இன்று நம்மிடம் யெகோவா எதை கேட்கிறார்?
“இவர் என்னுடைய நேச குமாரன், இவரில் பிரியமாயிருக்கிறேன், இவருக்குச் செவிகொடுங்கள் என்று அந்த மேகத்திலிருந்து ஒரு சத்தம் உண்டாயிற்று.”—மத்தேயு 17:5.
1. நியாயப்பிரமாணம் எப்போது அதன் நோக்கத்தை நிறைவேற்றியது?
யெகோவா இஸ்ரவேல் ஜனத்திற்கு பல அம்சங்கள் அடங்கிய நியாயப்பிரமாணத்தை கொடுத்தார். அவற்றை குறித்து அப்போஸ்தலன் பவுல் இவ்வாறு எழுதினார்: “இவைகள் சீர்திருத்தலின் காலம் வரைக்கும் நடந்தேறும்படி கட்டளையிடப்பட்ட . . . சரீர நியமங்களேயல்லாமல் வேறல்ல.” (எபிரெயர் 9:10, தி.மொ.) இயேசுவை மேசியாவாக, அல்லது கிறிஸ்துவாக ஏற்கும்படி இஸ்ரவேலரின் மீதிபேரை நியாயப்பிரமாணம் வழிநடத்தியபோது, அது தன் நோக்கத்தை நிறைவேற்றியது. இதனால் பவுல் அறிவித்தார்: “கிறிஸ்து நியாயப்பிரமாணத்தின் முடிவாயிருக்கிறார்.”—ரோமர் 10:4; கலாத்தியர் 3:19-25; 4:4, 5.
2. நியாயப்பிரமாணத்தின்கீழ் இருந்தவர்கள் யார், அவர்கள் எப்போது அதிலிருந்து விடுதலை செய்யப்பட்டார்கள்?
2 அப்படியானால், இன்று நியாயப்பிரமாணம் நம்மை கட்டுப்படுத்துவதில்லை என அர்த்தப்படுகிறதா? உண்மையில், மனிதவர்க்கத்தின் பெரும்பான்மையர் ஒருபோதும் நியாயப்பிரமாணத்தின்கீழ் இருக்கவில்லை. ஏனெனில் சங்கீதக்காரன் இவ்வாறு விளக்கினார்: “[யெகோவா] யாக்கோபுக்குத் தமது திருவசனத்தையும், இஸ்ரவேலுக்குத் தமது நியமங்களையும் தமது நியாயத்தீர்ப்புகளையும் அறிவிக்கிறார். அவர் வேறே எந்த ஜனத்துக்கும் இப்படிச் செய்ததில்லை; அவர்கள் அவருடைய நியாயத்தீர்ப்புகளை அறியவில்லை.” (சங்கீதம் 147:19, 20) இயேசுவினுடைய பலியின் அடிப்படையில் புதிய உடன்படிக்கையை கடவுள் ஏற்படுத்தியபோது, இஸ்ரவேலரும்கூட நியாயப்பிரமாணத்திற்குக் கீழ்ப்படிய வேண்டியதாயில்லை. (கலாத்தியர் 3:13; எபேசியர் 2:15; கொலோசெயர் 2:13, 14, 16) நியாயப்பிரமாணம் இனிமேலும் கட்டுப்படுத்துவதாக இல்லை என்றால், இன்று தம்மை வணங்க விரும்புகிறவர்களிடம் யெகோவா எதை கேட்கிறார்?
யெகோவா கேட்பவை
3, 4. (அ) அடிப்படையில், யெகோவா இன்று நம்மிடம் எதை கேட்கிறார்? (ஆ) இயேசுவின் அடிச்சுவடுகளை நெருக்கமாக நாம் ஏன் பின்பற்ற வேண்டும்?
3 இயேசுவினுடைய ஊழியத்தின் கடைசி ஆண்டின் இறுதிப்பகுதி நெருங்கிக்கொண்டிருந்தது. அப்போஸ்தலர்களாகிய பேதுருவும் யாக்கோபும் யோவானும் ஓர் உயர்ந்த மலைக்கு இயேசுவோடு சென்றார்கள். அது பெரும்பாலும் எர்மோன் மலை முகடாக இருந்திருக்கலாம். அங்கே இயேசுவைப் பற்றிய மகிமைபொருந்திய சிறப்பான தீர்க்கதரிசன காட்சியை அவர்கள் கண்டார்கள். “இவர் என்னுடைய நேச குமாரன், இவரில் பிரியமாயிருக்கிறேன், இவருக்குச் செவிகொடுங்கள்” என்பதாக கடவுளுடைய சொந்த குரல் அறிவிப்பதையும் கேட்டார்கள். (மத்தேயு 17:1-5) உண்மையில் அதையே—அதாவது தம்முடைய குமாரனுக்குச் செவிகொடுத்து அவருடைய முன்மாதிரியையும் போதனைகளையும் பின்பற்றும்படியே—யெகோவா நம்மிடம் கேட்கிறார். (மத்தேயு 16:24) ஆகவே, அப்போஸ்தலன் பேதுரு இவ்வாறு எழுதினார்: “கிறிஸ்துவும் உங்களுக்காகப் பாடுபட்டு, நீங்கள் தம்முடைய அடிச்சுவடுகளைத் [“உன்னிப்பாக,” NW] தொடர்ந்துவரும்படி உங்களுக்கு மாதிரியைப் பின்வைத்துப்போனார்.”—1 பேதுரு 2:21.
