உங்கள் இல்லறம் நல்லறமாக செழிக்க வேண்டுமா?
நீச்சல் தெரியாமல் ஆற்றில் துணிந்து குதிப்பீர்களா? அது எவ்வளவு பெரிய முட்டாள்தனம். அது காயமேற்படுத்தலாம், ஏன் காவும்கொள்ளலாம். ஆனால், திருமண வாழ்க்கை எனும் ஆற்றுக்குள் மட்டும் அதிலுள்ள பொறுப்புகளைப் பற்றி கொஞ்சமும் அறியாமல் அநேகர் கண்ணைக் கட்டிக் கொண்டு குதித்து விடுகிறார்களே, அது ஏன் என்று எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா?
இயேசு இவ்வாறு கேட்டார்: “உங்களுள் யாராவது ஒருவர் கோபுரம் கட்ட விரும்பினால், முதலில் உட்கார்ந்து, அதைக் கட்டிமுடிக்க ஆகும் செலவைக் கணித்து, அதற்கான பொருள் வசதி தம்மிடம் இருக்கிறதா எனப் பார்க்கமாட்டாரா?” (லூக்கா 14:28, பொது மொழிபெயர்ப்பு) இதிலுள்ள உண்மை, கோபுரம் கட்டுவதற்கு மட்டுமல்ல கல்யாணம் கட்டுவதற்கும்தான் பொருந்தும். கல்யாணம் பண்ணிப்பார், வீட்டைக் கட்டிப்பார் என்று சும்மாவா சொன்னார்கள். அதனால்தான் திருமணம் செய்ய விரும்புகிறவர்களும் அதில் உட்பட்டுள்ளவற்றை கவனமாக சீர்தூக்கிப் பார்க்க வேண்டும். திருமணத்தை வெற்றிகரமாக நடத்தும் சக்தி இருக்கிறதா என்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும்.
திருமணம்—ஒரு கண்ணோட்டம்
வாழ்க்கையின் இன்ப துன்பங்களைப் பகிர்ந்துகொள்ள ஒரு துணை கிடைப்பது நிஜமாகவே ஒரு வரம்தான். தனிமையோ அவநம்பிக்கையோ ஏற்படுத்தும் வெற்றிடத்தை திருமணம் நிரப்பலாம். அன்பு, தோழமை, அன்னியோன்னியம் ஆகியவற்றுக்கான இயல்பான ஏக்கத்தை திருப்தி செய்யலாம். நல்ல காரணத்தோடுதான், ஆதாமைப் படைத்த பின்பு கடவுள் இவ்வாறு சொன்னார்: “மனுஷன் தனிமையாயிருப்பது நல்லதல்ல, ஏற்ற துணையை அவனுக்கு உண்டாக்குவேன்.”—ஆதியாகமம் 2:18; 24:67; 1 கொரிந்தியர் 7:9.
ஆம், திருமணம் சில பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கலாம். ஆனால் சில புதிய பிரச்சினைகளுக்கு வித்திடலாம். ஏன்? ஏனென்றால், வேறுபட்ட இரு மனங்களின் சங்கமம்தான் திருமணம். அதனால் இருவரும் ஒத்துப்போகலாம் என எதிர்பார்க்கலாமே தவிர இருவரும் ஒன்றுபோல இருக்க வேண்டுமென எதிர்பார்க்கக்கூடாது. எனவே, மனமொத்த தம்பதிகளிடம்கூட அவ்வப்போது பிணக்குகள் தலைதூக்கலாம். மணம் செய்வோர் “சரீரத்திலே உபத்திரவப்படுவார்கள்” அல்லது த நியூ இங்லிஷ் பைபிள் மொழிபெயர்க்கிறபடி, “இந்த மானிட வாழ்வில் துன்பமும் வேதனையும் அடைவர்” என்று கிறிஸ்தவ அப்போஸ்தலன் பவுல் எழுதினார்.—1 கொரிந்தியர் 7:28.
