‘உண்மையான வாழ்வை’ அனுபவியுங்கள்
நித்தியத்தைப் பற்றிய உணர்வை யெகோவா தேவன் மனிதனுக்கு கொடுத்திருக்கிறார். (பிரசங்கி 3:11, தி.மொ.) அதனால்தான் மரணத்தை முகமுகமாய் சந்திக்கையில் மனிதன் வெலவெலத்துப் போகிறான். ஆனால் அதேசமயம் வாழவேண்டும் என்ற தீராத ஆசையும் அவனுக்குள் ஊற்றெடுக்கிறது.
கடவுளுடைய ஏவப்பட்ட வார்த்தையாகிய பரிசுத்த பைபிள் நமக்கு அதிக நம்பிக்கையளிக்கிறது. (2 தீமோத்தேயு 3:16) நித்தியம் என்பதைப் புரிந்துகொள்ளும் திறமையோடு மனிதனைப் படைத்துவிட்டு பின்னர் கொஞ்சம் காலத்திற்கே வாழும்படி கடவுள் தண்டனையளிப்பாரா? அன்பே உருவான யெகோவா அவ்வாறு செய்வாரா? நம்முடைய நிலையைப் பற்றி சதா துக்கித்துக் கொண்டிருக்கும்படி படைப்பது கடவுளுடைய குணத்திற்கு முற்றிலும் விரோதமானது. “பிடிபட்டழிக்கப்படுவதற்கு உண்டான புத்தியற்ற மிருகஜீவன்களைப்போல” நாம் படைக்கப்படவில்லை.—2 பேதுரு 2:12.
யெகோவா தேவன், ஆதாமையும் ஏவாளையும் நித்தியம் என்ற இயல்பான உணர்வோடு படைத்தது “மிகவும் நன்றாயிருந்தது” என்று கண்டார்; என்றென்றும் வாழும் திறமையோடு அவர்களைப் படைத்தார். (ஆதியாகமம் 1:31) ஆனால் அந்த முதல் தம்பதியினர் தங்கள் சுயாதீனத்தைத் தவறாக உபயோகித்து, தங்கள் சிருஷ்டிகர் வெளிப்படையாக தடைசெய்திருந்த ஒரு காரியத்தைச் செய்தனர், அதனால் தங்களுடைய பரிபூரணத்தை இழந்தனர். அதோடு, தங்கள் சந்ததியினருக்கு அபூரணத்தையும் மரணத்தையும் பரிசாக கொடுத்துவிட்டு இறந்தனர்.—ஆதியாகமம் 2:17; 3:1-24; ரோமர் 5:12.
வாழ்க்கையின் அர்த்தமென்ன, மரணம் என்றால் என்ன ஆகியவற்றைப் பற்றிய எந்தச் சந்தேகத்தையும் பைபிள் விட்டுவைப்பதில்லை. மரணத்தில் “செய்கையும் வித்தையும் அறிவும் ஞானமும் இல்லை” என்றும் “மரித்தவர்கள் ஒன்றும் அறியார்கள்” என்றும் அது தெளிவாக கூறுகிறது. (பிரசங்கி 9:5, 10) வேறு வார்த்தைகளில் சொல்லப்போனால் மரித்தவர்கள் முற்றிலும் மரித்தவர்களே. அழியாத ஆத்துமா என்ற கோட்பாடு பைபிளில் இல்லை. ஆகவே மரித்தவர்களின் நிலைமை பற்றி விடுவிக்க வேண்டிய வினோதமான எந்தப் புதிரும் இல்லை.—ஆதியாகமம் 3:19; சங்கீதம் 146:4; பிரசங்கி 3:19, 20; எசேக்கியேல் 18:4. a
கடவுளுக்கு ஒரு நோக்கமிருந்தது. அவர் பூமியை “வெறுமையாயிருக்க” படைக்கவில்லை, மாறாக பரிபூரண மனிதர்கள் பூங்காவனம் போன்ற நிலைமைகளில் வாழவேண்டும் என்றே அதைக் “குடியிருப்புக்காக” படைத்தார். இன்றுவரை கடவுள் தம்முடைய நோக்கத்தை மாற்றிக்கொள்ளவில்லை. (ஏசாயா 45:18; மல்கியா 3:6) அதை நிறைவேற்றுவதற்காக தம் குமாரனைப் பூமிக்கு அனுப்பினார். இயேசு கிறிஸ்து மரணம் வரை உண்மையுள்ளவராய் நிரூபித்ததனால் மனிதவர்க்கத்தை பாவத்திலிருந்தும் மரணத்திலிருந்தும் மீட்கும் கிரய பலியைச் செலுத்தினார். அதனால்தான் இயேசு இவ்வாறு கூறினார்: “தேவன் தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்.”—யோவான் 3:16.
