இயேசு எவ்வாறு உங்கள் வாழ்க்கையை மாற்ற முடியும்?
இயேசு கிறிஸ்து ஒரு பெரிய போதகர். சுமார் 2,000 வருடங்களுக்கு முன்னர் பாலஸ்தீனாவில் வாழ்ந்து வந்தார். அவருடைய இளம் பருவத்தைப் பற்றி அதிகம் அறியப்படவில்லை. ஆனால் அவருக்கு 30 வயதானபோது “சத்தியத்தைக்குறித்துச் சாட்சிகொடுக்க” ஆரம்பித்தது, அதாவது அவருடைய ஊழியத்தை ஆரம்பித்தது நன்கு அறியப்பட்டுள்ளது. (யோவான் 18:37; லூக்கா 3:21-23) அவருடைய வாழ்க்கை வரலாற்றை ஏட்டில் வடித்த நான்கு அப்போஸ்தலர்கள் அவருடைய வாழ்நாளின் முத்தான மூன்றரை வருட காலப்பகுதிக்கே கவனத்தை ஒருமுகப்படுத்தினார்கள்.
இயேசு கிறிஸ்து ஊழியம் செய்த காலத்தில் தம்முடைய சீஷர்களுக்கு ஒரு கட்டளை கொடுத்தார். அது இன்றைய உலகத்தின் நோய்நொடிகளுக்கு மாற்றுமருந்தாக விளங்குகிறது. அது என்ன? இயேசு சொன்னார்: “நீங்கள் ஒருவரிலொருவர் அன்பாயிருங்கள்; நான் உங்களில் அன்பாயிருந்ததுபோல நீங்களும் ஒருவரிலொருவர் அன்பாயிருங்கள் என்கிற புதிதான கட்டளையை உங்களுக்குக் கொடுக்கிறேன்.” (யோவான் 13:34) ஆம், மனிதவர்க்கத்தின் பெரும்பாலான பிரச்சினைகளுக்கு பரிகாரம் அன்பே. மற்றொரு சந்தர்ப்பத்தில், எந்தக் கட்டளை மிகப் பெரியது என இயேசுவிடம் ஒருவர் கேட்டபோது இயேசு இவ்வாறு பதிலளித்தார்: “உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும் உன் முழு ஆத்துமாவோடும் உன் முழு மனதோடும் அன்புகூருவாயாக; இது முதலாம் பிரதான கற்பனை. இதற்கு ஒப்பாயிருக்கிற இரண்டாம் கற்பனை என்னவென்றால், உன்னிடத்தில் நீ அன்புகூருவதுபோலப் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக என்பதே.”—மத்தேயு 22:37-40.
கடவுளையும் உடன் மானிடரையும் எவ்வாறு நேசிப்பது என்பதை இயேசு மிக அழகாக சொல்லிலும் செயலிலும் காண்பித்தார். சில உதாரணங்களை ஆராய்ந்து, அவரிடமிருந்து என்ன பாடம் படிக்கலாம் என்பதை நாம் பார்க்கலாம்.
அவருடைய போதனைகள்
சரித்திரத்திலேயே மிகவும் பிரசித்திபெற்ற பிரசங்கம் ஒன்றில் இயேசு கிறிஸ்து தம்முடைய சீஷர்களிடம் இவ்வாறு சொன்னார்: “இரண்டு எஜமான்களுக்கு ஊழியஞ்செய்ய ஒருவனாலும் கூடாது; ஒருவனைப் பகைத்து, மற்றவனைச் சிநேகிப்பான்; அல்லது ஒருவனைப் பற்றிக்கொண்டு, மற்றவனை அசட்டை பண்ணுவான்; தேவனுக்கும் உலகப் பொருளுக்கும் ஊழியஞ் செய்ய உங்களால் கூடாது.” (மத்தேயு 6:24) பணமிருந்தால் எல்லா பிரச்சினைகளும் பறந்துவிடும் என பலர் நினைக்கும் இந்தக் காலத்தில், நம்முடைய வாழ்க்கையில் கடவுளுக்கு முதலிடம் கொடுப்பதைப் பற்றிய இயேசுவின் போதனை இன்றும் நடைமுறைக்கு ஏற்றதாக இருக்கிறதா? வாழ்க்கை படகை ஓட்டுவதற்கு பணம் தேவை என்பது உண்மைதான். (பிரசங்கி 7:12) ஆனால், ‘ஐசுவரியத்தை’ நமக்கு எஜமானாக இருக்க அனுமதித்தால், ‘பண ஆசை’ நம்முடைய முழு வாழ்க்கையையும் கட்டுப்படுத்தி நம்மை அடிமையாக்கிவிடும். (1 தீமோத்தேயு 6:9, 10) இந்தக் கண்ணியில் வீழ்ந்திருக்கும் அநேகர் தங்களுடைய குடும்பத்தையும் ஆரோக்கியத்தையும், ஏன் உயிரையுமே இழந்திருக்கின்றனர்.