பவுலின் கருத்து ஒருவித அவநம்பிக்கையைக் காட்டுகிறதா? இல்லவே இல்லை! திருமணம் செய்வதைப் பற்றி யோசிப்பவர்கள் வாழ்க்கையின் யதார்த்தங்களை அறிந்திருக்க வேண்டுமென்றுதான் குறிப்பிடுகிறார். ஒருவரிடத்தில் காந்தம்போல கவர்ந்திழுக்கப்படும்போது ஏதோ இன்ப உணர்வலைகள் உடலெங்கும் பரவி சிலிர்க்க வைக்கும். அந்த கணநேர உணர்வு நீர்க்குமிழிபோல் சீக்கிரத்தில் மறைந்துவிடும். அதனால்தான் மாதங்கள், ஆண்டுகள் என ஓடுகிறபோது மண வாழ்க்கை அப்படியே மகிழ்ச்சி ததும்பிக் கொண்டிருக்கும் என இந்த உணர்வுகளின் அடிப்படையில் சொல்லிவிட முடியாது. ஒவ்வொரு திருமணத்திலும் அதற்கே உரிய சவால்களும் சச்சரவுகளும் உள்ளன. அதனால் அவை எழும்புமா என்பதைவிட அப்படி எழும்பினால் அதை எப்படி எதிர்கொள்வது என்பதே இப்பொழுது எழும் கேள்வி.
இவ்வாறு எழும்பும் பிரச்சினைகள், கணவனும் மனைவியும் தங்களுடைய உண்மையான அன்பை நிரூபிப்பதற்கு வாய்ப்பளிக்கின்றன. இதை ஓர் உதாரணத்தால் விளக்கலாம். ஒரு பயணக் கப்பல் துறைமுகத்தில் “துயில்கையில்” பிரமாண்டமாய் காட்சியளிக்கலாம். ஆனால், கடலில் நீந்தும்போதுதான்—முக்கியமாக, புயலின் சீற்றத்தில் சிக்கும்போதுதான்—கடல் பயணத்திற்கு அது எந்தளவுக்கு உகந்தது என்பது நிரூபிக்கப்படும். அதுபோலவே, திருமண பந்தம் நிலைக்குமா என்பதை மோகத்தில் திளைத்திருக்கும் அமைதியான வாழ்நாள் காலத்தை வைத்து மட்டுமே சொல்லிவிட முடியாது. துன்பப் புயல் வீசுகையில் அதை எதிர்த்துக் கரை சேரும் சமயங்களில்தான் அது நிரூபிக்கப்படுகிறது.
அவ்வாறு செய்வதற்கு, தம்பதிகள் திருமண கட்டுக்குள் வர வேண்டியது அவசியம். ஏனென்றால் ஒரு மனிதன் ‘தன் மனைவியோடே இசைந்து’ ‘ஒரே மாம்சமாயிருக்க’ வேண்டும் என்பதே கடவுளின் நோக்கம். (ஆதியாகமம் 2:24) திருமண கட்டுக்குள் வர இன்று அநேகர் பயப்படுகின்றனர். ஆனால், ஒருவரையொருவர் நெஞ்சார நேசிப்போர், இணைந்து வாழ உறுதிமொழி செய்துகொள்வார்கள் என எதிர்பார்ப்பது நியாயமானதே. திருமண கட்டு மண வாழ்க்கைக்கு கௌரவத்தை தருகிறது. கஷ்டமோ நஷ்டமோ, கணவனும் மனைவியும் ஒருவரையொருவர் ஆதரிப்பர் என்ற நம்பிக்கைக்கு அடித்தளமிடுகிறது.a இத்தகைய திருமண கட்டுக்குள் வர நீங்கள் தயாராக இல்லையென்றால், திருமணம் செய்துகொள்வதற்கும் தயாராக இல்லை. (பிரசங்கி 5:4, 5-ஐ ஒப்பிடுக.) ஏற்கெனவே மணமானவர்களும்கூட, திருமண கட்டுக்குள் இருப்பது நிலையான மணவாழ்க்கைக்கு எவ்வளவு முக்கியம் என்பதை மதித்துணருவது அவசியமாய் இருக்கலாம்.
