உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • w99 8/15 பக். 8-9
  • கோபத்தால் இடறலடையாதீர்கள்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • கோபத்தால் இடறலடையாதீர்கள்
  • காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1999
  • இதே தகவல்
  • கோபத்தைச் சமாளித்தல் உங்களுடையதும் மற்றவர்களுடையதும்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1988
  • கோபங்கொள்வது எப்பொழுதுமே தவறா?
    விழித்தெழு!—1994
  • கோபம்—அது என்ன?
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1988
  • கோபத்தின் கால்தடங்கள்
    விழித்தெழு!—2012
மேலும் பார்க்க
காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1999
w99 8/15 பக். 8-9

கோபத்தால் இடறலடையாதீர்கள்

“பொறுமையாய் இரு!” “அவசரப்படாதே!” “அமைதியாய் இரு!” இந்த வார்த்தைகளைக் நீங்கள் கேட்டதுண்டா? உங்களுக்குள் எரிமலை குமுறும்போது அதை அடக்க நீங்களேகூட இவ்வாறு சொல்லியிருக்கலாம். சிலர், கோபம் வெடித்துவிடுவதைத் தவிர்க்க காலாற நடந்து செல்லலாம். கோபத்தைக் கட்டுப்படுத்தி, மற்றவர்களோடு உள்ள உறவைக் காத்துக்கொள்ள இவை எளிய வழிகளாகும்.

ஆனால் சமீப காலங்களில், கோபத்தைக் கட்டுப்படுத்த அல்லது அடக்க வேண்டுமா வேண்டாமா என்பதைப் பற்றி வல்லுநர்கள் முரண்படும் ஆலோசனைகள் கொடுப்பதால் அநேகர் குழம்பிப்போயிருக்கிறார்கள். உதாரணமாக, “அது உங்களுக்கு திருப்தி தரும்” என்றால் கோபத்தைக் கொட்டிவிடுங்கள் என்ற கருத்தைச் சில உளவியல் வல்லுநர்கள் முன்வைக்கிறார்கள். மற்றவர்களோ “புகைப்பிடிப்பது, அதிக இரத்த அழுத்தம், அதிக கொலஸ்டிரால் போன்ற ஆபத்தை விளைவிக்கும் காரணிகளைவிட” கோபத்தை அடிக்கடி வெளிக்காட்டினால் “அற்பாயுசில் மரிப்பதற்கு அதிக சாத்தியமிருக்கிறது” என எச்சரிக்கிறார்கள். “கோபத்தை நெகிழ்ந்து, உக்கிரத்தை விட்டுவிடு; பொல்லாப்புச் செய்ய ஏதுவான எரிச்சல் உனக்கு வேண்டாம்” என கடவுளுடைய வார்த்தை தெளிவாக சொல்கிறது. (சங்கீதம் 37:8) பைபிள், இவ்வளவு திட்டவட்டமான ஆலோசனைக் கொடுப்பதற்கு காரணம் என்ன?

கட்டுப்பாடற்ற உணர்ச்சிகள் தறிகெட்ட செயல்களுக்கு வழிநடத்தும். மனித சரித்திரத்தின் ஆரம்பத்திலேயே இது வெளிப்படவில்லையா? “காயீனுக்கு மிகவும் எரிச்சல் உண்டாகி, அவன் முகநாடி வேறுபட்டது” என வாசிக்கிறோம். அதன் விளைவு? கோபம் அவனை ஆக்கிரமித்து ஆட்டிப்படைத்தது. மனந்திரும்பி நன்மை செய்யும்படி யெகோவா கொடுத்த ஆலோசனையை ஏற்றுக்கொள்ளாத வண்ணம் அவன் இருதயம் கடினப்பட்டுப்போனது. காயீனுடைய கட்டுப்பாடற்ற கோபம், பயங்கரமான பாவத்திற்கு அவனை வழிநடத்தியது. தன் சொந்த சகோதரனை கொலை செய்தானே!​—ஆதியாகமம் 4:3-8.

இஸ்ரவேலின் முதல் அரசனாகிய சவுலையும்கூட கோபம் அதேவிதமாக ஆட்டிப்படைத்தது. தாவீது பெற்ற புகழாரங்களைக் கேட்டபோது அவ்வாறு நிகழ்ந்தது. “அந்த ஸ்திரீகள் ஆடிப்பாடுகையில்: சவுல் கொன்றது ஆயிரம், தாவீது கொன்றது பதினாயிரம் என்று முறைமுறையாகப் பாடினார்கள். அந்த வார்த்தை சவுலுக்கு விசனமாயிருந்தது; அவன் மிகுந்த எரிச்சலடைந்”தான். கோபம் சவுலை அவ்வளவு முழுமையாக ஆட்டிப்படைத்ததால் தாவீதைக் கொல்ல பல முறை முயற்சித்தார். நட்புறவைக் காத்துக்கொள்ள தாவீது அநேக தடவை முயற்சித்தும் சமாதானத்தையும் சமரசத்தையும் பாதுகாக்க சவுல் விரும்பவில்லை. கடைசியில் யெகோவாவின் தயவை அவர் முழுமையாக இழந்தார்.​—1 சாமுவேல் 18:6-11; 19:9, 10; 24:1-21; நீதிமொழிகள் 6:34, 35.

