பரதீஸைத் தேடி
பாஸ்கல் ஸ்டீஸீ கூறியது
நள்ளிரவு வேளை. தென் பிரான்ஸிலிருக்கும் பேஸ்யே நகரத்தின் வீதிகள் ஓ. . .வென்று வெறிச்சோடிக் கிடந்தன. ஊரே உறக்கத்தின் உச்சத்திலிருக்க நானும் என் நண்பனும், புதிதாக பெயிண்ட் அடிக்கப்பட்ட, ஒரு மதப் புத்தகக் கடையின் சுவரில் ‘கடவுள் இல்லை; மனிதனே மாகோன்!’ என்ற வாசகத்தை கருப்பு வண்ணத்தில் கொட்டை எழுத்துக்களில் எழுதினோம். அது ஜெர்மன் தத்துவ ஞானியாகிய நிசாசியின் கருத்து. இப்படி எழுதும்படி என்னை தூண்டியது எது?
இத்தாலிய பூர்வீக வழியில் வந்த நான் 1951-ல் பிரான்ஸில் கத்தோலிக்க குடும்பத்தில் பிறந்தேன். சிறுவனாக இருக்கும்போது நாங்கள் தென் இத்தாலிக்கு விடுமுறைக்கு செல்வோம். அங்கு ஒவ்வொரு கிராமத்திலும் கன்னி மாதா சிலை இருக்கும். என் தாத்தாவோடு செல்கையில் நன்கு அலங்கரிக்கப்பட்டு வழிநெடுக இருக்கும் இந்தப் பெரிய பெரிய சிலைகளையெல்லாம் பார்த்துக்கொண்டே மலைக்குச் சென்றிருக்கிறேன்; எனக்கென்னவோ அவற்றில் கொஞ்சமும் நம்பிக்கை ஏற்பட்டதில்லை. ஜெஸ்யூட்டுகள் நடத்தி வந்த பள்ளியில் என்னுடைய பள்ளிப்படிப்பை முடித்தேன். இருந்தபோதிலும், கடவுள்மீது நம்பிக்கையை வளர்க்கும் விதமான எதையும் அவர்கள் போதித்ததாக எனக்கு கொஞ்சமும் நினைவில்லை.
மான்ட்பெல்யரைச் சேர்ந்த பல்கலைக்கழகமொன்றில் மருத்துவப் படிப்புக்காக சேர்ந்தபோதுதான் முதன்முதலில் வாழ்க்கையின் அர்த்தத்தை அலசி ஆராய ஆரம்பித்தேன். போர் சமயத்தில் என் தந்தை காயமடைந்திருந்ததால், டாக்டர்கள் அவரை சதா கவனிக்க வேண்டியிருந்தது. போர் சூறையாடிய மக்களை குணப்படுத்த எக்கச்சக்கமான நேரத்தையும் முயற்சியையும் செலவழிப்பதற்கு பதிலாக போருக்கே முடிவு கட்டிவிடுவது எவ்வளவு நல்லதல்லவா? ஆனால், வியட்நாம் போரோ மும்முரமாக நடந்துகொண்டிருந்தது. உதாரணமாக, நுரையீரல் புற்றுநோய்க்கு நான் அளிக்க விரும்பிய நிவாரணம், அதன் ஆணிவேராகிய புகைபிடித்தலையே அடியோடு பிடுங்கிப் போட வேண்டும் என்பதே; அது நான் கண்ட புத்திசாலித்தனமான வழி. ஒருபுறம் வளரும் நாடுகளில் ஊட்டச்சத்து குறைவால் வியாதிகள், மறுபுறம் பணக்கார நாடுகளில் மூக்குமுட்டத் தின்பதால் வியாதிகள்—இதெல்லாம் ஏன்? துக்ககரமான விளைவுகளின் நுனிப்புல்லை மேய்வதைவிட அவற்றை வேரோடு பிடுங்கி எறிவது மேல் அல்லவா? இந்த உலகத்தில் ஏன் இத்தனை துன்பங்கள்? தற்கொலை சமுதாயமான இதில் எங்கோ, ஏதோ பெரும் தவறு நடந்திருக்கிறது என்பதில் தீர்மானமாய் இருந்தேன், அதற்கு அரசாங்கங்களையே என் மனக் “கோர்ட்டின்” குற்றவாளி கூண்டில் நிறுத்தினேன்.
அரசிலாக் கோட்பாட்டாளர் ஒருவர் எழுதிய புத்தகமே என்னை மிகவும் கவர்ந்த புத்தகம். அதிலிருந்த வாக்கியங்களை சுவர்களில் எழுதினேன். இத்தகைய கோட்பாட்டாளர்களுக்கு நம்பிக்கை என்று ஏதுமில்லை, ஒழுக்க சட்டங்கள் இல்லை; கடவுளும் வேண்டாம், தலைவனும் வேண்டாம். போகப் போக நானும் அப்படிப்பட்டவர்களுள் சங்கமமானேன். அதிகாரம் செலுத்துவதற்கும் சுரண்டிப் பிழைப்பதற்கும் பணம் படைத்தவர்களும், பலமிக்கவர்களும் கண்டுபிடித்த வழிதான் கடவுளும் மதமும் என்பதே என் கருத்து. ஆனால், ‘எங்களுக்காக நெற்றி வேர்வை நிலத்தில் சிந்த பாடுபட்டால் உங்களுக்கு பரலோகத்திலுள்ள பரதீஸில் சுபிட்ஷமான வாழ்வு பரிசளிக்கப்படும்’ என்று பணக்காரர்கள் பறைசாற்றிக் கொண்டிருந்ததுபோல் தெரிந்தது. அந்தக் கடவுட்களின் காலமெல்லாம் மலையேறிவிட்டது. மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். அதற்காக சுவரில் ஸ்லோகங்களை எழுதி தூங்கும் மக்களை உசுப்பிவிடும் ஒரு வழியை கடைப்பிடித்தோம்.
