பவுலின் உடன் ஊழியர்கள்—யார்?
பைபிள் புத்தகமாகிய அப்போஸ்தலரிலும் பவுலின் மற்ற கடிதங்களிலும் ஏறக்குறைய நூறு நபர்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டிருக்கின்றன. முதல் நூற்றாண்டு கிறிஸ்தவ சபையின் அங்கத்தினர்களாய் இருந்த இவர்கள் ‘புறஜாதிகளுக்கு அப்போஸ்தலனாக’ சேவித்தவரோடு நெருங்கிய தோழமையை அனுபவித்தவர்கள். (ரோமர் 11:13) அவர்களில் அநேகரைப் பற்றி நாம் நன்கு அறிந்திருக்கிறோம். அப்பொல்லோ, பர்னபா, சீலா போன்றவர்களைப் பற்றிய விவரங்கள் உங்களுக்கு அத்துப்படியாய் இருக்கலாம். ஆனால், அர்க்கிப்பு, கலவுதியாள், சோபத்தர், தாமரி, புதேஞ்சு, பெர்சியாள், லீனு போன்றவர்களைப் பற்றி நீங்கள் அதிகம் அறியாதிருக்கலாம்.
பல சமயங்களில், பல்வேறுபட்ட சூழ்நிலைகளில் பவுலின் ஊழியத்தை ஆதரிப்பதில் அநேகர் முக்கிய பங்கு வகித்தனர். அரிஸ்தர்க்கு, லூக்கா, தீமோத்தேயு ஆகியோர் பல வருடங்களாக பவுலோடு சேவித்தனர். சிலர் அவருடன் சிறையிலிருந்தனர்; இன்னும் சிலர் அவர் பிரயாணம் செய்கையில் பயணத் துணைகளாய் உடன் சென்றனர் அல்லது விருந்தளித்து உபசரித்தனர். ஆனால், அலெக்சந்தர், எர்மொகெனே, தேமா, பிகெல்லு போன்றவர்கள் கிறிஸ்தவ விசுவாசத்தில் நிலைத்திருக்க தவறியது வருந்தத்தக்கது.
பவுலின் மற்ற நண்பர்களில் ஒரு சிலரைக் குறிப்பிட, அசிங்கிரீத்து, எர்மா, பிலொலோகு, யூலியாள் போன்றவர்களின் பெயர் தெரியுமே தவிர வேறு எந்த விவரமும் நமக்கு தெரியாது. நேரேயின் சகோதரி, ரூப்பின் தாய், குலோவேயாளின் வீட்டார் ஆகியோரைப் பற்றியோ அதுவும்கூட நமக்கு தெரியாது. (ரோமர் 16:13-15; 1 கொரிந்தியர் 1:11) இருந்தாலும், நூற்றுக்கும் அதிகமான இந்நபர்களைப் பற்றி என்ன தகவல் இருக்கிறதோ அதை நாம் ஆராய்ந்தால் அப்போஸ்தலன் பவுல் எவ்வாறு வேலை செய்தார் என்பதை இன்னும் தெளிவாய் அறிந்துகொள்ளலாம். அதுமட்டுமல்ல, ஏராளமான உடன் ஊழியர்களால் சூழப்பட்டு, அவர்களுடன் தோளோடு தோள் சேர்ந்து வேலைசெய்வதால் வரும் நன்மைகளைப் பற்றியும் கற்றுக்கொள்ளலாம்.
பயணத் துணைகள், விருந்தளிப்பவர்கள்
அப்போஸ்தலன் பவுல் தன் ஊழியத்தின்போது பிரயாணம் செய்தது கொஞ்சநஞ்ச தூரமல்ல. அப்போஸ்தலர் புத்தகத்தில் உள்ள பதிவின்படி மட்டுமே அவர் நில மார்க்கமாகவும் நீர் மார்க்கமாகவும் சுமார் 16,000 கிலோமீட்டர் பயணம் செய்திருக்க வேண்டும் என ஓர் எழுத்தாளர் கணிக்கிறார். அந்தக் காலத்தில் பிரயாணம் செய்வது கடினமாக மட்டுமல்ல ஆபத்தாகவும் இருந்தது. அவர் எதிர்ப்பட்ட அநேக தொல்லைகளில் கப்பற்சேதம், ஆறுகளாலும் கள்ளராலும் வந்த மோசங்கள், வனாந்தரத்திலும் சமுத்திரத்திலும் உண்டான மோசங்கள் ஆகியவையும் அடங்கும். (2 கொரிந்தியர் 11:25, 26) ஆகவே, ஓர் இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு பிரயாணம் செய்கையில் பவுல் தனியாகவே போகவில்லை.
