இரும்பு திரைக்குப் பின் 40 வருடங்களுக்கு மேலாக
மைக்கேல் வாசிலேவிச் சாவீட்ஸ்கீ கூறியது
1951, ஏப்ரல் 1, 7, 8 தேதிகளில் யெகோவாவின் சாட்சிகளை “பெருமளவு அழிப்பது” நடைபெற்றது என ஏப்ரல் 1, 1956 தேதியிட்ட த உவாட்ச்டவர் அறிக்கை செய்தது. அது இவ்வாறு விளக்கியது: “ரஷ்யாவிலுள்ள யெகோவாவின் சாட்சிகள் இந்தத் தேதிகளை மறக்கவே மாட்டார்கள். இந்த மூன்று நாட்களில் மேற்கு உக்ரேன், வெள்ளை ரஷ்யா [பெலாரூஸ்], பேசராபியா, மால்டோவியா, லாட்வியா, லிதுவேனியா, எஸ்டோனியா போன்ற இடங்களில் இருந்த ஏழாயிரத்திற்கும் அதிகமான ஆண்கள், பெண்கள் என யெகோவாவின் சாட்சிகள் அனைவரும் . . . வண்டிகளில் திணிக்கப்பட்டு, இரயில் நிலையங்களுக்கு கொண்டுசெல்லப்பட்டு, மிருகங்களை அடைக்கும் இரயில் பெட்டிகளில் ஏற்றப்பட்டு, வெகு தொலைவான இடங்களுக்கு அனுப்பப்பட்டனர்.”
ஏப்ரல் 8, 1951-ல் உக்ரேனிலுள்ள டெர்னோபல் என்ற இடத்தின் சுற்றுவட்டாரத்தில் வாழ்ந்த அநேக சாட்சிகள் தங்கள் வீடுகளிலிருந்து இழுத்துவரப்பட்டனர். அதில், என் மனைவி, எட்டு மாத மகன், பெற்றோர், தம்பி, இன்னும் மற்ற சாட்சிகளும் அடங்குவர். மிருகங்களை அடைக்கும் இரயில் பெட்டிகளில் ஏற்றப்பட்ட அவர்கள் சுமார் இரண்டு வாரம் தொடர்ந்து பயணம் செய்தனர். கடைசியில், பைகால் ஏரிக்கு மேற்கிலுள்ள சைபீரிய டாய்காவில் (ஆர்க்டிக் வட்டத்தின் அருகிலுள்ள காட்டில்) இறக்கிவிடப்பட்டனர்.
இந்த அழிவிலிருந்து நான் எப்படி தப்பினேன்? அந்தச் சமயத்தில் நான் எங்கிருந்தேன், அதற்கு பிறகு எங்கள் அனைவருக்கும் என்ன நடந்தது என்பதைச் சொல்லுவதற்கு முன்பு நான் எப்படி யெகோவாவின் சாட்சிகளுள் ஒருவனானேன் என்பதை முதலில் உங்களுக்கு விளக்குகிறேன்.
பைபிள் சத்தியம் கிடைக்கிறது
எங்கள் சிறிய கிராமமான ஸ்லாவ்யாடின், டெர்னோபலிலிருந்து சுமார் 50 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. செப்டம்பர் 1947-ல் எனக்கு 15 வயதாக இருந்தபோது இரண்டு இளம் யெகோவாவின் சாட்சிகள் எங்கள் வீட்டிற்கு வந்தனர். அந்த இளம் பெண்கள் பேசுவதை அம்மாவும் நானும் கூர்ந்து கவனித்தபோது அவர்கள் ஏதோ ஒரு புதிய மதத்தைப் பற்றி பேசவில்லை என்பதைப் புரிந்துகொண்டேன். அவர்களில் ஒருவருடைய பெயர் மரீயா. அவர்கள் தங்களுடைய நம்பிக்கையை விளக்கி, பைபிளிலிருந்து நாங்கள் கேட்ட கேள்விகளுக்கு தெளிவான பதில்களைக் கொடுத்தனர்.
பைபிள் கடவுளுடைய வார்த்தை என நம்பினேன்; ஆனால் சர்ச்சின் போக்கு எனக்கு ஏமாற்றமளித்தது. “நரகத்துல வாதிக்கப்படுவீங்கனு பாதிரியாரு நம்மள பயமுறுத்துறாங்க, ஆனா அவங்களோ எதுக்கும் பயப்படுற மாதிரி தெரியல. அவங்க இன்னமும் ஏழைங்கள ஏமாத்தி சுரண்டிகிட்டுதான் இருக்கிறாங்க” என என் தாத்தா எப்போதும் சொல்லுவார். இரண்டாம் உலக யுத்தத்தின் ஆரம்பத்தில், எங்கள் கிராமத்தில் வாழ்ந்த போலந்து நாட்டவர் வன்முறைக்கு ஆளானதும் அவர்கள் உடைமைகள் தீக்கிரையானதும் என் மனதில் பசுமையாக பதிந்திருந்தது. இந்தத் தாக்குதல்கள் எல்லாம் கிரேக்க கத்தோலிக்க பாதிரியால் தூண்டிவிடப்பட்டது என்பதே அதிர்ச்சியூட்டும் உண்மை. அந்தச் சமயத்தில் கொல்லப்பட்டவர்களுடைய சடலங்கள் குவிந்துகிடப்பதை பார்த்தேன்; இப்படிப்பட்ட கொடுமைக்கு காரணம் என்ன என்பதை அறிய என் மனம் துடியாய் துடித்தது.
