“ஆழ்கடலின் ஆபத்துகள்”
மத்தியதரைக் கடலில் 276 பேரை சுமந்து சென்ற அந்தக் கப்பல் நள்ளிரவில் அங்கிருக்கும் ஒரு தீவை நெருங்கியது. கடந்த 14 நாட்களாக புயலின் கோரப்பிடியில் சிக்கித் தவித்த மாலுமிகளும் பயணிகளும் நொந்து வெந்து போயிருந்தனர். அதிகாலையில் அவர்கள் ஒரு வளைகுடாவை தூரத்தில் கண்டு கப்பலை கரைசேர்க்க முயற்சித்தார்கள். அந்தக் கப்பலின் முன்பகுதி தரைதட்டி எக்குத்தப்பாக மணலில் மாட்டிக்கொண்டது; அப்போது அலைகள் பயங்கரமாக கப்பல் மீது மோதியமையால் கப்பலின் பின்பகுதி சுக்குநூறாக சிதறியது. அந்தக் கப்பலில் பயணம் செய்த அனைவரும் தப்பித்தோம் பிழைத்தோம் என்று தங்கள் உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு கடலில் குதித்து, நீந்தியோ அல்லது கையில் கிடைத்த கட்டைகளை பிடித்து மிதந்தோ மால்டாவின் கரைக்கு வந்து சேர்ந்தனர். நடுங்கும் குளிர், அதில் ஏற்கெனவே களைத்து நொந்துபோனவர்கள் கோபத்துடன் சீறும் கடலிலிருந்து மெதுவாக கரைமீண்டார்கள். அவ்வாறு மீண்டு வந்த பயணிகளில் கிறிஸ்தவ அப்போஸ்தலன் பவுலும் இருந்தார். அவர் வழக்கு விசாரணைக்காக ரோமுக்குக் கைதியாக அழைத்து செல்லப்படும்போது இந்நிகழ்ச்சி சம்பவித்தது.—அப்போஸ்தலர் 27:27-44.
கடல் பயணத்தின்போது கப்பல் சேதமடைந்து மால்டா தீவிற்கு அருகில் உயிர் பிழைத்தது பவுலுக்கு முதல் அனுபவம் அல்ல. இது நடப்பதற்கு சில ஆண்டுகளுக்கு முன் அவர் இவ்வாறு எழுதினார்: “மூன்றுமுறை கப்பல் சிதைவில் சிக்கினேன்; ஓர் இரவும் பகலும் ஆழ்கடலில் அல்லலுற்றேன்.” இதோடுகூட தான் “கடலிலும் இடர்கள்” அனுபவித்ததாக அறிவித்தார். (2 கொரிந்தியர் 11:25-27, பொது மொழிபெயர்ப்பு) ‘புறஜாதிகளுக்கு அப்போஸ்தலன்’ என்ற தனிச்சிறப்பு வாய்ந்த சேவைக்கு கடவுளால் நியமிக்கப்பட்டார். அதை நிறைவேற்றுவதற்கு கடல் பிரயாணங்கள் அவருக்கு உதவி செய்தன.—ரோமர் 11:13.
முதல் நூற்றாண்டில் கடல் பயணத்தில் எவ்வளவு தொலைவு பயணிக்க முடிந்தது? இது கிறிஸ்தவத்தை பரப்புவதற்கு எவ்வளவு உதவியாக இருந்தது? எந்தளவிற்கு பாதுகாப்பானது? எப்படிப்பட்ட கப்பல்கள் பயன்படுத்தப்பட்டன? எவ்விதம் பிரயாணிகள் கப்பலில் பயணித்தனர்?