விளைவு, என் படிப்பில் அக்கறை குறைந்தது. இதற்கிடையில் புவியியலையும் உயிரின வாழ்க்கைச் சுழலியலையும் படிப்பதற்கு மான்ட்பெல்யரைச் சேர்ந்த மற்றொரு பல்கலைக்கழகத்தில் சேர்ந்தேன். அது ஆட்சி எதிர்ப்பு கொள்கையினரின் கட்டுப்பாட்டில் இருந்த கல்லூரி. உயிரின வாழ்க்கைச் சுழலியலைப் படிக்கப் படிக்க எழில் கொஞ்சும் இந்தப் பூமியை இந்தளவுக்கு கெடுத்து குட்டிச்சுவராக்கி விட்டனரேயென உள்ளம் வெதும்பியது.
ஒவ்வொரு ஆண்டும் கோடை விடுமுறையில் ஐரோப்பா முழுவதும் ஆயிரக்கணக்கான கிலோமீட்டர் நடந்தும் வண்டியிலும் பயணித்தேன். நூற்றுக்கணக்கான டிரைவர்களுடன் பயணம் செய்ததிலிருந்தும் அவர்களிடம் பேசியதிலிருந்தும் மனித சமுதாயத்தை ஆட்டிப்படைக்கும் தீமையையும் சீரழிவையும் என் கண்ணாரக் கண்டேன். ஒருமுறை, பரதீஸுக்கான தேடலில் கண்ணுக்கு விருந்தளிக்கும் சில பெரும் கடற்கரைகளை அழகிய கிரீட் தீவில் கண்டேன். அவை எண்ணெய் போர்வையால் போர்த்தப்பட்டிருந்தன. அதைக் கண்ட மாத்திரத்தில் என் மனம் நைந்துபோன துணிபோல் ஆனது. இந்த உலகில் எந்த மூலைமுடுக்கிலாவது ‘மருந்துக்குக் கூட’ பரதீஸின் சாயலை விட்டுவைக்கவில்லையே பாவிகள் என மனம் கொந்தளித்தேன்.
பண்ணையில் வாழ்க்கை
சமுதாயத்தின் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண பண்ணை வாழ்க்கைதான் சிறந்த வழி என பிரான்ஸைச் சேர்ந்த சூழலியலாளர்கள் வாதாடி வந்தனர். வேலை செய்ய என் கைகள் துருதுருவென இருந்தன. தெற்கத்திய பிரான்ஸில், செவன்ஸ் மலைகளின் அடிவாரத்தில் இருந்த குக்கிராமத்தில் ஒரு பழைய கல்கட்டடத்தை விலைக்கு வாங்கினேன். அதன் கதவில் “இதோ பரதீஸ்” என எழுதினேன்; அது அமெரிக்க ஹிப்பீக்களின் வாசகமாக இருந்தது. அவ்வழியே போய் வந்துகொண்டிருந்த ஓர் இளம் ஜெர்மானிய பெண் என்னோடு நிரந்தரமாக தங்கிவிட்டாள். அந்தச் சமுதாயத்தின் பொறுப்பாளராய் இருந்த மேயரின் தலைமையில் திருமணம் செய்துகொள்ள எனக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. சர்ச்சில் திருமணம் செய்வது கொள்வதைப் பற்றி? ஊ. . .ஹூம் கனவிலும் நினைத்ததில்லை!
பெரும்பாலும் வெறுங்காலோடுதான் நடந்தோம்; எனக்கு நீளமான தலைமுடியும் பரட்டையான தாடியும் இருந்தன. பழங்களையும் காய்கறிகளையும் பயிர் செய்வதில் எனக்கு அதிக ஈடுபாடு ஏற்பட்டுவிட்டது. கோடை நாளில், அடடா, வானத்தில் நீலக் கம்பளம் என்ன, சைகாடஸ்ஸின் இனிய கானம் என்ன! புதர் செடிகளின் மலர்கள் நறுமணத்தை அள்ளித் தெளிக்கும் அழகே அழகு; நாங்கள் பயிர் செய்த மத்தியதரைக் கடல் பழங்களான திராட்சையிலும் அத்தியிலும் வடிந்த பழச்சாறு எக்கச்சக்கம்! எங்களுக்கே சொந்தமான பரதீஸை நாங்கள் கண்டடைந்ததைப் போல் ஒரு திருப்தி.
