உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • w99 7/1 பக். 30-31
  • அறிவு தாகத்தை தீர்த்த பயணம்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • அறிவு தாகத்தை தீர்த்த பயணம்
  • காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1999
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • அசர வைக்கும் அறிக்கை
  • திணறடிக்கும் கேள்விகளும் திருப்தியான பதில்களும்
  • நமக்கு பாடம்
  • தாராளகுணம் ததும்புகையில்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1999
  • சாலொமோன் ஞானமாய் அரசாளுகிறார்
    பைபிள் ஒரு கண்ணோட்டம்
  • அவள் ஞானத்தை பெரிதாக நினைத்தாள்
    நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2023
  • யெகோவாவுடைய ஞானத்தைப் புகழுங்கள்
    நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2022
மேலும் பார்க்க
காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1999
w99 7/1 பக். 30-31

அவர்கள் யெகோவாவின் சித்தத்தைச் செய்தார்கள்

அறிவு தாகத்தை தீர்த்த பயணம்

அந்த ராணி மிகவும் களைப்பாயிருந்தது உண்மையில் ஆச்சரியத்திற்குரிய விஷயமே அல்ல. ஏனென்றால் சேபாவிலிருந்து எருசலேமுக்கு மேற்கொண்ட அந்த நீ. . .ண்ட ஆமை வேகப் பயணம், யாருக்குமே பயங்கர களைப்பை ஏற்படுத்தத்தான் செய்யும். அவளோ ஆடம்பர வாழ்க்கையில் திளைத்தவள். ஆனால் இப்போதோ 2,400 கிலோமீட்டர் தூரம் ஆடி அசைந்து நடக்கும் ஒட்டகத்தில் பயணம் செய்ய வேண்டிய நிலை; அதிலும் குறிப்பாக அவள் பயணம் செய்த தூரத்தில் பெரும்பாலான பகுதி சுட்டெரிக்கும் பாலைவனம். அந்த கடும் பிரயாணத்தில், போவதற்கு மட்டும் 75 நாட்கள் ஆகியிருக்கும் என்பதாக ஒரு ஆய்வு காண்பிக்கிறது! a

இந்த செல்வ சிறப்பு மிக்க ராணி சேபாவிலிருந்த சொகுசான தன்னுடைய அரண்மனையில் அக்கடா என்று இருப்பதை விட்டுவிட்டு ஏன் இவ்வளவு கடினமான பயணத்தை மேற்கொண்டாள்?

அசர வைக்கும் அறிக்கை

‘கர்த்தருடைய [“யெகோவாவுடைய,” NW] நாமத்தைக்குறித்துச் சாலொமோனுக்கு உண்டாயிருந்த கீர்த்தியைப்’ பற்றி கேள்விப்பட்டதால் சேபாவின் ராணி எருசலேமுக்கு வந்தாள். (1 இராஜாக்கள் 10:1) அந்த ராணி கேள்விப்பட்டதென்ன என்பதைப் பற்றி பைபிளில் சொல்லப்படவில்லை. ஆனால் யெகோவா, சாலொமோனை அதிசயப்படவைக்கும் ஞானத்தையும், அபரிதமான செல்வத்தையும், கனத்தையும் தந்து ஆசீர்வதித்தார் என்பது நமக்கு தெரியும். (2 நாளாகமம் 1:11, 12) இந்த விஷயங்கள் அந்த ராணிக்கு எவ்வாறு தெரியவந்தன? சேபா ஒரு முக்கிய வியாபார ஸ்தலமாக இருந்தது, எனவே அவளுடைய நாட்டிற்கு வியாபாரம் செய்வதற்காக வந்த வியாபாரிகள் மூலம் அவள் சாலொமோனுடைய புகழைப் பற்றி கேள்விப்பட்டிருக்கலாம். இவர்களில் சிலர் ஓப்பீர் என்ற தேசத்திற்கு வியாபார விஷயமாக போயிருந்தபோது தலைக்கு தலை அவரைப் பற்றி பேசுவதை கேட்டிருக்கலாம்; சாலொமோன் ஓப்பீருடன் நல்ல வியாபார சம்பந்தம் வைத்திருந்தார்.​—1 இராஜாக்கள் 9:26-28.

