கடவுளுடைய வாக்குறுதிகளில் விசுவாசத்தோடு வாழ்தல்
“நானே கடவுள், வேறொருவரும் இல்லை; நானே கடவுள், எனக்கு ஒப்பானவரில்லை. பின் நடக்கப்போகிறவைகளை முன்னமே அறிவிக்கிறேன், இன்னும் சம்பவியாதிருப்பவற்றை பூர்வத்திலிருந்தே அறிவிக்கிறேன்.”—ஏசாயா 46:9, 10, தி.மொ.
1, 2. பூமியின் விவகாரங்களில் கடவுள் தலையிடுவதைப் பற்றிய வேறுபட்ட சில கருத்துகள் யாவை?
உலக விவகாரங்களில் எந்தளவுக்கு கடவுள் தலையிடுகிறார்? கருத்துக்கள் வேறுபடுகின்றன. கடவுள் தலையிடுவதே இல்லை என்பது ஒரு கருத்து. இக்கருத்தின்படி, கடவுள் எல்லாவற்றையும் இயங்க வைத்துவிட்டு, நமது சார்பாக செயல்பட மனமில்லாமல் அல்லது இயலாமல் இருக்கிறார். இதை இவ்வாறு விளக்கலாம்: ஒரு அப்பா தன் மகனை ஒரு புதிய சைக்கிளில் உட்கார வைத்து, சரிவான பாதையில் சைக்கிளை மெதுவாக தள்ளிவிடுகிறார். அதன் பின்பு தனது வேலையை கவனிக்க போய்விடுகிறார். இப்போது அந்தப் பையன் தானாகவே ஓட்டிச் செல்கிறான். அவன் ஒருவேளை சைக்கிளிலிருந்து விழலாம் அல்லது விழாமலும் இருக்கலாம். எப்படியிருந்தாலும், அந்தப் பையன் இனிமேலும் தகப்பனுடைய கட்டுப்பாட்டில் இல்லை.
2 நம்முடைய வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்தையும் கடவுள் கட்டுப்படுத்துகிறார், எல்லா சந்தர்ப்பத்திலும் நேரடியாக தலையிடுகிறார் என்பது மற்றொரு கருத்து. அப்படியானால், நடக்கும் நல்ல காரியங்களுக்கு மட்டுமல்ல, மனிதவர்க்கத்தை வாட்டும் துன்பங்களுக்கும் துயரங்களுக்கும் கடவுளே காரணகர்த்தா என சிலர் முடிவு செய்துவிடுவார்கள். ஆனால் கடவுளுடைய செயல்களை அறிந்துகொள்வது, நாம் அவரிடமிருந்து எதை எதிர்பார்க்கலாம் என்பதை தெரிந்துகொள்ள நமக்கு உதவும். கடவுளுடைய வாக்குறுதிகள் நிச்சயமாய் நிறைவேறும் என்பதில் நம் விசுவாசத்தையும் உறுதிப்படுத்தும்.—எபிரெயர் 11:1.
3. (அ) யெகோவா நோக்கமுள்ள கடவுள் என்று நமக்கு எவ்வாறு தெரியும்? (ஆ) யெகோவா ஏன் தம்முடைய நோக்கத்தை ‘உருவாக்குபவராக’ அல்லது ‘வடிவமைப்பவராக’ பேசப்படுகிறார்?
3 யெகோவா நோக்கமுள்ள கடவுள், இதுவே மனிதருடைய விவகாரங்களில் தலையிடுவதற்கு முக்கிய காரணம். இது அவருடைய பெயரிலேயே பொதிந்துள்ளது. “யெகோவா” என்பது “ஆகும்படி செய்கிறவர்” என அர்த்தப்படுகிறது. யெகோவா தம்முடைய வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றுகிறவர் என்பதை படிப்படியான செயல்களால் காட்டுகிறார். இதனால், எதிர்கால சம்பவங்களை அல்லது நடவடிக்கைகளைப் பற்றிய தம்முடைய நோக்கத்தை ‘உருவாக்குபவராக’ அல்லது வடிவமைப்பவராக பேசப்படுகிறார். (2 இராஜாக்கள் 19:25; ஏசாயா 46:11; NW) இந்தப் பதங்கள் எபிரெய சொல்லாகிய யாட்சார் என்பதிலிருந்து வருகின்றன. அது “குயவன்” என்று பொருள்படும் சொல்லோடு சம்பந்தப்பட்டது. (எரேமியா 18:4) பிசைந்த களிமண்ணை அழகிய பூ ஜாடியாக திறமைமிக்க ஒரு குயவன் வடிவமைப்பதுபோல, யெகோவா தம்முடைய சித்தத்தை நிறைவேற்ற காரியங்களை திறமையுடன் கையாள முடியும்.—எபேசியர் 1:12.
4. மனிதர் குடியிருப்பதற்காக இந்தப் பூமியை கடவுள் எவ்வாறு ஆயத்தம் செய்தார்?