உங்கள்மீதே ஒரு கண்ணோட்டம்
உங்கள் துணையிடம் இன்னின்ன குணங்கள் இருக்க வேண்டுமென நீங்கள் உடனே பட்டியலிட்டு விடுவீர்கள் என்பதில் சந்தேகமேதுமில்லை. ஆனால் மிக மிக கஷ்டமானது எது தெரியுமா? உங்களிடம் என்னென்ன குணங்கள் இருக்கின்றன என்பதை கண்டறிய உங்களையே தெரிந்துகொள்வதுதான். திருமண உறுதிமொழி எடுப்பதற்கு முன்பு உங்களையே ஆராய்ந்து பார்ப்பது மிக அவசியம். உதாரணத்திற்கு, பின்வரும் கேள்விகளை கேட்டுக் கொள்ளுங்கள்.
• வாழ்நாள் முழுக்க திருமண பந்தத்துக்கே உரித்தான கடமையை என் துணைக்கு செய்ய எனக்கு சம்மதமா?—மத்தேயு 19:6.
மல்கியா என்ற பைபிள் தீர்க்கதரிசியின் நாட்களில், கணவர்கள் அநேகர் தங்கள் மனைவிகளை கைவிட்டனர். எதற்காக தெரியுமா? இளம் பெண்களின் கரம்பிடிக்கவே. கைவிடப்பட்ட மனைவிகளின் கண்ணீரால் தமது பலிபீடம் நிரம்பி வழிகிறது என்று யெகோவா சொன்னார்; அதோடு தங்கள் மனைவிகளுக்கு “நம்பிக்கைத் துரோகம்” செய்த மனிதர்களை கண்டித்தார்.—மலாக்கி [மல்கியா] 2:13-16, பொது மொழிபெயர்ப்பு.
• எனக்கு திருமணம் செய்கிற யோசனை இருந்தால், நிதானித்து தீர்மானமெடுக்க முடியாதளவு கட்டுக்கடங்காத பாலுணர்வு ஆசை இருக்கும் விடலைப் பருவத்தைக் கடந்து விட்டேனா?—1 கொரிந்தியர் 7:36.
இருபத்திரண்டு வயதில் திருமணம் செய்துகொண்ட நிக்கி இவ்வாறு எச்சரிக்கிறாள்: “சீக்கிரமே கல்யாணம் செஞ்சுக்கறது ரொம்ப ஆபத்தானது. பத்தொன்பது வயதிலிருந்து உங்களுக்கு இருப்பதஞ்சு, இல்லனா, இருபத்தெட்டு வயதாகிற வரைக்கும் உங்க உணர்வுகள், லட்சியங்கள், ரசனைகள் மாறிக்கிட்டே இருக்கும்.” இருந்தாலும், திருமணத்துக்கு தயாரா இல்லையா என்பதை வயது மட்டுமே நிர்ணயிப்பதில்லை. பாலுணர்வுகள் தலைதூக்க ஆரம்பித்திருக்கும் விடலைப் பருவம் கடந்துபோவதற்கு முன்பு திருமணம் செய்வது, வரவிருக்கிற பிரச்சினைகளுக்கு ஒருவரின் கண்ணை குருடாக்கி விடலாம்; அதனால் அவரால் தெளிவாக சிந்திக்க முடியாமற்போகலாம்.
• மணவாழ்வு செழிக்க உதவும் என்ன குணங்கள் என்னிடம் இருக்கின்றன?—கலாத்தியர் 5:22, 23.
கொலோசெயருக்கு அப்போஸ்தலன் பவுல் பின்வருமாறு எழுதினார்: “பிரியருமாய், உருக்கமான இரக்கத்தையும், தயவையும், மனத்தாழ்மையையும், சாந்தத்தையும், நீடிய பொறுமையையும் தரித்துக்கொ[ள்ளுங்கள்].” (கொலோசெயர் 3:12) திருமணத்தைப் பற்றி யோசிப்பவர்களுக்கும்சரி, ஏற்கெனவே திருமணமானவர்களுக்கும்சரி இந்த அறிவுரை மிகவும் பொருத்தமானது.
• துணைவரின் கஷ்டநஷ்டத்தில் பங்கெடுக்கும் மனப்பக்குவம் எனக்கு இருக்கிறதா?—கலாத்தியர் 6:2.