சாட்சிகளோடு பைபிளைப் படிக்கையில் என் மனத்திரை மெல்ல விலக ஆரம்பித்தது. எரி நரகம் என்ற ஒன்று இல்லை, யுத்தத்தையும் இரத்தம் சிந்துதலையும் தூண்டுவிக்க பிசாசாகிய சாத்தான் பொய் மதத்தை உபயோகிக்கிறான் போன்ற அடிப்படை பைபிள் சத்தியங்களை அறிந்தேன். என்னுடைய தனிப்பட்ட படிப்பின்போது நான் கற்றுக்கொள்பவற்றிற்காக அவ்வப்போது யெகோவாவுக்கு இருதயப்பூர்வமாக நன்றி செலுத்துவேன். என் தம்பி ஸ்டாக்கிடம் இந்தப் பைபிள் சத்தியங்களை சொன்னபோது அவன் ஏற்றுக்கொண்டான். அது என்னை மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தியது.
கற்றதை கடைப்பிடித்தல்
தனிப்பட்ட விதமாக மாற்றங்களை செய்யவேண்டும் என்பதை உணர்ந்தேன், ஆகவே அத்தோடு புகைபிடிப்பதற்கு முற்றுப்புள்ளி வைத்தேன். பைபிளை முறையாக படிப்பதற்கு மற்றவர்களோடு தவறாமல் கூடிவரவேண்டிய அவசியத்தையும் புரிந்துகொண்டேன். காட்டிற்குள் ஓர் இரகசிய இடத்தில் கூட்டங்கள் நடந்ததால் அங்கு செல்ல சுமார் 10 கிலோமீட்டர் நடந்தே போகவேண்டும். சில சமயங்களில் விரல்விட்டு எண்ணுமளவு சில பெண்கள் மட்டுமே கூட்டங்களுக்கு வந்தனர். நானோ முழுக்காட்டுதல் எடுக்காதவன்; இருந்தபோதும் கூட்டங்களை நான் நடத்தவேண்டி வரும்.
அப்போதெல்லாம் பைபிள் பிரசுரங்களை கையில் வைத்திருந்தாலே தொலைந்தோம்! அத்தோடு ஒருவர் பிடிபட்டால் அவ்வளவுதான், 25 வருட சிறைவாசம். இதையெல்லாம் அறிந்திருந்தும் எனக்கென்று சொந்தமாக ஒரு லைப்ரரி வைத்திருக்க ஆசைப்பட்டேன். எங்கள் வீட்டிற்கு பக்கத்தில் ஒருவர் யெகோவாவின் சாட்சிகளோடு படித்தார். ஆனால் பயத்தின் காரணமாக படிப்புக்கு முழுக்குப்போட்டுவிட்டு தன்னிடம் இருந்த பிரசுரங்களை எல்லாம் தோட்டத்தில் புதைத்துவிட்டார். அந்த எல்லா புத்தகங்களையும் பத்திரிகைகளையும் எனக்கு கொடுக்கும்படி கேட்டேன். அவர் மறுபேச்சு பேசாமல் ஒப்புக்கொண்டபோது யெகோவாவுக்கு எவ்வளவாக நன்றி சொன்னேன் தெரியுமா? அவற்றை எல்லாம் அப்பாவின் தேன்கூட்டில் ஒளித்து வைத்தேன். அங்குபோய் தேட வேண்டுமென்று யாருக்கு தோன்றும்?
ஜூலை 1949-ல் யெகோவாவுக்கு என் வாழ்க்கையை ஒப்புக்கொடுத்து முழுக்காட்டுதல் பெற்றேன். என் வாழ்க்கையிலேயே மிகவும் சந்தோஷமான நாள் அதுதான். அந்த இரகசியமான முழுக்காட்டுதலைக் கொடுத்த சாட்சி, ஓர் உண்மை கிறிஸ்தவனாக நிலைத்திருப்பது சுலபமல்ல என்றும் அநேக துன்பங்களை சந்திக்கவேண்டி வரும் என்றும் கூறினார். அவருடைய வார்த்தைகள் எவ்வளவு உண்மை என்பதை சீக்கிரத்திலேயே அறிந்துகொண்டேன்! இருந்தாலும் முழுக்காட்டுதலுக்கு பின் என் வாழ்க்கை சந்தோஷமாகவே ஆரம்பமானது. முழுக்காட்டுதல் எடுத்து இரண்டு மாதங்கள் கழித்து மரீயாவை திருமணம் செய்துகொண்டேன். அம்மாவுக்கும் எனக்கும் சத்தியத்தை அறிமுகப்படுத்திய இருவரில் இவரும் ஒருவர் என்பது உங்களுக்கு நினைவிருக்கிறதா?