விழித்தெழுந்த கடவுள் நம்பிக்கை
பல்கலைக்கழகத்தில் உயிர்ம உயிரியல், சிசு வளரியல், உடற்கூறு இயல் ஆகியவற்றைப் படித்தேன்; அவற்றின் சிக்கலான வடிவமைப்பையும் செயலமைவுத் திட்டத்தின் ஒத்திசைவையும் கண்டு மலைத்தேவிட்டேன். இப்போதோ, நாள் தவறாமல் நானே படைப்பைக் கருத்தூன்றி கவனிக்கவும் மனதில் அசைபோடவும் ஆரம்பித்தேன். அதன் அழகும் ஆற்றலும் ஆச்சரியத்தில் என்னை மலைக்க வைத்தது. நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமாய் படைப்பென்னும் புத்தகம் எத்தனை எத்தனையோ விஷயங்களை என்னிடம் பேசாமல் பேசியது. ஒரு நாள் மலைமீது நெடு நேரம் உலாவுகையில் வாழ்க்கையின் அர்த்தத்தைப் பற்றி பெருத்த யோசனையில் ஆழ்ந்தேன். அந்த ஆராய்ச்சியின் முடிவில் கிடைத்த பலன் படைப்பாளர் இருக்கிறார் என்பதே. கடவுள் இருக்கிறார் என நம்பித்தான் ஆக வேண்டும் என்று எனக்குள் தீர்மானித்துக் கொண்டேன். இதற்குமுன் எனக்குள் வெறுமை குடிகொண்டிருந்தது; தனிமையின் கொடுமையில் சிக்கி அணு அணுவாய் தவித்திருக்கிறேன். கடவுள் இருப்பதை நம்ப ஆரம்பித்த அந்த நாளிலிருந்தே ‘இனிமேல என்னைக்கும் நீ தனியாக இருக்கவே வேண்டாம் பாஸ்கல்’ என எனக்கு நானே சொல்லிக் கொண்டேன். அந்த உணர்வே அலாதி!
சீக்கிரத்தில், என்னோடு வசித்து வந்த பெண் எனக்கு அமான்டின் என்ற தங்கப்பதுமையை பெற்றெடுத்தாள். அவள் என் உயிரின் உருவானாள். இப்போது எனக்குக் கடவுள் நம்பிக்கை ஏற்பட்டிருந்ததால் ஏதோ எனக்குத் தெரிந்த ஒழுக்க சட்டங்களைக் கடைப்பிடிக்க ஆரம்பித்தேன். அத்தோடு திருட்டுக்கும் பொய்க்கும் முற்றுப்புள்ளி வைத்தேன். இது என்னைச் சுற்றி இருந்தவர்களுடன் பிரச்சினையில் ஏடாகூடமாக மாட்டிக்கொள்ளாமல் இருப்பதற்கு எத்தனையோ முறை கைகொடுத்து உதவியது. இருந்தாலும் பிரச்சினைகள் அடிக்கடி எங்கள் கதவைத் தட்டாமல் இல்லை என்பதை நான் ஒத்துக்கொள்ள வேண்டும். என் பரதீஸ், நான் ஏங்கித் தவித்துக்கொண்டிருந்த பரதீஸாக நிலைக்கவில்லைதான். அங்கிருந்த திராட்சை தோட்டக்காரர்கள் பூச்சிக்கொல்லிகளையும் களைக்கொல்லிகளையும் பயன்படுத்தியதால் என் பயிர்களும் மாசுபட்டுவிட்டது. துன்மார்க்கத்திற்கான காரணத்தை அறிய வேண்டும் என்ற என் தாகத்திற்கு இன்னும் தண்ணீர் கிடைத்தபாடில்லை. அதோடு, குடும்ப வாழ்க்கையைப் பற்றிய புத்தகங்களை நான் கரைத்து குடித்திருந்த போதிலும், என்னோடு வாழ்ந்து வந்த பெண்ணோடு காரசாரமாக விவாதிப்பதற்கு முழுக்குப் போட அவை உதவவில்லை. எங்களுகென்று ஏதோ சில நண்பர்கள் இருந்தார்கள், ஆனால் அவர்கள் எல்லாரும் பேருக்குத்தான் ‘நண்பர்கள்’; அந்தளவுக்கு ஏன், என்னோடு வாழ்ந்துவந்த பெண்ணே என்னை ஏமாற்றுவதற்கு அவர்கள் தூண்டினார்கள் என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன். நிச்சயமாகவே சிறந்த பரதீஸ் ஒன்று இருக்க வேண்டும்.
என் ஜெபங்களுக்குக் கிடைத்த பதில்
வாழ்க்கையெனும் பாதையில் சரியாக நடக்க எனக்கு உதவும்படி கேட்டு ஏதோ எனக்குத் தெரிந்த விதத்தில் அடிக்கடி ஜெபித்தேன். அன்று ஞாயிறு காலை. இரென் லோபேஸ் என்ற அன்பான பெண்மணியும் அவளுடைய சின்னஞ்சிறு மகனும் என் வீட்டிற்கு வந்தனர். அவள் ஒரு யெகோவாவின் சாட்சி. அவள் சொல்வதை எல்லாம் பொறுமையாக கேட்டேன், அவள் மறுமுறை சந்திக்க வருவதாக சொன்ன போது மறுக்காமல் ஒப்புக்கொண்டேன். மறுமுறை என்னைக் காண இரு ஆண்கள் வந்தனர். எங்கள் சம்பாஷணையிலிருந்து இரண்டு விஷயங்கள் என் மனதில் பசுமரத்தாணிபோல் பதிந்துவிட்டன: ஒன்று பரதீஸ் மற்றொன்று கடவுளுடைய ராஜ்யம். அந்த நினைவுகள் என் இருதயத்தைவிட்டு நீங்காதளவுக்கு அதைக் குறித்து எப்போதும் அசைபோட்டேன். மாதங்கள் உருண்டோட ஓட ஒரு விஷயத்தை புரிந்துகொள்ள ஆரம்பித்தேன். அது: சுத்தமான மனசாட்சி வேண்டுமென்றால், உண்மையான சந்தோஷத்தைப் பெற வேண்டுமென்றால் இன்றில்லாவிட்டாலும் என்றாவது ஒருநாள் கடவுளுடைய தராதரங்களுக்கு இசைய என் வாழ்க்கையில் மாற்றங்களைச் செய்தே ஆக வேண்டும் என்பதே.
