இளைஞர்களே—பகுத்துணர்வைப் பயிற்றுவியுங்கள்!
“திடமான உணவு முதிர்ச்சி அடைந்தவர்களுக்கே தகும்; அவர்கள் நன்மை தீமையை அறிந்துகொள்ளும்படி பகுத்துணர்வைப் பயன்படுத்துகிறவர்களும், பயிற்றுவிப்பவர்களும் ஆவர்.”—எபிரெயர் 5:14, NW.
1, 2. (அ) இன்று நம்முடைய நிலையை எபேசுவிலிருந்த பூர்வ கிறிஸ்தவர்களின் நிலைக்கு எப்படி ஒப்பிடலாம்? (ஆ) எந்தத் திறமைகள் உங்களை ஆபத்திலிருந்து பாதுகாக்கலாம், அவற்றை நீங்கள் எப்படி வளர்த்துக் கொள்ளலாம்?
“நீங்கள் ஞானமற்றவர்களைப்போல நடவாமல், ஞானமுள்ளவர்களைப்போல் கவனமாய் நடந்து கொள்ளப்பார்த்து, நாட்கள் பொல்லாதவைகளானதால் காலத்தைப் பிரயோஜனப்படுத்திக்கொள்ளுங்கள்.” (எபேசியர் 5:15, 16) இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்பு அப்போஸ்தலனாகிய பவுல் இந்த வார்த்தைகளை எழுதியதிலிருந்து ‘பொல்லாதவர்களும் எத்தர்களுமானவர்கள் மேன்மேலும் கேடுள்ளவர்களாக’ ஆகிவருகின்றனர். நாம் ‘கொடிய காலங்களில்’ வாழ்ந்து வருகிறோம் அல்லது மற்றொரு மொழிபெயர்ப்பு சொல்வதுபோல் இது ‘ஆபத்துமிகுந்த’ காலமாய் இருக்கிறது.—2 தீமோத்தேயு 3:1-5, 13; ஃபிலிப்ஸ்.
2 எனினும், உங்கள் பாதையில் மறைந்திருக்கும் ஆபத்துக்களில் நீங்கள் சிக்கிக் கொள்ளாமல் தவிர்க்க முடியும்; “விவேகத்தையும், . . . அறிவையும் சிந்திக்கும் திறமையையும்” வளர்த்துக் கொண்டால் அது சாத்தியமே. (நீதிமொழிகள் 1:4, NW) “ஞானம் உன் இருதயத்தில் பிரவேசித்து, அறிவு உன் ஆத்துமாவுக்கு இன்பமாயிருக்கும்போது, நல்யோசனை உன்னைக் காப்பாற்றும், புத்தி உன்னைப் பாதுகாக்கும். அதினால் நீ துன்மார்க்கனுடைய வழிக்கும், மாறுபாடு பேசுகிற மனுஷனுக்கும் . . . தப்புவிக்கப்படுவாய்” என நீதிமொழிகள் 2:10-12, 15 சொல்கிறது. ஆனால் எப்படி இந்தத் திறமைகளை வளர்த்துக் கொள்வது? “திடமான உணவு முதிர்ச்சி அடைந்தவர்களுக்கே தகும்; அவர்கள் நன்மை தீமையை அறிந்துகொள்ளும்படி பகுத்துணர்வைப் பயன்படுத்துகிறவர்களும், பயிற்றுவிப்பவர்களும் ஆவர்” என்கிறது எபிரெயர் 5:14 (NW). மற்ற திறமைகளைப் போலவே பகுத்துணர்வில் தேர்ச்சிபெறவும் பயிற்சி தேவை. பவுல் உபயோகித்த கிரேக்க வார்த்தை சொல்லர்த்தமாக ‘உடற்பயிற்சியாளனைப் போல பயிற்சிபெறுதல்’ என்பதை அர்த்தப்படுத்துகிறது. அத்தகைய பயிற்சியைப் பெற நீங்கள் எப்படி ஆரம்பிக்கலாம்?
உங்கள் பகுத்துணர்வை பயிற்றுவித்தல்
3. ஒரு தீர்மானத்தை எடுக்க வேண்டிய கட்டத்தில் நீங்கள் எப்படி உங்கள் பகுத்துணர்வைப் பயன்படுத்துவீர்கள்?