“பிரச்சினை வந்தா, அடுத்தவங்க மேல பழிபோடறதுதான் பழக்கம். இது மணவாழ்க்கைக்கும் பொருந்தும். யார்மீது குற்றம் இருக்குங்கிறது முக்கியமில்ல. திருமண பந்தத்தை பலப்படுத்தறதுக்கு கணவன், மனைவி இரண்டு பேருமே என்ன செய்யலாம் என்கிறதுதான் முக்கியம்” என டாக்டர் ஒருவர் சொல்கிறார். ஞானியாகிய அரசன் சாலொமோனின் வார்த்தைகள் தம்பதிகளுக்கு பொருந்தும். அவர் எழுதினார்: “ஒண்டியாயிருப்பதிலும் இருவர் கூடியிருப்பது நலம்; . . . ஒருவன் விழுந்தால் அவன் உடனாளி அவனைத் தூக்கிவிடுவான்; ஒண்டியாயிருந்து விழுகிறவனுக்கு ஐயோ, அவனைத் தூக்கிவிடத் துணையில்லையே.”—பிரசங்கி 4:9, 10.
• நீங்கள் பொதுவாக கலகலப்பானவராகவும் நம்பிக்கையுள்ளவராகவும் இருக்கிறீர்களா அல்லது எப்பவுமே முகத்தை தூக்கிவைத்துக்கொண்டு எதையும் தவறான கண்ணோட்டத்தில் பார்ப்பவராக இருக்கிறீர்களா?—நீதிமொழிகள் 15:15.
எதையுமே தவறான கண்ணோட்டத்தில் பார்ப்பவர்களுக்கு எல்லா நாளுமே கெட்டதாகத்தான் தெரியும். திருமணம் இந்த மனநிலையை மாற்றும் அற்புத சஞ்சீவி அல்ல. ஒரு நபர்—ஆணானாலும்சரி, பெண்ணானாலும்சரி—திருமணத்திற்கு முன்பு எப்போது பார்த்தாலும் குறை சொல்லுபவராகவோ, அவநம்பிக்கையுள்ளவராகவோ இருந்தால், திருமணத்திற்கு பின்பும் அவர் அப்படித்தான் இருப்பார். எதையுமே தவறான கண்ணோட்டத்தில் பார்க்கிற இத்தகைய மனப்போக்கு உங்களுடைய திருமணத்தின் அஸ்திவாரத்தையே ஆட்டம் காண வைக்கலாம்.—நீதிமொழிகள் 21:9-ஐ ஒப்பிடுக.
• பிரச்சினைகள் ஏற்படுகையில் நிதானமாக கையாளுகிறேனா, அல்லது கோபத்தால் வெகுண்டெழுந்து, வாய்க்கு வந்ததை கொட்டிவிடுகிறேனா?—கலாத்தியர் 5:19, 20.
“கோபிக்கிறதற்குத் தாமதமா”யிருங்கள் என்பதே கிறிஸ்தவர்களுக்கு இடப்பட்டுள்ள கட்டளை. (யாக்கோபு 1:19) திருமணத்திற்கு முன்பும் பின்பும் இந்த ஆலோசனைக்கு இசைவாக வாழ்வதற்கான திறமையை ஒருவர் வளர்த்துக் கொள்ள வேண்டும்: “நீங்கள் கோபங்கொண்டாலும் பாவஞ்செய்யாதிருங்கள்; சூரியன் அஸ்தமிக்கிறதற்கு முன்னாக உங்கள் எரிச்சல் தணியக்கடவது.”—எபேசியர் 4:26.
எதிர்கால துணைவர்—ஒரு கண்ணோட்டம்
“விவேகியோ தன் நடையின்மேல் கவனமாயிருக்கிறான்” என பைபிள் பழமொழி ஒன்று கூறுகிறது. (நீதிமொழிகள் 14:15) திருமணத் துணையைத் தெரிந்தெடுக்கையில் இது நூற்றுக்கு நூறு உண்மை. ஓர் ஆணோ பெண்ணோ தன் வாழ்க்கையில் செய்யும் மிக முக்கியமான தீர்மானங்களில் ஒன்று திருமணத் துணையை தெரிந்தெடுப்பதுதான். ஆனால், நிறைய பேர், எந்த மாடல் கார் வாங்கலாம், எந்த காலேஜில் படிக்கலாம் என்பதை தீர்மானிப்பதற்கு ஓராயிரம் தடவை யோசிப்பர்; ஆனால் வாழ்நாள் முழுக்க சேர்ந்து வாழப் போகிற துணையைத் தெரிந்தெடுக்க அவ்வளவு நேரம் செலவிடுவதில்லை.
