உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • w98 11/15 பக். 10-15
  • கடவுளோடு நடப்பது—ஆரம்ப படிகள்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • கடவுளோடு நடப்பது—ஆரம்ப படிகள்
  • காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1998
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • திருத்தமான அறிவு இன்றியமையாதது
  • முக்கிய படிகள் இரண்டு—ஒப்புக்கொடுத்தல், முழுக்காட்டுதல்
  • இயேசுவின் அடிச்சுவடுகளில் நடப்பது
  • நீங்கள் விழுந்துவிடாமல் நடப்பதற்கு கடவுளை நம்பியிருங்கள்
  • நீங்கள் கடவுளோடு நடப்பீர்களா?
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2005
  • கடவுளை என்றென்றுமாக சேவிப்பதை உங்களுடைய குறிக்கோளாக்குங்கள்
    நித்திய ஜீவனுக்கு வழிநடத்துகிற அறிவு
  • ‘புறப்பட்டுப் போய் சீஷராக்கி, முழுக்காட்டுதல் கொடுங்கள்’
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2006
  • முழுக்காட்டுதலும் கடவுளோடுள்ள உங்கள் பந்தமும்
    பைபிள் உண்மையிலேயே என்ன கற்பிக்கிறது?
மேலும் பார்க்க
காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1998
w98 11/15 பக். 10-15

கடவுளோடு நடப்பது—ஆரம்ப படிகள்

“தேவனிடத்தில் சேருங்கள், அப்பொழுது அவர் உங்களிடத்தில் சேருவார்.”—யாக்கோபு 4:8.

1, 2. யெகோவாவை சேவிப்பது பக்திப் பரவசமூட்டும் ஒரு பாக்கியம் என்பதாக நீங்கள் ஏன் சொல்வீர்கள்?

அந்த மனிதன் வருஷக்கணக்காக சிறையில் கஷ்டங்களை அனுபவித்து வந்தான். அதற்கு பிறகு ஒருநாள் அந்நாட்டின் அரசனுக்கு முன்பு அழைத்துவரப்பட்டான். சம்பவங்கள் மின்னல் வேகத்தில் நடந்தேறின. திடீரென்று, அப்போது உலகிலேயே அதிக வலிமைமிக்க ஒரு பேரரசனின் சேவையில் அந்தக் கைதி சேர்த்துக்கொள்ளப்பட்டான். அந்த முன்னாள் கைதி மிகவும் பொறுப்புள்ள, அதிக மதிப்புக்குரிய பதவியில் அமர்த்தப்பட்டான். ஒரு சமயம் கால்களில் விலங்குகள் மாட்டப்பட்டிருந்த அந்தக் கைதி இப்போது ஒரு அரசனோடு கம்பீரமாக நடந்துவந்தான்! அவன்தான் யோசேப்பு!—ஆதியாகமம் 41:14, 39-43; சங்கீதம் 105:17, 18.

2 எகிப்தின் ராஜாவாகிய பார்வோனைக் காட்டிலும் மிகவும் உயர்ந்த ஒருவருக்கு சேவை செய்ய இன்று மனிதருக்கு வாய்ப்பிருக்கிறது. தமக்கு சேவைசெய்ய சர்வலோகத்திலும் உன்னதமானவர் நம் அனைவரையும் அழைக்கிறார். சர்வ வல்லமையுள்ள கடவுளாகிய யெகோவாவுக்கு சேவை செய்வதும் அவரோடு நெருக்கமான உறவை வளர்த்துக்கொள்வதும் என்னே பக்திப் பரவசமூட்டும் ஒரு பாக்கியம்! மகத்தான வல்லமை, பிரகாசம், சாந்தம், அழகு, இன்பம்—இவற்றையெல்லாம் அவரோடு சம்பந்தப்படுத்தி பைபிள் பேசுகிறது. (எசேக்கியேல் 1:26-28; வெளிப்படுத்துதல் 4:1-3) அவருடைய செயல்கள் யாவற்றிலும் மேலோங்கியிருப்பது அன்பே. (1 யோவான் 4:8) அவர் ஒருபோதும் பொய் பேசுவதில்லை. (எண்ணாகமம் 23:19) உண்மைப் பற்றுள்ளவர்களை அவர் ஒருபோதும் ஏமாற்றுவதில்லை. (சங்கீதம் 18:25) அவருடைய நீதியுள்ள கட்டளைகளுக்கு கீழ்ப்படிவதன் மூலம் நித்திய ஜீவ எதிர்பார்ப்பையும், இப்போதே மகிழ்ச்சியும் அர்த்தமும் நிறைந்த வாழ்வையும் நாம் அனுபவிக்க முடியும். (யோவான் 17:3) எந்த ஒரு மனித அரசனும் இதற்கு ஈடாக இப்பேர்ப்பட்ட ஆசீர்வாதங்களையும் சிலாக்கியங்களையும் அளிக்க முடியாது.

3. எந்த விதத்தில் நோவா மெய் ‘தேவனோடு நடந்தார்’?

