படைப்பாளர் உங்கள் வாழ்க்கைக்கு அர்த்தத்தை கூட்ட முடியும்
“அவைகள் கர்த்தரின் [“யெகோவாவின்,” NW] நாமத்தைத் துதிக்கக்கடவது; அவர் கட்டளையிட அவைகள் சிருஷ்டிக்கப்பட்டது.”—சங்கீதம் 148:5.
1, 2. (அ) என்ன கேள்வியை நாம் சிந்திக்க வேண்டும்? (ஆ) ஏசாயாவின் கேள்வியில் எவ்வாறு படைப்பு உட்பட்டுள்ளது?
“இதை நீ அறியாயோ?” ‘எதை அறியாயோ?’ என கேட்கத் தூண்டும் ஒரு கேள்வியைப் போல இது தொனிக்கலாம். ஆனால் இது மிக முக்கியமான ஒரு கேள்வி. பைபிளில் ஏசாயா 40-ம் அதிகாரத்திலுள்ள சூழமைவை கவனித்தால் அதற்கான பதிலை நாம் நன்கு புரிந்துகொள்ளலாம். பூர்வ எபிரெயனாகிய ஏசாயா இதை எழுதினார், ஆகவே இந்தக் கேள்வி மிகவும் பழமையான ஒரு கேள்வி. ஆனாலும் அது அதிநவீனமானதும்கூட. அது உங்கள் வாழ்க்கையின் அடிப்படை அர்த்தத்தோடு தொடர்புடையது.
2 ‘இதை நீ அறியாயோ? இதை நீ கேட்டதில்லையோ? . . . பூமியின் கடையாந்தரங்களைச் சிருஷ்டித்த கர்த்த[ர்] அநாதி தேவன்.’ ஏசாயா 40:28-ல் உள்ள இந்தக் கேள்வி மிக முக்கியமாக இருப்பதால், நாம் அதற்கு ஆழ்ந்த கவனம் செலுத்துவது தகுதியானது. ஆகவே, ‘இதை அறிவது’ என்பது பூமியை படைத்தவரை அறிவதை அர்த்தப்படுத்தியது. பூமியைவிட அதிக விஷயம் அடங்கியுள்ளது என்பதை சூழமைவு காட்டுகிறது. இரண்டு வசனங்களுக்கு முன்பு நட்சத்திரங்களைப் பற்றி ஏசாயா எழுதினார்: “உங்கள் கண்களை ஏறெடுத்துப் பாருங்கள்; அவைகளைச் சிருஷ்டித்தவர் யார்? அவர் அவைகளின் சேனையை இலக்கத்திட்டமாகப் புறப்படப்பண்[ணுகிறவராமே]; . . . அவருடைய மகா பெலத்தினாலும், அவருடைய மகா வல்லமையினாலும், அவைகளில் ஒன்றும் குறையாமலிருக்கிறது.”
3. படைப்பாளரைப் பற்றி உங்களுக்கு நிறைய விஷயம் தெரியுமென்றாலும், ஏன் இன்னும் நிறைய அறிந்துகொள்ள வேண்டும்?
3 ஆம், “இதை நீ அறியாயோ?” என்ற கேள்வி உண்மையில் நமது அண்டத்தைப் படைத்தவரைப் பற்றியது. யெகோவா தேவனே ‘பூமியின் கடையாந்தரங்களைச் சிருஷ்டித்தவர்’ என்பதை நீங்கள் உறுதியாக நம்பலாம். அவருடைய ஆள்தன்மையையும் வழிகளையும் பற்றியும் நீங்கள் நிறைய அறிந்திருக்கலாம். ஆனால் சிருஷ்டிகர் ஒருவர் இருக்கிறார் என்பதையே சந்தேகிப்பவரை, அவர் எப்படிப்பட்டவர் என்பதைப் பற்றி தெளிவாக அறியாதவரை நீங்கள் சந்தித்தால்? இதைக் குறித்து ஆச்சரியப்பட வேண்டியதில்லை. ஏனெனில் கோடிக்கணக்கானோருக்கு சிருஷ்டிகர் யாரென்றும் தெரியாது, சிருஷ்டிகர் ஒருவர் இருக்கிறார் என்பதை அவர்கள் நம்புவதும் கிடையாது.—சங்கீதம் 14:1; 53:1.
4. (அ) இந்த சமயத்தில் படைப்பாளரைப் பற்றி சிந்திப்பது ஏன் பொருத்தமானது? (ஆ) எந்தக் கேள்விகளுக்கு விஞ்ஞானம் பதிலளிக்க முடியாது?
