உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • w98 11/15 பக். 21-24
  • மக்கபேயர் யார்?

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • மக்கபேயர் யார்?
  • காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1998
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • கிரேக்க பண்பாட்டின் எழுச்சி
  • கறைபட்டுப்போன ஆசாரியர்கள்
  • அந்தியோக்கஸின் நடவடிக்கை
  • மக்கபேயரின் பதிலடி
  • ஆலயத்தின் மீட்பு
  • கடவுள் பக்தியும் அரசியலாகிறது
  • எஸ்மோனியர்களும் அவர்கள் விட்டுச்சென்ற சொத்தும்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2001
  • பகுதி 10: பொ.ச.மு. 537 முதல் மேசியாவுக்காக இன்னும் காத்துக்கொண்டிருக்கிறார்கள்
    விழித்தெழு!—1990
  • யூத மதம்—வேதாகமம், பாரம்பரியம் மூலமாக கடவுளைத் தேடல்
    கடவுளைத் தேடி
  • எதிரும் புதிருமான இரு ராஜாக்கள்
    தானியேல் தீர்க்கதரிசனத்திற்கு செவிசாயுங்கள்!
மேலும் பார்க்க
காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1998
w98 11/15 பக். 21-24

மக்கபேயர் யார்?

மக்கபேயரின் காலம் என்பது எபிரெய வேதாகமத்தின் கடைசி புத்தகம் எழுதிமுடிக்கப்பட்டதற்கும் இயேசு கிறிஸ்துவின் வருகைக்கும் இடைப்பட்ட காலம். அநேகருக்கு இது மறைத்துவைக்கப்பட்ட கருப்புப் பெட்டியை போல இருக்கிறது. ஒரு ஆகாய விமானம் விழுந்து நொறுங்கிய பிறகு விமானத்தின் கருப்புப் பெட்டியை ஆய்வு செய்கையில் சில விவரங்கள் தெரியவருவது போலவே, மக்கபேயரின் ஆட்சிக்காலத்தை—யூத தேசத்துக்கு மாற்றத்துக்கும் மாறுதலுக்குமுரிய ஒரு காலத்தை—உற்றுநோக்குவதன் மூலம் கொஞ்சம் ஆழமான அறிவைப் பெற்றுக்கொள்ள முடியும்.

மக்கபேயர் யார்? முன்னுரைக்கப்பட்டிருந்த மேசியா வருவதற்கு முன்பாக யூதேய மதத்தில் அவர்கள் எந்தளவு செல்வாக்கு செலுத்தினர்?—தானியேல் 9:25, 26.

கிரேக்க பண்பாட்டின் எழுச்சி

மகா அலெக்சாந்தர் கிரீஸிலிருந்து இந்தியா வரையாக உள்ள எல்லா பிராந்தியங்களையும் கைப்பற்றினார் (பொ.ச.மு. 336-323). அவருடைய ஆட்சிப்பகுதி பெரிதாக இருந்ததால் கிரேக்கரின் மொழியும் பண்பாடும் வேகமாக பரவியது. அலெக்சாந்தரின் அதிகாரிகளும் இராணுவத்தினரும் உள்ளூர் பெண்களை மணந்துகொண்டு கிரேக்க மற்றும் அயல்நாட்டு பண்பாடுகள் இரண்டற கலக்க காரணமாயிருந்தனர். அலெக்சாந்தரின் மரணத்துக்குப் பின்பு அவருடைய ராஜ்யத்தை அவருடைய தளபதிகள் தங்களுக்குள் பங்கிட்டுக்கொண்டனர். எகிப்தை ஆண்ட கிரேக்க தாலமி மரபு மன்னர்களின் கட்டுப்பாட்டில் இஸ்ரேல் இருந்தது; பொ.ச.மு. இரண்டாவது நூற்றாண்டின் ஆரம்பத்தில், சீரியாவிலிருந்த கிரேக்க செலூக்கஸ் மரபில் வந்த அரச குலத்தைச் சேர்ந்த மூன்றாம் அந்தியோக்கஸ் அதைக் கைப்பற்றினான். இஸ்ரேலில் இருந்த யூதர்களை கிரேக்க ஆட்சி எவ்வாறு பாதித்தது?

