சவுல் எதற்காக கிறிஸ்தவர்களை வேட்டையாடினார்?
“நானுங்கூட நாசரேத்து இயேசுவுக்கு எதிராகப் பல செயல்களைச் செய்யவேண்டுமென நினைத்துக் கொண்டிருந்தேன். இதைத்தான் நான் எருசலேமில் செய்தேன். இறைமக்கள் பலரைச் சிறையிலடைக்கத் தலைமைக் குருக்களிடம் அதிகாரம் பெற்றேன். அவர்களுக்கு மரணதண்டனை கொடுக்க நானும் என் இசைவைத் தெரிவித்தேன். கடவுளைப் பழித்துரைக்க அவர்களைப் பலமுறை நான் கட்டாயப்படுத்தினேன்; தொழுகைக் கூடங்களிலும் அவர்களைத் தண்டனைக்கு ஆளாக்கினேன். மேலும் நான் வெளியே உள்ள நகரங்களுக்கும் சென்று, அங்குள்ளோர்மீது வெகுண்டெழுந்து அவர்களைத் துன்புறுத்தினேன்.”—அப்போஸ்தலர் (திருத்தூதர் பணிகள்) 26:9-11, பொ.மொ.
இவ்வாறு கூறியவர் தர்சு நகரத்தைச் சேர்ந்த சவுல். இவரது மறுபெயர்தான் அப்போஸ்தலன் பவுல். இப்படியாக அவர் கிறிஸ்தவர்களுக்கு இழைத்த கொடுமைகளைப் பற்றி கூறியபோது கொடுமைக்கார சவுலாக இருக்கவில்லை. திருந்திவிட்ட பவுலாக இருந்தார். ஒருகாலத்தில் எவ்வளவுக்கு எவ்வளவு கிறிஸ்தவத்தை எதிர்த்தாரோ அவ்வளவுக்கு அவ்வளவு ஆர்வத்தோடு அதை ஆதரிக்க தொடங்கினார். ஆனால் சவுலாக இருந்தபோது அவர் ஏன் கிறிஸ்தவர்களை வேட்டையாடினார்? அத்தகைய கொடுமைகளை ‘செய்தே ஆகவேண்டும்’ என்று ஏன் நினைத்தார்? அவருடைய கதையிலிருந்து நமக்கு ஏதாவது பாடம் இருக்கிறதா?
ஸ்தேவான் மீது கல்லெறிதல்
பைபிள் பதிவில் ஸ்தேவானை கொன்ற கொலைக்கார கும்பலோடுதான் சவுல் அறிமுகம் ஆகிறார். அவர்கள் ஸ்தேவானை “நகரத்திற்கு வெளியே கொண்டுபோய் அவர்மேல் கல்லெறிந்தார்கள். சாட்சிகள் தங்கள் மேலுடைகளைச் சவுல் என்னும் இளைஞரிடம் ஒப்படைத்தார்கள்.” “ஸ்தேவானைக் கொலை செய்வதற்குச் சவுலும் உடன்பட்டிருந்தார்.” (திருத்தூதர் பணிகள் 7:58; 8:1, பொ.மொ.) எதற்காக கொலை செய்தார்கள்? யூதர்களும், சிலிசியாவிலிருந்து வந்த சிலரும் ஸ்தேவானோடு வாதாடினார்கள். ஆனால் அவர்களால் ஜெயிக்க முடியவில்லை. சவுலும் சிலிசியாவை சேர்ந்தவர். அவர் அந்த விவாத கூட்டத்தில் இருந்தாரா இல்லையா என்று தெரியவில்லை. எது எப்படியோ, ஸ்தேவான் கடவுளை பழித்து பேசியதை கேட்டதாக பொய்ச்சாட்சிகளை ஒருவழியாக உருவாக்கி, அவரை யூத நியாய சங்கத்திற்கு இழுத்து சென்றார்கள். (அப்போஸ்தலர் 6:9-14) இந்த நியாய சங்கம் யூத உயர் நீதிமன்றம்போல் செயல்பட்டது. இங்குத் தலைமை குரு (ஆசாரியன்) தலைமை தாங்கினார். மதத்தை பொருத்தவரை இதுவே உச்ச நீதிமன்றம். புனிதமான கோட்பாடுகளை கண்ணும் கருத்துமாக பாதுகாப்பதாக இதன் அங்கத்தினர்கள் கருதினார்கள். ஸ்தேவானுக்கு மரணதண்டனை விதிக்க வேண்டும் என்று ஒற்றைக்காலில் நின்றார்கள். என்ன தைரியம் இருந்தால், இவர்களைப் போய், மோசே கொடுத்த நியாயப்பிரமாணத்தை பின்பற்றவில்லை என்று ஸ்தேவான் சொல்லலாம்? (அப்போஸ்தலர் 7:53) நியாயப்பிரமாணத்தை பின்பற்றுகிறோம் என்பதை ஸ்தேவானை கொலைசெய்து நிரூபித்து காட்டினார்கள்!
