“சிரியா பாலைவனத்து கார்கூந்தல் ராணி”
அவள் ஒரு கார்வண்ண அழகி, அவளது பற்களோ பிரகாசிக்கும் முத்துக்கள், சொக்க வைக்கும் அழகே அவளது ஜொலிக்கும் கருவிழிகள். அவள் கல்வியில் மேதை; அவள் வாயைத் திறந்தால் மடை திறந்தாற்போல் பல்வேறு மொழிகளின் பிரவாகம். வாள் வீச்சிலும் அவள் ராணியே; அழகிலோ கிளியோபாட்ராதான், அறிவிலோ ஒரு படி மேல். அவளது நாட்களில் ஆதிக்கம் செலுத்திய உலக வல்லரசை எதிர்க்கத் துணிந்ததால் ஒரு பைபிள் தீர்க்கதரிசனத்தை நிறைவேற்றினாள். அவளது மறைவிற்கு பின் எழுத்தாளர்கள் அவளைப் புகழ்ந்தனர். ஓவியர்கள் அவளை ஒப்பிடமுடியாத அழகியாக படம் வரைந்தனர். 19-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஒரு கவிஞன் அவளை, “சிரியா பாலைவனத்து கார்கூந்தல் ராணி” என்பதாக கவி பாடினான். இவ்விதமெல்லாம் வர்ணிக்கப்பட்ட அந்தப் பெண் யார்? அவள்தான் சிரியாவில் இருந்த பல்மீரா நகரத்தின் ராணி, ஸெனோபியா.
ஸெனோபியா எவ்வாறு புகழின் உச்சியை அடைந்தாள்? அவள் ஆட்சி பீடத்தில் ஏறுவதற்கு வழி நடத்திய அரசியல் சம்பவங்கள் யாவை? அவளது குணத்தைப் பற்றி என்ன சொல்லலாம்? இந்த ராணி எந்தத் தீர்க்கதரிசனத்தை நிறைவேற்றினாள்? முதலாவதாக, இந்த நாடகம் அரங்கேறிய சுற்றுச் சூழலை நாம் கலந்தாலோசிக்கலாம்.
பாலைவன ஓரத்தில் அமைந்த பட்டணம்
லெபனான் மலைச்சரிவுகளின் சமவெளியில், சிரியா பாலைவனத்தின் வடக்குக் கோடியில், டமாஸ்கஸ் பட்டணத்திலிருந்து வடகிழக்கே சுமார் 210 கிலோமீட்டர் தொலைவில்தான் ஸெனோபியாவின் நகரமான பல்மீரா அமைந்திருந்தது. மேற்கே மத்தியதரைக் கடலுக்கும் கிழக்கே யூஃப்ரடீஸ் நதிக்கும் மத்தியில் இந்தப் பாலைவனச்சோலை அமைந்திருந்தது. ராஜாவாகிய சாலொமோன் அந்த இடத்தை தத்மோர் என்று அழைத்திருக்கலாம். அந்த இடம் அவருடைய ராஜ்யத்திற்கு இரண்டு காரணங்களால் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது. முதலாவதாக அவரது ராஜ்யத்தின் வடக்குப் பிராந்தியத்தினை பாதுகாப்பதற்கு ஒரு பாதுகாப்புப்படையை அங்கே நிறுவினார்; இரண்டாவதாக பாலைவன பிராந்தியத்தில் நகர் விட்டு நகர் செல்லும் பயணிகளின் குழுக்கள் இந்நகரைக் கடந்துதான் சென்றனர். அதனால்தான் சாலொமோன், “பாலைவனத்தில் இருந்த தத்மோரை திரும்பவும் கட்டினார்.”—2 நாளாகமம் 8:4, NW.