3 வெகு காலத்துக்கு முன்னரே முற்பிதாவாகிய நோவா கடவுளுடைய சித்தத்துக்கும் நோக்கத்துக்கும் இசைவாக வாழ தீர்மானித்திருந்தார். “தன் காலத்தில் இருந்தவர்களுக்குள்ளே நீதிமானும் உத்தமனுமாயிருந்தான்; நோவா தேவனோடு சஞ்சரித்துக்கொண்டிருந்தான் [“நடந்துகொண்டிருந்தான்,” NW]” என அவரைப் பற்றி பைபிள் சொல்கிறது. (ஆதியாகமம் 6:9) நோவா சொல்லர்த்தமாக யெகோவாவோடு நடக்கவில்லை, ஏனென்றால் எந்த மனிதனும் ‘தேவனை ஒருக்காலும் கண்டதில்லை.’ (யோவான் 1:18) அதற்கு பதிலாக, கடவுள் தன்னிடம் செய்யச் சொன்னதையெல்லாம் செய்தார் என்ற கருத்தில் நோவா கடவுளோடு நடந்தார். யெகோவாவின் சித்தத்தைச் செய்வதற்கென்றே நோவா தன்னுடைய வாழ்க்கையை அர்ப்பணித்திருந்ததால் சர்வ வல்லமையுள்ள கடவுளோடு அன்பான, நெருக்கமான உறவை அனுபவித்து மகிழ்ந்தார். இன்று லட்சக்கணக்கானோர் நோவாவைப் போலவே யெகோவாவின் ஆலோசனைகளுக்கும் அறிவுரைகளுக்கும் இசைவாக வாழ்வதன் மூலம் ‘தேவனோடு நடந்து’ வருகிறார்கள். இந்தப் பாதையில் ஒருவர் எப்படி நடக்க ஆரம்பிக்கிறார்?

திருத்தமான அறிவு இன்றியமையாதது

4. யெகோவா தம்முடைய மக்களுக்கு எவ்வாறு கற்பிக்கிறார்?

4 யெகோவாவோடு நடந்து செல்வதற்கு முதலாவது நாம் அவரை அறிந்துகொள்ள வேண்டும். ஏசாயா தீர்க்கதரிசி இவ்வாறு முன்னுரைத்தார்: “கடைசிநாட்களில் கர்த்தருடைய ஆலயமாகிய பர்வதம் பர்வதங்களின் கொடுமுடியில் ஸ்தாபிக்கப்பட்டு, மலைகளுக்கு மேலாய் உயர்த்தப்படும்; எல்லா ஜாதிகளும் அதற்கு ஓடிவருவார்கள். திரளான ஜனங்கள் புறப்பட்டுவந்து: நாம் கர்த்தரின் பர்வதத்துக்கும், யாக்கோபின் தேவனுடைய ஆலயத்துக்கும் போவோம் வாருங்கள்; அவர் தமது வழிகளை நமக்குப் போதிப்பார், நாம் அவர் பாதைகளில் நடப்போம் என்பார்கள்; ஏனெனில் சீயோனிலிருந்து வேதமும், எருசலேமிலிருந்து கர்த்தரின் வசனமும் வெளிப்படும்.” (ஏசாயா 2:2, 3) ஆம், யாரெல்லாம் அவருடைய வழிகளில் நடக்க விரும்புகிறார்களோ அவர்களுக்கெல்லாம் யெகோவா கற்பிப்பார் என்று நாம் நம்பிக்கையோடிருக்கலாம். யெகோவா தம்முடைய வார்த்தையாகிய பைபிளை நமக்குத் தந்திருக்கிறார், அதை புரிந்துகொள்ள நமக்கு உதவியும் செய்கிறார். இப்படிப்பட்ட உதவிகளில் ஒன்றுதான் ‘உண்மையும் விவேகமுமுள்ள அடிமையின்’ ஏற்பாடு. (மத்தேயு 24:45-47, NW) பைபிள் அடிப்படையிலான பிரசுரங்கள், கிறிஸ்தவ கூட்டங்கள், இலவச வீட்டு பைபிள் படிப்பு ஏற்பாடு ஆகியவற்றின் மூலம் ஆவிக்குரிய போதனைகளை அளிப்பதற்கு யெகோவா ‘உண்மையுள்ள அடிமையை’ பயன்படுத்துகிறார். மற்றொரு உதவி, கடவுளின் பரிசுத்த ஆவி. தம்முடைய வார்த்தையைப் புரிந்துகொள்ள இதன் மூலமாகவே மக்களுக்கு உதவிசெய்கிறார்.—1 கொரிந்தியர் 2:10-16.

5. பைபிள் சத்தியம் ஏன் அதிக மதிப்புள்ளது?

