உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • w99 5/1 பக். 4-7
  • அனைவருக்கும் விடுதலை நிச்சயம்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • அனைவருக்கும் விடுதலை நிச்சயம்
  • காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1999
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • “இக்காலத்துப் பாடுகள்”
  • “மாயைக்குக் கீழ்ப்பட்டிருக்கிறது”
  • ‘தேவனுடைய புத்திரர் வெளிப்படுவது’
  • கடைசியில் உண்மையான சுதந்திரம்
  • சுயாதீனமுள்ள ஆனால் பொறுப்புவாய்ந்த ஒரு ஜனம்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1992
  • கடவுள் கொடுத்த சுயாதீனத்தின் நோக்கத்தை தவறவிட்டு விடாதீர்கள்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1992
  • சுதந்திரத்தைத் தருகிற கடவுளாகிய யெகோவாவுக்குச் சேவை செய்யுங்கள்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (படிப்பு)-2018
  • உண்மையான விடுதலை—அடைவது எப்படி?
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (படிப்பு)-2018
மேலும் பார்க்க
காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1999
w99 5/1 பக். 4-7

அனைவருக்கும் விடுதலை நிச்சயம்

“இக்காலத்துப் பாடுகள் இனி நம்மிடத்தில் வெளிப்படும் மகிமைக்கு ஒப்பிடத்தக்கவைகள் அல்லவென்று எண்ணுகிறேன். மேலும் தேவனுடைய புத்திரர் வெளிப்படுவதற்குச் சிருஷ்டியானது மிகுந்த ஆவலோடே காத்துக்கொண்டிருக்கிறது. அதேனென்றால் சிருஷ்டியானது அழிவுக்குரிய அடிமைத்தனத்தினின்று விடுதலையாக்கப்பட்டு, தேவனுடைய பிள்ளைகளுக்குரிய மகிமையான சுயாதீனத்தைப் பெற்றுக்கொள்ளும் என்கிற நம்பிக்கையோடே, அந்தச் சிருஷ்டியானது சுய இஷ்டத்தினாலே அல்ல, கீழ்ப்படுத்தினவராலேயே மாயைக்குக் கீழ்ப்பட்டிருக்கிறது. ஆகையால் நமக்குத் தெரிந்திருக்கிறபடி, இதுவரைக்கும் சர்வ சிருஷ்டியும் ஏகமாய்த் தவித்துப் பிரசவ வேதனைப்படுகிறது.”—ரோமர் 8:18-22.

வாழ்க்கையில் ஏன் உண்மையான விடுதலையை ருசிக்க முடியவில்லை? வெறுமையும் வேதனையுமே நிறைந்திருக்கக் காரணமென்ன? ரோமாபுரியிலிருந்த கிறிஸ்தவர்களுக்கு பவுல் எழுதிய கடிதத்தில் இந்தக் கேள்விகளுக்கான பதிலை ரத்தின சுருக்கமாக தருகிறார். உண்மையான விடுதலையை நாம் எப்படி பெறலாம் என்றும் விளக்குகிறார்.

“இக்காலத்துப் பாடுகள்”

“இனி நம்மிடத்தில் வெளிப்படும் மகிமைக்கு ஒப்பிடத்தக்கவைகள் அல்லவென்று” பவுல் கூறும்போது “இக்காலத்துப் பாடுகள்” குறைவானவை என அவர் கூறவில்லை. பவுலுடைய காலத்திலும் அதற்கு பின்னரும் கிறிஸ்தவர்கள் அடைந்த துன்பங்கள் கொஞ்சநஞ்சமல்ல. முக்கியமாய், மனித உரிமைகளை துச்சமாக நினைத்த ரோம அதிகாரிகளின் கொடுங்கோன்மை ஆட்சியில் அவ்வாறு நிகழ்ந்தது. கிறிஸ்தவர்கள் தேச துரோகிகள் என ரோமர்கள் முத்திரை குத்தியபோது அவர்களை கொடூரமாக துன்புறுத்தினர். சரித்திராசிரியர் ஜே. எம். ராபர்ட்ஸ் இவ்வாறு கூறுகிறார்: “தலைநகரிலிருந்த [ரோம்] அநேக கிறிஸ்தவர்கள் வட்டரங்குகளில் கொடூரமாக மரித்தனர் அல்லது உயிரோடு எரிக்கப்பட்டனர்.” (ஷாட்டர் ஹிஸ்டரி ஆஃப் த உவர்ல்ட்) நீரோவின் துன்புறுத்தலுக்கு பலியானவர்களைப் பற்றி மற்றொரு அறிக்கை கூறுகிறது: “சிலர் சிலுவையில் அறையப்பட்டனர், சிலர் மேல் மிருகத்தின் தோல்கள் போர்த்தப்பட்டு நாய்கள் கடித்துக் குதறும்படி விடப்பட்டனர், சிலர் மேல் தார் பூசப்பட்டு இரவுநேரத்தில் வெளிச்சத்திற்காக உயிருள்ள விளக்குகளாக எரியவிடப்பட்டனர்.”​—எஃப். எஃப். புரூஸ் என்பவரின் நியூ டெஸ்டமெண்ட் ஹிஸ்டரி.

