ்வொருவனும் கவனமாய் இருக்கக்கடவன்.”—1 கொரிந்தியர் 3:10, NW.
1. சீஷர்களாக ஆகப்போகிறவர்களைக் குறித்து உண்மையுள்ள சாட்சிகள் என்ன நம்பிக்கையை வளர்க்கின்றனர்?
தங்களுக்குப் பிறந்த அந்தப் புத்தம் புது பூந்தளிரை கண்ணிமைக்காமல் பார்க்கின்றனர் ஒரு கிறிஸ்தவ தம்பதியினர். தன்னுடன் பைபிளைப் படிப்பவரின் முகத்தில் ஆர்வமும் ஆவலும் ததும்புவதைப் பார்க்கிறார் ஒரு ராஜ்ய பிரஸ்தாபி. சபைக்கு வந்தவர்களில், புதிதாக வந்துள்ள ஒருவர் ஆசையாசையாக பைபிளைத் திறந்து வசனங்களைப் பார்ப்பதை மேடையிலிருந்து கவனிக்கிறார் ஒரு கிறிஸ்தவ மூப்பர். யெகோவாவின் உண்மையுள்ள ஊழியர்களான இவர்களின் மனங்களில் நம்பிக்கை ஊற்றெடுக்கிறது. ‘இவர் யெகோவாவை நேசித்து, அவரைச் சேவிப்பாரா, அவருக்கு உண்மையுள்ளவராக நிலைத்திருப்பாரா?’ என்ற கேள்வி அவர்களுக்குள் இயல்பாகவே எழும்பும். இருந்தாலும், இது தானாக நடந்து விடாது. அதற்காக உழைப்பது அவசியம்.
2. கற்பிக்கும் வேலையின் முக்கியத்துவத்தை அப்போஸ்தலன் பவுல் எபிரெய கிறிஸ்தவர்களுக்கு எவ்வாறு நினைப்பூட்டினார், என்ன சுயபரிசோதனை செய்யும்படி இது நம்மை தூண்ட வேண்டும்?
2 அப்போஸ்தலனாகிய பவுல் கற்பிப்பதில் திறமைசாலியாக இருந்தார்; ‘இவ்வளவு காலத்திற்குள் நீங்கள் ஆசிரியர்களாய் இருந்திருக்க வேண்டும்’ என எழுதியபோது, கற்பித்து சீஷராக்கும் வேலையின் முக்கியத்துவத்தை அவர் வலியுறுத்தினார். (எபிரேயர் 5:12, பொது மொழிபெயர்ப்பு) பவுல் யாருக்கு எழுதினாரோ அந்தக் கிறிஸ்தவர்கள் நீண்ட காலத்துக்கு முன்பே விசுவாசிகளாகிவிட்டார்கள். ஆனால் செய்த முன்னேற்றமோ வெகு சொற்பம். மற்றவர்களுக்கு கற்பிக்க தயாராவதற்கு பதிலாக, அவர்களுக்கே சத்தியத்தின் அரிச்சுவடிகளை மறுபடியும் கற்பிக்க வேண்டிய அவசியம் இருந்தது. இன்று, நாம் அனைவரும் கற்பிப்பவர்களாக நம் திறமைகளை அவ்வப்போது பரிசோதித்துப் பார்க்க வேண்டும். அப்போதுதான் எதில் முன்னேற்றம் செய்வது என்பதை அறிய முடியும். உயிர்கள் ஆபத்தில் இருக்கின்றன. நாம் என்ன செய்யலாம்?
3. (அ) அப்போஸ்தலனாகிய பவுல் கிறிஸ்தவ சீஷரை உருவாக்கும் வேலையை எதற்கு ஒப்பிட்டார்? (ஆ) கிறிஸ்தவ கட்டடப் பணியாளர்களாக, நமக்கு எத்தகைய பெரும் பாக்கியம் உள்ளது?
3 விரிவான அர்த்தமுள்ள ஒரு உதாரணத்தை பவுல் குறிப்பிட்டார். அதில் சீஷரை உருவாக்கும் வேலையை கட்டடம் கட்டும் செயலுக்கு ஒப்பிட்டார். அதை, “நாங்கள் கடவுளின் உடன் ஊழியர்; நீங்கள் கடவுளின் பண்ணை, கடவுளின் கட்டடம்” என்று சொல்வதன்மூலம் ஆரம்பித்தார். (1 கொரிந்தியர் 3:9, திருத்தியமொழிபெயர்ப்பு) எனவே மக்களை உட்படுத்துகிற ஒரு கட்டட வேலையில் நாம் பங்குகொள்கிறோம்; அவர்கள் கிறிஸ்துவின் சீஷர்களாக கட்டப்படுவதற்கு உதவுகிறோம். ‘எல்லாவற்றையும் கட்டி எழுப்பினவரின்’ உடன் வேலையாட்களாக இதைச் செய்கிறோம். (எபிரெயர் 3:4, பொ.மொ.) என்னே பெரும் பாக்கியம்! கொரிந்தியர்களுக்கு பவுல் கொடுத்த புத்திமதி நம் வேலையில் அதிக திறம்பட்டவர்களாவதற்கு நமக்கு எவ்வாறு உதவுகிறது என்பதைப் பார்ப்போம். நம் “கற்பிக்கும் கலை”க்கு முக்கியமாக கவனம் செலுத்துவோம்.—2 தீமோத்தேயு 4:2, NW.