கிறிஸ்தவ சபையில் பொறுப்புகள் ஒப்படைக்கப்படுகிறவர், “முதலில் அதற்கு தகுதியுள்ளவர்தானா என பரிசோதிக்கப்ப[டுகிறார்].” (1 தீமோத்தேயு 3:10, NW) உங்களுக்கு திருமணம் செய்கிற யோசனை இருந்தால், நீங்கள் மணக்கவிருப்பவர் “தகுதியுள்ளவர்தானா” என்பதை அறிய விரும்புவீர்கள். உதாரணமாக, பின்வரும் கேள்விகளைச் சிந்தியுங்கள். இந்தக் கேள்விகள் ஒரு பெண் கேட்பதைப் போல இருந்தாலும்கூட, இதிலுள்ள அநேக நியமங்கள் ஆண்களுக்கும் பொருந்தும். திருமணமானவர்களும்கூட இவற்றை சிந்திப்பதால் நன்மை பெறலாம்.
• அவரைப் பற்றி மற்றவர்களுக்கு நல்ல அபிப்பிராயம் இருக்கிறதா?—பிலிப்பியர் 2:19-22.
“தேசத்து மூப்பர்களோடே நகரத்தின் வாசலில் உட்கார்ந்திருக்கையில் பேர்பெற்றவனாயிருக்கிற” ஒரு கணவனைப் பற்றி நீதிமொழிகள் 31:23 (NW) விவரிக்கிறது. நகரத்தின் மூப்பர்கள் நியாயம் வழங்குவதற்காகவே நகர வாசலில் உட்கார்ந்திருந்தனர். எனவே, அக்கணவர் பொதுமக்களின் நம்பிக்கைக்குரிய பொறுப்பை வகித்தார் என்பது தெளிவாக உள்ளது. ஒருவரைப் பற்றி மற்றவர்களுடைய அபிப்பிராயம், அவர் என்ன பெயர் எடுத்திருக்கிறார் என்பதை ஓரளவுக்கு சொல்லாமல் சொல்லி விடுகிறது. சாத்தியமானால், அவருக்கு கீழே வேலை செய்யும் ஆட்கள் அவரைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பதை தெரிந்து கொள்ளுங்கள். அவருடைய துணையாக, காலப்போக்கில், நீங்கள் அவரை எவ்வாறு கருதுவீர்கள் என்பதை இது எடைபோட உதவும்.—1 சாமுவேல் 25:3, 23-25-ஐ ஒப்பிடுக.
• அவர் ஒழுக்கசீலரா?
கடவுளிடமிருந்து வரும் ஞானம் ‘முதலாவது சுத்தமுள்ளது.’ (யாக்கோபு 3:17) நீங்கள் மணக்கவிருப்பவர் கடவுளுக்குமுன்பு உங்கள் இருவருடைய நிலைநிற்கையைப் பற்றி கவலைப்படாமல் தன்னுடைய பாலுணர்வை திருப்தி செய்து கொள்வதிலேயே குறியாய் இருக்கிறாரா? கடவுளுடைய ஒழுக்க தராதரங்களுக்கு இசைவாக வாழ்வதற்கு அவர் இப்போதே முயற்சி எடுக்கவில்லையெனில், திருமணத்திற்கு பின்னால் முயற்சி எடுப்பார் என்பது என்ன நிச்சயம்?—ஆதியாகமம் 39:7-12.
• அவர் என்னை எப்படி நடத்துகிறார்?—எபேசியர் 5:28, 29.