4 உதாரணமாக, கீழ்ப்படிதலுள்ள பரிபூரண மனிதர் குடியிருக்கப்போகும் இந்தப் பூமி எழில்மிகு பூங்காவனமாக இருக்க வேண்டுமென்பதே கடவுளது நோக்கம். (ஏசாயா 45:18) யெகோவா முதல் மனுஷனையும் மனுஷியையும் சிருஷ்டிப்பதற்கு வெகுகாலத்திற்கு முன்பே, அவர்களுக்காக அன்புடன் முன்னேற்பாடுகளை செய்தார். யெகோவா எவ்வாறு இரவையும் பகலையும், வெட்டாந்தரையையும் சமுத்திரத்தையும் ஏற்படுத்தினார் என்பதை ஆதியாகம புத்தகத்தின் ஆரம்ப அதிகாரங்கள் விவரிக்கின்றன. அடுத்தபடியாக தாவரங்களையும் மிருக ஜீவன்களையும் படைத்தார். மனிதர் குடியிருப்பதற்கு ஏற்றவிதமாக இந்தப் பூமியை தயார்படுத்த பல்லாயிரம் ஆண்டுகள் எடுத்தன. இந்த மாபெரும் திட்டம் வெற்றிகரமாக முடிக்கப்பட்டது. மனுஷனும் மனுஷியும் வாழ்க்கையை அனுபவித்து மகிழ்வதற்காக, எல்லா ஏற்பாடுகளும் செய்யப்பட்ட ஓர் இன்பப் பரதீஸாகிய ஏதேனில் குடியமர்த்தப்பட்டார்கள். (ஆதியாகமம் 1:31) இவ்வாறு, பூமியின் விவகாரங்களில் யெகோவா நேரடியாக தலையிட்டு, தம்முடைய உன்னத நோக்கத்தை நிறைவேற்ற தம்முடைய கிரியைகளைப் படிப்படியாக வடிவமைத்தார். மனித குடும்பம் பெரிதானபோது கடவுளுடைய தலையீட்டில் மாற்றம் வந்துவிட்டதா?
மனிதர்களுடன் தொடர்புகளை யெகோவா மட்டுப்படுத்துகிறார்
5, 6. ஏன் மனிதரின் ஒவ்வொரு செயலையும் கடவுள் கட்டுப்படுத்துவதில்லை?
5 மனிதரின் ஒவ்வொரு நடவடிக்கைகளையும் அடக்கியாள யெகோவாவுக்கு வல்லமை இருக்கிறபோதிலும், அவர் அப்படி செய்வதில்லை. இதற்கு காரணங்கள் இருக்கின்றன. ஒரு காரணம், மனிதர் சுயாதீனமுள்ளவர்களாக, தாங்களாகவே தெரிவு செய்யும் உரிமையுள்ளவர்களாக கடவுளுடைய சாயலில் படைக்கப்பட்டார்கள். அவருடைய கட்டளையின்படி செய்வதற்கு யெகோவா நம்மை வற்புறுத்துவதில்லை, நாம் கைப்பாவைகளுமல்ல. (உபாகமம் 30:19, 20; யோசுவா 24:15) நம்முடைய செயல்களுக்கு கணக்கொப்புவிக்கும்படி கடவுள் நம்மை கேட்கிறபோதிலும், நம்முடைய வாழ்க்கையை எவ்வாறு நடத்துவோம் என்பதை தீர்மானிக்க போதியளவு சுயாதீனத்தை நமக்கு அன்புடன் அனுமதித்திருக்கிறார்.—ரோமர் 14:12; எபிரெயர் 4:13.
6 நடக்கும் எல்லா சம்பவங்களையும் கடவுள் வழிநடத்துவதில்லை என்பதற்கு மற்றொரு காரணமும் இருக்கிறது. அது ஏதேன் தோட்டத்தில் சாத்தான் எழுப்பிய கேள்வியோடு தொடர்புடையது. அங்கு சாத்தான், கடவுளுடைய ஆட்சிமுறைக்கு எதிராக சவாலிட்டான். சுதந்திரத்திற்கு வாய்ப்பாக தோன்றிய ஒன்றை ஏவாளுக்கு சாத்தான் அளிக்க முன்வந்தான்—இதை ஏவாளும் பின்னால் அவளுடைய கணவனாகிய ஆதாமும் ஏற்றுக்கொண்டார்கள். (ஆதியாகமம் 3:1-6) இதற்கு பதிலளிப்பவராய், சாத்தானின் சவால் உண்மையா என்பதை நிரூபிக்க மனிதர் ஓரளவு காலத்திற்கு தாங்களே ஆண்டுகொள்ள கடவுள் அனுமதித்திருக்கிறார். ஆகவே இன்று ஜனங்கள் செய்யும் தவறான காரியங்களுக்காக கடவுளை குற்றஞ்சாட்ட முடியாது. கலகக்கார ஜனங்களைப் பற்றி மோசே இவ்வாறு எழுதினார்: “அவர்களோ தங்களைக் கெடுத்துக் கொண்டார்கள், அவர்கள் அவருடைய பிள்ளைகள் அல்ல; இதுவே அவர்கள் காரியம்.”—உபாகமம் 32:5.