திடீரென்று முளைத்த முதல் சோதனை
ஏப்ரல் 16, 1950-ல் பாட்கிட்ஸீ என்ற சிறிய கிராமத்திலிருந்து வீடு திரும்பும் வழியில் திடீரென்று சிப்பாய்கள் என்னை வளைத்துக்கொண்டனர். எங்களுடைய படிப்பு தொகுதிக்கான பைபிள் பிரசுரங்களை என்னிடத்தில் கண்டதால் என்னைக் கைது செய்தனர். காவலிலிருந்த முதல் சில நாட்களுக்கு ஒரே தடியடிதான்; சாப்பிடவோ தூங்கவோ விடவில்லை. தலையில் கையை வைத்துக்கொண்டு நூறு தோப்புக்கரணம் போட வைத்தனர். ஆனால் நான் மிகவும் பலவீனமாய் இருந்ததால் என்னால் அதை செய்ய முடியவில்லை. அதற்கு பிறகு குளிரும் ஈரமுமான பாதாள அறையில் 24 மணிநேரம் அடைக்கப்பட்டேன்.
ஏன் என்னை இந்தளவு கொடுமைப்படுத்தினர் தெரியுமா? இப்படியெல்லாம் செய்தால் நான் மறுப்பு தெரிவிக்காமல் அவர்களுடைய எல்லா கேள்விகளுக்கும் பதில் சொல்லிவிடுவேன் என்ற நம்பிக்கையில்தான். “இந்த புஸ்தகங்கள் உனக்கு எங்கிருந்து கிடைச்சது, யாருக்கு எடுத்துக்கிட்டு போன?” என்று கேட்டனர். நான் வாயே திறக்கவில்லை. பிறகு, எந்தச் சட்டத்தின் அடிப்படையில் எனக்கு தண்டனை வழங்கப்படுமோ அதிலிருந்து ஒரு பகுதியை வாசித்து காண்பித்தனர். சோவியத் அரசாங்கத்திற்கு எதிரான பிரசுரங்களை விநியோகித்தாலோ வைத்திருந்தாலோ மரண தண்டனை அல்லது 25 வருட சிறை தண்டனை என அதில் இருந்தது.
“உனக்கு எந்த தண்டனை வேணும்?” என்று கேட்டனர்.
“எனக்கு எதுவும் வேணாம். ஆனா யெகோவாமேல எனக்கு நம்பிக்கை இருக்கு. அவர் எத அனுமதிச்சாலும் அவருடைய உதவியோட அத ஏத்துக்குவேன்” என்று பதிலளித்தேன்.
ஏழு நாட்கள் கழித்து அவர்கள் என்னை விடுதலை செய்தபோது எனக்கு ஆச்சரியம் தாளவில்லை. “நான் உன்னைவிட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை” என்ற யெகோவாவின் வாக்குறுதி எவ்வளவு உண்மை என்பதை ருசிபார்க்க அந்த அனுபவம் எனக்கு உதவியது.—எபிரெயர் 13:5.
வீடு திரும்பியதும் வியாதியில் படுத்துவிட்டேன். ஆனால் அப்பா என்னை டாக்டரிடம் அழைத்து சென்றதால் சீக்கிரத்தில் குணமடைந்தேன். யெகோவாவை வணங்குவதில் அப்பா குடும்பத்தோடு சேர்ந்துகொள்ளவில்லை என்றாலும் அவர் எங்களை ஆதரித்தார்.
சிறைவாசமும் நாடு கடத்தப்படுவதும்
சில மாதங்கள் கழித்து சோவியத் படையில் சேரும்படி எனக்கு ஆணை வந்தது. மனசாட்சியின் நிமித்தம் அதில் சேர முடியாது என்பதை விளக்கினேன். (ஏசாயா 2:4) இருந்தாலும், பிப்ரவரி 1951-ல் நாலு வருடம் சிறை தண்டனை விதிக்கப்பட்டு டெர்னோபலில் இருந்த ஒரு சிறைக்கு அனுப்பப்பட்டேன். பின்னர், அங்கிருந்து சுமார் 120 கிலோமீட்டர் தொலைவிலுள்ள பெரிய நகரமான லவீஃப்பில் உள்ள சிறைக்கு மாற்றப்பட்டேன். சிறையில் இருக்கையில், அநேக சாட்சிகள் சைபீரியாவிற்கு நாடுகடத்தப்பட்டதை அறிந்தேன்.