கடவுளுடைய வார்த்தை சொல்வதன்படியெல்லாம் வாழ்வதற்கு முயலுகையில் என் ‘அவள்’ என்னை திருமணம் செய்துகொள்ள மறுத்துவிட்டாள். கடவுளையும் அவருடைய சட்டதிட்டங்களையும் கேலிக்கூத்தாக்கும் ஆட்களோடு நட்புகொள்ள ஆரம்பித்தாள். வசந்த காலத்தில் ஒருநாள் வீடு திரும்புகையில் எனக்கு பேரதிர்ச்சி காத்திருந்தது. வீடு யாரும் இல்லாமல் சூனியமாய் இருந்தது. எங்களுடைய மூன்று வயது பெண் குழந்தையையும் கூட்டிக்கொண்டு என் ‘அவள்’ வீட்டை விட்டே வெளியேறியிருந்தாள். வருவாள் வருவாள் என வழிமேல் விழிவைத்து நாட்கணக்கில் காத்திருந்தேன். ஆம், இலவுகாத்த கிளிபோல் ஆனேன் நான். இதற்கு நான் கடவுளைக் குற்றஞ்சாட்டவில்லை; மாறாக அவரிடம் உதவிக்காக ஜெபத்தில் கெஞ்சினேன்.
அதற்குப் பிறகு உடனடியாக, பைபிளை எடுத்துக்கொண்டு போய் அத்திமரத்தடியில் அமர்ந்து படிக்க ஆரம்பித்தேன். உண்மையில், அதை கரைத்துக்குடித்தேன் என்றே சொல்லலாம். மனோதத்துவ ஆராய்ச்சியாளர்களும் மனோதத்துவ நிபுணர்களும் எழுதிய புத்தகங்களில் நான் படிக்காத புத்தகங்களே இல்லை. அவற்றில் காணாத ஞானத்தை இதில் கண்டேன்; இதுவோ அள்ள அள்ள குறையாத அறிவு சுரங்கமாய் இருந்தது. இதன் ஆசிரியர் கடவுளாகத்தான் இருக்க வேண்டும். அதில் துளிகூட சந்தேகமில்லை. இயேசுவின் போதனைகளும், அவர் மனித இயல்பை புரிந்துகொண்ட விதமும் என்னை ஆச்சரியத்தில் மூழ்கடித்தன. சங்கீதம், என் மனதின் ரணத்திற்கு மருந்திட்டது, நீதிமொழிகள், அன்றாட வாழ்க்கைக்குத் தேவையான அறிவு முத்துக்களை வாரி இறைத்தது. கடவுளிடம் நெருங்கி வருவதற்கு படைப்பு என்னும் புத்தகம் எவருக்கும் உதவும் ஒரு சிறந்ததோர் வழிகாட்டி என்பதை வெகு சீக்கிரம் உணர்ந்தேன். அப்படி இருந்தபோதிலும், “அவர் தம் செயல்களின் விளிம்பு”களையே அது வெளிப்படுத்துகிறது.—யோபு 26:14, பொ.மொ.
நித்திய ஜீவனுக்கு வழிநடத்துகிற சத்தியம், உங்கள் குடும்ப வாழ்க்கையை மகிழ்ச்சியுள்ளதாக்குதல் என்ற புத்தகங்களை சாட்சிகள் எனக்கு கொடுத்திருந்தனர்.a படிக்கப் படிக்க அவை என் அறிவுக் கண்ணைத் திறந்தன. எங்கும் பரவியிருந்த தூய்மைக்கேடு, யுத்தங்கள், வன்முறை அதிகரித்தல், அணு ஆயுத அழிவின் அச்சுறுத்தல் ஆகியவற்றை மனிதன் எதிர்ப்பட காரணம் என்ன என்பதை சத்திய புத்தகம் எனக்குத் தெள்ளத் தெளிவாக்கியது. நாளை சீதோஷ்ணநிலை நன்றாக இருக்கும் என்பதை இன்றே என்னுடைய தோட்டத்திலிருந்து பார்க்கையில் செவ்வானம் அறிவிப்பது போல இந்தச் சம்பவங்களும் கடவுளுடைய ராஜ்யம் இதோ வரவிருக்கிறது என்பதை சொல்லாமல் சொல்கின்றன. குடும்ப வாழ்க்கை புத்தகத்தைக் குறித்ததில், அதை கையோடு எடுத்துச்சென்று என்னோடு வாழ்ந்துவந்த பெண்ணிடம் காட்டி ‘பைபிள் சொல்வதை நாம் கடைப்பிடித்தால் சந்தோஷம் என்றும் நமதே’ என்று காட்டினால் எவ்வளவு நன்றாய் இருக்கும் என்று ஏங்கினேன். ஆனால் அது கானல்நீராய் போனது.