அப்படிப்பட்ட துன்பங்களிலிருந்து விடுதலை பெற பூர்வகால கிறிஸ்தவர்கள் ஏங்கியிருப்பார்கள் என்பதில் சந்தேகம் ஏதும் உண்டோ? ஆனாலும் இயேசு கிறிஸ்துவின் போதனைகளை மீறுவதனால் கிடைக்கும் விடுதலையைப் பெறவேண்டுமென அவர்கள் கற்பனைக்கூட செய்யவில்லை. உதாரணமாக, ரோம அதிகாரிகளுக்கும் யூத விடுதலைப் போராளிகளான ஸீலாட்டுகளுக்கும் இடையில் ஏற்பட்ட போராட்டத்தில் அவர்கள் உறுதியோடு நடுநிலைமை வகித்தனர். (யோவான் 17:16; 18:36) “இந்த நெருக்கடியான நிலையில் கடவுளுடைய ஏற்ற காலத்திற்காக காத்திருக்க வேண்டும் என்ற பேச்சு வீணானது” என ஸீலாட்டுகள் நினைத்தனர். “எதிரிக்கு [ரோமுக்கு] பதிலடி கொடுக்க வன்முறையில் இறங்கவேண்டும்” என்றே அவர்கள் கூறினர். (நியூ டெஸ்டமென்ட் ஹிஸ்டரி) ஆரம்பகால கிறிஸ்தவர்களின் சிந்தனைப்போக்கோ வேறு. அவர்களைப் பொருத்தவரை, “கடவுளுடைய ஏற்ற காலத்திற்காக” காத்திருப்பதே நியாயமான ஒரே வழி. கடவுள் தலையிட்டால் மட்டுமே “இக்காலத்துப் பாடுகள்” நிரந்தரமாக முடிவுக்கு வந்து உண்மையான, நிலையான சுதந்திரம் கிடைக்கும் என அவர்கள் நிச்சயமாய் நம்பினர். (மீகா 7:7; ஆபகூக் 2:3) அது எவ்வாறு நிகழும் என சிந்திப்பதற்கு முன்பு ‘சிருஷ்டியானது ஏன் மாயைக்கு கீழ்ப்பட்டிருக்கிறது’ என நாம் சிந்திக்கலாம்.

“மாயைக்குக் கீழ்ப்பட்டிருக்கிறது”

சிலர் கூறுகிறபடி இங்கு “சிருஷ்டி” என்ற வார்த்தை “உயிரற்ற, மிருக சிருஷ்டி”யை குறிக்கவில்லை; மாறாக ‘முழு மனிதவர்க்கத்தையும்’ குறிக்கிறது என தி எம்ஃபாட்டிக் டயக்லாட்-ல் பெஞ்சமின் வில்சன் கூறுகிறார். (கொலோசெயர் 1:23-ஐ ஒப்பிடுக.) அது, விடுதலைக்காக ஏங்கும் நம் அனைவரையும் முழு மனித குடும்பத்தையும் குறிக்கிறது. நாம் ‘மாயைக்கு கீழ்ப்பட்டிருக்க’ காரணம் நம்முடைய முதல் பெற்றோரே. நம்முடைய “சுய இஷ்டத்தினாலே” அல்லது நாமே தெரிவு செய்ததினால் இது ஏற்படவில்லை. இந்த நிலைமையை நம்முடைய முதல் பெற்றோரிடமிருந்து சுதந்தரித்திருக்கிறோம். வேதப்பூர்வ அடிப்படையில் பார்க்கும்போது, “சுதந்திரமாக மண்ணில் பிறந்த மனிதன்” என ரௌசயு சொன்னது எவ்வளவு தவறு! நாம் ஒவ்வொருவரும் பிறக்கையிலேயே பாவத்திற்கும் மரணத்திற்கும் அடிமைகள். வெறுமையும் மாயையும் நிறைந்த ஓர் அமைப்பிற்குள் அடிமைகள் போலத்தான் இருக்கிறோம் அல்லவா?​—ரோமர் 3:23.

