வாய்வழிச் சட்டம்—ஏன் எழுத்துருவானது?
முதல் நூற்றாண்டில் வாழ்ந்த பெருவாரியான யூதர்கள் ஏன் இயேசுவை மேசியாவாக ஏற்றுக்கொள்ளவில்லை? கண்கண்ட சாட்சியின் பதில் இதோ: “அவர் தேவாலயத்தில் வந்து, உபதேசம் பண்ணுகையில், பிரதான ஆசாரியரும் ஜனத்தின் மூப்பரும் அவரிடத்தில் வந்து: நீர் எந்த அதிகாரத்தினால் இவைகளைச் செய்கிறீர்? இந்த அதிகாரத்தை உமக்குக் கொடுத்தவர் யார்? என்று கேட்டார்கள்.” (மத்தேயு 21:23) அவர்கள் பார்வையில், எல்லாம் வல்ல கடவுள் யூத தேசத்துக்கு டோராவை (சட்டம்) கொடுத்திருக்கிறார்; அது குறிப்பிட்ட மனிதருக்கு கடவுளிடமிருந்து அதிகாரத்தைப் பெற்றுத் தந்தது. இயேசுவுக்கு அத்தகைய அதிகாரம் இருந்ததா?
இயேசு டோராவை உயர்வாய் மதித்தார். அது உண்மையில் யாருக்கு அதிகாரமளித்திருந்ததோ அவர்களையும் மதித்தார். (மத்தேயு 5:17-20; லூக்கா 5:14; 17:14) கடவுளுடைய சட்டத்தை மீறி நடந்த மனிதர்களை அவர் அடிக்கடி கண்டித்தார். (மத்தேயு 15:3-9; 23:2-28) அத்தகைய மனிதர்கள், வாய்வழிச் சட்டம் என அழைக்கப்பட்ட பாரம்பரியங்களைப் பின்பற்றினார்கள். ஆனால் இயேசுவோ அதன் அதிகாரத்தை ஏற்றுக்கொள்ள மறுத்தார். அதனால், அநேகர் அவரை மேசியாவாக ஏற்றுக்கொள்ளவில்லை. தங்கள் மத்தியில் அதிகாரம் செலுத்தும் ஆட்களின் பாரம்பரியங்களை ஆதரிக்கும் ஒருவரே கடவுளால் அனுப்பப்பட்டவர் என அவர்கள் நம்பினர்.
இந்த வாய்வழிச் சட்டம் எங்கிருந்து வந்தது? நியாயப்பிரமாணத்திற்கு இணையாக இதற்கும் அதிகாரம் இருப்பதாய் யூதர்கள் ஏன் கருதினர்? அது வாய்வழியாக வந்த பாரம்பரியமாக இருக்கையில், ஏன் காலப்போக்கில் எழுத்துருவைப் பெற்றது?
பாரம்பரியங்கள் எங்கிருந்து தோன்றின?
சீனாய் மலையில், பொ.ச.மு. 1513-ல் இஸ்ரவேலர்கள் யெகோவா தேவனோடு ஒரு உடன்படிக்கை உறவுக்குள் வந்தனர். மோசேயின் மூலமாக அந்த உடன்படிக்கையின் சட்டங்களைப் பெற்றனர். (யாத்திராகமம் 24:3) இஸ்ரவேலர், இந்த சட்டங்களைப் பின்பற்றுவதன் மூலம் ‘தங்கள் தேவனாகிய யெகோவா பரிசுத்தராய் இருப்பதுபோல தாங்களும் பரிசுத்தராய் இருக்க’ முடியும். (லேவியராகமம் 11:44) நியாயப்பிரமாண உடன்படிக்கையில், நியமிக்கப்பட்ட ஆசாரியரால் செலுத்தப்பட்ட பலிகளும் யெகோவாவின் வணக்கத்தில் அடங்கின. வணக்கத்திற்கான முக்கிய ஸ்தலம் ஒன்று தேவைப்பட்டது. அதுவே எருசலேமின் தேவாலயம்.—உபாகமம் 12:5-7; 2 நாளாகமம் 6:4-6.
ஒரு தேசமாக யெகோவாவை வணங்குவதற்கு வேண்டிய எல்லா விவரங்களும் மோசேயின் சட்டத்தில் இருந்தன. இருந்தாலும் சில விஷயங்கள் விலாவாரியாக விளக்கப்படவில்லை. உதாரணமாக, ஓய்வுநாளில் வேலை செய்யக்கூடாதென்பது நியாயப்பிரமாண சட்டம். ஆனால் வேலைக்கும் மற்ற செயல்களில் ஈடுபடுவதற்கும் இடையே திட்டவட்டமான எல்லையை அது வகுக்கவில்லை.—யாத்திராகமம் 20:10.