சாலொமோனின் ஆட்சியைத் தொடர்ந்து வந்த ஆயிரம் ஆண்டுகளின் சரித்திரத்தில், தத்மோரைப் பற்றி எந்தக் குறிப்பும் இல்லை. பொ.ச.மு. 64-ல்தான் சிரியா, ரோம பேரரசின் தொலைவில் உள்ள சிறு படைத்தள பிராந்தியமாக மாறியது. தத்மோர் என்ற இடம் பல்மீராவாகத்தான் இருக்க வேண்டும் என்ற நம்முடைய கணிப்பு சரியாக இருந்தால் அது அந்தச் சமயத்தில்தான் பிரபலமானது. “ரோமப் பேரரசைப் பொறுத்தவரை, பொருளாதாரம் மற்றும் இராணுவத்திற்கு பல்மீரா முக்கியத்துவம் வாய்ந்த இடம்,” என்று பல்மீராவும் அதன் பேரரசும்—ரோமுக்கு எதிராக ஸெனோபியாவின் கலகம் என்ற ஆங்கில புத்தகத்தில் ரிச்சர்ட் ஸ்டோன்மென் குறிப்பிடுகிறார். கண்ணுக்கெட்டிய தூரமெல்லாம் பனை மரங்கள் சூழ நின்ற இந்த நகரம், ரோமையும் மெஸப்பொத்தாமியாவையும் பின்னர் அங்கிருந்து கிழக்கத்திய நாடுகளையும் இணைக்கும் முக்கியமான வியாபார மார்க்கத்தில் அமைந்திருந்தது. இதன் வழியாகத்தான் பண்டைய உலகின் வாணிக செல்வம் கடந்து சென்றது. கிழக்கிந்திய பிரதேசங்களிலிருந்து வாசனை திரவியங்கள், சீனாவிலிருந்து பட்டு, பெர்சியா, கீழ் மெசொப்பொத்தாமியா, மத்தியதரைப் பிரதேசங்களிலிருந்து மற்ற பொருட்கள் இதன் வழியாகவே சென்றன. ரோமுக்கோ இந்தப் பொருட்களை இறக்குமதி செய்தே ஆகவேண்டிய நிலை.
இராணுவ மொழியில் குறிப்பிடவேண்டுமென்றால் சிரியா, அடிக்கடி போரிடும் எதிரிகளாக இருந்த ரோமப் பேரரசிற்கும் பெர்சியாவிற்கும் இடையே நடுநிலையில் அமைந்திருந்தது என்று சொல்லலாம். நம்முடைய பொது சகாப்த வருடங்களின் முதல் 250 ஆண்டுகளின்போது, யூஃப்ரடீஸ் நதி கிழக்கிலிருந்த எதிரியிடமிருந்து ரோமப் பேரரசை பிரித்து வைத்திருந்தது. யூஃப்ரடீஸ் நதியில் அமைந்திருந்த டுராயூரொபஸ் நகரத்தின் மேற்கே உள்ள பாலைவனத்தைத் தாண்டினால் பல்மீரா நகருக்கு வந்துவிடலாம். இவ்வளவு முக்கியமான இடத்தில் இது அமைந்திருந்ததால் ரோமப் பேரரசர்களான ஹேட்ரியன், வேலரியன் போன்றோர் பல்மீராவிற்கு விஜயம் செய்தனர். ஹேட்ரியன் அதன் சிற்பக்கலை செழிக்க உதவினார்; ஏராளமான நன்கொடைகளும் வழங்கினார். வேலரியன் பல்மீராவில் இருந்த ஓர் உயர்குடிமகனை ரோமப் பேரரசின் பிரதிநிதியாக பொ.ச. 258-ல் நியமித்தார். அவருடைய பெயர் ஆடிநேதஸ், இவர்தான் ஸெனோபியாவின் கணவன். இவருக்கு இப்படிப்பட்ட பதவியை பேரரசன் பரிசாக அளிப்பதற்கான காரணம், இவர் பெர்சியாவிற்கு எதிராக இராணுவ நடவடிக்கையில் ஈடுபட்டு ரோமப் பேரரசின் எல்லையை மெஸெப்பத்தோமியா வரையாக விரிவாக்கினார். இவர் இப்படிப்பட்ட நிலைக்கு உயருவதற்கு முக்கிய காரணம் ஸெனோபியாதான். “ஆடிநேதஸ் இப்படிப்பட்ட உயர்ந்த நிலைக்கு வருவதற்கு அவளுடைய [ஸெனோபியா] புத்திசாலித்தனமும் மனவலிமையுமே காரணம்” என்பதாக சரித்திர ஆசிரியன் எட்வர்ட் கிப்பான் எழுதினார்.