3 எது சரி, எது தவறு என கண்டறியும் திறமையான உங்கள் பகுத்துணரும் தன்மையை ‘பயன்படுத்தும்’ போது அது பயிற்றுவிக்கப்படுகிறது என்பதைக் கவனியுங்கள். நீங்கள் தீர்மானம் எடுக்க வேண்டிய கட்டத்தில் ஊகித்தாலோ, குருட்டுவாக்கில் செயல்பட்டாலோ அல்லது எல்லாரும் எவ்வழியோ அவ்வழி என போனாலோ புத்திசாலித்தனமான தெரிவைச் செய்யவே முடியாது. புத்திசாலித்தனமான தீர்மானங்களை எடுக்க நீங்கள் உங்கள் பகுத்துணர்வை பயன்படுத்த வேண்டும். எப்படி? முதலாவதாக, சூழ்நிலையை நன்கு அலசியாராய்ந்து உள்ள தகவல்களை எல்லாம் முற்றும் முழுமையுமாக தெரிந்துகொள்ள வேண்டும். தேவைப்பட்டால் கேள்விகளைக் கேட்க தயங்காதீர்கள். உங்களுடைய தெரிவுகள் என்ன என்பதைத் தீர்மானியுங்கள். “விவேகியானவன் அறிவோடு நடந்து கொள்ளுகிறான்” என நீதிமொழிகள் 13:16 சொல்கிறது. அடுத்து, எந்த பைபிள் சட்டங்கள் அல்லது நியமங்கள் அந்தப் பொருளை ஆதரிக்கிறது என்பதைத் தீர்மானியுங்கள். (நீதிமொழிகள் 3:5) இதைச் செய்வதற்கு, உங்களுக்கு உண்மையில் பைபிள் அறிவு தேவை. அதன் காரணமாகவே, சத்தியத்தின் “அகலமும், நீளமும், ஆழமும், உயரமும்” இன்னதென்று அறிய, ‘பலமான ஆகாரத்தை’ உண்ணும்படி பவுல் நம்மை உற்சாகப்படுத்துகிறார்.—எபேசியர் 3:18.
4. கடவுளுடைய நியமங்களைப் பற்றிய அறிவு ஏன் அத்தியாவசியம்?
4 நாம் அபூரணர்களாக, பாவம் செய்யும் மனச்சாய்வுடையவர்களாய் இருப்பதால் அவ்வாறு செய்வது அத்தியாவசியம். (ஆதியாகமம் 8:21; ரோமர் 5:12) “எல்லாவற்றைப்பார்க்கிலும் இருதயமே திருக்குள்ளதும் மகா கேடுள்ளதுமாயிருக்கிறது” என எரேமியா 17:9 சொல்கிறது. நம்மை வழிநடத்த கடவுளுடைய நியமங்கள் இல்லாதிருந்தால், நம்முடைய இச்சையின் காரணமாக தீமையை நன்மையானதென நினைத்து நம்மை நாமே ஏமாற்றிக் கொள்வோராய் இருப்போம். (ஏசாயா 5:20-ஐ ஒப்பிடுக.) “வாலிபன் தன் வழியை எதினால் சுத்தம்பண்ணுவான்? உமது வசனத்தின்படி தன்னைக் காத்துக்கொள்ளுகிறதினால்தானே. உமது கட்டளைகளால் உணர்வடைந்தேன், ஆதலால் எல்லாப் பொய் வழிகளையும் [“தவறான பாதையை,” NW] வெறுக்கிறேன்” என சங்கீதக்காரன் எழுதினார்.—சங்கீதம் 119:9, 104.
5. (அ) சில இளைஞர்கள் தவறான பாதைக்குச் சென்றிருப்பது ஏன்? (ஆ) எவ்வாறு ஒரு இளம் பெண் சத்தியத்தோடு ஒன்றிவிட்டாள்?
5 கிறிஸ்தவ குடும்பங்களில் வளர்க்கப்பட்ட சில இளைஞர்கள் ஏன் தவறான பாதைக்குச் சென்றிருக்கின்றனர்? ‘தேவனுடைய நன்மையும் பிரியமும் பரிபூரணமுமான சித்தம் இன்னதென்று [தாங்களாக] பகுத்தறிய’ அவர்கள் தவறிவிட்டார்களா? (ரோமர் 12:2) சிலர் தங்கள் பெற்றோரோடு கூட்டங்களுக்கு செல்வார்கள்; பைபிளின் சில அடிப்படை போதனைகள் அவர்களுக்குத் தண்ணீர்பட்டபாடு. ஆனால் அவர்களுடைய நம்பிக்கைகளுக்கு ஆதாரத்தைக் கேட்டால் அல்லது கடவுளுடைய வார்த்தையிலுள்ள ஆழமான விஷயங்களை விளக்கச் சொன்னால் அவர்களிடம் சரக்கிருக்காது, மேலோட்டமான அறிவே இருக்கிறதென்பது தெரிந்துவிடும். இப்படிப்பட்ட இளைஞர்கள் எளிதில் வஞ்சிக்கப்படலாம். (எபேசியர் 4:14) உங்களுடைய விஷயத்திலும் இது உண்மையென்றால் ஏன் மாற்றங்களைச் செய்ய தீர்மானிக்கக் கூடாது? “நான் ரிசர்ச் செய்தேன். ‘இதுதான் உண்மையான மதம் என்று எனக்கு எப்படித் தெரியும்? யெகோவா என்னும் பெயருடைய ஒரு கடவுள் இருக்கிறார் என்று எனக்கு எப்படித் தெரியும்?’ என என்னையே கேட்டுக் கொண்டேன்” என சொல்கிறாள் ஓர் இளம் சகோதரி. a பைபிளை கவனமாக ஆராய்ந்தது, தன் பெற்றோரிடமிருந்து கற்றுக்கொண்ட விஷயங்கள் உண்மையானவை என்பதை அவளுக்கு உணர்த்தியது!—அப்போஸ்தலர் 17:11-ஐ ஒப்பிடுக.