சரியான அஸ்திவாரம் போடுதல்
4. (அ) கிறிஸ்தவ கட்டும் வேலையில் பவுலின் பங்கு என்ன? (ஆ) நல்ல அஸ்திவாரத்தின் முக்கியத்துவத்தை இயேசுவும் அவருடைய பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்தவர்களும் அறிந்திருந்தார்கள் என்று ஏன் சொல்லலாம்?
4 ஒரு கட்டடம் நிலையாகவும் உறுதியாகவும் இருப்பதற்கு நல்ல அஸ்திவாரம் தேவை; இதனால்தான், பவுல் இவ்வாறு எழுதினார்: “கடவுள் எனக்கு அளித்த அருளின்படியே, நான் கைதேர்ந்த கட்டடக் கலைஞர் போல அடித்தளம் இட்டேன்.” (1 கொரிந்தியர் 3:10, பொ.மொ.) இதே உதாரணத்தை இயேசு கிறிஸ்துவும் பயன்படுத்தினார். ஒரு வீட்டைக் கட்டியவர் அதை உறுதியான அஸ்திவாரத்தின்மீது கட்டியதன் காரணமாக அது புயலைத் தாக்குப்பிடித்து நின்றது என சொன்னார். (லூக்கா 6:47-49) அஸ்திவாரங்களின் முக்கியத்துவத்தைக் குறித்து இயேசு அறிந்திருந்தார். யெகோவா இந்த பூமிக்கு அஸ்திவாரமிட்டபோது இயேசு அவரருகே இருந்தார்.a (நீதிமொழிகள் 8:29-31) நல்ல அஸ்திவாரங்கள் போடுவது எந்தளவுக்கு முக்கியம் என்பது இயேசு பேசுவதைக் கேட்டுக் கொண்டிருந்த மக்களுக்கும்கூட தெரியும். பாலஸ்தீனாவில் எப்போதாவது நேரிடும் திடீர் வெள்ளப்பெருக்கையும் பூமியதிர்ச்சிகளையும் நன்கு அஸ்திவாரமிட்டு கட்டப்பட்ட வீடுகள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும். அப்படியானால், எந்த அஸ்திவாரத்தை மனதில் வைத்து பவுல் பேசினார்?
5. கிறிஸ்தவ சபையின் அஸ்திவாரம் யார், இது எவ்வாறு முன்னுரைக்கப்பட்டது?
5 ‘போடப்பட்டிருக்கிற அஸ்திவாரமாகிய இயேசுகிறிஸ்துவை அல்லாமல் வேறே அஸ்திவாரத்தைப் போட ஒருவனாலும் கூடாது’ என்று பவுல் எழுதினார். (1 கொரிந்தியர் 3:11) இயேசுவை அஸ்திவாரத்தோடு இணைத்துப் பேசுவது இதுவே முதல் முறை அல்ல. ஏசாயா 28:16 இவ்வாறு முன்னறிவித்தது: ‘ஆதலால் கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறதாவது: இதோ, அஸ்திவாரமாக ஒரு கல்லை நான் சீயோனிலே வைக்கிறேன்; அது பரீட்சிக்கப்பட்டதும், விலையேறப்பெற்றதும் திட அஸ்திவாரமுள்ளதுமான மூலைக்கல்லாயிருக்கும், விசுவாசிக்கிறவன் பதறான்.’ தம் மகன் கிறிஸ்தவ சபையின் அஸ்திவாரமாக ஆகவேண்டும் என்று யெகோவா நீண்ட காலத்துக்கு முன்பே தீர்மானித்திருந்தார்.—சங்கீதம் 118:22; எபேசியர் 2:19-22; 1 பேதுரு 2:4-6.
6. கொரிந்திய கிறிஸ்தவர்களிடத்தில் பவுல் எவ்வாறு சரியான அஸ்திவாரம் போட்டார்?
6 ஒவ்வொரு கிறிஸ்தவருக்கும் அஸ்திவாரம் எது? பவுல் சொன்னபடி, கடவுளுடைய வார்த்தையில் குறிப்பிடப்பட்டுள்ள இயேசு கிறிஸ்துவே அன்றி உண்மை கிறிஸ்தவருக்கு வேறு ஒரு அஸ்திவாரம் இல்லை. நிச்சயமாகவே பவுல் அத்தகைய ஒரு அஸ்திவாரத்தையே போட்டார். தத்துவத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்ட கொரிந்துவில், உலக ஞானத்தால் மக்களை கவர பவுல் முயற்சிக்கவில்லை. மாறாக, “கழுமரத்தில் அறையப்பட்ட கிறிஸ்துவையே” பவுல் பிரசங்கித்தார். தேசங்கள் அதை பெரும் “பைத்தியக்காரத்தனம்” என ஒதுக்கித் தள்ளின. (1 கொரிந்தியர் 1:23, NW) யெகோவாவின் நோக்கத்தில் இயேசு முக்கிய பங்கு வகிக்கிறார் என பவுல் கற்பித்தார்.—2 கொரிந்தியர் 1:20; கொலோசெயர் 2:2, 3.