4 நாம் இயேசுவினுடைய அடிச்சுவடுகளை உன்னிப்பாக ஏன் பின்தொடர வேண்டும்? ஏனெனில் அவருடைய மாதிரியைப் பின்பற்றுகையில் நாம் யெகோவா தேவனின் மாதிரியைப் பின்பற்றுகிறோம். இயேசு பூமிக்கு வருவதற்கு முன்பாக, எண்ணிலடங்கா ஆண்டுகளை பரலோகத்தில் யெகோவாவுடன் செலவிட்டிருந்தார். இதன் காரணமாக பிதாவை இயேசு மிக நெருக்கமாக அறிந்திருந்தார். (நீதிமொழிகள் 8:22-31; யோவான் 8:23; 17:5; கொலோசெயர் 1:15-17) பூமியில் இருந்தபோது இயேசு தம்முடைய பிதாவை உண்மைப்பற்றுறுதியுடன் பிரதிநிதித்துவம் செய்தார். “என் பிதா எனக்குப் போதித்தபடியே இவைகளைச் சொன்னேன்” என்று அவர் விளக்கினார். உண்மையில் இயேசு, “என்னைக் கண்டவன் பிதாவைக் கண்டான்” என்று சொல்லுமளவுக்கு அவ்வளவு துல்லியமாக யெகோவாவை பின்பற்றினார்.—யோவான் 8:28; 14:9.
5. கிறிஸ்தவர்கள் எந்தப் பிரமாணத்தின்கீழ் இருக்கிறார்கள், இந்தப் பிரமாணம் எப்போது செயல்பட ஆரம்பித்தது?
5 இயேசுவுக்குச் செவிகொடுத்து அவருடைய மாதிரியைப் பின்பற்றுவதில் என்ன உட்பட்டிருக்கிறது? அது ஒரு சட்டத்திற்குக் கட்டுப்பட்டிருப்பதைக் குறிக்கிறதா? “நான்தானேயும் நியாயப்பிரமாணத்துக்குக் கீழ்ப்பட்டில்லை” என்று பவுல் எழுதினார். இஸ்ரவேலருடன் செய்யப்பட்ட நியாயப்பிரமாண உடன்படிக்கையாகிய ‘பழைய உடன்படிக்கையை’ அவர் இங்கே குறிப்பிட்டார். “கிறிஸ்துவின் பிரமாணத்தின்கீழ்” தான் இருப்பதாக பவுல் ஒப்புக்கொண்டார். (1 கொரிந்தியர் 9:20, 21; 2 கொரிந்தியர் 3:14, NW) பழைய நியாயப்பிரமாண உடன்படிக்கை முடிவுக்கு வந்தபோது, ஒரு “புதிய உடன்படிக்கை” ‘கிறிஸ்துவின் பிரமாணத்துடன்’ செயல்படலாயிற்று. இன்று யெகோவாவின் ஊழியர்கள் அனைவரும் இதற்குக் கீழ்ப்படிய கடமைப்பட்டிருக்கிறார்கள்.—லூக்கா 22:20; கலாத்தியர் 6:2; எபிரெயர் 8:7-13.
6. “கிறிஸ்துவின் பிரமாணம்” எவ்வாறு விவரிக்கப்படலாம், நாம் அதற்கு எவ்வாறு கீழ்ப்படிகிறோம்?
6 பழைய நியாயப்பிரமாண உடன்படிக்கையைப்போல், ‘கிறிஸ்துவின் பிரமாணம்,’ ஒரு சட்ட தொகுப்பாக எழுதப்பட்டு, பல்வேறு தொகுதிகளாக யெகோவாவால் ஒழுங்குபடுத்தப்படவில்லை. கிறிஸ்துவைப் பின்பற்றுவோருக்குரிய இந்தப் புதிய பிரமாணத்தில், செய்ய வேண்டியவை, செய்யக் கூடாதவை என விலாவாரியான பட்டியல் இல்லை. இருப்பினும், யெகோவா தம்முடைய குமாரனின் வாழ்க்கையையும் போதகங்களையும் குறிப்பிடும் நான்கு விவரமான அறிக்கைகளை தம்முடைய வார்த்தையில் பாதுகாத்து வைத்தார். மேலும், ஆரம்ப காலத்தில் இயேசுவைப் பின்பற்றின சிலரை உபயோகித்து எழுதப்பட்ட கட்டளைகளை கடவுள் கொடுத்தார். அதில் தனிப்பட்டவர்களின் நடத்தை, சபை விவகாரங்கள், குடும்பத்திற்குள் நடத்தை போன்ற இன்னுமநேக விஷயங்கள் உட்பட்டிருந்தன. (1 கொரிந்தியர் 6:18; 14:26-35; எபேசியர் 5:21-33; எபிரெயர் 10:24, 25) இயேசு கிறிஸ்துவின் முன்மாதிரியையும் போதனைகளையும் பின்பற்றி, தேவாவியால் ஏவப்பட்ட முதல் நூற்றாண்டு பைபிள் எழுத்தாளர்களின் அறிவுரைக்கு நாம் செவிசாய்க்க வேண்டும். நாம் இப்படி செய்யும்போது ‘கிறிஸ்துவின் பிரமாணத்திற்குக்’ கீழ்ப்படிகிறவர்களாக இருப்போம். இன்று தம்முடைய ஊழியர்களிடம் இதையே யெகோவா கேட்கிறார்.