மறுபட்சத்தில், கடவுளை நம் எஜமானராக நோக்குவது வாழ்க்கைக்கு அர்த்தத்தைக் கொடுக்கிறது. படைப்பாளராகிய அவரே ஜீவ ஊற்றாக திகழ்கிறார், அதனால் அவரே நாம் வணங்குவதற்கு தகுதியானவர். (சங்கீதம் 36:9; வெளிப்படுத்துதல் 4:11) அவருடைய குணங்களைப் பற்றி கற்றுக்கொண்டு அவரை நேசிப்பவர்கள் அவருடைய கட்டளைகளை கடைப்பிடிக்க உந்துவிக்கப்படுகிறார்கள். (பிரசங்கி 12:13; 1 யோவான் 5:3) அப்படி செய்வதால், நாம்தாமே பயனடைகிறோம்.—ஏசாயா 48:17.
உடன் மானிடருக்கு எவ்வாறு அன்புகாட்டுவது என்பதையும் மலைப் பிரசங்கத்தில் இயேசு தம் சீஷர்களுக்கு கற்பித்தார். அவர் சொன்னார்: “ஆதலால், மனுஷர் உங்களுக்கு எவைகளைச் செய்ய விரும்புகிறீர்களோ, அவைகளை நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள்.” (மத்தேயு 7:12) “மனுஷர்” என்று இயேசு இங்கே பயன்படுத்திய வார்த்தை ஒருவருடைய பகைவர்களையும் உட்படுத்துகிறது. அதே மலைப் பிரசங்கத்தில், அவர் சொன்னார்: “உங்கள் சத்துருக்களைச் சிநேகியுங்கள்; . . . உங்களைத் துன்பப்படுத்துகிறவர்களுக்காகவும் ஜெபம்பண்ணுங்கள்.” (மத்தேயு 5:43, 44) இப்படிப்பட்ட அன்பு இன்று நாம் எதிர்ப்படும் அநேக பிரச்சினைகளை தீர்க்கும் அல்லவா? மோகன்தாஸ் காந்தி அவ்வாறு நினைத்தார். அவர் இப்படி சொன்னதாக கூறப்படுகிறது: “மலைப் பிரசங்கத்தில் கிறிஸ்து கொடுத்த போதனைகளை [நாம்] பின்பற்றும்போது, . . . இந்த முழு உலகத்தின் பிரச்சினைகளையே நாம் தீர்த்திருப்போம்.” அன்பைப் பற்றிய இயேசுவின் போதனைகள், பின்பற்றப்பட்டால், மனிதவர்க்கத்தின் நோய்நொடிகள் பெரும்பாலானவற்றை குணப்படுத்தும்.
