நம்பகமான முன்கணிப்புகளை தேடி
மாசிடோனியாவின் மன்னன் மகா அலெக்சாண்டர் பொ.ச.மு. 336-ல் அரியணை ஏறியதும், டெல்ஃபி என்ற இடத்தில் குறிசொல்லும் கோவிலுக்கு போனார். உலகையே தன் காலடியில் கொண்டுவர வேண்டும் என்பது அவரது ஆசை கனவு. அதற்காக படையெடுத்து செல்லும்போது வெற்றி கனியை தட்டிப்பறிக்க முடியுமா என்பதை அறிய தெய்வத்திடம் குறிகேட்க விரும்பினார். அதற்காக அவர் டெல்ஃபிக்கு சென்றபோது, அன்று குறிசொல்லப்படவில்லை. அங்கிருந்த பெண் சாமியாரை குறிகேட்டு சொல்லும்படி அவர் வற்புறுத்தினார். பதில் கிடைக்காமல் அவ்விடத்தை விட்டு செல்லமாட்டேன் என்று பிடிவாதமாக இருந்தார். அந்தப் பெண்சாமியார் நொந்துபோய் இவ்வாறு கூறினாராம்: “குழந்தாய்! உன்னை வெல்ல முடியவில்லையே!” இளவரசர் அலெக்சாண்டர் அந்த வார்த்தையை திருவாக்காக எடுத்துக்கொண்டார். படையை தலைமைதாங்கி சென்று, வெற்றிவாகை சூடுவதற்கு நல்ல சகுனமாக கருதினார் என்று ஒரு புராணம் சொல்கிறது.
ஆனால், தானியேல் என்னும் பைபிள் புத்தகத்தில் இருந்த தீர்க்கதரிசனங்களை அதாவது முன்கணிப்புகளை அலெக்சாண்டர் புரட்டிப் பார்த்திருந்தால், அவரது வெற்றி தோல்விகளைப் பற்றி இன்னும் நன்றாக தெரிந்துகொண்டிருப்பார். அவர் படுவேகமாக வெற்றிமேல் வெற்றிகளை குவிப்பார் என்று மிகத் துல்லியமாக பைபிள் முன்னுரைத்தது. தானியேல் புத்தகத்தில் அவரைப் பற்றி எழுதியிருந்ததை காணும் வாய்ப்பு அவருக்கு யூத நாட்டு கலாச்சாரத்தின் வாயிலாக கிடைத்தது. மாசிடோனியா மன்னன் அலெக்சாண்டர் எருசலேமுக்கு வந்ததும், தானியேல் தீர்க்கதரிசனத்தை, அநேகமாக அப்புத்தகத்திலிருந்து 8-ம் அதிகாரத்தை அவருக்கு காட்டியிருப்பார்கள் என்று யூத வரலாற்று ஆசிரியர் ஜோஸிபஸ் கூறுகிறார். (தானியேல் 8:5-8, 20, 21) அதனால்தான் பல நாடுகளை அழித்துவிட்டுவந்த அலெக்சாண்டரின் படைகள் எருசலேம் நகரை ஒன்றும்செய்யவில்லை என்கிறார்கள்.
இயல்பான ஆசை
அரசனோ ஆண்டியோ, அந்தக் காலமோ இந்தக் காலமோ, ஆக மொத்தம் எதிர்காலத்தைப் பற்றி தெரிந்துகொள்ளும் ஆசை மனிதனுக்கு இயல்பாகவே உள்ளது. மனிதர்களான நாம் மகா புத்திசாலிகள். இறந்தகாலத்தை புரட்டி பார்க்கிறோம், நிகழ்காலத்தில் நடப்பதை அறிவோம். ஆனாலும் எதிர்காலத்தைப் பற்றி அறிந்துகொள்வதில்தான் நமக்கு கொள்ளை ஆசை. மனிதனின் இந்த ஆசையை அப்படியே படம்பிடித்து கூறுகிறது பின்வரும் சீனப்பழமொழி: “நடைபெறவிருக்கும் விஷயங்களை மூன்று நாட்களுக்கு முன்னதாக யார் கணிக்கிறாரோ அவர் பல்லாயிரம் வருடங்கள் செல்வசெழிப்போடு இருப்பார்.”