7. “கைதேர்ந்த கட்டடக் கலைஞர் போல” என்று பவுல் தன்னை அழைத்ததிலிருந்து நாம் என்ன கற்றுக் கொள்ளலாம்?
7 பவுல் கற்பிக்கும் வேலையை ‘கைதேர்ந்த கட்டடக் கலைஞரைப்போல’ செய்ததாக குறிப்பிடுகிறார். இந்தக் குறிப்பை தன்னைப் பற்றி பெருமையடித்துக் கொள்ள அவர் சொல்லவில்லை. ஒழுங்கமைக்கிற அல்லது வழிநடத்துகிற வேலையை உன்னத பரிசாக யெகோவா தனக்கு கொடுத்திருப்பதாக ஒத்துக்கொள்கிறார். (1 கொரிந்தியர் 12:28) முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்களுக்கு கொடுக்கப்பட்ட அற்புத வரங்கள் இன்று நமக்கு கொடுக்கப்படவில்லை. போதிக்கும் வரம்பெற்றவர்களாக நம்மை நாம் கருதாமல் இருக்கலாம். ஆனால் முக்கியமான ஒரு அர்த்தத்தில் நாம் அவ்வாறே இருக்கிறோம். இதை கவனியுங்கள்: நமக்கு உதவுவதற்கு யெகோவா பரிசுத்த ஆவியைக் கொடுக்கிறார். (லூக்கா 12:11, 12-ஐ ஒப்பிடுக.) யெகோவாவின் அன்பும் அவருடைய வார்த்தையின் அடிப்படை போதனைகளைப் பற்றிய அறிவும் நமக்கு உள்ளது. மற்றவர்களுக்கு கற்பிப்பதில் பயன்படுத்த இவைதாமே உண்மையில் அற்புதமான வரங்கள். சரியான அஸ்திவாரம் போடுவதற்கு இவற்றை நாம் பயன்படுத்துவோமாக.
8. சீஷர்களாகப் போகிறவர்களிடத்தில் நாம் எவ்வாறு கிறிஸ்துவை அஸ்திவாரமாக இடலாம்?
8 கிறிஸ்துவை அஸ்திவாரமாக போடும்போது, மாட்டுக்கொட்டிலில் இருக்கும், எதுவும் செய்ய முடியாத ஒரு குழந்தையாகவோ யெகோவாவுக்கு சமமாக இருக்கும் ஒரு திரித்துவக் கடவுளாகவோ அவரைப் பற்றி நாம் கற்பிக்கிறதில்லை. அத்தகைய வேதப்பூர்வமற்ற கருத்துக்கள் போலி கிறிஸ்தவர்களின் அஸ்திவாரமாக இருக்கின்றன. மாறாக, அவர் எக்காலத்திலும் வாழ்ந்தவருள் மிகப்பெரிய மனிதர், நமக்காக தம்முடைய பரிபூரண உயிரைத் தந்தவர், இன்றோ, யெகோவாவால் அபிஷேகம் செய்யப்பட்ட பரலோகத்தில் ஆட்சி செய்கிற அரசர் என்று நாம் கற்பிக்கிறோம். (ரோமர் 5:8; வெளிப்படுத்துதல் 11:15) இயேசுவின் அடிச்சுவடுகளில் நடந்து, அவருடைய குணங்களைப் பின்பற்றும்படி நம்மோடு பைபிளைப் படிக்கிறவர்களை தூண்டவும் நாம் முயலுகிறோம். (1 பேதுரு 2:21) இயேசு ஊழியத்திற்காக காட்டிய வைராக்கியமும், ஏழ்மையாக, ஒடுக்கப்பட்டவர்களாக இருந்தவர்களிடத்தில் அவர் காட்டிய கரிசனையும், குற்ற உணர்வால் மனம் புழுங்கிய பாவிகளிடம் அவர் காட்டிய இரக்கமும், சோதனைகளின்போது அவர் காட்டிய அசைக்க முடியாத தைரியமும் நம்மோடு பைபிளைப் படிக்கிறவர்களுடைய நெஞ்சைத் தொடவேண்டும் என நாம் விரும்புகிறோம். உண்மையிலேயே, இயேசு மிகச் சிறந்த அஸ்திவாரமாக இருக்கிறார். ஆனால் அடுத்து என்ன செய்ய வேண்டும்?
சரியான பொருட்களால் கட்டுதல்
9. பவுல் அஸ்திவாரம் போடுவதில் முக்கிய கவனம் செலுத்தியபோதிலும், தான் சத்தியத்துக்கு வழிநடத்தியவர்களின்பேரில் எந்தளவு அக்கறை காட்டினார்?