7. இந்தப் பூமிக்கும் மனிதவர்க்கத்துக்குமான யெகோவாவின் நோக்கம் என்ன?
7 மக்களுக்கு சுயாதீனத்தையும் தாங்களாகவே ஆட்சி செலுத்திப் பார்ப்பதற்கு அனுமதியையும் வழங்கியிருக்கிறார். இருந்தபோதிலும், உலக விவகாரங்கள் எதிலுமே தலையிடாமல் எல்லாவற்றையும் மனிதர்களுடைய கையிலேயே யெகோவா விட்டுவிடவில்லை. ஒருவேளை யெகோவா மனித விவகாரங்களில் தலையிடுவதிலிருந்து முற்றிலும் பின்வாங்கியிருந்தால், கடவுள் தம்முடைய வாக்குறுதிகளை நிறைவேற்றுவார் என்ற நம்பிக்கையே நமக்கிருக்காது. ஆதாமும் ஏவாளும் கடவுளுடைய அரசாட்சிக்கு விரோதமாக கலகம் செய்தபோதிலும், இந்தப் பூமிக்கும் மனிதவர்க்கத்துக்குமான தம்முடைய அன்புள்ள நோக்கத்தை யெகோவா மாற்றவில்லை. யெகோவா இந்தப் பூமியை பரதீஸாக மாற்றி, பரிபூரணமும் கீழ்ப்படிதலும் சந்தோஷமுமுள்ள ஜனங்களை அதில் குடிவைப்பது நிச்சயம். (லூக்கா 23:42, 43) அந்த நோக்கத்தை நிறைவேற்ற யெகோவா எவ்வாறு படிப்படியாக செயல்படுகிறார் என்பதை ஆதியாகமத்திலிருந்து வெளிப்படுத்துதல் வரையான பைபிள் பதிவு விவரிக்கிறது.
தம்முடைய சித்தத்தை நிறைவேற்ற கடவுள் செயல்படுகிறார்
8. இஸ்ரவேலரை வாக்குப்பண்ணப்பட்ட தேசத்திற்குக் கொண்டுவருவதில் என்ன உட்பட்டிருந்தது?
8 கடவுள் தமது நோக்கத்தை நிறைவேற்றுவார் என்பது இஸ்ரவேல் ஜனத்தோடு அவருடைய செயல்தொடர்புகளிலிருந்து தெளிவாக தெரிகிறது. உதாரணமாக, இஸ்ரவேலர் எகிப்திலிருந்து விடுவிக்கப்பட்டு, பாலும் தேனும் ஓடுகிற தேசமாகிய வாக்குப்பண்ணப்பட்ட தேசத்தை சுதந்தரித்துக்கொள்வார்கள் என மோசேக்கு யெகோவா உறுதியாக கூறினார். (யாத்திராகமம் 3:8) இது முக்கியத்துவம் வாய்ந்ததும் உறுதியளிக்கும் ஓர் அறிவிப்பாகவும் இருந்தது. இஸ்ரவேலரையும் அவர்களுடைய தோழரையும் சேர்த்து ஏறக்குறைய முப்பது லட்சம் பேரைக் கொண்ட ஜனம் கிளம்புவதை கடுமையாக எதிர்த்த பலத்த தேசத்திலிருந்து விடுவிப்பதை இது உட்படுத்தும். (யாத்திராகமம் 3:19) இஸ்ரவேலர் அழைத்துச் செல்லப்பட்ட தேசத்திலோ இவர்களுடைய வருகையை கடுமையாக எதிர்க்கும் வலிமைமிக்க ஆட்கள் இருந்தார்கள். (உபாகமம் 7:1) இதற்கிடையில், இவர்கள் ஒரு வனாந்தரம் வழியாக கடந்து செல்லவேண்டியதாக இருந்தது. அங்கு இஸ்ரவேலருக்கு உணவும் தண்ணீரும் தேவைப்பட்டிருக்கும். யெகோவா தமது ஈடற்ற உன்னத வல்லமையையும் தெய்வத்துவத்தையும் காட்டுவதற்கு இடமளித்த ஒரு சூழ்நிலைமையாக இது இருந்தது.—லேவியராகமம் 25:38.
9, 10. (அ) கடவுளுடைய வாக்குகள் நம்பத்தக்கவை என்று யோசுவா ஏன் சாட்சிபகர முடிந்தது? (ஆ) உண்மையுள்ளவர்களுக்கு பலனளிப்பதற்கான கடவுளுடைய திறமையில் நாம் நம்பிக்கை வைப்பது எவ்வளவு முக்கியமானது?