மனிதன் எதை தன் தெய்வமாக நினைக்கிறானோ, அதனிடத்தில் தன் எதிர்காலத்தைப் பற்றி அறிந்துகொள்ள முயற்சிசெய்கிறான். இப்படி முயற்சி செய்வது நேற்று இன்று அல்ல. இங்கொருவர் அங்கொருவர் அல்ல. பலகோடி மக்கள் பல்லாயிரம் வருடங்களாக முயற்சித்து வருகிறார்கள். இவ்விஷயத்தில் பண்டைய கிரேக்கர்களின் உதாரணத்தை பார்ப்போம். டெல்ஃபி, டெலோஸ், டடோனா போன்ற எக்கசக்கமான கோயில்கள் குறிசொல்வதற்கென்றே இருந்தன. அங்கே போய் தங்கள் இஷ்ட தேவதைகளிடம் குறிகேட்பார்கள்; அரசியல், இராணுவ விஷயங்களை மாத்திரம் அன்றி, அன்றாட வாழ்க்கை விஷயங்களை, அதாவது பயணம், திருமணம், பிள்ளைகள் பற்றி தெரிந்துகொள்ளவும் போனார்கள். அரசர்களும், தளபதிகளும் மாத்திரம் அன்றி அனைத்து குலத்தினரும், நகர-நாடுகளில் உள்ள அனைவரும், ஆவி உலகத்திலிருந்து அசரீரி வாக்கு கிடைக்காதா என்று அலைமோதினர்.
இப்போது, “எதிர்காலத்தைப் பற்றி ஜோஸியம் கூற, ஏராளமான அமைப்புகள் திடீரென்று முளைத்துள்ளன” என்கிறார் பேராசிரியர் ஒருவர். ஆனால், ஒரேவொரு புத்தகமாகிய பைபிள் மாத்திரம் எதிர்காலத்தை படு துல்லியமாக எடுத்துரைக்கிறது. அதை புரட்டிப் பார்க்க பலர் விரும்புவதில்லை. அவர்கள் தேடி அலைந்துகொண்டிருக்கும் விஷயங்கள் பைபிளில் இருந்தும், அதை அறிகிற வாய்ப்பு கிடைத்தும் மனக்கதவை இழுத்து மூடிவிடுகிறார்கள். அந்தக் காலத்தில் குறிசொன்னவர்களின் ஆருடங்களும் பைபிளில் உள்ள தீர்க்கதரிசனங்களும் ஒன்றே என்று கூறும் முயற்சியில் சில மேதைகள் கிளம்பியிருக்கிறார்கள். இது ஒருபுறம் இருக்க, நம் நவீனகால சந்தேகவாதிகள் ஒரு கண்ணில் வெண்ணையும் மறுகண்ணில் சுண்ணாம்பும் வைத்தே பைபிள் தீர்க்கதரிசனங்களை பார்க்கிறார்கள்.
பைபிள் முன்கணிப்புகளையும், மனிதனுடைய ஆருடங்களையும் ஒப்பிடுகையில் தெரியவரும் உண்மை என்ன? நாம் அந்தக் காலத்து ஆருடங்களைவிட பைபிள் தீர்க்கதரிசனங்களை அதிகமாக நம்பலாமா? பைபிள் தீர்க்கதரிசனங்களை நம்பி உங்கள் வாழ்க்கையை அமைத்துக்கொள்ளலாமா? இவற்றிற்கு தேவையான ஆதாரங்களை அடுத்த கட்டுரையில் உங்கள் முன் வைக்கிறோம். சரிதானா என்பதை நீங்களே பார்த்துக்கொள்ள அன்பாக அழைக்கிறோம்.
[பக்கம் 3-ன் படம்]
அலெக்சாண்டர் படுவேகமாக வெற்றிமேல் வெற்றிகளை குவிப்பார் என்று பைபிள் முன்னுரைத்தது
[படத்திற்கான நன்றி]
Cortesía del Museo del Prado, Madrid, Spain
[பக்கம் 4-ன் படம்]
மகா அலெக்சாண்டர்
[படத்திற்கான நன்றி]
Musei Capitolini, Roma
[பக்கம் 2-ன் படத்திற்கான நன்றி]
COVER: General Titus and Alexander the Great: Musei Capitolini, Roma