9 பவுல் இவ்வாறு எழுதினார்: “ஒருவன் அந்த அஸ்திவாரத்தின் மேல் பொன், வெள்ளி, விலையேறப்பெற்ற கல், மரம், புல், வைக்கோல் ஆகிய இவைகளைக் கட்டினால், அவனவனுடைய வேலைப்பாடு வெளியாகும்; நாளானது அதை விளங்கப்பண்ணும். ஏனெனில் அது அக்கினியினாலே வெளிப்படுத்தப்படும்; அவனவனுடைய வேலைப்பாடு எத்தன்மையுள்ளதென்று அக்கினியானது பரிசோதிக்கும்.” (1 கொரிந்தியர் 3:12, 13) பவுல் சொல்ல வந்ததென்ன? பின்னணியைச் சற்றுக் கவனியுங்கள். அஸ்திவாரம் போடுவதே பவுலின் பிரதான வேலையாக இருந்தது. தன்னுடைய மிஷனரி பயணங்களில் அவர் ஊர் ஊராக சென்றார்; கிறிஸ்துவைப் பற்றி கேள்விப்பட்டிராத அநேகருக்கு பிரசங்கித்தார். (ரோமர் 15:21) அவர் கற்பித்த சத்தியங்களை மக்கள் ஏற்றுக்கொண்டபோது, சபைகள் ஸ்தாபிக்கப்பட்டன. இத்தகைய உண்மையுள்ள ஆட்களுக்காக பவுல் அதிகம் கவலைப்பட்டார். (2 கொரிந்தியர் 11:28, 29) இருந்தாலும், அவருடைய வேலையின் காரணமாக அவரால் ஒரே இடத்தில் தங்கமுடியவில்லை. எனவே கொரிந்துவில் அஸ்திவாரம் போடுவதற்காக 18 மாதங்கள் தங்கியபிறகு, பிரசங்கிப்பதற்காக மற்ற ஊர்களுக்கு கிளம்பிச் சென்றார். தான் போட்ட அஸ்திவாரத்தின்மீது மற்றவர்கள் தொடர்ந்து எவ்வாறு கட்டுகிறார்கள் என்பதை அறிவதில் அதிக ஆர்வம் காட்டினார்.—அப்போஸ்தலர் 18:8-11; 1 கொரிந்தியர் 3:6.
10, 11. (அ) பல்வேறு வகை கட்டடப் பொருட்களைப் பவுல் எவ்வாறு வேறுபடுத்திக் காட்டுகிறார்? (ஆ) பண்டைய கொரிந்துவில் என்ன வகையான கட்டடங்கள் இருந்திருக்கலாம்? (இ) என்ன வகையான கட்டடங்கள் நெருப்பையும் தப்பிக்க முடியும், கிறிஸ்தவ சீஷராக்கும் வேலையைச் செய்பவர்களுக்கு இந்த உதாரணம் என்ன பாடத்தைக் கற்பிக்கிறது?
10 பவுல் கொரிந்துவில் அஸ்திவாரம் போட்டார். ஆனால் அதன்மேல் கட்டிய சிலரோ மோசமான கட்டடத்தை எழுப்பினார்கள் என தோன்றுகிறது. எனவே இப்பிரச்சினையை அவர்களுக்கு வெளிப்படுத்துகிறார். ஒருபக்கத்தில் தங்கம், வெள்ளி, விலையேறப்பெற்ற கற்கள், மற்றொரு பக்கத்திலோ மரம், புல், வைக்கோல் என இரண்டு வித்தியாசமான கட்டடப் பொருட்களைப் பற்றி பவுல் சொல்கிறார். தரமான, நிலைத்து நிற்கிற, தீக்கிரையாகாத பொருட்களால் ஒரு கட்டடத்தை எழுப்ப முடியும்; அல்லது அழியக்கூடிய, நிரந்தரமற்ற, தீக்கிரையாகிற பொருட்களால் அவசர அவசரமாக ஒரு கட்டடத்தைக் கட்ட முடியும். இந்த இரண்டு வகையான கட்டடங்களும் புகழ்பெற்ற நகரமாகிய கொரிந்துவில் நிறைந்திருந்தன. பிரமாண்டமான, விலையுயர்ந்த கற்பாளங்களால் கட்டப்பட்ட சிறப்புவாய்ந்த கோயில்கள் அங்கு ஏராளம் ஏராளம். அவை தங்கத்தாலும் வெள்ளியாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தன அல்லது பூச்சு பூசப்பட்டிருந்தன.b சொரசொரப்பான மரச் சட்டங்களையும் வைக்கோலால் வேயப்பட்ட கூரைகளையும் உடைய குடிசைகளுக்கும் கடைகளுக்கும் முன்பு இந்த உறுதிவாய்ந்த கட்டடங்கள் கம்பீரமாக காட்சியளித்தன.