ஆவிக்குரிய முன்னேற்ற பாதையில்
எனக்கு இன்னும் நிறைய கற்றுக்கொள்ள வேண்டும் என்ற அடங்காத அறிவுப் பசி இருந்ததால் சாட்சியாக இருந்த ராபர் என்பவரை உதவ வரும்படி அழைத்தேன். நான் முழுக்காட்டுதல் பெற விரும்புவதாக சொன்னதும் அவர் காதுகளையே அவரால் நம்ப முடியவில்லை; எனவே எனக்குப் பைபிளில் படிப்பு ஆரம்பிக்கப்பட்டது. நான் அறிந்த அந்த இனிய செய்தியை மற்றவர்களிடம் உடனடியாக பகிர்ந்துகொள்ளவும், ராஜ்ய மன்றத்தில் பெற்றுக்கொண்ட பிரசுரங்களை விநியோகிக்கவும் ஆரம்பித்தேன்.
வயிற்றுப்பாட்டுக்காக கட்டுமான தொழிற்பயிற்சிப் பள்ளியில் சேர்ந்தேன். கடவுளுடைய வார்த்தை ஓர் ஆளில் ஏற்படுத்தும் மாற்றங்களை நன்கு அறிந்திருந்த நான் எனக்குக் கிடைத்த ஒவ்வொரு வாய்ப்பையும் உடன் மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் சந்தர்ப்ப சாட்சி கொடுப்பதற்கு உபயோகித்துக் கொண்டேன். ஒருநாள் மாலையில் சர்ஜ் என்பவரை நடைபாதையில் சந்தித்தேன். அவர் கையில் ஏதோ சில பத்திரிகைகளை வைத்திருந்தார். “உங்களுக்கு பத்திரிகைகள படிக்கிறதுன்னா அல்வா சாப்பிடறது போலன்னு தோனுதே” என்று அவரிடம் பேச்சுக் கொடுத்தேன். “ஆமா கரெக்டா கண்டுபிடிச்சுட்டீங்களே பத்திரிகைகள்னா எனக்கு உசு. . .ரு, ஆனா இதெல்லாம் படிச்சு படிச்சு போரடிச்சிருச்சு” என்றார். அவரிடம் “படிக்க படிக்க ஆவலைத் தூண்டும் பத்திரிகைகள் இருக்கு வேண்டுமா?” எனக் கேட்டேன். கடவுளுடைய ராஜ்யத்தைப் பற்றிய அருமையான சம்பாஷணைக்குப் பிறகு சில பைபிள் பிரசுரங்களை படிப்பதற்கு வாங்கிக் கொண்டார். மறுவாரமே என்னோடு ராஜ்ய மன்றத்திற்கு வந்தார், ஒரு பைபிள் படிப்பும் அவருக்கு ஆரம்பிக்கப்பட்டது.
வீட்டுக்கு வீடு பிரசங்கிக்க எனக்கு உள்ளூர இருந்த ஆசையை ஒருநாள் மனம்விட்டு ராபரிடம் சொன்னேன். அவர் உடனே அலமாரியைத் திறந்து ஒரு சூட்டை எடுத்து என்னிடம் கொடுத்தார். அடுத்த ஞாயிறு, அவருடன் நான் ஊழியத்தில் முதல் முறையாக காலடியெடுத்து வைத்தேன். இறுதியில் மார்ச் 7, 1981-ல் கடவுளுடன் மாத்திரம் செய்திருந்த ஒப்புக்கொடுத்தலை வெளிக்காட்ட யாவரறிய முழுக்காட்டுதல் பெற்றேன்.
ஆபத்தில் அரவணைப்பு
இதற்கிடையில் அமன்டினும் அவளுடைய அம்மாவும் வேறு நாட்டில் வாழ்வதை அறிந்தேன். வருத்தகரமான விஷயம் என்னவென்றால், அவர்கள் வசித்துவந்த நாட்டின் சட்டப்படி என் மகளை சென்று சந்திப்பதற்கு இருக்கும் தடையை சுட்டிக்காட்டி அவள் தாய் என்னை தடுத்தாள். நான் உணர்ச்சியில் உருக்குலைந்துபோனேன். அமன்டினின் அம்மாவுக்கு இப்போது திருமணமாகியிருந்தது. என்னை கொஞ்சமும் கலந்தாலோசிக்காமல், என் மகளை அவளுடைய கணவன் அதிகாரப்பூர்வமாக தத்தெடுத்துக் கொண்டதற்குரிய கடிதத்தைப் பெற்றபோது எனக்குள் நொறுங்கிப்போனேன். என் அருமை மகளை கட்டியணைத்து முத்தம் கொடுத்து கொஞ்சும் உரிமையும் இனி எனக்கில்லை; என்னிடமிருந்து அது பறிக்கப்பட்டு விட்டது. சட்டப்படி நடவடிக்கை எடுத்தும் சந்திக்கும் உரிமை கிடைக்காத துர்பாக்கியசாலி ஆனேன். அணு அணுவாக நான் அனுபவித்த வேதனை ஏதோ திடீரென டன் கணக்கான எடையை என் முதுகில் ஏற்றி வைத்தது போலாயிற்று.