ரோமின் வியாபாரத்தில் கப்பலின் பங்கு
மத்தியதரைக் கடலை ரோமர்கள் மாரெ நோஸ்ட்ரம் என்று அழைத்தனர். அதற்கு எங்கள் கடல் என்று அர்த்தம். ராணுவக் காரணங்களுக்கு மட்டுமல்லாது வேறு பல காரணங்களுக்காகவும் கடல் பாதைகளை தன்னுடைய கட்டுப்பாட்டில் வைக்கவேண்டிய அவசியம் ரோமுக்கு ஏற்பட்டது. ரோமப் பேரரசின் அநேக நகரங்கள் துறைமுகப் பட்டணங்களாக இருந்தன அல்லது துறைமுகங்களைச் சார்ந்திருந்தன. உதாரணத்திற்கு, ரோமுக்கு அருகில் இருந்த ஆஸ்டியா துறைமுகம் மாநகரத்திற்கு எல்லா விதத்திலும் பயன்பட்டது. கொரிந்து பட்டணம், லேக்கியம், கெங்கிரேயா என்ற துறைமுகங்களைப் பயன்படுத்தியது. சிரியாவிலிருந்த அந்தியோகியா, செலுசியா துறைமுகத்தை பயன்படுத்தியது. இப்படிப்பட்ட துறைமுகங்கள் நல்லவிதமாக கடல் மார்க்கங்களால் இணைக்கப்பட்டிருந்தமையால் ஒன்றுக்குள் ஒன்று என்று எல்லா நகரங்களோடும் நல்ல தகவல் தொடர்பு இருந்தது. இதனால் ரோம் தன் ஆட்சியில் இருந்த மாகாணப் பகுதிகளை இழுத்துப் பிடித்து தன் கட்டுப்பாட்டில் வைத்தது.
உணவு தானியங்களை எடுத்து வருவதற்கு கப்பலை விட்டால் ரோமுக்கு வேறு கதியில்லை. அப்போதிருந்த ரோமின் ஜனத்தொகை கிட்டத்தட்ட பத்து லட்சம். ஆகவே ரோமின் உணவு தானியங்களின் தேவை மிக அதிகம்; ஒரு வருடத்திற்கு சுமார் 2,50,000 டன் முதல் 4,00,000 டன். இவ்வளவு உணவு தானியங்களும் எங்கிருந்து கொண்டுவரப்படும்? இரண்டாம் ஏரோது அகிரிப்பா என்பவர் சொன்னதாக ஃபிளேவியஸ் ஜோஸிஃபஸ் கீழ்க்காணும் தகவலை அளிக்கிறார். ரோம் நகரத்துக்கு ஒரு வருடத்திற்குத் தேவையான உணவு தானியங்களை எட்டு மாதம் வட ஆப்பிரிக்காவும் மீதமுள்ள நான்கு மாதம் எகிப்தும் வழங்கின. உணவு தானியங்களை இந்நகரத்திற்கு வழங்குவதில் ஆயிரக்கணக்கான கப்பல்கள் கருமமே கண்ணாக உழைத்தன.
ரோமில் வாழ்ந்த மக்களின் ஆடம்பரத் தேவைகளைப் பூர்த்தி செய்வதிலும் கப்பல் தொழில் அதிக லாபத்தை தந்தது. கனிப்பொருட்கள், கல், சலவைக்கல் போன்றவை சைப்ரஸ், கிரீஸ், எகிப்து ஆகிய நாடுகளிலிருந்து அனுப்பப்பட்டன. கட்டைகள் லெபனானிலிருந்து அனுப்பப்பட்டன. சிமிர்னாவிலிருந்து திராட்சரசமும், டமாஸ்கஸிலிருந்து முந்திரி போன்றவையும், பாலஸ்தீனத்திலிருந்து பேரீச்சம்பழங்களும் அனுப்பப்பட்டன. சிலிசியாவிலிருந்து களிம்பு வகைகளும் ரப்பரும், மிலிடஸ், லவோதிக்கேயா போன்ற இடங்களிலிருந்து கம்பளியும், சிரியா, லெபனான் பகுதிகளிலிருந்து நெசவுப் பொருட்களும், தீரு, சீதோன் போன்ற இடங்களிலிருந்து ஊதா துணிகளும் அனுப்பப்பட்டன. தியத்தீராவிலிருந்து சாயங்களும், அலெக்சந்திரியா சீதோன் போன்ற இடங்களிலிருந்து கண்ணாடியும் அனுப்பப்பட்டது. பட்டு, பருத்தி, தந்தம், வாசனைப் பொருட்கள் போன்றவை சீனாவிலிருந்தும் இந்தியாவிலிருந்தும் இறக்குமதி செய்யப்பட்டன.