5 பைபிள் சத்தியத்தைப் பெறுவதற்காக நாம் காசுபணம் செலவழிப்பதில்லை; ஆனாலும் அது மதிப்புள்ளதே. எப்படியென்றால், கடவுளுடைய வார்த்தையைப் படிக்கையில் கடவுளைப்பற்றி நாம் அறிந்துகொள்கிறோம். அதாவது: அவருடைய பெயர் என்ன, அவருடைய ஆள்தன்மை எப்படிப்பட்டது, அவருடைய நோக்கங்கள் யாவை, மனிதர்களோடு எவ்வாறு நடந்துகொள்கிறார் ஆகியவற்றைப்பற்றி நாம் கற்றறிகிறோம். வாழ்க்கையின் அடிப்படை கேள்விகளுக்கு திருப்தியான பதில்களையும் கற்றுக்கொள்கிறோம். இதோ, அவற்றில் சில: நாம் ஏன் இங்கே இருக்கிறோம்? கடவுள் ஏன் துன்பங்களை அனுமதிக்கிறார்? எதிர்காலத்தில் என்ன நடக்கப்போகிறது? நாம் ஏன் முதியோராகி மரிக்கிறோம்? மரணத்துக்குப்பின் வாழ்க்கை இருக்கிறதா? மேலும், நம்மைக் குறித்ததில் கடவுளுடைய சித்தம் என்ன என்பதை அதாவது, அவரை முழுவதுமாக பிரியப்படுத்துவதற்கு நாம் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்பதை நாம் கற்றறிகிறோம். அவர் கட்டளையிடும் காரியங்கள் நியாயமானவை; அவற்றுக்கு கீழ்ப்படிந்து வாழ்ந்தால் கோடி நன்மை கிடைக்கும் என்பதையும் நாம் கற்றுக்கொள்கிறோம். கடவுளுடைய போதனையின்றி இப்படிப்பட்ட காரியங்களை நாம் ஒருபோதும் புரிந்துகொள்ளவே முடியாது.

6. திருத்தமான பைபிள் அறிவு என்ன மாற்றங்களைச் செய்வதற்கு நமக்கு உதவிசெய்கிறது?

6 பைபிள் சத்தியம் வல்லமைவாய்ந்தது, நம்முடைய வாழ்க்கையில் மாற்றங்களைச் செய்ய தூண்டுகிறது. (எபிரெயர் 4:12) பைபிள் அறிவை பெற்றுக்கொள்வதற்கு முன்பு, “இவ்வுலகப் போக்கின்படி” மாத்திரமே நம்மால் நடக்க முடிந்தது. (எபேசியர் 2:2, பொ.மொ.) ஆனால் கடவுளுடைய வார்த்தையின் திருத்தமான அறிவு, “கர்த்தருக்குப் பிரியமுண்டாக அவருக்குப் பாத்திரராய் நடந்துகொள்”ளும்படி நமக்கு வித்தியாசமான ஒரு வழியை வகுத்திருக்கிறது. (கொலோசெயர் 1:10) சர்வலோகம் முழுவதிலும் மிகவும் உயர்ந்த ஸ்தானத்திலிருக்கும் யெகோவாவோடு நடப்பதற்கு நம்முடைய முதல் படியை எடுத்துவைப்பதில்தான் எத்தனை மகிழ்ச்சி!—லூக்கா 11:28.

முக்கிய படிகள் இரண்டு—ஒப்புக்கொடுத்தல், முழுக்காட்டுதல்

7. கடவுளுடைய வார்த்தையை நாம் படிக்கையில், மனிதருடைய தலைமையைப் பற்றிய என்ன உண்மை தெளிவாக தெரிகிறது?

7 பைபிளை அதிகமதிகம் புரிந்துகொள்ளுகையில், கடவுளுடைய வார்த்தை என்ற ஆவிக்குரிய வெளிச்சத்தில் மனித விவகாரங்களையும் நம்முடைய சொந்த வாழ்க்கையையும் ஆராய்ந்துபார்க்க ஆரம்பிப்போம். இதன் காரணமாக முக்கியமான ஒரு உண்மையை தெளிவாக தெரிந்துகொள்வோம். அந்த உண்மையை வெகு காலத்துக்கு முன்பு எரேமியா தீர்க்கதரிசி கூறினார்: “ஆண்டவரே! நான் அறிவேன்: மனிதர் செல்ல வேண்டிய வழி அவர்களின் கையில் இல்லை; நடப்பவன் காலடிப் போக்கும் அவர்களின் அதிகாரத்தில் இல்லை.” (எரேமியா 10:23, பொ.மொ.) மனிதர்களாகிய நம் அனைவருக்குமே கடவுளுடைய வழிநடத்துதல் தேவை.

8. (அ) கடவுளுக்கு ஒப்புக்கொடுப்பதற்கு மக்களை எது தூண்டுகிறது? (ஆ) ஒப்புக்கொடுத்தல் என்பது என்ன?