அவருடைய செயல்கள்
அன்பை காண்பிப்பதைப் பற்றிய ஆழமான சத்தியங்களை இயேசு கற்பித்ததோடு மட்டுமின்றி, அதற்கு இசைவாக வாழ்ந்தும் காட்டினார். உதாரணமாக, தம்முடைய சொந்த அக்கறைகளுக்கும் மேலாக மற்றவர்களுடைய அக்கறைகளை கவனித்தார். சாப்பிடுவதற்கும்கூட நேரம் இல்லாத அளவுக்கு ஒருநாள் இயேசுவும் அவருடைய சீஷர்களும் மக்களுக்கு உதவிசெய்வதில் சுறுசுறுப்பாக இருந்தார்கள். தம்முடைய சீஷர்கள் சிறிதுநேரம் இளைப்பாற வேண்டியதன் அவசியத்தை இயேசு கண்டு, அவர்களை தனிமையான ஓர் இடத்திற்கு அழைத்துச் சென்றார். ஆனால் அவர்கள் அங்கு சேர்ந்தபோதோ அவர்களுக்காக மக்கள் கூட்டம் காத்திருந்ததைக் கண்டார்கள். நீங்கள் சற்று ஓய்வு எடுக்க வேண்டும் என்று நினைத்த சமயத்தில் உங்களை வேலைசெய்ய எதிர்பார்த்த ஒரு கூட்டத்தாரிடம் எப்படி பிரதிபலித்திருப்பீர்கள்? ஆனால், இயேசு “அவர்கள்மேல் மனதுருகி, அநேக காரியங்களை அவர்களுக்கு உபதேசிக்கத் தொடங்கினார்.” (மாற்கு 6:34) மற்றவர்கள்மீது இயேசுவுக்கு இருந்த இப்படிப்பட்ட அக்கறை எப்பொழுதும் அவர்களுக்கு உதவ அவரை உந்துவித்தது.
மக்களுக்கு போதிப்பதோடு இயேசு நிறுத்திக்கொள்ளவில்லை. நடைமுறையான உதவியையும் கொடுத்தார். உதாரணமாக, ஒரு சந்தர்ப்பத்தில், பிற்பகல் நேரம்வரை இயேசுவுக்கு செவிகொடுத்துக் கொண்டிருந்த 5,000-க்கும் மேற்பட்டோருக்கு அவர் உணவளித்தார். அதன்பின்பு விரைவிலேயே மற்றொரு பெரிய கூட்டத்தாருக்கு—இந்தத் தடவை 4,000-க்கும் அதிகமானோருக்கு—உணவளித்தார்; இவர்கள் மூன்று நாட்களாக அவருக்கு செவிகொடுத்துக் கேட்டுக்கொண்டிருந்தார்கள், சாப்பிடுவதற்கு ஒன்றும் இல்லாமல் தவித்தார்கள். முதல் சந்தர்ப்பத்தில், ஐந்து அப்பங்களையும் இரண்டு மீன் துண்டுகளையும் பயன்படுத்தினார், இரண்டாவது சந்தர்ப்பத்தில், ஏழு அப்பங்களையும் சில சிறுமீன்களையும் பயன்படுத்தினார். (மத்தேயு 14:14-22; 15:32-38) அற்புதங்களா? ஆம், அவர் அற்புதங்களை செய்கிறவர்.
உடல் நலிவுற்றவர்களையும் இயேசு குணப்படுத்தினார். குருடர்கள், முடவர்கள், குஷ்டரோகிகள், செவிடர்கள் ஆகியோரை குணப்படுத்தினார். ஏன், மரித்தவர்களையும் உயிர்ப்பித்தாரே! (லூக்கா 7:22; யோவான் 11:30-45) ஒருமுறை குஷ்டரோகி ஒருவன் அவரிடம் இவ்வாறு மன்றாடினான்: “உமக்குச் சித்தமானால் என்னைச் சுத்தமாக்க உம்மால் ஆகும்.” இயேசு எப்படி பிரதிபலித்தார்? “இயேசு மனதுருகி கையை நீட்டி, அவனைத் தொட்டு: எனக்குச் சித்தமுண்டு, சுத்தமாகு என்றார்.” (மாற்கு 1:40, 41) இப்படிப்பட்ட அற்புதங்கள் வாயிலாக துயரப்பட்டோர் மீது தமக்கிருந்த அன்பை இயேசு காண்பித்தார்.
