வாசகரிடமிருந்து வரும் கேள்விகள்
2 தெசலோனிக்கேயர் 3:14, ஒழுங்கில்லாதவர்களை ‘குறித்துக்கொள்’ என்று கூறுகிறது. அதை வழக்கம்போல் சபை செய்யுமா அல்லது அப்படிப்பட்டவர்களை கிறிஸ்தவர்களே தனிப்பட்ட முறையில் தவிர்க்க வேண்டுமா?
அப்போஸ்தலன் பவுல் தெசலோனிக்கேயருக்கு எழுதியதை பார்க்கும்போது, ‘குறித்துக்கொள்வதில்’ சபை மூப்பர்களே முக்கிய பங்குவகிக்கிறார்கள் என்று தெரிகிறது. ஆனால் தனிப்பட்ட கிறிஸ்தவர்கள் ஆவிக்குரியக் காரணங்களுக்காக வேண்டுமென்றால் அவ்வாறு செய்யலாம். பவுல் இந்த அறிவுரையை எப்படிப்பட்டவர்களுக்கு அல்லது எந்தச் சூழ்நிலையில் கொடுத்தார் என்பதை கொஞ்சம் ஆராய்ந்து பார்த்தால், இந்த விஷயத்தை சரியாக புரிந்துகொள்ளலாம்.
தெசலோனிக்கேயா பட்டணத்தில் நிறைய ஆண்களும், பெண்களும் விசுவாசிகளாக மாறுவதற்கு உதவிய பவுல், அங்கே சபையை நிறுவவும் உதவினார். (அப்போஸ்தலர் 17:1-4) பிறகு பவுல் அவர்களை பாராட்டியும், ஊக்கம் தந்தும் கொரிந்து பட்டணத்திலிருந்து கடிதம் எழுதினார். அவர்களுக்கு தேவையான அறிவுரைகளையும் கொடுத்தார். “அமைதலுள்ளவர்களாயிருக்கும்படி நாடவும், . . . சொந்த அலுவல்களைப் பார்க்கவும் . . . சொந்தக் கைகளினாலே வேலைசெய்யவும்’ அவர்களுக்கு ஊக்கம் கொடுத்தார். சிலர் அவர் சொல்கேட்டு நடக்கவில்லை. ஆகவே பின்வருமாறு மேலும் அறிவுரை தந்தார்: “சகோதரரே, நாங்கள் உங்களுக்குப் போதிக்கிறதென்னவென்றால், ஒழுங்கில்லாதவர்களுக்குப் புத்திசொல்லுங்கள், திடனற்றவர்களைத் தேற்றுங்கள், பலவீனரைத் தாங்குங்கள்.” இதிலிருந்து, அங்கே ‘ஒழுங்கில்லாதவர்கள்’ a இருந்தார்கள் என்று தெரிகிறது. அவர்களுக்கு அறிவுரை தேவைப்பட்டது.—1 தெசலோனிக்கேயர் 1:2-10; 4:12; 5:14.
சில மாதங்களுக்குப் பிறகு, தெசலோனிக்கேயர்களுக்கு இரண்டாவது கடிதத்தை பவுல் எழுதினார். அதில் இயேசுவின் பிரசன்னத்தைப் பற்றி மேலும் விரிவாக எழுதியிருந்தார். அதோடு, ‘எந்த வேலையும் செய்யாமல் சோம்பேறிகளாகச் சுற்றித்திரிந்து, பிறர் வேலையில் தலையிட்டுக்கொண்டிருந்த’ ஒழுங்கில்லாதவர்களை சமாளிக்க நிறைய ஆலோசனைகளை கொடுத்திருந்தார். கஷ்டப்பட்டு உழைத்து, சொந்தக் காலில் நிற்க பவுல் கொடுத்த அறிவுரையை அவர்கள் அசட்டை செய்தார்கள். (2 தெசலோனிக்கர் 3.7-12, பொ.மொ.) அவர்களை திருத்த சில நடவடிக்கைகளை எடுக்கும்படி பவுல் கூறினார். ஆனால், முதலில் அவர்களுடைய தவறை மூப்பர்கள் சுட்டிக்காட்டி, எச்சரிப்பார்கள். நல்ல புத்திமதி சொல்வார்கள். அதற்கு பிறகு நடவடிக்கைள் எடுக்கப்படும். பவுல் இவ்வாறு எழுதினார்:
‘மேலும், சகோதரரே, எங்களிடத்தில் ஏற்றுக்கொண்ட முறைமையின்படி நடவாமல், ஒழுங்கற்று நடக்கிற எந்தச் சகோதரனையும் நீங்கள் விட்டு விலகவேண்டும், . . . சகோதரரே, நீங்கள் நன்மைசெய்வதிலே சோர்ந்து போகாமலிருங்கள். மேலும், இந்த நிருபத்தில் [கடிதத்தில்] சொல்லிய எங்கள் வசனத்துக்கு ஒருவன் கீழ்ப்படியாமற்போனால், அவனைக் குறித்துக்கொண்டு, அவன் வெட்கப்படும்படிக்கு அவனுடனே கலவாதிருங்கள் [சேராதிருங்கள்]. ஆனாலும் அவனைச் சத்துருவாக எண்ணாமல், சகோதரனாக எண்ணி, அவனுக்குப் புத்திசொல்லுங்கள்.”—2 தெசலோனிக்கேயர் 3:6, 13-15.