1951-ன் கோடைகாலத்தில் எங்களில் சிலர் சைபீரியாவையும் தாண்டி தூர கிழக்கு தேசத்திற்கு அனுப்பப்பட்டோம். நாங்கள் சுமார் 11,000 கிலோமீட்டரும், நேர மண்டலங்களில் 11-ஐயும் கடந்து ஏறக்குறைய ஒரு மாதம் பயணம் செய்தோம்! இரண்டு வாரங்களுக்கு எங்கும் நிற்காமல் பயணம் தொடர்ந்தது. பிறகு, சைபீரியாவிலுள்ள நோவோசபிர்ஸ்க் என்ற இடத்தில் ஒரே ஒரு முறை வண்டி நின்றது; அப்போது அங்கிருந்த பெரிய பொது குளியலறையில் குளிப்பதற்காக அனுமதிக்கப்பட்டோம்.
அங்கே கைதிகளின் கூட்டம் நிரம்பிவழிந்தது. அவர்கள் மத்தியில் ஒருவர் உரத்த குரலில், “யோனதாப் குடும்பத்தை சேர்ந்தவங்க யாராவது இங்க இருக்கீங்களா?” என்று கேட்டார். அப்போது “யோனதாப்” என்ற பெயர், பூமியில் நித்திய ஜீவனைப் பெறும் நம்பிக்கை உள்ளவர்களை அடையாளப்படுத்த உபயோகிக்கப்பட்டது. (2 இராஜாக்கள் 10:15-17; சங்கீதம் 37:11, 29) அதற்கு அநேக கைதிகள் உடனடியாக ‘ஆமாம், இருக்கோம்’ என்றனர். எவ்வளவு சந்தோஷத்துடன் ஒருவரை ஒருவர் வரவேற்று மகிழ்ந்தோம் தெரியுமா?
சிறையில் ஆவிக்குரிய உணவு
நாங்கள் சேரவேண்டிய இடத்திற்கு போனபிறகு ஒருவரையொருவர் அடையாளம் கண்டுகொள்ள உதவியாக ஒரு சங்கேத வார்த்தையை உபயோகிக்க நோவோசபிர்ஸ்க்கில் இருந்தபோதே எங்களுக்குள் தீர்மானித்துக் கொண்டோம். கடைசியில், ஜப்பான் கடலில் அமைந்த, விளாடிவாஸ்டாக்கிற்கு அருகிலுள்ள ஒரு கைதி முகாமிற்குத்தான் நாங்கள் எல்லாருமே அனுப்பப்பட்டோம். அங்கு பைபிள் படிப்பிற்காக தவறாமல் கூட்டங்களை நடத்தினோம். உடலிலும் உள்ளத்திலும் முதிர்ந்த சில சகோதரர்களுக்கு நீண்டகால சிறை தண்டனை விதிக்கப்பட்டிருந்தது. அப்படிப்பட்டவர்களோடு இருந்தது என்னை ஆவிக்குரிய விதத்தில் பலப்படுத்தியது. அவர்கள், பைபிள் வசனங்களையும் காவற்கோபுர பத்திரிகைகளில் படித்ததையும் வைத்து ஒருவர் மாற்றி ஒருவராக கூட்டங்களை நடத்தினார்கள்.
கேள்விகள் கேட்பதும் சகோதரர்கள் பதில் சொல்வதுமாக கூட்டங்கள் நடந்தன. எங்களில் அநேகர், காலியான சிமெண்ட் சாக்குகளிலிருந்து சிறு காகித துண்டுகளை வெட்டி அதில் குறிப்புகளை எழுதிக்கொண்டோம். அந்தக் குறிப்புத்தாள்களை எல்லாம் ஒன்றாக சேர்த்து பாதுகாத்து வைத்தோம்; அது எங்களுக்கு தனிப்பட்ட லைப்ரரியாக உபயோகப்படும் அல்லவா? அதற்காகத்தான். சில மாதங்கள் கழித்து, நீண்டகால சிறைதண்டனை பெற்றவர்கள் சைபீரியாவின் வட கோடியிலுள்ள முகாம்களுக்கு அனுப்பப்பட்டனர். எங்களில் மூன்று இளம் சகோதரர்கள் நகாட்காவிற்கு அனுப்பப்பட்டோம். அது ஜப்பானிலிருந்து சுமார் 650 கிலோமீட்டர் தூரத்திலுள்ள ஒரு நகரமாகும். அங்கு இரண்டு வருடம் சிறையில் கழித்தேன்.
அத்திப் பூத்தாற்போல் காவற்கோபுரத்தின் ஒரு பிரதி எங்களுக்கு கிடைக்கும். அப்படி கிடைத்தால் பல மாதங்களுக்கு அதுவே எங்கள் ஆவிக்குரிய உணவு. கொஞ்ச காலம் கழித்து எங்களுக்கு கடிதங்களும் கிடைத்தன. (நாடு கடத்தப்பட்டிருந்த) என் குடும்பத்தாரிடமிருந்து எனக்கு கிடைத்த முதல் கடிதத்தைக் கண்டவுடன் என் கண்கள் குளமாயின. சாட்சிகளின் வீடுகளுக்குள் நுழைந்து சூறையாடினர் என்றும் இரண்டு மணிநேரத்திற்குள் வீட்டை காலி செய்யும்படி வற்புறுத்தினர் என்றும் அந்தக் கடிதத்தில் எழுதியிருந்தது. அறிமுகத்தில் மேற்கோள் காட்டப்பட்ட த உவாட்ச்டவர் பத்திரிகையும் இதையேதான் விவரித்தது.