அன்பின் முக்கியத்துவம்
7. இயேசு தம்முடைய சீஷர்களுடன் கடைசி பஸ்காவை ஆசரிக்கையில், தம்முடைய பிரமாணத்தின் சாராம்சத்தை எவ்வாறு வலியுறுத்தினார்?
7 நியாயப்பிரமாணத்தில் அன்பு முக்கியமானதாக இருந்தபோதிலும், கிறிஸ்துவினுடைய பிரமாணத்தின் மையமாக, அல்லது மிக முக்கியமான குணாதிசயமாக அது இருக்கிறது. பொ.ச. 33-ன் பஸ்கா ஆசரிப்புக்காக தம் அப்போஸ்தலரோடு இயேசு ஒன்றுகூடியபோது இந்த உண்மையை அவர் வலியுறுத்தினார். அந்த இரவில் நடந்ததைப் பற்றிய அப்போஸ்தலன் யோவானின் சுருக்கமான அறிக்கையில், நெஞ்சைத் தொட்ட இயேசுவின் வார்த்தைகளில் அன்பைப் பற்றிய 28 குறிப்புகள் இருந்தன. இது, அவருடைய பிரமாணத்தின் சாராம்சத்தை அல்லது உண்மையான அர்த்தத்தை அவருடைய அப்போஸ்தலருக்கு அறிவுறுத்தியது. முக்கியத்துவம் வாய்ந்த அந்த இரவில் நடைபெற்ற சம்பவங்களை யோவான் இவ்வாறு சொல்லி அறிமுகப்படுத்தியது குறிப்பிடத்தக்கது: “பஸ்கா பண்டிகைக்கு முன்னே, இயேசு இவ்வுலகத்தைவிட்டுப் பிதாவினிடத்திற்குப் போகும்படியான தம்முடைய வேளை வந்ததென்று அறிந்து, தாம் இவ்வுலகத்திலிருக்கிற தம்முடையவர்களிடத்தில் அன்புவைத்தபடியே, முடிவுபரியந்தமும் அவர்களிடத்தில் அன்புவைத்தார்.”—யோவான் 13:1.
8. (அ) அப்போஸ்தலர்கள் மத்தியில் தொடர்ந்து வாக்குவாதம் இருந்ததை எது காட்டுகிறது? (ஆ) மனத்தாழ்மையை குறித்ததில் இயேசு எவ்வாறு தம்முடைய அப்போஸ்தலர்களுக்கு பாடத்தைக் கற்பித்தார்?
8 அதிகாரத்திற்கும் பதவிக்குமான மிதமீறிய ஆசையை தம்முடைய சீஷர்கள் தவிர்க்க வேண்டும் என்பதற்காக அவர்களுக்கு உதவிசெய்ய இயேசு முயற்சித்தார். ஆனால் இயேசுவின் முயற்சி உடனடியாக வெற்றிபெறவில்லை. இருப்பினும் அவர் தமது சீஷர்களை நேசித்தார். எருசலேமிற்கு அவர்கள் வருவதற்கு பல மாதங்களுக்கு முன்பு, ‘தங்களுக்குள்ளே எவன் பெரியவன் என்று தர்க்கம் பண்ணினார்கள்.’ பஸ்காவை ஆசரிக்க நகரத்திற்கு வருவதற்குச் சற்று முன்பு பதவி சம்பந்தமான விவாதம் மறுபடியும் தலைதூக்கியது. (மாற்கு 9:33-37; 10:35-45) இப்பிரச்சினை தொடர்கதையைப் போல இருந்தது. அப்போஸ்தலர்கள் ஒன்றாக கடைசி பஸ்காவை ஆசரிப்பதற்காக மேலறையில் நுழைந்தபிறகு நடந்த சம்பவத்திலிருந்து இது புலனாகிறது. அந்தச் சமயத்தில், மற்றவர்களின் பாதங்களைக் கழுவும் வழக்கமான உபசரணையைச் செய்வதற்கிருந்த வாய்ப்பை ஒருவரும் பயன்படுத்திக் கொள்ளவில்லை. மனத்தாழ்மையின் பாடத்தை அவர்களுக்குக் கற்பிக்கும்படி, இயேசுதாமே அவர்களுடைய பாதங்களைக் கழுவினார்.—யோவான் 13:2-15; 1 தீமோத்தேயு 5:9, 10.
9. கடைசி பஸ்காவைப் பின்தொடர்ந்த சூழ்நிலையை இயேசு எவ்வாறு கையாண்டார்?
