ராஜ்ய அறிவிப்பாளர் அறிக்கை
ஒரு முன்னால் எதிரி சத்தியத்தை கற்கிறார்
லைபீரியாவில் நடந்து வரும் உள்நாட்டுப் போரைக்குறித்து செய்திகளில் நிறைய கேள்விப்பட்டிருக்கிறோம். இதில் பத்தாயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர்; இன்னும் அதிகமானோர் தங்களுடைய வீடுவாசலை இழந்தனர். இவ்வளவு இன்னல்கள் மத்தியிலும் நேர்மை இருதயமுள்ளவர்கள் சத்தியத்தை ஏற்றுக்கொள்ளுகின்றனர் என்பதை பின்வரும் அனுபவம் எடுத்துக்காட்டுகிறது.
ஜேம்ஸ் பத்து வயதிலிருந்தே லூத்தரன் சர்ச்சில் போதிக்கப்பட்டார். சர்ச் செய்தித்தாளின் பதிப்பாசிரியரான பின்பு, அவர் தனது அதிகாரத்தை பயன்படுத்தி யெகோவாவின் சாட்சிகளுக்கு எதிராக அனேக கட்டுரைகளை எழுதினார். ஆனால் அவரோ சாட்சிகளை சந்தித்ததே இல்லை.
பிறகு ஜேம்ஸ் சர்ச் செய்தித்தாளின் பதிப்பாசிரியர் வேலையை விட்டுவிட்டு, வெற்றிகரமான ஒரு ஹோட்டல் முதலாளியானார். ஒரு நாள் தனது ஹோட்டலின் வரவேற்பறையில் அவர் உட்கார்ந்திருந்தார். அப்போது கண்ணியமாக உடையணிந்த இரண்டு சகோதரிகள் அவரை சந்திக்க வந்தனர். சாட்சிகள் சுத்தமாக உடை அணிந்திருந்ததால் ஜேம்ஸ் அவர்களை உள்ளே அழைத்தார். தாங்கள் வந்ததற்கான நோக்கத்தை சாட்சிகள் சொன்னவுடன், “எனக்கு பேசுவதற்கே நேரமில்லை” என மழுப்பிவிட்டார். சாட்சிகள் காவற்கோபுரம், விழித்தெழு! பத்திரிகைகளுக்கு சந்தா செய்யும்படி கேட்டனர். எப்படியோ அவர்கள் அங்கிருந்து போனால் போதும் என வேண்டாவெறுப்போடு சந்தா செய்தார். அவருடைய வீட்டுக்கு 12 மாதங்கள் ஒரு பத்திரிகைகூட தவறாமல் போய் சேர்ந்தன. பத்திரிகைகள் வந்த கவரை கூடப் பிரித்துப் பார்க்காமல் எல்லாவற்றையும் ஒரு பிளாஸ்டிக் பையில் போட்டு வைத்தார்.
உள்நாட்டு போர் தீவிரமானது. தாக்கப்படுவதற்கு முன்பாகவே தப்பியோடுவதற்கு வசதியாக வீட்டில் உள்ள முக்கியமான பொருட்களையும் பணத்தையும் ஒரு பையில் போட்டுக் கட்டிவைத்தார் ஜேம்ஸ். ஒரு நாள் காலை அவருடைய வீட்டின் கொல்லைப்புறத்தில் ஒரு குண்டு வெடித்தது. தப்பித்தோம் பிழைத்தோம் என உடனடியாக தனது பையை தூக்கிக்கொண்டு ஓடினார். உயிருக்காக தப்பியோடும் ஆயிரக்கணக்கான மக்களோடு அவரும் சேர்ந்து கொண்டார். இவர்கள் அனேக சோதனைச் சாவடிகளை கடந்து செல்ல வேண்டியிருந்தது. அங்கே அடிக்கடி அப்பாவி மக்கள் அநியாயமாய் கொள்ளையடிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டனர்.