8 முக்கியமான இந்த உண்மையை புரிந்துகொள்வது யெகோவாவின் வழிநடத்துதலை பெற நம்மை உந்துவிக்கிறது. கடவுளிடம் நமக்கிருக்கும் அன்பு நம்முடைய வாழ்க்கையை அவருக்கு ஒப்புக்கொடுக்க தூண்டுகிறது. கடவுளிடம் ஜெபம் செய்யும்போது, அவருக்கே சேவை செய்வோம் என்றும், நம் வாழ்நாள் முழுவதும் அவருடைய வழிகளிலேயே உண்மையாய் நடப்போம் என்றும் அவரிடம் பயபக்தியோடு சொல்லும் உறுதிமொழியே ஒப்புக்கொடுத்தல். இவ்விஷயத்தில் நாம் இயேசுவின் முன்மாதிரியைப் பின்பற்றுகிறோம். அவர் தெய்வீக சித்தத்தை செய்வதற்கு திடதீர்மானத்தோடு யெகோவாவுக்கு தம்மையே அளித்தார்.—எபிரெயர் 10:7.

9. தனிநபர்கள் ஏன் யெகோவாவுக்குத் தங்களுடைய வாழ்க்கையை ஒப்புக்கொடுக்கிறார்கள்?

9 யெகோவா தமக்கு ஒப்புக்கொடுக்கும்படி யாரையும் ஒருபோதும் வற்புறுத்துவதோ கட்டாயப்படுத்துவதோ கிடையாது. (2 கொரிந்தியர் 9:7-ஐ ஒப்பிடுக.) கணநேரத்தில் ஏதோ உணர்ச்சிவசப்பட்டு தன்னுடைய வாழ்க்கையை ஒருவர் ஒப்புக்கொடுக்க வேண்டும் என்பதாகவும் கடவுள் எதிர்பார்க்கிறதில்லை. முழுக்காட்டப்படுவதற்கு முன்பாக, ஒருவர் ஏற்கெனவே ஒரு சீஷனாக இருக்கவேண்டும். அதற்கான அறிவைப் பெற்றுக்கொள்ள ஊக்கமாக முயற்சி எடுக்க வேண்டும். (மத்தேயு 28:19, 20) ‘தங்கள் சரீரங்களைப் பரிசுத்தமும் தேவனுக்குப் பிரியமுமான ஜீவபலியாக பகுத்தறியும் ஆற்றலோடு பரிசுத்த சேவைக்காக ஒப்புக்கொடுக்கும்படி [“அளிக்கும்படி,” NW]’ ஏற்கெனவே முழுக்காட்டப்பட்டிருந்தவர்களிடம் பவுல் வேண்டிக்கொண்டார். (ரோமர் 12:1) அதே பகுத்தறியும் ஆற்றலை பயன்படுத்தி நாமும் யெகோவா தேவனுக்கு ஒப்புக்கொடுக்கிறோம். இதில் என்ன உட்பட்டிருக்கிறது என்பதைக் கற்றறிந்து அந்த விஷயத்தைக் கவனமாக பகுத்தாராய்ந்த பின்னரே நாம் மனப்பூர்வமாகவும் மகிழ்ச்சியோடும் நம்முடைய வாழ்க்கையை கடவுளுக்கு ஒப்புக்கொடுக்கிறோம்.—சங்கீதம் 110:3.

10. ஒப்புக்கொடுத்தலுக்கும் முழுக்காட்டுதலுக்கும் சம்பந்தம் என்ன?

10 கடவுளுடைய வழியில் நடப்பதற்கு நம்முடைய தீர்மானத்தை தனிப்பட்ட விதமாக ஜெபத்தில் அவரிடம் தெரிவித்தப்பின்பு நாம் அடுத்த படியை எடுத்து வைக்கிறோம். அதுதான் தண்ணீர் முழுக்காட்டுதல். இதன் மூலம் நம்முடைய ஒப்புக்கொடுத்தலை யாவரறிய தெரிவிக்கிறோம். கடவுளுடைய சித்தத்தை செய்ய நாம் தீர்மானித்திருக்கிறோம் என்பதை அனைவரும் அறிந்துகொள்ளச் செய்யும் அறிவிப்பே இது. இயேசு பூமியில் தம்முடைய ஊழியத்தை ஆரம்பிக்கையில் யோவானிடம் முழுக்காட்டுதல் பெற்றார். இவ்வாறு நமக்கு ஒரு முன்மாதிரியை வைத்தார். (மத்தேயு 3:13-17) பின்னர், இயேசு தம்மைப் பின்பற்றினவர்களிடம், சீஷர்களை உண்டுபண்ணி அவர்களை முழுக்காட்டும்படி கட்டளையிட்டார். ஆகவே யெகோவாவோடு நடக்க விரும்பும் எவருக்கும் ஒப்புக்கொடுத்தலும் முழுக்காட்டுதலும் அத்தியாவசியமான படிகளாகும்.

11, 12. (அ) முழுக்காட்டுதலை ஒரு திருமணத்துக்கு எப்படி ஒப்பிடலாம்? (ஆ) யெகோவாவோடு நமக்குள்ள உறவும், கணவன் மனைவிக்கு இடையே நிலவும் உறவும் எந்த விதத்தில் சமம்?

