கர்வமே உன் விலை அவ்வளவு கொடியதா?
உங்களை யாராவது வேண்டுமென்றே மட்டம் தட்டியிருக்கிறாரா? உங்களை நக்கலாக பார்த்து, படு ஏளனமாய் நடத்தியிருக்கிறாரா? அவர் ஒருவேளை உங்கள் மானேஜர், டைரக்டர், மேலாளர் அல்லது உறவினராய்கூட இருக்கலாம். அவரைப் பற்றி என்ன நினைத்தீர்கள்? அவர் உங்கள் மனம் கவர்ந்தவராக முடியுமா? ஒருக்காலும் முடியாது! ஏன்? ஏனென்றால் பெருமை ஒரு பெருஞ்சுவராய், மற்றவர்கள் நம்மிடம் நெருங்காதபடி தடுக்கிறது. பேச்சுத்தொடர்பையும் அறுத்தெறிந்துவிடுகிறது.
ஆணவமுள்ளவர்கள் எல்லாரையும் கீழ்த்தரமாகவே எடைபோடுவார்கள். அவர்கள் கண்களுக்கு எப்போதும் அவர்கள் மட்டும்தான் உசத்தி. மற்றவரை பாராட்டி ஒரு வார்த்தை சொல்வதென்றால், அவர்கள் வாயிலிருந்து முத்தே உதிர்ந்துவிடுவது போல். ஏதாவது குறை சொல்லாமல் அவர்களால் பேசவே முடியாது. உதாரணத்திற்கு, “நீங்க சொல்றதெல்லாம் சரிதான், ஆனா அவருக்கு இந்த கெட்ட குணம், அந்த கெட்ட புத்தி” என்பார்கள்.
வெள்ளி வார்த்தைகளில் பொன்னான யோசனைகள் என்ற ஆங்கில புத்தகம் கர்வத்தை இப்படி விவரிக்கிறது: “ஒரு கை பார்த்துவிடும் இத்துர்க்குணம் ஒருவரை சீரழிக்கிறது, நன்மதிப்பையும் இழக்கச்செய்கிறது.” இதனாலேயே, பெருமையுள்ளவர்கள் பக்கத்தில் இருப்பதைக்கூட எவருமே விரும்புவதில்லை போலும். கர்வத்திற்கு செலுத்தவேண்டிய கொடியவிலையில் ஒன்று, உண்மையான நட்பு. “நேரெதிர் மாறாக, பணிவுள்ளவர்களை—பணிவுடன் இருப்பதாக பெருமைப்பட்டுக் கொள்கிறவர்களை அல்ல, உள்ளப்பூர்வமாய் பணிவு காட்டுபவர்களை—எல்லாரும் நேசிக்கிறார்கள்” என அதே புத்தகம் சொல்கிறது. ஆகவே “மனுஷனுடைய அகந்தை அவனைத் தாழ்த்தும்; மனத்தாழ்மையுள்ளவனோ கனமடைவான்” என பைபிள் சொல்வது வெகு பொருத்தம்.—நீதிமொழிகள் 29:23.
நட்பு, மதிப்பு என்ற விஷயமெல்லாம் ஒருபக்கம் இருக்கட்டும். முக்கியமான கேள்வி, கர்வத்தால் கடவுளோடு உள்ள உறவு எவ்வாறு பாதிக்கப்படுகிறது என்பதே. அகந்தையும் ஆணவமும் தலைக்கனமும் உள்ளவர்களை கடவுள் எப்படிப் பார்க்கிறார்? கர்வம், பணிவு: கடவுளுக்கு இவை ஒரு பொருட்டா?