ஆனால் யெகோவாவின் வார்த்தை இன்ன விதத்தில் என்றில்லாமல் எத்தனையோ வழிகளில் ஆறுதலின் புகலிடமாய் விளங்கியது. ஒருநாள் மனச்சோர்வின் எல்லைக்கே சென்றுவிட்டதை போலிருக்கையில், “ஆபத்துக்காலத்தில் நீ சோர்ந்து போவாயானால், உன் பெலன் குறுகினது” என்ற நீதிமொழிகள் 24:10-லுள்ள வார்த்தைகளை பல தடவை சொல்லிக்கொண்டே இருந்தேன். இந்த வசனம் என்னை பலப்படுத்தி கொஞ்சம் தலை நிமிர வைத்தது. மற்றொரு சமயத்தில், என் மகளைப் பார்க்க முடியாமல் போனதற்குப் பிறகு, ஊழியத்திற்கு சென்றேன்; அப்போது என் ஊழியப்பையை எவ்வளவு முடியுமோ அவ்வளவு இறுக்கமாக பிடித்துக் கொண்டு என் உணர்ச்சிகளை சமாளித்தேன். இத்தகைய இக்கட்டான நிலைமைகளில் சங்கீதம் 126:6-லுள்ள உண்மையை ருசிபார்த்திருக்கிறேன். அது சொல்வதாவது: “அள்ளித்தூவும் விதையைச் சுமக்கிறவன் அழுதுகொண்டு போகிறான்; ஆனாலும் தான் அறுத்த அரிகளைச் சுமந்துகொண்டு கெம்பீரத்தோடே திரும்பிவருவான்.” முக்கியமான பாடம் ஒன்றைக் கற்றுக்கொண்டேன். அது என்ன தெரியுமா? உங்களுக்குப் பெரும் துன்பம் வருகையில் அதை சரிசெய்வதற்கு உங்களால் முடிந்த எல்லாவற்றையும் செய்யுங்கள், அதற்குப் பிறகு அதை ஒருபுறமாக மூட்டைகட்டி எறிந்துவிட்டு யெகோவாவின் சேவையில் தீர்மானத்தோடு முன்னேறுங்கள். இதுவே நீங்கள் இழந்த சந்தோஷத்தை மீண்டும் பெற உதவும் இரகசியமாகும்.
மேலானதை நாடுதல்
நான் செய்த மாற்றங்களைக் கண்டு, என் பாசமிக்க பெற்றோர் பல்கலைக்கழகத்தில் என் படிப்பைத் தொடருவதற்கு ஆவன செய்ய முன்வந்தார்கள். என் இலட்சியமோ வேறு; எனவே அவர்கள் நீட்டிய உதவிக்கரத்திற்கு இருகரம் குவித்து நன்றி தெரிவித்துவிட்டேன். மனித தத்துவங்கள், மறைஞானம், சோதிடம் போன்ற விலங்குகளை என் கைகளிலிருந்து உடைத்தெறிந்திருக்கிறது சத்தியம். யுத்தத்திற்குப் போய் யாரையும் கொல்ல விரும்பாத ‘தங்கமான’ நண்பர்கள் எனக்கு கிடைத்தார்கள். இந்தப் பூமியில் ஏன் இவ்வளவு துன்பம் இருக்கிறது என்ற என் கேள்விக்கும் ஒருவழியாக பதிலைக் கண்டுபிடித்துவிட்டேன். கடவுள்மீது என் உள்ளம் நன்றிப்பெருக்கெடுத்ததால், என்னிடமுள்ள சக்தி முழுவதையும் அவருடைய சேவையிலேயே செலவிட விரும்பினேன். ஊழியத்தில் இயேசு தம்மைத்தாமே அர்ப்பணித்தார்; நானும் அவரைப் போல் இருக்க விரும்பினேன்.
கட்டுமான தொழிலுக்கு ஒரு முழுக்குப் போட்டுவிட்டு 1983-ல் முழுநேர ஊழியனானேன். என் வயிற்றுப்பாட்டை சமாளிக்க பூங்காவில் ஒரு பகுதி நேர வேலையும் கிடைத்தது; அது என் ஜெபத்திற்குப் பதிலாய் அமைந்தது. கட்டுமான தொழிற்பயிற்சிப் பள்ளியில் நான் சாட்சி கொடுத்த அந்த இளம் மனிதனாகிய சர்ஜுடன் பயனியர் பள்ளியில் கலந்து கொண்டபோது நான் பெற்ற சந்தோஷம் கொஞ்சநஞ்சமல்ல. மூன்று வருடகாலம் ஒழுங்கான பயனியராக சேவை செய்த பிறகு யெகோவாவின் சேவையில் இன்னும் அதிகம் செய்ய விரும்பினேன். எனவே 1986-ல் பாரீஸுக்கு அருகிலிருந்த இயற்கை வனப்புமிக்க பிராவன் என்ற நகரத்தில் விசேஷ பயனியராக நியமிக்கப்பட்டேன். மாலையில் வீடு திரும்பிய பின் அன்று அருமையான நாளைத் தந்து, அதில் மற்றவர்களிடம் அவரைப் பற்றி பேசுவதற்கு வாய்ப்பையும் கொடுத்ததற்காக முழங்கால் போட்டு யெகோவாவிடம் அடிக்கடி நன்றி கூறியதுண்டு. கடவுளிடம் பேசுவதும், கடவுளைப் பற்றி மற்றவர்களிடம் பேசுவதும் நான் சந்தோஷக் கடலில் மூழ்கி திளைக்கும் இரண்டு சந்தர்ப்பங்கள்.