4 அண்டத்தையும் உயிரின் தோற்றத்தையும் பற்றிய கேள்விகளுக்கு விஞ்ஞானத்திடம் பதில் இருக்கிறது (அல்லது அது கண்டுபிடித்துவிடும்) என நினைக்கும் சந்தேகவாதிகளைப் பள்ளிகள் உருவாக்குகின்றன. உயிரின் தோற்றம் (மூலநூலின் பிரெஞ்சு தலைப்பு: ஓ ஆரீஸின் ட லா வீ) என்ற நூலின் ஆசிரியர்களாகிய ஆஸான் மற்றும் லனே இவ்வாறு குறிப்பிடுகின்றனர்: “உயிரின் தோற்றத்தைப் பற்றிய சர்ச்சை 21-ம் நூற்றாண்டின் ஆரம்பத்திலும்கூட இன்னும் விவாதிக்கப்படுகிறது. இந்தப் பிரச்சினையைத் தீர்ப்பது மிகவும் கடினம். ஆகவே எல்லா துறைகளிலும், பரந்துவிரிந்த ஆகாயம் முதல் கண்ணுக்குத் தெரியாத நுண்ணுயிரி வரை சகலத்தையும் ஆராய வேண்டும்.” இருப்பினும், “அந்தக் கேள்வி இன்னும் ஒலித்துக்கொண்டிருக்கிறது” என்ற கடைசி அதிகாரம் இவ்வாறு ஒப்புக்கொள்கிறது: “பூமியில் உயிர் எப்படி தோன்றியது? என்ற கேள்விக்கு விடை தேடி நாங்கள் விஞ்ஞானத்தைத் துருவி ஆராய்ந்திருக்கிறோம். ஆனால் ஏன் உயிர் தோன்றியது? வாழ்க்கைக்கு நோக்கமுண்டா? இந்தக் கேள்விகளுக்கு விஞ்ஞானம் பதிலளிக்க முடியாது. வெறுமனே காரியங்கள் ‘எப்படி’ வந்தன என்பதையே அது ஆராய்கிறது. ‘எப்படி’ என்பதும் ‘ஏன்’ என்பதும் முற்றிலும் மாறுபட்ட இரண்டு கேள்விகள். . . . ‘ஏன்’ என்ற கேள்விக்கு தத்துவம், மதம்—எல்லாவற்றிற்கும் மேலாக—நாம் ஒவ்வொருவரும் பதிலை கண்டுபிடிக்க வேண்டும்.”
பதிலையும் அர்த்தத்தையும் கண்டுபிடித்தல்
5. படைப்பாளரைப் பற்றி நிறைய கற்றுக்கொள்வதன் மூலம் முக்கியமாக எப்படிப்பட்ட மக்கள் நன்மையடையலாம்?
5 ஆம், உயிர் ஏன் தோன்றியது—முக்கியமாக நாம் ஏன் இங்கே இருக்கிறோம்—என்பதை நாம் புரிந்துகொள்ள விரும்புகிறோம். மேலும், படைப்பாளர் ஒருவர் இருக்கிறார் என்ற முடிவுக்கே இன்னும் வராத, கொஞ்சம்கூட அவருடைய வழிகளைப் பற்றி அறியாத ஆட்களில் நாம் அக்கறைகொள்ள வேண்டும். அல்லது, கடவுளைப் பற்றி பைபிள் கூறுவதிலிருந்து மிகவும் வித்தியாசமான கருத்துடைய பின்னணியிலிருந்து வருபவர்களைப் பற்றி சிந்தித்துப் பாருங்கள். கோடிக்கணக்கானோர் கிழக்கத்திய தேசங்களிலோ ஒரு தனிப்பட்ட, கவர்ந்திழுக்கும் குணாதிசயங்களையுடைய உண்மையான கடவுளைப் பற்றி பெரும்பாலானோர் சிந்தித்துப் பார்த்திராத வேறு இடங்களிலோ வளர்ந்து வந்திருக்கின்றனர். “கடவுள்” என்ற வார்த்தை வெறுமனே எங்கும் நிறைந்த ஒரு சக்தி அல்லது மாயையான காரணகர்த்தா என்ற கருத்தே அவர்களுடைய மனதிற்கு உடனடியாக வருகிறது. அவர்கள் ‘சிருஷ்டிகரையோ’ அவருடைய வழிகளையோ ‘அறிந்தில்லை.’ அவர்களோ அல்லது இப்படிப்பட்ட கருத்துக்களைக் கொண்ட லட்சக்கணக்கானோரோ சிருஷ்டிகர் இருக்கிறார் என்பதை நம்பினால், எப்பேர்ப்பட்ட நன்மைகளை, நித்தியகால ஆசீர்வாதங்களை அவர்கள் பெறமுடியும்! அரிய ஒன்றை, அதாவது வாழ்க்கையின் உண்மையான அர்த்தத்தையும் நோக்கத்தையும் மனநிம்மதியையும் அவர்கள் பெறமுடியும்.
6. இன்றுள்ள அநேகருடைய வாழ்க்கை பால் கோகன் என்பவருடைய அனுபவத்திற்கும் அவருடைய ஓவியத்திற்கும் எப்படி ஒத்திருக்கிறது?