எல்லா விதமான நுணுக்கமான விவரங்களும் தேவை என யெகோவா நினைத்திருந்தால், மனதில் எழும்பக்கூடிய கேள்விகள் அனைத்திற்கும் விவரமான சட்டங்களைக் கொடுத்திருப்பார். ஆனால் மனிதர்களை மனசாட்சியோடு படைத்திருக்கிறார். அதனால் அவர்கள் தம்மை சேவிக்கையில், தாம் கொடுத்திருக்கும் சட்டங்களை மீறாத வகையில் ஓரளவுக்கு வளைந்து கொடுத்துக்கொள்ள அனுமதித்தார். வழக்குகளை நியாயம் விசாரிக்க ஆசாரியர்கள், லேவியர்கள், நியாயாதிபதிகள் ஆகியோருக்கு நியாயப்பிரமாணம் அதிகாரமளித்தது. (உபாகமம் 17:8-11) வழக்குகள் அதிகரித்தபோது, முன்பு தீர்க்கப்பட்ட வழக்குகள் உதாரணங்களாக அமைந்தன. சந்தேகமில்லாமல், அவற்றில் சில, ஒரு சந்ததியிலிருந்து இன்னொன்றுக்கு கடத்தப்பட்டன. யெகோவாவின் ஆலயத்தில் ஆசாரிய ஊழியத்திற்கான வழிமுறைகளையும்கூட அப்பா மகனுக்கு கற்பித்தார். யூத தேசத்தின் ஆயுள் அதிகரிக்க அதிகரிக்க பாரம்பரியங்களும் குவிய ஆரம்பித்தன.
மோசேயின் நியாயப்பிரமாணத்தை மையமாய் வைத்தே இஸ்ரவேலரின் வணக்கம் அமைந்திருந்தது. யாத்திராகமம் 24:3, 4 இவ்வாறு குறிப்பிடுகிறது: ‘மோசே வந்து, கர்த்தருடைய வார்த்தைகள் யாவையும் நியாயங்கள் யாவையும் ஜனங்களுக்கு அறிவித்தான்; அப்பொழுது ஜனங்கள் எல்லாரும் ஏகசத்தமாய்: கர்த்தர் அருளின எல்லா வார்த்தைகளின்படியும் செய்வோம் என்று பிரதியுத்தரம் சொன்னார்கள். மோசே கர்த்தருடைய வார்த்தைகளையெல்லாம் எழுதிவைத்தான்.’ இந்த எழுதப்பட்ட கட்டளைகளை கடைப்பிடிப்பது சம்பந்தமாகத்தான் கடவுள் இஸ்ரவேலர்களுடன் உடன்படிக்கை செய்தார். (யாத்திராகமம் 34:27) உண்மையில், வாய்வழிச் சட்டம் இருப்பதை பைபிள் எங்குமே குறிப்பிடுவதில்லை.
“இந்த அதிகாரத்தை உமக்கு கொடுத்தவன் யார்?”
மோசேயின் நியாயப்பிரமாணம் மத சம்பந்தமான அதிகாரத்தையும் கற்பிக்கும் வேலையையும் ஆசாரியர்களான ஆரோனின் வம்சத்தாரிடமே முதலில் ஒப்படைத்தது. (லேவியராகமம் 10:8-11; உபாகமம் 24:8; 2 நாளாகமம் 26:16-20; மல்கியா 2:7) இருந்தாலும், நூற்றுக்கணக்கான வருடங்கள் செல்லச் செல்ல, சில ஆசாரியர்கள் உண்மையற்றவர்களாகவும் கறைபட்டவர்களாகவும் ஆனார்கள். (1 சாமுவேல் 2:12-17, 22-29; எரேமியா 5:31; மல்கியா 2:8, 9) கிரேக்க அதிகாரம் கொடிகட்டிப் பறந்த காலத்தில் அநேக ஆசாரியர்கள் மத சம்பந்தமான விஷயங்களில் விட்டுக் கொடுத்தார்கள். பொ.ச.மு. இரண்டாம் நூற்றாண்டில், ஆசாரியத்துவத்தை அவமதித்த பரிசேயர் என்ற புதிய தொகுதி யூத மதத்துக்குள்ளிருந்தே முளைத்தது. இத்தொகுதி, பாமரனும்கூட தன்னை ஆசாரியனைப்போல பரிசுத்தமுள்ளவனாகக் கருதத்தக்க பாரம்பரியங்களை ஏற்படுத்தியது. ஏராளமானோருக்கு இந்தப் பாரம்பரியங்கள் பிடித்துப்போனது. ஆனால் அவை நியாயப்பிரமாண சட்டத்தோடு ஏற்றுக்கொள்ளப்பட முடியாதவாறு கூட்டப்பட்ட சட்டங்களாக இருந்தன.—உபாகமம் 4:2; 12:32.