6. யெகோவாவாகிய ‘கர்த்தருக்குப் பிரியமானது இன்னதென்று’ நீங்கள் எப்படிப் புரிந்துகொள்வீர்கள்?
6 யெகோவாவின் நியமங்களை தெளிவாக அறிந்திருக்கும்போது, உங்களால் எளிதாக ‘கர்த்தருக்குப் பிரியமானது இன்னதென்று’ புரிந்துகொள்ள முடியும். (எபேசியர் 5:10) ஒரு குறிப்பிட்ட சூழ்நிலையில் சரியான தீர்மானம் எடுக்க முடியாமல் திண்டாடுகிறீர்கள் என்றால் என்ன செய்வது? வழிநடத்துதலுக்காக யெகோவாவிடம் ஜெபியுங்கள். (சங்கீதம் 119:144) உங்கள் பெற்றோரிடமோ அல்லது முதிர்ந்த கிறிஸ்தவரிடமோ உங்கள் பிரச்சினையைக் குறித்து பேசிப் பாருங்கள். (நீதிமொழிகள் 15:22; 27:17) பைபிளையும் உவாட்ச் டவர் பிரசுரங்களையும் அலசியாராயும் போது கைகொடுத்து உதவும் தகவல்களை நீங்கள் கண்டுபிடிக்கவும் முடியும். (நீதிமொழிகள் 2:3-5) உங்கள் பகுத்துணரும் தன்மையை நீங்கள் எவ்வளவு அதிகமாக “சாணைபிடி”க்கிறீர்களோ அவ்வளவு அதிகமாக அது “கூர்மை”யாகும்.
பொழுதுபோக்கில் பகுத்துணர்வைக் காட்டுதல்
7, 8. (அ) ஒரு பார்ட்டிக்குப் போகலாமா வேண்டாமா என தீர்மானிக்க உங்கள் பகுத்துணரும் தன்மையை நீங்கள் எப்படி பயன்படுத்தலாம்? (ஆ) பொழுதுபோக்கைக் குறித்த பைபிளின் கருத்து என்ன?
7 குறிப்பிட்ட சில சூழ்நிலைகளில் நீங்கள் எப்படி உங்கள் பகுத்துணரும் தன்மையை பயன்படுத்தலாம் என்பதை சற்று ஆராய்வோம். உதாரணத்திற்கு, உங்களை ஒரு பார்ட்டிக்கு அழைத்திருக்கிறார்கள் என வைத்துக்கொள்வோம். அந்த விருந்திற்கான அச்சடிக்கப்பட்ட அழைப்பிதழையும் நீங்கள் பெற்றிருக்கலாம். சாட்சிகளாக இருக்கும் எக்கச்சக்கமான இளைஞர்கள் அங்கு வருவார்கள் எனவும் கேள்விப்படுகிறீர்கள். ஆனால் அந்தச் செலவைச் சமாளிக்க சிறிய தொகை வசூலிக்கப்படும். அப்படியென்றால் நீங்கள் கலந்துகொள்ளலாமா?
8 நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் உங்கள் பகுத்துணரும் தன்மையைப் பயன்படுத்த வேண்டியதுதான். முதலாவதாக, எல்லா தகவல்களையும் சேகரியுங்கள். இந்தப் பார்ட்டி எவ்வளவு பெரியதாக இருக்கும்? யார் யார் அங்கு வருவர்? எத்தனை மணிக்கு ஆரம்பமாகும்? எத்தனை மணிக்கு முடிவடையும்? என்னென்ன நிகழ்ச்சிகள் நடத்த திட்டமிடப்பட்டிருக்கிறது? அது எவ்வாறு மேற்பார்வை செய்யப்படும்? அடுத்ததாக, “சமூக கூட்டுறவு,” “பொழுதுபோக்கு” ஆகிய தலைப்புகளில் உவாட்ச் டவர் பப்ளிக்கேஷன் இண்டெக்ஸ்-ஐக் கொஞ்சம் ஆராயுங்கள். b உங்கள் ஆராய்ச்சி என்ன ‘சொல்கிறது’? முதலாவதாக, ஒன்றாகச் சேர்ந்து பொழுதை சந்தோஷமாக கழிப்பதை யெகோவா கண்டிக்கிறதில்லை. சொல்லப்போனால், கஷ்டப்பட்டு உழைப்பதோடுகூட, “புசிப்பதும் குடிப்பதும் மகிழ்வதுமேயல்லாமல் சூரியனுக்குக்கீழே மனுஷனுக்கு வேறொரு நன்மையும் இல்லை” என பிரசங்கி 8:15 சொல்கிறது. ஏன், இயேசு கிறிஸ்துவே விருந்துகளிலும் குறைந்தபட்சம் ஒரு திருமண வைபவத்திலாவது கலந்துகொண்டாரே. (லூக்கா 5:27-29; யோவான் 2:1-10) அளவோடு வைத்துக் கொண்டால் பார்ட்டிகளும் பயன்தரலாம்.