ஏன் இப்படி ஆனது? ஏனென்றால் நம்முடைய முதல் பெற்றோரான ஆதாமும் ஏவாளும் “தேவர்களைப்போல்” இருக்க விரும்பினர்; கடவுள் பேரில் சார்ந்தில்லாமல் எது சரி, எது தவறு என்பதைப் பற்றி தாங்களே தீர்மானித்துக்கொள்ள விரும்பினர். (ஆதியாகமம் 3:5) ஆனால் சுதந்திரம் பற்றிய ஒரு முக்கிய குறிப்பை அவர்கள் மறந்தனர். உண்மையில் சிருஷ்டிகருடைய சுதந்திரத்திற்கு மட்டுமே எல்லையில்லை; ஏனென்றால் அவரே சர்வலோக பேரரசர். (ஏசாயா 33:22; வெளிப்படுத்துதல் 4:11) மனித சுதந்திரம் வரையறைக்குட்பட்டது. அதனால்தான் சீஷனாகிய யாக்கோபு தன்னுடைய நாளிலிருந்த கிறிஸ்தவர்கள், “சுயாதீனப்பிரமாணமாகிய பூரணப்பிரமாணத்”தால் வழிநடத்தப்படும்படி அவர்களை உற்சாகப்படுத்தினார்.​—யாக்கோபு 1:25

யெகோவா தம்முடைய சர்வலோக குடும்பத்திலிருந்து ஆதாமையும் ஏவாளையும் விரட்டிவிட்டது நியாயமானதே. அதன் விளைவாக அவர்கள் மரித்தனர். (ஆதியாகமம் 3:19) ஆனால் அவர்களுடைய சந்ததியைப் பற்றியென்ன? இப்போது அபூரணம், பாவம், மரணம் ஆகியவற்றைத்தான் தங்கள் பிள்ளைகளுக்கு சொத்தாக கொடுக்க முடிந்தபோதிலும், யெகோவா தம்முடைய இரக்கத்தின் காரணமாக அவர்கள் பிள்ளைகளை பெறும்படி அனுமதித்தார். அதனால், “மரணம் எல்லாருக்கும் வந்தது.” (ரோமர் 5:12) இந்த அர்த்தத்தில்தான் கடவுள் சிருஷ்டியை ‘மாயைக்குக் கீழ்ப்படுத்தினார்.’

‘தேவனுடைய புத்திரர் வெளிப்படுவது’

“தேவனுடைய புத்திரர்” மூலமாக மனித குலம் மீண்டும் சுதந்திரத்தை அனுபவிக்கும் என்ற “நம்பிக்கையோடே”தான் யெகோவா தேவன் சிருஷ்டியை மாயைக்கு கீழ்ப்படுத்தினார். இந்தத் “தேவனுடைய புத்திரர்” யார்? இவர்கள் இயேசு கிறிஸ்துவின் சீஷர்கள்; எல்லா மனித “சிருஷ்டி”களைப் போலவே இவர்களும் பாவத்திற்கும் அபூரணத்திற்கும் அடிமைப்பட்டவர்களே. பிறப்பின்படி கடவுளுடைய சுத்தமான, பரிபூரண, சர்வலோக குடும்பத்தில் அவர்களுக்கு எந்த இடமுமில்லை என்பது நியாயமானதே. ஆனால் யெகோவா அவர்களுக்காக மகத்தான ஓர் ஏற்பாட்டை செய்கிறார். இயேசு கிறிஸ்துவின் கிரய பலி மூலமாக, சுதந்தரிக்கப்பட்ட பாவத்திற்கு அடிமைகளாய் இருப்பதிலிருந்து அவர்களை விடுவிக்கிறார். இவ்வாறு அவர்களை ‘நீதிமான்கள்’ அல்லது ஆவிக்குரிய அர்த்தத்தில் சுத்தமானவர்கள் என அறிவிக்கிறார். (1 கொரிந்தியர் 6:11) அதற்கு பிறகு அவர்களை ‘தேவனுடைய புத்திரராக’ தத்தெடுத்து தம்முடைய சர்வலோக குடும்பத்திற்குள் மறுபடியும் சேர்த்துக்கொள்கிறார்.​—ரோமர் 8:14-17.