பணிவின் பாடம்
கடவுளால் ஏவப்பட்டு எழுதப்பட்ட நீதிமொழிகள் சொல்கிறது: “அழிவுக்கு முன்னானது அகந்தை; விழுதலுக்கு முன்னானது மனமேட்டிமை. அகங்காரிகளோடே கொள்ளைப் பொருளைப் பங்கிடுவதைப்பார்க்கிலும், சிறுமையானவர்களோடே மனத்தாழ்மையாயிருப்பது நலம்.” (நீதிமொழிகள் 16:18, 19) இந்த வார்த்தைகள் எவ்வளவு உண்மை என்பதை நாகமானின் உதாரணம் நன்றாக எடுத்துக்காட்டுகிறது. சீரிய படைத்தலைவரான அவர் இஸ்ரவேலின் தீர்க்கதரிசியாகிய எலிசாவின் காலத்தில் வாழ்ந்தவர்.
நாகமான் ஒரு குஷ்டரோகி. குணமடைவதற்காக சமாரியாவுக்கு பயணம் செய்தார். எலிசா தன்னை நேரடியாக சந்தித்து குணப்படுத்துவார் என நினைத்தார். ஆனால் எலிசாவோ தன் ஊழியக்காரனை அனுப்பி, யோர்தான் நதியில் ஏழு தடவை ஸ்நானம் பண்ணுமாறு நாகமானுக்குத் தெரியப்படுத்தினார். ‘தீர்க்கதரிசியே நேரடியாக வந்து பேசுவதற்கு பதிலாக எதற்காக ஊழியக்காரனை அனுப்ப வேண்டும்? சீரியாவிலுள்ள நதிகளைவிட யோர்தான் எந்த விதத்தில் உசத்தி?’ என நினைத்தார் நாகமான். இவ்வாறு, எலிசா தன்னை நடத்திய விதத்தையும் தனக்கு தந்த ஆலோசனையையும் அவமதிப்பாக நினைத்தார். காரணம், கர்வத்தைத் தவிர வேறென்ன? அப்புறம் என்ன நடந்தது? நல்லவேளையாக, அதன்பிறகு கிடைத்த ஞானமுள்ள புத்திமதியை அவர் ஏற்றுக்கொண்டார். ‘அப்பொழுது அவர் இறங்கி, தேவனுடைய மனுஷன் வார்த்தையின்படியே யோர்தானில் ஏழுதரம் முழுகினபோது, அவர் மாம்சம் ஒரு சிறுபிள்ளையின் மாம்சத்தைப்போல மாறி, அவர் சுத்தமானார்.’—2 இராஜாக்கள் 5:14.
சிலசமயங்களில், கொஞ்சம் நம்மைத் தாழ்த்தினாலும் பல நன்மைகளைப் பெறலாம்.
அகங்காரத்தின் விலை
கர்வத்தால் நாம் இழக்கும் நன்மை அல்லது பயன் கொஞ்சமென நினைத்துவிடாதீர்கள். சிலசமயம் அதற்கு கொடியவிலை செலுத்த வேண்டியதுவரலாம். இன்னொருவித கர்வமும் உண்டு. அதை “ஹ்யூப்ரிஸ்” (hubris) என்ற ஆங்கில வார்த்தையிலிருந்து புரிந்துகொள்ளலாம். அது, “கேடு விளைவிக்கும், தலைக்கேறிய கர்வம் அல்லது அளவுக்கு மீறிய தன்னம்பிக்கை” என விவரிக்கப்பட்டிருக்கிறது. (உவெப்ஸ்டர்ஸ் நைன்த் நியூ காலேஜியேட் டிக்ஷ்னரி) இந்த ஆங்கில வார்த்தை நேரடியாக கிரேக்கிலிருந்து எடுக்கப்பட்டது. கிரேக்க அறிஞர் வில்லியம் பார்க்லேயின்படி, “ஹ்யூப்ரிஸ் என்பது கர்வமும் கொடூரமும் சேர்ந்தது . . . , மற்றவர்களை அவமானப்படுத்தத் தூண்டும் வெறுப்பு கலந்த அகங்காரம்.”