9 இந்தப் பாடம் கற்பிக்கப்பட்டிருந்தும், பஸ்கா ஆசரிப்பை முடித்து தம்முடைய மரணத்தின் நினைவுகூருதலை இயேசு தொடங்கி வைத்தபின் என்ன நடந்தது என்பதை கவனியுங்கள். லூக்காவின் சுவிசேஷ விவரப் பதிவு இவ்வாறு சொல்கிறது: “தங்களில் எவன் பெரியவனாயிருப்பான் என்று அவர்களுக்குள்ளே வாக்குவாதம் உண்டாயிற்று.” அப்போஸ்தலர்களிடம் கோபமடைந்து அவர்களைத் திட்டுவதற்குப் பதிலாக, அதிகார வெறிபிடித்த உலக ஆட்சியாளர்களிலிருந்து அவர்கள் வித்தியாசமானவர்களாய் இருக்க வேண்டியதன் அவசியத்தை இயேசு தயவாக அறிவுரை கூறினார். (லூக்கா 22:24-27) பின்பு அவர், கிறிஸ்துவினுடைய பிரமாணத்தின் மூலைக்கல் என்று அழைக்கப்பட்டதைக் கொடுத்தார்: “நீங்கள் ஒருவரிலொருவர் அன்பாயிருங்கள்; நான் உங்களில் அன்பாயிருந்ததுபோல நீங்களும் ஒருவரிலொருவர் அன்பாயிருங்கள் என்கிற புதிதான கட்டளையை உங்களுக்குக் கொடுக்கிறேன்.”—யோவான் 13:34.
10. இயேசு தம்முடைய சீஷர்களுக்கு என்ன கட்டளையை கொடுத்தார், அது எதை உட்படுத்தியது?
10 பின்னர் அந்தச் சாயங்காலத்தில் தம்மைப்போல அன்பை எந்தளவுக்குக் காட்ட வேண்டும் என்பதை இயேசு குறிப்பிட்டார். அவர் சொன்னார்: “நான் உங்களில் அன்பாயிருக்கிறது போல நீங்களும் ஒருவரிலொருவர் அன்பாயிருக்க வேண்டுமென்பதே என்னுடைய கற்பனையாயிருக்கிறது. ஒருவன் தன் சிநேகிதருக்காகத் தன் ஜீவனைக் கொடுக்கிற அன்பிலும் அதிகமான அன்பு ஒருவரிடத்திலுமில்லை.” (யோவான் 15:12, 13) தேவைப்பட்டால், தம்மைப் பின்பற்றுபவர்கள் உடன் விசுவாசிகளுக்காக மரிக்கவும் மனமுள்ளவர்களாக இருக்க வேண்டும் என்றா இயேசு சொன்னார்? இந்தச் சந்தர்ப்பத்தில் கண்கண்ட சாட்சியாக இருந்த யோவான் அவ்வாறுதான் புரிந்துகொண்டார். “அவர் [இயேசு கிறிஸ்து] தம்முடைய ஜீவனை நமக்காகக் கொடுத்ததினாலே அன்பு இன்னதென்று அறிந்திருக்கிறோம்; நாமும் சகோதரருக்காக ஜீவனைக்கொடுக்கக் கடனாளிகளாயிருக்கிறோம்” என பிற்பாடு யோவான் எழுதினார்.—1 யோவான் 3:16.
11. (அ) கிறிஸ்துவின் பிரமாணத்தை நாம் எவ்வாறு நிறைவேற்றுகிறோம்? (ஆ) இயேசு என்ன முன்மாதிரியை அளித்தார்?
11 கிறிஸ்துவைப் பற்றி மற்றவர்களுக்கு வெறுமனே போதிப்பதால் மட்டும் அவருடைய பிரமாணத்தை நாம் நிறைவேற்றுகிறதில்லை. இயேசுவைப் போலவே நாம் வாழவும் நடந்துகொள்ளவும் வேண்டும். தம்முடைய போதனைகளில் செவிக்கினிய நன்கு தேர்ந்தெடுக்கப்பட்ட வார்த்தைகளை இயேசு பயன்படுத்தினார் என்பது உண்மையே. எனினும், முன்மாதிரியாக வாழ்வதன் மூலமும் அவர் போதித்தார். இயேசு பரலோகத்தில் வல்லமைவாய்ந்த ஆவி சிருஷ்டியாக இருந்தார். என்றபோதிலும், பூமியில் தம்முடைய பிதாவின் அக்கறைகளைச் சேவிப்பதற்கும் நாம் எவ்வாறு வாழவேண்டுமென்று காட்டுவதற்கும் கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டார். அவர் மனத்தாழ்மையும் தயவும் கரிசனையும் காட்டினார்; துயரப்பட்டோருக்கும் ஒடுக்கப்பட்டோருக்கும் உதவினார். (மத்தேயு 11:28-30; 20:28; பிலிப்பியர் 2:5-8; 1 யோவான் 3:8) மேலும், இயேசு தம்மை பின்பற்றினவர்களை நேசித்தது போலவே அவர்களும் ஒருவரையொருவர் நேசிக்கும்படி உற்சாகப்படுத்தினார்.