முதல் சோதனைச் சாவடியில், இராணுவ வீரர்கள் ஜேம்ஸிடம் சில கேள்விகளை கேட்ட பிறகு பையை திறந்து காட்டும்படி சொன்னார்கள். பையை திறந்தபோதோ அவருக்கு திக்கென்றது! ஐயய்யோ, பையில் பணத்தையும் காணோம் ஒன்னையும் காணோமே என பதறிப்போனார். அதில் காவற்கோபுரம், விழித்தெழு! பத்திரிகைகள் மட்டும்தான் இருந்தன. அவசரத்தில் இந்தப் பையை மாற்றி எடுத்துவந்து விட்டார். இருப்பினும், அங்கிருந்த இராணுவ வீரர் ஒருவர் பிரிக்கப்படாத பத்திரிகைகளில் ஜேம்ஸினுடைய பெயரை பார்த்து, “ஓ, நீங்க ஒரு யெகோவாவின் சாட்சியா, நீங்க பொய் சொல்ல மாட்டிங்கன்னு எங்களுக்குத் தெரியும், உங்கள நாங்க ஒன்னும் பண்ணமாட்டோம்” என்று சொல்லிவிட்டு, தனக்காக சில பத்திரிகைகளை எடுத்துக்கொண்டு ஜேம்ஸை போகச்சொல்லி விட்டார்.
அடுத்து வந்த ஒன்பது சோதனைச் சாவடிகளிலும் இதே கதைதான். எல்லா இடங்களிலும் ஜேம்ஸ் ஒரு யெகோவாவின் சாட்சி என்று நினைத்து இராணுவ வீரர்கள் எந்த தீங்கும் செய்யாமல் அவரை அனுப்பிவைத்தனர். நல்லவேளையாக தனது பணப் பையை கொண்டு வரவில்லை என ஜேம்ஸ் நிம்மதிப் பெருமூச்சுவிட்டார். ஏனெனில் பொருட்களுக்காக கொல்லப்பட்ட மற்றவர்களின் கதியேதான் தனக்கும் நேரிட்டிருக்கும் என புரிந்துகொண்டார்.
ஜேம்ஸ் மிகவும் ஆபத்தான கடைசி சோதனைச் சாவடியை நெருங்கினார். எங்குபார்த்தாலும் பிணங்கள்! அவருக்கு வயிற்றை கலக்கியது. மனம் படபடவென்றது. அப்போதுதான் யெகோவாவைக் கூப்பிட்டார். உயிர்போகும் இந்த ஆபத்திலிருந்து கடவுள் தன்னை காப்பாற்றினால், வாழ்நாள் முழுவதும் அவருக்கு தொண்டு செய்வதாக வேண்டிக்கொண்டார்.
ஜேம்ஸ் தன்னுடைய பையை இராணுவ வீரர்களிடம் கொடுத்தார். வீரர்களோ “உங்கள மாதிரி ஆட்கள நாங்க ஒன்னும் பண்ணமாட்டோம்” என அதே பாட்டை பாடினார்கள். ஜேம்ஸை பார்த்து, “உங்கள மாதிரியே ஒருத்தர் இந்த மலையடிவாரத்தில குடியிருக்கிறார். அவரோட போய் இருங்க” என்று சொன்னார்கள். இப்போது ஜேம்ஸ் சாட்சிகளைக்குறித்த தன்னுடைய முழு அபிப்பிராயத்தையும் மாற்றிக்கொண்டார். உடனடியாக அந்த சகோதரரை சென்று சந்தித்தார். நீங்கள் பூமியில் பரதீஸில் என்றும் வாழலாம்a என்ற புத்தகத்திலிருந்து அவருக்கு பைபிள் படிப்பு ஆரம்பிக்கப்பட்டது.
சில நாட்கள் கழித்து இராணுவ தாக்குதலின் காரணமாக அந்த இடத்திலிருந்து அவர் தப்பியோடினார். இந்த தடவை என்றும் வாழலாம் புத்தகத்தை மட்டும் எடுத்துக்கொண்டு புதருக்குள் ஓடினார். பதினோறு மாதங்கள் ஜேம்ஸ் சாட்சிகளோடு தொடர்பின்றி இருந்தபோதிலும் தன்னுடைய புத்தகத்தை ஐந்து முறை படித்து முடித்தார். கடைசியாக அவர் நகரத்திற்கு திரும்பி, மீண்டுமாக சாட்சிகளோடு பைபிள் படிப்பை ஆரம்பித்து, நன்கு முன்னேறினார். சிறிது காலத்திற்கு பிறகு அவர் முழுக்காட்டுதல் பெற்றார். இப்பொழுது தன்னுடைய கிறிஸ்தவ சகோதரர்களுடன் சேர்ந்து கடவுளை விசுவாசமாக சேவித்து வருகிறார்.
[அடிக்குறிப்புகள்]
a உவாட்ச் டவர் பைபிள் அண்ட் டிராக்ட் சொஸைட்டி ஆஃப் இண்டியாவால் பிரசுரிக்கப்பட்டது.