பவுலோடு பிரயாணம் செய்தவர்கள், நல்ல தோழமைக்கும், உற்சாகத்திற்கும், நடைமுறையான உதவிக்கும் பிறப்பிடமாக இருந்திருப்பர் என்பதில் துளியும் சந்தேகமில்லை. சில சமயங்களில் புதிய விசுவாசிகளின் ஆவிக்குரிய தேவைகளை கவனித்துக் கொள்வதற்காக பவுல் அவர்களை அங்கேயே விட்டுவந்தார். (அப்போஸ்தலர் 17:14; தீத்து 1:5) ஆனாலும் நண்பர்கள் இருப்பது பாதுகாப்பிற்கும் பிரயாணத்தின்போது எதிர்ப்படும் சவால்களை சமாளிப்பதற்கும் உதவியாக இருந்திருக்கும். சோபத்தர், செக்குந்து, காயு, துரோப்பீம் போன்ற நண்பர்கள் பவுலோடு பிரயாணம் செய்தவர்களுள் இருந்தனர் என்பது நாம் அறிந்ததே. அவருடைய ஊழியம் வெற்றியடைய இவர்கள் முக்கிய காரணராய் இருந்திருப்பர் என்பதும் நிச்சயம்.—அப்போஸ்தலர் 20:4.
விருந்தளித்து உபசரித்த மற்றவர்களின் உதவியும் அதேயளவு முக்கியமாய் நிரூபித்தன. பவுல், பிரசங்கிக்க அல்லது இரவு நேரத்தைக் கழிக்க ஒரு நகரத்திற்கு சென்றால் முதல் வேலையாக தங்குவதற்கு ஓர் இடத்தைத் தேடவேண்டும். பவுலைப்போல அந்தளவுக்கு பிரயாணம் செய்யும் எவரும் கட்டாயம் வித்தியாசப்பட்ட படுக்கைகளில்தான் உறங்க வேண்டியிருக்கும். அதனால் அவர் ஒரு சத்திரத்தில் தங்கியிருக்கலாம். ஆனால் அவை “ஆபத்தான, லாயக்கற்ற இடங்கள்” என சரித்திராசிரியர்கள் விவரிப்பதால் அவர், முடிந்தமட்டும் உடன் விசுவாசிகளோடு தங்கியிருக்கலாம்.
பவுலை ஏற்றுக்கொண்டு உபசரித்த சிலரின் பெயர்களை நாம் அறிந்திருக்கிறோம்— ஆக்கில்லா, பிரிஸ்கில்லாள், காயு, பிலிப்பு, பிலேமோன், மினாசோன், யாசோன், லீதியாள் ஆகியோர். (அப்போஸ்தலர் 16:14, 15; 17:7; 18:2, 3; 21:8, 16; ரோமர் 16:23; பிலேமோன் 1, 22) பிலிப்பி, தெசலோனிக்கே, கொரிந்து ஆகிய பட்டணங்களில் பவுல் தங்கிய இடங்கள், மிஷனரி சேவையை ஒழுங்கமைக்க உதவும் மையங்களாக சேவித்தன. கொரிந்துவில் பிரசங்கிக்க பவுலுக்கு உதவிய யுஸ்து தன் வீட்டையும் உபயோகிக்க அவருக்கு அனுமதியளித்தார்.—அப்போஸ்தலர் 18:7.
