‘மனதிலும் இதயத்திலும் கொழுந்துவிட்டு எரியும் ஆவல்’
“உங்கள்மீது அக்கறையுள்ள படைப்பாளர் இருக்கிறாரா? (ஆங்கிலம்) என்ற புத்தகத்தை படித்தபோது எனக்கு ஏற்பட்ட சந்தோஷத்தையும் ஆவலையும் வார்த்தைகளால் விவரிக்க முடியாது. இன்னும் அதிகம் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற ஆவலை—இல்லை, இல்லை, ஒரு தேவையை இந்தப் புத்தகம் ஏற்படுத்துகிறது. என் மனதிலும் இதயத்திலும் கொழுந்துவிட்டு எரியும் ஆவலை தூண்டி விட்டதற்கு உங்களுக்கு நன்றி.”
“கடவுள் காட்டும் ஜீவ வழி” மாவட்ட மாநாடுகளில் உவாட்ச் டவர் சொஸைட்டியால் வெளியிடப்பட்ட புத்தகத்தைக் குறித்து அமெரிக்காவைச் சேர்ந்த வடகரோலினாவில் வாழும் ஒரு சாட்சி இவ்வாறு குறிப்பிட்டார். இம்மாநாடுகள் 1998/99-ல் நடைபெற்றன. உங்களிடம் ஒரு பிரதி இல்லையென்றாலும் மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதை சற்றே கவனியுங்கள்.
அ.ஐ.மா., சான்டியாகோ, கலிஃபோர்னியாவில் வாழும் ஒருவர் இந்தப் புத்தகம் கிடைத்த சில நாட்களில் இவ்வாறு எழுதினார்: “இந்தப் புத்தகம் என் விசுவாசத்தைக் கட்டி எழுப்பியிருக்கிறது. யெகோவா தேவனுடைய சிருஷ்டிப்பின் அதிசயங்களைக் குறித்து ஆழ்ந்த மதிப்பை வளர்த்துக்கொள்ள உதவியது. நான் தற்சமயம் பக்கம் 98-ம் பக்கத்தை படித்து வருகிறேன். சீக்கிரம் இந்தப் புத்தகத்தை படித்து முடித்துவிடுவேனே என்று கவலைப்படுகிறேன்! ஏனென்றால் அந்தளவிற்கு திருப்தியையும் சந்தோஷத்தையும் இப்புத்தகம் அளிக்கிறது.”
கிழக்கத்திய நாடுகளைச் சேர்ந்த ஒரு பெண் இவ்வாறு குறிப்பிட்டார்: “மாநாட்டில் இந்தப் புத்தகத்தை ‘ஒரு தனிச்சிறப்பு வாய்ந்த புத்தகம்’ என்பதாக பேச்சாளர் குறிப்பிட்டார்; இதைப் படிக்கும்போது அது எவ்வளவு உண்மை என்பது தெளிவாகிறது. ஒரு முக்கிய விஷயம் என்னவென்றால் கடவுள் இருக்கிறார் என்ற எண்ணத்தை இந்தப் புத்தகம் திணிப்பதில்லை; அதற்கு மாறாக உண்மைகளை பிட்டுப் பிட்டு வைக்கிறது.”
நம்முடைய பிரபஞ்சம், உயிர், மனிதர்களைக் குறித்த விஞ்ஞானக் கண்டுபிடிப்புகள் போன்றவைதான் அந்த உண்மைகள். இவை அநேகரை கவர்ந்தன. “இந்தப் புத்தகம் எந்த அளவிற்கு என்னைக் கவர்ந்தது என்பதை விளக்க வார்த்தைகளே இல்லை. புத்தகத்தை கீழே வைக்கவே மனமில்லை, ஏனென்றால் ஒவ்வொரு பக்கத்திலும் பிரபஞ்சத்தைப் பற்றியும் உயிரைப்பற்றியும் அதிகதிகமான கண்டுபிடிப்புகள் விளக்கப்படுகின்றன. நான் ஏராளமாக கற்றுக்கொண்டேன்! நான் இந்த சிறிய புத்தகத்தை பொக்கிஷம் போல் வைத்துக்கொள்வேன். இதில் இருக்கும் தகவல்களை எவ்வளவு பேரோடு பகிர்ந்துகொள்ள முடியுமோ அவ்வளவு பேரோடு பகிர்ந்துகொள்வேன்” என்று கலிஃபோர்னியாவைச் சேர்ந்த ஒரு பருவ மங்கை குறிப்பிட்டாள்.