6 உதாரணமாக: 1891-ல் பிரான்ஸ் நாட்டு ஓவியர் பால் கோகன், முழுநிறைவான வாழ்க்கையைத் தேடி பரதீஸ் போன்று காட்சியளித்த பிரெஞ்சு பாலினீஷியாவிற்கு சென்றார். ஆனால் அவருடைய கட்டுப்பாடற்ற கடந்தகால வாழ்க்கைமுறை அவருக்கும் பிறருக்கும் வியாதியை உண்டாக்கியது. மரணம் நெருங்கி வருவதை உணர்ந்த அவர் ஒரு பெரிய ஓவியம் வரைந்தார். அதில் ‘வாழ்க்கை என்பது புரியாப் புதிர்’ என தெரிவித்தார். அந்த ஓவியத்திற்கு கோகன் என்ன பெயர் வைத்தார் என்று உங்களுக்குத் தெரியுமா? “நாம் எங்கிருந்து வருகிறோம்? நாம் யார்? நாம் எங்கே போகிறோம்?” இதுபோன்ற கேள்விகளை மற்றவர்கள் கேட்பதை நீங்கள் ஒருவேளை கேள்விப்பட்டிருக்கலாம். அநேகர் கேட்டிருக்கின்றனர். ஆனால் திருப்தியளிக்கும் பதிலை கண்டுபிடிக்க முடியாதபோது—வாழ்க்கைக்கு உண்மையான அர்த்தமில்லை என நினைக்கும்போது—அவர்கள் எங்கே போக முடியும்? தங்களுடைய வாழ்க்கை மிருகங்களின் வாழ்க்கையிலிருந்து அதிகம் வித்தியாசப்படுவதில்லை என்ற முடிவுக்கே வரலாம்.—2 பேதுரு 2:12. a
7, 8. விஞ்ஞானத்தை ஆராய்வது மட்டுமே ஏன் போதுமானதல்ல?
7 இயற்பியல் பேராசிரியர் ஃபிரிமென் டைசன் பின்வருமாறு எழுதியதைப் போன்று ஏன் சிலர் எழுதுகின்றனர் என்பதை இதன்மூலம் நீங்கள் புரிந்துகொள்ளலாம். “யோபு கேட்ட கேள்விகளை நான் மறுபடியும் கேட்கும்போது மதிப்புமிக்க அநேகருடைய எண்ணங்களைப் பகிர்ந்துகொள்கிறேன். நாம் ஏன் துன்பப்படுகிறோம்? இந்த உலகத்தில் ஏன் இவ்வளவு அநீதி? வேதனைக்கும் துன்பத்திற்கும் காரணம் என்ன?” (யோபு 3:20, 21; 10:2, 18; 21:7) ஏற்கெனவே குறிப்பிடப்பட்டபடி, கடவுளிடம் திரும்புவதற்குப் பதிலாக அநேகர் விஞ்ஞானத்திடம் திரும்புகின்றனர். உயிரியல் நிபுணர்கள், ஆழ்கடல் ஆராய்ச்சியாளர்கள் மற்றும் பலர், நம்முடைய பூமியையும் அதிலுள்ள உயிரையும் பற்றிய நம் அறிவெல்லையை அகலமாக்கியிருக்கின்றனர். மற்றொரு திசையில் தேடுபவர்களாய், வானவியல் நிபுணர்களும் இயற்பியல் நிபுணர்களும் நம்முடைய சூரிய மண்டலம், நட்சத்திரங்கள் மேலும் தொலைவான நட்சத்திர மண்டலங்களைப் பற்றி நிறைய கற்றுக்கொள்கின்றனர். (ஆதியாகமம் 11:6-ஐ ஒப்பிடுக.) இப்படிப்பட்ட உண்மைகள் என்ன நியாயமான முடிவை சுட்டிக்காட்டுகின்றன?
8 இந்த அண்டத்தில் காணப்படும் கடவுளுடைய “மனம்” அல்லது அவருடைய “கைவண்ணம்” பற்றியும்கூட சில விஞ்ஞானிகள் பேசுகின்றனர். ஆனால் அது முக்கிய குறிப்பை தவறவிடக்கூடுமா? சைன்ஸ் பத்திரிகை இவ்வாறு குறிப்பிட்டது: “கடவுளுடைய ‘மனதை’ அல்லது ‘கைவண்ணத்தை’ விண்ணியல் (cosmology) வெளிப்படுத்துகிறது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறும்போது, அண்டத்தின் மிகச் சிறிய அம்சமாகிய, அதன் அடிப்படை அமைப்பிற்கு காரணம் தெய்வீகமே என கூறுகிறார்கள்.” இயற்பியல் நிபுணரும் நோபல் பரிசு பெற்றவருமான ஸ்டீவன் வைன்பர்க் எழுதினார்: “இந்த அண்டத்தைப் பற்றி எவ்வளவு அதிகம் புரிந்துகொள்கிறோமோ அவ்வளவு அதிகம் அர்த்தமற்றதாக தோன்றுகிறது.”
9. படைப்பாளரைப் பற்றி கற்றுக்கொள்ள நமக்கும் மற்றவர்களுக்கும் என்ன அத்தாட்சி உதவலாம்?