பவுல் பயணம் செய்து மால்டாவில் கவிழ்ந்த கப்பலைப் பற்றி என்ன சொல்லலாம்? அது உணவு தானியங்களை ஏற்றிக்கொண்டு ‘இத்தாலிக்குப் போய்க்கொண்டிருந்த அலெக்சந்திரியாவின் கப்பல்.’ (அப்போஸ்தலர் 27:6, NW அடிக்குறிப்பு) இது போன்ற கப்பல்களை கிரேக்கர்கள், பெனிக்கே, சிரியா தேசத்தவர்கள் சொந்தமாக வைத்திருந்தனர். அவர்கள் அவற்றை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்து தேவையான பொருட்களை அவற்றில் ஏற்றினர். ஆனால் அவற்றை அரசாங்கம் வாடகைக்கு எடுத்திருந்தது. இதைப் பற்றி சரித்திர ஆசிரியராகிய வில்லியம் எம். ராம்சே பின்வருமாறு குறிப்பிடுகிறார்: “வரிவசூலிப்பது எப்படியோ, அப்படியே இந்த வேலையையும் கான்ட்ராக்ட் விட்டுவிடுவது அரசாங்கத்திற்கு சுலபமாக இருந்தது. அரசாங்கமே இந்த வேலையை இழுத்துப் போட்டுக்கொண்டு செய்வதென்றால் ஆட்களை நியமிப்பதிலும் ஒழுங்கமைப்பதிலும் எக்கச்சக்கமாக செலவழிக்க வேண்டும்.”
கடைசியாக பவுல் ரோமுக்கு கப்பல் மூலம் வந்து தன்னுடைய பயணத்தை முடித்தார். அந்தக் கப்பலின் முகப்பில் “ஸீயஸின் குமாரர்கள்” என்று எழுதப்பட்டிருந்தது. இதுவும்கூட அலெக்சந்திரியாவிலிருந்து வந்த கப்பலே. இது நேபிள்ஸ் வளைகுடாவிலிருந்த புத்தேயோலி என்ற துறைமுகத்தை அடைந்தது. உணவுதானியங்களை ஏற்றிவரும் கப்பல்களிலிருந்து சரக்குகளை ஏற்றி இறக்கும் வசதி இந்தத் துறைமுகத்தில்தான் இருந்தது. (அப்போஸ்தலர் 28:11-13, NW) இப்போது புஸோலி என்று அழைக்கப்படும் புத்தேயோலியில்தான் சரக்குகள் தரையிறக்கப்பட்டன, அல்லது சிறுசிறு கப்பல்கள் மூலம் கடற்கரையை ஒட்டி வடக்கே பயணித்து டைபர் ஆற்றின் வழியே ரோமின் மத்திய பாகத்தை எட்டின.
சரக்குக் கப்பல்களில் பயணிகளின் நிலை
பவுலும் அவரைக் காவல் காத்த ராணுவ வீரர்களும் சரக்குக் கப்பலில் ஏன் பயணம் செய்தனர்? இந்தக் கேள்விக்கு பதிலளிக்க வேண்டுமென்றால் ஒரு பயணியாக அந்தக் காலத்தில் கப்பலில் பயணம் செய்யும்போது ஏற்படும் சங்கடங்களைத் தெரிந்துகொள்ள வேண்டும்.
பொது சகாப்தம் முதல் நூற்றாண்டில் பயணிகளுக்கென்று தனிப்பட்ட முறையில் கப்பல் போக்குவரத்தே கிடையாது. எல்லா பயணிகளும் வியாபாரத்திற்காக பொருட்களை ஏற்றி செல்லும் கப்பலில்தான் முட்டி மோதி பயணம் செய்தனர். அரசாங்க அதிகாரிகள், கல்விமான்கள், பிரசங்கிகள், மந்திரவாதிகள், கலைஞர்கள், விளையாட்டு வீரர்கள், வணிகர்கள், சுற்றுலா பயணிகள், யாத்திரீகர்கள் போன்றோர் இவற்றில் புளிமூட்டைபோல் அடைபட்டு பயணித்திருக்கலாம்.