வரலாற்றாசிரியர் ஒருவர் இவ்வாறு எழுதுகிறார்: “யூதர்களால், கிரேக்க பண்பாட்டில் ஊறிப்போயிருந்த அக்கம் பக்கத்தவர்களிடமிருந்து ஒதுங்கி வாழமுடியவில்லை; அதைவிட அதிகமாய், அங்குமிங்கும் சிதறி வாழ்ந்தவர்களான கிரேக்க பண்பாட்டுக்கு மாறிய தங்கள் சொந்த யூதர்களிடமிருந்தும் தங்களைத் துண்டித்துக்கொள்ள முடியவில்லை. எனவே கிரேக்க பண்பாட்டையும் கிரேக்கரின் சிந்தனைகளையும் ஏற்றுக்கொள்ளாமல் அவர்களால் இருக்கமுடியவில்லை. . . . கிரேக்க பண்பாடே அவர்களுடைய சுவாசம்!” யூதர்கள் கிரேக்க பெயர்களை வைத்துக்கொண்டனர். அவர்கள் கிரேக்கரின் பழக்கவழக்கங்களையும் நடை உடை பாவனைகளையும் வித்தியாசமான அளவுகளில் பின்பற்றத் தொடங்கினர். இப்படியாக ஒன்றர கலத்தல் அதிகமாகிக் கொண்டே வந்தது.

கறைபட்டுப்போன ஆசாரியர்கள்

யூதர்களிலே கிரேக்க செல்வாக்கினால் அதிகமாக கறைபட்டுப்போனது ஆசாரியர்களே. அவர்களில் அநேகருக்கு, கிரேக்க பண்பாட்டை ஏற்றுக்கொள்வதென்பது காலத்திற்கேற்ப யூதேய மதத்தை முன்னேற்றுவிப்பதற்கு ஒருவழியாக இருந்தது. இப்படிப்பட்ட ஒரு யூதன்தான் பிரதான ஆசாரியனாகிய மூன்றாம் ஓனியஸின் சகோதரன் யாசோன் (எபிரெயுவில் யோசுவா என்று அழைக்கப்பட்டவர்). ஓனியஸ் அந்தியோகியாவுக்குச் சென்றிருந்தபோது யாசோன் கிரேக்க அதிகாரிகளுக்கு இலஞ்சம் கொடுக்க முன்வந்தான். ஏன்? ஓனியஸின் இடத்தில் பிரதான ஆசாரியனாக தன்னை நியமிப்பதற்காக. கிரீஸ் நாட்டு ஆளுநரான அந்தியோக்கஸ் எப்பிபானஸ் (பொ.ச.மு. 175-164) உடனடியாக அதை ஏற்றுக்கொண்டான். இதற்கு முன்னால் கிரீஸ் நாட்டின் ஆளுநர்கள் யூதர்களின் பிரதான ஆசாரியத்துவத்தில் எப்போதும் தலையிட்டதில்லை, ஆனால் அந்தியோக்கஸுக்கு தன்னுடைய இராணுவ நடவடிக்கைகளுக்கு நிதி தேவைப்பட்டது. கிரேக்க மொழி, பண்பாட்டு வளர்ச்சி ஆகியவற்றிற்கு உதவக்கூடிய ஒரு யூத தலைவர் கிடைத்ததில் அவனுக்கு ஏக சந்தோஷம். யாசோனின் வேண்டுகோளுக்கு இணங்கி அந்தியோக்கஸ் எருசலேமை கிரேக்க பட்டணத்தின் (போலிஸ்) அந்தஸ்துக்கு உயர்த்தினான். இதற்கு கைம்மாறாக, யாசோன் இளம் யூதர்களும் இளம் ஆசாரியர்களும்கூட விளையாட்டுகளில் கலந்துகொள்ள உதவியாய் ஒரு உடற்பயிற்சி கூடத்தைக் கட்டினான்.

நம்பிக்கைத்துரோகத்திற்கு கைமேல் கிடைத்த பலன் நம்பிக்கைத்துரோகமே. மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, ஆசாரிய வம்சத்தில் வந்திராத மெனலேயஸ் அதைவிட அதிக இலஞ்சம் கொடுத்ததால் யாசோன் பதவியிழந்து தலைமறைவானான். அந்தியோக்கஸுக்கு பணத்தைக் கொடுப்பதற்காக மெனலேயஸ் ஆலய கருவூலத்திலிருந்து ஏராளமான பணத்தைக் கையாடினான். மூன்றாம் ஓனியஸ் (அந்தியோகியாவில் நாடுகடத்தப்பட்டிருந்தவர்) இதை வெளிப்படையாக எதிர்த்த காரணத்தால் மெனலேயஸ் அவரைக் கொலை செய்ய ஏற்பாடு செய்தான்.