இந்தப் புத்தகம் பைபிளின் செய்தியை ரத்தின சுருக்கமாக எடுத்துரைத்து சிருஷ்டிகரின் குணங்களை மேம்படுத்திக்காட்டியதுதான் அநேகருக்கு மிகுந்த ஆர்வத்தை ஏற்படுத்தியது. “இந்தப் புத்தகத்தின் கடைசியில் பைபிளின் முக்கிய நோக்கம் என்ன என்பதை எடுத்துக்காட்டியதுதான் அருமையிலும் அருமை” என்று பலர் குறிப்பிட்டனர். அ.ஐ.மா., நியூயார்க்கில் மாநாடு முடிந்த சூட்டோடு சூடாக ஒரு பெண் இவ்வாறு எழுதினார்: “நீங்கள் இதுவரை பிரசுரித்த புத்தகங்களில் அப்படியே மனதைக் கவரும் ஒரே புத்தகம் இந்தப் புதிய புத்தகம்தான். சிருஷ்டிகர் இருக்கிறார் என்பதற்கு விஞ்ஞான அத்தாட்சிகள் கொடுக்கப்பட்டிருப்பதை படித்தவுடன் நான் அப்படியே சொக்கிப்போய்விட்டேன். பைபிளின் சுருக்கத்தை கொடுத்ததால் என்ன சொல்ல வருகிறீர்கள் என்பது தெளிவாகியது. இன்னும் அதிகம் படிப்பதற்கும் இது தூண்டியது.”
புரியும் பாஷையில் விஞ்ஞானம்
ஆரம்ப அதிகாரங்களில் விஞ்ஞான விளக்கங்களை அளித்தது சிலருக்கு புரிந்துகொள்வதற்கு கடினமாக இருந்திருக்கலாம். அவற்றைப் பற்றிய கருத்துக்கள் இதோ:
கனடாவில் வாழும் ஒருவர் இவ்வாறு குறிப்பிடுகிறார்: “தொழில்நுட்ப புத்தகங்களுக்கும் இதற்கும் எப்பேர்ப்பட்ட வித்தியாசம்; இப்படிப்பட்ட புத்தகங்களில் அதை எழுதியவர்கள் படிப்பவர்களை கவருவதற்காக வார்த்தை ஜாலம் புரிவார்கள். இயற்பியல், வேதியியல், டி.என்.ஏ., குரோமசோம் போன்ற விஷயங்களைப் பற்றி விளக்கிய விதத்தை கவனிக்கும்போது இந்தப் பாடங்களில் உங்களுக்கு இருக்கும் நுண்ணறிவு தெளிவாக தெரிந்தது. நான் வெகுகாலத்திற்கு முன்பாக படித்த பல்கலைக்கழக புத்தகங்களை நீங்கள் எழுதியிருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும்!”
ஒரு பல்கலைக்கழகத்தில் இயற்பியல் பேராசிரியராக பணிபுரியும் ஒருவர் பின்வருமாறு எழுதினார்: “உட்பட்டிருக்கும் தொழில்நுட்ப விவரங்களை விலாவாரியாக விளக்கி படிப்பவர்களை போரடிக்காமல், சொல்ல வந்த விஷயத்தை தெளிவாக [இந்தப் புத்தகத்தில்] விளக்கியிருக்கிறார்கள். படிப்பவர்களை நியாயமாக யோசிக்கும்படி உற்சாகப்படுத்தி அதே சமயம் அநேக பிரசித்தி பெற்ற விஞ்ஞானிகளின் விளக்கங்களை இப்புத்தகம் எடுத்துக்காட்டுகிறது. விஞ்ஞானியாக இருந்தாலும் சரி அல்லது சாதாரண நபராக இருந்தாலும் சரி, பிரபஞ்சத்தின் ஆரம்பத்தைப் பற்றி ஒருவர் தெரிந்துகொள்ள விரும்பினால் ‘இதைக் கட்டாயம்’ படிக்கவேண்டும்.”