பிரிந்த குடும்பம் இணைதல்
நாலு வருட சிறை தண்டனையில் இரண்டு வருடம் கழித்து டிசம்பர் 1952-ல் சுதந்திர பறவையானேன். சைபீரியாவிலுள்ள டுலூனுக்கு அருகிலிருக்கும் சிறிய கிராமமாகிய காடலேயில் என் குடும்பத்தாருடன் மறுபடியும் ஒன்று சேர்ந்தேன். நாடு கடத்தப்பட்ட பின் அவர்கள் அங்குதான் இருந்தனர். அவர்களை மறுபடியும் சந்தித்தது மட்டில்லா மகிழ்ச்சியை தந்தது. அப்போது என் மகன் ஈவானுக்கு ஏறக்குறைய மூன்று வயது, மகள் அன்னாவுக்கு இரண்டு வயது. ஆனாலும் சுதந்திர பறவையாக என்னால் எல்லைக் கடந்து பறக்கமுடியவில்லை. உள்ளூர் அதிகாரிகள் என் பாஸ்போர்ட்டை பறிமுதல் செய்துவிட்டனர்; அதுமட்டுமா என்னை எந்நேரமும் கண்காணித்து வந்தனர். எங்கள் வீட்டிலிருந்து மூன்று கிலோமீட்டருக்கு அப்பால் என்னால் செல்லமுடியாது. பின்னர், டுலூனிலுள்ள மார்கெட்டிற்கு குதிரையில் செல்ல அனுமதித்தனர். அப்போது மிகவும் எச்சரிக்கையுடன் சென்று உடன் சாட்சிகளை சந்தித்தேன்.
அதற்குள்ளாக எங்களுக்கு அன்னா, நாடியா என்ற இரண்டு பெண்களும் ஈவான், கால்யா என்ற இரண்டு பையன்களும் பிறந்தனர். 1958-ல் வலாட்யா என்ற மகனும் 1961-ல் கெல்யா என்ற மகளும் பிறந்தனர்.
கேஜிபி (முன்னாள் தேசிய பாதுகாப்பு அமைப்பு) என்னை அடிக்கடி அரெஸ்ட் செய்து விசாரித்தது. சபையைப் பற்றிய தகவலை என்னிடமிருந்து கறக்க வேண்டும் என்பது மட்டுமே அவர்களுடைய நோக்கமல்ல; ஆனால் நான் அவர்களுக்கு துணைபோகிறேன் என்ற சந்தேகத்தை கிளப்பவும் அவ்வாறு செய்தனர். அதனால் ஒரு நல்ல ஹோட்டலுக்கு என்னை அழைத்துச்சென்று அவர்களோடு சேர்ந்து நான் சிரித்து, சந்தோஷமாக இருப்பதைப் போன்ற ஃபோட்டோக்களை எடுக்க முயற்சித்தனர். அவர்களுடைய உள்நோக்கத்தை அறிந்தவனாய் வேண்டுமென்றே என் முகத்தை எப்போதும் உம்-என்று வைத்துக்கொண்டேன். ஒவ்வொரு முறையும் என்னை விசாரணைக்காக கொண்டு சென்றபோது என்ன நடந்தது என்பதை தெளிவாக சகோதரர்களிடம் சொல்லிவிடுவேன். ஆகவே அவர்கள் என் உண்மைத்தன்மையை துளியும் சந்தேகிக்கவில்லை.
முகாம்களில் இருப்பவர்களுக்கு உதவி
காலப்போக்கில் நூற்றுக்கணக்கான சாட்சிகள் முகாம்களில் தள்ளப்பட்டனர். இந்தச் சமயத்தில் சிறைப்பட்டிருந்த சகோதரர்களுக்கு தவறாமல் பிரசுரங்களை கொடுத்து வந்தோம். இதை எப்படி செய்தோம்? ஒரு முகாமிலிருந்து சகோதர சகோதரிகள் விடுதலை செய்யப்படும்போது, கெடுபிடியான காவலின் மத்தியிலும் அந்த முகாம்களுக்குள் பிரசுரங்களை எப்படி கடத்தலாம் என்பதை அவர்களிடமிருந்து தெரிந்துகொள்வோம். போலந்திலிருந்தும் மற்ற தேசங்களிலிருந்தும் எங்களுக்கு கிடைத்த பத்திரிகைகள், புத்தகங்கள் ஆகியவற்றின் பிரதிகளை இந்த முகாம்களில் இருந்த சகோதரர்களுக்கு பத்து வருடங்களாக தொடர்ந்து சப்ளை செய்துவந்தோம்.