9 இருப்பினும், இந்த விஷயத்தைப் பற்றி ஆழ்ந்து ஆராய்ந்து, சிருஷ்டிகரை அறிந்துகொள்வதிலேயே வாழ்க்கையின் உண்மையான நோக்கம் சார்ந்திருக்கிறது என்பதைப் புரிந்துகொண்ட லட்சக்கணக்கானோர் மத்தியில் ஒருவேளை நீங்களும் ஒருவராக இருக்கலாம். அப்போஸ்தலன் பவுல் எழுதியதை ஞாபகப்படுத்திப் பாருங்கள்: “கடவுளைப் பற்றி தெரியாது என மனிதர்கள் சொல்ல முடியாது. இந்த உலகத்தின் தோற்றம் முதற்கொண்டு, அவர் படைத்தவற்றிலிருந்து அவர் எப்படிப்பட்டவர் என்பதை மனிதர்கள் காண முடியும். அவருடைய வல்லமை என்றும் நிலைத்திருக்கிறது என்பதை இது காட்டுகிறது. அவரே கடவுள் என்பதை இது காட்டுகிறது.” (ரோமர் 1:20, ஹோலி பைபிள், நியூ லைஃப் வர்ஷன்) ஆம், நம் உலகைப் பற்றியும் நம்மைப் பற்றியுமான உண்மைகள் இருக்கின்றன; அவை சிருஷ்டிகரை தெரிந்துகொள்ளவும் அவருடைய நோக்கத்தைக் கண்டுபிடிக்கவும் மக்களுக்கு உதவும். இதில் மூன்று அம்சங்களை கவனியுங்கள்: நம்மைச் சுற்றியிருக்கும் அண்டம், உயிரின் தோற்றம், மேலும் நம் மனத் திறமைகள்.
நம்புவதற்கான காரணங்கள்
10. நாம் ஏன் ‘ஆரம்பத்திற்கு’ கவனம் செலுத்த வேண்டும்? (ஆதியாகமம் 1:1, NW; சங்கீதம் 111:10)
10 நமது அண்டம் எப்படி வந்தது? விண்வெளி தொலைநோக்கிகள் மற்றும் விண்வெளி ஆராய்ச்சிகள் பற்றிய அறிக்கைகளிலிருந்து நமது அண்டம் எப்போதுமே இருந்திருக்கவில்லை என பெரும்பாலான விஞ்ஞானிகள் நினைக்கிறார்கள் என்பதை நீங்கள் ஒருவேளை அறிந்திருப்பீர்கள். அதற்கு ஒரு ஆரம்பம் இருந்தது; அது தொடர்ந்து விரிவாகிக்கொண்டே வருகிறது. இது எதைக் குறிக்கிறது? வானவியல் நிபுணரான சர் பெர்னார்டு லொவெல் கூறுவதைக் கவனியுங்கள்: “முற்காலத்தில் ஏதோவொரு சமயத்தில் இந்த அண்டம் மிகச் சிறியதாக, அளவற்ற அடர்த்தியுள்ள ஒன்றாக இருந்தது என்றால், அதற்கு முன் என்ன இருந்தது என்று கேட்க வேண்டும் . . . ஆரம்பம் பற்றிய பிரச்சினையை நாம் எதிர்ப்பட்டே ஆகவேண்டும்.”
11. (அ) இந்த அண்டம் எவ்வளவு பரந்தது? (ஆ) அண்டத்தின் துல்லியமான ஒத்திசைவு எதை தெரிவிக்கிறது?
11 கூடுதலாக, நாம் வாழும் பூமி உட்பட இந்த அண்டத்தின் அமைப்பில் மிகத் துல்லியமான ஒத்திசைவு இருப்பதை காட்டுகிறது. உதாரணமாக, நம் சூரியனுக்கும் மற்ற நட்சத்திரங்களுக்கும் இருக்கும் இரண்டு விசேஷித்த குணங்கள், நீண்ட நாள் செயல்படும் திறனும் ஸ்திரத்தன்மையும் ஆகும். காணக்கூடிய இந்த அண்டத்திலுள்ள எண்ணற்ற நட்சத்திர மண்டலங்களின் தற்போதைய எண்ணிக்கை 5,000 கோடியிலிருந்து (5,000,00,00,000) 12,500 கோடி என கணக்கிடப்படுகிறது. நமது பால்வீதி மண்டலத்தில் கோடானுகோடி நட்சத்திரங்கள் உள்ளன. இப்பொழுது இதை சிந்தித்துப் பாருங்கள்: மோட்டார் கார் ஒன்றின் என்ஜினில் எரிபொருளும் காற்றும் துல்லியமான அளவில் கலப்பதை நாம் அறிவோம். உங்களுக்கு சொந்தமாக ஒரு கார் இருந்தால், அதன் என்ஜினை சுதியமைக்க பயிற்சிபெற்ற ஒரு மெக்கானிக்கின் உதவியை நாடுவீர்கள். அதனால் உங்களுடைய கார் அதிக இலகுவாக ஓடும், அதிக திறம்பட்டதாகவும் இருக்கும். சாதாரண ஒரு இயந்திரத்திற்கே அப்படிப்பட்ட துல்லியம் முக்கியம் என்றால், திறம்பட்ட விதத்தில் “எரிந்துகொண்டிருக்கும்” சூரியனைப் பற்றியென்ன? இதிலுள்ள முக்கிய சக்திகள் பூமியில் உயிர் வாழ்வதற்கென்றே துல்லியமான ஒத்திசைவுடன் வடிவமைக்கப்பட்டுள்ளன என்பது தெளிவாகிறது. இந்தத் துல்லியம் தானாகவே வந்துவிட்டதா? பூர்வகால யோபுவிடம் இவ்வாறு கேட்கப்பட்டது: “வானத்தின் நியமங்களை நீ அறிவாயோ? அது பூமியையாளும் ஆளுகையை நீ திட்டம் பண்ணுவாயோ?” (யோபு 38:33) எந்த மனிதனும் இதைச் செய்யவில்லை. அப்படியானால் இந்தத் துல்லியம் எப்படி வந்தது?—சங்கீதம் 19:1.