பயணிகளையும் சரக்குகளையும் ஏற்றிச் சென்ற சிறிய படகுகள் கரையோரமாக பயணம் செய்தன என்பது உண்மைதான். துரோவா பட்டணத்திலிருந்து ‘மக்கெதோனியாவிற்கு வருவதற்கு’ பவுல் அப்படிப்பட்ட கலத்தை பயன்படுத்தியிருக்கலாம். ஆதன்ஸுக்கு வருவதற்கும் பின்பு அங்கிருந்து செல்வதற்கும்கூட கலங்களில் அவர் சில முறை பயணித்திருக்கலாம். ஆசியா மைனருக்கு அருகில் இருந்த தீவுகளின் வழியாக துரோவாவிலிருந்து பத்தாராவிற்கு சிறிய கப்பல்களிலேயே வந்திருக்கலாம். (அப்போஸ்தலர் 16:8-11; 17:14, 15; 20:1-6, 13-15; 21:1) இப்படிப்பட்ட சிறிய கலங்களைப் பயன்படுத்தியதால் நேரத்தை மிச்சமாக்க முடிந்தது; ஆனால் அவற்றில் கரையை விட்டு வெகுதூரம் செல்ல முடியாது. ஆகவே பவுலை சைப்ரஸுக்கும் அங்கிருந்து பம்பிலியாவுக்கும் ஏற்றிச் சென்ற கப்பல்கள் பெரிய கலங்களாகவே இருந்திருக்க வேண்டும். அதைப்போலவே எபேசுவிலிருந்து செசரியாவிற்கும் பத்தாராவிலிருந்து தீருவுக்கும் செல்ல அவர் ஏறிச்சென்ற கப்பல்களும் ஏறக்குறைய பிரமாண்டமானதாகவே இருந்திருக்க வேண்டும். (அப்போஸ்தலர் 13:4, 13; 18:21, 22; 21:1-3) அவற்றைப் போலவே மால்டாவில் விபத்துக்குள்ளான கப்பலும் பெரியதாகவே இருந்திருக்க வேண்டும். அப்படிப்பட்ட கப்பல்களின் கொள்ளளவு என்ன?
இலக்கியங்களில் பெற்ற தகவல்களின் அடிப்படையில் ஒரு அறிஞர் பின்வருமாறு குறிப்பிடுகிறார்: “அந்தக் காலத்து ஜனங்கள் உபயோகித்த மிகச்சிறிய கப்பலின் கொள்ளளவு சுமார் 70 முதல் 80 டன் எடையிருக்கும். கிரேக்கர்களின் காலத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற கப்பல்களின் கொள்ளளவு சுமார் 130 டன். சாதாரணமாக காணப்படும் 250 டன் கொள்ளளவுள்ள கப்பல்கள் சராசரி கப்பல்களைவிட பெரியவை. ரோமர்களின் காலத்தில் அரசாங்க போக்குவரத்திற்காக பயன்படுத்தப்பட்ட கப்பல்கள் இவற்றைவிட பெரியவை. அதற்காக 340 டன் கொள்ளளவான கப்பலை அவர்கள் விரும்பி தயாரித்தனர். இவற்றையும்விட பிரமாண்டமாக, அக்காலத்தில் இருந்த எல்லா கப்பல்களையும்விட பெரிதாக 1300 டன் கொள்ளளவு உள்ள கப்பல்களும் இருந்தன.” பொது சகாப்தம் இரண்டாவது நூற்றாண்டில் எழுதப்பட்ட ஒரு குறிப்பின்படி, அலெக்சந்திரியாவிலிருந்து உணவுதானியங்களை ஏற்றி வரும் ஐசிஸ் என்ற கப்பல் 55 மீட்டருக்கும் அதிக நீளம். அது சுமார் 14 மீட்டர் அகலமும், அதனுடைய சரக்குகளை ஏற்றிவைக்கும் இடத்தின் உயரம் சுமார் 13 மீட்டரும் இருந்திருக்கும். சுமார் ஆயிரம் டன்னுக்கும் அதிகமான உணவு தானியங்களையும் நூற்றுக்கணக்கான பிரயாணிகளையும் ஏற்றிச் செல்லும் திறன் அதற்கு இருந்தது.