தன் மனைவியை ‘நம்புகிற’ ஒரு கணவனைப் பற்றி பைபிள் புத்தகமாகிய நீதிமொழிகள் சொல்கிறது. அது மட்டுமா, ‘அவன் அவளைப் புகழுகிறான்.’ (நீதிமொழிகள் 31:11, 28, 29) அவர் எப்போதுமே பொறாமைக் கண்ணோடு அவளைப் பார்ப்பவராக இல்லை. அல்லது தன்னுடைய எதிர்பார்ப்புகளில் பேராசைமிக்கவராகவோ இல்லை. கடவுளிடமிருந்து வரும் ஞானம் ‘சமாதானமும் சாந்தமும் . . . உள்ளதாயும், இரக்கத்தாலும் நற்கனிகளாலும் நிறைந்ததாயும்’ இருக்கிறது என யாக்கோபு எழுதினார்.—யாக்கோபு 3:17.
• தன் குடும்ப அங்கத்தினர்களை அவர் எவ்வாறு நடத்துகிறார்?—யாத்திராகமம் 20:12
அப்பா அம்மாவுக்கு மரியாதை காட்ட வேண்டுமென்பதில் குட்டிப் பிள்ளைகள் மட்டுமே கடமைப்பட்டில்லை. பைபிள் இவ்வாறு சொல்கிறது: “உன்னைப் பெற்ற தகப்பனுக்குச் செவிகொடு; உன் தாய் வயதுசென்றவனாகும்போது அவளை அசட்டைபண்ணாதே.” (நீதிமொழிகள் 23:22) டாக்டர் டபிள்யூ. ஹியூ மிசல்டின் ஆர்வத்துக்குரிய ஒன்றை எழுதினார்: “மணம் செய்துகொள்ள திட்டமிட்டுள்ள ஆண், பெண் இருவரும் தம் வருங்கால மாமனார் வீட்டுக்கு சாவகாசமாக செல்லலாம். அப்போது, தாம் மணக்கவிருப்பவர் தத்தம் பெற்றோருடன் எப்படி நடந்துகொள்கிறார் என்பதை கவனிப்பதற்கு வாய்ப்பு கிடைக்கலாம். இதனால், குடும்பத்தில் எழும்புகிற அநேக பிணக்குகள், கருத்து வேறுபாடுகள் ஆகியவற்றையாவது தவிர்க்கலாம் அல்லது அதை முன்கூட்டியே தெரிந்துகொள்ளலாம். அவருடைய பெற்றோரை அவர் எவ்வாறு கருதுகிறார் என்பது எதிர்காலத்தில் தன் துணையை அவர் எவ்வாறு கருதுவார் என்பதைக் காட்டும். ஒருவர் இவ்வாறு கேட்டுக் கொள்ளலாம்: ‘அவர் தன்னோட அப்பா அம்மாவ நடத்தற மாதிரி என்னையும் நடத்தறது எனக்கு இஷ்டமா?’ அவருடைய பெற்றோர் அவரை எவ்வாறு நடத்துகிறார்கள் என்பது அவர் எவ்வாறு நடந்துகொள்வார் என்பதையும், தேனிலவுக்கு பின்பு நீங்கள் எவ்வாறு அவரிடம் நடந்துகொள்ள வேண்டுமென எதிர்பார்ப்பார் என்பதையும் நன்கு சுட்டிக்காட்டும்.”
• அவர் தொட்டதற்கெல்லாம் மூக்குக்குமேலே கோபப்பட்டு வாய்க்கு வந்ததைப் பேசுகிறவரா?
“சகலவிதமான கசப்பும், கோபமும், மூர்க்கமும், கூக்குரலும், தூஷணமும், மற்ற எந்தத் துர்க்குணமும் உங்களைவிட்டு நீங்கக்கடவது” என பைபிள் அறிவுரை கூறுகிறது. (எபேசியர் 4:31) சில கிறிஸ்தவர்கள் “விவாதங்களிலும், சொற் போர்களிலும் பைத்தியம் கொண்டு” இதனால், “பொறாமை, போட்டி மனப்பான்மை, பழிச்சொல், பொல்லாத ஊகங்கள், ஓயாத மோதல்கள்” ஆகியவற்றுக்கு வழிவகுப்பார்கள் என தீமோத்தேயுவை பவுல் எச்சரித்தார்.—1 தீமோத்தேயு 6:4, 5, பொ.மொ.