அச்சமயத்தில் பெர்சியாவின் ராஜாவாகிய ஸேபோர் ரோமப் பேரரசை போருக்கு அழைக்க முடிவு செய்தான். இதன் மூலம் தன்னுடைய ஆட்சியை முன்பு பெர்சியாவின் பாகமாக இருந்த எல்லா பிராந்தியங்களிலும் அமைக்க நினைத்தான். அச்சந்தரும் வல்லமை மிக்க ராணுவத்துடன் அவன் மேற்கே சென்று ரோமப் பேரரசைக் காப்பதற்காக ராணுவப்படைகள் நிறுவப்பட்டிருந்த நிஸபஸ், காரி (ஹரான்) நகரங்களை கைப்பற்றினான். அதோடு சிரியா மற்றும் சிலிசியாவின் வடக்கு பகுதிகளை நாசமாக்க முன்னேறினான். எதிரிகளை எதிர்த்துப் போரிட வேண்டும் என்று பேரரசன் வேலரியன் படைகளுக்கு தானே தலைமை ஏற்று வந்தார், ஆயினும் பெர்சியருக்கு எதிரான போரில் தோல்வியுற்று அவர்களால் சிறைபிடிக்கப்பட்டார்.
பெர்சிய ராஜாவிற்கு விலை உயர்ந்த வெகுமதிகளையும் சமாதானத்தூது அனுப்பவும் இதுதான் சரியான நேரம் என்று நினைத்து ஆடிநேதஸ் தூது அனுப்பினார். அதற்கு ராஜாவாகிய ஸேபோர், அந்த வெகுமதிகளை யூஃப்ரடீஸ் நதியில் தூக்கி எறிந்து விட்டு, ஆடிநேதஸ் தன்னிடம் வந்து சிறை பிடிக்கப்பட்டவனைப்போல் கெஞ்ச வேண்டும் என்பதாக அகந்தையுடன் கூறினான். இதற்கு பதிலுரைப்பவர்களாக பல்மீரா மக்கள், பாலைவன நாடோடிகளையும் ரோமப்படையில் எஞ்சியவர்ளையும் சேர்த்து ஒரு படையை உருவாக்கினர். அந்தப் படை திரும்பிச் செல்லும் பெர்சியர்களைக் சூறையாட ஆரம்பித்தது. ஸேபோரின் படைகள் போரிட்டதால் மிகவும் களைப்பாக இருந்தனர்; கொள்ளையிட்டப் பொருட்களும் அவர்களுக்கு சுமையாக இருந்தது. அந்தச் சமயத்தில், திடீரென்று தாக்கிவிட்டு ஓடிவிடும் பாலைவன வீரர்களின் தாக்குதல் முறைகளை அவர்களால் தாக்குப்பிடிக்க முடியவில்லை; எதிர்க்க வழியின்றி அவர்கள் ஓடவேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது.
வேலரியனின் குமாரன் கேலியனஸ், அவரையடுத்து ராஜாவானார். அவர், ஸேபோரை எதிர்த்து வெற்றி பெற்றதை பாராட்டுபவராய் ஆடிநேதஸுக்கு, காரெக்டோர் டொடியுஸ் ஆரியன்டிஸ் (கிழக்கு பிராந்தியம் முழுவதற்கும் ஆளுனர்) என்ற பட்டத்தை அளித்தார். அதற்குபின் ஆடிநேதஸ் தன்னை “ராஜாதி ராஜா” என்பதாக அழைத்துக் கொண்டார்.