11 ஒப்புக்கொடுத்து முழுக்காட்டப்பட்டு, இயேசு கிறிஸ்துவின் சீஷனாக மாறுவது திருமணத்திற்கு ஒப்பாயிருக்கிறது. அநேக தேசங்களில், திருமண நாளுக்கு முன்பு பல விஷயங்கள் நடக்கின்றன. ஒரு ஆணும் பெண்ணும் சந்திக்கிறார்கள், இருவரும் பழகுகிறார்கள், காதலிக்கிறார்கள். அடுத்து நடப்பது நிச்சயதார்த்தம். அதன் பிறகு திருமண வைபவம். தம்பதியர் கணவன் மனைவியாக ஒன்றாகச் சேர்ந்து வாழ தனிமையில் தாங்கள் செய்துகொண்ட தீர்மானத்தை யாவரறிய வெளிப்படுத்துவது இந்த வைபவமே. அந்த விசேஷ உறவின் ஆரம்பமே திருமணம். அந்த நாள்தான் திருமணத்தின் ஆரம்பம். முழுக்காட்டுதல் என்பதும் இதைப் போன்றதுதான். அதாவது, யெகோவாவோடு ஒப்புக்கொடுக்கப்பட்ட ஒரு உறவில் நடப்பதற்கென அர்ப்பணிக்கப்பட்ட வாழ்க்கையின் ஆரம்பத்தைக் குறிக்கிறது.

12 இதற்குச் சமமான மற்றொன்றை கவனியுங்கள். திருமண நாளுக்குப்பின்பு கணவனுக்கும் மனைவிக்குமிடையே உள்ள அன்பு மிகுதியாகி பலப்பட வேண்டும். ஒருவரிடமாக ஒருவர் அதிகமாக நெருங்கிவருவதற்கு, திருமண துணைவர்கள் இருவருமே அந்தப் பந்தத்தைக் காத்துக்கொண்டு அதை உறுதியாக்குவதற்கு தன்னலம் கருதாது பிரயாசப்பட வேண்டும். கடவுளோடு நாம் திருமண பந்தத்தில் இணைவதில்லை; ஆனால், நம்முடைய முழுக்காட்டுதலுக்குப் பின்பு யெகோவாவோடு நெருக்கமான ஒரு உறவைக் காத்துக்கொள்ள நாம் உழைக்கவேண்டும். அவருடைய சித்தத்தைச் செய்வதற்கு நாம் எடுக்கும் முயற்சிகளை அவர் கவனிக்கிறார், அதைப் பாராட்டுகிறார், நம்மிடம் நெருங்கிவருகிறார். “தேவனிடத்தில் சேருங்கள், அப்பொழுது அவர் உங்களிடத்தில் சேருவார்” என்று சீஷனாகிய யாக்கோபு எழுதினார்.—யாக்கோபு 4:8.

இயேசுவின் அடிச்சுவடுகளில் நடப்பது

13. கடவுளோடு நடப்பதில் நாம் யாருடைய முன்மாதிரியை பின்பற்ற வேண்டும்?

13 யெகோவாவோடு நடப்பதற்கு, நாம் இயேசு கிறிஸ்துவின் முன்மாதிரிக்கு இசைவாக நடக்க வேண்டும். அப்போஸ்தலன் பேதுரு இவ்விதமாக எழுதினார்: “கிறிஸ்துவும் உங்களுக்காக துன்புற்று ஒரு முன்மாதிரியை வைத்துச் சென்றுள்ளார். எனவே நீங்கள் அவருடைய அடிச்சுவடுகளை பின்பற்றுங்கள்; இதற்காகவே அழைக்கப்பட்டுள்ளீர்கள்.” (1 பேதுரு 2:21, பொ.மொ.) இயேசுவோ பரிபூரணர், நாமோ அபூரணர்; இதன் காரணமாக அவர் வைத்த முன்மாதிரியை நாம் சிறிதும் பிசகாமல் அப்படியே பின்பற்றமுடியாது. இருந்தபோதிலும் நம்மால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு சிறப்பாய் பின்பற்றும்படி யெகோவா நம்மிடம் எதிர்பார்க்கிறார். இயேசுவின் வாழ்க்கையிலும் ஊழியத்திலும் காணப்பட்ட ஐந்து அம்சங்களை ஒப்புக்கொடுத்த கிறிஸ்தவர்கள் பின்பற்ற முயல வேண்டும். அவற்றை நாம் இப்போது சிந்திக்கலாம்.

14. கடவுளுடைய வார்த்தையை அறிந்திருப்பதில் என்ன உட்பட்டிருக்கிறது?