இயேசுவின் அற்புதங்களை நம்புவது உங்களுக்கு கடினமாக இருக்கிறதா? சிலருக்கு கடினமாக இருக்கிறது. ஆனால் இயேசு இந்த அற்புதங்களை பொது மக்கள் பார்வையில் செய்தார் என்பதை மறந்துவிடாதீர்கள். எடுத்ததற்கெல்லாம் குறை காண முயன்ற அவருடைய எதிரிகளும்கூட, அவர் அற்புதங்களைச் செய்பவர் என்பதை மறுதலிக்க முடியவில்லை. (யோவான் 9;1-34) மேலும், அவருடைய அற்புதங்களுக்கு நோக்கம் இருந்தது. கடவுளால் அனுப்பப்பட்டவர் என்பதை மக்கள் புரிந்துகொள்ள இவை உதவின.—யோவான் 6:14.
அற்புதங்கள் செய்தபோது இயேசு தம்மிடம் கவனத்தை திருப்ப முயலவில்லை. மாறாக, அந்த வல்லமைக்கு ஊற்றுமூலராகிய கடவுளையே மகிமைப்படுத்தினார். ஒரு சமயம் கப்பர்நகூமில் ஒரு வீட்டுக்கு மக்கள் வெள்ளம்போல திரண்டு வந்திருந்தனர். பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டிருந்த ஒரு மனிதன் குணமாக விரும்பினான், ஆனால் அவனால் உள்ளே செல்ல முடியவில்லை. ஆகவே அவனுடைய நண்பர்கள் அவனை ஒரு படுக்கையில் வைத்து வீட்டின் கூரையை திறந்து அதன் வழியாக அவனை உள்ளே இறக்கினார்கள். அவர்களுடைய விசுவாசத்தைப் பார்த்து, பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டிருந்த மனிதனை இயேசு குணப்படுத்தினார். அதன் விளைவாக, “நாம் ஒருக்காலும் இப்படிக் கண்டதில்லையென்று சொல்லி, [அவர்கள்] தேவனை மகிமைப்படுத்தினார்கள்.” (மாற்கு 2:1-4, 11, 12) இயேசுவின் அற்புதங்கள் அவருடைய கடவுளாகிய யெகோவாவுக்கு துதியைக் கொண்டுவந்தன, தேவையில் இருந்தோருக்கு உதவியும் செய்தன.
ஆனால், வியாதியஸ்தரை அற்புதமாக குணப்படுத்துவதே இயேசுவினுடைய ஊழியத்தின் முக்கிய நோக்கமல்ல. இயேசுவின் வாழ்க்கை வரலாற்றை எழுதிய ஒருவர் இவ்வாறு விளக்கினார்: “இயேசு தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்று நீங்கள் விசுவாசிக்கும்படியாகவும், விசுவாசித்து அவருடைய நாமத்தினாலே நித்தியஜீவனை அடையும்படியாகவும், இவைகள் எழுதப்பட்டிருக்கிறது.” (யோவான் 20:31) ஆம், விசுவாசிக்கிற மனிதர்கள் ஜீவனை பெற இயேசு பூமிக்கு வந்தார்.
அவருடைய பலி
‘இயேசு பூமிக்கு வந்தாரா?’ என நீங்கள் கேட்கலாம். ‘அவர் எங்கிருந்து வந்தார்?’ இயேசுவே இவ்வாறு சொன்னார்: “என் சித்தத்தின்படியல்ல, என்னை அனுப்பினவருடைய சித்தத்தின்படி செய்யவே நான் வானத்திலிருந்திறங்கி வந்தேன்.” (யோவான் 6:38) கடவுளுடைய ஒரேபேறான குமாரனாக அவர் மனிதனாக வருவதற்கு முன்பே வாழ்ந்திருக்கிறார். அப்படியானால், அவரை பூமிக்கு அனுப்பியவருடைய சித்தம் என்ன? “தேவன் தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்” என சுவிசேஷ எழுத்தாளர்களில் ஒருவராகிய யோவான் சொல்கிறார். (யோவான் 3:16) இது எப்படி சாத்தியமானது?