யெகோவா தத்தெடுத்த குமாரர்களாக இருப்பதால் அவர்களுக்கு மகத்தான சிலாக்கியம் உள்ளது. அவர்கள் ‘தேவனுக்கு முன்பாக ஆசாரியர்களாய்’ கடவுளுடைய பரலோக ராஜ்யம் அல்லது அரசாங்கத்தின் பாகமாக இயேசு கிறிஸ்துவோடு சேர்ந்து ‘பூமியிலே அரசாளுவார்கள்.’ (வெளிப்படுத்துதல் 5:9, 10; 14:1-4) இந்த அரசாங்கத்திற்கு, ஒடுக்குமுறையும் கொடுங்கோன்மையும் அல்ல சுதந்திரமும் நீதியுமே அஸ்திவாரம். (ஏசாயா 9:6, 7; 61:1-4) இந்தத் தேவனுடைய புத்திரர், வெகு காலத்திற்கு முன்பு வாக்குப்பண்ணப்பட்ட ‘ஆபிரகாமின் சந்ததியான’ இயேசுவின் கூட்டாளிகள் என அப்போஸ்தலன் பவுல் கூறுகிறார். (கலாத்தியர் 3:16, 26, 29) கடவுள் தம்முடைய நண்பனான ஆபிரகாமோடு செய்த வாக்குறுதியை நிறைவேற்றுவதில் இவர்கள் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறார்கள். ஆபிரகாமுடைய சந்ததிக்குள், “பூமியிலுள்ள சகல ஜாதிகளும் ஆசீர்வதிக்கப்படும்” என்பதே அந்த வாக்குறுதியின் ஒரு பகுதி.​—ஆதியாகமம் 22:18.

அவர்களால் மனிதவர்க்கத்திற்கு கிடைக்கும் ஆசீர்வாதம் என்ன? மனித குடும்பம் முழுவதையும் ஆதாமிய பாவத்தின் விசனகரமான விளைவுகளிலிருந்து விடுவித்து, அவர்களை பரிபூரணத்திற்கு வழிநடத்துவதில் தேவனுடைய புத்திரர் பங்குகொள்வர். “சகல ஜாதிகளிலும் கோத்திரங்களிலும் ஜனங்களிலும் பாஷைக்காரரிலுமிருந்து” வரும் மக்கள் இயேசு கிறிஸ்துவின் கிரய பலியில் விசுவாசம் வைத்து, நன்மைபயக்கும் அவருடைய ராஜ்ய ஆட்சிக்கு கீழ்ப்படிந்து இவ்வாறு தங்களைத் தாங்களே ஆசீர்வதித்துக் கொள்ளலாம். (வெளிப்படுத்துதல் 7:9, 14-17; 21:1-4; 22:1, 2; மத்தேயு 20:28; யோவான் 3:16) இந்த விதத்தில் எல்லா ‘சிருஷ்டியும்’ மறுபடியும் “தேவனுடைய பிள்ளைகளுக்குரிய மகிமையான சுயாதீனத்தை” அனுபவித்துக் களிக்கும். இது மட்டுப்பட்ட, தற்காலிக அரசியல் சுதந்திரம் அல்ல; மாறாக ஆதாமும் ஏவாளும் கடவுளுடைய சர்வலோக அரசுரிமையை ஒதுக்கித்தள்ளிய சமயத்திலிருந்து மனித குடும்பத்திற்கு துன்பத்தையும் துயரத்தையும் ஏற்படுத்தியிருக்கும் எல்லா காரியங்களிலிருந்தும் விடுதலையைக் குறிக்கும். உண்மையுள்ளவர்கள் செய்யப்போகும் மகத்தான சேவையோடு ஒப்பிடுகையில் ‘இக்காலத்துப் பாடுகள் ஒன்றுமேயில்லை’ என பவுல் சொன்னது எத்தனை உண்மை!