ஒழுங்கில்லாதவர்களை விட்டு விலகுவது, அவர்களை குறித்துக்கொள்வது, அவர்களோடு சேராதிருப்பது போன்றவை நாம் மேற்கொண்டு எடுக்க வேண்டிய நடவடிக்கைகளாகும். சரி, இத்தகைய நடவடிக்கைகளை எந்தெந்த சந்தர்ப்பங்களில் சபை அங்கத்தினர்கள் எடுக்க வேண்டும்? இதைப் புரிந்துகொள்ள, பவுல் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தாத மூன்று சந்தர்ப்பங்களை இப்போது பார்ப்போம்.
1. கிறிஸ்தவர்களும் குறைபாடு உள்ளவர்கள்தான். தவறு செய்பவர்கள்தான். ஆனால், உண்மை கிறிஸ்தவர்களுக்கு அன்புதான் அடையாளம். அன்பு இருந்தால், மற்றவர்களை புரிந்துகொள்ள முடியும். தவறு செய்யும்போது மன்னிக்க முடியும். ஒரு சமயம் பவுலும் பர்னபாவும் கடுங்கோபம் கொண்டார்கள். அதேபோல் கிறிஸ்தவர்களுக்குள் எப்பொழுதாவது கோபமும் வரலாம். (அப்போஸ்தலர் 15:36-40) ஒருவர் சோர்வாக இருக்கும்போது கடுகடுப்பாக பேசிவிடுவார் அல்லது புண்படும்படி எதையாவது சொல்லிவிடுவார். இதுபோன்ற சந்தர்ப்பங்களில் நாம் பைபிள் அறிவுரையைப் பின்பற்றி அன்பாக நடக்க வேண்டும். அப்போது, நம் சக கிறிஸ்தவர் செய்த தவறைப் பெரிதுபடுத்தாமல் மறந்து, தொடர்ந்து பழகுவோம். (மத்தேயு 5:23-25; 6:14; 7:1-5; 1 பேதுரு 4.8) ஆகவே, இதுபோன்ற தவறுகளை செய்யும் நபர்களோடு பழகுவதைப்பற்றி 2 தெசலோனிக்கேயரில் பவுல் குறிப்பிடவில்லை.
2. ஒருவர் எப்பொழுதும் ஜாலியாய் பொழுதை போக்க விரும்புகிறார் அல்லது அது இது என்று பொருட்களை வாங்கி குவிப்பதிலேயே குறியாக இருக்கிறார் என்று வைத்துக்கொள்வோம். அவருடைய போக்கு அல்லது மனப்பான்மை பிடிக்காத காரணத்தால் அவருடன் பழகுவதை ஒரு கிறிஸ்தவர் குறைத்துக்கொள்ளலாம். அதேபோல், அப்பா அம்மாவை மதிக்காத பிள்ளைகளோடு, முரட்டுத்தனமாக விளையாடும் அல்லது ஆபத்தான விளையாட்டுகளை விளையாடும் பிள்ளைகளோடு, கிறிஸ்தவ வாழ்க்கை முறையை அசட்டை செய்யும் பிள்ளைகளோடு சேரவேண்டாம் என்று பெற்றோர்கள் சொல்வார்கள். இதுபோன்ற சந்தர்ப்பங்களில், “ஞானிகளோடே சஞ்சரிக்கிறவன் ஞானமடைவான்; மூடருக்குத் தோழனோ நாசமடைவான்” என்று நீதிமொழிகள் 13:20, சொல்வதை மனதில் வைத்து, தீர்மானம் எடுக்கவேண்டியது தனிப்பட்டவர்களுடைய பொறுப்பு. ஆகவே, இப்படிப்பட்டவர்களோடு பழகுவதைப் பற்றி பவுல் குறிப்பிடவில்லை.—1 கொரிந்தியர் 15:33-ஐ ஒப்பிடுக.