11 தீ பற்றிக்கொண்டால் இத்தகைய கட்டடங்களுக்கு என்ன ஆகும்? இதற்கான பதில் நமக்கு நன்கு தெரியும்; அது பவுலின் நாளில் வாழ்ந்தவர்களுக்கும் தெரிந்திருந்தது. பொ.ச.மு. 146-ல் கொரிந்து நகரம் ரோம ஜெனரல் மம்மியஸால் கைப்பற்றப்பட்டு, தீக்கிரையாக்கப்பட்டது. மரத்தாலும் வைக்கோலாலும் கட்டப்பட்ட அநேக வீடுகள் நிச்சயமாகவே சுவடுதெரியாமல் போயிருக்கும். கற்களால் கட்டப்பட்டு, வெள்ளியாலும் தங்கத்தாலும் அலங்கரிக்கப்பட்ட உறுதிவாய்ந்த கட்டடங்களுக்கு என்ன ஏற்பட்டது? சந்தேகமில்லாமல், அவை அழியாமல் நின்றன. கொரிந்துவிலிருந்த பவுலின் மாணவர்கள் ஒவ்வொரு நாளும் இத்தகைய கட்டடங்களைக் கடந்து சென்றிருக்கக்கூடும். அவற்றிற்கு அருகிலிருந்த உறுதியற்ற கட்டடங்கள் பேரழிவுகளில் தரைமட்டமாயின. ஆனால் இவையோ அப்பேரழிவுகளிலிருந்து தப்பித்து கம்பீரமாக வீற்றிருக்கின்றன. எவ்வளவு தெளிவாக பவுல் தன் கருத்தை வலியுறுத்தியிருக்கிறார்! கற்பிக்கும்போது, நாம் நம்மை கட்டடம் கட்டுபவர்களாக கருத வேண்டியது அவசியம். சிறந்த, மிகவும் உறுதிவாய்ந்த பொருட்களால் நாம் கட்ட வேண்டும். அப்போதுதான் நம் உழைப்பும் நீடித்து நிற்கும். இத்தகைய உறுதிவாய்ந்த பொருட்கள் யாவை? அவற்றைப் பயன்படுத்துவது ஏன் முக்கியம்?
உங்கள் உழைப்பு அக்கினிப் பரிட்சையை வெல்லுமா?
12. என்ன வழிகளில் கொரிந்துவிலிருந்த சிலர் கிறிஸ்தவ கட்டும் வேலையை ஏனோதானோவென்று செய்தனர்?
12 கொரிந்துவிலிருந்த கிறிஸ்தவர்களில் சிலர் தரங்குறைந்த பொருட்களால் கட்டியதாக பவுல் உணர்ந்தார் என்பது தெளிவாயிருக்கிறது. என்ன தவறு நேர்ந்துவிட்டது? சூழமைவு காட்டுகிறபடி, சபைக்குள் பிரிவினை ஏகபோக செல்வாக்கு செலுத்தியது. சபையிலிருந்தவர்கள் அதன் ஒற்றுமையை குலைக்கும் வகையில் மனிதர்களை பின்பற்ற ஆரம்பித்தார்கள். சிலர், ‘நான் பவுலைச் சேர்ந்தவன்,’ என்றும், வேறுசிலரோ, ‘நான் அப்பொல்லோவைச் சேர்ந்தவன்’ என்றும் சொன்னார்கள். சிலர் தங்களுடைய ஞானத்தை பெரிதும் மெச்சிக்கொண்டார்கள். இதன் விளைவாக, மாம்ச சிந்தனையும், ஆவிக்குரிய முதிர்ச்சியின்மையும், எங்குபார்த்தாலும் “பொறாமையும் சண்டையும்” நிறைந்த ஒரு சூழல் உருவாகியிருந்தது ஆச்சரியமில்லை. (1 கொரிந்தியர் 1:12; 3:1-4, 18) சபையிலும் ஊழியத்திலும் கற்பித்தபோது இத்தகைய மனப்பான்மைகள் சந்தேகமில்லாமல் வெளிப்பட்டன. இதனால் அவர்கள் செய்த சீஷராக்கும் வேலை ஏனோதானோவென இருந்தது; தரங்குறைந்த பொருட்களால் கட்டப்பட்ட கட்டடத்தைப்போல் இருந்தது. அது “அக்கினியை” வெல்லமுடியாது. எந்த அக்கினியைக் குறித்து பவுல் பேசிக் கொண்டிருந்தார்?
13. பவுலின் உதாரணத்தில் வரும் அக்கினி எதை அர்த்தப்படுத்துகிறது, எதைக் குறித்து கிறிஸ்தவர்கள் அனைவரும் எச்சரிக்கையாய் இருக்க வேண்டும்?
13 நாம் அனைவருமே நம் வாழ்வில் அக்கினியை எதிர்ப்பட வேண்டும். அந்த அக்கினி, நம் விசுவாசத்தின் பரிட்சைகளே. (யோவான் 15:20; யாக்கோபு 1:2, 3) நம்மோடு சத்தியத்தைப் படிக்கிறவர்கள் ஒவ்வொருவரும் கண்டிப்பாக பரிட்சிக்கப்படுவார்கள்; கொரிந்துவிலுள்ள கிறிஸ்தவர்கள் இதை அறிந்திருக்க வேண்டிய தேவை இருந்தது. நாமும்கூட இன்று இதை அறிந்திருக்கவேண்டும். நாம் கற்பிப்பது தரங்குறைந்ததாக இருந்தால், வருத்தந்தரும் விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கலாம். பவுல் இவ்வாறு எச்சரித்தார்: “அதின்மேல் ஒருவன் கட்டினது நிலைத்தால், அவன் கூலியைப் பெறுவான். ஒருவன் கட்டினது வெந்துபோனால், அவன் நஷ்டமடைவான்; அவனோ இரட்சிக்கப்படுவான்; அதுவும் அக்கினியிலகப்பட்டுத் தப்பினதுபோலிருக்கும்.”c—1 கொரிந்தியர் 3:14, 15.
14. (அ) கிறிஸ்தவ சீஷராக்கும் வேலை செய்பவர்கள் எவ்வாறு ‘இழப்புக்குள்ளாவர்,’ இருந்தாலும், அக்கினியில் அகப்பட்டு தப்புவது போல அவர்கள் எவ்வாறு இரட்சிப்படையலாம்? (ஆ) இழப்பு ஏற்படும் அபாயத்தை நாம் எவ்வாறு குறைக்கலாம்?