ஸெனோபியாவின் பேரரசை நிறுவும் முயற்சி
பொ.ச. 267-ல், ஆடிநேதஸ் ஆட்சி மிகச் சிறப்பாக உச்சத்தில் இருந்த சமயத்தில் அவரும் அவருடைய பட்டத்து இளவரசனும் கொல்லப்பட்டனர்; பழிதீர்க்க காத்திருந்த ஓர் உறவினன் கொன்றதாக நம்பப்படுகிறது. ஸெனோபியாவின் பிள்ளை வயதில் சிறியவனாக இருந்ததால் அவள் தன் கணவருடைய பாகத்தை ஏற்று அரியணையில் அமர்ந்தாள். பேரழகு, எதையும் செய்து முடிக்கும் ஆர்வம், நிர்வாகம் செய்வதில் தனித்திறமை, இறந்துபோன தன் கணவனுடன் இராணுவ நடவடிக்கைகளில் ஈடுபட்ட அனுபவம், அநேக மொழிகளைப் பேசும் திறமை—இவ்வளவும் அவளிடம் ஒருசேர அமைந்தமையால் தன் ஜனங்களின் மதிப்பையும் ஆதரவையும் பெற்றாள். அராபிய நாடோடி இனத்தவரிடம் இப்படிப்பட்ட மதிப்பைப் பெறுவதென்பது அவ்வளவு லேசான காரியம் அல்ல. ஸெனோபியாவிற்கு கற்றுக்கொள்ளும் விருப்பம் மிக அதிகம் இருந்தமையால் தன்னைச் சுற்றி அறிஞர்களை வைத்துக்கொண்டாள். தத்துவஞானியாகவும் பேச்சாளராகவும் விளங்கிய கேஸியஸ் லாங்கினஸ் அவர்களில் ஒருவர். “உயிருள்ள நூல்நிலையம், நடக்கும் அருங்காட்சியகம்” என்று அவரைப் புகழ்ந்ததாக சொல்லப்படுகிறது. “ஆடிநேதஸ் இறந்து ஐந்து ஆண்டுகளுக்குள் . . . ஸெனோபியா தன் ஜனங்களிடம் தன்னை கிழக்கத்திய ராணி என்பதாக நன்றாக நிலைநிறுத்திக்கொண்டாள்” என்பதாக எழுத்தாளர் ஸ்டோன்மென் குறிப்பிடுகிறார்.
ஸெனோபியாவின் ராஜ்யத்திற்கு ஒரு பக்கத்தில் பெர்சியா; அதைத்தான் அவளும் அவள் கணவனும் போரிட்டு முடமாக்கியிருந்தார்கள். மறுபக்கத்திலோ மெதுவாக மூழ்கிக்கொண்டிருக்கும் ரோமப் பேரரசு. அச்சமயத்தில் ரோமப் பேரரசில் இருந்த நிலைமைகளைப் பற்றி சரித்திர ஆசிரியன் ஜே. எம். ராபர்ட்ஸ் இவ்விதம் சொல்கிறார்: “மூன்றாம் நூற்றாண்டு . . . ரோமப் பேரரசிற்கு திகிலூட்டுவதாகவே இருந்தது. பேரரசின் கிழக்கு மற்றும் மேற்கு எல்லைகளில் பயங்கர பிரச்சினைகள். இது போதாது என்று உள்நாட்டுப் போர், விவாதத்திற்கு உரிய வாரிசு பிரச்சினை போன்றவை நாட்டை உலுக்கின. இருபத்தி இரண்டு பேரரசர்கள் (உரிமைபாராட்டியவர்கள் நீங்கலாக) வந்ததும் தெரியவில்லை போனதும் தெரியவில்லை.” இது இவ்வாறு இருக்க மறுபக்கத்தில் சிரியாவின் ராணி தன்னை அசைக்க முடியாத மகாராணியாக தன் பிராந்தியத்தில் நிலைநாட்டிக்கொண்டாள். இதைக் குறித்து ஸ்டோன்மென் இவ்விதம் குறிப்பிடுகிறார்: “இந்த இரண்டு பேரரசுகளிலும் [பெர்சியன், ரோமன்] இருந்த சூழ்நிலையை தனக்கு சாதகமாக்கிக் கொள்ளும் எதிர்பார்ப்பில் அவள் ஒரு மூன்றாம் பேரரசை நிறுவுவதற்கு, அதாவது இவளது பேரரசு மற்ற இரண்டையும் ஆதிக்கம் செலுத்தும் என்ற வாஞ்சை கொண்டாள்.”