எப்படி மரணம் மனிதவர்க்கத்தின் சொத்தானது என்பதை பைபிள் வெளிப்படுத்துகிறது. என்றென்றும் வாழும் எதிர்பார்ப்புடன் முதல் தம்பதியினர் கடவுளிடமிருந்து ஜீவனை பெற்றனர். ஆனால், தங்களை உருவாக்கியவருக்கு எதிராக கலகம் செய்தார்கள். (ஆதியாகமம் 3:1-19) இந்தச் செயல், அதாவது முதல் மனிதன் செய்த பாவம், ஆதாம் ஏவாளின் சந்ததியார் மரணத்தை பரம்பரை சொத்தாக சுதந்தரிப்பதில் விளைவடைந்தது. (ரோமர் 5:12) மனிதவர்க்கம் மெய்யான ஜீவனைப் பெறுவதற்காக, பாவமும் மரணமும் ஒழிக்கப்பட வேண்டும்.
மரபுவழிப் பண்பியல்பின் அடிப்படையில் செயற்கை முறையில் எந்தவொரு விஞ்ஞானியும் மரணத்தை ஒழிக்கவே முடியாது. ஆனால், கீழ்ப்படிதலுள்ள மனிதர் என்றென்றும் வாழ அவர்களை பரிபூரணத்திற்கு கொண்டுவரும் வழிமுறையை படைப்பாளர் வைத்திருக்கிறார். பைபிளில் இந்த ஏற்பாடு மீட்கும்பொருள் என அழைக்கப்படுகிறது. முதல் மானிட தம்பதியினர் தங்களையும் தங்களுடைய சந்ததியாரையும் பாவம் மரணம் எனும் அடிமைத்தனத்திற்குள் விற்றுவிட்டார்கள். கடவுளுக்குக் கீழ்ப்படியும் பரிபூரண மனிதர்களாய் இருக்கும் ஜீவனைக் கொடுத்துவிட்டு, கடவுளுக்குக் கீழ்ப்படியாத ஜீவனைப் பெற்றுக்கொண்டார்கள். எது சரி எது தவறு என்பதைக் குறித்ததில் தங்களுடைய சொந்த தீர்மானத்தை எடுத்தார்கள். அந்தப் பரிபூரண மனித உயிரை மீண்டும் வாங்க நம்முடைய ஆதி பெற்றோர் இழந்த பரிபூரண மனித உயிருக்கு சமமான விலையை செலுத்த வேண்டியிருந்தது. அபூரணத்தை சுதந்தரித்திருப்பதால், மனிதர்களுக்கு அந்த விலையை செலுத்தும் தகுதியில்லை.—சங்கீதம் 49:7, 8.
ஆகவே, இதற்கு பரிகாரம் செய்ய யெகோவா நடவடிக்கை எடுத்தார். தம்முடைய ஒரேபேறான குமாரனுடைய பரிபூரண உயிரை ஒரு கன்னிகையின் கருப்பைக்கு மாற்றினார். அந்தக் கன்னிகை இயேசுவை பெற்றெடுத்தாள். பல ஆண்டுகளுக்கு முன்பு, கன்னி பிள்ளையைப் பெற்றெடுத்த விஷயத்தை நீங்கள் ஏற்றுக்கொள்ள மறுத்திருக்கலாம். ஆனால் இன்றைய விஞ்ஞானிகள், ஒரு விலங்கிலிருந்து மற்றொரு விலங்கில் ஜீன்களை வைத்து குளோனிங் மூலம் பாலூட்டிகளைப் பிறப்பிப்பதை நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம். அப்படியானால், வழக்கமான இனப்பெருக்க முறையை பின்பற்றாமல் பிறப்பிக்கும் படைப்பாளருடைய திறமையை யார் சந்தேகிக்க முடியும்?