“புதிய வானத்தையும் புதிய பூமியையும்” சிருஷ்டிக்கப்போவதாக கடவுள் வெகு காலத்திற்கு முன்பே வாக்கு கொடுத்திருந்தார். (ஏசாயா 65:17; 2 பேதுரு 3:13) பரலோகத்தில் வாழ்வதற்காக உண்மையுள்ள கிறிஸ்தவர்களின் ஒரு சிறிய தொகுதியினரை அவர் தெரிவு செய்வதை இது உட்படுத்துகிறது. அவர்கள் இயேசு கிறிஸ்துவோடு சேர்ந்து ஓர் அரசாங்கத்தின் மையக்கரு ஆகிறார்கள். இதைத்தான் பைபிள், “பரலோகராஜ்யம்” அல்லது “தேவனுடைய ராஜ்யம்” என்று கூறுகிறது; அது “பூலோகத்திலிருக்கிறவைக”ளை ஆட்சிசெய்யும். (மத்தேயு 4:17; 12:28; எபேசியர் 1:9; வெளிப்படுத்துதல் 5:9, 10; 14:1, 3) கடவுள் முதலில் நம் பூமியிலுள்ள எல்லா துன்மார்க்கத்தையும் துடைத்தழித்து, சுத்தப்படுத்துவார். பிறகு நீதியுள்ள ஒரு புதிய மனித சமுதாயத்தை அல்லது “புதிய பூமி”யை ஸ்தாபிப்பார். இந்தப் பொல்லாத காரிய ஒழுங்குமுறை வெகு சீக்கிரத்தில் அழிக்கப்படும்போது கடவுளால் காப்பாற்றப்படும் மக்கள் அதில் அடங்குவர். (மத்தேயு 24:3, 7-14, 21; வெளிப்படுத்துதல் 7:9, 13, 14) அதோடு கடவுள் வாக்கு கொடுத்திருக்கும் உயிர்த்தெழுதல் மூலம் மறுபடியும் உயிர்பெறும் மற்ற அனைவரும் பிறகு அவர்களோடு சேர்ந்துகொள்வார்கள்.—யோவான் 5:28, 29; அப்போஸ்தலர் 24:15.
வரப்போகும் ‘உண்மையான வாழ்க்கை’
வரவிருக்கும் பூங்காவனமான பூமியில் வாழ்க்கை மிகவும் கிளர்ச்சியூட்டுவதாய் இருக்கும். அந்த விவரிப்பை உறுதிசெய்பவராய் “இதோ, நான் சகலத்தையும் புதிதாக்குகிறேன்” என்று கடவுள் தாமே கூறுகிறார். (வெளிப்படுத்துதல் 21:5) கடவுள் மனிதவர்க்கத்திற்காக செய்யப்போகும் பிரமிப்பூட்டும் எல்லா காரியங்களையும் மனிதனால் முழுமையாக புரிந்துகொள்ளவே முடியாது. ஏதேனைப் போன்ற ஓர் உலகளாவிய பூங்காவனத்தைக் கடவுள் சிருஷ்டிப்பார். (லூக்கா 23:43) ஏதேனில் இருந்ததைப் போலவே கண்ணைக் கவரும் அழகிய வண்ணங்களும் ஒலிகளும் சுவைகளும் அங்கே நிரம்பி வழியும். பஞ்சமும் உணவு பற்றாக்குறையும் பறந்துபோயிருக்கும். ஏனெனில் அந்தச் சமயத்தைப் பற்றி, “முந்தினவைகள் ஒழிந்துபோயின” என்று பைபிள் கூறுகிறது. (வெளிப்படுத்துதல் 21:4; சங்கீதம் 72:16) வியாதி நிரந்தரமாக நீக்கப்பட்டிருக்குமாதலால், “வியாதிப்பட்டிருக்கிறேன்” என்று ஒருவரும் சொல்லமாட்டார்கள். (ஏசாயா 33:24) துன்பத்திற்கு காரணமான அனைத்தும் நீக்கப்பட்டிருக்கும். மனிதனின் நெடுங்கால சத்துருவான மரணமும்கூட நீக்கப்படும். (1 கொரிந்தியர் 15:26) கிறிஸ்துவின் ஆட்சிக்குட்பட்ட புதிய மனித சமுதாயமாகிய “புதிய பூமி”யைப் பற்றிய வியப்பூட்டும் தரிசனம் ஒன்றில் அப்போஸ்தலன் யோவான், “அவர்களுடைய கண்ணீர் யாவையும் தேவன் துடைப்பார்; இனி மரணமுமில்லை, துக்கமுமில்லை, அலறுதலுமில்லை, வருத்தமுமில்லை” என்று சொன்ன ஒரு சத்தத்தைக் கேட்டார். கடவுளுடைய இந்த வாக்குறுதியின் நிறைவேற்றம் கொண்டுவரும் ஆறுதலையும் சந்தோஷத்தையும்விட மேலாக வேறு என்ன இருக்கமுடியும்?