காத்திருந்த ஸெனோபியாவிற்கு தன் கனவை நனவாக்கும் சந்தர்ப்பம் பொ.ச. 269-ல் வந்தது. அச்சமயம் ரோமப் பேரரசை எதிர்த்து, தனக்குத்தான் ஆளுவதற்கு உரிமை இருப்பதாக உரிமை பாராட்டிய ஒருவன் எகிப்தில் தோன்றினான். உடனடியாக ஸெனோபியாவின் இராணுவம் எகிப்தின் மீது படை எடுத்தது; எதிர்த்தவன் கொல்லப்பட்டான், அந்த நாடு ஸெனோபியாவின் கைவசமானது. தன்னை எகிப்தின் ராணி என்பதாக அவள் அறிவித்து, தன் பெயரில் நாணயங்களை முத்திரையிட்டாள். இப்போதோ அவளது ராஜ்யம் நைல் நதி தொடங்கி யூஃப்ரடீஸ் நதி வரை பரந்து விரிந்தது. அவளுடைய வாழ்நாளின் இந்தப் பகுதியில்தான் பைபிளின் தீர்க்கதரிசனத்தை நிறைவேற்றும் நிலைக்கு வந்தாள். தானியேலால் கூறப்பட்ட பைபிள் தீர்க்கதரிசனத்தின்படி “தென்திசை ராஜா” என்ற ஸ்தானத்தை எய்தினாள்; ஏனெனில் அவளது ராஜ்யம் தானியேலின் தாயகத்திற்கு தெற்கில் இருந்த பகுதியை ஆதிக்கம் செலுத்தியது. (தானியேல் 11:25, 26) அவள் அச்சமயத்தில் ஆசியா மைனரில் கிட்டத்தட்ட எல்லா பகுதிகளையும் கைப்பற்றினாள்.
ஸெனோபியா தன் தலைநகரான பல்மீராவை நன்றாக பலப்படுத்தி அழகுபடுத்தினாள். அவ்வளவு நயமாக அதை செய்ததால் அது அப்போதிருந்த பெரிய ரோம நகரங்களுக்கு சமமாக வளர்ந்தது. அதின் மக்கட்தொகையை மதிப்பிட்டுப் பார்த்தால் அது 1,50,000 என்ற எண்ணிக்கையையும் தாண்டியது. அரசுக்கு சொந்தமான அருமையான கட்டிடங்கள், கோயில்கள், பூங்காக்கள், தூண்கள், நினைவுச்சின்னங்கள் அந்நகரத்தில் நிறைந்திருந்தன. அந்த நகரத்தை சுற்றியிருந்த சுவரின் சுற்றளவு 21 கிலோமீட்டர் என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன். கொரிந்திய பாணியில் கட்டப்பட்ட 15 மீட்டருக்கும் அதிக உயரமான வரிசையான கிட்டத்தட்ட 1500 தூண்களாலான மண்டபங்கள் முக்கிய வீதியில் அமைந்திருந்தன. அந்த நகரத்தில் புகழ் பெற்ற வீரர்கள், மற்றும் பணக்கார கொடையாளர்களின் சிலைகளும் அவர்களுடைய மார்பளவு சிலைகளும் ஏராளமாக இருந்தன. பொ.ச. 271-ல் ஸெனோபியா தன்னுடைய சிலையையும் இறந்துபோன தன் கணவனின் சிலையையும் அங்கே நிறுவினாள். அக்காலத்தில் பல்மீரா நகரம் பாலைவனத்தின் ஓரத்தில் ஒரு வைரத்தைப்போல் ஜொலித்தது.