அந்தியோக்கஸ் மரித்துவிட்டான் என்ற வதந்தியை யாசோன் கேள்விப்பட்டபோது மெனலேயஸிடமிருந்து பிரதான ஆசாரியன் பதவியைப் பறித்துக்கொள்வதற்காக ஆயிரம் ஆட்களோடு எருசலேமுக்குத் திரும்பி வந்தான். ஆனால் அந்தியோக்கஸ் உயிரோடுதான் இருந்தான். யாசோனின் செயலையும், கிரேக்கமயமாக்கும் கொள்கைகளுக்கு யூதர்கள் மத்தியில் எதிர்ப்பு இருந்ததையும் கேள்விப்பட்ட போது அந்தியோக்கஸ் பழிவாங்க துணிந்தான்.

அந்தியோக்கஸின் நடவடிக்கை

மக்கபேயர் என்ற புத்தகத்தில் மோஷ பர்ல்மன் இவ்வாறு எழுதுகிறார்: “பதிவுகள் தெளிவாக இதை சொல்லாவிட்டாலும், யூதர்களுக்கு மத சம்பந்தமான விஷயங்களில் சுதந்திரத்தை அனுமதித்தது ஒரு அரசியல் தவறு என்ற முடிவுக்கு அந்தியோக்கஸ் வந்ததாக தெரிகிறது. சமீபத்தில் எருசலேமில் ஏற்பட்டிருந்த கலகத்துக்குக் காரணம், முற்றிலும் மத சம்பந்தமான உள்நோக்கங்கள் அல்ல, ஆனால் யூதேயா அப்போது எகிப்துக்கு ஆதரவாக இருந்ததே என்பதாக அவன் நம்பினான். இந்த அரசியல் கருத்துக்களை ஆபத்தான முறையில் அவர்கள் வெளிப்படுத்தியுள்ளனர், ஏனென்றால் அவருடைய ஆட்சிக்குட்பட்டவர்களில் யூதர்கள் மாத்திரமே மத சம்பந்தமாக பிரிந்திருக்க விரும்பியவர்கள், இவர்களே அதிக சுதந்திரத்தை அனுபவிக்கிறவர்கள். . . . இதற்கு முடிவு கட்டப்படும் என்று அவன் தீர்மானித்தான்.”

இதற்குப் பின் நடந்ததை இஸ்ரேல் நாட்டு அரசியல் மேதையும் அறிஞருமான அபா எபன் சுருக்கமாக கூறுகிறார்: “வேகமாக அடுத்தடுத்து [பொ.ச.மு.] 168 மற்றும் 167 ஆண்டுகளின்போது, யூதர்கள் கொன்று குவிக்கப்பட்டார்கள், ஆலயம் கொள்ளையடிக்கப்பட்டது, யூத மதம் தடைசெய்யப்பட்டது. ஓய்வு நாள் ஆசரிப்புக்கும் விருத்தசேதனத்துக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டது. டிசம்பர் 167-ல் அந்தியோக்கஸின் ஆணைப்படி ஆலயத்திற்குள்ளாகவே சீயஸுக்கு ஒரு பலிபீடம் கட்டப்பட்டது; யூதர்கள் அசுத்தமாக கருதிய பன்றி இறைச்சியை கிரேக்க கடவுளுக்கு பலியாக செலுத்தும்படி யூதர்கள் கட்டாயப்படுத்தப்பட்டார்கள். இது அவமதிப்பின் உச்சக்கட்டமாக இருந்தது.” இந்தக் காலப்பகுதியின்போது, மெனலேயஸும் கிரேக்க பண்பாட்டில் இரண்டற கலந்துவிட்ட மற்ற யூதர்களும் இப்போது அசுத்தமாகிவிட்ட ஆலயத்தில் தொடர்ந்து தங்கள் பதவிகளில் இருந்து ஆலய பணிகளை செய்து வந்தார்கள்.