எப்படியிருந்தாலும் சரி, அந்த ராணி எருசலேமுக்கு “மிகுந்த பரிவாரத்தோடும், கந்தவர்க்கங்களையும், மிகுதியான பொன்னையும் இரத்தினங்களையும் சுமக்கிற ஒட்டகங்களோடும்” வந்து சேர்ந்தாள். (1 இராஜாக்கள் 10:2) ‘பரிவாரம்’ என்று சொல்லப்பட்டதால் அதில் ஆயுதம் தாங்கிய வீரர்களும் இருந்திருக்கவேண்டும் என்பதாக சிலர் சொல்கின்றனர். இவள் செல்வாக்கு மிகுந்த ஒரு ராணி, சாதாரண செல்லாக்காசு அல்ல என்பதாலும், கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள பொருட்களோடு பயணம் செய்ததாலும் இத்தனை பரிவாரத்தோடு வந்தாள் என்பதைப் புரிந்துகொள்ளலாம். b

‘யெகோவாவுடைய நாமத்தோடு சம்பந்தப்பட்ட’ சாலொமோனின் புகழை அந்த ராணி கேள்விப்பட்டாள் என்பதை நாம் ஏற்கெனவே கவனித்தோம். ஆகவே, இது ஏதோ ஒரு வியாபார நோக்கத்தோடு செய்யப்பட்ட உப்பு சப்பில்லாத சாதாரண பயணம் என்று நாம் நினைத்துவிட முடியாது. ஆகவே, முக்கியமாக சாலொமோனுடைய ஞானத்தை காதாரக் கேட்பதற்காகவே இந்த ராணி வந்தாள் என்றே அத்தாட்சிகள் காட்டுகின்றன. ஒருவேளை அவருடைய தேவனாகிய யெகோவாவைப் பற்றி தெரிந்துகொள்வதற்காகவும் வந்திருக்கலாம். இவள் சேம் அல்லது காமுடைய வம்சத்தில் வந்திருக்க வேண்டும்; அவர்கள் யெகோவாவை வணங்கியவர்கள், எனவே தன்னுடைய முன்னோரின் மதத்தைப் பற்றி தெரிந்துகொள்ள வேண்டும் என்ற விருப்பமும் அவளுக்கு இருந்திருக்கலாம்.

திணறடிக்கும் கேள்விகளும் திருப்தியான பதில்களும்

சாலொமோனை சந்தித்த சூட்டோடு சூடாக அந்த ராணி அவரை “கடினமான கேள்விகள்” மூலம் சோதிக்க ஆரம்பித்தாள். (1 இராஜாக்கள் [அரசர்கள்] 10:1, பொது மொழிபெயர்ப்பு) இதில் உபயோகித்த எபிரெய வார்த்தையை “விடுகதைகள்” என்றும் மொழிபெயர்க்கலாம். அப்படியென்றால் அந்த ராணி விளையாட்டுத்தனமான கேள்விகளை கேட்டாள் என்பதாக நாம் நினைக்க முடியாது. அக்கறைக்குரிய விஷயம் என்னவென்றால் சங்கீதம் 49:4-ல் பாவம், மரணம், மீட்பு போன்ற கேள்விகளுக்கு விடையளிக்கும் சமயத்திலும் அதே எபிரெய வார்த்தை பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அப்படியென்றால் சேபாவின் ராணி சாலொமோனிடம் கருத்தாழமிக்க அர்த்தம் பொதிந்த விஷயங்களைப் பற்றி விவாதித்திருக்க வேண்டும்; அவை சாலொமோனின் ஞானத்தை சல்லடைபோட்டு சலிப்பதுபோல் சோதித்திருக்கும் என்பதில் சந்தேகமேயில்லை. ‘தன் மனதிலிருந்த எல்லாவற்றையும் குறித்து அவனிடத்தில் சம்பாஷித்தாள்’ என்பதாக அதைப் பற்றி பைபிள் விளக்குகிறது. ‘சாலொமோன் அவளுடைய கேள்விகளுக்கெல்லாம் விடை கூறினார். அவள் கேட்டதில் பதிலளிக்க இயலாதபடி எதுவும் அரசருக்கு புதிராகத் தோன்றவில்லை.’​—1 அரசர்கள் 10:2, 3, பொ.மொ.

சேபாவின் ராணி சாலொமோனுடைய ஞானத்தையும், அவருடைய ஆட்சியில் இருந்த செழிப்பையும் பார்த்தபோது ‘பிரமைகொண்டாள்.’ (1 இராஜாக்கள் 10:4, 5) அந்த ராணி ‘பேச்சற்றுபோனதாக’ சிலர் இந்த வார்த்தைகளுக்கு அர்த்தம் கொள்கின்றனர். ஒரு வல்லுனர் அவள் மயக்கம்போட்டு விழுந்திருக்க வேண்டும் என்பதாக குறிப்பிடுகிறார். என்ன ஆகியிருந்தாலும் சரி, தான் கண்டதையும் கேட்டதையும் வைத்து அந்த ராணி அசந்துபோய்விட்டாள். சாலொமோனுடைய ஊழியர்களெல்லாம் சந்தோஷமானவர்கள் என்பதாக குறிப்பிட்டாள், ஏனெனில் அவர்கள் எப்போதும் ராஜாவுடைய ஞானத்தை கேட்டார்கள். சாலொமோனை அரியணையில் அமரச் செய்ததற்காக அவள் யெகோவாவை துதித்தாள். அதன் பிறகு அவள் விலையுயர்ந்த பரிசுகளை ராஜாவுக்கு அளித்தாள்; பொன்னின் மதிப்பு மட்டுமே இப்போதைய மதிப்பின்படி சுமார் 4,00,00,000 டாலர். சாலொமோனும் அந்த ராணிக்கு பரிசுகளை அளித்து, ‘அவள் விரும்பி கேட்டவற்றையெல்லாம் கொடுத்தார்.’ c​—1 அரசர் 10:6-13.