பல்மீராவில் இருந்த சூரியக் கடவுளின் கோயில் மிக அழகானது; அந்த நகரத்தில் இருந்த மதங்களை அந்த வணக்கம் ஆதிக்கம் செலுத்தியிருக்கும் என்பதில் சந்தேகமில்லை. ஸெனோபியாவும்கூட சூரிய வணக்கத்தோடு சம்பந்தப்பட்ட ஒரு தெய்வத்தை வணங்கியிருக்க வேண்டும். மூன்றாம் நூற்றாண்டில் இருந்த சிரியாவில் அநேக மதங்கள் இருந்தன. ஸெனோபியா ஆட்சி செலுத்திய காலத்தில் அவளது ராஜ்யத்தில் கிறிஸ்தவர்கள் என்று உரிமை பாராட்டியவர்கள், யூதர்கள், ஜோதிடர்கள், சூரியன் சந்திரனை வணங்குபவர்கள் இருந்தனர். அவளுடைய ஆளுகையில் இருந்தவர்களின் வணக்கமுறையைப் பற்றி அவள் என்ன நினைத்தாள்? ஸ்டோன்மென் அதைப் பற்றி இவ்வாறு குறிப்பிடுகிறார்: “தன் ஜனங்களுக்கு பொருத்தமானது என்று தோன்றிய எந்த பாரம்பரியத்தையும் ஒரு ஞானமான ஆட்சியாளன் வேண்டாம் என்று நிராகரித்து விடமாட்டான். . . . தெய்வங்களே . . . பல்மீராவை ஆசீர்வதிப்பதற்காக அணிவகுத்து நின்றன என்ற நம்பிக்கை இருந்தது.” ஸெனோபியா வேற்று மதங்களை ஆதரித்துக் கொள்ளும் குணமுடையவளாக இருந்திருக்க வேண்டும். உண்மையில் “தெய்வங்கள் பல்மீராவின் பக்கம்” அணிவகுத்து நின்றனவா? பல்மீராவிற்கும் அதன் “புத்திசாலி ராணிக்கும்” அதிவிரைவில் காத்திருந்தது என்ன?
“தன் இருதயத்தை” ஸெனோபியாவிற்கு எதிராக திருப்பிய பேரரசன்
பொ.ச. 270-ல் ஆரெலியன் ரோமின் சக்ரவர்த்தியானார். அவருடைய படைகள் வடக்கே அதிக தொல்லையளித்த அன்னியர்களை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தன. இச்சமயத்தில், ஆரெலியன் தானியேலின் தீர்க்கதரிசனத்தில் சொல்லப்பட்ட “வடதிசை ராஜாவை” பிரதிநித்துவம் செய்தார். இந்த அரசன் பொ.ச. 271-ல் ‘தன் வல்லமையையும் இருதயத்தையும் தென்திசை ராஜாவுக்கு எதிராக திருப்பினான்.’ தென்திசை ராஜாவை பிரதிநித்துவம் செய்தது வேறு யாருமல்ல—ஸெனோபியாதான். (தானியேல் 11:25 a, NW) ஆரெலியன் தன் இராணுவத்தின் ஒரு பகுதியை நேரடியாக எகிப்திற்கு அனுப்பிவிட்டு அவர் ஆசியா மைனர் வழியாக கிழக்கே பிரதான இராணுவத்துடன் எகிப்தை நோக்கி முன்னேறினார்.
ஸெனோபியாவின் தலைமையில் இருந்த ஆட்சிதான் தென்திசை ராஜா—அது ஆரெலியனுக்கு எதிராக போரிட வேண்டும் என்பதாக ‘கொந்தளித்து’ இரண்டு இராணுவத் தலைவர்களான ஸாப்டாஸ், சாபாயி என்பவர்களது தலைமையில் ‘வலிமை மிக்க பெரும் படையோடு வந்து’ போரிட்டது. (தானியேல் 11:25ஆ பொ.மொ) யுத்தத்தில் ஆரெலியன் எகிப்தைக் கைப்பற்றினார்; அதன்பின் தன் படைகளை விரைவாக ஆசியா மைனருக்கு எதிராகவும் பின்னர் சிரியாவிற்கு எதிராகவும் திருப்பினார். அவரை எதிர்த்துப் போரிட்ட ஸெனோபியா, எமஸா (இப்போது ஹாம்ஸ்) என்ற இடத்தில் தோல்வியைத் தழுவினாள்; உடனடியாக அவள் பல்மீராவிற்கு விரைந்தோடினாள்.