பரிசேயர் நியாயப்பிரமாணத்தின் புதிய அறிஞர்களாக ஆனார்கள். ஆசாரியர்கள் செய்யத் தவறியதாக தாங்கள் கருதிய வேலையை செய்யத் துவங்கினார்கள். மோசேயின் நியாயப்பிரமாணம் அவர்களுக்கு அதிகாரம் அளிக்கவில்லை. எனவே தங்கள் கருத்துக்களை ஆதரிப்பதாக தோன்றிய, ஊர்பேர் தெரியாத புத்தகங்களிலிருந்தும் மற்ற வழிமுறைகளிலிருந்தும் வேத வார்த்தைகளை விளக்குவதற்கு புதிய முறையை உருவாக்கினார்கள்.a இவ்வாறாக அவர்கள் இத்தகைய பாரம்பரியங்களின் முதன்மை பாதுகாவலர்களும் ஆதரவாளர்களுமாகி, இஸ்ரவேலில் அதிகாரம் செலுத்துவதற்கென புதிய அடித்தளத்தை இட்டார்கள். பொ.ச. முதல் நூற்றாண்டில் பரிசேய தொகுதி யூதேயாவை ஆட்டுவிக்கும் சக்தியாக ஆகிவிட்டிருந்தது.
பரிசேயர்கள் அநேக பாரம்பரியங்களை புகுத்துவதற்காக, நடப்பிலிருந்த வாய்மொழி பாரம்பரியங்களை தொகுத்தனர்; அவற்றுக்கு வேதப்பூர்வமான தாத்பரியங்களை தேடினபோதோ, தங்களுக்கு கூடுதலான அதிகாரம் தேவை என உணர்ந்தனர். இத்தகைய பாரம்பரியங்கள் எவ்வாறு தோன்றின என்பதற்கான புதிய “கதை” உருவானது. ரபீக்கள் இவ்வாறு போதிக்கத் துவங்கினர்: “மோசே டோராவை சீனாயில் பெற்றார்; அதை யோசுவாவிடம் ஒப்படைத்தார்; யோசுவா அதை மூப்பர்களிடம் அளித்தார்; மூப்பர்கள் தீர்க்கதரிசிகளிடம் கொடுத்தனர்; தீர்க்கதரிசிகள் பேரவையைச் சேர்ந்த மனிதர்களிடம் ஒப்படைத்தனர்.”—அவட் 1:1, தி மிஷ்னா.
“மோசே டோராவை பெற்றார்” என சொல்வதன்மூலம் எழுதப்பட்ட சட்டங்களை மட்டுமே ரபீக்கள் குறிப்பிடவில்லை. ஆனால் அவற்றில் வாய்வழி பாரம்பரியங்களையும் சேர்த்துக்கொண்டனர். மனிதனால் உருவாக்கப்பட்டு முன்னேற்றுவிக்கப்பட்ட இத்தகைய பாரம்பரியங்கள் சீனாயில் கடவுள் மோசேக்கு கொடுத்தவைதாம் என அவர்கள் உரிமைபாராட்டினர். இடைவெளியை நிரப்பும் வேலையை மனிதர் செய்யும்படி கடவுள் அனுமதிக்கவில்லை, ஆனால் எழுதப்பட்ட சட்டம் சொல்லத் தவறியதை வாய்வழியாக அவரே வரையறுத்துச் சொல்லிவிட்டார் என அவர்கள் நியாயம் கற்பித்தனர். மோசே, இத்தனை காலங்களாக ஆசாரியர்களுக்கு அல்ல, மற்ற தலைவர்களுக்கே இந்த வாய்வழிச் சட்டத்தை கடத்தினார் என்பதே அவர்களுடைய கருத்து. அதிகாரத்திற்கான இந்த “துண்டிக்க முடியாத” சங்கிலியின் இயற்கை சுதந்தரவாளிகளாக பரிசேயர் தங்களை மார்தட்டிக் கொண்டனர்.