எதிர்கால வாழ்க்கை பற்றி விவரிக்கையில் பைபிள், மனிதனின் தார்மீக மற்றும் ஆன்மீக நாட்டங்களை திருப்தி செய்யும் சூழ்நிலைகளுக்கு அதிக முக்கியத்துவம் தருகிறது. எந்த நேர்மையான குறிக்கோள்களை அடைய மனிதவர்க்கம் இவ்வளவு காலம் வீணாக போராடியிருக்கிறதோ அவையெல்லாம் முழுமையாக கிடைக்கும். (மத்தேயு 6:10) இவற்றுள் நீதிக்கான வேட்கை ஒன்று. பலவீனர்கள் மீது ஆதிக்கம் செலுத்திய கொடூரமானவர்கள் மனிதவர்க்கத்தை ஒடுக்கிவந்ததால் அது எட்டாக் கனியாகவே இருந்திருக்கிறது. (பிரசங்கி 8:9) கிறிஸ்துவின் ஆட்சியில் இருக்கும் நிலைமைகள் பற்றி சங்கீதக்காரன் தீர்க்கதரிசனமாக இவ்வாறு கூறினார்: “அவருடைய நாட்களில் நீதி செழித்தோங்கும், சமாதானம் மிகுந்திருக்கும்.”—சங்கீதம் 72:7, த நியூ ஜெரூசலம் பைபிள்.
சமத்துவம் என்ற மற்றொரு குறிக்கோளுக்காக அநேகர் பெரும் தியாகங்கள் செய்திருக்கின்றனர். ‘மறுசிருஷ்டிப்பின்’ காலத்திலோ எல்லாவித பாகுபாட்டையும் கடவுள் நீக்கிவிடுவார். (மத்தேயு 19:28, NW) எல்லாரும் சரிசமமாக மதிக்கப்படுவார்கள். இந்தச் சமத்துவம், கொடூரமான ஓர் அரசாங்கத்தால் கட்டாயப்படுத்தி திணிக்கப்படாது. மாறாக, பாகுபாட்டிற்கான அடிப்படை காரணங்கள் நீக்கப்பட்டிருக்கும். மற்றவர்கள் மேல் ஆதிக்கம் செலுத்த தூண்டும் பெருமை அல்லது ஏராளமான சொத்து சேர்க்க தூண்டும் பேராசை போன்றவையும் நீக்கப்படும். “வீடுகளைக் கட்டி, அவைகளில் குடியிருப்பார்கள், திராட்சத்தோட்டங்களை நாட்டி, அவைகளின் கனியைப் புசிப்பார்கள். அவர்கள் கட்டுகிறதும், வேறொருவர் குடியிருக்கிறதும், அவர்கள் நாட்டுகிறதும், வேறொருவர் கனிபுசிக்கிறதுமாயிருப்பதில்லை” என ஏசாயா தீர்க்கதரிசனம் உரைத்திருக்கிறாரே!—ஏசாயா 65:21, 22.