14 இயேசு கடவுளுடைய வார்த்தையை திருத்தமாகவும் முழுமையாகவும் அறிந்திருந்தார். தம்முடைய ஊழியத்தின்போது, இயேசு அடிக்கடி எபிரெய வேதவாக்கியங்களிலிருந்து மேற்கோள் காட்டினார். (லூக்கா 4:4, 8) அந்த நாட்களிலிருந்த பொல்லாத மத தலைவர்களும்கூட வேதவாக்கியங்களை மேற்கோள் காட்டினர் என்பது என்னவோ உண்மைதான். (மத்தேயு 22:23, 24) வித்தியாசம் என்னவென்றால், இயேசு வேதவாக்கியங்களின் அர்த்தத்தை அறிந்து தம்முடைய வாழ்க்கையிலும் பின்பற்றினார். நியாயப்பிரமாணத்தின் வார்த்தைகளை திருத்தமாக அறிந்திருந்ததோடு அதன் உண்மையான கருத்தையும் புரிந்துகொண்டிருந்தார். கிறிஸ்துவின் முன்மாதிரியை நாம் பின்பற்றுகையில், நாமும் கடவுளுடைய வார்த்தையை புரிந்துகொண்டு அதன் அர்த்தத்தை, அதாவது அதன் உட்கருத்தை கிரகித்துக்கொள்வதற்கு முயல வேண்டும். அப்படி செய்தால், ‘சத்திய வசனத்தை நிதானமாய்ப் பகுத்துப் போதிப்பதற்கு’ திறமை பெற்றவர்களாகவும் கடவுளால் அங்கீகரிக்கப்பட்டவர்களாகவும் இருப்போம்.—2 தீமோத்தேயு 2:15.

15. கடவுளைப்பற்றி பேசுவதில் இயேசு எவ்வாறு முன்மாதிரி வைத்தார்?

15 கிறிஸ்து இயேசு தம்முடைய பரலோக தந்தையைப்பற்றி மற்றவர்களிடம் பேசினார். கடவுளுடைய வார்த்தையிலிருந்து இயேசு பெற்றிருந்த அறிவை தம்மிடமே வைத்துக்கொள்ளவில்லை. அவர் எங்கு சென்றாலும் யெகோவாவையும் அவருடைய நோக்கங்களையும் பற்றி மற்றவர்களிடம் பேசினார். அதனால்தான் அவருடைய விரோதிகளும்கூட அவரை “போதகரே” என்று அழைத்தனர். (மத்தேயு 12:38) இயேசு தேவாலயத்தைச் சுற்றியிருந்த பகுதிகளிலும் ஜெப ஆலயங்களிலும் பட்டணங்களிலும் கிராமப்புறங்களிலும் வெளியரங்கமாக பிரசங்கம் செய்தார். (மாற்கு 1:39; லூக்கா 8:1; யோவான் 18:20) அவர் பரிவோடும் தயவோடும் போதித்தார், தாம் உதவிசெய்த மக்களிடம் அன்பாக நடந்துகொண்டார். (மத்தேயு 4:23) இயேசுவின் முன்மாதிரியைப் பின்பற்றுகிறவர்கள், யெகோவா தேவனையும் அவருடைய மகத்தான நோக்கங்களையும் பற்றி மற்றவர்களிடம் பேசுகின்றனர்; இதற்கு அநேக வழிமுறைகளை பயன்படுத்தி எவ்விடங்களிலும் எவரிடமும் பேசுகின்றனர்.

16. யெகோவாவை வணங்கிய மற்றவர்களுடன் இயேசுவின் உறவு எந்தளவுக்கு நெருக்கமாக இருந்தது?

16 யெகோவாவை வணங்கிய மற்றவர்களிடம் இயேசுவுக்கு நெருக்கமான பிணைப்பு இருந்தது. இயேசு ஒரு சமயம் ஜனக்கூட்டத்தாரிடம் பேசுகையில், அவருடைய தாயும் அவரை விசுவாசியாத அவருடைய சகோதரர்களும் அவரோடு பேசுவதற்காக வந்தார்கள். பைபிள் பதிவு இவ்வாறு சொல்கிறது: “அப்பொழுது, ஒருவன் அவரை நோக்கி: உம்முடைய தாயாரும் உம்முடைய சகோதரரும் உம்மோடே பேச வேண்டுமென்று வெளியே நிற்கிறார்கள் என்றான். தம்மிடத்தில் இப்படிச் சொன்னவனுக்கு அவர் பிரதியுத்தரமாக: என் தாயார் யார்? என் சகோதரர் யார்? என்று சொல்லி, தம்முடைய கையைத் தமது சீஷர்களுக்கு நேரே நீட்டி: இதோ, என் தாயும் என் சகோதரரும் இவர்களே! பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்தத்தின்படி செய்கிறவன் எவனோ, அவனே எனக்குச் சகோதரனும் சகோதரியும் தாயுமாய் இருக்கிறான் என்றார்.” (மத்தேயு 12:47-50) இயேசு தம்முடைய குடும்பத்தாரை ஒதுக்கி வைத்துவிட்டார் என்பதை இது அர்த்தப்படுத்துவதில்லை, ஏனென்றால் அதைத் தொடர்ந்து நடந்த சம்பவங்கள் அதற்கு அத்தாட்சி அளிக்கின்றன. (யோவான் 19:25-27) இருந்தாலும் இயேசுவுக்கு உடன் விசுவாசிகளிடமிருந்த அன்பை இந்தப் பதிவு வலியுறுத்திக் காட்டுகிறது. அதேவிதமாகவே இன்று, கடவுளோடு நடப்பவர்கள் யெகோவாவின் மற்ற ஊழியர்களுடைய தோழமையை விரும்பி அவர்களை மிகவும் அருமையாய் நேசிக்க கற்றுக்கொள்கிறார்கள்.—1 பேதுரு 4:8.