9 ஒன்றன்பின் ஒன்றாக தொடர்ந்த பலத்த செயல்களால் இஸ்ரவேலரை கடவுள் எகிப்திலிருந்து வெளிவரச் செய்தார். முதலில், எகிப்து தேசத்தை நாசப்படுத்திய பத்து வாதைகளைக் கொண்டுவந்தார். அடுத்தபடியாக, சிவந்த சமுத்திரத்தை பிளந்து இஸ்ரவேலரை தப்பிக்க வைத்தார். அவர்களை பின்தொடர்ந்த எகிப்திய படையினரோ கடலிலேயே சமாதியாக்கப்பட்டனர். (சங்கீதம் 78:12, 13, 43-51) இதற்குப் பின், இஸ்ரவேலர் வனாந்தரத்தில் இருந்த 40 ஆண்டுகளின்போது மன்னாவினால் யெகோவா அவர்களை போஷித்தார். அதுமட்டுமின்றி அவர்களுக்கு தேவையான தண்ணீர் வசதிகளையும் ஏற்படுத்தி கொடுத்தார். அவர்கள் வஸ்திரங்கள் பழையதாகாமலும் அவர்களுடைய பாதங்கள் வீங்காமலும் இருக்கும்படியும் பார்த்துக்கொண்டார். (உபாகமம் 8:3, 4) வாக்குப்பண்ணப்பட்ட தேசத்திற்குள் இஸ்ரவேலர் பிரவேசித்த பின்பு, அவர்கள் சத்துருக்களை வெல்வதற்கு யெகோவா அவர்களை வழிநடத்தினார். யெகோவாவின் வாக்குறுதிகளில் உறுதியான விசுவாசத்தோடிருந்த யோசுவா, இந்த விவகாரங்கள் எல்லாவற்றையும் கண்கூடாக கண்ட சாட்சியாக இருந்தார். ஆகவே, அந்நாளில் வாழ்ந்த முதியோரிடம் அவரால் இவ்வாறு திடநம்பிக்கையுடன் சொல்ல முடிந்தது: ‘உங்கள் தேவனாகிய [யெகோவா] உங்களுக்காகச் சொன்ன நல்வார்த்தைகளிலெல்லாம் ஒரு வார்த்தையும் தவறிப்போகவில்லை என்பதை உங்கள் முழு இருதயத்தாலும் உங்கள் முழு ஆத்துமாவாலும் அறிந்திருக்கிறீர்கள்; அவைகளெல்லாம் உங்களுக்கு நிறைவேறிற்று.”—யோசுவா 23:14.
10 கடவுள் தம்மை சேவிப்போரின் சார்பாக செயல்பட மனமுள்ளவராக இருப்பது மட்டுமல்லாமல், வல்லமை படைத்தவராகவும் இருக்கிறார் என்பதில் முற்கால யோசுவாவைப்போல இன்றைய கிறிஸ்தவர்களும் முழு நம்பிக்கையுடன் இருக்கிறார்கள். இந்த நம்பிக்கை நம் விசுவாசத்தின் இன்றியமையாத ஒரு பாகமாக இருக்கிறது. அப்போஸ்தலன் பவுல் இவ்வாறு எழுதினார்: “விசுவாசமில்லாமல் தேவனுக்குப் பிரியமாயிருப்பது கூடாதகாரியம்; ஏனென்றால், தேவனிடத்தில் சேருகிறவன் . . . அவர் தம்மைத் தேடுகிறவர்களுக்குப் பலன் அளிக்கிறவரென்றும் விசுவாசிக்க வேண்டும்.”—எபிரெயர் 11:6.
கடவுள் எதிர்காலத்தை முன்னதாகவே காண்கிறார்
11. கடவுள் தம் வாக்குகளை நிறைவேற்றுவார் என்று ஏன் நிச்சயமாக இருக்கலாம்?
11 சுயாதீனத்தையும் சுதந்திரமாக ஆட்சி செலுத்துவதையும் கடவுள் அனுமதித்தாலும், தம்முடைய நோக்கத்தை நிறைவேற்ற வல்லமையுள்ளவராகவும் மனமுள்ளவராகவும் இருக்கிறார் என்பதை இதுவரையில் நாம் பார்த்தோம். இருப்பினும், கடவுளுடைய வாக்குறுதிகள் நிச்சயமாக நிறைவேறும் என்பதற்கான மற்றொரு காரணமும் இருக்கிறது. யெகோவா தேவனால் எதிர்காலத்தை முன்னதாகவே கணிக்க முடியும். (ஏசாயா 42:9) தம்முடைய தீர்க்கதரிசியின் மூலம் கடவுள் இவ்வாறு சொன்னார்: “முந்திப் பூர்வகாலத்தில் நடந்தவைகளை நினையுங்கள்; நானே தேவன், வேறொருவரும் இல்லை; நானே தேவன் எனக்குச் சமானமில்லை. அந்தத்திலுள்ளவைகளை ஆதிமுதற்கொண்டும், இன்னும் செய்யப்படாதவைகளைப் பூர்வகால முதற்கொண்டும் அறிவிக்கிறேன்; என் ஆலோசனை நிலைநிற்கும், எனக்குச் சித்தமானவைகளையெல்லாம் செய்வேன்.” (ஏசாயா 46:9, 10) விதையை எப்போது எங்கே விதைப்பது என்பதை அனுபவமிக்க விவசாயி அறிந்திருக்கிறார். இருப்பினும் நிலைமைகள் எப்படியாகுமோ என்ற நிச்சயமின்மை இருக்கலாம். ஆனால் ‘நித்தியத்தின் ராஜா,’ தம்முடைய நோக்கத்தை நிறைவேற்றுவதற்கு, எங்கே, எப்போது செயல்பட வேண்டும் என்பதை மிகவும் நுட்பமாக முன்னதாகவே கணிக்க முடியும்.—1 தீமோத்தேயு 1:17.