தனிப்பட்ட சண்டைகளிலும் பெரும் யுத்தங்களிலும் சிந்தப்பட்ட இரத்தத்தால் எவ்வளவு துயரம் ஏற்பட்டிருக்கிறது! இந்தத் துயரம், ஆபேல் கொலைசெய்யப்பட்டதிலிருந்து இன்று நடக்கும் யுத்தங்கள் வரை தொடர்கதையாய் உள்ளது. சமாதானம் ஸ்தாபிக்கப்படுவதற்காக மனிதன் எண்ணற்ற காலங்களாக ஆவலோடு ஆனால் வீணாக காத்திருக்கிறான்! திரும்ப நிலைநாட்டப்படும் பூங்காவனம் போன்ற பூமியில் மனிதர்கள் அனைவரும் சமாதானமும் சாந்தமும் உள்ளவர்களாய் இருப்பார்கள். அவர்கள் “மிகுந்த சமாதானத்தினால் மனமகிழ்ச்சியாயிருப்பார்கள்.”—சங்கீதம் 37:11.
‘சமுத்திரம் ஜலத்தினால் நிறைந்திருக்கிறதுபோல், பூமி யெகோவாவை அறிகிற அறிவினால் நிறைந்திருக்கும்’ என ஏசாயா 11:9 சொல்கிறது. சுதந்தரிக்கப்பட்ட பாவம் மற்றும் பிற காரணங்கள் நிமித்தமாக இவ்வார்த்தைகள் எதையெல்லாம் உட்படுத்துகின்றன என்பதை நாம் முழுமையாக புரிந்துகொள்வது கடினமாக இருக்கலாம். கடவுளைப் பற்றிய பரிபூரண அறிவு நம்மை எவ்வாறு அவரோடு இணைக்கும் என்பதையும் எவ்வாறு முழுநிறைவான சந்தோஷத்தில் விளைவடையும் என்பதையும் பற்றி நாம் இன்னும் அதிகம் கற்றுக்கொள்ள வேண்டியிருக்கலாம். வல்லமை, ஞானம், நீதி, அன்பு ஆகிய குணங்களில் யெகோவா தேவன் ஈடிணையற்றவர் என்று வேதவாக்கியம் சொல்லுகிறது. ஆகவே ‘புதிய பூமியில்’ குடியிருக்கும் எல்லாருடைய ஜெபங்களையும் அவர் கட்டாயம் கேட்பார் என்பதில் நாம் நிச்சயமாக இருக்கலாம்.
‘உண்மையான வாழ்க்கை’ நிஜமானது —அதைப் பற்றிக்கொள்ளுங்கள்!
மேம்பட்ட ஓர் உலகில் நித்திய ஜீவன் என்பது அநேகருக்கு வெறும் கனவே அல்லது கானல்நீரே. ஆனாலும் பைபிளின் வாக்குறுதியில் உறுதியான விசுவாசம் வைப்போருக்கு இந்த நம்பிக்கை நிச்சயமானதே. அது அவர்கள் வாழ்க்கையில் ஒரு நங்கூரம் போன்றது. (எபிரெயர் 6:19) நங்கூரம் ஒரு கப்பலை உறுதியாக பிடித்து, அது தடுமாறுவதைத் தவிர்ப்பதைப் போலவே நித்திய ஜீவ நம்பிக்கை மக்களை நிலையாகவும் உறுதியாகவும் ஆக்குகிறது. அதோடு, வாழ்க்கையில் எதிர்ப்படும் கடினமான சவால்களை சமாளிக்கவும் அவற்றை மேற்கொள்ளவும்கூட உதவுகிறது.