நியாயப்பிரமாணத்தின் முடிவு—புதிய தீர்வு
இயேசு ஆலயத்தின் அழிவை முன்னறிவித்திருந்தார். கடவுள் அவருக்கு அளித்திருந்த அதிகாரத்தை யூத மதத் தலைவர்கள் கேள்விக்குள்ளாக்கினர். (மத்தேயு 23:37–24:2) பொ.ச. 70-ல் ஆலயம் ரோமர்களால் தரைமட்டமாக்கப்பட்டது. இதனால் மோசேயின் நியாயப்பிரமாணத்தின்படி பலிகளும் செலுத்த முடியவில்லை, ஆசாரிய சேவைகளையும் செய்ய முடியவில்லை. இயேசுவின் மீட்கும் கிரய பலியின் அடிப்படையில் கடவுள் புதிய உடன்படிக்கையை ஏற்படுத்தினார். (லூக்கா 22:20) மோசேயின் நியாயப்பிரமாண உடன்படிக்கை முடிவுக்கு வந்தது.—எபிரெயர் 8:7-13.
இயேசுவே மேசியா என்பதற்கான அத்தாட்சிகளாக இவற்றைக் கருதுவதற்கு பதிலாக, பரிசேயர் புதிய தீர்வை தேடிச் சென்றனர். ஏற்கெனவே ஆசாரியத்துவத்தின் அதிகாரத்தில் பெரும்பாலானவற்றை அவர்கள் தட்டிப் பறித்திருந்தனர். ஆலயம் அழிக்கப்பட்டதால், இன்னும் ஒருபடி மேலே சென்றனர். ஜாப்னேவிலிருந்த ரபீக்களின் பாடசாலை சீரமைக்கப்பட்ட ஆலோசனை சங்கத்தின்—யூத உயர் நீதிமன்றத்தின்—மையமானது. ஜாப்னேயில் யோஹனன் பென் சாக்கை, இரண்டாம் கமாலியேல் ஆகியோரின் தலைமையின்கீழ் யூத மதம் முற்றிலுமாக மாற்றியமைக்கப்பட்டது. ஆலயத்தில் ஆசாரியர்களின் மேற்பார்வையில் செய்யப்பட்ட வணக்கம், ஜெப ஆலயத்தில் நடந்த ஆராதனைகளால் மாற்றீடு செய்யப்பட்டது. முக்கியமாக பாவநிவாரண பலி நாளன்று, பலிகளை செலுத்துவதற்கு பதிலாக ஜெபங்கள் செய்யப்பட்டன. சீனாயில் மோசேக்கு கொடுக்கப்பட்ட வாய்வழி சட்டங்கள் இதை ஏற்கெனவே முன்னறிந்து, இதற்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தது என பரிசேயர் விவாதித்தனர்.
ரபீக்களுக்கான பாடசாலைகள் அதிக முக்கியத்துவம் பெற்றன. கடுமையான விவாதங்கள், மனப்பாடம் செய்தல், வாய்வழிச் சட்டத்தை பொருத்துதல் ஆகியவையே அவற்றின் முக்கிய பாடத்திட்டமாக இருந்தன. முன்பெல்லாம் வாய்வழிச் சட்டங்களுக்கான அடிப்படை அம்சம், வேத வசனங்களை விளக்குவதோடு அதாவது மித்ரஷோடு இணைக்கப்பட்டிருந்தது. இப்போதோ, நாளுக்கொரு வீதமாக தோன்றி குவிந்து கொண்டிருந்த பாரம்பரியங்களை கற்பித்து, அவற்றை தனித்தனியாக ஒழுங்குபடுத்த வேண்டியிருந்தது. வாய்வழிச் சட்டங்களின் விதிகள் ஒவ்வொன்றும் சிறியதாக சுருக்கப்பட்டன. எளிதில் மனப்பாடம் செய்யத்தக்க வாக்கியங்களாக மாற்றப்பட்டன. பெரும்பாலும் அவற்றுக்கென்று ஒரு ராகமும் இசைக்கப்பட்டது.
வாய்வழிச் சட்டங்களை ஏன் எழுத வேண்டும்?