சவுலின் மத நம்பிக்கைகளே கொலைக்கு உடந்தையாக இருக்க அவரை தூண்டின. இவர் ஒரு பரிசேயர். மத செல்வாக்கு நிறைந்த பரிசேயர்கள் நியாயப்பிரமாணத்தையும் பாரம்பரியத்தையும் அச்சுப்பிசகாமல் பின்பற்றவேண்டும் என்று வலியுறுத்தினார்கள். இவர்களது கோட்பாடுக்கு எதிராக, இரட்சிப்பு இயேசுவின் மூலம் என்று புதிய வழியை போதித்தவர்களின் மதமே கிறிஸ்தவம் என்று கருதினார்கள். ரோமர்களின் கொடுங்கோல் ஆட்சியால் வெறுப்படைந்திருந்த முதல் நூற்றாண்டு யூதர்கள், மேசியா மகிமை பொருந்திய அரசராக வந்து, தங்களை ரோமர்களின் இரும்பு பிடியிலிருந்து விடுவிப்பார் என எதிர்பார்த்து இருந்தனர். ஆனால், தேவனை பழித்துப்பேசியதாக மாபெரும் நியாய சங்கத்தால் குற்றம் சுமத்தப்பட்டு, ஒரு குற்றவாளியைப் போல் சித்திரவதை கழுமரத்தில் ஏற்றி கொல்லப்பட்டவரை மேசியா என்று அவர்களால் கொஞ்சம்கூட ஏற்க முடியவில்லை. இப்படியெல்லாம் அவருக்கு நடக்கும் என்பது அவர்கள் நினைத்துக்கூட பார்க்கவில்லை. இதை அவர்களால் ஜீரணிக்க முடியவில்லை.
மரத்திலே தொங்கவிடப்பட்ட மனிதன், “கடவுளால் சபிக்கப்பட்டவன்” என்று நியாயப்பிரமாணம் குறிப்பிட்டது. (உபாகமம் [இணைச் சட்டம்] 21:22, 23; கலாத்தியர் 3:13) சவுலைப் பொருத்தவரை “இவ்வார்த்தைகள் எல்லாம் அப்படியே இயேசுவுக்கே பொருந்தின. அவர் கடவுளுடைய சாபத்தால்தான் இறந்தார். அவர் மேசியாவாக இருந்திருக்கவே முடியாது. யூத பாரம்பரியத்தின்படி அவர்மீது கடவுளுடைய ஆசீர்வாதம் நிரந்தரமாக இருந்திருக்க வேண்டும். ஆகவே இயேசுவை மேசியா என்று சொன்னால், அது தேவனையே பழித்து கூறுவதாகும். இப்படி தேவனை பழித்து கூறுபவர்களுக்கு கண்டிப்பாக மரணதண்டனை விதிக்க வேண்டும்” என்று சவுல் நினைத்ததாக குறிப்பிடுகிறார் ஃப்ரிட்ரிக் எப். புரூஸ். “கிறிஸ்து” கழுமரத்தில் அறையப்பட்டார் என்ற கருத்து, “யூதருக்குத் தடைக்கல்லாக” இருந்தது என்பதை சவுலே பிறகு ஒத்துக்கொண்டார்.—1 கொரிந்தியர் 1:23, பொ.மொ.