12. யெகோவாவில் அன்புகூர வேண்டியதை கிறிஸ்துவின் பிரமாணம் குறைக்கவில்லை என்று ஏன் சொல்லலாம்?
12 யெகோவாவில் அன்புகூரவேண்டுமென்ற நியாயப்பிரமாணத்தின் பிரதான கட்டளை கிறிஸ்துவின் பிரமாணத்தில் என்ன இடத்தை வகிக்கிறது? (மத்தேயு 22:37, 38; கலாத்தியர் 6:2) இரண்டாவது இடமா? நிச்சயமாகவே இல்லை! யெகோவாவின்மீதான அன்பும் நம் உடன் கிறிஸ்தவர்களின்மீதான அன்பும் பிரிக்க முடியாதபடி பின்னிப் பிணைந்திருக்கின்றன. ஒருவர் தன் சகோதரனில் அன்புகூராமல் யெகோவாவில் உண்மையாக அன்புகூர முடியாது. ஏனெனில் அப்போஸ்தலன் யோவான் சொன்னார்: “தேவனிடத்தில் அன்புகூருகிறேனென்று ஒருவன் சொல்லியும், தன் சகோதரனைப் பகைத்தால், அவன் பொய்யன்; தான் கண்ட சகோதரனிடத்தில் அன்புகூராமலிருக்கிறவன், தான் காணாத தேவனிடத்தில் எப்படி அன்புகூருவான்?”—1 யோவான் 4:20; ஒப்பிடுக: 1 யோவான் 3:17, 18.
13. இயேசுவின் புதிய கட்டளைக்கு சீஷர்கள் கீழ்ப்படிந்ததன் விளைவு என்ன?
13 இயேசு தம்முடைய சீஷர்களிடத்தில் அன்பாயிருந்தார். அதுபோல சீஷர்களும் ஒருவரிலொருவர் அன்புள்ளவர்களாய் இருக்க வேண்டும் என்ற புதிய கட்டளையை கொடுத்தார். இந்தக் கட்டளை ஏற்படுத்தும் பாதிப்பை விவரிப்பவராக இயேசு சொன்னார்: “நீங்கள் ஒருவரிலொருவர் அன்புள்ளவர்களாயிருந்தால், அதினால் நீங்கள் என்னுடைய சீஷர்களென்று எல்லாரும் அறிந்துகொள்வார்கள்.” (யோவான் 13:35) டெர்ட்டூலியன் இயேசுவின் மரணத்திற்கு நூறுக்கும் அதிகமான ஆண்டுகளுக்குப் பின்பு வாழ்ந்தார். ஆரம்பகால கிறிஸ்தவர்களின் சகோதர அன்பு, இயேசு குறிப்பிட்ட அதே பாதிப்பை உடையதாக இருந்தது என்பதாக அவர் சொன்னார். கிறிஸ்துவை பின்பற்றியவர்களைப் பற்றி கிறிஸ்தவரல்லாதவர்கள் சொன்னதை டெர்ட்டூலியன் இவ்வாறு மேற்கோள் காட்டினார்: ‘அவர்கள் ஒருவரையொருவர் எவ்வளவாய் நேசிக்கிறார்கள் பாருங்கள், ஒருவருக்காக ஒருவர் சாகவும்கூட தயாராய் இருக்கிறார்களே.’ ‘இயேசுவின் சீஷர்களில் ஒருவராக நிரூபிப்பதற்கு அத்தகைய அன்பை நாம் உடன் கிறிஸ்தவர்களிடம் காட்டுகிறோமா?’ என நம்மைநாமே கேட்டுக்கொள்ளலாம்.
நம்முடைய அன்பை எவ்வாறு நிரூபிக்கிறோம்
14, 15. கிறிஸ்துவின் பிரமாணத்திற்குக் கீழ்ப்படிவதை எது ஒருவேளை கடினமாக்கலாம், ஆனால் கிறிஸ்துவின் பிரமாணத்திற்குக் கீழ்ப்படிவதற்கு எது நமக்கு உதவலாம்?