3. கொரிந்து சபையில், ஒருவன் பெரிய பாவத்தை செய்துவிட்டு, திருந்தாமல் இருந்தான். அவனை சுட்டிக்காட்டி, மற்றவர்கள் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதற்காக அவர்களுக்கு பவுல் கடிதம் எழுதினார். திருந்தாத பாவிகளை சபையிலிருந்து நீக்கவேண்டும். அந்தப் “பொல்லாதவனை” சாத்தானிடத்தில் ஒப்படைக்க வேண்டும். ஆகவே, உண்மை கிறிஸ்தவர்கள் பொல்லாதவர்களோடு சேரமாட்டார்கள். அவர்களுக்கு வாழ்த்துக்கூட சொல்ல வேண்டாம் என்று அப்போஸ்தலன் யோவான் சொல்லியிருக்கிறார். (1 கொரிந்தியர் 5:1-13; 2 யோவான் 9-11) ஆகவே தெசலோனிக்கேயருக்கு அறிவுரை சொன்னதற்கும், கொரிந்தியருக்கு அறிவுரை சொன்னதற்கும் காரணம் வேறு வேறு. இதுபோன்ற பாவிகளின் விஷயத்தில் 2 தெசலோனிக்கேயர் 3: 14-ன் அறிவுரை பொருந்தாது.
ஆகவே நாம் இதுவரை கண்ட மூன்று வகையான ஆட்கள் வேறு, 2 தெசலோனிக்கேயர் கூறுகிற ‘ஒழுங்கில்லாதவர்கள்’ வேறு. ஒழுங்கில்லாமல் இருந்தாலும்கூட அவரை சகோதரனாக கருதவேண்டும், புத்திசொல்ல வேண்டும் என்று பவுல் எழுதினார். ஆகவே, இந்த ‘ஒழுங்கில்லாதவர்களால்’ எழும் பிரச்சினையை கிறிஸ்தவர்களுக்கு இடையே உள்ள சொந்த பிரச்சினை என்று தட்டிக்கழிக்க முடியாது. அதே சமயத்தில் கொரிந்து சபையில் ஒழுக்கம் கெட்டபோது பவுல் நடவடிக்கை எடுத்ததைப்போல் சபை மூப்பர்கள் நடவடிக்கை எடுக்கும் அளவுக்கு பெரிய பிரச்சினையும் அல்ல. கொரிந்து சபையிலிருந்து நீக்கப்பட்டவன் பெரும் பாவம் செய்தவன். ஆனால், இந்த “ஒழுங்கில்லாதவர்கள்” அவ்வளவு பெரிய பாவம் செய்யாதவர்கள்.
கிறிஸ்தவத்திலிருந்து பெருமளவு விலகிசென்றதுதான், தெசலோனிக்கேயாவில் இருந்த ‘ஒழுங்கில்லாதவர்கள்’ செய்த குற்றம். வெகு சீக்கிரத்தில் கிறிஸ்துவின் வருகை இருக்கும் என்று அவர்கள் நினைத்திருப்பார்கள். அல்லது சோம்பேறிகளாக இருந்திருப்பார்கள். அதனால் வேலைவெட்டி செய்யாமல் திரிந்துகொண்டிருந்தார்கள். அதோடு ‘பிறர் வேலையில் தலையிட்டு’ நிறைய குழப்பத்தை உண்டாக்கிக் கொண்டிருந்தார்கள். முதல் கடிதத்தில் பவுல் கொடுத்த அறிவுரையையும், கடவுளுடைய வார்த்தையில் உள்ள வேறுசில அறிவுரைகளையும் அநேகமாக சபை மூப்பர்கள் அவர்களுக்கு அடிக்கடி எடுத்துச்சொல்லியிருப்பார்கள். (நீதிமொழிகள் 6:6-11; 10:4, 5; 12:11, 24; 24:30-34) அறிவுரையை கொடுத்த பிறகும் அவர்கள் திருந்தவில்லை. அவர்களுடைய நடத்தையால் சபைக்குத்தான் கெட்ட பெயர். அதோடு சபையில் உள்ள மற்றவர்களையும் பாதிக்கும். அதனால்தான், கிறிஸ்தவ மூப்பராக இருந்த பவுல், ஒழுங்கில்லாத நபர்களின் பெயர்களை வெளியிடாமல், அவர்களுடைய ஒழுங்கற்ற போக்கையும் தவறான நடத்தையையும் எல்லாருக்கும் சுட்டிக்காட்டினார்.