9, 10. (அ) சில பார்ட்டிகளில் என்ன ஆபத்துக்கள் இருக்கலாம்? (ஆ) ஒரு பார்ட்டியில் கலந்து கொள்ளலாமா வேண்டாமா என தீர்மானிப்பதற்கு முன்பு என்ன கேள்விகளை நீங்கள் கேட்டுக்கொள்ள வேண்டும்?
9 இருந்தபோதிலும், சரிவர திட்டமிடப்படாத பார்ட்டிகள் பிரச்சினை என்னும் தீக்கு எண்ணெய் வார்ப்பவையாய் இருக்கும். ஞானமற்ற கூட்டுறவு எப்படி வேசித்தனத்திற்கு வழிநடத்தி, “ஒரே நாளில் [உண்மையற்ற இஸ்ரவேலரில்] இருபத்துமூவாயிரம் பேர் மடிந்தனர்” என்பதை நாம் 1 கொரிந்தியர் 10:8-ல் (தமிழ் கத்தோலிக்க மொழிபெயர்ப்பு) வாசிக்கிறோம். “களியாட்டும் வெறியும், வேசித்தனமும் காமவிகாரமும், வாக்குவாதமும் பொறாமையும் உள்ளவர்களாய் நடவாமல், பகலிலே நடக்கிறவர்கள்போலச் சீராய் நடக்கக்கடவோம்” என்ற சிந்திக்க வைக்கும் மற்றொரு எச்சரிக்கை ரோமர் 13:13-ல் காணப்படுகிறது. (1 பேதுரு 4:3-ஐ ஒப்பிடுக.) பார்ட்டி என்றால் இத்தனை பேர்தான் வர வேண்டும் என எந்தத் திட்டவட்டமான எண்ணிக்கையும் கிடையாது என்பது உண்மைதான். ஆயினும் அதிகமானோர் கூடிவருகையில் மேற்பார்வை செய்வது அதிக கடினம் என்பது அனுபவம் கற்பித்த பாடம். சிறிய, நன்கு திட்டமிடப்பட்ட பார்ட்டிகள் “வெறித்தன பார்ட்டிக”ளாய் மாறுவதற்கு அவ்வளவு வாய்ப்பில்லை.—கலாத்தியர் 5:21, பையிங்டன்.
10 உங்கள் ஆராய்ச்சி பின்வருவனவற்றைப் போன்ற இன்னும் அநேக கேள்விகளுக்கு வித்திடும்: அந்தப் பார்ட்டிக்கு முதிர்ந்த கிறிஸ்தவர்கள் யாரேனும் வருவார்களா? உண்மையில் யார் இந்தப் பார்ட்டியை ஏற்பாடு செய்திருப்பது? இந்தப் பார்ட்டி—நல்ல கூட்டுறவை அனுபவிப்பதற்காகவா அல்லது லாபம் சம்பாதிக்கும் தன்னல நோக்கத்திற்காகவா—எதற்காக நடத்தப்படுகிறது? யார் யார் கலந்துகொள்வார்கள் என்பதில் ஏதேனும் வரையறைகள் இருக்கின்றனவா? சனி ஞாயிறுகளில் அந்தப் பார்ட்டி நடந்தால், மறுநாள் கிறிஸ்தவ ஊழியத்திற்கு செல்லும் விதமாக நேரங்காலத்தோடு அது முடிவடையுமா? இசையும் நடனமும் உண்டென்றால் கிறிஸ்தவ தராதரங்களுக்கு இசைய இருக்குமா? (2 கொரிந்தியர் 6:3) இந்தக் கேள்விகளைக் கேட்டுக்கொள்வது எளிதான விஷயமில்லை. ஆனால், “விவேகி ஆபத்தைக் கண்டு மறைந்து கொள்ளுகிறான்; பேதைகள் நெடுகப் போய் தண்டிக்கப்படுகிறார்கள்” என நீதிமொழிகள் 22:3 எச்சரிக்கிறது. ஆம், உங்கள் பகுத்துணர்வைப் பயன்படுத்தி ஆபத்தான சூழ்நிலைகளை நீங்கள் தவிர்க்கலாம்.
உங்கள் கல்வியைத் திட்டமிடுவதில் பகுத்துணர்வு
11. எதிர்காலத்தைக் குறித்து திட்டமிடுவதில் இளைஞர்கள் எப்படி தங்கள் பகுத்துணரும் தன்மையைப் பயன்படுத்தலாம்?