‘தேவனுடைய புத்திரர் வெளிப்படுவது’ எப்போது ஆரம்பமாகும்? வெகு சீக்கிரத்தில். தேவனுடைய புத்திரர் யார் என யெகோவா எல்லாருக்கும் தெளிவாக காண்பிக்கும்போது இது நடக்கும். ஆவி உலகிற்கு உயிர்த்தெழுப்பப்படும் இந்தப் “புத்திரர்” இயேசு கிறிஸ்துவோடு சேர்ந்து கடவுளுடைய யுத்தமான அர்மகெதோனில் பூமியிலிருந்து துன்மார்க்கத்தையும் ஒடுக்குதலையும் நீக்கி சுத்திகரிக்கும்போது தெரியவரும். (தானியேல் 2:44; 7:13, 14, 27; வெளிப்படுத்துதல் 2:26, 27; 16:16; 17:14; 19:11-21) நாம் ‘கடைசி நாட்களின்’ முடிவை நெருங்கிவிட்டோம் என்பதற்கான ஏராளமான அத்தாட்சிகளை தினமும் பார்க்கிறோம். வெகு சீக்கிரத்தில், கடவுள் இத்தனை காலமாக கலகத்தனத்தை பொறுத்திருந்ததும் அதன் விளைவாக ஏற்பட்ட துன்மார்க்கமும் முடிவுக்கு வரும்.​—2 தீமோத்தேயு 3:1-5; மத்தேயு 24:3-31.

“இதுவரைக்கும் சர்வ சிருஷ்டியும் ஏகமாய்த் தவித்துப் பிரசவ வேதனைப்படுகிறது” என அப்போஸ்தலன் பவுல் சொன்னது உண்மைதான் என்றாலும் இன்னும் அதிக காலத்திற்கு அவ்வாறு இருக்காது. “உலகத்தோற்றமுதல் தேவன் தம்முடைய பரிசுத்த தீர்க்கதரிசிகளெல்லாருடைய வாக்கினாலும் உரைத்தவைகள் எல்லாம் நிறைவேறித் தீருங்காலங்கள்” வருவதை இன்று வாழும் லட்சக்கணக்கானோர் நேரில் காண்பர். சமாதானம், சுதந்திரம், நீதி ஆகியவை முழு மனித குடும்பத்தின் சொத்தாக மறுபடியும் கிடைக்கும்.​—அப்போஸ்தலர் 3:21.

கடைசியில் உண்மையான சுதந்திரம்

“தேவனுடைய பிள்ளைகளுக்குரிய மகிமையான சுயாதீனத்தைப்” பெற நீங்கள் என்ன செய்யவேண்டும்? “நீங்கள் என் உபதேசத்தில் நிலைத்திருந்தால் மெய்யாகவே என் சீஷராயிருப்பீர்கள்; சத்தியத்தையும் அறிவீர்கள், சத்தியம் உங்களை விடுதலையாக்கும்” என இயேசு கிறிஸ்து கூறினார். (யோவான் 8:31, 32) கிறிஸ்துவின் கட்டளைகளையும் போதனைகளையும் கற்றுக்கொண்டு அவற்றிற்கு கீழ்ப்படிவதே சுதந்திரத்தைப் பெறுவதற்கான வழி. அவ்வாறு செய்தால் இன்றேகூட ஓரளவு சுதந்திரத்தை அனுபவிக்கலாம். வெகு சீக்கிரத்தில் இயேசு கிறிஸ்துவினுடைய ஆட்சியின் மூலமாய் முழுமையான சுதந்திரத்தைப் பெறலாம். ஆகவே, பைபிளைப் படித்து இயேசுவின் ‘உபதேசங்களைத்’ தெரிந்துகொள்வதே ஞானமான போக்காகும். (யோவான் 17:3) ஆரம்பகால கிறிஸ்தவர்களைப் போல கிறிஸ்துவின் உண்மையான சீஷர்களடங்கிய சபையுடன் கூடிவாருங்கள். அவ்வாறு செய்தால், இன்று யெகோவா தம்முடைய அமைப்பின் வழியாக கொடுத்துவரும் விடுதலையளிக்கும் சத்தியங்களிலிருந்து நீங்களும் பயனடையலாம்.​—எபிரெயர் 10:24, 25.