12. நோவாவின் நாட்களில், எவ்வகையில் யெகோவா தமது முன்னறிவை பயன்படுத்தினார்?
12 நோவாவின் நாட்களில் கடவுள் எவ்வாறு முன்னறிவை வெளிப்படுத்தினார் என்பதை கவனியுங்கள். இந்தப் பூமி சீர்கெட்டதாக இருந்ததால் கீழ்ப்படியாத அந்த மனிதவர்க்கத்திற்கு ஒரு முடிவை கொண்டுவர கடவுள் தீர்மானித்தார். எதிர்காலத்தில் 120 ஆண்டுகளுக்கு அப்பால் இதைச் செய்வதற்கு ஒரு காலத்தையும் குறித்தார். (ஆதியாகமம் 6:3) அந்தத் திட்டமான காலப்பகுதியைக் குறிக்கையில், அக்கிரமக்காரரின் அழிவைப் பார்க்கிலும் நிறைய விஷயங்களை யெகோவா கவனத்தில் எடுத்துக்கொண்டார். அக்கிரமக்காரர்களை அழிப்பது ஒன்றும் யெகோவாவுக்கு கடினமான வேலையில்லை. எந்தச் சமயத்திலும் இதை அவரால் செய்துமுடிக்க முடியும். நீதிமான்களை பாதுகாத்து வைப்பதற்கும் யெகோவாவின் கால அட்டவணையில் இடமிருந்தது. (ஆதியாகமம் 5:29-ஐ ஒப்பிடுக.) ஒரு வேலையை எப்போது நியமிப்பது என்பதையும் அதனால் விளையும் பயனையும் கடவுள் தம் ஞானத்தினால் அறிந்திருந்தார். ஏற்ற சமயம் வந்தபோது, நுணுக்கமான போதிய தகவல்களை நோவாவுக்குக் கடவுள் கொடுத்தார். ஒரு பூகோள ஜலப்பிரளயத்தால் அக்கிரமக்காரர் அழிக்கப்படவிருந்தார்கள், நோவா “தன் குடும்பத்தை இரட்சிப்பதற்கு” ஒரு பேழையைக் கட்ட வேண்டியிருந்தது.—எபிரெயர் 11:7; ஆதியாகமம் 6:113, 14, 18, 19.
பிரம்மாண்டமான கட்டுமான திட்டம்
13, 14. பேழையைக் கட்டுவது ஏன் சவாலாக இருந்தது?
13 இந்த வேலை நியமிப்பை நோவாவின் நோக்குநிலையிலிருந்து சிந்தித்துப் பாருங்கள். கடவுள் பக்தியுள்ள ஒருவராக நோவா இருந்ததால், தேவபக்தியற்றவர்களை யெகோவா அழிக்க முடியும் என்று அறிந்திருந்தார். எனினும், அது சம்பவிப்பதற்கு முன் ஒரு வேலையை—விசுவாசத்தை அவசியப்படுத்தும் ஒரு வேலையை—செய்ய வேண்டியதாக இருந்தது. அந்தப் பேழையைக் கட்டுவது பிரம்மாண்டமான ஒரு திட்டமாக இருக்கும். அதன் நுட்ப அளவுகளை கடவுள் விவரமாக குறிப்பிட்டிருந்தார். அந்தப் பேழை தற்கால விளையாட்டு திடல்களைவிட நீளமானதாகவும், ஐந்து அடுக்கு மாடி கட்டிட உயரமாகவும் இருந்திருக்கும். (ஆதியாகமம் 6:15) அந்தப் பேழையை கட்டுபவர்கள் அனுபவமற்றவர்கள். அதோடு, கட்டுவதற்கு சிலரே இருந்தார்கள். இன்று கிடைக்கும் நவீன கருவிகளும் சாதனங்களும் அவர்களுக்கு இல்லை. மேலும், எதிர்காலத்தை முன்னறியும் யெகோவாவின் திறமை நோவாவுக்கு இல்லை. ஆகவே வரப்போகும் வருடங்களில் என்ன நிலைமைகள் ஏற்படும்? அந்தக் கட்டும் வேலைக்கு அவை உதவியாக இருக்குமா அல்லது இடைஞ்சலாக இருக்குமா? என்பவற்றை அறிய நோவாவுக்கு எந்த வழியும் இல்லை. பல கேள்விகளைப் பற்றி நோவா சிந்தனை செய்திருக்கலாம். கட்டுமான பொருட்களை எவ்வாறு சேகரித்து வைப்பது? மிருகங்களை எப்படி கூட்டிச் சேர்ப்பது? என்ன உணவு தேவைப்படும், எவ்வளவு? முன்னறிவிக்கப்பட்ட ஜலப்பிரளயம் திட்டமாக எப்போது வரும்? போன்ற கேள்விகள் அவரது மனதில் வட்டமிட்டிருக்கலாம்.