12. படைப்புக்குப் பின்னால் வல்லமைமிக்க புத்திக்கூர்மை இருப்பதை நம்புவது ஏன் நியாயமானது?
12 பார்க்க முடியாத ஏதோ ஒன்று அல்லது யாரோ ஒருவர் மூலம் வந்திருக்க முடியுமா? இந்தக் கேள்விகளை நவீன விஞ்ஞானத்தின் அடிப்படையில் சிந்தித்துப் பாருங்கள். கருந்துளைகள் (black holes) என அழைக்கப்படும் மிகவும் வல்லமையுள்ள வானமண்டலங்கள் இருப்பதாக பெரும்பாலான வானவியல் நிபுணர்கள் இப்போது ஒப்புக்கொள்கின்றனர். இவற்றைப் பார்க்க முடியாதபோதிலும் அவை இருக்கின்றன என்று அநேக நிபுணர்கள் கருதுகின்றனர். அதைப்போலவே, பார்க்க முடியாத வல்லமையுள்ள சிருஷ்டிகளான ஆவி சிருஷ்டிகள் மற்றொரு இடத்தில் இருக்கின்றனர் என்று பைபிள் அறிவிக்கிறது. இப்படிப்பட்ட வல்லமையுள்ள, காணக்கூடாத சிருஷ்டிகள் இருக்கிறார்களென்றால், இந்த அண்டம் முழுவதும் காணப்படும் துல்லியம், வல்லமையுள்ள ஒரு புத்திக்கூர்மையிலிருந்து வந்தது என்பது நியாயமல்லவா?—நெகேமியா 9:6.
13, 14. (அ) உயிரின் தோற்றத்தைப் பற்றி விஞ்ஞானம் உண்மையில் எதை நிரூபித்திருக்கிறது? (ஆ) பூமியில் உயிர் இருப்பது எதை சுட்டிக்காட்டுகிறது?
13 சிருஷ்டிகர் ஒருவர் இருக்கிறார் என்பதை ஏற்றுக்கொள்ள மக்களுக்கு உதவும் இரண்டாவது அத்தாட்சி உயிரின் தோற்றத்துடன் சம்பந்தப்பட்டது. லூயி பாஸ்டரின் ஆராய்ச்சிகளுக்கு பிறகு, உயிரற்ற பொருளிலிருந்து திடீரென உயிர் தானாக தோன்றுவதில்லை என ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது. அப்படியானால் பூமியில் உயிர் எப்படி தோன்றியது? வெகுகாலத்துக்கு முந்தைய வளிமண்டலத்தில் தொடர்ந்து மின்னல் வெட்டியதால் அங்கிருந்த ஏதோ ஒரு பெருங்கடலில் உயிர் படிப்படியாக உருவாகி வளர்ந்திருக்கலாம் என 1950-களில் விஞ்ஞானிகள் நிரூபிக்க முயன்றனர். ஆனால் பூமியிலிருக்கும் உயிர் அவ்வாறு தோன்றியிருப்பதற்கு சாத்தியமில்லை, ஏனென்றால் அப்படிப்பட்ட வளிமண்டலம் ஒருபோதும் இருக்கவில்லை என நவீனகால அத்தாட்சிகள் காண்பிக்கின்றன. அதன் விளைவாக, ஓரளவு ஒத்துக்கொள்ளும் வகையில் மாற்று விளக்கமளிக்க விஞ்ஞானிகள் ஆராய்ந்து வருகின்றனர். ஆனால் முக்கிய விஷயத்தையும் அவர்கள் தவறவிடுகிறார்களா?
14 அண்டத்தையும் அதிலுள்ள உயிரையும் ஆராய்வதில் பல பத்தாண்டுகளை செலவிட்ட சர் ஃபிரெட் ஹோயல் என்ற பிரிட்டன் விஞ்ஞானி இவ்வாறு கூறினார்: “இயற்கையின் குருட்டுத்தனமான சக்திகளால் உயிர் தோன்றியது என்று குறிப்பிடும் நம்ப முடியாத சாத்தியங்களை ஏற்றுக்கொள்வதற்கு மாறாக, புத்திக்கூர்மையுள்ள ஒருவரே ஒரு நோக்கத்தோடு உயிரை படைத்திருக்கிறார் என்பதை ஏற்றுக்கொள்வது மேம்பட்டதாகத் தோன்றுகிறது.” ஆம், உயிரின் அதிசயங்களைப் பற்றி நாம் எவ்வளவு அதிகம் கற்றுக்கொள்ளுகிறாமோ அவ்வளவு அதிகம் அந்த உயிர் புத்திக்கூர்மையுள்ள ஓர் ஊற்றுமூலத்திலிருந்துதான் வந்தது என்பதும் தர்க்கரீதியாக இருக்கிறது.—யோபு 33:4; சங்கீதம் 8:3, 4; 36:9; அப்போஸ்தலர் 17:28.
15. நீங்கள் தனித்தன்மைமிக்கவர்கள் என்று ஏன் சொல்லலாம்?