14 சிந்தனையைத் தூண்டும் வார்த்தைகள்! யாரோ ஒருவர் சீஷராக நாம் உதவினோம்; அதற்காக கடினமாக உழைத்தோம் என வைத்துக் கொள்வோம். அவரோ, பிறகு துன்புறுத்தலுக்கு விட்டுக்கொடுத்தோ தவறான ஆசைகளுக்கு பலியாகியோ கடைசியாக சத்தியத்தைவிட்டு சென்றுவிட்டாரென்றால், அப்பப்பா, அதன் வேதனை சொல்லி மாளாது. அத்தகைய சூழ்நிலைகள் நமக்கு இழப்பை போன்றது என்பதை பவுல் முழுமையாக ஒத்துக்கொள்கிறார். நம் இரட்சிப்பே “அக்கினியிலகப்பட்டுத் தப்பியதுபோல” அது வேதனைதரும் அனுபவமாக இருக்கும். உயிரைத் தவிர எல்லாவற்றையும் அக்கினிக்குப் பறிகொடுத்த மனிதனைப் போல நாம் இருப்போம். இழப்பு ஏற்படும் அபாயத்தை குறைக்க நம் பங்கில் ஏதாவது செய்யமுடியுமா? கண்டிப்பாக முடியும். நம்மோடு பைபிளைப் படிப்பவர்களை நிலைத்து நிற்கும் பொருட்களால் கட்ட வேண்டும்! விலையேறப்பெற்ற கிறிஸ்தவ குணங்களான ஞானம், பகுத்துணர்வு, யெகோவாவுக்கான பயம், உண்மையான விசுவாசம் ஆகியவற்றின் மதிப்பை உணர்த்த வேண்டும்; இருதயத்தை எட்டும் வண்ணம் கற்பிக்க வேண்டும். அப்போதுநாம் நிலைத்து நிற்கிற, தீக்கிரையாகாத பொருட்களால் கட்டுகிறோம். (சங்கீதம் 19:9, 10; நீதிமொழிகள் 3:13-15; 1 பேதுரு 1:6, 7) இத்தகைய குணங்களை வளர்க்க பாடுபடுபவர்கள் கடவுளுடைய சித்தத்தைத் தொடர்ந்து செய்வர்; என்றென்றும் வாழும் நம்பிக்கை அவர்களுக்கு அச்சாரம் போன்றது. (1 யோவான் 2:17) பவுலின் உதாரணத்தை நடைமுறையில் நாம் எவ்வாறு பயன்படுத்த முடியும்? சில உதாரணங்களைச் சிந்தியுங்கள்.
15. நம்மோடு பைபிளைப் படிப்பவர்களை கட்டும் வேலையில் ஏனோதானோவென்று இருப்பதைத் தவிர்க்க என்ன வழிகள் இருக்கின்றன?
15 நம்மோடு பைபிளைப் படிப்பவர்களுக்குக் கற்பிக்கையில், யெகோவா தேவனுக்கு மேலாக மனிதர்களை உயர்த்தக்கூடாது. நம் ஞானத்தால்தான் எல்லாவற்றையும் கற்பிக்கிறோம் என்று அவர்கள் நினைக்கும்படி செய்யக்கூடாது. அவர்கள் வழிநடத்துதலுக்காக யெகோவாவையும் பைபிளையும் அமைப்பையும் சார்ந்திருக்கும்படி நாம் செய்ய வேண்டும். இவ்வாறு சார்ந்திருப்பதற்கு, அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு நம் சொந்த கருத்துக்களை சொல்லக்கூடாது. பைபிளையும் “உண்மையும் விவேகமுமுள்ள அடிமை”யின் பிரசுரங்களையும் பயன்படுத்தி பதிலைக் கண்டுபிடிக்கும்படி நாம் அவர்களுக்கு உதவ வேண்டும். (மத்தேயு 24:45-47, NW) எனவே, நம்மோடு பைபிளைப் படிப்பவர்கள் நமக்கு மாத்திரமே சொந்தம் என கருதக்கூடாது. அவர்களிடம் மற்றவர்கள் பழகும்போது நாம் எரிச்சல் அடையக்கூடாது. பாசம் காட்டுவதில் “விரிவாகும்படி” நாம் அவர்களுக்கு உற்சாகமூட்ட வேண்டும். தங்களால் முடிந்தளவு சபையிலுள்ள ஒவ்வொருவரையும் அறிந்துகொண்டு உயர்வாய் மதிக்கும்படி கற்றுக்கொடுக்க வேண்டும்.—2 கொரிந்தியர் 6:12, 13, NW.
16. மூப்பர்கள் எவ்வாறு தீக்கிரையாகாத பொருட்களால் கட்டமுடியும்?