நமக்கு பாடம்

சேபா தேசத்தின் ராணியை உதாரணமாக வைத்து பரிசேயருக்கும் சதுசேயருக்கும் இயேசு ஒரு நல்ல பாடத்தைக் கற்றுக்கொடுத்தார். “தென்தேசத்து ராஜஸ்திரீ பூமியின் எல்லைகளிலிருந்து சாலொமோனுடைய ஞானத்தைக் கேட்க வந்தாள். இதோ, சாலொமோனிலும் பெரியவர் இங்கே இருக்கிறார். ஆதலால் நியாயத்தீர்ப்பு நாளிலே அந்த ராஜஸ்திரீ இந்தச் சந்ததியாரோடெழுந்து நின்று இவர்கள்மேல் குற்றஞ்சுமத்துவாள்” என அவர்களிடம் சொன்னார். (மத்தேயு 12:42) ஆம், கடவுளால் கொடுக்கப்பட்ட ஞானத்திற்கு சேபாவின் ராணி மிக அதிகமான போற்றுதலைக் காண்பித்தாள். சாலொமோனுடைய ஞானத்தைக் கேட்பதற்காக அவள் 2,400 கிலோமீட்டர் பயணப்பட்டு வந்தாள் என்றால், பரிசேயரும் சதுசேயரும் அவர்கள் மத்தியிலேயே இருந்து போதித்து வந்த இயேசுவிற்கு எவ்வளவு கூர்ந்து செவிசாய்த்திருக்க வேண்டும்!

இன்று பெரிய சாலொமோனாகிய இயேசு கிறிஸ்துவிற்கு ஆழ்ந்த போற்றுதலை நாம் காட்டலாம். எவ்வாறு? ‘சகல ஜாதிகளையும் சீஷராக்க வேண்டும்’ என்று இயேசு சொன்ன வார்த்தைகளை பின்பற்றுவது ஒரு வழி. (மத்தேயு 28:19) இன்னொரு வழி இயேசுவின் முன் உதாரணத்தையும் அவருடைய நோக்கங்களையும் ஜாக்கிரதையாக கவனித்து அவரை நிழல்போல பின்பற்ற வேண்டும்.​—பிலிப்பியர் 2:5; எபிரெயர் 12:2, 3.

பெரிய சாலொமோனை பின்பற்ற வேண்டுமென்றால் நாம் அதிக முயற்சி எடுக்க வேண்டும். அதற்கேற்றவாறு நாம் அதிக பலனையும் பெற்றுக்கொள்வோம். தன்னுடைய ஜனங்கள் சுயதியாக ஆவியோடு நடந்துகொண்டால் ‘வானத்தின் பலகணிகளைத் திறந்து, இடங்கொள்ளாமற்போகுமட்டும் அவர்கள்மேல் ஆசீர்வாதத்தை வருஷிப்பதாக’ யெகோவா வாக்களித்திருக்கிறார்.​—மல்கியா 3:10.

[அடிக்குறிப்புகள்]

a தென்மேற்கு அரேபியாவில் உள்ள ஏமன் குடியரசில்தான் சேபா இருந்திருக்க வேண்டும் என்பதாக அநேக வல்லுனர்கள் நம்புகின்றனர்.

b சேபா தேசத்து ஜனங்கள் பெரிய செல்வச் சீமான்களாகத்தான் இருந்தனர் என்று பண்டைய கிரேக்க புவியியல் வல்லுனர் ஸ்ட்ரேபோ குறிப்பிடுகிறார். அவர்களுடைய மேசை நாற்காலி, பாத்திரங்கள், சுவர்கள், கதவுகள், வீட்டின் கூரை போன்றவை தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டிருந்தன என்று அவர் தொடர்ந்து குறிப்பிடுகிறார்.

c அந்த ராணி சாலொமோனோடு பாலுறவு கொண்டாள் என்பதாக சிலர் இந்தப் பதிவிற்கு விளக்கமளிக்கின்றனர். அவர்களுக்கு ஒரு மகன் இருந்ததாகவும் சில கற்பனைக் கதைகள் சொல்கின்றன. இதையெல்லாம் ஆதரிக்க எந்த அத்தாட்சியும் இல்லை.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்