கட்டுப்பாடற்ற கோபத்திற்கு ஒருவர் இடங்கொடுத்தால், சம்பந்தப்பட்ட அனைவருக்குமே துக்கம் தரும் ஏதாவது ஒன்றை அவனோ அவளோ சொல்லிவிடுவார், செய்தும்விடுவார் என்பதில் சந்தேகமில்லை. (நீதிமொழிகள் 29:22) காயீனும் சவுலும் கோபமடைய அடிப்படைக் காரணம் பொறாமையே. ஆனால் கோபத்தால் வெகுண்டெழ அநேக காரணங்கள் உண்டு. நியாயமற்ற விமர்சனம், அவதூறு, தப்பெண்ணம், தவறாக நடத்தப்படுவது போன்றவை கோபத்தைப் பற்றவைக்கும் தீப்பொறியாக அமையலாம்.

காயீன் மற்றும் சவுலின் உதாரணங்கள், இருவருக்கும் பொதுவாயிருந்த ஒரு குறைபாட்டை சுட்டிக்காட்டுகின்றன. காயீனுடைய பலி, விசுவாசத்தின் தூண்டுதல் இல்லாமல் செலுத்தப்பட்டிருக்க வேண்டும். (எபிரெயர் 11:4) சவுல், யெகோவாவின் தெளிவான கட்டளைக்கு கீழ்ப்படிய தவறியதும் பின்னர் தன்னை நியாயப்படுத்த முயன்றதும், அவர் கடவுளுடைய தயவையும் அவருடைய ஆவியையும் இழந்துபோவதில் விளைவடைந்தது. அந்த இருவருமே யெகோவாவோடு உள்ள தங்கள் உறவைக் கெடுத்துக் கொண்டனர் என்பதே உண்மை.

இவர்களின் மனநிலையை தாவீதின் மனநிலையோடு ஒப்பிட்டுப் பாருங்கள். சவுல் அவரை நடத்திய விதத்திற்காக தாவீது கோபப்பட நல்ல காரணம் இருந்தும் தன் ஆவியை அடக்கினார். ஏன்? “கர்த்தர் அபிஷேகம்பண்ணின என் ஆண்டவன்மேல் என் கையைப் போடும்படியான இப்படிப்பட்ட காரியத்தை நான் செய்யாதபடிக்கு, கர்த்தர் என்னைக் காப்பாராக” என்று அவரே பதிலளிக்கிறார். தாவீது, யெகோவாவோடு தனக்குள்ள உறவை மனதில் தெளிவாக வைத்திருந்தார்; அது, சவுலோடு அவர் நடந்துகொண்ட விதத்தைப் பெரிதும் பாதித்தது. அதனால் அவர் மனத்தாழ்மையோடு காரியங்களை யெகோவா கையாளும்படி விட்டுவிட்டார்.​—1 சாமுவேல் 24:6, 15.

கட்டுப்பாடற்ற கோபத்தின் விளைவுகள் மிக மோசமானவை என்பது நிதர்சனம். “நீங்கள் கோபங்கொண்டாலும் பாவஞ்செய்யாதிருங்கள்” என அப்போஸ்தலன் பவுல் எச்சரித்தார். (எபேசியர் 4:26) நியாயமான கோபம் கொள்வது சரியே. இருந்தாலும், கோபம் என்பது நம்மை இடறலடையச் செய்யும் ஆபத்து எப்போதும் உள்ளது. ஆகவே கோபத்தைக் கட்டுப்படுத்த வேண்டிய பெரும் சவால் நமக்கு முன் நிற்கிறது. அதை எவ்வாறு செய்யலாம்?

மிகச்சிறந்த வழிகளில் ஒன்று, யெகோவாவோடு பலமான உறவை வளர்த்துக்கொள்வதே. உங்கள் மனதையும் இதயத்தையும் அவரிடம் ஊற்றிவிடுமாறு கடவுள் உங்களை அழைக்கிறார். உங்கள் கவலைகளையும் தேவைகளையும் அவரிடம் தெரிவியுங்கள்; கோபத்தைக் கட்டுப்படுத்த சாந்தமான இதயம் வேண்டும் என்று கேளுங்கள். (நீதிமொழிகள் 14:30, NW) “கர்த்தருடைய கண்கள் நீதிமான்கள்மேல் நோக்கமாயிருக்கிறது, அவருடைய செவிகள் அவர்கள் வேண்டுதலுக்குக் கவனமாயிருக்கிறது” என்பதைக் குறித்து நிச்சயமாயிருங்கள்.​—1 பேதுரு 3:12.