கிரேக்க பண்பாட்டை அநேக யூதர்கள் ஏற்றுக்கொண்ட போதிலும் ஹசிடிம்—கடவுள் பற்றுள்ளவர்கள்—என்று தங்களை அழைத்துக்கொண்ட ஒரு புதிய தொகுதியினர் மோசேயின் நியாயப்பிரமாணத்தை அதிக கண்டிப்புடன் கடைப்பிடிக்க வேண்டும் என்று உற்சாகப்படுத்தினர். கிரேக்க பண்பாட்டில் ஒன்றிவிட்ட ஆசாரியர்கள்மேல் வெறுப்புற்ற பொது மக்கள் அதிகமதிகமாக ஹசிடிமை ஆதரிக்க ஆரம்பித்தனர். நாடு முழுவதிலுமிருந்த யூதர்கள் வேற்று இனத்தாரின் பழக்கவழக்கங்களுக்கும் பலிகளுக்கும் இணங்கிப்போகவேண்டும் அல்லது இறந்துபோகவேண்டும் என்று வற்புறுத்தப்பட்டபோது அநேகர் உயிர்த்தியாகம் செய்தனர். ஒத்துப்போவதைவிட செத்துமடிவதைத் தெரிந்துகொண்ட ஆண்கள், பெண்கள், பிள்ளைகளைப் பற்றிய அநேக பதிவுகள் தள்ளுபடியாகமங்களின் மக்கபே ஆகமத்தில் காணப்படுகின்றன.

மக்கபேயரின் பதிலடி

அந்தியோக்கஸ் எடுத்த கடுமையான நடவடிக்கை, தங்களுடைய மதத்துக்காக போராடும்படி அநேக யூதர்களைத் தூண்டிவிட்டது. எருசலேமுக்கு வடமேற்கில் லாட் என்ற நவீன நகரத்திற்கு அருகே மோதின் மத்தத்தியாஸ் என்ற பெயர் கொண்ட ஒரு ஆசாரியன் பட்டணத்தின் முக்கிய பகுதிக்கு வரும்படி அழைக்கப்பட்டார். மத்தத்தியாஸ் உள்ளூர்வாசிகள் மத்தியில் செல்வாக்குள்ள மனிதராக இருந்தார். ராஜாவின் பிரதிநிதி, மத்தத்தியாஸுடைய உயிர் காக்கும்படிக்கும் மற்ற மக்களுக்கு ஒரு முன்மாதிரியாய் இருக்கும்படிக்கும் அவரை புறமத பலியில் கலந்துகொள்ள வைக்க பிரயாசப்பட்டார். மத்தத்தியாஸ் மறுத்தபோது மற்றொரு யூதன் உடனடியாக இணக்கம் தெரிவித்து பலியிட முன்வந்தான். அதைப் பார்த்து கோபமடைந்த மத்தத்தியாஸ் ஆயுதமொன்றை அவசரமாக எடுத்து அவனைக் கொன்றுபோட்டார். வயதான இந்த மனிதன் செய்த காரியத்தைப் பார்த்துத் திகைத்துப்போன கிரேக்க போர்வீரர்கள் ஆடிப்போய்விட்டார்கள். சில நொடிகளுக்குள் மத்தத்தியாஸ் கிரேக்க அதிகாரியையும் கொன்றுவிட்டார். மத்தத்தியாஸின் ஐந்து மைந்தர்களும் பட்டணத்திலிருந்த மக்களும் சேர்ந்து கிரேக்க இராணுவத்தின் கொட்டத்தை அடக்கிவிட்டார்கள்.

மத்தத்தியாஸ் இவ்விதமாக கோஷம் எழுப்பினார்: ‘உடன்படிக்கைக் கட்டளைக்குப் பிரமாணிக்கமுள்ளவன் எவனோ அவன் என் பின்னால் வரக்கடவன்.’ பழிவாங்க கிரேக்கர் வருவதற்குமுன் அவரும் அவருடைய பிள்ளைகளும் மலைகளுக்கு ஓடிப்போனார்கள். அவர்கள் செய்த காரியங்களைப் பற்றிய செய்தி காட்டுத்தீ போல பரவினபோது (பல ஹசிடிம்கள் உட்பட) யூதர்கள் அவர்களைச் சேர்ந்துகொண்டார்கள்.

மத்தத்தியாஸ் தன் புதல்வன் யூதாஸை இராணுவத்துக்கு தலைவனாக்கினார். யூதாஸ் தன் இராணுவ துணிவின் காரணமாக “சுத்தி” என்று பொருள்படும் மக்கபே என்று அழைக்கப்பட்டான். மத்தத்தியாஸும் அவருடைய புதல்வர்களும் எஸ்மோனியர் என்று அழைக்கப்பட்டனர். எஸ்மோன் என்பது ஒரு பட்டணத்தின் பெயரிலிருந்து அல்லது ஒரு முற்பிதாவின் பெயரிலிருந்து வந்திருக்கலாம். (யோசுவா 15:27) கலகத்தின்போது யூதாஸ் மக்கபேயுஸ் முக்கியத்துவம் வாய்ந்த நபராக இருந்தபடியால் முழுக் குடும்பமும் மக்கபேயர் என்று அழைக்கப்படலானார்கள்.