14 பின்னும், சமுதாய நிலைமைகளும் இருந்தன. அக்கிரமம் பெருகியிருந்தது. பொல்லாத தூதர்கள் பூமியிலுள்ள பெண்களை திருமணம் செய்துகொண்டதால் அவர்களுக்குப் பிறந்த இனக்கலப்பு பிறவிகளான பலத்த நெஃபிலிம்கள் பூமியை வன்முறையால் நிரப்பினார்கள். (ஆதியாகமம் 6:1-4, 13) மேலும், பேழையைக் கட்டுவது இரகசியமாக செய்யக்கூடிய ஒரு வேலையாகவும் இருக்கவில்லை. நோவா என்ன செய்கிறார் என்பதை ஆச்சரியத்தோடு பார்க்கும் மக்களுக்கு அவர் என்ன பதில் சொல்வார்? (2 பேதுரு 2:5) அவர்கள் நோவாவின் பதிலை ஏற்றுக்கொள்வார்கள் என்று எதிர்பார்க்க முடியுமா? கஷ்டம்தான்! இச்சம்பவங்கள் நடைபெறுவதற்கு சில ஆண்டுகளுக்கு முன்னால், உண்மையுள்ள ஏனோக்கு பொல்லாதவர்கள் அழிக்கப்பட போவதை யாவரறிய அறிவித்தார். அவருடைய செய்தி ஜனங்களுக்கு அவ்வளவு வெறுப்பாக இருந்ததால், கடவுளை விரோதித்தவர்கள் அவரை கொலை செய்வதற்கும்கூட துணிந்திருக்கலாம். ஆகவே அவர் கொல்லப்படுவதைத் தவிர்க்க, கடவுள் ‘அவரை எடுத்துக்கொண்டார்,’ அதாவது, அவருடைய ஆயுட்காலம் குறைக்கப்பட்டது. (ஆதியாகமம் 5:24; எபிரெயர் 11:5; யூதா 14, 15) இதைப்போன்று, ஜனங்கள் விரும்பாத ஒரு செய்தியை நோவா யாவரறிய அறிவிக்க வேண்டியதாக இருந்தது. அது மட்டுமல்லாமல், ஒரு பேழையையும் கட்ட வேண்டியதாக இருந்தது. நோவா பேழையை கட்டியது, அவர் வாழ்ந்த காலத்திலிருந்த துன்மார்க்கரின் மத்தியில் அவருடைய பலமான உண்மைத்தன்மைக்கு வலிமைமிக்க ஒரு நினைப்பூட்டுதலாக இருந்திருக்கும்!
15. கொடுக்கப்பட்ட வேலையை தன்னால் நிறைவேற்ற முடியும் என்ற நம்பிக்கை நோவாவுக்கு ஏன் இருந்தது?
15 அந்தத் திட்டத்திற்கு சர்வவல்ல கடவுளின் ஆதரவும் ஆசீர்வாதமும் இருந்ததென்று நோவா அறிந்திருந்தார். யெகோவாதாமே அந்த வேலையை கொடுத்திருந்தார் அல்லவா? கட்டி முடிக்கப்பட்ட அந்தப் பேழைக்குள் நோவாவும் அவருடைய குடும்பத்தாரும் பிரவேசித்து, அந்தப் பூகோள ஜலப்பிரளயத்தினூடே உயிரோடு பாதுகாக்கப்படுவார்கள் என்று நோவாவுக்கு யெகோவா உறுதிகூறியிருந்தார். அதன் உண்மைத்தன்மையை மதிப்புமிகுந்த ஓர் உடன்படிக்கையாலும் கடவுள் நிச்சயப்படுத்தினார். (ஆதியாகமம் 6:18, 19) அந்த வேலையைக் கொடுப்பதற்குமுன், அதில் உட்பட்ட எல்லாவற்றையும் யெகோவா முன்னறிந்து மதிப்பிட்டிருந்தார் என்பதை நோவா புரிந்துகொண்டிருந்திருக்கலாம். மேலும், யெகோவா தலையிட்டு தேவையான உதவியை செய்ய வல்லமையுடையவர் என்பதையும் நோவா அறிந்திருந்தார். ஆகையால், நோவாவின் விசுவாசம் அவரை செயல்பட உந்துவித்தது. தன் பரம்பரையினரான ஆபிரகாமைப்போல், நோவா, “தேவன் வாக்குத்தத்தம் பண்ணினதை நிறைவேற்ற வல்லவராயிருக்கிறாரென்று முழு நிச்சயமாய் நம்பி”னார்.—ரோமர் 4:21.