14 யெகோவாவின் ஊழியர்கள் கிறிஸ்துவை போன்ற அன்பைக் காட்டுவது முக்கியம். ஆனால், தன்னலமிக்கவர்களாக இருக்கும் உடன் கிறிஸ்தவர்களை நேசிப்பது உங்களுக்குக் கடினமாயிருக்கிறதா? அப்போஸ்தலரும்கூட வாக்குவாதம் செய்து, தங்கள் சொந்த அக்கறைகளை முன்னேற்றுவிக்க முயன்றனர் என்பதாக நாம் பார்த்தோம். (மத்தேயு 20:20-24) கலாத்தியரும்கூட தங்களுக்குள்ளே சண்டை போட்டுக்கொண்டனர். அயலானை நேசிப்பது நியாயப்பிரமாணத்தை நிறைவேற்றினதென்று குறிப்பிட்டுக் காட்டின பின்பு, பவுல் அவர்களை இவ்வாறு எச்சரித்தார்: “நீங்கள் ஒருவரையொருவர் கடித்துப் பட்சித்தீர்களானால் அழிவீர்கள், அப்படி ஒருவராலொருவர் அழிக்கப்படாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்.” மாம்சத்தின் கிரியைகளுக்கும் கடவுளுடைய ஆவியின் கனிகளுக்கும் இடையேயுள்ள வேறுபாடுகளைச் சுட்டிக்காட்டிய பின்பு, பவுல் இந்த அறிவுரையைக் கொடுத்தார்: “வீண் புகழ்ச்சியை விரும்பாமலும், ஒருவரையொருவர் கோபமூட்டாமலும், ஒருவர்மேல் ஒருவர் பொறாமைகொள்ளாமலும் இருக்கக்கடவோம்.” பின்பு அந்த அப்போஸ்தலன் இவ்வாறு ஊக்குவித்தார்: “ஒருவர் பாரத்தை ஒருவர் சுமந்து, இப்படியே கிறிஸ்துவினுடைய பிரமாணத்தை நிறைவேற்றுங்கள்.”—கலாத்தியர் 5:14–6:2.
15 கிறிஸ்துவின் பிரமாணத்திற்குக் கீழ்ப்படியுமாறு சொல்வதால், யெகோவா நம்மிடம் மிக அதிகத்தைக் கேட்கிறாரா? நம்மிடம் கடுகடுவென பேசி, நம் உணர்ச்சியைப் புண்படுத்தியவர்களிடம் தயவாக நடந்துகொள்வது கடினமாக இருக்கும் என்பது உண்மைதான். என்றபோதிலும், நாம் ‘பிரியமான பிள்ளைகளைப்போல தேவனைப் பின்பற்றுகிறவர்களாகி, அன்பிலே நடந்துகொள்ள’ கடமைப்பட்டிருக்கிறோம். (எபேசியர் 5:1, 2) கடவுளுடைய முன்மாதிரிக்கு நாம் தொடர்ந்து கவனம் செலுத்த வேண்டும். “நாம் பாவிகளாயிருக்கையில் கிறிஸ்து நமக்காக மரித்ததினாலே, தேவன் நம்மேல் வைத்த தமது அன்பை விளங்கப்பண்ணுகிறார்.” (ரோமர் 5:8) நம்மைத் தவறாக நடத்தினவர்கள் உட்பட, மற்றவர்களுக்கு உதவிசெய்ய நாம் முன்வர வேண்டும். இவ்வாறு செய்வதால் கடவுளின் மாதிரியைப் பின்பற்றுகிறோம் என்றும், கிறிஸ்துவின் பிரமாணத்திற்குக் கீழ்ப்படிகிறோம் என்றும் அறியும் மனத்திருப்தியை நாம் அனுபவித்து மகிழலாம்.
16. கடவுளுக்கும் கிறிஸ்துவுக்கும் நம் அன்பை எவ்வாறு நிரூபிக்கிறோம்?
16 நாம் சொல்வதோடு நிறுத்திக் கொள்ளாமல், செயல்களினாலே நம்முடைய அன்பை நிரூபித்துக் காட்டுகிறோம் என்பதை நினைவில் வைக்க வேண்டும். ஒரு சமயம் இயேசுதாமேயும், கடவுளுடைய சித்தத்தின் ஓர் அம்சத்தில் உட்பட்ட எல்லாவற்றையும் ஏற்பதை கடினமாக கண்டார். “பிதாவே, உமக்குச் சித்தமானால் இந்தப் பாத்திரம் என்னைவிட்டு நீங்கும்படி செய்யும்” என்று இயேசு ஜெபித்தார். ஆனால், உடனடியாக “ஆயினும் என்னுடைய சித்தத்தின்படியல்ல, உம்முடைய சித்தத்தின்படியே ஆகக்கடவது” என்றும் சொன்னார். (லூக்கா 22:42) தாம் அனுபவித்த எல்லா வேதனைகளின் மத்தியிலும் இயேசு கடவுளின் சித்தத்தையே செய்தார். (எபிரெயர் 5:7, 8) கீழ்ப்படிதல் நம்முடைய அன்பின் நிரூபணமாக இருக்கிறது. இது கடவுளுடைய வழியே மிகச் சிறந்ததென்று நாம் ஒப்புக்கொள்வதைக் காட்டுகிறது. “நாம் தேவனுடைய கற்பனைகளைக் கைக்கொள்வதே அவரிடத்தில் அன்புகூருவதாம்; அவருடைய கற்பனைகள் பாரமானவைகளுமல்ல” என்று பைபிள் சொல்கிறது. (1 யோவான் 5:3) மேலும், “நீங்கள் என்னில் அன்புகூர்ந்தால் என் கற்பனைகளைக் கைக்கொள்ளுவீர்கள்” என்று இயேசு தம்முடைய அப்போஸ்தலர்களுக்கு சொன்னார்.—யோவான் 14:15, தி.மொ.
17. இயேசு தம்மைப் பின்பற்றுவோருக்கு என்ன விசேஷ கட்டளையை கொடுத்தார், இன்று அது நமக்கு பொருந்துகிறதென்பது எப்படி தெரியும்?