ஆலயத்தின் மீட்பு

கலகம் ஏற்பட்ட முதலாம் ஆண்டில், மத்தத்தியாஸும் அவருடைய புதல்வர்களும் ஒரு சிறிய படையை அமைத்தார்கள். பலதடவை கிரேக்கரின் இராணுவம் ஹசிடிம் போராளிகளின் தொகுதிகளை ஓய்வுநாளில் தாக்கியது. இவர்கள் தங்களைத் தற்காத்துக்கொள்ள முடிந்தபோதிலும் ஓய்வுநாள் அனுசரிப்பை மீறவில்லை. இதன் காரணமாக இவர்கள் கொன்று குவிக்கப்பட்டனர். இப்போது மதசம்பந்தமாக அதிகாரமுடையவராக கருதப்பட்ட மத்தத்தியாஸ் ஓய்வுநாளில் யூதர்கள் தங்களைத் தற்காத்துக் கொள்வதை அனுமதிக்கும் சட்டத்தை ஏற்படுத்தினார். இந்த ஆணை, கலகத்துக்கு புதிய உத்வேகத்தை அளித்தது மட்டுமல்லாமல் மாறிவரும் சூழ்நிலைமைகளுக்கேற்ப யூதர்களின் சட்டத்தை மாற்றி அமைப்பதற்கு மதத் தலைவர்களுக்கு அனுமதி அளிப்பதற்கு ஒரு மாதிரியாக அமைந்தது. இந்தப் போக்கினைப் பற்றி தால்முட் இவ்வாறு கூறுகிறது: “பல ஓய்வுநாட்களை பரிசுத்தப்படுத்துவதற்காக அவர்கள் ஒரு ஓய்வுநாளை மீறட்டும்.”—யோமா 85ஆ.

வயதான தன் தகப்பனின் மரணத்துக்குப் பிறகு, யூதாஸ் மக்கபேயுஸ் ஒருமனதாக தலைவனாக ஏற்றுக்கொள்ளப்பட்டான். நேருக்கு நேர் மோதி தன்னுடைய விரோதியை தோற்கடித்துவிட முடியாது என்பதை அறிந்தவனாய் அவன் நவீன நாளைய கொரில்லா போர் முறையைப் போல புதிய முறைகளைக் கையாண்டான். அந்தியோக்கஸின் படைகள் வழக்கம் போல தங்களைத் தற்காத்துக்கொள்ளமுடியாத இடங்களில் அவன் தாக்கினான். இவ்விதமாக தொடர்ச்சியாய் யூதாஸ் தன்னுடையதைவிட வலிமையான படைகளை தோற்கடிப்பதில் வெற்றி பெற்றான்.

உட்பூசல்கள் எழும்பியதாலும், ரோமரின் கை மேலோங்கியதாலும், யூதர்-எதிர்ப்பு சட்டங்களை அமல்படுத்துவதில் செலூக்கஸ் பேரரசின் ஆட்சியாளர்களுக்கு ஆர்வம் குன்றியது. யூதாஸ் எருசலேமின் நுழைவாயில் வரையாகச் சென்று தாக்குவதற்கு இது வழிவகுத்தது. பொ.ச.மு. 165 டிசம்பரில், (அல்லது ஒருவேளை பொ.ச.மு. 164) அவனும் அவனுடைய படையினரும் சேர்ந்து ஆலயத்தைக் கைப்பற்றி, அதன் பாத்திரங்களைச் சுத்திகரித்து அதை மறுபடியும் பிரதிஷ்டை செய்தார்கள்; இந்த ஆலயத்தின் தூய்மை கெடுக்கப்பட்டு சரியாக மூன்று ஆண்டுகள் கழித்து இது மறுபிரதிஷ்டை செய்யப்பட்டது. யூதர்கள் இந்தச் சம்பவத்தை ஆண்டுதோறும் ஹனுக்கா என்ற பிரதிஷ்டை பண்டிகையாக கொண்டாடி வருகிறார்கள்.