மற்றொரு முறை மகிழ்ச்சி வானத்தை தொடும் பாக்கியம் அடியேனுக்கு கிடைத்தது. அது, தென் பிரான்ஸிலுள்ள சேபாசான் என்னும் குக்கிராமத்திலிருந்த 68 வயதான என் அம்மா முழுக்காட்டுதல் எடுத்த சமயம். என் அம்மா பைபிளைப் படிக்க ஆரம்பித்ததும், காவற்கோபுரம், விழித்தெழு! பத்திரிகைகளுக்கு சந்தா செய்து அனுப்பி வைத்தேன். அதிக விவரமானவர்களாக அவர்கள் இருந்ததால், சீக்கிரத்தில் சத்தியத்தின் தொனியை தான் படித்தவற்றிலிருந்து அடையாளம் கண்டுகொண்டு விட்டார்கள்.
பெத்தேல்—அருமையான ஆவிக்குரிய பரதீஸ்
விசேஷ பயனியர்களின் எண்ணிக்கையை உவாட்ச் டவர் சொஸைட்டி குறைக்கத் தீர்மானித்தபோது ஊழிய பயிற்சிப் பள்ளிக்கும் பிரான்ஸிலுள்ள யெகோவாவின் சாட்சிகளின் கிளை அலுவலகமாகிய பெத்தேலுக்கும் விண்ணப்பித்தேன். நான் எங்கு சேவை செய்தால் பிரயோஜனமாய் இருக்குமோ அங்கு செல்வதற்கு தெரிவு செய்யும் தீர்மானத்தை யெகோவாவின் கரங்களில் விட்டுவிட்டேன். சில மாதங்களுக்குப் பிறகு, 1989, டிசம்பரில், வடமேற்கு பிரான்ஸில், லோவேயர்ஸில் அமைந்துள்ள பெத்தேலுக்கு அழைக்கப்பட்டேன். இது மிகச் சிறந்த நன்மை விளைவித்தது; நோய்வாய்ப்பட்ட என் பெற்றோரை கவனித்து வந்த என் தம்பிக்கும் அவனுடைய மனைவிக்கும் உதவுவதற்கு இந்த இடம் எனக்கு சாதகமாய் அமைந்தது. ஏன் தெரியுமா, ஒருவேளை ஆயிரக்கணக்கான கிலோமீட்டருக்கப்பால் மிஷனரி ஊழியத்திற்காக நான் அனுப்பப்பட்டிருந்தால் இப்படி உதவ எனக்கு வாய்ப்பில்லாமல் போயிருக்குமே.
பெத்தேலில் என்னை சந்திக்க என் அம்மா பல தடவை வந்திருக்கிறார்கள். என்னைப் பிரிந்திருப்பது அவர்கள் பங்கில் பெரும் தியாகமாக இருந்தாலும் அவர்கள் என்னிடம், “தயவுசெய்து எக்காரணம் கொண்டும் பெத்தேலை விட்டு மட்டும் வந்திராதப்பா. நீ பெத்தேலில் யெகோவாவுக்கு ஊழியம் செய்யறத பாக்கறதுல எனக்கு கிடைக்கிற சந்தோஷம் வேறெதுலயும் கிடைக்காதய்யா” என அடிக்கடி சொல்லி இருக்கிறார்கள். காலத்தின் கோலத்தால் இப்போது என்னுடைய அப்பாவும் இல்லை அம்மாவும் இல்லை. இந்த பூமி மீண்டும் பூங்காவனமாக, பரதீஸாக மாற்றப்படுகையில் அவர்களை ஆனந்தத்தோடு வரவேற்பதற்காக எவ்வளவு ஆவலோடு காத்திருக்கிறேன் என்பதை விவரிக்க எனக்கு வார்த்தைகள் இல்லை!