ஆரெலியன் பல்மீராவை முற்றுகையிட்டபோது, தனக்கு உதவி கிடைக்கும் என்று எதிர்பார்த்து அவள் தன் மகனுடன் பெர்சியாவை நோக்கி ஓடினாள். ஆனால் யூஃப்ரடீஸ் நதிக்கு அருகே அவளை ரோமர்கள் சிறைபிடித்தனர். பொ.ச. 272-ல் பல்மீரா சரணடைந்தது. ஆரெலியன் பல்மீரா பட்டணத்து ஜனங்களிடம் மிகவும் பெருந்தன்மையுடன் நடந்து கொண்டார். அவர்களிடமிருந்து ஏராளமான கொள்ளை பொருட்களை மட்டும் வசூலித்தார்; அதில் சூரியக்கடவுளின் கோயிலிலிருந்து எடுக்கப்பட்ட சிலையும் அடங்கும். வேறு எதுவும் செய்யாமல் ரோமிற்கு திரும்பி சென்றார். ரோமப் பேரரசன் ஸெனோபியாவை கொல்லவில்லை. அவர் ரோம் நகர வீதியில் பொ.ச. 274-ல் வெற்றி வாகை சூடி ஊர்வலமாக வந்தபோது ஸெனோபியாவை பிரதான காட்சி பொருளாக ரோம் நகரின் பிரதான வீதியில் நடக்க வைத்தார். அதன் பின் அவள் ஒரு ரோம வீரனை மணந்து தன் வாழ்நாட்களை அங்கேயே கழித்தாள்.
அழகிய பாலைவன நகரத்தின் அழிவு
ஆரெலியன் பல்மீராவை கைப்பற்றிய சில மாதங்களில், அவர் அங்கு அமைத்திருந்த ரோம பாதுகாப்பு படையினரை பல்மீரா நகரத்தின் மக்கள் படுகொலை செய்தனர். இப்படிப்பட்ட கலகத்தை ஆரெலியன் கேள்விப்பட்டவுடன் தன் இராணுவத்தை பல்மீராவுக்கு திரும்பவும் அனுப்பினார். ஆனால் இந்த முறை அந்நகரத்தின் ஜனங்கள் மீது, அந்த இராணுவம் பயங்கர பழிவாங்கும் வெறியுடன் செயல்பட்டது. ஈவிரக்கமற்ற இராணுவக் கொலை வெறியில் தப்பியவர்கள் அடிமைகளாக இழுத்து செல்லப்பட்டனர். அகந்தையுடன் இருந்த நகரம் பாழாக்கப்பட்டு மறுபடியும் சரி செய்ய முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டது. ஆகவே, ஆரவாரம் மிக்க தலைநகராக இருந்த நகரம் மீண்டும் “பாலைவனத்தில் இருந்த தத்மோர்” என்ற தன் பழைய நிலையை எய்தியது.
ஸெனோபியா ரோமிற்கு விரோதமாக போரிட்டபோது, அவளை அறியாமலேயே “தென்திசை ராஜா”வாகவும், பேரரசனாகிய ஆரெலியன் தன்னையறியாமலேயே “வடதிசை ராஜா”வாகவும் பைபிளில் குறிப்பிட்ட தீர்க்கதரிசனத்தின் ஒரு பாகத்தை நிறைவேற்றினர். இந்தத் தீர்க்கதரிசனம் யெகோவாவின் தீர்க்கதரிசியால் அவர்கள் வாழ்ந்த காலத்திலிருந்து கிட்டத்தட்ட 800 ஆண்டுகளுக்கு முன்பு மிகத்துல்லியமாக பதிவு செய்யப்பட்டிருந்தது. (தானியேல், அதிகாரம் 11) ஸெனோபியா வசீகரிக்கும் அழகியாக இருந்ததால் அநேகர் அவளைப் புகழ்ந்தனர். அவளுடைய வாழ்க்கையில் தனிச்சிறப்பு வாய்ந்த ஒரு விஷயம் என்னவென்றால் அவள் தானியேலின் தீர்க்கதரிசனத்தை நிறைவேற்றியதுதான். ஆம், அதில் குறிப்பிட்ட அரசியல் அங்கத்தினை அவள்தான் பிரதிநித்துவம் செய்தாள். அவளது ஆட்சிக் காலம் சுமார் ஐந்து ஆண்டுகள்தான். ஸெனோபியாவின் தலைநகரான பல்மீரா இன்று ஒரு சிறு கிராமமாகவே காட்சியளிக்கிறது. வல்லமை வாய்ந்த ரோம பேரரசும்கூட படிப்படியாக ஒளியிழந்து, அதைத்தொடர்ந்து வந்த நவீன ராஜ்யங்களிடம் அடிபணிந்தது. இப்போதிருக்கும் இந்த ராஜ்யங்களின் எதிர்காலம் எப்படியிருக்கும்? பைபிளில் ஏற்கெனவே பதிவு செய்யப்பட்ட தீர்க்கதரிசன நிறைவேற்றம் இவற்றின் எதிர்காலத்தையும் கட்டுப்படுத்தும். அந்தத் தீர்க்கதரிசனங்கள் நிச்சயம் நிறைவேறும்—தானியேல் 2:44.