இப்படிப்பட்ட தலைக்கேறிய கர்வத்திற்கு பைபிளிலுள்ள ஒரு தெளிவான உதாரணம், அம்மோன் ராஜாவான ஆனூன். வேதவாக்கியங்களின்பேரில் உட்பார்வை (ஆங்கிலம்) இவ்வாறு விளக்குகிறது: “நாகாஸ் இறந்தபோது அவன் மகன் ஆனூனுக்கு ஆறுதலளிக்க தாவீது தன் ஊழியக்காரர்களை அனுப்பினார். நாகாஸ் தனக்கு தயை காண்பித்திருந்த காரணத்தினாலேயே அவ்வாறு செய்தார். ஆனால் ஆனூன் தன் பிரபுக்களின் பேச்சை நம்பி, பட்டணத்தை உளவுபார்க்கவே தாவீது இப்படி செய்திருக்கிறார் என நினைத்து அவரது ஊழியக்காரரைப் பிடித்து, அவர்களுடைய ஒருபக்கத்துத் தாடியைச் சிரைத்து, வஸ்திரங்களை இருப்பிடமட்டும் வைத்துவிட்டு, மற்றப்பாதியைக் கத்தரித்துப்போட்டு, அவர்களை அவமானப்படுத்தி அனுப்பினான்.”a இந்தச் சம்பவத்தைக் குறித்து பார்க்லே குறிப்பிடுகிறார்: “அதுதான் ஹ்யூப்ரிஸ். கடுங்கோபம், புண்படுத்துதல், எல்லார் முன்னும் கேவலப்படுத்துதல் ஆகிய மூன்றும் கலந்த ஒன்று.”—2 சாமுவேல் 10:1-5.
ஆம், கர்வம் பிடித்தவர்கள், இவ்வாறு கொடூரமாய் மற்றவர்களைப் புண்படுத்தி தலைகுனிய வைக்கும் இயல்புள்ளவர்கள். கொஞ்சமும் இரக்கமில்லாமல் நக்கலாக ஒருவரைப் புண்படுத்தி, அதன்பின் அவர் வேதனையில் வெம்புவதைப் பார்த்து அகம் மகிழ்வார்கள். ஆனால் ஒருவரது தன்மானத்தை பலவீனப்படுத்துவது அல்லது அழிப்பது இருபுறமும் கருக்குள்ள பட்டயம் போன்றது. அதாவது நண்பனை இழக்கும் அதேசமயத்தில் பெரும்பாலும் எதிரியையும் சம்பாதித்துக்கொள்வார்கள்.
“உன்னிடத்தில் நீ அன்புகூருவதுபோலப் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக” என எஜமானர் இயேசு கட்டளையிட்டிருக்கும்போது, ஒரு உண்மை கிறிஸ்தவர் ஆணவத்தால் மற்றவர்களை புண்படுத்துவது தகுமா? (மத்தேயு 7:12; 22:39) கடவுள் மற்றும் கிறிஸ்துவின் குணாதிசயத்திற்கு இது முற்றிலும் நேரெதிராக உள்ளது. இதன் காரணமாக, பார்க்லே ஒரு முக்கியக் குறிப்பைச் சொல்கிறார்: “ஹ்யூப்ரிஸ் என்ற கர்வம் கடவுளை துணிந்து எதிர்க்கச் செய்கிறது.” ஆம், “யெகோவா இல்லை” என சொல்ல வைக்கும் கர்வம் இது. (சங்கீதம் 14:1, NW) சங்கீதம் 10:4-ல் சொல்லப்பட்டிருப்பதுபோல்: “துன்மார்க்கன் தன் கர்வத்தினால் தேவனைத் தேடான்; அவன் நினைவுகளெல்லாம் தேவன் இல்லையென்பதே.” அப்படிப்பட்ட கர்வம் அல்லது தலைக்கனம் நண்பர்களிடமிருந்தும் உறவினர்களிடமிருந்தும் மட்டுமல்ல கடவுளிடமிருந்தும் ஒருவரைப் பிரிக்கிறது. என்னே ஒரு கொடியவிலை!