“இதோ பரதீஸ்” என்ற பெயருக்கு பொருத்தமான ஒரு வீடு ஒன்று இருக்கிறதென்றால் அது பெத்தேல் என்பதே என் அசைக்க முடியாத நம்பிக்கை. ஏனென்றால் பெத்தேல் என்பதற்கு அர்த்தம் “கடவுளுடைய வீடு” ஆயிற்றே! முக்கியமாய், உண்மையான பரதீஸ் என்பது ஆவிக்குரிய தன்மையுள்ளது, பெத்தேலில் வியாபித்திருப்பதும் ஆவிக்குரிய தன்மையே. இங்கு ஆவியின் கனிகளை வளர்த்துக்கொள்வதற்கு இருக்கும் வாய்ப்புகள் ஏராளம் ஏராளம். (கலாத்தியர் 5:22, 23) தினமும் நடத்தப்படும் தினவசன கலந்தாலோசிப்பும் காவற்கோபுர குடும்பப் படிப்பும் பெத்தேலில் கிடைக்கும் சிறந்த ஆவிக்குரிய சத்துணவு. அவை பெத்தேலில் என் சேவையைத் தொடர தட்டிக்கொடுத்து தோள்கொடுக்கும் உதவிக்கரங்கள். மேலுமாக, ஆவிக்குரிய விஷயங்களையே எப்போதும் சிந்திக்கும் மனம் படைத்த சகோதர சகோதரிகள் இங்கு உண்மையோடு வருடக்கணக்காக சேவை செய்து வருகின்றனர்; பெத்தேலை விசேஷித்த இடமாக ஆக்கும் இத்தகையவர்களுக்கு மத்தியில் ஆவிக்குரிய விதமாய் செழித்து வளருவது எனக்கு கிடைத்த அரும்பாக்கியமே. என் மகளைவிட்டு பிரிந்து 17 வருடங்கள் ஓடிவிட்டன. இருந்தபோதிலும், இங்கு பெத்தேலில் இருக்கும் வைராக்கியமிக்க அநேக இளம் சிட்டுகளை என் ‘மகளின்’ வடிவிலேயே பார்க்கிறேன். ஆவிக்குரிய முன்னேற்றத்தில் அவர்கள் வைக்கும் ஒவ்வொரு படியும் என் சந்தோஷத்திற்கு சந்தோஷத்தை சேர்க்கிறது. கடந்த எட்டு ஆண்டுகளுக்கும் மேலாக ஏழு வெவ்வேறு நியமிப்புகளில் வேலை செய்திருக்கிறேன். இந்த மாற்றங்களை ஜீரணித்து பணியில் தொடருவது ஒன்றும் லேசுப்பட்ட விஷயமல்ல, ஆனால் நாளாக ஆக அந்தப் பயிற்றுவிப்பு, பட்டை தீட்ட தீட்ட பிரகாசிக்கும் வைரம் போல எனை பிரகாசிக்க செய்தது என்றால் மிகையாகாது.
ஆமோகமான மகசூலை வாரி வழங்கும் ஒருவகை அவரையை என் நிலத்தில் வழக்கமாய் பயிர்செய்து வந்தேன். அதே விதமாக ஒன்றை என் வாழ்க்கையிலும் ருசித்திருக்கிறேன். அது என்ன தெரியுமா? நீங்கள் வினை விதைத்தால் வினை அறுப்பீர்கள், அதுவும் அமோகமாக அறுப்பீர்கள்; ஒரு முறை மட்டுமல்ல, பல தடவை அறுப்பீர்கள். வாழ்க்கை பள்ளியில் அனுபவம் என்னும் பட்டம் பெற செலுத்திய கட்டணம் வெகு அதிகம். இன்னுமொரு முறை வாய்ப்புக் கிடைத்தால் நிச்சயமாக அந்தப் பக்கமே தலைவைத்துப் படுக்க மாட்டேன். அதற்கு மாறாக யெகோவாவின் ஆவிக்குரிய பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற, ‘எப்போதும் தயார்’ என்பேன். கிறிஸ்தவப் பெற்றோர்களால் வளர்க்கப்பட்ட இளைஞர்கள் எவ்வளவு பாக்கியம் செய்தவர்கள்! யெகோவாவின் சேவையில் நல்லதை [தினை] விதைத்து மன சமாதானத்தையும் பரம திருப்தியையும் அமோகமாக அறுப்பது சாலச் சிறந்தது என்பதில் எவ்வித சந்தேகமும் எனக்கில்லை.—கலாத்தியர் 6:7, 8.
அரசிலாக் கோட்பாட்டாளரின் வாசகத்தை நாங்கள் மத புத்தக கடையின் சுவரில் எழுதினோமே ஞாபகமிருக்கிறதா, அந்தக் கடை வழியே சிலசமயங்களில் நான் பயனியராக இருக்கையில் கடந்து சென்றதுண்டு. அந்தக் கடைக்காரரிடம் ஜீவனுள்ள கடவுளைப் பற்றியும் அவருடைய நோக்கங்களைப் பற்றியும் பேசியதுமுண்டு. கடவுள் உயிருடன் இருக்கிறார்! உண்மையான ஒரே கடவுளாகிய யெகோவா தம் பிள்ளைகளை ஒருபோதும் கைவிடாத கரிசனையுள்ள தகப்பனாக இருக்கையில் வேறு என்ன வேண்டும் நமக்கு. (வெளிப்படுத்துதல் 15:4) எல்லா தேசத்திலும் இருக்கும் திரளான ஜனங்களும் உயிருள்ள கடவுளாகிய யெகோவாவை சேவித்து துதிபாடி இப்போது ஆவிக்குரிய பரதீஸையும் பிற்பாடு பூங்காவனமான பரதீஸையும் கண்டடைவார்களாக!
[அடிக்குறிப்பு]
a உவாட்ச் டவர் பைபிள் அண்ட் டிராக்ட் சொஸைட்டி ஆஃப் இண்டியாவால் பிரசுரிக்கப்பட்டவை.
[பக்கம் 26-ன் படங்கள்]
இறைவன் இருப்பதை எனக்கு உணர்த்தியது படைப்பு. (வலது) இன்று பெத்தேல் சேவையில்