17. பரலோக பிதாவின் சித்தத்தைச் செய்வதைக்குறித்து இயேசு எவ்வாறு உணர்ந்தார், அவரைப் போலவே நாமும் என்ன செய்யவேண்டும்?

17 கடவுளுடைய சித்தத்தைச் செய்வதன் மூலம், இயேசு தம்முடைய பரலோக தந்தையிடம் தமக்கிருந்த அன்பைக் காண்பித்தார். இயேசு எல்லாவற்றிலேயும் யெகோவாவுக்குக் கீழ்ப்படிந்திருந்தார். அவர் இவ்வாறு சொன்னார்: “நான் என்னை அனுப்பினவருடைய சித்தத்தின்படி செய்து அவருடைய கிரியையை முடிப்பதே என்னுடைய போஜனமாயிருக்கிறது.” (யோவான் 4:34) கிறிஸ்து இவ்விதமாகவும் சொல்லியிருக்கிறார்: ‘பிதாவுக்குப் பிரியமானவைகளை நான் எப்பொழுதும் செய்கிறேன்.’ (யோவான் 8:29) இயேசு தம்முடைய பரம தந்தையை வெகு அதிகமாக நேசித்தபடியால் “மரணபரியந்தம், அதாவது சிலுவையின் மரணபரியந்தமும் கீழ்ப்படிந்தவராகி, தம்மைத்தாமே தாழ்த்தினார்.” (பிலிப்பியர் 2:8) யெகோவாவோ தம் பங்கில், அதிகாரமும் கனமும் பொருந்திய தமக்கு அடுத்த ஸ்தானத்துக்கு இயேசுவை உயர்த்தி அவரை ஆசீர்வதித்தார். (பிலிப்பியர் 2:9-11) இயேசுவைப் போலவே, கடவுளுடைய கட்டளைகளைக் கைக்கொண்டு அவருடைய சித்தத்தின்படி செய்வதன் மூலம் அவரிடம் நமக்கிருக்கும் நம்முடைய அன்பை நாம் காண்பிக்கிறோம்.—1 யோவான் 5:3.

18. ஜெபத்தின் சம்பந்தமாக இயேசு வைத்த முன்மாதிரி என்ன?

18 இயேசு ஜெபசிந்தையுள்ள மனிதராக இருந்தார். முழுக்காட்டுதல் பெற்றபோது அவர் ஜெபம் செய்தார். (லூக்கா 3:21) தம்முடைய 12 அப்போஸ்தலர்களை தெரிந்தெடுப்பதற்கு முன்பு இரவு முழுவதும் ஜெபித்தார். (லூக்கா 6:12, 13) எப்படி ஜெபிப்பது என்றும் சீஷர்களுக்கு கற்றுக்கொடுத்தார். (லூக்கா 11:1-4) அவருடைய மரணத்துக்கு முந்தின இரவில் சீஷர்களோடு சேர்ந்து அவர்களுக்காக ஜெபித்தார். (யோவான் 17:1-26) இயேசுவின் வாழ்க்கையில் ஜெபத்திற்கு முக்கிய இடம் இருந்தது, அவரைப் பின்பற்றுகிறவர்களாக நம்முடைய வாழ்க்கையிலும் அதற்கு முக்கிய இடம் கொடுக்க வேண்டும். சர்வலோக பேரரசரிடம் ஜெபத்தில் பேசுவது என்னே ஒரு சிலாக்கியம்! மேலுமாக, யெகோவா ஜெபங்களுக்குப் பதிலளிக்கிறார், ஏனென்றால் யோவான் இவ்வாறு எழுதினார்: “நாம் எதையாகிலும் அவருடைய சித்தத்தின்படி கேட்டால், அவர் நமக்குச் செவிகொடுக்கிறாரென்பதே அவரைப்பற்றி நாம் கொண்டிருக்கிற தைரியம். நாம் எதைக் கேட்டாலும், அவர் நமக்குச் செவிகொடுக்கிறாரென்று நாம் அறிந்திருந்தோமானால், அவரிடத்தில் நாம் கேட்டவைகளைப் பெற்றுக்கொண்டோமென்றும் அறிந்திருக்கிறோம்.”—1 யோவான் 5:14, 15.

19. (அ) இயேசுவின் என்ன குணங்களை நாம் பின்பற்றவேண்டும்? (ஆ) இயேசுவின் வாழ்க்கையையும் ஊழியத்தையும் படிப்பதனால் என்ன வழிகளில் பயனடைகிறோம்?