16 சீஷர்களைக் கட்டுவதில் கிறிஸ்தவ மூப்பர்களுக்கும் முக்கியப் பங்கு உண்டு. சபைக்கு கற்பிக்கையில், தீக்கிரையாகாத பொருட்களால் கட்ட முயல வேண்டும். கற்பிக்கும் திறமையும் அனுபவமும் ஆள்தன்மையும் மூப்பருக்கு மூப்பர் வேறுபடலாம்; ஆனால் இத்தகைய வேறுபாடுகளை தங்களுக்கு சீடர்களை உருவாக்குவதற்கு அவர்கள் சாதகமாக்கிக் கொள்ளக்கூடாது. (அப்போஸ்தலர் 20:29, 30-ஐ ஒப்பிடுக.) ‘நான் பவுலைச் சேர்ந்தவன்’ அல்லது ‘நான் அப்பொல்லோவைச் சேர்ந்தவன்’ என்று கொரிந்துவிலிருந்த சிலர் ஏன் சொன்னார்கள் என்பதற்குரிய சரியான காரணம் நமக்கு தெரியாது. இத்தகைய பிரிவினை உண்டாக்கும் சிந்தனைகளை உண்மையுள்ள மூப்பர்களான பவுலும் அப்பொல்லோவும் ஆதரிக்கவில்லை என்று நாம் நிச்சயமாய் இருக்கலாம். பவுல் புகழ்ச்சியைக் கேட்டு மயங்கிவிடவில்லை. அவற்றை அவர் கடுமையாக கண்டித்தார். (1 கொரிந்தியர் 3:5-7) இன்றும் அதைப்போலவே, ‘தேவனுடைய மந்தையை’ மேய்க்கிறோம் என்பதை மூப்பர்கள் மனதில் வைக்க வேண்டும். (1 பேதுரு 5:2) அந்த மந்தை எந்த மனிதனுக்கும் சொந்தமில்லை. ஒரு நபர் மந்தை முழுவதையுமோ மூப்பர் குழுவையோ ஆதிக்கம் செலுத்த நினைத்தால், அத்தகைய மனப்பான்மையை மூப்பர்கள் தடுத்து நிறுத்த வேண்டும். சபைக்கு ஊழியம் செய்யவும், இருதயங்களை எட்டவும், ஆடுகள் யெகோவாவை முழு இருதயத்துடன் சேவிக்கும்படி உதவவும் தாழ்மையான மனநிலையால் தூண்டப்படுகிற மூப்பர்கள் தீக்கிரையாகாத பொருட்களால் கட்டுகிறார்கள்.
17. தீக்கிரையாகாத பொருட்களால் கட்டுவதற்கு கிறிஸ்தவ பெற்றோர் எவ்வாறு கடினமாய் உழைக்கின்றனர்?
17 கிறிஸ்தவ பெற்றோர்களும்கூட இவ்விஷயத்தில் பெரும் கவனம் செலுத்துகின்றனர். தங்கள் பிள்ளைகள் என்றென்றும் வாழவேண்டுமென்பதில் அவர்களுக்குத்தான் எத்தனை வாஞ்சை! அதனால்தான் தங்களுடைய பிள்ளைகளின் இருதயத்தில் கடவுளுடைய வார்த்தையின் நியமங்களை “ஆழமாய் பதியவைக்க” கடினமாய் உழைக்கின்றனர். (உபாகமம் 6:6, 7, NW) தங்கள் பிள்ளைகள் சத்தியத்தை அறிய வேண்டுமென விரும்புகின்றனர்; அதேசமயத்தில் சத்தியத்தை வெறும் சட்டதிட்டங்களாகவோ வழக்கமாக கற்பிக்கப்படும் கோட்பாடுகளாகவோ அல்ல, முழுமையான, ஆசீர்வாதமளிக்கிற, மகிழ்ச்சியான வாழ்க்கை முறையாக கருதவேண்டுமென விரும்புகின்றனர். (1 தீமோத்தேயு 1:11) தங்கள் பிள்ளைகளை கிறிஸ்துவின் உண்மையுள்ள சீஷர்களாய் கட்டுவதில் தீக்கிரையாகாத பொருட்களைப் பயன்படுத்த அன்பான பெற்றோர் முயலுகின்றனர். தங்கள் பிள்ளைகள், யெகோவா வெறுக்கும் குணங்களை விட்டுவிடவும், அவர் நேசிக்கிற குணங்களை வளர்க்கவும் பொறுமையாக உதவுகின்றனர்.—கலாத்தியர் 5:22, 23.
யார் பொறுப்பாளி?
18. நல்ல போதனைகளை ஒரு சீஷர் புறக்கணிக்கும்போது, அவருக்கு கற்பித்து, பயிற்சியளித்தவரின் பங்கில்தான் ஏதோ தவறு இருந்திருக்கும் என்ற முடிவுக்கு ஏன் வரக்கூடாது?