16. பேழையைக் கட்டும் வேலை படிப்படியாக முன்னேறுகையில், நோவாவின் விசுவாசம் எவ்வாறு பலப்பட்டது?
16 ஆண்டுகள் உருண்டோட அந்தப் பேழையும் உருவாகி வந்தது, நோவாவின் விசுவாசமும் பலப்பட்டது. பேழையின் கட்டுமான மற்றும் அளவு சம்பந்தப்பட்ட எல்லா பிரச்சினைகளும் தீர்க்கப்பட்டன. சோதனைகள் வெற்றிகரமாக சமாளிக்கப்பட்டன. எந்த எதிர்ப்பும் வேலையை தடுத்து நிறுத்த முடியவில்லை. நோவாவின் குடும்பத்தார் யெகோவாவின் ஆதரவையும் பாதுகாப்பையும் அனுபவித்தார்கள். நோவா தொடர்ந்து செயல்பட்டதால் அவருடைய ‘விசுவாசத்தின் பரீட்சையானது பொறுமையை உண்டாக்கினது.’ (யாக்கோபு 1:2-4) கடைசியாக, அந்தப் பேழை கட்டி முடிக்கப்பட்டது, ஜலப்பிரளயமும் வந்தது. நோவாவும் அவருடைய குடும்பத்தாரும் தப்பிப் பிழைத்தார்கள். பிற்பட்ட காலத்தில் யோசுவா அனுபவித்ததுபோல், கடவுளுடைய வாக்குகளின் நிறைவேற்றத்தை நோவா அனுபவப்பூர்வமாக கண்டார். நோவாவின் விசுவாசம் பலனளிக்கப்பட்டது.
வேலைக்கு யெகோவா ஆதரவு அளிக்கிறார்
17. என்ன விதங்களில் நம்முடைய காலம் நோவாவின் நாட்களுக்கு ஒப்பாக இருக்கிறது?
17 நம்முடைய நாள் நோவாவின் நாட்களுக்கு ஒப்பாக இருக்குமென்று இயேசு முன்னறிவித்தார். மறுபடியுமாக, அக்கிரமக்காரரை அழிக்கும்படி கடவுள் தீர்மானித்திருக்கிறார், இது நடப்பதற்கான காலத்தையும் குறித்திருக்கிறார். (மத்தேயு 24:36-39) நீதிமான்களைப் பாதுகாப்பதற்கு ஏற்கெனவே ஆயத்தங்களையும் செய்திருக்கிறார். அன்று நோவா பேழையைக் கட்ட வேண்டியதாக இருந்தது. இன்று கடவுளுடைய ஊழியர்கள் யெகோவாவின் நோக்கங்களை எல்லாருக்கும் அறிவித்து, அவருடைய வார்த்தையைப் போதித்து சீஷராக்க வேண்டியதாக இருக்கிறது.—மத்தேயு 28:19.
18, 19. நற்செய்தியைப் பிரசங்கிக்கும் வேலையில் யெகோவாவின் ஆதரவு இருக்கிறது என்பது நமக்கு எப்படி தெரியும்?
18 நோவாவை ஆதரித்து ஊக்குவிப்பதற்கு யெகோவா அவருடன் இருந்திராவிட்டால், அந்தப் பேழை கட்டி முடிக்கப்பட்டிருக்காது. (சங்கீதம் 127:1-ஐ ஒப்பிடுக.) அதைப் போலவே, யெகோவாவின் உதவியின்றி மெய் கிறிஸ்தவம் அழியாமல் தொடரவோ செழித்தோங்கவோ முடியாது. முதல் நூற்றாண்டில் மிகவும் மதிக்கப்பட்ட பரிசேயரும் நியாயப்பிரமாண போதகருமாகிய கமாலியேல் இதை உணர்ந்தார். அப்போஸ்தலரை கொலைசெய்ய யூத நியாய சங்கம் விரும்பியபோது, அவர் அந்த நியாய சங்கத்தினரை இவ்வாறு எச்சரித்தார்: “இந்த மனுஷருக்கு ஒன்றுஞ்செய்யாமல் இவர்களை விட்டுவிடுங்கள். இந்த யோசனையும் இந்தக் கிரியையும் மனுஷரால் உண்டாயிருந்ததானால் ஒழிந்துபோம்; தேவனால் உண்டாயிருந்ததேயானால், அதை ஒழித்துவிட உங்களால் கூடாது.”—அப்போஸ்தலர் 5:38, 39.