இப்படிப்பட்ட உணவு தானியக் கப்பல்களில் பயணிகளுக்கு எப்படிப்பட்ட ‘கவனிப்பு’ இருந்தது? முக்கியமாக இந்தக் கப்பல்கள் சரக்குகளை கொண்டு செல்வதற்கே, அதனால் பிரயாணிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுவதில்லை. அவர்களுக்கு கப்பலில் உணவு வழங்கப்படுவதில்லை. தண்ணீர் மட்டுமே வழங்கினார்கள். அவர்கள் கப்பலின் தளத்தில் இரவில் கூடாரம் அமைத்து தங்குவார்கள் காலையில் அவற்றைப் பிரித்துவிடுவார்கள். கப்பலில் உள்ள சமையலறையை உபயோகிப்பதற்கு பயணிகள் அனுமதிக்கப்பட்டார்கள் என்பது உண்மைதான் என்றாலும் அவர்களே எல்லாவற்றையும் பார்த்துக் கொள்ள வேண்டும். சமைப்பது, சாப்பிடுவது, ‘காக்கா குளியல்’ குளிப்பது, தூங்குவது இவற்றிற்கு தேவையான பாத்திரங்கள், படுக்கை, போர்வை போன்றவற்றையெல்லாம் கவனித்துக்கொள்ள வேண்டியது பயணிகளின் பொறுப்பு.
கப்பற்பயணம் எந்தளவிற்கு பாதுகாப்பானது?
முதல் நூற்றாண்டில் வாழ்ந்த மாலுமிகளிடம் நவீன கருவிகளெல்லாம் இருந்ததில்லை. அவர்களிடம் சாதாரண திசைமானிகூட இருந்ததில்லை; எனவே கப்பலை செலுத்த அவர்கள் தங்கள் ‘கழுகு’ கண்களையே நம்பினர். இதன்காரணமாக பனியும் மப்பும் மந்தாரமும் இல்லாத தெளிவாக பார்க்க இயலும் காலமான மே மாதத்தின் பிற்பகுதியிலிருந்து மத்திப செப்டம்பர் வரை பயணம் செய்வது பாதுகாப்பானது. மே மாதத்திற்கு முன்பாகவும் செப்டம்பர் மாதத்திற்கு பின்பாகவும் இரண்டு மாதங்களுக்கு சில வியாபாரிகள் துணிந்து கடல் பயணத்தில் இறங்குவார்கள். ஆனால், பனிக்காலத்தில் நில எல்லைக்குறிகளையும், பகல் நேரத்தில் சூரியனையும், இரவு நேரத்தில் சந்திரனையும் நட்சத்திரங்களையும் மூடுபனியும் மேகங்களும் மறைத்துவிடுகின்றன. ஆகவே நவம்பர் 11 முதல் மார்ச் 10 வரை கப்பற்பிரயாணம் மூடப்பட்டதாக (லத்தீனில் மாரே க்லாசும்) எண்ணப்பட்டது. தவிர்க்க முடியாத அவசியத்திற்காகவோ அல்லது எதிர்பாராத அவசரத்திற்காகவோ மட்டுமே அந்தச் சந்தர்ப்பங்களில் பயணம் செய்தனர். இப்படிப்பட்ட சமயங்களில் பயணிக்கிறவர்கள் குளிர்காலத்தை வேறு நாட்டின் துறைமுகத்தில் கழிக்க வேண்டிய கட்டாயத்திற்குள்ளாகிறார்கள்.—அப்போஸ்தலர் 27:12; 28:11.
கப்பற்பயணம் அபாயகரமானதாக இருந்ததுடன், குறிப்பிட்ட மாதங்களில் மட்டுமே பயணம் செய்ய இயலும் என்ற நிலையும் இருந்தது. அப்படியிருந்தும் தரை பயணத்தைவிட கூடுதல் நன்மைகள் இருந்தனவா? இதற்கு பதில் ஆம் என்பதே! கடலில் பயணம் செய்வதால் அதிக சோர்வு ஏற்படுவதில்லை, இது மலிவானதும் வேகமானதும்கூட. காற்று மட்டும் அவர்களுக்கு கை கொடுத்தால் ஒரு நாளைக்கு கிட்டத்தட்ட 150 கிலோமீட்டர் சென்று விடுவார்கள். சாதாரணமாக நடந்து தொலைதூரப்பயணம் செய்பவர்கள் ஒரு நாளைக்கு மிஞ்சி மிஞ்சிப்போனால் 25-லிருந்து 30 கிலோமீட்டர் தூரம்தான் செல்ல முடியும்.