18 இந்தக் கலந்துரையாடல் ஒரு முக்கியமான கேள்வியை எழுப்புகிறது. நாம் சத்தியத்திற்கு வழிநடத்திய ஆட்கள் அதிலிருந்து விலகிப்போனால், போதகர்களாக நாம் தவறிவிட்டோம், தரங்குறைந்த பொருட்களால் கட்டியிருக்கிறோம் என இது அர்த்தப்படுத்துகிறதா? அப்படி இருக்க வேண்டியதில்லை. சீஷர்களைக் கட்டுவதில் பங்குகொள்வது பெரிய பொறுப்பு என்பதை பவுலின் வார்த்தைகள் நினைப்பூட்டுகின்றன. நன்றாக கட்டுவதற்கு நம் சக்திக்கு உட்பட்ட எல்லாவற்றையும் செய்ய விரும்புகிறோம். நாம் சத்தியத்திற்கு வழிநடத்தியவர்கள் அதிலிருந்து விலகிச்செல்கையில் அதற்கு முழுக்கமுழுக்க நாம்தான் காரணம் என்ற குற்ற உணர்ச்சியால் பாரமடைய வேண்டுமென பைபிள் சொல்கிறதில்லை. கட்டுபவர்களாக நம் பங்கோடு மற்ற அம்சங்களும் உட்பட்டிருக்கின்றன. உதாரணமாக, கட்டும் பணியில் மிகவும் மோசமான வேலையைச் செய்த போதகரைப் பற்றியும் பவுல் சொல்வதைக் கவனியுங்கள்: “அவர் இழப்புக்குள்ளாவார், . . . ஆனால் அவர்தானே இரட்சிக்கப்படுவார்.” (1 கொரிந்தியர் 3:15, NW) இந்த போதகரோ கடைசியாக இரட்சிப்பை பெறலாம்; ஆனால் அவரோடு பைபிள் படித்தவருக்குள் அவர் கட்ட முயன்ற கிறிஸ்தவ ஆள்தன்மை அக்கினியைப் போன்ற சோதனையை எதிர்ப்படுகையில் ‘எரிந்து போனதாக’ சித்தரிக்கப்பட்டுள்ளது. எனவே நாம் என்ன முடிவுக்கு வர வேண்டும்? உண்மையுள்ள போக்கை பின்பற்றுவாரா மாட்டாரா என்பது நம்மோடு பைபிளைப் படித்தவரின் சொந்த தீர்மானம்; அதற்கு அவரே முக்கியமாக பொறுப்புள்ளவராக இருக்கிறாரென யெகோவா கருதுகிறார்.
19. அடுத்த கட்டுரையில் எதைச் சிந்திப்போம்?
19 தனிப்பட்ட பொறுப்பு மிக முக்கியத்துவம் வாய்ந்தது. அது நம் ஒவ்வொருவரையும் பாதிக்கிறது. குறிப்பாக, பைபிள் இவ்விஷயத்தில் என்ன போதிக்கிறது? அடுத்த கட்டுரை இதற்கு பதிலளிக்கும்.
[அடிக்குறிப்புகள்]
a ‘பூமியின் அஸ்திவாரம்’ என்பது அதை உறுதியாக பிடித்து வைத்திருக்கும் இயற்கை சக்திகளையும், அதனதன் இடத்தில் உறுதியாக நிற்கும் வானத்திலுள்ள கோளங்கள் அனைத்தையும் குறிக்கலாம். இதுமட்டுமல்லாமல், பூமி தானேயும் ஒருபோதும் “நிலைபேராதபடி”க்கு அல்லது அழியாதபடிக்கு உருவாக்கப்பட்டிருக்கிறது.—சங்கீதம் 104:5.
b இங்கு பவுல் குறிப்பிடும் “விலையேறப்பெற்ற கல்,” நவரத்தினங்களில் ஒன்றாக இருக்கவேண்டும் என்ற அவசியமில்லை. அவை பளிங்குக்கல், மிருதுவான வெண்கல், கிரானைட் போன்ற கட்டடத்திற்கு பயன்படும் விலையுயர்ந்த கற்களாகவும் இருந்திருக்கலாம்.
c பவுல் கட்டுபவரின் இரட்சிப்பைக் குறித்தல்ல, அவர் ‘கட்டியதின்’ அதாவது படிப்பவரின் இரட்சிப்பைக் குறித்தே சந்தேகத்தை எழுப்புகிறார். த நியூ இங்லிஷ் பைபிள் இந்த வசனத்தை இவ்வாறு குறிப்பிடுகிறது: “ஒரு மனிதனின் கட்டடம் நிலைத்து நின்றால், அவன் வெகுமதியளிக்கப்படுவான்; அது எரிந்துபோனால், அதன் இழப்பை ஏற்றுக்கொள்ள வேண்டும்; இருந்தாலும் நெருப்பில் அகப்பட்டு தப்பிப்பதைப் போலவே, அவன் தன் உயிரைக் காத்துக்கொள்வான்.”
நீங்கள் எப்படி பதிலளிப்பீர்கள்?
◻ உண்மை கிறிஸ்தவரின் ‘அஸ்திவாரம்’ எது, அது எவ்வாறு போடப்படுகிறது?
◻ பல்வகை கட்டடப் பொருட்களிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்கிறோம்?
◻ “அக்கினி” எதை குறிக்கிறது, சிலர் ‘இழப்புக்குள்ளாக’ அது எவ்வாறு காரணமாகிறது?
◻ பைபிளைக் கற்பிப்பவர்களும் மூப்பர்களும் பெற்றோர்களும் எவ்வாறு தீக்கிரையாகாத பொருட்களால் கட்டலாம்?
[பக்கம் 9-ன் படம்]
அநேக பண்டைய நகரங்களில், தீக்கிரையாகாத கல் கட்டடங்களும் உறுதியற்ற கட்டடங்களும் அருகருகே இருந்தன