கடவுள் தம்முடைய வாக்குறுதிகளை நிறைவேற்றுவார் என நாம் உறுதியாக நம்பலாம். அவர் ஓர் ஆணை அல்லது மாற்றமுடியாத பொறுப்புறுதியின் மூலம் அதற்கான ஒரு உத்திரவாதத்தையும் கொடுத்திருக்கிறார். அதைப் பற்றி அப்போஸ்தலன் பவுல் இவ்வாறு எழுதினார்: “தேவ[ன்] வாக்குத்தத்தம் பண்ணப்பட்டவைகளைச் சுதந்தரித்துக் கொள்ளுகிறவர்களுக்குத் தமது ஆலோசனையின் மாறாத நிச்சயத்தைப் பரிபூரணமாய்க் காண்பிக்கும்படி சித்தமுள்ளவராய், ஓர் ஆணையினாலே அதை ஸ்திரப்படுத்தினார். நமக்கு முன் வைக்கப்பட்ட நம்பிக்கையைப் பற்றிக்கொள்ளும்படி . . . இரண்டு மாறாத விசேஷங்களினால் நிறைந்த ஆறுதலுண்டாகும்படிக்கு எவ்வளவேனும் பொய்யுரையாத தேவன் அப்படிச் செய்தார்.” (எபிரெயர் 6:17, 18) கடவுளுடைய வாக்குறுதியும் ஆணையுமே அவர் தள்ளுபடி செய்யமுடியாத ‘இரண்டு மாறாத விசேஷங்களாகும்.’ அவற்றின் மீதே நம் எதிர்பார்ப்புகள் அனைத்தும் சார்ந்திருக்கின்றன.
கடவுளுடைய வாக்குறுதிகளில் விசுவாசம் வைப்பது நமக்கு மிகுந்த ஆறுதலையும் ஆவிக்குரிய பலத்தையும் அளிக்கிறது. இஸ்ரவேல் மக்களின் ஒரு தலைவராயிருந்த யோசுவாவுக்கு அப்படிப்பட்ட விசுவாசம்தான் இருந்தது. யோசுவா இஸ்ரவேலரிடம் பிரியாவிடை பேச்சு கொடுத்தபோது அவர் வயது முதிர்ந்தவராயும் சீக்கிரத்தில் மரிக்கப்போகிறார் என்பதை அறிந்தவராயும் இருந்தார். இருந்தாலும், கடவுளுடைய வாக்குறுதிகளில் அவருக்கிருந்த அசைக்க முடியாத நம்பிக்கையின் காரணமாக பலத்தையும் தகர்க்கமுடியாத பற்றுறுதியையும் வெளிக்காட்டினார். “பூலோகத்தார் எல்லாரும் போகிறவழியே” தானும் போகிறார் என்று சொன்னபோது மனிதவர்க்கம் முழுவதையும் மரணத்திற்கு வழிநடத்தும் பாதையைக் குறிப்பிட்டார். பிறகு பின்வருமாறு கூறினார்: “உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்காகச் சொன்ன நல்வார்த்தைகளிலெல்லாம் ஒரு வார்த்தையும் தவறிப்போகவில்லை என்பதை உங்கள் முழு இருதயத்தாலும் உங்கள் முழு ஆத்துமாவாலும் அறிந்திருக்கிறீர்கள்; அவைகளெல்லாம் உங்களுக்கு நிறைவேறிற்று; அவைகளில் ஒரு வார்த்தையும் தவறிப்போகவில்லை.” கடவுள் தம்முடைய எல்லா வாக்குறுதிகளையும் எப்பொழுதும் நிறைவேற்றுவார் என்பதை யோசுவா மூன்றுமுறை வலியுறுத்திக் கூறியதை கவனித்தீர்களா?—யோசுவா 23:14.
சீக்கிரத்தில் ஸ்தாபிக்கப்படப்போகும் புதிய உலகம் பற்றிய கடவுளுடைய வாக்குறுதியில் நீங்களும்கூட அதேபோன்ற விசுவாசத்தை வளர்த்துக்கொள்ளலாம். பைபிளை ஊக்கமாக படித்தீர்கள் என்றால், யெகோவா யார் என்பதையும் நீங்கள் அவர்மேல் முழு நம்பிக்கை வைக்க அவர் ஏன் தகுதியுள்ளவர் என்பதையும் புரிந்துகொள்ளலாம். (வெளிப்படுத்துதல் 4:11) உண்மையான கடவுளாகிய யெகோவாவை நெருக்கமாக அறிந்திருந்ததால் ஆபிரகாம், சாராள், ஈசாக்கு, யாக்கோபு, மற்ற பூர்வகால விசுவாசிகள் ஆகியோர் தகர்க்க முடியாத விசுவாசத்தை வளர்த்திருந்தார்கள். அவர்கள் உயிரோடிருக்கும்போது “வாக்குத்தத்தம் பண்ணப்பட்டவைகளை அடை”யவில்லை என்றாலும் விசுவாசத்தில் உறுதியாக நிலைத்திருந்தார்கள். ஆனாலும், “தூரத்திலே அவைகளைக் கண்டு, நம்பி அணைத்துக்கொண்”டார்கள்.—எபிரெயர் 11:13.