இப்படி ஒழுங்கில்லாமல் திரியும் நபர்களை, தனிப்பட்ட கிறிஸ்தவர்கள் ‘குறித்துக்கொள்வதில்’ தவறு ஏதும் கிடையாது என்பதை சபைக்கும் பவுல் எடுத்துரைத்தார். அப்படியென்றால், சபை எச்சரித்திருக்கும் நடத்தை அல்லது போக்கு யாரிடமாவது இருந்தால், அப்படிப்பட்டவர்கள் மீது தனிப்பட்டவர்களும் ஒருகண்வைத்திருக்க வேண்டும் என்பது தெரிகிறது. ‘ஒழுங்கற்று நடக்கிற எந்தச் சகோதரனையும் நீங்கள் விட்டு விலகவேண்டும்’ என்று சபையாருக்கு பவுல் அறிவுரை வழங்கினார். இதன் அர்த்தம் ஒரேயடியாக அவரை தவிர்க்க வேண்டும் என்பது அல்ல. ஏனென்றால், ‘அவனைச் சத்துருவாக எண்ணாமல், சகோதரனாக எண்ணி, அவனுக்குப் புத்திசொல்லுங்கள்’ என்றும் பவுல் சொன்னார். ஆகவே, கிறிஸ்தவ கூட்டங்களில், ஒருவேளை கிறிஸ்தவ ஊழியத்தில் அவரை தவிர்க்க மாட்டார்கள். அந்தச் சகோதரன், புத்திமதியை கேட்டு, தவறான வழியை விட்டு வருவான் என்ற நம்பிக்கையோடு இருக்கிறார்கள்.
அப்படியென்றால், எந்த அர்த்தத்தில் அவர்கள் அவரை ‘விட்டு விலகவேண்டும்’? விருந்து, தோழமைக் கூட்டங்களுக்கு அவரை அழைக்கக் கூடாது. (கலாத்தியர் 2:12-ஐ ஒப்பிடுக.) கட்டுப்பாடோடு நடக்கும் ஆட்களுக்கு அவருடைய ஒழுங்கற்ற போக்கு பிடிக்காததால், அவரை தவிர்க்கிறார்கள் என்பதை அவர் உணர்வார். தன்னை இப்படி ஒதுக்குகிறார்களே என்று அவர் வெட்கப்படுவார். அப்படியே அவர் வெட்கப்படவில்லை என்றாலும்கூட அவரைப் போல் இருக்கக்கூடாது என்ற பாடத்தை மற்றவர்கள் கற்றுக்கொள்வார்கள். அதேசமயத்தில், தனிப்பட்ட கிறிஸ்தவர்கள், நல்ல விஷயங்களில் கவனம் செலுத்தவேண்டும். அவர்களுக்கு பவுல் தந்த அறிவுரை: “சகோதரரே, நீங்கள் நன்மைசெய்வதிலே சோர்ந்துபோகாமலிருங்கள்.”—2 தெசலோனிக்கேயர் 3:13.
பவுல் கொடுத்த அறிவுரையை சாக்காக வைத்து, சின்ன சின்ன தப்புகளை செய்யும் நம் சகோதரர்களை மட்டமாக பார்க்கவோ அல்லது இவர்கள் எப்போதும் இப்படிதான் என முத்திரை குத்தவோ கூடாது. கிறிஸ்தவர்கள் வாழவேண்டிய முறையிலிருந்து அதிகம் விலகி செல்லும் நபர்களுக்கு உதவுவதே நம் குறிக்கோள்.