15 ஆகவே, முதலாவது அத்தாட்சி அண்டத்தைப் பற்றியதாகவும் இரண்டாவது அத்தாட்சி பூமியில் உயிரின் தோற்றத்தைப் பற்றியதாகவும் இருந்தது. இப்பொழுது மூன்றாவது குறிப்பைக் கவனியுங்கள். அதுதான் நமது இணையற்ற தனித்தன்மை. அநேக வழிகளில் எல்லா மனிதர்களும் விசேஷித்தவர்கள். அதெப்படி? நம் மூளையை சக்திவாய்ந்த ஒரு கம்ப்யூட்டரோடு இணைத்து பேசுவதை நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம். என்னதான் சக்திவாய்ந்த கம்ப்யூட்டராக இருந்தாலும் மனித மூளையோடு நூற்றுக்கு நூறு ஒப்பிட முடியாது என சமீபத்திய கண்டுபிடிப்புகள் காட்டுகின்றன. மாஸசூஸெட்ஸ் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜியில் விஞ்ஞானியாக இருக்கும் ஒருவர் கூறினார்: “பார்க்க, பேச, நடமாட அல்லது அறிவை உபயோகிக்க 4-வயது குழந்தையின் மூளைக்கு இருக்கும் திறமைக்குக்கூட இன்றைய கம்ப்யூட்டர்கள் சமமாக இல்லை. . . . மிகவும் சக்திவாய்ந்த சூப்பர் கம்ப்யூட்டரின் தகவல் பரிமாற்ற திறமையும்கூட ஒரு நத்தையின் நரம்பு மண்டலத்திற்கு சமமாகத்தான் இருக்கிறது என்று கணிக்கப்பட்டிருக்கிறது. [உங்கள்] மண்டையோட்டிற்குள் இருக்கும் சூப்பர் கம்ப்யூட்டரின் சக்தியில் மிகச் சிறிய பகுதியே இது.”
16. உங்களுடைய மொழியறிவு எதை சுட்டிக்காட்டுகிறது?
16 உங்கள் மூளையின் காரணமாக உங்களுக்கு இருக்கும் திறமைகளுள் ஒன்று மொழி. சிலர் இரண்டு, மூன்று அல்லது அதற்கும் அதிகமான மொழிகளைப் பேசினாலும், ஒரேவொரு மொழியைப் பேசும் திறமையே நம்மை விசேஷித்தவர்கள் என்று சுட்டிக்காட்டுகிறது. (ஏசாயா 36:11; அப்போஸ்தலர் 21:37-40) பேராசிரியர்களாகிய ஆர். எஸ். மற்றும் டி. ஹெச். ஃபௌட்ஸ் இவ்வாறு கேட்டனர்: “மனிதனால் மட்டுமே . . . மொழியின் மூலம் தொடர்புகொள்ள முடியுமா? . . . நிச்சயமாகவே மற்ற எல்லா உயர்ந்த மிருகங்களும் . . . செய்கைகள், வாசனைகள், ஒலிகள், சப்தங்கள், பாடல்கள், ஏன் தேனிக்களின் விஷயத்தில் நடனங்கள் மூலமும் தொடர்புகொள்கின்றன. இருந்தாலும், மனிதனைத் தவிர மற்ற மிருகங்களுக்கு திட்டவட்டமான இலக்கண-ரீதியான மொழி இருப்பதாக தெரியவில்லை. மிருகங்களால் அர்த்தமுள்ள படங்களை வரைய முடியாது என்பதும் மிகவும் முக்கியமான ஒரு விஷயம். அவற்றால் செய்ய முடிந்ததெல்லாம் கிறுக்குவதுதான்.” உண்மையில், மனிதர்கள் மட்டுமே மூளையை உபயோகித்து ஒரு மொழியைப் பேசவும் அர்த்தமுள்ள படங்களை வரையவும் முடியும்.—ஒப்பிடுக: ஏசாயா 8:1; 30:8; லூக்கா 1:3, 4.
17. கண்ணாடியில் ஒரு மிருகம் பார்ப்பதற்கும் ஒரு மனிதன் பார்ப்பதற்கும் உள்ள அடிப்படை வித்தியாசம் என்ன?
17 அதுமட்டுமல்ல, உங்களைப் பற்றிய உணர்வுள்ளவர்களாகவும் நீங்கள் இருக்கிறீர்கள். (நீதிமொழிகள் 14:10) ஒரு பறவையோ நாயோ பூனையோ கண்ணாடியைப் பார்த்து கொத்துவதை, உறுமுவதை அல்லது தாக்குவதை கவனித்திருக்கிறீர்களா? தான்தான் அது என்று தன்னைத்தானே உணராமல், அது மற்றொரு மிருகத்தைப் பார்ப்பதாக நினைத்துக்கொள்கிறது. அதற்கு நேர்மாறாக, நீங்கள் ஒரு கண்ணாடியில் பார்க்கும்போது அது நீங்கள்தான் என்று அறிந்துகொள்கிறீர்கள். (யாக்கோபு 1:23, 24) உங்கள் தோற்றத்தை நீங்கள் சரிபார்த்துக் கொள்ளலாம் அல்லது இன்னும் சில வருடங்களில் எப்படி இருப்பீர்கள் என்று சிந்தித்துப் பார்க்கலாம். எந்த மிருகமும் அப்படி செய்வதில்லை. ஆம், உங்கள் மூளை உங்களை இணையற்றவராக ஆக்குகிறது. இதற்கான புகழ் யாருக்கு செல்கிறது? கடவுளிடமிருந்து வரவில்லையென்றால், மனித மூளை எப்படி தோன்றியது?