நண்பர்கள் கூட்டம்
பவுல் வித்தியாசப்பட்ட சூழ்நிலைகளில் அநேகரைச் சந்தித்தார்; அந்தப் பலதரப்பட்ட சம்பவங்கள் அவருக்கு தன் பழைய நண்பர்களை நினைப்பூட்டின. உதாரணமாக, திரிபேனாள், திரிபோசாள், பெபேயாள், பெர்சியாள், மரியாள் ஆகிய உடன் விசுவாசிகள், தங்களின் பிரயாசத்திற்காகவும் கடின உழைப்பிற்காகவும் பாராட்டு பெற்ற பெண்கள் ஆவர். (ரோமர் 16:1, 2, 6, 12) காயு, கிறிஸ்பு, ஸ்தேவானுடைய வீட்டார் ஆகியோருக்கு பவுல் முழுக்காட்டுதல் கொடுத்திருந்தார். தாமரியும் தியொனீசியுவும் அத்தேனே பட்டணத்தில் அவர் பிரசங்கித்தபோது சத்தியத்தை ஏற்றுக்கொண்டவர்கள். (அப்போஸ்தலர் 17:34; 1 கொரிந்தியர் 1:15, 16) பவுலைவிட அதிக காலம் விசுவாசிகளாயிருந்த, “அப்போஸ்தலருக்குள் பெயர்பெற்றவர்க[ளான]” அன்றோனீக்கு, யூனியா ஆகியோர் பவுலுடன் ‘கட்டுண்டவர்கள்’ என அழைக்கப்படுகின்றனர். ஏதாவதொரு சந்தர்ப்பத்தில் அவர்கள் பவுலுடன் சிறையில் இருந்திருக்கலாம். ஏரோதியோன், சொசிபத்தர், யாசோன், லூகி ஆகியோரைப் போலவே பவுல் இவர்கள் இருவரையும்கூட தன் ‘இனத்தார்’ என்று அழைக்கிறார். (ரோமர் 16:7, 11, 21) இங்கே அவர் உபயோகித்த எபிரெய வார்த்தை ‘உடன் தேசத்தாரைக்’ குறிக்கலாம் என்றாலும், “அதே சந்ததியைச் சேர்ந்த இரத்த சொந்தம்” என்பதே அதன் முக்கிய அர்த்தமாகும்.
பவுலின் நண்பர்களில் பெரும்பாலானோர் நற்செய்தியை பிரசங்கிக்கவே பிரயாணம் செய்தனர். பிரபலமாக அறியப்பட்டிருந்த அவருடைய நண்பர்களோடுகூட, அகாயுக்கு, பொர்த்துனாத்து, ஸ்தேவான் ஆகியோர் தங்கள் சபையின் ஆவிக்குரிய நிலையைப் பற்றி பவுலிடம் கலந்துபேச கொரிந்துவிலிருந்து எபேசுவுக்கு பிரயாணம் செய்தனர். கிரேத்தா தீவில் தீத்துவோடு ஊழியத்தில் சேர்ந்துகொள்ள அர்தெமாவும் தீகிக்கும் பயணப்பட தயாராய் இருந்தனர். சேனாவும் அப்பொல்லோவைக் கூட்டிக்கொண்டு செல்லவிருந்தார்.—1 கொரிந்தியர் 16:17; தீத்து 3:12, 13.
பவுல், சிலரைப் பற்றி சின்னச் சின்ன, சுவாரசியமான விவரங்களைக் கொடுக்கிறார். உதாரணமாக, எப்பனெத்து ‘அகாயாவிலே முதற்பலன்,’ ஏரஸ்து கொரிந்துவிலே ‘பட்டணத்து உக்கிராணக்காரன்,’ லூக்கா ஒரு மருத்துவன், லீதியாள் இரத்தாம்பரம் விற்கிறவள், ரோமர் நிருபத்தை எழுத பவுல் தெர்தியுவை உபயோகித்தார் போன்ற விஷயங்களை அறிய வருகிறோம். (ரோமர் 16:5, 22, 23; அப்போஸ்தலர் 16:14; கொலோசெயர் 4:14) இவை துணுக்கு செய்திகளாய் இருப்பதால் அந்த நபர்களைப் பற்றி அதிகம் அறிந்துகொள்ள விரும்புவோரை அவை ஏங்க வைக்கின்றன.