ஒரு முழு பத்திரிகையையும் ஒரு சிறிய தீப்பெட்டிக்குள் அடைத்துவைக்கும் அளவுக்கு பிரசுரங்களில் உள்ளவற்றை பொடிப்பொடி எழுத்துக்களாக பல மணிநேரம் நகல் எடுப்பதில் கிறிஸ்தவ சகோதரிகளில் அநேகர் ஈடுபட்டிருந்தனர். தடையுத்தரவிற்கு பிறகு 1991-ல், நான்கு வண்ணங்களில் அழகான பத்திரிகைகள் எங்களுக்கு கிடைக்க ஆரம்பித்தபோது ஒரு சகோதரி, “இனிமே எங்கள எங்க ஞாபகம் வச்சுக்க போறீங்க” என்று சொன்னார். அவர் தப்புக்கணக்கு போட்டுவிட்டார். அப்படிப்பட்ட உண்மையுள்ளவர்களின் வேலையை மனிதர்கள் மறந்தாலும் யெகோவா ஒருபோதும் மறக்கவேமாட்டார்!—எபிரெயர் 6:10.
இடமாற்றமும் பெருந்துயர்களும்
1967-ன் பிற்பகுதியில் இர்குட்ஸ்க்கில் உள்ள என் தம்பியின் வீட்டை சோதனை போட்டனர். சில பிலிமும் பைபிள் பிரசுரங்களின் பிரதிகளும் சிக்கின. இதற்காக அவன் மூன்று வருடம் சிறை தண்டனை அனுபவித்தான். எங்கள் வீட்டில் சோதனை செய்தபோதோ அவர்களுக்கு ஒன்றும் கிட்டவில்லை. இருந்தாலும், நாங்களும் அதைச் சேர்ந்தவர்கள்தான் என்று அதிகாரிகள் நிச்சயமாக அறிந்திருந்ததால் நாங்கள் அந்த இடத்தைவிட்டு மாறிச்செல்ல வேண்டியிருந்தது. சுமார் 5,000 கிலோமீட்டர் மேற்கில் காகஸஸில் இருந்த நெவின்னமிஸ்க் என்ற நகரத்திற்கு மாறினோம். அங்கு சந்தர்ப்ப சாட்சி கொடுப்பதில் பிஸியாக இருந்தோம்.
ஜூன் 1969-ல் பள்ளி விடுமுறை தொடங்கிய முதல் நாளே பேராபத்து ஒன்று நிகழ்ந்தது. ஹை-வோல்டேஜ் எலக்டிரிக் டிரான்ஸ்பார்மர் அருகிலிருந்து பந்து ஒன்றை எடுப்பதற்காக எங்கள் 12 வயது மகன் கால்யா சென்றபோது அவனுக்கு பயங்கரமாக ஷாக் அடித்தது. அவனுடைய உடலில் 70 சதவிகிதத்திற்கும் அதிகம் கருகிவிட்டது. ஆஸ்பத்திரியில் இருந்தபோது அவன் என்னைப் பார்த்து, “அந்த தீவுக்கு நாம எல்லாரும் மறுபடியும் ஒன்னா போக முடியுமாப்பா?” என பரிதாபமாக கேட்டான். (நாங்கள் உல்லாச பயணமாக எப்போதும் ஒரு தீவுக்கு செல்வோம்; அதைப் பற்றி அவன் பேசினான்.) “அந்தத் தீவுக்கு நாம மறுபடியும் போவோம், கால்யா. இயேசு கிறிஸ்து உன்னை உயிர்த்தெழுப்பும்போது அந்தத் தீவுக்கு நாம நிச்சயமா போவோம்” என்று சொன்னேன். அரைகுறை உணர்விலும் தனக்கு பிரியமான இராஜ்ய பாடல் ஒன்றைப் பாடிக்கொண்டே இருந்தான். சபையின் ஆர்கெஸ்டிராவில் தன் டிரம்பெட்டில் அந்தப் பாடலை வாசிக்க அவனுக்கு கொள்ளை பிரியம். கடைசியில், உயிர்த்தெழுதலில் முழு நம்பிக்கை உள்ளவனாக மூன்று நாள் கழித்து இறந்தான்.
அதற்கு அடுத்த வருஷம் எங்களுடைய 20 வயது மகன் ஈவானுக்கு இராணுவத்தில் சேரும்படி ஆணை வந்தது. அவன் சேர மறுத்தபோது அவனை கைது செய்து மூன்று வருடம் சிறையில் அடைத்தனர். 1971-ல் இராணுவத்தில் சேவிக்கும்படி என்னை தெரிவு செய்தார்கள்; மறுத்தால் மறுபடியும் சிறை தண்டனை என பயமுறுத்தினார்கள். பல வருடங்களாக என் கேஸை இழுத்தடித்தார்கள். இதற்கிடையில் என் மனைவிக்கு கேன்சர் வந்ததால் அவளை அதிகமாக கவனிக்க வேண்டியிருந்தது. இதன் காரணமாக என் கேஸை தள்ளுபடி செய்தனர். மரீயா 1972-ல் இறந்தாள். அவள் எனக்கு அருமையான மனைவியாக இருந்ததோடு மரணம்வரை யெகோவாவுக்கும் உத்தமத்தன்மையை காத்துக்கொண்டாள்.