பைபிள் தீர்க்கதரிசனத்தை நாம் புரிந்திருப்பதால், ‘சர்வவல்லமையுள்ள தேவனுடைய மகாநாள்’ வேகமாக வருவதை மனக்கண்களால் பார்க்கிறோம். அந்த நாளின்போது இந்தப் பூமியிலிருந்து எல்லா துன்மார்க்கமும் துடைத்தழிக்கப்படும். (வெளிப்படுத்துதல் 16:14, 16) விசுவாசமுள்ள பூர்வகால மனிதர்களைப் போல எதிர்கால நிகழ்ச்சிகளுக்காக நாம் நம்பிக்கையோடு காத்திருக்க வேண்டும். அதேசமயம், விசுவாசத்தாலும் கடவுளுக்கும் ‘உண்மையான வாழ்க்கைக்குமான’ அன்பாலும் நாம் தூண்டப்பட வேண்டும். புதிய உலகம் மிக அருகில் இருப்பது, யெகோவாவில் விசுவாசம் வைப்பவர்களுக்கும் அவரில் அன்புகூருகிறவர்களுக்கும் அதிக ஊக்கமளிக்கிறது. அப்படிப்பட்ட விசுவாசத்தையும் அன்பையும் நாம் வளர்த்தால்தான் கடவுளுடைய மகா நாளில் அவருடைய பாதுகாப்பையும் ஆதரவையும் பெறமுடியும். அவருடைய நாள் வெகு சமீபத்தில் உள்ளது.—செப்பனியா 2:3; 2 தெசலோனிக்கேயர் 1:3; எபிரெயர் 10:37-39.
ஆகவே, நீங்கள் வாழ்க்கையை நேசிக்கிறீர்களா? ‘உண்மையான வாழ்க்கையை’ இன்னும் அதிகமாய் நேசிக்கிறீர்களா? கடவுளுடைய அங்கீகரிக்கப்பட்ட ஊழியராக, சந்தோஷமான எதிர்கால நம்பிக்கையோடு அதாவது நித்திய ஜீவ எதிர்பார்ப்போடு வாழ விரும்புகிறீர்களா? அப்படி விரும்புகிறீர்களென்றால், ‘நிலையற்ற ஐசுவரியத்தின்மேல் நம்பிக்கை வைக்காமல் தேவன்மேல் நம்பிக்கை வைக்கும்படி’ எழுதிய அப்போஸ்தலன் பவுலின் அறிவுரைக்கு செவிகொடுங்கள். அதோடு, கடவுளை மகிமைப்படுத்தும் “நற்கிரியைகளில் ஐசுவரியவான்களாக” இருந்து அதன் மூலம் “உண்மையில் ஜீவனாயிருப்பதைப் பற்றிக்கொள்ளும்படி” பவுல் தொடர்ந்து கூறினார்.—1 தீமோத்தேயு 6:17-19, தி.மொ.
யெகோவாவின் சாட்சிகளோடு பைபிளைப் படிப்பதன் மூலம் நீங்கள் “நித்தியஜீவன்” பற்றிய அறிவைப் பெறலாம். (யோவான் 17:3) தகப்பனைப்போன்ற இந்த அன்பான அழைப்பை பைபிள் எல்லோர் முன்பும் வைக்கிறது: “என் மகனே, என் போதகத்தை மறவாதே; உன் இருதயம் என் கட்டளைகளைக் காக்கக்கடவது. அவைகள் உனக்கு நீடித்த நாட்களையும், தீர்க்காயுசையும், சமாதானத்தையும் பெருகப்பண்ணும்.”—நீதிமொழிகள் 3:1, 2.
[அடிக்குறிப்புகள்]
a இந்தப் பொருள் பற்றிய கூடுதலான ஆராய்ச்சிக்கு உவாட்ச் டவர் பைபிள் அண்டு டிராக்ட் சொஸைட்டியால் பிரசுரிக்கப்பட்ட நாம் மரிக்கையில் நமக்கு என்ன நேரிடுகிறது? என்ற ஆங்கில பிரசுரத்தைக் காண்க.