17 ஒருவரிலொருவர் அன்புகூரும்படி தம்மை பின்பற்றினோருக்குக் கட்டளையிட்டதோடு, வேறென்ன விசேஷித்த கட்டளையையும் கிறிஸ்து அவர்களுக்குக் கொடுத்தார்? தாம் பயிற்சி அளித்திருந்த பிரசங்க ஊழியத்தைச் செய்யும்படி அவர்களுக்குக் கட்டளையிட்டார். “ஜனங்களுக்குப் பிரசங்கிக்கவும் திடச்சாட்சி பகரவும் அவர் எங்களுக்குக் கட்டளையிட்டார்” என பேதுரு சொன்னார். (அப்போஸ்தலர் 10:42, தி.மொ.) இயேசு தெளிவாக இவ்வாறு கட்டளையிட்டார்: “ஆகையால் நீங்கள் போய், சகல தேச ஜனங்களையும் சீஷராக்கி, பிதாவின் குமாரனின் பரிசுத்த ஆவியின் பெயரில் அவர்களை முழுக்காட்டி, நான் உங்களுக்குக் கட்டளையிட்ட எல்லாவற்றையும் கைக்கொள்ளும்படி அவர்களுக்குப் போதியுங்கள்.” (மத்தேயு 28:19, 20, NW; அப்போஸ்தலர் 1:8) இந்த ‘முடிவுகாலத்தில்’ தம்மை பின்பற்றுபவர்களுக்கும் அந்தக் கட்டளைகள் பொருந்துகின்றன என்பதை இயேசு தெளிவாக்கினார். “ராஜ்யத்தினுடைய இந்தச் சுவிசேஷம் பூலோகமெங்குமுள்ள சகல ஜாதிகளுக்கும் சாட்சியாகப் பிரசங்கிக்கப்படும், அப்போது முடிவு வரும்” என்று சொன்னார். (தானியேல் 12:4; மத்தேயு 24:14) நிச்சயமாகவே, நாம் பிரசங்கிக்க வேண்டும் என்பது கடவுளுடைய சித்தம். என்றபோதிலும், இந்த வேலையை நாம் செய்யும்படி கடவுள் நம்மை கேட்பது மிக அதிகமானது என்று ஒருவேளை சிலர் நினைக்கலாம். ஆனால், இது உண்மைதானா?
அது ஏன் கடினமாக தோன்றலாம்
18. யெகோவா கேட்பதைச் செய்வதற்காக நாம் துன்பப்படுகையில், நாம் எதை நினைவுபடுத்திக்கொள்ள வேண்டும்?
18 நாம் பார்த்தபடி, சரித்திரம் முழுவதிலுமே பல்வேறு கட்டளைகளுக்கு கீழ்ப்படியுமாறு யெகோவா ஜனங்களைக் கேட்டிருக்கிறார். செய்யும்படி மக்களிடம் கேட்கப்பட்டவை வேறுபட்டன. அதைப் போலவே அவர்கள் அனுபவித்த சோதனைகளும் வேறுபட்டன. கடவுள் கேட்டதைச் செய்ததற்காக, கடவுளுடைய நேச குமாரன் கடும் துன்பங்களை அனுபவித்தார். இறுதியில் கொடூரமான முறையில் கொலையும் செய்யப்பட்டார். ஆனால், யெகோவா நம்மிடம் கேட்பதைச் செய்வதற்காக துன்பப்படுகையில், நம்முடைய துன்பங்களுக்கு அவர் காரணர் அல்ல என்பதை நினைவில் வைக்க வேண்டும். (யோவான் 15:18-20; யாக்கோபு 1:13-15) சாத்தானின் கலகம், பாவத்திற்கும் துன்பத்திற்கும் மரணத்திற்கும் வழிநடத்தியது. யெகோவா தம்முடைய ஊழியர்களிடம் கேட்பதை அவர்கள் செய்ய முடியாதபடி சூழ்நிலைமைகளை அடிக்கடி மிகக் கடினமாக்கியிருப்பவனும் அவனே.—யோபு 1:6-19; 2:1-8.
19. கடவுள் தம்முடைய குமாரன் மூலம் நம்மிடம் கேட்பவற்றை செய்வது ஏன் சிலாக்கியமாக இருக்கிறது?
19 இந்த முடிவு காலத்தில், ராஜ்யத்தின் செய்தியை பூமியெங்கும் யாவரறிய அறிவிக்கும்படி யெகோவா தம்முடைய குமாரன் மூலம் தம் ஊழியர்களுக்குக் கட்டளையிட்டிருக்கிறார். இதுவே மனிதரின் எல்லா துன்பத்திற்கும் ஒரே பரிகாரம். கடவுளுடைய இந்த அரசாங்கம் பூமியின் மீதுள்ள எல்லா பிரச்சினைகளையும்—போர், தீயச் செயல்கள், வறுமை, முதுமை, நோய், மரணம் போன்ற எல்லாவற்றையும்—ஒழிக்கும். மேலும், மகிமையான பூமிக்குரிய பரதீஸையும் இந்த ராஜ்யம் கொண்டுவரும். மரித்தோரும்கூட அங்கு உயிர்த்தெழுப்பப்படுவார்கள். (மத்தேயு 6:9, 10; லூக்கா 23:43; அப்போஸ்தலர் 24:15; வெளிப்படுத்துதல் 21:3, 4) இத்தகைய காரியங்களைப் பற்றிய நற்செய்தியை அறிவிப்பது எப்பேர்ப்பட்ட பாக்கியம்! அப்படியானால், யெகோவா நம்மிடம் செய்யும்படி கேட்பவற்றில் எந்தப் பிரச்சினையும் இல்லை. நாம் எதிர்ப்பை சந்திக்கிறோம், ஆனால் இதற்கு சாத்தானும் அவனுடைய உலகமுமே காரணம்.