11 எதிர்காலத்தை மனதில் வைத்து திட்டமிடுவது புத்திசாலித்தனமான காரியம் என பைபிள் சொல்கிறது. (நீதிமொழிகள் 21:5, NW) உங்கள் பெற்றோர்களோடு சேர்ந்து உங்கள் எதிர்காலத்தைப் பற்றி கலந்துபேசியிருக்கிறீர்களா? முழுநேர ஊழியத்தில் ஒரு பயனியராக சேவை செய்ய நீங்கள் திட்டமிட்டிருக்கலாம். வேறு எந்த வேலையும் இந்தளவுக்குப் பரம திருப்தியைத் தராதென்பது உண்மை. நல்ல படிப்புப் பழக்கங்களையும் ஊழியத்தில் திறமைகளையும் வளர்த்துக்கொள்வீர்களென்றால் நீங்கள் இந்தச் சந்தோஷமிக்க ஊழியத்திற்குத் தயாராகிறீர்கள். ஊழியம் செய்துகொண்டே உங்களுடைய தேவைகளை நீங்கள் கவனத்துக் கொள்வது எப்படி என சிந்தித்திருக்கிறீர்களா? எதிர்காலத்தில் உங்களுக்கென்று ஒரு குடும்பத்தை அமைத்துக்கொள்கையில் அந்தக் கூடுதலான பொறுப்பை ஏற்று நடத்த முடியுமா? இத்தகைய விஷயங்களில் சமநிலையான, நியாயமான தீர்மானங்கள் எடுப்பதற்கு பகுத்துணர்வை பயன்படுத்த வேண்டியது அவசியம்.
12. (அ) மாறிவரும் பொருளாதார நிலைமைக்கு ஏற்ப வாழ எப்படி சில குடும்பங்கள் தெரிந்துகொண்டிருக்கின்றன? (ஆ) பயனியர் செய்ய தீர்மானிக்கையில் ஏதேனும் துணைக்கல்வி பயிலுவது உண்மையிலேயே தவறானதா? விளக்குங்கள்.
12 சில இடங்களில், பயனுள்ள திறமையையோ தொழிலையோ வேலை செய்துகொண்டே கற்றுக்கொள்ளலாம். சில இளைஞர்கள் குடும்பத் தொழிலைக் கற்றுக்கொள்கிறார்கள் அல்லது வியாபாரத்தில் ஈடுபட்டுள்ள முதிர்ந்த நண்பர்களிடமிருந்து பயிற்சியைப் பெற்றுக்கொள்கிறார்கள். இன்னும் சிலர் பிழைப்புக்குத் தேவைப்படும் பயனுள்ள படிப்பை பள்ளியில் படிக்கிறார்கள். இப்படிப்பட்ட வாய்ப்புக்களைப் பெற வழியில்லை என்றால், பெற்றோர் கவனமாக காரியங்களைச் சீர்தூக்கி பார்த்தபின்னர் தங்கள் பிள்ளைகள் உயர்நிலை பள்ளி படிப்புக்குப் பின் ஏதேனும் துணைக்கல்வி பயில தீர்மானிக்கலாம். பின்னான நாட்களில் அதிக பொறுப்பை ஏற்று நடத்துவதற்கு, அதுவும் முக்கியமாக நீண்ட நாட்களுக்கு பயனியர் ஊழியத்தைத் தொடர்வதற்கு வேண்டி முன்கூட்டியே திட்டமிடுவது, முதலாவது கடவுளுடைய ராஜ்யத்தைத் தேடுவதற்கு விரோதமானதாக இல்லை. (மத்தேயு 6:33) துணைக்கல்வி பயின்றால் பயனியர் ஊழியம் செய்ய முடியாது என அர்த்தமாகாது. உதாரணமாக, ஓர் இளம் சாட்சிக்கு பயனியர் ஊழியம் செய்ய வெகு நாட்களாய் ஆசை. ஒழுங்கான பயனியர்களாக இருக்கும் அவளுடைய பெற்றோர், உயர்நிலை பள்ளி படிப்புக்குப் பின் அவள் துணைக்கல்வி பயில ஏற்பாடு செய்தார்கள். பள்ளிப் படிப்பைத் தொடருகையிலேயே பயனியர் ஊழியத்தையும் அவளால் செய்ய முடிந்தது; தற்போது பயனியர் ஊழியத்தைத் தொடர அவள் கற்ற தொழிற்கல்வி அவளுக்குக் கைகொடுக்கிறது.
13. துணைக்கல்வியின் நன்மை தீமைகளை குடும்பங்கள் எப்படி சீர்தூக்கிப் பார்க்கலாம்?