பவுல் தன்னுடைய சில நண்பர்களுக்கு தனிப்பட்ட செய்திகளை அனுப்பினார், அவற்றை இப்போது பைபிளில் காண்கிறோம். உதாரணமாக, பவுல் கொலோசெயருக்கு எழுதின நிருபத்தில் அர்க்கிப்புவிடம், “நீ கர்த்தரிடத்தில் பெற்ற ஊழியத்தை நிறைவேற்றும்படி கவனமாயிரு” என்று உற்சாகப்படுத்தினார். (கொலோசெயர் 4:17) எயோதியாளுக்கும் சிந்திகேயாளுக்கும் இடையே தனிப்பட்ட ஏதோவொரு பிரச்சினை இருந்தது. ஆகவே, பிலிப்பியிலிருந்த பெயரிடப்படாத “கூட்டாளி” மூலமாக “கர்த்தருக்குள் ஒரே சிந்தையாயிருக்”கும்படி பவுல் அவர்களுக்கு ஆலோசனை கூறினார். (பிலிப்பியர் 4:2, 3) இது நம் அனைவருக்குமே பொருந்தும் ஆலோசனை அல்லவா?
சிறையிலும் உண்மையான ஆதரவு
பவுல் அநேகமுறை சிறையிலிருந்தார். (2 கொரிந்தியர் 11:23) அந்தச் சமயங்களில் உள்ளூரில் கிறிஸ்தவர்கள் யாரேனும் இருந்தால் அந்தச் சூழ்நிலையை சமாளிக்க அவருக்கு வேண்டிய உதவியைக் கட்டாயம் செய்திருப்பர். பவுல் முதல் தடவை ரோமாபுரியில் சிறைப்பட்டிருந்தபோது, இரண்டு வருடங்களுக்கு ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து அங்கே தன் நண்பர்களை சந்திக்க அனுமதிக்கப்பட்டார். (அப்போஸ்தலர் 28:30) எபேசு, பிலிப்பி, கொலோசே ஆகிய பட்டணங்களில் இருந்த சபைகளுக்கும் பிலேமோனுக்கும் அனுப்பப்பட்ட கடிதங்களை அந்தச் சமயத்தில்தான் எழுதினார். பவுல் சிறைப்பட்டிருந்த சமயத்தில் அவருக்கு உற்ற நண்பர்களாய் இருந்தவர்கள் யார் யார் என்பதை இந்தக் கடிதங்களிலிருந்து தெரிந்துகொள்கிறோம்.
உதாரணமாக, பிலேமோனிடமிருந்து ஓடிப்போன வேலைக்காரன் ஒநேசிமுவும், அவனைத் தன் எஜமானிடம் திருப்பி அனுப்புகையில் அவனோடு சென்ற தீகிக்கும் பவுலை ரோமிலே சந்தித்தார்கள் என்றும் அறிந்துகொள்கிறோம். (கொலோசெயர் 4:7-9) எப்பாப்பிரோதீத்து, பிலிப்பியிலிருந்து நெடுந்தூரம் பயணம்செய்து தன் சபையிலிருந்து வெகுமதியை கொண்டு வந்தான், ஆனால் பின்னர் வியாதிப்பட்டான் என்பதையும் அறிய வருகிறோம். (பிலிப்பியர் 2:25; 4:18) ரோமில் பவுலோடு நெருக்கமாக வேலை செய்தவர்கள், அரிஸ்தர்க்கு, மாற்கு, யுஸ்து என்னப்பட்ட இயேசு ஆகியோரே. அவர்களைப் பற்றி, “இவர்கள் மாத்திரம் தேவனுடைய ராஜ்யத்தின் பொருட்டு என் உடன்வேலையாட்களாயிருந்து, எனக்கு ஆறுதல் செய்துவந்தவர்கள்” என்று பவுல் கூறினார். (கொலோசெயர் 4:10, 11) உண்மையுள்ள இவர்கள் அனைவரோடும்கூட பிரபலமாய் அறியப்பட்டிருக்கும் தீமோத்தேயு, லூக்கா, உலகத்தின் மேல் ஆசை வைத்து பின்னர் பவுலைவிட்டு பிரிந்த தேமா ஆகியோரும் உள்ளனர்.—கொலோசெயர் 1:1; 4:14; 2 தீமோத்தேயு 4:10; பிலேமோன் 24.