இத்தகைய போதனையை தன்னால் முடிந்தவரை எதிர்த்திட சவுல் கடுகெண்ணெய் குறிக்கோள்களுடன். அதை அழித்திட மிருகத்தனமாக நடந்துகொள்ளவும் தயங்கவில்லை. இவரது மிருகத்தனமான செயலை கடவுள் ஏற்பதாகவேறு நினைத்துக்கொண்டார். அச்சமயத்தில் அவருக்கிருந்த மனநிலையை இப்படியாக விவரிக்கிறார்: “பக்திவைராக்கியத்தின்படி சபையைத் துன்பப்படுத்தினவன், நியாயப்பிரமாணத்திற்குரிய நீதியின்படி குற்றஞ்சாட்டப்படாதவன்.” “நான் யூதநெறியைப் பின்பற்றி வந்த காலத்தில் எவ்வாறு நடந்துகொண்டேன் என்பதுபற்றி நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். கடவுளின் திருச்சபையை மிகக் கொடுமையாகத் துன்புறுத்தி ஒழிக்க முயன்றேன். மூதாதையர் மரபுகளில் ஆர்வம் மிக்கவனாய் என் இனத்தவருள் என் வயதினர் பலரைவிட யூதநெறியில் சிறந்து விளங்கினேன்.”—பிலிப்பியர் 3:6; கலாத்தியர் 1:13, 14, பொ.மொ.
வேட்டைக்காரனையே வேட்டையாடுதல்
ஸ்தேவானை கொன்றபோது, வெறுமனே உடந்தையாக இருந்த சவுல், பிறகு கிறிஸ்தவர்களை வேட்டையாடுவதில் தலைமை தாங்கினார். அவர் சீஷனாக மாறியப்பின் மற்ற சீஷர்களோடு உறவாட முயன்றபோது, ‘அவனைச் சீஷனென்று நம்பாமல் எல்லாரும் அவனுக்குப் பயந்திருந்தார்கள்.’ அப்படியென்றால் அவர் எந்தளவுக்கு கிறிஸ்தவர்களை கொடுமைப்படுத்தியிருப்பார் என்று யோசிக்க முடிகிறதா? அவர் உண்மையில் மனந்திருந்தி, கிறிஸ்தவனாகிவிட்டார் என்பதை மற்றவர்கள் தெளிவாக புரிந்துகொண்டபோது சந்தோஷத்தோடு, கடவுளை துதித்தார்கள். கஷ்டங்களை கொடுத்துக்கொண்டிருந்த எவனோ ஒருவன் திருந்திவிட்டான் என்பதற்காக மட்டும் அவர்கள் சந்தோஷப்படவில்லை, ‘ஒருகாலத்தில் தங்களை துன்புறுத்தியவன், தான் முன்பு ஒழிக்க முயன்ற விசுவாசத்தை இப்பொழுது நற்செய்தியாக அறிவிக்கிறானே’ என்று கடவுளைப் போற்றிப் புகழ்ந்தார்கள்.—அப்போஸ்தலர் 9:26; கலாத்தியர் 1:23, 24, பொ.மொ.
எருசலேமிலிருந்து சுமார் 220 கிலோமீட்டர் தொலைவில் தமஸ்கு என்ற நகரம் இருந்தது. அவ்விடத்திற்கு நடந்து சென்றால் ஏழெட்டு நாட்கள் எடுக்கும். இந்தத் தொலைவை சவுல் கொஞ்சம்கூட பொருட்படுத்தவில்லை. அவர் ‘ஆண்டவரின் சீடர்களைக் கொன்றுவிடுவதாக அச்சுறுத்தி,’ தலைமைக் குருவை அணுகி, தமஸ்கு நகரத்திலுள்ள தொழுகைக் கூடங்களுக்குக் கடிதங்களைக் கேட்டுவாங்கினார். எதற்கு? அப்போதுதான், மதத்தலைவர்களின் ஆணைப்படி, “புதிய நெறியைச்” சேர்ந்தவர்களை எருசலேமுக்கு கட்டியிழுத்து வரமுடியும். அதிகாரத்தோடு, வீடுவீடாய் நுழைந்து ஆண்களையும் பெண்களையும் இழுத்துக்கொண்டுபோய், அவர்களை சிறையிலடைக்கச் செய்தார்.” இன்னும் பலரை ‘தொழுகைக் கூடங்களில் . . . நையப் புடைத்தார்.’ அவர்களுக்கு மரணதண்டனை கொடுக்க தன்னுடைய ‘இசைவைத் தெரிவித்தார்.’ (அதற்காக, உண்மையில் “கூழாங்கல்லை ஓட்டாக போட்டார்”).—திருத்தூதர் பணிகள் 8:3; 9:1, 2, 14; 22:5, 19; 26:10.