கர்வத்தால் சீரழிந்துவிடாதீர்
கர்வத்தில் பலவிதம் உண்டு. தேசம், இனம், சமூக அந்தஸ்து, ஜாதி, படிப்பு, செல்வம், கௌரவம், அதிகாரம் என எந்தக் காரணத்தாலும் கர்வம் எழலாம். ஏதாவது ஒரு விதத்தில் கர்வம் உங்களை பீடித்துக்கொண்டு உங்கள் நற்குணங்களை அரித்துவிடலாம்.
மேலதிகாரிகள் அல்லது சம அந்தஸ்துள்ளவர்களோடு பழகும்போது அநேகர் பணிவோடு நடந்துகொள்கின்றனர். ஆனால் பணிவுள்ளவராய் தோன்றும் அதே நபர் அதிகாரம் பெறுகையில்? திடீரென, தாழ்ந்தவர்களாக தோன்றுவோரை ஆட்டிப்படைக்கும் கொடுமைக்காரர் ஆகிவிடுகிறார்! அதிகாரத்தைக் குறிக்கும் ஒரு யூனிபார்ம் அல்லது பாட்ஜை அணிந்தாலே போதும், சிலரை கையில் பிடிக்கமுடியாது, ஆகாயத்திலிருந்து குதித்ததுபோல் செருக்கு முளைத்துவிடும். கர்வத்தால் அரசாங்க ஊழியர்களும் பொது ஜனங்களை மட்டமாய் நடத்தலாம். தாங்கள் அவர்களுக்கு சேவைசெய்ய வேண்டும் என்பதையே மறந்துவிட்டு, அவர்கள் தங்களுக்கு சேவைசெய்ய வேண்டுமென எதிர்பார்க்கலாம். கர்வத்தால் கொடூரமான கல்நெஞ்சக்காரர்களாவீர்கள்; பணிவோ உங்களை தயவுள்ளவர்களாக்கும்.
இயேசு கடவுளுடைய குமாரர்; பரிபூரணமானவர். எனவே அவர் நினைத்திருந்தால், அபூரண முன்யோசனையற்ற சீஷர்களை கையாளும்போது தலைக்கனத்தோடு கடுமையாக நடத்தியிருக்கலாம். ஆனால் தமக்கு செவிகொடுத்த அனைவருக்கும் என்ன அழைப்பு கொடுத்தார் தெரியுமா? “வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறவர்களே! நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள்; நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன். நான் சாந்தமும் மனத்தாழ்மையுமாய் இருக்கிறேன்; என் நுகத்தை உங்கள் மேல் ஏற்றுக்கொண்டு, என்னிடத்தில் கற்றுக்கொள்ளுங்கள்; அப்பொழுது, உங்கள் ஆத்துமாக்களுக்கு இளைப்பாறுதல் கிடைக்கும். என் நுகம் மெதுவாயும், என் சுமை இலகுவாயும் இருக்கிறது.”—மத்தேயு 11:28-30.
இயேசுவின் முன்மாதிரியைப் பின்பற்ற எப்போதும் முயற்சிக்கிறோமா? அல்லது கொடூரமாய், விட்டுக்கொடுக்காமல், கொடுமைக்காரர்களாய், இரக்கமில்லாமல், ஆணவத்தோடு செயல்படுகிறோமா? இயேசுவைப் போல், மற்றவர்களுக்கு இளைப்பாறுதல் தர முயற்சிசெய்யுங்கள், அவர்களை ஒடுக்காதீர்கள். கர்வத்தின் சீரழிக்கும் தன்மைக்கு எதிராக போராடுங்கள்.
ஏற்கெனவே சிந்தித்தவற்றை வைத்துப் பார்க்கும்போது, எல்லாவித பெருமையும் தவறா என்ற கேள்வி எழும்புகிறது.