20. சாத்தான் கொண்டுவரும் எந்த சவாலையும் நாம் எவ்வாறு வெற்றிகரமாக சமாளிக்கலாம்?
20 சாத்தானால் கொண்டுவரப்படும் எந்தச் சவாலையும் நாம் எவ்வாறு வெற்றிகரமாய் எதிர்கொள்ள முடியும்? பின்வரும் இந்த வார்த்தைகளை மனதில் வைப்பதன் மூலமே: “என் மகனே, என்னை நிந்திக்கிறவனுக்கு நான் உத்தரவுகொடுக்கத்தக்கதாக, நீ ஞானவானாகி, என் இருதயத்தைச் சந்தோஷப்படுத்து.” (நீதிமொழிகள் 27:11) பூமியில் தம்முடைய பிதாவின் சித்தத்தைச் செய்யும்படி இயேசு பரலோக வாழ்க்கையின் பாதுகாப்பான நிலையை விட்டு வந்தார். இவ்வாறு செய்வதன்மூலம் சாத்தானின் நிந்தனைக்கு யெகோவா பதிலளிக்க வாய்ப்பளித்தார். (ஏசாயா 53:12; எபிரெயர் 10:7) மனிதனாக இருந்தபோது, வாதனையின் கழுமரத்தில் மரிப்பது உட்பட, தம்மீது குவிக்கப்பட்ட ஒவ்வொரு சோதனையையும் இயேசு சகித்தார். நம்முடைய முன்மாதிரியாகிய இயேசுவை பின்பற்றினால், நாமும் துன்பங்களைச் சகித்து யெகோவா நம்மிடம் கேட்பவற்றைச் செய்வோம்.—எபிரெயர் 12:1-3.
21. யெகோவாவும் அவருடைய குமாரனும் காண்பித்த அன்பைப் பற்றி நீங்கள் எவ்வாறு உணருகிறீர்கள்?
21 கடவுளும் அவருடைய குமாரனும் நமக்கு எப்பேர்ப்பட்ட அன்பை காட்டியிருக்கிறார்கள்! இயேசுவினுடைய பலியின் காரணமாக கீழ்ப்படிதலுள்ள மனிதவர்க்கம் பரதீஸ் எனும் பூங்காவனத்தில் என்றென்றும் வாழும் எதிர்பார்ப்பை பெற்றிருக்கிறது. ஆகையால், எதுவும் நம்முடைய நம்பிக்கையைக் குலைப்பதற்கு அனுமதியாதிருப்போமாக. ‘என்னில் அன்புகூர்ந்து எனக்காகத் தம்மைத்தாமே ஒப்புக்கொடுத்த தேவனுடைய குமாரன்’ என்பதாக பவுல் சொன்னார். அதேபோல, இயேசு சாத்தியமாக்கினதை நாமும் தனிப்பட்டவர்களாக நம்முடைய இருதயத்தில் ஏற்போமாக. (கலாத்தியர் 2:20) அன்புள்ள கடவுளாகிய யெகோவா நம்மிடத்தில் ஒருபோதும் மிக அதிகத்தைக் கேட்பதில்லை. இப்படிப்பட்ட கடவுளுக்கு நாம் மனமார்ந்த நன்றியறிதலை காட்டுவோமாக.
நீங்கள் எவ்வாறு பதிலளிப்பீர்கள்?
◻ இன்று யெகோவா நம்மிடம் எதை கேட்கிறார்?
◻ அப்போஸ்தலருடன் இருந்த கடைசி இரவின்போது, அன்பின் முக்கியத்துவத்தை கிறிஸ்து எவ்வாறு வலியுறுத்தினார்?
◻ நாம் கடவுளில் அன்புகூருகிறோம் என்பதை எவ்வாறு நிரூபிக்கலாம்?
◻ யெகோவா நம்மிடம் கேட்பதைச் செய்வது ஏன் ஒரு சிலாக்கியமாக இருக்கிறது?
[பக்கம் 23-ன் படம்]
அப்போஸ்தலர்களின் பாதங்களைக் கழுவுவதன்மூலம் இயேசு என்ன பாடத்தைக் கற்பித்தார்?
[பக்கம் 25-ன் படம்]
எதிர்ப்பின் மத்தியிலும், நற்செய்தியைப் பகிர்ந்துகொள்வது மகிழ்ச்சியளிக்கும் பாக்கியமே