பரிபூரண மனித உயிர் இருந்ததால், மனிதவர்க்கத்தை மரணத்திலிருந்தும் பாவத்திலிருந்தும் மீட்பதற்கான விலை கிடைத்தது. ஆனால், மனிதவர்க்கத்தின் நோய்நொடிகளை குணப்படுத்துவதற்கு, பூமியில் பிறந்த குழந்தை இயேசு “மருந்து” கொடுக்கும் “மருத்துவராக” ஆகும்வரை வளர வேண்டியதாயிருந்தது. பாவமற்ற பரிபூரண மனிதராக வாழ்வதன் மூலம் இதை அவர் செய்தார். பாவம் எனும் ஆதிக்கத்திற்குள் அவதியுறும் மனிதவர்க்கத்தின் வேதனையை இயேசு பார்த்ததோடு மட்டுமின்றி, ஒரு மனிதனாக சரீரத்தின் வரம்புகளையும் அனுபவப்பூர்வமாக கண்டார். இது அவரை இன்னும் அதிக இரக்கமுள்ள மருத்துவராக்கியது. (எபிரெயர் 4:15) பூமியில் தாம் வாழ்ந்தபோது செய்த அற்புதகரமான சுகப்படுத்துதல்கள், வியாதியஸ்தரை சுகப்படுத்துவதற்கான விருப்பமும் வல்லமையும் இருந்ததை நிரூபித்துக் காட்டின.—மத்தேயு 4:23.
பூமியில் மூன்றரை வருட ஊழியத்திற்குப் பிறகு, இயேசு தம்முடைய விரோதிகளால் கொல்லப்பட்டார். மிகப் பெரிய சோதனைகளின் மத்தியிலும் பரிபூரண மனிதர் படைப்பாளருக்கு கீழ்ப்படிந்திருக்க முடியும் என்பதை காட்டினார். (1 பேதுரு 2:22) அவர் பலியாக செலுத்திய பரிபூரண மானிட உயிர் மீட்பின் கிரயமாக ஆனது, அதனால் மனிதவர்க்கத்தை பாவத்திலிருந்தும் மரணத்திலிருந்தும் மீட்க முடிந்தது. இயேசு கிறிஸ்து சொன்னார்: “ஒருவன் தன் சிநேகிதருக்காகத் தன் ஜீவனைக் கொடுக்கிற அன்பிலும் அதிகமான அன்பு ஒருவரிடத்திலுமில்லை.” (யோவான் 15:13) தாம் மரித்ததிலிருந்து மூன்றாம் நாள், ஆவி வாழ்க்கைக்கு இயேசு உயிர்த்தெழுப்பப்பட்டார், பின்பு சில வாரங்கள் கழித்து மீட்பின் கிரயத்தை யெகோவா தேவனுக்கு செலுத்த பரலோகத்திற்கு ஏறிச்சென்றார். (1 கொரிந்தியர் 15:3, 4; எபிரெயர் 9:11-14) அவ்வாறு செய்வதன் மூலம், இயேசு தம்முடைய கிரயபலியின் மதிப்பை தம்மை பின்பற்றுகிறவர்களுக்கு பொருத்த முடிந்தது.
ஆவிக்குரிய, உணர்ச்சிப்பூர்வ, சரீரப்பிரகாரமான வியாதியிலிருந்து சுகப்படுத்தும் இந்த முறையிலிருந்து பயனடைய நீங்கள் விரும்புகிறீர்களா? அப்படியென்றால் நீங்கள் இயேசு கிறிஸ்துவில் விசுவாசம் வைக்க வேண்டும். ஏன் அந்த மருத்துவரிடம் நீங்கள் வரக்கூடாது? இயேசு கிறிஸ்துவையும் உண்மையுள்ள மனிதரை காப்பாற்றுவதில் அவருடைய பங்கையும் கற்றுக்கொள்வதன் மூலம் இதை நீங்கள் செய்யலாம். உங்களுக்கு உதவ யெகோவாவின் சாட்சிகள் மகிழ்ச்சியுடன் காத்திருக்கிறார்கள்.
[பக்கம் 5-ன் படம்]
நலிவுற்றோரை குணப்படுத்த இயேசுவுக்கு விருப்பமும் வல்லமையும் இருக்கிறது
[பக்கம் 7-ன் படம்]
இயேசுவின் மரணம் உங்களை எப்படி பாதிக்கிறது?