தன்மானம் Vs செருக்கு
பெருமை என்பது, “தகுந்த அல்லது நியாயமான தன்மானம்” என்றும் விவரிக்கப்படுகிறது. (உவெப்ஸ்டர்ஸ் நைன்த் நியூ காலேஜியேட் டிக்ஷ்னரி) தன்மானம் என்பது தன்மீதே தனக்கிருக்கும் மதிப்பு. அப்படியென்றால் மற்றவர்கள் உங்களைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பதில் உங்களுக்கு அக்கறை உண்டு. உங்கள் தோற்றத்திலும் மற்றவர்களிடம் எடுக்கும் பெயரிலும் அக்கறை செலுத்துவீர்கள். “உன் நண்பன் யார் என சொல், உன்னைப் பற்றி சொல்லிவிடுகிறேன்” என்ற ஸ்பானிய பழமொழி வெகு உண்மை. அலங்கோலமாய் தோற்றமளிக்கும், நாகரிகமற்ற, இழிவாய் பேசும், சோம்பேறிகளோடு நீங்கள் பழகினால் அவர்களைப்போலவே ஆகிவிடுவீர்கள். அவர்களது குணங்கள் உங்களைத் தொற்றிக்கொள்ளும், அதன்பின் அவர்களைப் போலவே நீங்களும் தன்மானத்தை இழப்பீர்கள்.
பெருமையில் இன்னொரு உச்சநிலை உள்ளது. அதுதான் செருக்கு அல்லது அகந்தை. இயேசு காலத்தில் வாழ்ந்த வேதபாரகரும் பரிசேயர்களும் தங்கள் பாரம்பரியத்தைக் குறித்தும் மிதமிஞ்சிய பக்திமான்கள் போன்ற தங்கள் தோற்றத்தைக் குறித்தும் பெருமைப்பட்டுக் கொண்டார்கள். அவர்களைப் பற்றி இயேசு இப்படி எச்சரித்தார்: “தங்கள் கிரியைகளையெல்லாம் மனுஷர் காணவேண்டுமென்று செய்கிறார்கள்; தங்கள் காப்புநாடாக்களை அகலமாக்கி, [மிதமிஞ்சிய பக்திமான்கள்போல் காட்சியளிக்க] தங்கள் வஸ்திரங்களின் தொங்கல்களைப் பெரிதாக்கி, விருந்துகளில் முதன்மையான இடங்களையும், ஜெபஆலயங்களில் முதன்மையான ஆசனங்களையும், சந்தைவெளிகளில் வந்தனங்களையும், மனுஷரால் ரபீ, ரபீ, என்று அழைக்கப்படுவதையும் விரும்புகிறார்கள்.”—மத்தேயு 23:5-7.
பெருமையில் சமநிலை, அதாவது தன்மான உணர்வு என்பது கெட்ட குணம் அல்ல. யெகோவா ஒருவரது வெளித்தோற்றத்தை மட்டுமல்ல இருதயத்தையும் பார்க்கிறார் என்பதை நினைவில் வையுங்கள். (1 சாமுவேல் 16:7; எரேமியா 17:10) சுயநீதி, கடவுளது நீதி அல்ல. ஆனால் இப்போது கேள்வி என்னவெனில், நாம் எவ்வாறு உள்ளப்பூர்வமான பணிவை வளர்த்துக்கொண்டு, கர்வத்திற்கு கொடியவிலை செலுத்துவதைத் தவிர்க்கலாம்?
[அடிக்குறிப்புகள்]
a உவாட்ச்டவர் பைபிள் அண்ட் டிராக்ட் சொஸைட்டி ஆஃப் நியூ யார்க்கால் பிரசுரிக்கப்பட்டது.
[பக்கம் 4-ன் படம்]
நாகமான் தன்னைக் கொஞ்சம் தாழ்த்தியதால் பெரும் நன்மைகளைப் பெற்றார்