ஒழுங்கில்லாதவர்களை சமாளிக்க இதைச் செய்யக்கூடாது அதைச் செய்யக்கூடாது என கட்டுப்பாடுகளை மலை போல அடுக்கி பவுல் குழப்பவில்லை. மிகவும் எளிய முறையை சுட்டிக்காட்டியுள்ளார். முதலில், மூப்பர்களே ஒழுங்கில்லாதவருக்கு அறிவுரை வழங்கி, உதவுவார்கள். அவர்கள் அறிவுரை வழங்கியும், அந்த நபர் ஒழுங்கில்லாமல் இருந்தால், அவருடைய போக்கினால் சபை பாதிக்கப்படலாம். அப்போது சபையாரை மூப்பர்கள் எச்சரிப்பார்கள். அத்தகைய ஒழுங்கற்ற போக்கை தவிர்ப்பதற்கான அவசியத்தை வலியுறுத்தும் பேச்சை சபையில் கொடுக்க ஏற்பாடு செய்வார்கள். அந்தப் பேச்சில் அந்த நபரின் பெயரை குறிப்பிடமாட்டார்கள். ஆனால் எச்சரிக்கை தரும் நோக்கில் கொடுக்கப்படும் பேச்சு சபையை பாதுகாக்கும். எப்படியென்றால், பேச்சை கேட்பவர்கள், யார் ஒழுங்கற்று நடக்கிறார்கள் என்பதை அடையாளம் கண்டு, அவரோடு அவ்வளவாக கூடிப்பழகமாட்டார்கள்.
என்றாவது ஒருநாள், ஒழுங்கற்ற நபர், தன் செயலுக்காக வெட்கப்பட்டு, திருந்துவார். அவர் திருந்திவிட்டதை மூப்பர்களும், சபையில் உள்ள மற்றவர்களும் கவனித்ததும், அவரோடு மீண்டும் கூடிமகிழ்வார்கள்.
சுருக்கமாக கூறினால்: யாராவது ஒழுங்கில்லாமல் இருந்தால், சபை மூப்பர்கள் முந்திக்கொண்டு, உதவியும் அறிவுரையும் வழங்குவார்கள். ஆனால், அவர் தன் தவறை உணராமல், தொடர்ந்து அவருடைய போக்கிலேயே சென்றுகொண்டிருந்தால், அவருடைய போக்கு சபையை தொடர்ந்து பாதிக்கும். அப்போது அவிசுவாசியை காதலிப்பது, அல்லது இதுபோன்ற வேறு ஏதாவது ஒழுங்கற்ற செயலைப் பற்றி பைபிள் என்ன சொல்கிறது என்பதை தெளிவாக எடுத்துரைக்கும் பேச்சை சபையை எச்சரிக்கும் நோக்கில் மூப்பர்கள் கொடுப்பார்கள். (1 கொரிந்தியர் 7:39; 2 கொரிந்தியர் 6:14) பேச்சில் குறிப்பிட்டதுபோல் ஒழுங்கற்று நடப்பவர்கள் யார் என்பது சபையில் உள்ள கிறிஸ்தவர்களுக்கு புரிந்துவிடும். பிறகு அத்தகைய நபர்களோடு கூடிப்பழகுவதை குறைத்துக்கொள்வதைப் பற்றி தனிப்பட்ட தீர்மானம் எடுப்பார்கள். அப்போதும் அந்த ஒழுங்கில்லாதவர்கள் சகோதரர்களே.
[அடிக்குறிப்புகள்]
a ‘ஒழுங்கில்லாதவர்கள்’ என்று மொழிபெயர்க்கப்பட்ட கிரேக்க வார்த்தையை இன்றுகூட, இராணுவ ஒழுங்கமைப்பிற்கு ஒத்துவராத, கட்டுதிட்டங்களுக்கு கட்டுப்படாத வீரர்களையும், பள்ளிக்கு கட்டடிக்கும் மாணவர்களையும் சுட்டிக்காட்ட பயன்படுத்துகிறார்கள்.
[பக்கம் 31-ன் படம்]
ஒழுங்கில்லாதவர்களை கிறிஸ்தவ மூப்பர்கள் கண்டிக்கலாம். ஆனாலும் அவர்கள் நம் உடன் விசுவாசிகளே