எங்கள் குடும்பம் நாலாபுறமும் பரவுகிறது
1973-ல் நீனாவை திருமணம் செய்துகொண்டேன். அவள் ஒரு சாட்சியானவுடன் அவளுடைய அப்பா அவளை 1960-ல் வீட்டைவிட்டு விரட்டியிருந்தார். அவளுக்கு ஊழியத்தில் அதிக ஈடுபாடு. முகாம்களில் இருந்தவர்களுக்காக பத்திரிகைகளை பிரதியெடுப்பதில் இராப்பகலாக உழைத்த சகோதரிகளில் அவளும் ஒருத்தி. என் பிள்ளைகளுக்கும்கூட அவள்மீது கொள்ளை ஆசை.
நெவின்னமிஸ்க்கில் எங்கள் ஊழியத்தைக் கண்டு கதிகலங்கிய அதிகாரிகள் உடனடியாக அந்த இடத்திலிருந்து வேறு இடத்திற்கு செல்ல வற்புறுத்தினர். ஆகவே 1975-ல் என் மனைவி மகள்களுடன் ஜார்ஜியாவிலிருந்த தென் காகஸஸ் பகுதிக்கு குடிமாறினோம். அதே சமயத்தில் என் மகன்கள் ஈவானும் வலாட்யாவும் கஸகஸ்தானின் தென் எல்லையில் இருந்த ஜாம்புல் என்ற இடத்திற்கு மாறிச்சென்றனர்.
ஜார்ஜியாவில் யெகோவாவின் சாட்சிகளுடைய வேலை அப்போதுதான் ஆரம்பமாகி இருந்தது. கருங்கடல் கரையோரத்தில் அமைந்த காக்ரா, சுக்குமீ போன்ற நகரங்களிலும் அவற்றைச் சுற்றிலும் சந்தர்ப்ப சாட்சி கொடுத்தோம். ஒரு வருடம் கழித்து பத்து புதிய சாட்சிகள் ஒரு மலையாற்றில் முழுக்காட்டுதல் பெற்றனர். சீக்கிரத்திலேயே அந்த இடத்தை காலிசெய்யும்படி அதிகாரிகள் எங்களை வற்புறுத்தினர்; ஆகவே கிழக்கு ஜார்ஜியாவுக்கு மாறினோம். அங்கே செம்மறியாட்டைப் போன்ற ஜனங்களை கண்டுபிடிப்பதில் தீவிரமாய் இறங்கினோம்; யெகோவா எங்களை அபரிமிதமாக ஆசீர்வதித்தார்.
நாங்கள் சிறு சிறு தொகுதிகளாக கூடி கூட்டம் நடத்தினோம். மொழி ஒரு பிரச்சினையாக இருந்தது; ஏனென்றால் எங்களுக்கு ஜார்ஜியன் மொழி தெரியாது, சில ஜார்ஜியர்களுக்கோ ரஷ்ய மொழி நன்றாக தெரியாது. ஆரம்பத்தில் ரஷ்யர்களுக்கு மட்டுமே பைபிள் படிப்புகள் நடத்தினோம். ஆனால் சீக்கிரத்திலேயே ஜார்ஜிய மொழியில் பிரசங்கிக்கவும் போதிக்கவும் முடிந்தது. இப்போதோ ஜார்ஜியாவில் ஆயிரக்கணக்கான ராஜ்ய பிரஸ்தாபிகள் உள்ளனர்.
1979-ல் கேஜிபியின் தொந்தரவு தாங்காமல் என்னுடைய முதலாளி, நான் இனிமேலும் அந்த நாட்டில் இருக்கமுடியாது என்று கூறிவிட்டார். அந்தச் சமயத்தில்தான் என் மகள் நாடியாவும் அவளுடைய இளம் மகளும் ஒரு கோரமான கார் விபத்தில் சிக்கி இறந்துபோனார்கள். அதற்கு முந்தின வருடம்தான் என் அம்மா நெவின்னமிஸ்க்கில் இறந்துபோனார்கள்; கடைசிவரை அவர் யெகோவாவுக்கு உண்மையுள்ளவராக இருந்தார். இப்போது அப்பாவும் தம்பியும்தான் இருந்தனர்; ஆகவே நாங்கள் திரும்பிச்செல்ல முடிவுசெய்தோம்.