ஜெபம் உங்களை வடிவமைத்து வழிநடத்தக்கூடும். எந்த விதத்தில்? மற்றவர்களோடு நீங்கள் தொடர்புகொள்ளும் விதத்தை அது பெருமளவு பாதிக்கலாம். யெகோவா உங்களை எவ்வாறு நடத்தினார் என்பதை நினைவில் வையுங்கள். வேதவசனம் சொல்லுகிறபடி, யெகோவா “நம்முடைய பாவங்களுக்குத்தக்கதாக நமக்குச் செய்ய”வில்லை. (சங்கீதம் 103:10) நீங்கள் ‘சாத்தானாலே மோசம்போகாதபடிக்கு’ மன்னிக்கும் மனப்பான்மை உங்களுக்கு அவசியம். (2 கொரிந்தியர் 2:10, 11) அதுமட்டுமா, பரிசுத்த ஆவியின் வழிநடத்துதலுக்கு உங்கள் இதயத்தைத் திறக்க ஜெபம் உதவுகிறது. அது, வாழ்க்கையில் ஊறிப்போன கெட்டப்பழக்கங்களையும் நீக்கிப்போட உதவுகிறது. கோபத்தின் உடும்பு பிடியிலிருந்து உங்களை விடுவிக்க, ‘எல்லாப் புத்திக்கும் மேலான தேவசமாதானத்தை’ யெகோவா மகிழ்ச்சியுடன் உங்களுக்கு தாராளமாக கொடுப்பார்.​—பிலிப்பியர் 4:7.

ஆனாலும் ஜெபம் மட்டுமே போதாது. நாம் “கர்த்தருடைய சித்தம் இன்னதென்று உணர்ந்துகொள்”வதற்காக வேதவசனங்களைத் தொடர்ந்து ஆராயவும் வேண்டும். (எபேசியர் 5:17; யாக்கோபு 3:17) உங்கள் கோபத்தைக் கட்டுப்படுத்த படாதபாடுபடுகிறீர்கள் என்றால், அதைப் பற்றிய யெகோவாவின் நோக்குநிலையை வளர்த்துக்கொள்ள முயலுங்கள். கோபத்தைக் கட்டுப்படுத்துவதோடு நேரடியாக சம்பந்தப்பட்ட வேதவசனங்களை மறுபார்வை செய்யுங்கள்.

அப்போஸ்தலன் பவுல் இந்த முக்கிய நினைப்பூட்டுதலைக் கொடுக்கிறார்: “ஆகையால் நமக்குக் கிடைக்கும் சமயத்திற்குத்தக்கதாக, யாவருக்கும், விசேஷமாக விசுவாச குடும்பத்தார்களுக்கும், நன்மைசெய்யக்கடவோம்.” (கலாத்தியர் 6:10) உங்கள் சிந்தனைகளும் செயல்களும் மற்றவர்களுக்கு நன்மை செய்வதைப் பற்றியே இருப்பதாக. அப்படிப்பட்ட முழு நிறைவான, நன்மையான செயல்களால் மற்றவர்களைப் பற்றிய நல்ல புரிந்துகொள்ளுதலும் நம்பிக்கையும் வளரும். அதோடு, சட்டென்று கோபப்படுவதற்கு வழிநடத்தும் தப்பெண்ணங்களும் சரிசெய்யப்படும்.

“உம்முடைய வார்த்தையிலே என் காலடிகளை நிலைப்படுத்தி, ஒரு அநியாயமும் என்னை ஆளவொட்டாதேயும். உம்முடைய வேதத்தை நேசிக்கிறவர்களுக்கு மிகுந்த சமாதானமுண்டு; அவர்களுக்கு இடறலில்லை” என்று சங்கீதக்காரன் கூறினார். (சங்கீதம் 119:133, 165) உங்கள் விஷயத்திலும் இது உண்மையாய் நிரூபிக்கக்கூடும்.

[பக்கம் 9-ன் பெட்டி/படம்]

கோபத்தைக் கட்டுப்படுத்த

□ யெகோவாவிடம் ஜெபியுங்கள். —சங்கீதம் 145:18.

□ வேதவாக்கியங்களை தினமும் ஆராயுங்கள். —சங்கீதம் 119:133, 165.

□ பிரயோஜனமான நடவடிக்கைகளில் ஆர்வத்தோடு ஈடுபடுங்கள்.—கலாத்தியர் 6:9, 10.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்