கடவுள் பக்தியும் அரசியலாகிறது

கலகத்தின் நோக்கம் கைகூடிவிட்டது. யூதேய மதத்திற்கு விதிக்கப்பட்ட தடைகள் நீக்கப்பட்டுவிட்டன. ஆலயத்தில் வணக்கமும் பலி செலுத்துவதும் மீண்டும் தொடங்கின. திருப்தியடைந்தவர்களாக யூதாஸ் மக்கபேயுஸின் படையிலிருந்த ஹசிடிம் தங்கள் வீடுகளுக்குத் திரும்பினர். ஆனால் யூதாஸுக்கு வேறு எண்ணங்கள் இருந்தன. அவனிடம் நன்கு பயிற்றுவிக்கப்பட்ட படை இருந்தது, ஆகவே தன்னாட்சியுரிமையுடைய ஒரு யூத மாநிலத்தை ஏன் ஸ்தாபிக்கக்கூடாது என்ற எண்ணம் எழுந்தது. கலகத்தைத் தூண்டிவிட்ட மத சம்பந்தமான காரணங்களுக்குப் பதிலாக இப்போது அரசியல் நோக்கங்கள் தலைதூக்கின. ஆகவே போராட்டம் நீடித்தது.

செலூக்கஸ் மன்னர்களின் ஆதிக்கத்தை எதிர்த்து போராடுவதற்கு யூதாஸ் மக்கபேயுஸ் ரோமோடு ஒப்பந்தம் செய்துகொண்டான். பொ.ச.மு. 160-ல் அவன் ஒரு யுத்தத்தில் கொல்லப்பட்ட போதிலும் அவனுடைய சகோதரர்கள் தொடர்ந்து போர்புரிந்தனர். யூதாஸின் சகோதரன் யோனத்தான், செலூக்கஸ் மன்னர்களின் ஆட்சியில் இருந்துகொண்டே யூதேயாவில் தான் பிரதான ஆசாரியனும் ஆட்சியாளனுமாய் நியமிக்கப்படும்படி தந்திரமாக செயல்பட்டான். சீரியரின் ஒரு சூழ்ச்சியில் யோனத்தான் ஏமாற்றப்பட்டு, பிடிக்கப்பட்டு, கொல்லப்பட்டபோது அவனுடைய சகோதரன் சீமோன்—மக்கபேயுஸ் சகோதரர்களில் கடைசியானவன்—தலைவனாகிவிட்டான். சீமோனின் ஆட்சியின்போது, செலூக்கஸ் மன்னர்களின் ஆட்சி (பொ.ச.மு. 141) நீக்கப்பட்டது. சீமோன் ரோமோடு ஒப்பந்தத்தை புதுப்பித்துக்கொண்டான், யூத தலைவர்களும் அவனை ஆட்சியாளனாகவும் பிரதான ஆசாரியனாகவும் ஏற்றுக்கொண்டுவிட்டனர். இவ்விதமாக மக்கபேயரின் கைகளில் எஸ்மோனியரின் அரசர்குலம் நிலைநாட்டப்பட்டது.

மக்கபேயர், மேசியா வருவதற்கு முன்பே ஆலயத்தில் வணக்கத்தைத் திரும்ப நிலைநாட்டிவிட்டார்கள். (ஒப்பிடுக: யோவான் 1:41, 42; 2:13-17.) கிரேக்க பண்பாட்டோடு ஒன்றிப்போய்விட்ட ஆசாரியர்களின் செயல்களினால் ஆசாரியத்துவத்திலிருந்த நம்பிக்கை குலைக்கப்பட்டவிதமாகவே எஸ்மோனியரில் அது இன்னும் அதிகமாக குலைந்துபோனது. ஆம், உண்மையுள்ள தாவீது ராஜாவின் வம்சத்தில் வராத, அரசியல் நோக்குடன் ஆட்சிசெய்த ஆசாரியர்களின் ஆட்சியால் யூத ஜனங்களுக்கு உண்மையான ஆசீர்வாதம் கிடைக்கவில்லை.—2 சாமுவேல் 7:16; சங்கீதம் 89:3, 4, 35, 36.

[பக்கம் 21-ன் படம்]

யூதாஸ் மக்கபேயுஸுவின் தகப்பன் மத்தத்தியாஸ் இவ்வாறு கோஷம் எழுப்பினார்: ‘உடன்படிக்கைக் கட்டளைக்குப் பிரமாணிக்கமுள்ளவன் எவனோ அவன் என் பின்னால் வரக்கடவன்’

[படத்திற்கான நன்றி]

யூத அகதிகளிடம் மத்தத்தியாஸ் வேண்டுகோள் விடுக்கிறார் /The Doré Bible Illustrations/Dover Publications

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்