சகித்திருந்ததால் ஆசீர்வாதங்கள்
நெவின்னமிஸ்க்கில் தொடர்ந்து இரகசியமாக பைபிள் பிரசுரங்களை அச்சிட்டு வந்தோம். மத்திப 1980-களில் ஒருமுறை விசாரணைக்காக அதிகாரிகள் என்னை அழைத்தபோது, பத்திரிகைகளை ஒளித்துவைப்பதைப் போல் கனவு கண்டேன் என்று அவர்களிடம் கூறினேன். அவர்கள் சிரித்தனர். நான் அங்கிருந்து திரும்பியபோது அவர்களில் ஒருவர், “உங்க பத்திரிகைகள ஒளிச்சு வைக்கிறதபத்தி இனிமே கனவுகாண வேணாம்” என்று கூறினார். “சீக்கிரத்திலேயே உங்க பத்திரிகைகள நீ அலமாரிலே வைச்சு அழகு பாக்கலாம். உன் மனைவியோட கைகோத்துகிட்டு இன்னொரு கையில உன் பைபிளையும் பிடிச்சுக்கிட்டு நீ மீட்டிங்குக்கு போகபோற நாள் வெகு தூரத்துல இல்ல” என்று கூறி முடித்தார்.
1989-ல் என் மகள் அன்னா, மூளையில் ஏற்பட்ட அனூரிஸத்தால் இறந்தது எங்களுக்கு பேரிடியாக இருந்தது. அவளுக்கு அப்போது 38 வயதுதான். அதே வருடம் ஆகஸ்டில், நெவின்னமிஸ்க்கில் இருந்த சாட்சிகள் ஒரு முழு டிரெயினை வாடகைக்கு பிடித்து போலந்திலிருந்த வார்ஸாவில் நடந்த சர்வதேச மாநாட்டிற்கு சென்றனர். அங்கு 60,366 பேர் ஆஜராகியிருந்தனர்; சோவியத் யூனியனிலிருந்து வந்திருந்த ஆயிரக்கணக்கானோரும் அதில் அடங்குவர். நாங்கள் காண்பது கனவா நனவா என மலைத்தோம்! பிறகு இரண்டு வருடங்களுக்குள், மார்ச் 27, 1991-ல், சரித்திரத்தின் பொன்னேட்டில் பொறிக்கப்பட்ட ஓர் ஆவணம் மாஸ்கோவில் கையெழுத்தானது; அது, யெகோவாவின் சாட்சிகளுடைய மத அமைப்பை சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கும் ஒன்று. அதில் கையெழுத்திட்ட சோவியத் யூனியனைச் சேர்ந்த, வெகுநாள் சேவைசெய்த ஐந்து மூப்பர்களுள் நானும் ஒருவனாக இருக்கும் பாக்கியத்தைப் பெற்றேன்!
உயிரோடிருக்கும் என் பிள்ளைகள் யெகோவாவை உண்மையுடன் சேவிக்கிறார்கள் என்றறிவது எனக்கு மட்டில்லா மகிழ்ச்சியே. கடவுளுடைய புதிய உலகத்தில், அன்னா, நாடியா, நாடியாவின் மகள், கால்யா ஆகியோரை மறுபடியும் சந்திக்க ஆவலோடு காத்திருக்கிறேன். கால்யா உயிர்த்தெழும்போது அவனுக்கு கொடுத்த வாக்குறுதியை தவறாமல் நிறைவேற்றுவேன். அநேக வருடங்களுக்கு முன்பு நாங்கள் எல்லாரும் உல்லாச பயணம் சென்ற அந்தத் தீவுக்கு அவனை நிச்சயம் அழைத்துச் செல்வேன்.
இதற்கிடையில், இப்பெரிய தேசத்தில் பைபிள் சத்தியம் வேகமாக வளருவதைப் பார்ப்பதில் பேரானந்தம் அடைகிறேன். என் வாழ்க்கையில் எனக்கு முழு திருப்தி. அவருடைய சாட்சிகளில் ஒருவனாக இருக்க வாய்ப்பளித்ததற்கு யெகோவாவுக்கு நன்றி செலுத்துகிறேன். சங்கீதம் 34:8 சொல்வது எவ்வளவு உண்மை: “கர்த்தர் நல்லவர் என்பதை ருசித்துப்பாருங்கள்; அவர்மேல் நம்பிக்கையாயிருக்கிற மனுஷன் பாக்கியவான்.”
[பக்கம் 25-ன் படம்]
டுலூனில் என் குடும்பத்தோடு மறுபடியும் சேர்ந்தபோது
[பக்கம் 26-ன் படம்]
மேலே: சைபீரியாவிலுள்ள டுலூனில் இருக்கும் எங்கள் வீட்டிற்கு வெளியே என் அப்பாவும் என் பிள்ளைகளும்
மேலே வலது: கார் விபத்தில் இறந்துபோன என் மகள் நாடியாவும் அவளுடைய மகளும்
வலது: 1968-ல் எடுத்த குடும்ப படம்