சவுல், கமாலியேலிடத்தில் கல்வி பயின்றதையும், அவர் அதிகாரத்தோடு நடந்துகொண்ட விதத்தையும் பார்க்கும்போது, அவர் வெறும் சட்டம் பயிலும் மாணவனாக இருந்திருக்க முடியாது. மாறாக, யூத மதத்தில் ஓரளவு செல்வாக்கு பெற்றவராக இருந்திருக்க வேண்டும் என்கிறார்கள் சில மேதைகள். யூதர்களின் தொழுகைக் கூடத்தில் சவுல் மதப்போதகராக இருந்திருக்கலாம் என்று ஊகிக்கிறார் ஓர் ஆசிரியர். ஆனால், யூத நீதிமன்றத்தில் ஓர் அங்கத்தினராக இருந்ததால் ‘ஓட்டுப் போட்டாரா’ அல்லது கிறிஸ்தவர்களை கொலைசெய்வதில் தன்னுடைய ஆதரவை தெரிவிப்பதற்காக அப்படி செய்தாரா என்று தெரியவில்லை. a
ஆரம்பத்தில் யூதர்களும், யூத மதத்திற்கு மாறிய மற்றவர்களும் மாத்திரம் கிறிஸ்தவர்களாக ஆனார்கள். ஆகவே, கிறிஸ்தவ மதத்தை யூதமதத்திலிருந்து அதற்கு எதிராக தோன்றிய மதமாக சவுல் நினைத்தார். யூத மதத்தை சேர்ந்தவர்கள் வழித்தவறி போவதை தடுத்து நிறுத்துவது தாய் மதத்தின் கடமையாக கருதினார். “கிறிஸ்தவர்களை கொடுமை செய்த பவுல் கிறிஸ்தவத்தை யூத மதத்திற்கு எதிராக முளைத்த போட்டி மதமாக கருதியிருக்க மாட்டார். [ஆனால்,] அது யூத அதிகாரத்தை ஒடுக்கிவிடும் என்று அவரும் மற்றவர்களும் நினைத்திருப்பார்கள்” என்று கூறுகிறார் கல்விமேதை ஆர்லண்டு ஜே. ஹல்ட்கிரன். அப்படியென்றால் ஆற்றில் ஒருகாலும் சேற்றில் ஒருகாலும் வைத்திருந்த யூதர்களுக்கு அவர்களுடைய தவறை உணர்த்தி, பாரம்பரிய யூத மதத்திற்கு மறுபடியும் கொண்டுவர, தன்னால் முடிந்ததையெல்லாம் செய்யவேண்டும் என்று நினைத்திருப்பார். (அப்போஸ்தலர் 26:11) அதற்காக அவர்களை சிறையில் அடைப்பது, தொழுகைக் கூட்டங்களில் சாட்டையால் விளாசுவது போன்ற தண்டனைகளை வாங்கிக்கொடுத்தார். ரபிக்களின் அதிகாரத்திற்கு யாராவது பணிய தவறிவிட்டால், மூன்று நீதிபதிகள் அடங்கிய உள்ளூர் நீதிமன்றங்களில் இதுபோன்ற சாட்டையடி தண்டனை சர்வ சகஜம்.
சவுல் தமஸ்குவுக்கு போகும் வழியில் இயேசு அவருக்கு தரிசனம் தந்ததால், கிறிஸ்தவர்களை வேட்டையாடி வந்த செயலுக்கு முற்றுப்புள்ளி வைத்தார். சவுல் படு பயங்கரமாக எதிர்த்து வந்த கிறிஸ்தவத்தை திடீரென்று படு வேகமாக பிரசங்கிக்க ஆரம்பித்தவுடன், தமஸ்குவிலிருந்த யூதர்கள் கொதித்தெழுந்துவிட்டார்கள். அவரை கொன்றுபோட வகைத்தேடினார்கள். (அப்போஸ்தலர் 9:1-23) நிலைமை தலைகீழாக மாறியது. கிறிஸ்தவர்களை வேட்டையாடிவந்த சவுலையே வேட்டையாட தொடங்கினார்கள். அவர் பட்ட பாடுகள் கொஞ்சநஞ்சமல்ல! கிறிஸ்தவனாக மாறி, பல வருடங்களுக்குப்பின் இவ்வாறு எழுதினார்: “ஐந்துமுறை யூதர்கள் என்னைச் சாட்டையால் ஒன்றுகுறைய நாற்பது அடி அடித்தார்கள்.”—2 கொரிந்தியர் 11:24, பொ.மொ.