19 இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கையையும் ஊழியத்தையும் கூர்ந்து ஆராய்கையில் கற்றுக்கொள்வதற்கு எவ்வளவோ விஷயங்கள் இருக்கின்றன! அவருடைய குணங்களைப்பற்றி சிந்தித்துப்பாருங்கள்: அன்பு, இரக்கம், தயவு, பலம், சமநிலை, நியாயத்தன்மை, மனத்தாழ்மை, தைரியம், சுயநலமின்மை. இயேசுவைப்பற்றி அதிகமதிகமாக தெரிந்துகொள்ளும்போது அவருக்கு உண்மையுள்ள சீஷர்களாய் மாறவேண்டும் என்ற ஆசையும் மிகுதியாகிறது. இயேசு தம்முடைய பரலோக தந்தையை பரிபூரணமாக பிரதிபலித்தார். அதன் காரணமாக, இயேசுவைப்பற்றிய அறிவு நம்மை யெகோவாவிடமும் நெருங்கிவரச் செய்கிறது. அவர் யெகோவாவிடம் அந்தளவுக்கு நெருக்கமானவராக இருந்த காரணத்தால், “என்னைக் கண்டவன் பிதாவைக் கண்டான்” என அவர் சொன்னார்.—யோவான் 14:9.

நீங்கள் விழுந்துவிடாமல் நடப்பதற்கு கடவுளை நம்பியிருங்கள்

20. யெகோவாவோடு நடப்பதில் நாம் எவ்வாறு நம்பிக்கையை பெறலாம்?

20 பிள்ளைகள் முதன்முறையாக நடக்க கற்றுக்கொள்கையில் தத்திதத்தி நடப்பார்கள். அவர்கள் எவ்வாறு நம்பிக்கையோடு நடக்க கற்றுக்கொள்கிறார்கள்? பழக்கமும் விடாமுயற்சியுமே காரணம். ஆம், யெகோவாவோடு நடப்பவர்கள் நம்பிக்கையோடும், சீராகவும் நடக்க பிரயாசப்படுகிறார்கள். இதற்கும்கூட நேரமும் விடாமுயற்சியும் தேவைப்படுகிறது. கடவுளோடு நடப்பதில் விடாமுயற்சியின் முக்கியத்துவத்தை பவுல் சுட்டிக்காட்டி இவ்வாறு எழுதினார்: “அன்றியும், சகோதரரே, நீங்கள் இன்னின்ன பிரகாரமாய் நடக்கவும், தேவனுக்குப் பிரியமாயிருக்கவும் வேண்டுமென்று, நீங்கள் எங்களால் கேட்டு ஏற்றுக்கொண்டபடியே, அதிகமதிகமாய்த் தேறும்படிக்கு, கர்த்தராகிய இயேசுவுக்குள் உங்களை வேண்டிக் கொண்டு புத்திசொல்லுகிறோம்.”—1 தெசலோனிக்கேயர் 4:1.

21. யெகோவாவோடு நடக்கும்போது என்ன ஆசீர்வாதங்களை நாம் அனுபவித்து மகிழலாம்?

21 முழுமையாக கடவுளுக்கு நம்மை அர்ப்பணித்தவர்களாக இருந்தால் அவரோடு தொடர்ந்து நடப்பதற்கு அவர் நமக்கு உதவிசெய்வார். (ஏசாயா 40:29-31) அவருடைய வழியில் நடப்பவர்களுக்கு அவர் பொழியும் ஆசீர்வாதங்களை இந்த உலகம் தரும் எதுவோடும் ஒப்பிடமுடியாது. ‘பிரயோஜனமாயிருக்கிறதை நமக்குப் போதித்து, நாம் நடக்கவேண்டிய வழியிலே நம்மை நடத்துகிறவர் அவரே. நாம் அவருடைய கற்பனைகளுக்கு செவிசாய்த்தால், அப்பொழுது நம் சமாதானம் நதியைப்போலும், நம் நீதி சமுத்திரத்தின் அலைகளைப்போலும் இருக்கும்.’ (ஏசாயா 48:17, 18) கடவுளோடு நடப்பதற்கு விடுக்கப்படும் அழைப்பை ஏற்றுக்கொண்டு அப்படி உண்மையுடன் செய்வதன்மூலம் அவரோடு என்றென்றும் சமாதானத்தை அனுபவித்து மகிழ்வோமாக.

நீங்கள் எவ்வாறு பதிலளிப்பீர்கள்?

◻ மெய்க் கடவுளோடு நடப்பது ஏன் ஒரு சிலாக்கியம்?

◻ யெகோவாவோடு நடப்பதில் படிப்பும் ஒப்புக்கொடுத்தலும் முழுக்காட்டுதலும் ஏன் முக்கியமான படிகள்?

◻ இயேசுவின் அடிச்சுவடுகளை நாம் எவ்வாறு பின்பற்றலாம்?

◻ யெகோவாவோடு நடக்கையில் விழுந்துவிடாமல் நம்மைக் காப்பார் என்பது நமக்கு எப்படித் தெரியும்?

[பக்கம் 13-ன் படங்கள்]

படிப்பு, ஒப்புக்கொடுத்தல், முழுக்காட்டுதல்—கடவுளோடு நடப்பதில் அவசியமான படிகள்

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்