இதோடுகூட, சபையில் முக்கிய பொறுப்புகளுக்காக தகுதி பெறுபவர் ‘அடிக்கிறவராய்’ இருக்கக்கூடாது.—மூல கிரேக்க மொழியின்படி, “கையாலோ கம்பாலோ அடிக்கிறவராய்” இருக்கக்கூடாது. (1 தீமோத்தேயு 3:3, NW அடிக்குறிப்பு) அவர் மற்றவர்களை செமத்தியாக வெளுக்கிறவராகவோ வார்த்தைகளையே சாட்டையாக பயன்படுத்துகிறவராகவோ இருக்கக்கூடாது. சட்டென்று கோபமடைந்து ஆத்திரப்படுகிற நபர் பொருத்தமான துணைவராக இருக்க மாட்டார்.
• அவருடைய லட்சியங்கள் என்ன?
சிலருக்கு பணம்தான் எல்லாமே. அதனால்வரும் தவிர்க்கமுடியாத தலைவலியால் கஷ்டப்படுவர். (1 தீமோத்தேயு 6:9, 10) மற்றவர்கள் எந்த லட்சியங்களும் இல்லாமல், மனம் போகிற போக்கிலே வாழ்வர். (நீதிமொழிகள் 6:6-11) தேவபக்தியுள்ள மனிதனோ, யோசுவா எடுத்த அதே தீர்மானத்தை தானும் எடுப்பார்; அவருடைய தீர்மானம் என்ன? “நானும் என் வீட்டாருமோவென்றால், கர்த்தரையே சேவிப்போம்.”—யோசுவா 24:15.
வெகுமதிகளும் பொறுப்புகளும்
திருமணம் ஒரு தெய்வீக ஏற்பாடு. இதை யெகோவா தேவனே அங்கீகரித்து ஸ்தாபித்தார். (ஆதியாகமம் 2:22-24) ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே நிரந்தர உறவை ஏற்படுத்துவதே இந்த திருமண ஏற்பாட்டின் நோக்கம். அதன் மூலம் அவர்கள் ஒருவருக்கொருவர் உதவி செய்ய முடியும். பைபிள் நியமங்களைப் பின்பற்றுகையில், கணவனும் மனைவியும் தங்கள் வாழ்க்கை எனும் இன்பக் கடலில் மூழ்கி திளைக்கலாம்.—பிரசங்கி 9:7-9.
“கையாளுவதற்கு கடினமான கொடிய காலங்களில்” நாம் வாழ்கிறோம் என்பது நினைவிலிருக்கட்டும். இக்காலப் பகுதியில் வாழ்கிறவர்கள், “தற்பிரியராயும், பணப்பிரியராயும், வீம்புக்காரராயும், அகந்தையுள்ளவர்களாயும், . . . பரிசுத்தமில்லாதவர்களாயும், சுபாவ அன்பில்லாதவர்களாயும், இணங்காதவர்களாயும், . . . துரோகிகளாயும், துணிகரமுள்ளவர்களாயும், இறுமாப்புள்ளவர்களாயும்” இருப்பார்கள் என பைபிள் முன்னறிவித்தது. (2 தீமோத்தேயு 3:1, NW; 2-4) இத்தகைய குணங்கள் ஒருவருடைய திருமண வாழ்வில் கடும் புயலை வீச செய்யலாம். எனவே, மணம் செய்வதைக் குறித்து யோசித்துக் கொண்டிருப்பவர்கள் அதனால் வரும் நல்லது கெட்டதை கவனமாய் சீர்தூக்கிப் பார்க்க வேண்டும். பைபிள் தரும் தெய்வீக கல்வியை கற்று அதை வாழ்க்கையில் பொருத்துவதன்மூலம் மணமானவர்களும்கூட தங்களுடைய உறவை தொடர்ந்து பலப்படுத்தலாம்.
ஆம், திருமண நாளை எதிர்பார்த்து சிந்தித்து கொண்டிருப்பவர்கள் திருமண நாளுக்கு அப்பாலும் தங்கள் சிந்தனையை ஓடவிட வேண்டும். திருமணம் என்பது ஒருநாள் கூத்தல்ல. காலா காலத்துக்கும் உள்ள பந்தம். இதை அனைவரும் மனதில் வைத்திருக்க வேண்டும். வழிநடத்துதலுக்காக யெகோவாவை சார்ந்திருங்கள். அப்போது மோகம் எனும் நிழலை அல்ல, வாழ்க்கை எனும் நிஜத்தை யோசித்துப்பார்க்க உங்களால் முடியும். அப்படி செய்தால், உங்கள் மணவாழ்க்கை எப்போதும் மலர்ந்திருக்கும்.