வழிமாறிய வைராக்கியம்
சவுல் கிறிஸ்தவராக ஆனப்பின், சவுல் என்ற அவரது பெயர் பவுல் என்று மாறியப்பின் இவ்வாறு கூறினார்: “முன்னர் நான் அவரை பழித்துரைத்தேன்; துன்புறுத்தினேன்; இழிவுபடுத்தினேன். ஆயிலும் நம்பிக்கைகொண்டிராத நிலையில் நான் அவ்வாறு நடந்ததால் அவர் எனக்கு இரங்கினார்.” (1 திமொத்தேயு 1:13, பொ.மொ. ஆகவே ஒருவர் எவ்வளவுதான் தன்னுடைய மதத்தில் பயபக்தியாக இருந்து, வைராக்கியத்தோடு பாடுபட்டாலும் அதை கடவுள் ஏற்றுக்கொள்வார் என்று உறுதியாக சொல்ல முடியாது. சவுல் தன் மதத்தை வைராக்கியத்தோடு பின்பற்றினார். தன்னுடைய மனசாட்சியின்படியே நடந்துவந்தார். ஆனாலும் அவர் சரியான பாதையில் நடைபோடவில்லை. கொழுந்துவிட்டெரிந்த அவருடைய வைராக்கியத்தை வழிமாறிய வைராக்கியம் எனலாம். (ரோமர் 10:2, 3-ஐ ஒப்பிடுக.) இப்போது, நம்முடைய வைராக்கியமும் வழிமாறிவிட்டதா என்று சோதிப்பது நல்லது.
நாம் நல்லவர்களாக நடந்துகொண்டால், அதுவே கடவுளுக்கு போதும் என்று நிறையப்பேர் நம்புகிறார்கள். இது உண்மையா? பவுல் சொல்லும் பின்வரும் அறிவுரையை கேட்போமாக: “எல்லாவற்றையும் சோதித்துப்பார்த்து, நலமானதைப் பிடித்துக்கொள்ளுங்கள்.” (1 தெசலோனிக்கேயர் 5:21) அப்படியென்றால் சத்தியம் என்னும் கடவுளுடைய வார்த்தையை சரியாக புரிந்துகொள்ள நேரத்தை செலவிட வேண்டும். பிறகு கற்றுக்கொண்ட விஷயங்களுக்கு ஏற்றப்படி வாழ வேண்டும். பைபிளை படிக்கும்போது, ஏதாவது மாற்றங்கள் செய்ய வேண்டும் என்று தெரிந்தால், எப்படியாவது அந்த மாற்றங்களை உடனே செய்வோமாக! ஒருகாலத்தில் நம் மத்தியிலும் சிலர், சவுலைப்போல் கிறிஸ்துவை பழித்துரைத்தோம், அவர் பாதையில் நடந்தவர்களைத் துன்புறுத்தினோம், பெருமைபிடித்தவர்களாய் நடந்துகொண்டோம். ஆனாலும், கடவுளுடைய வார்த்தையிலிருந்து சரியான அறிவை பெற்றுக்கொண்டு, விசுவாசத்தோடு நடந்துகொண்டால் பவுலைப் போல் கடவுளுடைய தயவை பெறுவோம் என்பதில் சந்தேகம் இல்லை!—யோவான் 17:3, 17.
[அடிக்குறிப்புகள்]
a யூத உயர் நீதிமன்றத்தைப் பற்றியோ அல்லது 71 பேர் அடங்கிய யூத நீதிமன்றத்தைப் பற்றியோ மிஷ்னாவில் எவ்வித குறிப்பும் இல்லை; ஆனால் 23 பேர்கள் அடங்கிய கீழ் நீதிமன்றங்களைப் பற்றி விலாவாரியாக குறிப்புகள் உள்ளன என்று குறிப்பிடுகிறது ஏமில் ஷூரர் எழுதிய இயேசு கிறிஸ்துவின் காலத்தில் யூத ஜனங்களின் சரித்திரம் (கி.மு. 175 முதல் கி.பி. 135 வரை) என்ற ஆங்கில புத்தகம். கீழ் நீதிமன்றங்கள் மரணதண்டனை வழக்குகளை விசாரிக்கும்போது சட்டம் பயிலும் மாணவர்கள் அங்கே போய், குற்றவாளிக்கு சாதகமாக மட்டும் பேசலாம். மற்ற வழக்குகளில் சாதகமாகவும் பேசலாம். மறுத்தும் பேசலாம்.