“தேவனுடைய புத்திரர் வெளிப்படுவதற்கு” காத்திருக்கும் அதே சமயத்தில், கிறிஸ்துவின் அன்பான பாதுகாப்பிலும் ஆதரவிலும் அப்போஸ்தலன் பவுலுக்கிருந்ததைப் போன்ற நம்பிக்கையை நீங்களும் வளர்த்துக் கொள்ளலாம். தாங்கவே முடியாதளவுக்கு துன்புறுத்தலும் பொறுக்க முடியாத அநீதிகளும் இருப்பதாக தோன்றினாலும் அவ்வாறு செய்ய முடியும். தேவனுடைய புத்திரர் வெளிப்படுவதைப் பற்றி பேசிய பிறகு பவுல் இவ்வாறு கேட்டார்: “கிறிஸ்துவின் அன்பைவிட்டு நம்மைப் பிரிப்பவன் யார்? உபத்திரவமோ, வியாகுலமோ, துன்பமோ, பசியோ, நிர்வாணமோ, நாசமோசமோ, பட்டயமோ?” (ரோமர் 8:36) ஆம் ரௌசயு சொன்னபடி, பவுலின் நாட்களிலிருந்த கிறிஸ்தவர்கள் ஏதாவதொருவித ஒடுக்குமுறைக்குள் இன்னமும் ‘சிறைப்பட்டிருந்தனர்.’ அவர்கள் ‘எந்நேரமும் கொல்லப்பட்டு, அடிக்கப்படும் ஆடுகளைப்போல எண்ணப்பட்டார்கள்.’ (ரோமர் 8:35) அதனால் அவர்கள் மனந்தளர்ந்து போனார்களா?

மாறாக, “இவையெல்லாவற்றிலேயும் நாம் நம்மில் அன்புகூருகிறவராலே முற்றும் ஜெயங்கொள்ளுகிறவர்களாயிருக்கிறோமே” என்று பவுல் எழுதுகிறார். (ரோமர் 8:37) பூர்வகால கிறிஸ்தவர்கள் எதிர்ப்பட்ட எல்லா துன்பங்களின் மத்தியிலும் வெற்றியா? அது எப்படி முடியும்? அவரே பதிலளிக்கிறார்: “மரணமானாலும், ஜீவனானாலும், தேவதூதர்களானாலும், அதிகாரங்களானாலும், வல்லமைகளானாலும், நிகழ்காரியங்களானாலும், வருங்காரியங்களானாலும், உயர்வானாலும், தாழ்வானாலும், வேறெந்தச் சிருஷ்டியானாலும் நம்முடைய கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவிலுள்ள தேவனுடைய அன்பைவிட்டு நம்மைப் பிரிக்கமாட்டாதென்று நிச்சயித்திருக்கிறேன்.” (ரோமர் 8:38, 39) இதற்கிடையில் எப்படிப்பட்ட ‘உபத்திரவத்தையோ, வியாகுலத்தையோ, துன்பத்தையோ’ சகிக்க வேண்டியிருந்தாலும் நீங்களும் நிச்சயம் ‘ஜெயங்கொள்ளலாம்.’ வெகு சீக்கிரத்தில் நாம், “அழிவுக்குரிய [எல்லா] அடிமைத்தனத்தினின்று விடுதலையாக்கப்பட்டு, தேவனுடைய பிள்ளைகளுக்குரிய மகிமையான சுயாதீனத்தைப் பெற்றுக்கொள்”வோம் என கடவுளுடைய அன்பு நமக்கு உறுதியளிக்கிறது.

[பக்கம் 6-ன் படம்]

“இதுவரைக்கும் சர்வ சிருஷ்டியும் ஏகமாய்த் தவித்துப் பிரசவ வேதனைப்படுகிறது”

[பக்கம் 7-ன் படம்]

‘சிருஷ்டியானது அழிவுக்குரிய எல்லா அடிமைத்தனத்தினின்றும் விடுதலையாக்கப்பட்டு, தேவனுடைய பிள்ளைகளுக்குரிய மகிமையான சுயாதீனத்தைப் பெற்றுக்கொள்ளும்’

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்