13 துணைக்கல்வியைப் பொறுத்ததில், சொந்தமாய் தீர்மானம் எடுக்க ஒவ்வொரு குடும்பத்திற்கும் உரிமையும் பொறுப்பும் இருக்கிறது. சரியான கல்வியை தெரிவுசெய்வது உதவியாக இருக்கலாம். எச்சரிக்கை: சிலசமயங்களில் அதுவே கண்ணியாகவும் மாறலாம். அப்படிப்பட்ட கல்வியைத் தொடர விரும்புகிறீர்கள் என்றால் உங்கள் நோக்கம் என்ன? பெரியவர்களாகையில் கௌரவமாக வாழ உங்களைத் தயார்படுத்திக் கொள்வதற்கா? அல்லது உங்களுக்காக ‘பெரிய காரியங்களைத் தேடிக்கொள்வதற்கா’? (எரேமியா 45:5; 2 தெசலோனிக்கேயர் 3:10; 1 தீமோத்தேயு 5:8; 6:9) வீட்டிலிருந்து படிக்காமல் ஹாஸ்டலில் தங்கி துணைக்கல்வி பயிலுவதைப் பற்றி என்ன? “கெட்ட சகவாசம் நல்லொழுக்கங்களைக் கெடுக்கும்” என பவுல் எச்சரிப்பதன் அடிப்படையில் சிந்தித்தால் அப்படி செல்வது விவேகமானதாய் இருக்குமா? (1 கொரிந்தியர் 15:33, NW; 2 தீமோத்தேயு 2:22) ‘காலம் குறுகினதாய்’ இருப்பதையும் மறந்துவிடாதீர்கள். (1 கொரிந்தியர் 7:29) அத்தகைய படிப்புக்காக எந்தளவுக்கு நேரத்தைச் செலவிட வேண்டும்? உங்கள் இளமை காலம் முழுவதையும் அது எடுத்துக்கொள்ளுமா? அப்படியென்றால், “நீ உன் வாலிபப்பிராயத்திலே உன் சிருஷ்டிகரை நினை” என பைபிள் சொல்வதற்கு இசைய எப்படி நடக்க முடியும்? (பிரசங்கி 12:1) சபைக் கூட்டங்கள், வெளி ஊழியம், தனிப்பட்ட படிப்பு ஆகிய முக்கியமான கிறிஸ்தவ காரியங்களில் ஈடுபட தேவைப்படும் நேரத்துக்கு நீங்கள் படிக்கப் போகிற படிப்பு இடமளிக்குமா? (மத்தேயு 24:14; எபிரெயர் 10:24, 25) உங்கள் பகுத்துணரும் தன்மை “கூர்மையானதாய்” இருந்தால் நீங்களும் உங்கள் பெற்றோரும் ஆவிக்குரிய இலக்குகளை மனதில் வைத்தே உங்கள் எதிர்காலத்திற்காக திட்டமிடுவீர்கள்.
திருமண நோக்குடன் பழகுவதைக் கண்ணியமாக மதித்தல்
14. (அ) திருமண நோக்குடன் பழகும் ஜோடிகள் தங்களுக்கிடையே நேசத்தை வெளிப்படுத்துகையில் எந்த நியமங்களைப் பின்பற்ற வேண்டும்? (ஆ) இந்த விஷயத்தில் சில ஜோடிகள் எப்படி பகுத்துணர்வைக் காட்ட தவறியிருக்கின்றனர்?
14 உங்கள் பகுத்துணரும் திறமையைப் பயன்படுத்த வேண்டிய மற்றொரு சந்தர்ப்பம் திருமண நோக்குடன் பழகும்போது. உங்கள் பாசத்திற்குரியவரிடம் நேசத்தை வெளிக்காட்ட விரும்புவது இயல்பானதே. சாலொமோனின் உன்னதப்பாட்டில் விவரிக்கப்படும் கற்புள்ள தம்பதியினர் தங்கள் திருமணத்திற்கு முன்பே நேசத்தை சில விதங்களில் வெளிப்படுத்திக் காட்டினர். (உன்னதப்பாட்டு 1:2; 2:6; 8:5) திருமண நோக்குடன் பழகும் சில ஜோடிகள் மணநாள் நெருங்குவதால் கைகோர்த்துக் கொள்வது, முத்தமிடுவது, கட்டியணைப்பது சரியானதே என நினைக்கலாம். ஆனால், “தன் இருதயத்தை நம்புகிறவன் மூடன்” என்பதை நினைவில் வையுங்கள். (நீதிமொழிகள் 28:26) அநேக ஜோடிகள் பகுத்துணர்வை சரியாக பயன்படுத்தாமல் கிறிஸ்தவ நியமங்களை விட்டுக்கொடுக்கும் நிலைக்கு ஆளாகியிருப்பது வருந்தத்தக்கது. நேசத்தை வெளிக்காட்டும் அளவு மட்டுக்குமீறியும் கட்டுப்பாட்டைக் கடந்தும் சென்றிருக்கிறது; அசுத்தமான காரியங்களில் ஈடுபட வைத்து பாலியல் ஒழுக்கக்கேட்டில் விழுமளவுக்குத் தீவிரமடைந்தும் இருக்கிறது.