18. உங்களுக்கு இருக்கும் எந்த மனத்திறமை உங்களை மிருகங்களிலிருந்து வேறுபடுத்திக் காட்டுகிறது?
18 கலையையும் இசையையும் போற்றுவதற்கு உங்கள் மூளையே காரணம். நல்லொழுக்க எண்ணம் உள்ளவராக இருக்கவும் மூளைதான் காரணம். (யாத்திராகமம் 15:20; நியாயாதிபதிகள் 11:34; 1 இராஜாக்கள் 6:1, 29-35; மத்தேயு 11:16, 17) மிருகங்களுக்கு இல்லாத இந்த உணர்வு உங்களுக்கு மட்டுமே ஏன் இருக்கிறது? உணவைத் தேடுவது, துணையைத் தேடுவது அல்லது கூட்டைக் கட்டுவது போன்ற அப்போதைய தேவைகளை திருப்திசெய்ய மட்டுமே மிருகங்கள் தங்கள் மூளையை உபயோகிக்கின்றன. மனிதர் மட்டுமே எதிர்காலத்தைப் பற்றி யோசிக்கின்றனர். தங்கள் செயல்கள் பல வருடங்கள் கழித்து சுற்றுச்சூழலை அல்லது தங்கள் சந்ததியினரை எவ்வாறு பாதிக்கும் என்றும்கூட சிலர் சிந்திக்கின்றனர். ஏன்? மனிதர்களைப் பற்றி பிரசங்கி 3:11 (திருத்திய மொழிபெயர்ப்பு) இவ்வாறு கூறுகிறது: “நித்தியகால நினைவையும் அவர்கள் உள்ளத்திலே [சிருஷ்டிகர்] வைத்திருக்கிறார்.” ஆம், முடிவில்லாத காலத்தின் அர்த்தத்தைப் பற்றி சிந்திக்கும் அல்லது நித்திய ஜீவனைப் பற்றி கற்பனை செய்யும் உங்கள் திறமை விசேஷமானது.
படைப்பாளர் அர்த்தத்தை கூட்டுவாராக
19. படைப்பாளரைப் பற்றி சிந்தித்துப் பார்க்க மற்றவர்களுக்கு உதவிசெய்வதில் எந்த மூன்று அம்சங்களை நியாயங்காட்டிப் பேச பயன்படுத்துவீர்கள்?
19 விரிந்துகிடக்கும் அண்டத்தில் காணப்படும் துல்லியம், பூமியில் உயிரின் தோற்றம், வேறுபட்ட திறமைகளைக் கொண்ட மனித மூளையின் இணையற்ற தனித்தன்மை ஆகிய மூன்று குறிப்புகளை மட்டுமே நாம் சிந்தித்திருக்கிறோம். இம்மூன்றும் எதை சுட்டிக்காட்டுகின்றன? இதற்கான பதிலை மற்றவர்கள் தெரிந்துகொள்ள அவர்களிடம் பின்வரும் நியாயமான கேள்விகளைக் கேட்கலாம். முதலில் இப்படி கேளுங்கள்: இந்த அண்டத்திற்கு ஓர் ஆரம்பம் இருந்ததா? இருந்ததென பெரும்பாலானோர் ஒப்புக்கொள்வர். அப்படியானால், இவ்வாறு கேளுங்கள்: அந்த ஆரம்பத்திற்கு காரணம் இருந்ததா இல்லையா? பிரபஞ்சத்தின் ஆரம்பத்திற்கு காரணம் இருந்ததென பெரும்பாலானோர் ஒப்புக்கொள்வர். இது கடைசி கேள்விக்கு வழிநடத்துகிறது: அந்த ஆரம்பத்திற்கு காரணம் நித்தியமான ஏதோ ஒன்றா அல்லது நித்தியமான யாரோ ஒருவரா? விஷயங்களை இப்படி தெளிவாகவும் தர்க்கரீதியிலும் அளிப்பது, அநேகரை இந்த முடிவுக்கு வழிநடத்தும்: நிச்சயமாகவே படைப்பாளர் ஒருவர் இருக்க வேண்டும்! எனவே, வாழ்க்கைக்கு நோக்கம் இருப்பது சாத்தியமல்லவா?
20, 21. நம்முடைய வாழ்க்கையில் நோக்கத்தைக் கொண்டிருப்பதில் படைப்பாளரைப் பற்றி அறிந்துகொள்வது ஏன் முக்கியம்?
20 நம் முழு வாழ்வுமே, அதாவது நம் ஒழுக்கவுணர்வும், ஏன் ஒழுக்கநெறியும் உட்பட அனைத்துமே நம்முடைய படைப்பாளரோடு பிணைக்கப்பட்டிருக்க வேண்டும். டாக்டர் ராலோ மே ஒருமுறை இவ்வாறு எழுதினார்: “ஒழுக்கநெறி என்பதே வாழ்க்கையின் அடிப்படை அர்த்தத்தை அஸ்திவாரமாகக் கொண்ட சரியான அமைப்புமுறை.” அதை எங்கே கண்டுபிடிக்கலாம்? அவர் தொடர்ந்து சொன்னார்: “கடவுளுடைய குணாதிசயமே எல்லாவற்றிற்கும் அடிப்படையான அமைப்புமுறை. கடவுளுடைய கோட்பாடுகளே படைப்பின் ஆரம்பம் முதல் முடிவுவரை உயிரை இயக்கிவைக்கும் கோட்பாடுகள்.”