இவர்களில் யாருமே ரோமாபுரியைச் சேர்ந்தவர்களாக தெரியவில்லை, ஆனாலும் பவுலுடன் இருந்தனர். அவருடைய சிறையிருப்பின்போது அவருக்கு உதவுவதற்காகவே சிலர் அங்கு சென்றிருக்கலாம். சிலர் அவருக்கு எடுபிடி வேலை செய்தனர், சிலரைத் தொலைதூர நியமிப்புகளுக்கு அனுப்பினார், இன்னும் சிலர் அவருக்காக கடிதங்களை எழுதினர் என்பதில் சந்தேகமேயில்லை. பவுலிடமும் கடவுளுடைய வேலையிடமும் இவர்கள் அனைவரும் எவ்வளவு பற்றார்வமும் உண்மைத்தன்மையும் வைத்திருந்தனர் என்பதற்கு இது என்னே சிறந்த அத்தாட்சி!
நாம் பெயரளவில் அறிந்திருக்கும் சில நபர்களைத் தவிர இன்னும் ஏராளமான கிறிஸ்தவ சகோதர சகோதரிகளின் பெருங்கூட்டத்தினர் பவுலைச் சுற்றி மொய்த்தனர் என்பதை அவர் எழுதிய சில கடிதங்களின் முடிவுரைகளிலிருந்து அறிந்துகொள்கிறோம். “பரிசுத்தவான்களெல்லாரும் உங்களுக்கு வாழ்த்துதல் சொல்லுகிறார்கள்” என்றும் “என்னோடிருக்கிற யாவரும் உனக்கு வாழ்த்துதல் சொல்லுகிறார்கள்” என்றும் அவர் பல சந்தர்ப்பங்களில் எழுதினார்.—2 கொரிந்தியர் 13:13; தீத்து 3:15; பிலிப்பியர் 4:22.
பவுல் இரண்டாவது முறையாக ரோமாபுரியில் சிறையிலிருந்தபோது தியாக மரணம் அவருக்காக காத்திருந்தது. அந்தச் சமயத்தில் அவருடைய நினைவெல்லாம் தன் உடன் வேலையாட்களைப் பற்றியே. அவர்களில் சிலரின் நடவடிக்கையையாவது அவர் இன்னமும் ஒருங்கிணைத்து, மேற்பார்வை செய்துவந்தார். தீத்துவையும் தீகிக்குவையும் ஊழியத்திற்காக அனுப்பியிருந்தார், கிரெஸ்கே கலாத்தியா நாட்டிற்கு சென்றிருந்தார், ஏரஸ்து கொரிந்து பட்டணத்தில் இருந்துவிட்டார், துரோப்பீம் வியாதிப்பட்டிருந்ததால் அவரை மிலேத்துவில் விட்டுவந்திருந்தார், மாற்குவும் தீமோத்தேயுவும் அவரிடம் வரவிருந்தனர். ஆனால் லூக்கா பவுலுடன் இருந்தார். அவர் தீமோத்தேயுவுக்கு தன் இரண்டாவது நிருபத்தை எழுதுகையில் அங்கிருந்த ஐபூலு, புதேஞ்சு, லீனு, கலவுதியாள் ஆகியோர் உட்பட அநேக விசுவாசிகளும் வாழ்த்துதல் தெரிவித்தனர். பவுலுக்கு உதவ தங்களாலான எல்லாவற்றையும் அவர்கள் செய்தனர் என்பதில் துளியும் சந்தேகமில்லை. அதே சமயம், பவுல்தானே பிரிஸ்காளுக்கும் ஆக்கில்லாவுக்கும், ஒநேசிப்போருவின் வீட்டாருக்கும் வாழ்த்துதல் தெரிவிக்கிறார். இந்தக் கடினமான சமயத்தில் தேமா அவரைவிட்டுப் பிரிந்ததும் அலெக்சந்தர் அவருக்கு அநேக இடைஞ்சல்களை ஏற்படுத்தியதும் எவ்வளவு கொடுமை!—2 தீமோத்தேயு 4:9-21.