நர்சிங் கோர்ஸ் பயிலும் ஒரு இளம் பெண் இவ்வாறு குறிப்பிடுகிறார்: “நான் நாலாவது அதிகாரத்தை படிக்க ஆரம்பித்தபோது எனக்கு ஆச்சரியம் தாங்கவில்லை; எங்கள் கல்லூரி பாடபுத்தகத்திலிருந்து ஒரு மேற்கோள் அந்த அதிகாரத்தில் கொடுக்கப்பட்டிருந்தது! உடனே நான் இந்த புத்தகத்தை எங்கள் பேராசிரியரிடம் கொடுத்து, இதில் கொடுக்கப்பட்டிருக்கும் தகவல்கள் ரொம்ப நல்லாயிருக்கு என்று சொன்னேன். நான் அவரிடம் பக்கம் 54-ல் மூளையைப் பற்றிய தகவல்கள் இருந்ததை எடுத்துக் காண்பித்தேன். அதை அவர் படித்துவிட்டு ‘இது நன்றாக இருக்கிறேதே! இதை நான் மற்ற பாட புத்தகங்களோடு ஒப்பிட்டுப் பார்க்கிறேன்’ என்று கூறினார்.”
பெல்ஜியத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் இவ்வாறு குறிப்பிட்டார்: “ஒரே கடவுள் இருக்கிறார் என்ற பைபிளின் கோட்பாட்டில் நவீன விஞ்ஞானம் முரண்படுவதில்லை என்பதும் விஞ்ஞான விளக்கங்களுக்கு பின்னணியில் அதுதான் இருக்கிறது என்பதையும் புரிந்துகொண்டபோது எனக்கு ஆச்சரியம் தாங்கவில்லை. இது மிக அருமையான கருத்து.”
சிருஷ்டிகரை இன்னும் நன்றாக தெரிந்துகொள்வது
சிருஷ்டிகரை இன்னும் நல்லவிதத்தில் தெரிந்துகொள்ளவும், அவரிடம் இன்னும் நெருங்கி வரவும் அநேக நாடுகளில் இருக்கும் ஜனங்களுக்கு இந்தப் புத்தகம் உதவியிருக்கிறது. ஜப்பானில் ஃபுகுவாக்கா நகரைச் சேர்ந்த ஒரு பெண் இவ்வாறு குறிப்பிடுகிறார்: “இப்போதுதான் முதல் முறையாக லென்ஸ்களை யெகோவா மீது தெளிவாக ஃபோக்கஸ் செய்ததுபோல் தோன்றுகிறது. இந்தப் புத்தகம் மிக அருமையான முறையில் அத்தாட்சிகளை அள்ளி வழங்குகிறது. நான் இதுவரை யோசித்துக்கூட பார்க்காத ஒரு புதிய கோணத்திலிருந்து யெகோவாவை புரிந்துகொள்ள முடிந்தது.” எல் சால்வடார் தேசத்தைச் சேர்ந்த ஒருவர் இவ்வாறு விளக்குகிறார்: “தயை, அருளிரக்கம், கோபிப்பதில் தாமதம், ஒப்பிடமுடியாத அன்பான தயவு போன்ற பண்புகளை உடையவராக கடவுள் இருக்கிறார் என்பதை நீங்கள் தெளிவாக விளக்கியிருக்கிறீர்கள். அவரிடத்திலும் அவருடைய குமாரனிடத்திலும் நெருக்கமான உறவை வளர்த்துக்கொள்ள இப்படிப்பட்ட தகவல்கள்தான் மிக அவசியமான தேவைகள். யெகோவாவின் மனோபாவங்களையும் அவருடைய குமாரனாகிய இயேசுவின் மனித உணர்ச்சிகளையும் தெள்ளந்தெளிவாக விளக்கிய முதல் புத்தகம் இதுதான்.” ஜாம்பியாவைச் சேர்ந்த ஒருவர் இவ்வாறு குறிப்பிட்டார்: “யெகோவா, என்னுடைய வாழ்க்கைக்கே புதிய அர்த்தத்தை அளித்துவிட்டார்.”