[பக்கம் 29-ன் பெட்டி]
ஸெனோபியா ஏற்படுத்திய பாரம்பரியம்
பல்மீராவின் ராணியாகிய ஸெனோபியாவை யுத்தத்தில் வென்று ரோமிற்கு திரும்பியபின், பேரரசன் ஆரெலியன் சூரியனுக்கு ஒரு கோவில் கட்டினார். அவளுடைய நகரத்தில் இருந்து எடுத்து வந்த சூரியக்கடவுளின் சிலைகளை அதில் வைத்தார். அதைத் தொடர்ந்து ஏற்பட்ட பாரம்பரியங்களைப் பற்றி இன்றைய சரித்திரம் என்ற பத்திரிகை, “ஆரெலியன் செய்தவற்றிலேயே நீண்டகாலம் நிலைத்து நின்ற பாரம்பரியம் என்னவென்றால் அவர் பொ.ச. 274-ல் ஆரம்பித்து வைத்த பண்டிகையே. அப்பண்டிகை, வருஷா வருஷம் டிசம்பர் மாதம் 25-ஆம் தேதி பூமியின் நீள்வட்டப்பாதையில் சூரியன் காணப்படும் சமயத்தை (உத்தராயண காலம்) கொண்டாடுவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டது. ரோமப் பேரரசு கிறிஸ்தவ மதப் பேரரசாக மாறியபோது கிறிஸ்துவின் பிறந்த நாள், இந்த நாளுக்கு மாற்றப்பட்டது. இதன் மூலம் இந்தப் புதிய மதம் மற்றவர்களால் உடனடியாக ஏற்றுக்கொள்ளப்படும்; ஏனெனில் அவர்கள் அனைவரும் இந்த நாளில் ஏற்கெனவே பண்டிகை கொண்டாடி மகிழ்ந்தவர்கள். ராணி ஸெனோபியாவால்தான் . . . நம் காலத்தில், [ஜனங்கள்] பிரபலமான கிறிஸ்மஸ் பண்டிகையைக் கொண்டாடுகிறார்கள் என்று அறியும்போது பெரிய அதிர்ச்சியாக இருக்கிறது” என்று கூறுகிறது.
[பக்கம் 28-ன் வரைப்படம்/படம்]
(முழு வடிவத்திலுள்ள படத்திற்கு புத்தகத்தைப் பார்க்கவும்)
மத்தியதரைக் கடல்
அந்தியோகு
சிரியா
காரி (ஹரான்)
மெசொப்பொத்தாமியா
யூஃப்ரடீஸ்
பல்மீரா
எமஸா (ஹாம்ஸ்)
டமாஸ்கஸ்
நிஸபஸ்
டுரா-யூரொபஸ்
[படத்திற்கான நன்றி]
Map: Mountain High Maps® Copyright © 1997 Digital Wisdom, Inc.
Colonnade: Michael Nicholson/Corbis
[பக்கம் 29-ன் படம்]
ரோம நாணயம், இதில் இருக்கும் உருவம் ஆரெலியனுடையதாக இருக்கலாம்
[பக்கம் 30-ன் படம்]
பல்மீராவில் சூரியனின் கோயில்
படங்களுக்கான நன்றி
The Complete Encyclopedia of Illustration/J. G. Heck
[பக்கம் 31-ன் படம்]
ஸெனோபியா ராணி தன் இராணுவ வீரர்களிடம் உரையாற்றுதல்
[படத்திற்கான நன்றி]
Giovanni Battista Tiepolo, Queen Zenobia Addressing Her Soldiers, Samuel H. Kress Collection, Photograph © Board of Trustees, National Gallery of Art, Washington
[பக்கம் 28-ன் படம்]
Detail of: Giovanni Battista Tiepolo, Queen Zenobia Addressing Her Soldiers, Samuel H. Kress Collection, Photograph © Board of Trustees, National Gallery of Art, Washington