‘நாங்கள் தேவனுக்கு உடன்வேலையாட்கள்’
பவுல் பிரசங்கிக்கையில் தனியாகவே இல்லை. விரிவுரையாளர் ஈ. எர்ல் எல்லிஸ் கூறுகிறார்: “நண்பர்கள் புடைசூழ்ந்த ஒரு மிஷனரியைத்தான் நாம் பார்க்கிறோம். நண்பர்கள் இல்லாமல் பவுலைத் தனியாக பார்க்கவே முடியாது என்றே சொல்லலாம்.” கடவுளுடைய பரிசுத்த ஆவியின் உதவியால் அநேக ஆட்களைக் கூட்டிச்சேர்த்து, திறம்பட்ட மிஷனரி ஊழியத்தை பவுலால் ஏற்பாடுசெய்ய முடிந்தது. நெருங்கிய நண்பர்கள், தற்காலிக உதவியாட்கள், திறமையுள்ள நபர்கள், மனத்தாழ்மையுள்ள அநேக வேலைக்காரர்கள் என ஒரு பெரும் படையே அவரைச் சூழ்ந்திருந்தது. இவர்கள் வெறும் உடன் ஊழியர்கள் மட்டுமேயல்ல. அவர்கள் பவுலோடு எவ்வளவு நெருக்கமாக அல்லது எவ்வளவு காலம் வேலைசெய்தார்கள் என்பது நமக்கு தெரியாது. ஆனாலும் கிறிஸ்தவ அன்பின் கட்டும் தனிப்பட்ட நட்பும் மிகத் தெளிவாக தெரிகிறது.
அப்போஸ்தலன் பவுல், “நண்பர்களை சம்பாதிப்பதில் மேதை” என்று அழைக்கப்படுகிறார். புறஜாதிகளுக்கு நற்செய்தியை அறிவிக்க அவர் கடினமாக உழைத்தார், ஆனால் அதைத் தனியாக செய்ய நினைக்கவில்லை. ஒழுங்கமைக்கப்பட்ட கிறிஸ்தவ சபையின் உதவியை முழுமையாக உபயோகித்து சபையோடு ஒத்துழைத்தார். கிடைத்த பலன்களுக்காக பவுல் தனக்கு புகழை தேடிக்கொள்ளவில்லை. மாறாக, தான் ஒரு அடிமை என்றும் விளைச்சலுக்கு காரணகர்த்தாவான கடவுளுக்கே எல்லா புகழும் சேரும் என்றும் மனத்தாழ்மையோடு ஒப்புக்கொண்டார்.—1 கொரிந்தியர் 3:5-7; 9:16; பிலிப்பியர் 1:1.
பவுலின் காலங்களுக்கும் நமது காலத்திற்கும் ஏகப்பட்ட வித்தியாசம் இருப்பது உண்மைதான். ஆனால் இன்றும், தன்னிச்சையாக செயல்படலாம் அல்லது செயல்பட வேண்டும் என கிறிஸ்தவ சபையிலிருக்கும் எவரும் நினைக்கக்கூடாது. அதற்கு மாறாக, கடவுளுடைய அமைப்பு, உள்ளூர் சபை, நம் உடன் விசுவாசிகள் ஆகியோருடன் நாம் எப்போதும் சேர்ந்தே செயல்பட வேண்டும். சந்தோஷமான சமயங்களிலும் வேதனையான சமயங்களிலும் அவர்களுடைய உதவியும் ஆதரவும் ஆறுதலும் நமக்கு தேவை. ‘உலகத்திலுள்ள முழு சகோதர கூட்டுறவின்’ பாகமாக இருக்கும் தனிச்சிறந்த சிலாக்கியம் நமக்கிருக்கிறது. (1 பேதுரு 5:9, NW) அவர்கள் எல்லாரோடும் சேர்ந்து ஒத்துழைப்பதில் உண்மையோடும் அன்போடும் வேலை செய்தால் பவுலைப்போல நாமும் இவ்வாறு சொல்ல முடியும்: ‘நாங்கள் தேவனுக்கு உடன்வேலையாட்கள்.’—1 கொரிந்தியர் 3:9.
[பக்கம் 31-ன் படம்]
அப்பொல்லோ
அரிஸ்தர்க்கு
பர்னபா
லீதியாள்
ஒநேசிப்போரு
தெர்தியு
தீகிக்கு