21 அப்படியானால், “கர்த்தாவே, உம்முடைய வழிகளை எனக்குத் தெரிவியும்; உம்முடைய பாதைகளை எனக்குப் போதித்தருளும். உம்முடைய சத்தியத்திலே என்னை நடத்தி, என்னைப் போதித்தருளும்; நீரே என் இரட்சிப்பின் தேவன்” என சங்கீதக்காரன் படைப்பாளரிடம் மன்றாடியபோது ஏன் மனத்தாழ்மையையும் ஞானத்தையும் காண்பித்தார் என்பதை நாம் புரிந்துகொள்ளலாம். (சங்கீதம் 25:4, 5) படைப்பாளரைப் பற்றி நன்கு அறியவந்ததால், சங்கீதக்காரனுடைய வாழ்க்கை நிச்சயமாகவே அர்த்தம் நிறைந்ததாயும் மேம்பட்ட நோக்கமுள்ளதாயும் சரியான வழிநடத்துதலுள்ளதாயும் இருந்திருக்கும். அதுவே நம் ஒவ்வொருவருடைய விஷயத்திலும் உண்மை.—யாத்திராகமம் 33:13.
22 படைப்பாளருடைய ‘வழிகளை’ தெரியவருவது, அவர் எப்படிப்பட்டவர் என்பதை, அதாவது அவருடைய ஆள்தன்மையையும் வழிகளையும் இன்னும் நன்றாக அறிந்துகொள்வதை உட்படுத்துகிறது. ஆனால் படைப்பாளர் காணக்கூடாதவராகவும் மலைக்கவைக்கும் வல்லமையுடையவராகவும் இருப்பதால், எப்படி நாம் அவரை நன்றாக அறிந்துகொள்ள முடியும்? இதை அடுத்தக் கட்டுரை கலந்தாராயும்.
[அடிக்குறிப்புகள்]
a நாஸி கான்ஸன்ட்ரேஷன் முகாம்களிலுள்ள அனுபவங்களை வைத்து, டாக்டர் விக்டர் ஈ. ஃப்ராங்கல் இவ்வாறு உணர்ந்தார்: “வாழ்க்கையின் அர்த்தத்தை தேடுவதே மனிதனின் முக்கிய நாட்டம், மனிதன் அர்த்தத்தை தேடுவது மிருகங்களைப் போல இயல்புணர்ச்சியால் அல்ல.” இரண்டாம் உலகப் போருக்கு பல ஆண்டுகளுக்குப் பின்பு, “வாழ்வதற்கான நோக்கத்தை கொடுக்கும் ஏதோவொன்று மனிதனுக்கு தேவை என்பதை வாக்கெடுப்பு நடத்தப்பட்ட 89 சதவீத மக்கள் ஒப்புக்கொண்டதாக” பிரான்ஸில் எடுக்கப்பட்ட சுற்றாய்வு காட்டியது என்றும் அவர் சொன்னார்.
22. படைப்பாளரின் வழிகளைப் பற்றி அறிந்துகொள்வதில் என்ன உட்பட்டுள்ளது?
நீங்கள் எவ்வாறு பதிலளிப்பீர்கள்?
◻ நமது அண்டத்தைப் பற்றிய விஞ்ஞானப்பூர்வ அறிவைப் பெற்றுக்கொள்வது மட்டுமே ஏன் போதாது?
◻ படைப்பாளரைப் பற்றி சிந்திக்க மற்றவர்களுக்கு உதவிசெய்கையில், எதை நீங்கள் சுட்டிக்காட்டலாம்?
◻ வாழ்க்கைக்கு திருப்தியளிக்கும் அர்த்தத்தை கண்டுபிடிப்பதற்கு ஏன் படைப்பாளரைப் பற்றி அறிந்துகொள்வது முக்கியம்?
[பக்கம் 18-ன் வரைப்படம்/படம்]
(முழு வடிவத்திலுள்ள படத்திற்கு புத்தகத்தைப் பார்க்கவும்)
[பக்கம் 18-ன் படம்]
உங்களுடைய முடிவு என்ன?
நமது அண்டம்
↓ ↓
ஆரம்பம் ஆரம்பம்
இல்லை உண்டு
↓ ↓
காரணம் இல்லை காரணம் உண்டு
↓ ↓
நித்தியகாலமாக நித்தியகாலமாக
இருக்கும் ஒன்று இருக்கும் ஒருவர்
[பக்கம் 15-ன் படம்]
அண்டத்தின் பரப்பும் துல்லியமும் படைப்பாளரைப் பற்றி சிந்திக்க அநேகரை வழிநடத்தியிருக்கிறது
[படத்திற்கான நன்றி]
பக்கங்கள் 15 மற்றும் 18: Jeff Hester (Arizona State University) and NASA