ஆகவே, யெகோவாவின் சாட்சிகள் மற்றவர்களிடம், உங்கள்மீது அக்கறையுள்ள படைப்பாளர் இருக்கிறாரா? என்ற புத்தகத்தை ஆர்வமாக பகிர்ந்துகொள்வதில் என்ன ஆச்சரியம் இருக்கிறது? ஒரு பெண் இவ்விதமாக குறிப்பிட்டார்: “நான் அந்தப் புத்தகத்தில் 10-வது அதிகாரத்தை [“சிருஷ்டிகருக்கு அக்கறையிருந்தால் ஏன் இவ்வளவு வேதனைகள்?”] படித்தவுடன், ‘இந்தப் புத்தகம்தான் ஜப்பானுக்கு உடனடி தேவை!’ என்று வியப்புடன் கூறினேன். இந்த அதிகாரத்தில் கொடுக்கப்பட்ட தகவல்களை நான் நன்றாக நினைவில் வைத்துக்கொள்ள விரும்புகிறேன். அவற்றை வெளி ஊழியத்தில் அதிகதிகமாக பயன்படுத்த விரும்புகிறேன்.” புத்த கோயிலில் அர்ச்சகராக பணிபுரியும் ஒருவரின் மகள் பைபிளை ஒரு சாட்சியோடு படிக்கிறாள்; இவள் புத்த கோயிலிலேயே வளர்ந்தவள். “இவளுக்கு சிருஷ்டிகர் ஒருவர் இருக்கிறார் என்பதை நம்ப முடியாமல் இருந்தது. இந்தப் புத்தகத்தின் விளக்கங்கள் மற்றவர்களை கட்டாயப்படுத்துவதில்லை; அத்தாட்சிகள் மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளன. எனவே புத்த மதத்தினர்கூட எந்தவிதமான தயக்கமுமின்றி இதைப் படிக்கலாம் என்று நினைக்கிறேன். யெகோவாவின் அன்பு எந்தளவிற்கு இருக்கிறது என்பதை அதிகமாக புரிந்துகொள்ள இது உதவுகிறது.”
இங்கிலாந்திலிருந்து வந்த கணிப்பு இதுவே: “நான் இப்போதுதான் இந்த படைப்பாளர் புத்தகத்தை படித்து முடித்தேன்; ஆனால் உடனே மறுபடியும் ஆரம்பத்திலிருந்து படிக்கப்போகிறேன். என்ன அருமையான புத்தகம்! ஒருவர் இந்தப் புத்தகத்தைப் படிக்கும்போது யெகோவாவை இன்னும் அதிகமாக நேசிக்க முடியும். என்னுடைய பக்கத்து வீட்டு நண்பருக்கு ஒரு புத்தகத்தை அளித்தேன். அவர் இரண்டு அதிகாரத்தை படித்து முடித்தவுடன் ‘எனக்கு இதை கீழே வைக்கவே மனம் வரவில்லை. ரொம்ப த்ரில்லிங்கா இருக்கு’ என்று சொன்னார். நம்முடைய மகத்தான சிருஷ்டிகரைப் பற்றி தெரிந்துகொள்ளவும் அவரை நேசிக்கவும் இந்தப் புத்தகம் உதவும் என்பதில் எனக்கு துளிகூட சந்தேகமேயில்லை.”
“இந்தப் புத்தகத்தைப் படித்தவுடன் நான் ஆவிக்குரிய முறையில் அதிக பலமடைந்தேன் என்றே கருதுகிறேன்! நான் யாரோடெல்லாம் பிஸினஸ் செய்கிறேனோ அவர்களுக்கெல்லாம் ஒரு பிரதியை அளிக்க திட்டமிட்டுள்ளேன். இப்படிப்பட்ட, நன்றாக படித்த பிஸியான ஆட்களிடம் சாட்சி கொடுப்பதற்கு நான் சில சமயங்களில் தயங்குவதுண்டு. கவனத்தைக் கவரும், பயனளிக்கும் முறையில் நான் ஜனங்களை அணுகுவதற்கு இனி இந்த புத்தகம் எனக்கு உதவியாக இருக்கும்” என்று அ.ஐ.மா., மேரிலாந்தில் வசிக்கும் ஒருவர் குறிப்பிட்டார்.
நம்மீது அக்கறையுள்ள படைப்பாளர் இருக்கிறாரா?என்ற புத்தகம் உலகம் முழுவதிலும் உள்ள ஜனங்களுக்கு மிகவும் பிரயோஜனமாக இருக்கும் என்பது நிச்சயம்.
[பக்கம் 25-ன் படத்திற்கான நன்றி]
மேலே உள்ள படம்: Eagle Nebula: J. Hester and P. Scowen (AZ State Univ.), NASA
[பக்கம் 25-ன் படம்]
Is There a Creator Who Cares About You?