15, 16. திருமண நோக்குடன் பழகுதல் தொடர்ந்து கண்ணியமானதாக இருக்க என்ன நியாயமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை ஜோடிகள் எடுக்கலாம்?
15 நீங்கள் காதலீடுபாடு (dating) கொள்கிறீர்கள் என்றால், பொருத்தமற்ற சூழ்நிலைகளில் உங்கள் வருங்கால துணையுடன் தனிமையில் இருப்பதைத் தவிர்ப்பது விவேகமான செயல். எல்லாரும் இருக்கும் போதோ அல்லது பொது இடங்களிலோ இருவரும் சேர்ந்திருந்து மகிழ்வது மிகச் சிறந்தது. சில ஜோடிகள் தங்களோடு துணைக்கு ஒருவரை வைத்துக்கொள்ள விரும்புகின்றனர். “திராட்சரசமும் மதுபானமும் இருதயத்தை மயக்கும்” என்ற ஓசியா 4:11-ன் வார்த்தைகளை கவனத்தில் வையுங்கள். சரியான தீர்மானம் எடுப்பதை மதுபானம் கெடுத்துவிடும்; பின்னால் நினைத்து நினைத்து வருந்தவேண்டிய நிலைக்கு ஜோடிகளை வழிநடத்தும்.
16 “அகந்தையினால் மாத்திரம் வாதுபிறக்கும்; ஆலோசனையைக் கேட்கிறவர்களிடத்திலோ ஞானம் உண்டு” என நீதிமொழிகள் 13:10 சொல்கிறது. நீங்கள் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதை அறிய ஒருவருக்கொருவர் “ஆலோசனையைக் கேட்கிறவர்”களாய் இருங்கள். நேச வெளிக்காட்டுதல்களுக்கு வரையறை வையுங்கள்; ஒருவர் மற்றொருவருடைய உணர்ச்சிகளையும் மனசாட்சியையும் மதிக்க கற்றுக்கொள்ளுங்கள். (1 கொரிந்தியர் 13:5; 1 தெசலோனிக்கேயர் 4:3-7; 1 பேதுரு 3:16) தர்மசங்கடமான இந்த விஷயத்தைக் குறித்துப் பேசுவது முதலில் கஷ்டமாக இருக்கும், ஆனால் வினைமையான பிரச்சினைகள் பின்னால் தலைதூக்காதிருக்கும்படி பார்த்துக் கொள்ளும்.
‘சிறுவயது தொடங்கி’ போதிக்கப்படுதல்
17. யெகோவாவை ‘சிறுவயது தொடங்கி தன்னுடைய நம்பிக்கையாய்’ தாவீது எப்படி ஆக்கிக் கொண்டார், இன்றைய இளைஞர்களுக்கு என்ன படிப்பினை இதிலிருக்கிறது?
17 சாத்தானின் கண்ணிகளைத் தவிர்ப்பதற்கு உங்கள் பாகத்தில் தொடர்ந்து விழிப்புள்ளவர்களாய் இருக்க வேண்டும்; சிலசமயங்களில் இதற்கு அதிக தைரியமும் தேவை. சில நேரங்களில் உங்கள் சகதோழர்களோடு மட்டுமல்ல, ஏன், முழு உலகத்தோடும் ஒத்துப் போகாதிருப்பதைக் காண்பீர்கள். “கர்த்தராகிய ஆண்டவரே, நீரே என் நோக்கமும், என் சிறுவயது தொடங்கி என் நம்பிக்கையுமாயிருக்கிறீர். தேவனே, என் சிறுவயதுமுதல் எனக்குப் போதித்துவந்தீர்; இதுவரைக்கும் உம்முடைய அதிசயங்களை அறிவித்துவந்தேன்” என சங்கீதக்காரனாகிய தாவீது ஜெபித்தார். (சங்கீதம் 71:5, 17) c தாவீது தைரியத்திற்குப் பெயர்போனவர். ஆனால் அதை அவர் எப்போது வளர்த்துக் கொண்டார்? இளைஞராய் இருக்கையிலேயே! கோலியாத்தை எதிர்கொண்டு பெயரையும் புகழையும் தட்டிச் செல்வதற்கு முன்பாகவே ஒரு சிங்கத்தையும், ஒரு கரடியையும் கொன்று தன்னுடைய தகப்பனுடைய மந்தைகளைப் பாதுகாக்கும் விஷயத்தில் தாவீது மிகுந்த தைரியத்தை வெளிக்காட்டியிருந்தார். (1 சாமுவேல் 17:34-37) எனினும், தான் வெளிக்காட்டிய தைரியத்திற்கான அந்தப் புகழ் யெகோவாவையே சேர வேண்டும் என விரும்பினார்; ‘என் சிறுவயது தொடங்கி என் நம்பிக்கையாய் இருக்கிறவர்’ என அவரைக் குறிப்பிட்டார். யெகோவாவைச் சார்ந்திருக்க தாவீது கற்றுக்கொண்டது எந்தச் சோதனையையும் எதிர்ப்பட அவருக்கு உதவியது. நீங்களும் யெகோவாவைச் சார்ந்திருப்பீர்களென்றால் ‘உலகத்தை ஜெயிக்க’ அவர் உங்களுக்குத் தைரியத்தையும் சக்தியையும் தருவதை உணருவீர்கள்.—1 யோவான் 5:4.