19 முதல் நூற்றாண்டிலும் இன்றும், இந்தப் பிரசங்க வேலை வெற்றிகரமாக இருந்துவருகிறது. இந்த வேலை மனிதரிடமிருந்து அல்ல, கடவுளிடமிருந்தே தோன்றியது என்பதை இது நிரூபித்திருக்கிறது அல்லவா? இந்த வேலையை அத்தகைய பிரம்மாண்டமான அளவில், அவ்வளவு அதிக வெற்றிகரமாக்குவதற்கு உதவிய கிளர்ச்சியூட்டும் சம்பவங்கள் சிலவற்றை பின்வரும் கட்டுரையில் காணலாம்.
ஒருபோதும் விட்டுக்கொடுத்து விடாதீர்கள்
20. நற்செய்தியைப் பிரசங்கிக்கையில் யார் நமக்கு உதவியாக இருக்கிறார்கள்?
20 “கையாளுவதற்குக் கடினமான கொடிய காலங்களில்” நாம் வாழ்கிறபோதிலும், விவகாரங்கள் முழுமையாக யெகோவாவின் கட்டுப்பாட்டில் உள்ளன என்பதில் நாம் உறுதியாக இருக்கலாம். இந்தப் பொல்லாத ஒழுங்குமுறையை முடிவுக்கு கொண்டுவர கடவுள் குறித்திருக்கும் அந்தச் சமயம் வருவதற்குமுன் நற்செய்தி பிரசங்கித்து முடிக்கப்பட வேண்டும். இதை நிறைவேற்ற கடவுளுடைய ஜனங்கள் உழைக்கையில், அவர்களுக்கு கடவுள் ஆதரவளித்து வலுவூட்டுகிறார். (2 தீமோத்தேயு 3:1, NW; மத்தேயு 24:14) தம்மோடு ‘உடன்வேலையாட்களாக’ இருக்கும்படி யெகோவா நமக்கு அழைப்பு விடுக்கிறார். (1 கொரிந்தியர் 3:9) இந்த வேலையில் கிறிஸ்து இயேசுவும் நம்முடன் இருக்கிறார்; தேவதூதர்களின் ஆதரவிலும் வழிநடத்துதலிலும் நாம் நம்பிக்கை வைக்கலாம் என்றும்கூட உறுதியளிக்கப்படுகிறோம்.—மத்தேயு 28:20; வெளிப்படுத்துதல் 14:6.
21. என்ன நம்பிக்கையை நாம் ஒருபோதும் இழந்துவிடக்கூடாது?
21 நோவாவும் அவருடைய குடும்பத்தாரும் யெகோவாவின் வாக்குகளில் விசுவாசம் காண்பித்ததால் ஜலப்பிரளயத்தின்போது பாதுகாக்கப்பட்டார்கள். இன்று அதைப் போன்ற விசுவாசத்தைக் காட்டுபவர்கள் வரப்போகும் ‘மிகுந்த உபத்திரவத்தினூடே’ பாதுகாக்கப்படுவார்கள். (வெளிப்படுத்துதல் 7:14) மெய்யாகவே கிளர்ச்சியூட்டும் காலங்களில் நாம் வாழ்கிறோம். பெரும் விளைவுகளை உண்டாக்கும் சம்பவங்கள் எதிர்காலத்தில் ஏற்படவிருக்கின்றன! கடவுள் தலையிடும் நாள் வெகுதூரத்தில் இல்லை! சீக்கிரத்தில், நீதிவாசமாயிருக்கும் மகிமையான புதிய வானங்களையும் புதிய பூமியையும் கொண்டுவருவதற்கு கடவுள் செயல்படுவார். (2 பேதுரு 3:13) கடவுள் தாம் சொல்லும் எல்லாவற்றையும் செய்யவும் வல்லவர் என்ற உங்கள் நம்பிக்கையை இன்று மட்டுமல்ல, என்றும் இழந்துவிடாதீர்கள்.—ரோமர் 4:21.
மறுபார்வை குறிப்புகள்
◻ மனித நடவடிக்கையின் எல்லா விவகாரங்களையும் யெகோவா ஏன் அடக்கியாளுவதில்லை?
◻ தம்முடைய நோக்கத்தை நிறைவேற்றுவதற்கான யெகோவாவின் வல்லமை, எவ்வாறு இஸ்ரவேலரோடு அவருடைய செயல்தொடர்புகளில் வெளிப்பட்டது?
◻ எதிர்காலத்தை கணிப்பதற்கான யெகோவாவின் வல்லமை, நோவாவின் நாளில் எவ்வாறு வெளிப்படுத்திக் காட்டப்பட்டது?
◻ கடவுளுடைய வாக்குறுதிகளில் நாம் என்ன திடநம்பிக்கையை வைக்கலாம்?