கப்பலின் வேகம் முழுக்க முழுக்க காற்றையே சார்ந்திருந்தது என்று சொல்லலாம். மிக நல்ல கப்பற்பயண சீசனிலும் எகிப்திலிருந்து இத்தாலிக்கு செல்வதென்றால் எதிர்காற்றை சமாளித்துதான் கப்பலை செலுத்தியாக வேண்டும். ஆசியா மைனரில் உள்ள லீசீயாவின் கரையோரத்தில் செல்லும்போது ரோது தீவு, அல்லது மீறா அல்லது வேறு ஒரு துறைமுகத்தின் வழியாக செல்வதே குறுக்கு வழி. ஒரு சமயம் அலெக்சந்திரியாவிலிருந்து புறப்பட்ட உணவு தானிய கப்பல் ஐசிஸ் ஒரு புயலில் சிக்கி, திக்கு திசை தெரியாமல் வழியை தவறவிட்டு பிரேவ்ஸ் என்ற இடத்தில் 70 நாட்களுக்குப் பின் நங்கூரமிட்டது. ஆனால், அதே கப்பல் இத்தாலியிலிருந்து திரும்பும்போது வடமேற்கு காற்று அருமையாக அதைத் தள்ளிவிடுவதால் வெறும் 20 அல்லது 25 நாட்களில் பயணத்தை வெற்றிகரமாக முடித்துவிட முடியும். அதே சமயம் தரை மார்க்கமாக அதே இடத்திற்கு பயணிக்க வேண்டுமென்றால் போவதற்கு அல்லது திரும்பி வருவதற்கு மட்டும் நல்ல சீசனில்கூட 150 நாட்களுக்கும் மேலாகும்.
கடலைக் கடந்த நற்செய்தி
கப்பற்பயணத்திற்கு தகுதியாக இல்லாத பருவகாலத்தில் பயணம் செய்வதால் ஏற்படும் ஆபத்துகளைப் பற்றி பவுலுக்கு நன்றாக தெரிந்திருக்க வேண்டும். செப்டம்பர் மாதக் கடைசியிலோ அல்லது அக்டோபர் மாத ஆரம்பத்திலோ பயணிப்பதைப் பற்றி இவ்வாறு குறிப்பிடுகிறார்: “நண்பர்களே! இக்கப்பல் பயணம் கப்பலுக்கும் அதிலுள்ள சரக்குகளுக்கும் மட்டுமல்ல, நம் உயிருக்கும்கூட ஆபத்தானது; பெருங்கேட்டை விளைவிக்கக்கூடியது.” (அப்போஸ்தலர் [திருத்தூதர் பணிகள்] 27:9, 10, பொ.மொ.) ஆனாலும் அந்த ராணுவ அதிகாரி பவுல் கூறியதை காதில் போட்டுக்கொள்ளவில்லை; அதன் விளைவால் மால்டாவிற்கு அருகில் அந்தக் கப்பல் கவிழ்ந்தது.
பவுலின் மிஷனரி ஊழியத்தின் முடிவிற்குள் அவர் குறைந்தது நான்கு முறையாவது கப்பற்சேதத்திற்குள்ளானார். (அப்போஸ்தலர் 27:41-44; 2 கொரிந்தியர் 11:25) இப்படிப்பட்ட கஷ்ட நஷ்டங்கள் ஏற்படுவது சகஜம் என்று தெரிந்திருந்தும் ஆரம்பகால பிரசங்கிகள் அதற்கு பயந்து நற்செய்தியை பிரசங்கிப்பதற்காக கப்பற்பயணத்தை தவிர்க்கவில்லை. ராஜ்யத்தின் செய்தியை பிரசங்கிக்க எப்படியெல்லாம் பயணிக்க முடியுமோ அப்படியெல்லாம் பயணித்து செய்தியை அறிவித்தனர். இயேசுவின் கட்டளைகளுக்கு கீழ்ப்படிந்து எல்லா இடங்களிலும் சாட்சி கொடுத்தனர். (மத்தேயு 28:19, 20; அப்போஸ்தலர் 1:8) இப்பொழுது குடியிருக்கப்பட்டிருக்கும் உலகின் எல்லா மூலைமுடுக்குகளிலும் நற்செய்தி சென்றெட்டியிருக்கிறது. இதற்குக் காரணம் ஆரம்பகால பிரசங்கிகளின் வைராக்கியமும், அவர்களுடைய நல்ல மாதிரியைப் பின்பற்றியவர்களின் விசுவாசமும், யெகோவாவின் பரிசுத்த ஆவியின் வழிநடத்துதலுமேயாகும்.
[பக்கம் 31-ன் படத்திற்கான நன்றி]
Pictorial Archive (Near Eastern History) Est.