ரபீக்களுக்கான பாடசாலைகள் அதிகரித்ததாலும், அவர்களின் விதிகள் பெருகிக்கொண்டே போனதாலும் புதிய பிரச்சினை உருவானது. ரபீனிய அறிஞர் ஏடன் ஸ்டைன்சால்ட்ஸ் விளக்குகிறார்: “ஒவ்வொரு ஆசிரியருக்கென்றும் ஒரு கற்பிக்கும் முறை இருந்தது. அவர் தான் கற்றுக்கொடுத்த வாய்வழிக் கட்டளைகளை தனக்கே உரித்தான பிரத்தியேக பாணியில் வாக்கியமாக அமைத்தார். . . . தன் ஆசிரியர் கற்றுக் கொடுத்தவற்றில் மட்டுமே பழக்கமாயிருந்தது மாணவருக்கு போதுமானதாக இருக்கவில்லை. எனவே மற்ற ஆசிரியர்கள் கற்றுக்கொடுத்தவற்றையும்கூட மாணவர் தெரிந்துகொள்ள வேண்டிய கட்டாயம் இருந்தது. . . . ‘அறிவுப் பெருக்கம்’ இருந்த காரணத்தால் மாணவர் பேரளவான விஷயங்களை மனப்பாடம் செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டார்.” இங்கொன்றும் அங்கொன்றுமாக சீரற்றிருந்த விஷயங்கள் கடல்போல் நிறைந்திருந்தன; ஆகவே மாணவரின் மண்டையே வெடித்துவிடும் அளவுக்கு நிறைய விஷயங்களை ஞாபகத்தில் வைத்துக்கொள்ள வேண்டியதாயிற்று.
பொ.ச. இரண்டாம் நூற்றாண்டில் பார் கோக்பாவின் தலைமையில் யூதர்கள் ரோமுக்கு எதிராக கலகம் செய்தனர்; இதனால் ரபீனிய அறிஞர்கள் கடுமையாக துன்புறுத்தப்பட்டனர். பார் கோக்பாவின் ஆதரவாளரான முதன்மை ரபீ ஆக்கிவாவும் பிரதான அறிஞர்கள் அநேகரும் கொல்லப்பட்டனர். துன்புறுத்துதல் மீண்டும் தலைதூக்கினதால், வாய்வழிச் சட்டங்களே அமலில் இல்லாமல் போய்விடுமோ என ரபீக்கள் பயந்தனர். பாரம்பரியங்கள் ஆசிரியரிடமிருந்து மாணவருக்கு வாய்வழியாக கடத்தப்படுவதே சிறந்தது என அவர்கள் நம்பிவந்தனர். ஆனால் இப்போதோ சூழ்நிலைகளில் மாற்றம் ஏற்பட்டது. எனவே குருக்களின் இந்த போதனைகளை பாதுகாப்பதற்காக அவற்றை சீர்படுத்தி அமைப்பதில் அதிகளவான முயற்சி தேவைப்பட்டது. இல்லையென்றால் அவை அறவே மறக்கப்பட்டுவிடும்.
சிறிது காலத்தில் ரோமோடு நல்லுறவு ஏற்பட்டது. அப்போது பொ.ச. இரண்டாம் நூற்றாண்டின் பிந்தைய பகுதியிலும் மூன்றாம் நூற்றாண்டின் ஆரம்பத்திலும் முக்கிய ரபீயாக திகழ்ந்த ஜூடா ஹ-நசி என்பவர் ஏராளமான அறிஞர்களை கூட்டிச் சேர்த்தார். எண்ணிக்கையின்றி குவிந்து கிடந்த வாய்வழி பாரம்பரியங்களை ஒன்றுசேர்த்து ஆறு பிரிவுகள் அடங்கிய ஒழுங்கமைக்கப்பட்ட தொகுதிகளாக மாற்றினார். இவை ஒவ்வொன்றும் 63 சிறிய உட்பிரிவுகளாக பிரிக்கப்பட்டன. இதுவே மிஷ்னா என அழைக்கப்படலாயிற்று. வாய்வழிச் சட்ட அதிகாரி எபிராயீம் ஊர்பாக் இவ்வாறு கருத்து தெரிவிக்கிறார்: “டோராவைத் தவிர எந்த புத்தகத்திற்கும் வழங்கப்படாத அங்கீகாரமும் அதிகாரமும் . . . மிஷ்னாவுக்கு வழங்கப்பட்டது.” மேசியா புறக்கணிக்கப்பட்டிருந்தார், ஆலயமோ சிதைந்த நிலையில் கிடக்கவே, மிஷ்னா என்ற வடிவில் எழுதி பாதுகாக்கப்பட்ட வாய்வழிச் சட்டங்களின்மூலம் யூத மதத்தின் புதிய சகாப்தம் ஆரம்பித்தது.
[அடிக்குறிப்புகள்]
a வேத வசனங்களை விளக்கும் இத்தகைய முறைக்கு மித்ரஷ் என்று பெயர்.
[பக்கம் 26-ன் படம்]
ஏன் அநேகர் இயேசுவின் அதிகாரத்தை ஏற்க மறுத்தனர்?