[அடிக்குறிப்புகள்]
a ‘வேசித்தனம்,’ அதாவது துணைவரல்லாத வேறொருவரோடு உடலுறவு கொள்வது மட்டுமே விவாகரத்து செய்வதற்கான ஒரே அடிப்படையென பைபிள் சொல்கிறது.—மத்தேயு 19:9.
[பக்கம் 5-ன் பெட்டி]
“இதுவரை வாசித்திராத அன்பின் வர்ணனை”
டாக்டர் கெவன் லீமன் இவ்வாறு எழுதுகிறார்: “உண்மையிலேயே நீங்கள் ஒருவரை நேசிக்கிறீர்கள் என எப்படி தெரிந்து கொள்வீர்கள்? அன்பை விதவிதமாக வர்ணிக்கிற ஒரு பழங்காலத்து புத்தகம் உண்டு. அதன் வயதோ கிட்டத்தட்ட இரண்டாயிரம். ஆனால் இது நான் இதுவரை வாசித்திராத அன்பின் வர்ணனை.”
1 கொரிந்தியர் 13:4-8-ல் உள்ள கிறிஸ்தவ அப்போஸ்தலர் பவுலின் வார்த்தைகளைத்தான் டாக்டர் லீமன் இவ்வாறு குறிப்பிடுகிறார்:
“அன்பு நீடிய சாந்தமும் தயவுமுள்ளது; அன்புக்குப் பொறாமையில்லை; அன்பு தன்னைப் புகழாது, இறுமாப்பாயிராது, அயோக்கியமானதைச் செய்யாது, தற்பொழிவை நாடாது, சினமடையாது, தீங்கு நினையாது, அநியாயத்தில் சந்தோஷப்படாமல், சத்தியத்தில் சந்தோஷப்படும். சகலத்தையும் தாங்கும், சகலத்தையும் விசுவாசிக்கும், சகலத்தையும் நம்பும், சகலத்தையும் சகிக்கும். அன்பு ஒருக்காலும் ஒழியாது.”
[பக்கம் 8-ன் பெட்டி]
உணர்ச்சிகள் வஞ்சிப்பவை
மோக உணர்ச்சியின் வஞ்சிக்கும் திறனை பைபிள் காலத்து சூலேமித்தியப் பெண் நன்றாக அறிந்திருந்தாள். பலம் பொருந்திய சாலொமோன் அரசன் திருமணம் செய்துகொள்ளுமாறு நயந்து கேட்டபோது, “காதலைத் தட்டி எழுப்பாதீர்; தானே விரும்பும்வரை அதைத் தட்டி எழுப்பாதீர்” என தன் தோழிகளிடம் சொன்னாள். (இனிமைமிகு பாடல் [உன்னதப்பாட்டு] 2:7, பொ.மொ.) உணர்ச்சிகளுக்கு கட்டுப்பட்டு, தோழிகள் தன் மனதை மாற்ற இந்தப் புத்திசாலி பெண் இடங்கொடுக்கவில்லை. இன்று திருமணத்தைப் பற்றி சிந்திக்கிறவர்களுக்கும் இது பொருந்தும். உங்கள் உணர்ச்சிகளை உங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருங்கள். நீங்கள் அந்நபரை நேசிப்பதால்தான் அவரை மணக்கிறீர்கள், திருமணமானவர் என்ற அந்தஸ்தைப் பெறவேண்டும் என்பதற்காக அல்ல.
[பக்கம் 6-ன் படம்]
மணவாழ்வில் வெள்ளிவிழா கண்டவர்களும்கூட தங்களுடைய உறவை பலப்படுத்த முடியும்
[பக்கம் 7-ன் படம்]
அவர் தன் பெற்றோரிடம் எப்படி நடந்துகொள்கிறார்?