18. கடவுள் பக்தியுள்ள இன்றைய இளைஞர்களுக்கு என்ன புத்திமதி கொடுக்கப்பட்டிருக்கிறது?
18 உங்களைப் போன்ற ஆயிரக்கணக்கான இளைஞர்கள் தைரியமான நிலைநிற்கையை எடுத்திருக்கின்றனர்; நற்செய்தியின் முழுக்காட்டப்பட்ட பிரஸ்தாபிகளாக இப்போது சேவை செய்கின்றனர். இளைஞர்களாகிய நீங்கள் காட்டும் விசுவாசத்தையும் தைரியத்தையும் கண்டு பூரிக்கும் நாங்கள் யெகோவாவிற்கு சிரம்தாழ்த்துகிறோம்! இவ்வுலகின் சீர்கேட்டிலிருந்து தொடர்ந்து விலகியிருக்க தீர்மானமாயிருங்கள். (2 பேதுரு 1:4) பைபிளால் பயிற்றுவிக்கப்பட்ட உங்கள் பகுத்துணரும் தன்மையைத் தொடர்ந்து உபயோகியுங்கள். அப்படிச் செய்வது இப்போது துன்பத்திலிருந்து பாதுகாக்கும், பிற்பாடு உங்கள் இரட்சிப்பை உறுதிப்படுத்தும். அடுத்த கட்டுரை சொல்லவிருக்கிறபடி உங்கள் வாழ்க்கையை வெற்றிகரமானதாக நீங்கள் நிச்சயம் ஆக்க முடியும்.
[அடிக்குறிப்புகள்]
a விழித்தெழு!, அக்டோபர் 22, 1998 வெளியீட்டில் வெளிவந்த “இளைஞர் கேட்கின்றனர் . . . சத்தியத்தோடு ஒன்றிவிட நான் என்ன செய்ய வேண்டும்?” என்ற கட்டுரையைக் காண்க.
b காவற்கோபுரம், ஆகஸ்ட் 15, 1992 வெளியீட்டில் வெளிவந்த “கூட்டுறவுப் பொழுதுபோக்கு—நன்மைகளை அனுபவியுங்கள், கண்ணிகளைத் தவிருங்கள்” என்ற கட்டுரை இந்தப் பொருளின் பேரில் ஏராளமான தகவல்களைக் கொடுக்கிறது.
c சங்கீதம் 70-ன் தொடர்ச்சியைப் போல் சங்கீதம் 71 தோன்றுகிறது; இது தாவீதின் சங்கீதம் என மேல் முகவரியிடப்பட்டிருக்கிறது.
மறுபார்வைக்குக் கேள்விகள்
◻ ஓர் இளைஞன் எப்படி தன் பகுத்துணரும் தன்மையைப் பயிற்றுவிக்கலாம்?
◻ கிறிஸ்தவர்கள் கூடிவரும் பார்ட்டிகளில் ஓர் இளைஞன் எப்படி தன் பகுத்துணரும் தன்மையைப் பயன்படுத்தலாம்?
◻ ஒருவருடைய கல்வியைத் திட்டமிடுகையில் என்ன காரணக்கூறுகளை கலந்தாலோசிக்க வேண்டும்?
◻ திருமண நோக்கோடு பழகும் ஜோடிகள் எப்படி பாலியல் ஒழுக்கக்கேடு எனும் கண்ணியைத் தவிர்க்கலாம்?
[பக்கம் 15-ன் படம்]
உங்கள் பகுத்துணரும் தன்மையைப் பயிற்றுவிக்க ரிசர்ச் செய்ய பழகிக் கொள்வது உதவும்
[பக்கம் 16-ன் படம்]
சிறிய பார்ட்டிகள் எளிதில் சமாளிக்க முடிந்தவை; வெறித்தன பார்ட்டிகளாய் மாறுவதற்கு வாய்ப்பில்லை
[பக்கம் 16-ன் படம்]
கல்வி சம்பந்தமாக பிள்ளைகள் திட்டமிடுகையில் பெற்றோர் அவர்களுக்கு உதவ வேண்டும்
[பக்கம் 17-ன் படம்]
எல்லாரும் இருக்கையில் காதலீடுபாடு கொள்வது பாதுகாப்பானதே